வல்லினத்தில் தேடுதல்

எழுத்துரு உதவி / Tamil Font Help 

 இதழ் 1
ஜூன் 2007
முகப்பு  |  உள்ளடக்கம்

கட்டுரை

 

மலேசியத் தமிழ் நூல் வெளியீட்டில் ஈழத்தமிழர்களின் பங்களிப்பு

என். செல்வராஜா - நூலவியலாளர், லண்டன்

 

       
 

முன்னுரை

தாயகத்திலிருந்து மலேயாவுக்குப் பொருளாதார நோக்கில் புலம்பெயர்ந்த நிகழ்வினையே நாம் ஈழத்தமிழரின் முதலாவது புலப்பெயர்வாகக் கருதுகின்றோம். 19ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலல் ஆரம்பிக்கப்பட்ட இப்புலப்பெயர்வு இரண்டாவது உலகமகா யுத்தத்துடன் முடிவுக்கு வந்ததாகக் கருதப்படுகின்றது. இப்புலப்பெயர்வின்போது அங்கு சென்று பணியாற்றியவர்களின் இலக்கிய முயற்சி பற்றிய தேடலை நான் தொகுத்துவரும் "நூல்தேட்டம்" என்ற பெயர்கொண்ட ஈழத்து எழுத்தாளர்களின் நூற்பட்டியலுக்காக மேற்கொண்டிருந்த வேளையில் அதிசயிக்கத்தக்க அவர்களது பங்களிப்புகள் பல வெளிச்சத்திற்கு வந்தன. பொருளாதாரக் காரணிகளின் பின்னணியில் எம்மவரால் மறக்கப்பட்டுவிட்ட இந்த யாழ்ப்பாணத்து மலாயன் பென்சனியர் சமூகத்தின் புகலிடத்து இலக்கியப் பங்களிப்பு, மலேசிய படைப்பிலக்கியத்தின் வரலாற்றிலிருந்து பிரிக்கப்பட முடியாததாகியுள்ளது. இன்றைய நிலையில் புலம்பெயர் வாழ்வியலில் அவர்களது இலக்கியப் பங்களிப்பு பற்றி நான் தேடித் தொகுத்த சில தகவல்களையாவது வாசகர்களுடன் பரிமாறிக் கொள்ள விரும்பினேன். அந்த விருப்பத்தின் விளைவே இக்கட்டுரையாகும்.

இது மலேசிய இலக்கியத்திற்கு எம்மவரின் பங்களிப்பைப் பற்றி தரும் முழுமையானதொரு ஆய்வல்ல. அத்தகையதொரு முழுமையான ஆய்வினை நோக்கிய ஒரு சிறு காலடித்தடம் என்று வேண்டுமானால் இக்கட்டுரை முயற்சியைக் கருதலாம். இக்கட்டுரையின் விரிவஞ்சி ஈழத்தமிழர்களின் முழுமையான இலக்கியப் பணிகள் விவரிக்கப்படவில்லை. தற்போது சிங்கப்பூரில் நிரந்தரப் பிரஜைகளாகி வாழும் ஈழத்தமிழர் சிலரின் இலக்கியப் பணியும் போதிய தொடர்பின்மையால் இக்கட்டுரையில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. ஈழத்தமிழரின் மலேசிய சிங்கை இலக்கியப் பணிகள் பற்றிய ஆய்வுகள் விரிவான முறையில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற உணர்வினை இக்கட்டுரை நிச்சயம் வாசகர் மனதில் ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.

