வல்லினத்தில் தேடுதல்

எழுத்துரு உதவி / Tamil Font Help 

 இதழ் 1
ஜூன் 2007
முகப்பு  |  உள்ளடக்கம்

கட்டுரை

 

காமடி திருவிழா

யுவராஜன்

 

       
 

2006, பிப்ரவரி 18 என்பதாக ஞாபகம். கவிஞர் தோழி தன் இருப்பிடமான டெங்கிலில் (Dengkil) நடைபெறும் ஒரு திருவிழாவிற்கு அழைத்திருந்தார். முதலில் செல்ல தயங்கியதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. பொதுவாக சடங்கு ரீதியிலான எல்லா விழாக்களும் என்னை மிகவும் சலிப்பூட்டுபவனவாக இருந்தன. டெங்கில், தலைநகரான கோலாலம்பூருக்கு பக்கம்தான் இருந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்புதான் பட்டப்படிப்பு முடிந்ததும் தப்பித்தோம் தித்தித்தோம் என்று எல்லாவற்றையும் சுருட்டிக் கொண்டு சொந்த ஊருக்கு ஓடி வந்திருந்தேன்.

தலைநகரில் சில உயிர்ப்பான மனிதர்களும், பல அற்புதமான நூல்களையும் கொண்ட நூலகமும் எனக்கு நேர்ந்த இனிய நினைவுகள். ஆனால் பொதுவான அதன் ராட்சச வேகமும் இரைச்சலும் என்னைப் போல் பிள்ளை பூச்சிகளை நிலைகுலைய செய்துவிடுகிறது. மெதுவாக பேசுவதும் நடப்பதும் எதிர்காலத்தில் உருப்படமாட்டாதவர்களின் அடையாளமாக பேசபடுவதைக் கண்டிருக்கிறேன். எப்போதும் பெண்களே ஆக்ரமித்துக் கொண்டிருந்த கனவுகளில் அவ்வப்போது பல வர்ணங்களில் பூத்துக் குலுங்கும் செடிகளும், குளிர்ந்த பனிமூடி விழும் அருவியும் , பச்சை மலைகளும், கண்ணாடி போல் பளபளக்கும் நீர் ஒட்டிய நீண்ட வெண்மணல் கடற்கரையும் வந்து போனதை நான் சொன்னால் நீங்க நம்ப மாட்டிர்கள்தான்.

என்னை நண்பர்கள் முக்கியமாக இலக்கிய நண்பர்கள் ஏதாவது நிகழ்ச்சிகளிலோ, உணவகங்களிலோ சந்திப்பதோடு சரி. வீட்டிற்கெல்லாம் அழைப்பது அரிதே. திருவிழாவின் பெயரையே காமடி திருவிழா என்று தோழி சொல்லியிருந்தார். எனக்கு தமிழ் சினிமாவின் காமடியர்கள் எல்லோரும் முன் தோன்றி மறைந்தார்கள். முக்கியமாக கவுண்டமணி. பயமாக இருந்தது. இருந்தும் செல்ல துணிந்தேன்.

5 மணிக்கு கே.ல். செண்ட்ரலில் நவீன், பூங்குழலி மற்றும் சந்துருவை சந்தித்து கொமுட்டரில் (komuter) வாருங்கள் என்று தோழி ஏற்கனவே சொல்லியிருந்தார். 4.55க்கு கே.எல் செண்ட்ரலில் இருந்தேன். வேலை முடிந்து திரும்பும் வேளையாகையினால் மனிதர்கள் யாரைப்பற்றியும் கவலைப்படாதவர்களாய் அலைந்து கொண்டிருந்தார்கள். இதுதான் என்று சொல்ல முடியாத விசித்திர ஓசை எங்கும் கவிழ்ந்திருந்தது. வர வேண்டியவர்களை தவிர மற்றவர்கள் வந்தும் போய்க் கொண்டும் இருந்தார்கள். கொமுட்டரில் டிக்கெட் வாங்கும் நிலையத்தினருகே நின்று கொண்டிருந்தேன்.