மலேசியாவில் ஈழத்தமிழர் புலப் பெயர்வு

சோழர் காலம் முதலாக (கி.பி 846- 1279) மலேசிய மண்ணில் தமிழரின் கால்பதிந்த வரலாற்றுத் தடங்கள் காணப்படுகின்ற போதிலும், 1786இல் பினாங்குத் தீவு ஆங்கியலேயரின் ஆட்சியின் கீழ் வந்தப் பிறகே தமிழர்களின் பாரிய குடியேற்றங்கள் அங்கு ஏற்பட்டுள்ளன. மலேசியக் குடியேற்ற வரலாற்றில் மலேசிய நாட்டை வளப்படுத்த நான்கு கட்டங்களில் அண்டை நாட்டு மக்களின் குடியேற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

முதலாவது கட்டக் குடியேற்றமாக மலேசியாவின் கரும்புத் தோட்டங்களிலும், பொதுப்பணித் துறைகளிலும் பணியாற்றவெனக் குடியேற்றப்பட்ட தொலோளர்கள் அடங்குகின்றனர். இரண்டாவதாக இந்தியாவிலிருந்து தமிழர்கள் இலங்கையின் மலையகத்திற்கு அழைத்து வரப்பட்டது போல கங்காணி முறையில் தமிழ் நாட்டின் கிராமங்களில் தொலோளர்களைத் திரட்டுவதன் மூலம் வேலைக்குக் கொண்டுவரப்பட்டவர்கள் அடங்குகின்றனர். இந்தியாவின் அக்காலக்கட்டத்தில் நிலவிய ஜமீன் அடக்க முறைகளினாலும் கொத்தடிமை கொடுமைகளினாலும் சாதீயத்தினாலும் பாதிக்கப்பட்ட இந்திய ஏழைத் தொலோளர்களுக்கு இந்தத் தொழில்சார் புலப்பெயர்வு மிகுந்த எதிர்ப்பார்ப்பைத் தந்திருந்தது. அப்போதைய நாகபட்டினம் துறைமுகம் இந்தத் தொலோளர்களை ஏற்றி வருவதற்கு மிகவும் பயன்படுத்தப்பட்ட இடமாகும்.

மூன்றாவதாக பிழைப்பு நாடிச் சுயமாக மலேசியாவுக்கு வந்தவர்கள் இடம்பெறுகின்றனர். மலேசிய மண் சற்று வளமுற்று வர்த்தகம் பெருகிய காலகட்டத்தில் செட்டியார்கள், முஸ்லிம் வணிகர்கள், சீக்கியர்கள் சிந்திக்காரர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் என்ற பிரிவினரும் அதற்கும் பின்னர் சற்றே ஆங்கிலம் கற்றிருந்த இலங்கைத் தமிழர்களும் குடியேறினார்கள்.

இலங்கைத் தமிழர்களில் குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழர்களே இங்கு ஆங்கிலேயர்களால் குடியேற்றப்பட்டிருந்தனர். வண்ணார் பண்ணை, சுழிபுரம், வயாவிளான், புலோலி, வட்டுக்கோட்டை போன்ற பிரதேசங்களிலிருந்து பெருமளவில் இங்கு தபால், கச்சேரி, கல்வி, போக்குவரத்து, மருத்துவம் போன்ற அரசாங்க சேவைகளில் இடைநிலை ஊயேர்களாகப் பணியாற்றவென்று யாழ்ப்பாணத்துத் தமிழர்கள் ஆரம்பத்தில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்தியத் தொலோளிகளுக்கும், ஆங்கிலத் துரைமார்களுக்கும் இடையில் மொவேழி இணைப்பாளர்களாக இவர்கள் பணியாற்றியதாக வரலாறு உண்டு. மொழி வயோல் தமிழராக இருந்த போதிலும் மலேசியாவில் குடியேறிய இந்தியத் தமிழ் தொலோளர்களிடையே யாழ்ப்பாணத் தமிழர்கள் குட்டி அடக்குமுறையாளர்களாகவும் ஆங்கிலத் துறைகளின் செல்வாக்கைப் பெறும் நோக்கில் அவர்களின் நலன் பேணுபவர்களாகவுமே விளங்கி உள்ளனர். பின்னாளில் மலேசிய மண்ணில் மலர்ந்த இலக்கியங்கள் பலவற்றில் எம்மவர்கள் இத்தகைய குட்டி அடக்கு முறையாளர்களாகவே இனம் காணப்பட்டுள்ளார்கள்.