மணி 5.30 இருக்கும். தோழியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அவசர அலுவல் காரணமாக நவீனும், பூங்குழலியும் வரவில்லையாம். சந்துரு சாலை நெரிசலில் மாட்டி கொண்டிருக்கிறாராம். தொலைபேசியை வைப்பதற்குள் எத்தனை முறை மன்னிப்பு கேட்டிருப்பார் என்று தெரியவில்லை. உண்மையில் இந்த தாமதம் எனக்கு எரிச்சல் தராதது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. சும்மா இருக்கும் வேளையில் செய்ய நேரிடும் வேலையில் ஏற்படும் சுணக்கம் பெரும்பாலும் எரிச்சலுக்கு வவேகுத்ததைப்பற்றி யோசிக்க தொடங்கினேன்.

அந்த ரயில் மையத்தினுள் பெரும்பாலும் விரைவு உணவு விடுதிகளே மலிந்திருந்தன. சரிதான். விரைவான மனிதர்களுக்கு விரைவான உணவுகள். சந்துரு மட்டும் 6.30 மணிக்கு சில நிமிடங்கள் இருக்கும் போது தாமத மனிதராக வந்து சேர்ந்தார்.நல விசாரித்தலினூடே தொடர்ந்து தாமததிற்கு வருத்தம் தெரிவித்துக் கொண்டே இருந்தார் சந்துரு. அவரை சமாதானபடுத்துவது கொஞ்சம் கஷ்டமாகதான் இருந்தது.

ரயில் ஏறுவதற்கான தளத்தில் இறங்கிய பிறகு சாவகாசமாக இருவரை பற்றியும் அறிமுகம் செய்துக் கொண்டோம். எனக்கு நான்காண்டுகளுக்கு முன்பே சந்துருவை தெரியும். மலேசியாவில் வரும் ஒரு ஜனரஞ்சக வார இதழின் பக்க வடிவமைப்பாளராகவும், ஓவியராகவும் இருந்தார். இந்த இதழ்களின் மீது சுயமரியாதையும், நல்ல சிந்தனைகளின் மீது நம்பிக்கைக் கொண்டிருக்கும் எவருமே அதிக மதிப்பு வைப்பது கடினமே. இந்த அலர்ஜி, அதை சார்ந்துதிருப்பவர்களின் மீதும் வந்து விடுகிறது.

இதனால்தான் சந்துருவை இலக்கிய நிகழ்ச்சிகளில் ஏற்கனவே பார்த்திருந்தும் ஒரு கைக்குலுக்களிலோ, சிறு புன்னகையிலோ கடந்து விட முடிந்திருக்கிறது. கொஞ்ச நேர பேச்சிலேயே சந்துரு வசீகரமான மனிதர் என புரிந்துக்கொள்ள முடிந்தது. அவருடைய துயர மிகுந்த வாழ்வு பயணத்தை இயல்பாக, நகைச்சுவை மிளிர சொல்லிக் கொண்டிருந்தார்.

13 வயதிலேயே பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தனியே பேருந்தேறி கோலாலம்பூரை அடைந்தவரை பத்திரிக்கை உலகம்தான் அரவனைத்திருக்கிறது. ஆரம்ப கல்வியில் தமிழே படிக்காதவர், பத்திரிக்கையில் எழுத்துருவை அடுக்குவதிலிருந்து ஆரம்பித்தவர் இயல்பாக அவரிடமிருந்த ஓவியத்திறமையினால் பத்திரிக்கைகளுக்கு ஒவியங்கள் வரைய தொடங்கி, பின்னர் கணினியின் வருகைக்கு பின் பக்க வடிவமைப்பையும் மெல்ல கற்று கொண்டு தேறியிருக்கிறார்.