மலேசிய மண்ணில் மலர்ந்த கவிஞர்களுள் மூத்த முதுபெரும் மலேசியக் கவிஞர் ந.பழநிவேலு இயற்றிய 'கவிதை மலர்கள்’ (1947) என்ற நூலில் 'சித்தப் போக்கு’ என்னும் தலைப்பில் வரும் பாடல் அக்காலப் பாடு பொருளின் பட்டியலாகவே விளங்குகின்றது.

அயலான் ஒருவன் என்னை
'அடிமை இந்தியனே’ என்று அழைக்கும் பொழுதும்
அதே அடிமை இந்தியன் என்னைத்
'தாழ்ந்த குலத்தான்’ என்று சாற்றும் பொழுதும்
அடிமையின் பயங்கர தளையைக் காணும் பொழுதும்
... என் மனம் துடிக்கிறது!

வாணிநேசன் (க.சுப்பிரமணியம், 1971) எழுதிய 'நானும் வரமுடியாதுதான்’ என்ற சிறுகதை யாழ்ப்பாணத் தமிழர்கள் மேலாளர்களாக இருந்து செய்த கொடுமைகளுக்கு மற்றொரு இலக்கியச் சான்று.

அண்டை நாட்டு மக்களின் மலேசியக் குடியேற்றங்களில் நான்காவது கட்டம், 1802-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் போர்கைதிகளாகப் பிடிப்பட்ட தமிழர்களை பினாங்கு தீவை வளப்படுத்தும் நோக்குடன் ஆங்கிலேயர்கள் நாடு கடத்திய போது ஏற்பட்டது என்று , கர்னல் வெல்சின் 'இராணுவ நினைவுகள்’ என்ற நூலினை ஆதாரம் காட்டி மலேசிய எழுத்தாளர் பீர்.முகம்மது அவர்கள் குறிப்பிடுகின்றார். மருதுபாண்டியரின் மகனான துரைசாமி 73 கைதிகளுடன் பினாங்கு தீவுக்கு நாடுகடத்தப்பட்ட விபரங்கள் அதில் காணப்படுவதாக அவர் மேலும் குறிப்பிடுகின்றார்.

1921-ல் நடந்த ஒரு கணக்கெடுப்பின்படி அங்கு குடியேறிய தென்னிந்தியர்களில் 387,509 பேர் தமிழர்கள், 39986 பேர் தெலுங்கர்கள், 17790 பேர் மலையாளிகள் இருக்கக் காணப்பட்டனர். தோட்டப்புறங்களிலும் மற்றும் இரயில்வே சாலை மின்சாரம், நீர் விநியோகத் துறைகளிலும் தமிழர்கள் பெருமளவில் ஈடுப்படுத்தப்பட்டார்கள். இங்கும் ஆங்கில வழி கல்வி கற்ற யாழ்ப்பாணத் தமிழர்களும், மலையாளிகளும் தமிழர்களுக்கு அதிகாரிகளாகப் பணியாற்றும் நிலை உருவாகியது.

மலேசியாவில் தமிழ் நூல் வெளியீடு

மலேசிய தமிழ் மொழி கல்வி 1816இல் முதலில் பினாங்கிலேயே தொடங்கப்பட்டது என்று அறியப்படுகின்றது. மலேசிய மண்ணில் பிறந்த முதலாவது தமிழ் நூல் பட்டியல் என்ற வகையில் 1969 ம் ஆண்டில் மலாயாப் பல்கலைக்கழகத்தின் நூலக வெளியீடாக இராமசுப்பையா அவர்கள் தொகுத்திருந்த தமிழ் மலேசியானா (Tamil Malaysiana: a checklist of Tamil Books and Periodicals published in Malaysia and Singapore) என்ற நூல் அமைகின்றது. இந்நூலில் 77 பக்கங்களில் 1968 வரை வெளியான 401 தமிழ் நூல்களின் நூலியல் விபரங்களும், மலேசிய மண்ணில் முளைவிட்ட 271 தமிழ் சஞ்சிகைகள் (periodicals) பற்றிய பட்டியலும் காணப்படுகின்றன.

மலேசிய தமிழ் நூல்களின் வெளியீட்டு வரலாற்றை நாம் ஆராயும்போது, இன்றைய சிங்கப்பூரின் (1965 வரை மலேசிய எழுத்தாளர்களாக இனம் காணப்பட்டவர்கள்) தமிழ் படைப்பாளிகளையும் இணைத்தே பார்க்கவேண்டியதாக இருக்கின்றது. சிங்கப்பூரில் வாழ்ந்த தமிழர்களின் பங்கு மலேசியாவின் நூலியல் வரலாற்றில் பிரித்துப்பார்க்க முடியாதபடி இரண்டறக்கலந்து நிற்கின்றது.

வண்ணை அந்தாதி, வண்ணை நகர் ஊஞ்சல், சிங்கைநகர் அந்தாதி என்ற தலைப்பில் மூன்று சிறு நூல்களை யாழ்ப்பாணம் வண்ணார்ப்பண்ணையிலிருந்து புலம்பெயர்ந்த சி.ந.சதாசிவ பண்டிதர் சிங்கப்பூரில் எழுதி 1887இல் வெளியிட்டுள்ளார். இந்த நூல் பற்றிய செய்தியை இராம சுப்பையா தனது நூல்விபரப்பட்டியலில் பதிவு செய்திருக்கின்றார். மலேசியாவில் வெளிவந்ததாகப் பதிவுபெற்ற முதல் தமிழ் நூல் இதுவாகவே இன்னைய நிலையில் கருதப்படுகின்றது.

மலேசியாவின் முதல் தமிழ் சஞ்சிகை, பினாங்கிலிருந்து 1876இல் 'தங்கை நேசன்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. (மா.இராமையா, மலேசியத் தமிழ் வரலாற்றுக் களஞ்சியம்). இலங்கையிலிருந்தும், இந்தியாவிலிருந்தும் புலம்பெயர்ந்த தமிழர்களில் இலக்கியதாகம் கொண்ட சிலரின் கூட்டு முயற்சியினால் தங்கை நேசன் வளர்த்தெடுக்கப்பட்டது.

மலேசிய மண்ணில் வெளியான மற்றொரு ஆரம்பகால வெளியீடான யாழ்ப்பாணத்தவரான க.வேலுப்பிள்ளையின் 'சிங்கை முருகேசர் பேரில் பதிகம்’ என்ற நூலை அடையாளம் காண தமிழ் மலேசியானா உதவுகின்றது. சிங்கப்பூரில் 1893இல் வெளியான இச்சிறுநூல் 16 பக்கங்களைக் கொண்டது. சிங்கை முருகேசர் பேரில் பதிகம், யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை ஸ்ரீ வி.முருகேசபிள்ளையும் சிங்கப்பூரிலிருக்கும் சில நாட்டுக்கோட்டை செட்டிப்பிள்ளைகளும் கேட்டுக்கொண்டபடி, யாழ்ப்பாணம், வயாவிளான் க.வேலுப்பிள்ளை என்பவரால் இயற்றப்பட்டு, வட்டுக்கோட்டை ச.பொன்னம்பலம் பிள்ளை அவர்களால் சிங்கப்பூரில் தீனோதய வேந்திரசாலையில் ஜனவரி 1893இல் அச்சிடப்பட்ட நூலாகும். சிங்கப்பூரில் நாட்டுக்கோட்டைச் செட்டிகளால் தோற்றுவிக்கப்பட்ட முருகன் திருத்தலத்தின் பேரிற்பாடப்பெற்ற 10 பதிகங்களும், திருவூஞ்சல், கீர்த்தனம், பதம், ஜாவளி என்பனவும் இச்சிறுநூலில் அடங்கியுள்ளன.