கடந்த இருபதாண்டுகளுக்கு மேலாக தமிழ் பத்திரிக்கையுலகில் நிகழ்ந்த தொழில் நுட்ப ரீதியிலான மாற்றத்தை சந்துரு கட்டுரையாக எழுதினால் நல்ல ஆவணமாக அமையும்.தொழில் நுட்ப மாற்றத்தினூடே பத்திரிக்கையுலகைச் சார்ந்த மனிதர்களின் மன நுட்பங்களையும், தடுமாற்றங்களையும் சந்துரு இயல்பாக அறிந்திருந்தார்.

பொதுவாக, பத்திரிக்கைகளில் வேலை செய்பவர்களும், அதில் இனாமாக தொடர்ந்து எழுதும் எழுத்தாளர்களின் மீதான மலேசிய பத்திரிக்கைகளின் சுரண்டல் புத்தியை நான் வன்மையாக கண்டிப்பவன். சந்துரு மௌனமாக ஆனால் உறுதியாக கண்டிப்பவராக இருந்தார்.அவருடைய சம்பளத்தைக் கேட்டேன். மிகவும் வருத்தமாக இருந்தது. “வருத்தபடாதிங்க நண்பா” என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

நிற்க, அன்று கொமுட்டர் ரயில் மின்சார கோளாரினால் தளத்திற்கு வர தாமதமாகி கொண்டிருந்தது. மணி 7.30 ஆகியிருந்தது. திருவிழா 9 மணிக்கு ஆரம்பம். “நாம கே.எல்.ஐ.ஏ (KLIA) ரயில்ல போயிரலாம் நண்பா”, என்ற சந்துருவை நான் ஏறேடுத்து பார்த்தேன். ஏற்கனேவ வாங்கிய டிக்கெட் வீண்தானே. அம்மாவிடம் சொற்ப பணம்தான் வாங்கி வந்திருந்தேன். என் பார்வையிலேயே எல்லாம் தெரிந்திருக்க வேண்டும்.

கே.எல்.ஐ.ஏ ரயிலுக்கு கொமுட்டர்-ஐ விட மும்மடங்கு கட்டணம், RM12.50. சந்துருதான் இருவருக்கும் டிக்கெட் எடுத்தார். சந்துருவை சுரண்டியவர்களின் பட்டியலில் நானும் சேர்ந்து கொண்டேன். KLIA ரயில் விமான நிலையத்திற்கு பயணிகளை அழைத்து செல்லும் ரயிலாததால் மிகவும் விரைவாகவும் ஆடம்பரமாகவும் இருந்தது. விமான நிலையத்திற்கு இடையே மூன்று இடங்களில் நிற்கிறது. மூன்றாவது நிற்குமிடம் தோழி வசிக்கும் பகுதிக்கு பக்கமாக இருந்தது. 30 நிமிடத்தில் அந்த நிலையத்தை அடைந்தோம். பத்து நிமிடத்திற்கு பின் தோழி அவர் அண்ணனுடன் காரில் வந்து அழைத்துச் சென்றார்.

ஒரு ஏக்கர் பரப்பளவில் சொந்த நிலத்தில் தோழியின் அப்பா, சித்தப்பா, அண்ணன் மற்றும் தம்பியின் வீடுகள் அருகருகே அமைந்திருந்தன. தோழி அவர் அப்பாவீன் வீட்டில் தங்கியிருந்தார். நாங்கள் அவர் அண்ணனின் வீட்டில் தங்கி கொண்டோம். தோழிக்கு அவசரமாக ஒரு சந்திப்பு கூட்டத்திற்கு செல்வதற்கான அலுவல் இருந்தது. அவ்விடத்தில் இளைஞர்களால் ஆர்வமாக நடத்தப்படும் “கல்விக்குழு” எனும் அமைப்பில் முக்கிய உறுப்பினராக தோழி இருந்தார். அங்கே போன பின்புதான் திருவிழாவின் உச்ச நாள் மறுதினம் என்பதை அறிந்தோம். திருவிழா நடக்கும் இடம் தோழியின் வீட்டிலிருந்து ஐந்து நிமிடம் நடக்கும் தூரத்தில் அமைந்திருந்தது. விழாவில் அடிக்கப்படும் பறையோசை சன்னமாக கேட்டு கொண்டேயிருந்தது.

காமடி திருவிழாவின் சரியான பெயர் “காமன் ரதி திருவிழா” என்பதே. வழக்கில் வேகமாக உச்சரிக்கப்படும்போது இப்படி மருவியிருக்கலாம். பதினைந்து நாட்களுக்கு கொண்டாடப்படும் இவ்விழா பௌர்னமியில் தொடங்கி அமாவைசையில் நிறைவுறுகிறது. மறுநாள் திருவிழா நடைபெறும் இடத்தை அடைந்தபோது உற்சாகம் களைகட்ட தொடங்கியிருந்தது. ஒரு திடலில் நாட்புறமும் கம்புகளால் வேலி அடிக்கப்பட்டு அதைச்சுற்றி மக்கள் திரளாக நின்றிருந்தனர். நடுவினில் ஒன்பது விதமான தாவரங்களால் கட்டப்பட்டு. எட்டு அடிக்கும் உயரமாக தூண் போன்ற ஒன்று எழுப்பப்பட்டிருந்தது. அதுதான் மன்மதனின் குறியீடு. அந்த கோவிலுக்கு முன், கூடத்தில் ஆண் பெண் வேடமணிந்தவர்களைப்போல இருவர் கையில் அம்புடன் முன்னும் பின்னும் நகர்ந்து ஆடிக்கொண்டிருந்தனர். ஆண் வேடமணிந்தவர் மன்மதன். பெண் வேடமணிந்தவர் ரதி. ஆனால் இருவருமே ஆண்கள்தான்.

அவ்வப்போது நடுவே ஒருவர் மரபு கவிதை போல இருந்த பாடலை ஆற்றாமையோடு முழங்க அதற்கேற்ப பறை ஒலிக்கப்பட்டது. ரதி மன்மதன் இருவரின் இடுப்பிலும் துணி சுற்றப்பட்டு பின்னால் இருவர் ஆட்டத்திற்கேற்ப முன்னும் பின்னும் இழுத்தபடி இருந்தனர். பாடலை பலர் மாறி மாறி பாடினர். ஒப்பாரியை ஞாபகப்படுத்தும் தொனியில் இருந்த அந்த பாடலும் பறையின் தாளமும் கேட்க நெகிழ்ச்சியாக இருந்தது. நேரம் செல்ல செல்ல ரதி மன்மதனின் ஆட்டம் ஆக்ரோஷமாக மாறியது. பக்கத்தில் நின்றிருந்த தோழியிடம் இவ்விழா பற்றி கேட்டதில் மிக சொற்பமான பதிலே வந்தது. ரதியை திருமணம் செய்த பதினைந்தாம் நாள் மன்மதன் எரிந்து சாம்பலாகி விடுவான் என்பது சிவனின் சாபமாம். இன்று பதினைந்தாவது நாள். அதுதான் பிரிவை தாங்காமல் ஆக்ரோஷமாக ஆடுவதாக சொன்னார்.

“அப்படியென்றால் எதற்காக சண்டையிடுவதுபோல் ஆடுகின்றனர்”, என்ற கேள்வி தோன்றினாலும் கேட்கவில்லை. எனக்கென்னவோ அது திருவிழா என்றே நம்பமுடியவில்லை. தமிழகத்தில் பின்பாட்டுக்கு ஏற்ப வேஷங்கட்டி ஆடபடும் கூத்தே ஞாபகத்திற்கு வந்தது. மலேசியாவில் பெரும்பாலும் தோட்டப்புறங்களில் நடைபெறும் திருவிழா “தீ மிதி” தான். நான் வளர்ந்த பகுதியில் தீமிதிதான் முக்கிய திருவிழா. இது போன்ற வித்தியாசங்களை இதுவரை அறியாது இருந்ததற்கு மிகவும் வருந்தினேன். இத்தகைய விழாக்களின் மீது மூடத்தனமான நம்பிக்கைகளை வளர்த்து கொள்ள தேவையில்லை. ஆனால் இது போன்ற விழாக்கள் மலேசிய தமிழர்கள் கலை, கலாச்சாரம் மற்றும் வரலாற்றோடு நெருங்கிய தொடர்புள்ளவை.

இத்தகைய நிகழ்வுகளை பதிவு செய்வதன் மூலம் இதிலுள்ள சாரமான பகுதிகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லலாம். அடுத்த ஆண்டு பதினைந்து நாட்களுக்கு முன்பே இங்கே வந்து தங்கி இவ்விழா பற்றியும் இங்குள்ள மக்களிடையே இது ஏற்படுத்தி இருக்கும் சாதக பாதகங்கள் இரண்டையும் ஆவணபடுத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். இடையில் பட்டாசு மற்றும் வானவெடிகள் வெடிக்கப்பட்டன. எல்லாம் இளைஞர்களின் கைங்காரியம். சிலரோடு பேசும்போது ஒன்று புரிந்தது. பழைய விஷயம் என்பதாலேயே அதை அப்படியே ஏற்று கொள்கிறார்கள். அல்லது மூடத்தனம் என்றெண்ணி மறுக்கிறார்கள். எல்லாவற்றின் மீதும் ஆழமான விமர்சன பார்வை இங்கு குறைவுதான் என்று அமாவாசை இரவில் தோழி மற்றும் சந்துருவோடு வீட்டை நோக்கிய நடையின் போது சொல்லிக் கொண்டு வந்தேன். திருவிழா முடிய காலையாகும் என்றாலும் இளைஞர்களில் சிலர் சச்சரவில் ஈடுபட்டதால் விரைவிலேயே தோழியின் வீட்டிற்கு திரும்பினோம்.

குறிப்புகள்:

1. மறுவருடம் பதினைந்து நாட்களுக்கு முன் செல்லும் திட்டம், வேலை பளுவினால் கைவிடநேர்ந்தது. இருப்பினும் என் தம்பி காளிதாஸ் பணியை முடித்திருக்கிறார். ஒளிபரப்பு துறை மாணவரான அவர், நண்பர் சிலருடன் (அதில் மூவர் மலாய்காரர்கள்) இணைந்து ஆவண படம் தயாரித்துள்ளார். எடிட்டிங் வேலை நடந்து வருகிறது. இந்த அனுபவங்களை கட்டுரையாக எழுத திட்டம் உள்ளது. இக்கட்டுரை போல ஒரு வருடம் கழித்து எழுதாமல் அடுத்த இதழிலேயே எழுத முயல்கிறேன்.

2. சந்துரு இயற்கையாகவே சிறந்த ஓவியர். ஓவியத்தைப் பற்றி ஆழமான அறிவு எனக்கில்லாவிட்டாலும், இதை துணிந்து கூறுவேன். மலேசிய பத்திரிக்கைகளில் இடம் பெறும் ஓவியத்தைப் பார்த்தவர்கள் இதை நன்குணர்வர். இருப்பினும், ஓவியத்தில் அடிப்படைப் பயிற்சியைப் பெற்றால், தலைசிறந்த ஓவியங்களை அவரால் தர முடியும். இதன் தொடர்பாக, ஆலோசனையாகவோ, பணரீதியாகவோ உதவ முன்வருபவர்கள் என்னையோ, நவீனையோ தொடர்பு கொள்ளலாம். பணம் திறமைசாலிகளை தோற்கடிக்க நாம் அனுமதிக்க முடியாது.

3. இந்த பயணத்தின் மூலம்தான், என்னை கண்டாலே ஒதுங்கி செல்லும் நண்பர்கள் பேசவே தொடங்கினார்கள். இந்த சந்திப்பின் மூலகர்த்தாவாகிய தோழிக்கு இன்றுவரை நன்றி சொன்னதில்லை. நன்றியெல்லாம் ரொம்ப சின்ன வார்த்தை என்பதால் இருக்கலாம்

 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
     
  முகப்பு  |  உள்ளடக்கம்  
     

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768