மலேசியாவின் தமிழ் நூல் வெளியீட்டில் ஈழத்தமிழர்

இன்று இலங்கையின் இனவன்முறைக்கு முகம்கொடுக்கமுடியாது உலகெங்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் நூல்வெளியீடுகள், தத்தமது வரலாற்றுப்பாரம்பரியப் பதிவுகளாகவும், மலரும் தாயகத்து நினைவுகளாகவும் பதியப்படுவது போலவே அன்று பொருளாதாரக் காரணிகளால் மலேயாவுக்குப் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் தமது தேசநினைவுகளை முன் நிறுத்திய பல நூல்களை வெளியிட்டுள்ளனர். தாயகத்தின் நினைவுகளை இன்று கவிதைகளாக வடித்துப் பதிவாக்கும் புலம்பெயர் தமிழர் போன்றே தமது பாரம்பரிய நிலப்பரப்பில் கோயில்கொண்டெழுந்த ஆலயங்களின் மேற்பாடப்பெற்ற பாடல்களாக மலேயா மண்ணில் உருவாகிய ஆரம்பகால ஈழத்தமிழர்களின் நூல்கள் பல அமைந்திருக்கின்றன. சந்திரமௌலீசர் சகதம் என்னும் 'ஈழமண்டல சதகமும் உரையும்’ என்ற மற்றொரு நூலையும் இங்கு உதாரணத்திற்குத் தரலாம். ம.க.வே.பிள்ளைப் புலவர் அவர்களது மூலநூலுக்கு, ந.சபாபதிப்பிள்ளை அவர்கள் உரை எழுதி, கோலாலம்பூர், ச. இரத்தின சபாபதி அவர்களால் 1951இல் கோலாலம்பூர், இந்தியன் அச்சியந்திரசாலையில் 202 பக்கங்களில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.

சைவோபநிஷத்து, சிவாகமம், தக்ஷிணகைலாச மான்மியம், வான்மீகம் முதலிய சம்ஸ்கிருத நூல்களின் உதவியுடன் தேவாரம், திருவாசகம், திருமந்திரம், தலபுராணம், முதலாய திராவிடநூல்களில் மேற்கோள்களைப் பயன்படுத்தி ஈழமண்டலத்தின்மீது பாடப்பெற்ற சதகமும் அதற்கான உரையும் இந்நூலில் அடங்கியுள்ளது. 'கும்பழாவளை விநாயகர் தோத்திரப் பிரபந்தத் திரட்டு’ என்ற மற்றொரு நூல் யாழ்ப்பாணத்து க.வே..கந்தையாபிள்ளை அவர்களால், பினாங்கு: கணேச அச்சியந்திரசாலையில் 1933இல் அச்சிடப்பெற்று 50 பக்கங்கள் கொண்ட நூலாக வெளியிடப்பட்டுள்ளது.

சைவசித்தாந்தம் முதலான இந்து நெறிகளில் தீவிர பிடிப்புள்ளவர்களாக அங்கு குடியேறிய ஈழத்தவர்கள் இருந்துள்ளனர். மலேயா மண்ணில் தம்மை உயர்குலத்து சைவ வேளாளர்களாக அடையாளப்படுத்துவதற்கு இத்தகைய இலக்கியப்பதிவுகள் அவர்களுக்குத் தேவைப்பட்டுள்ளது. 'ஆன்மநாயகன் அருள்வேட்டல்’ என்ற நூல் சாஸ்திரி ஏ.ஆறுமுகனார் அவர்களால் கிள்ளானில் வெளியிடப்பட்டுள்ளது. முதற்பதிப்பு 1941இல் கண்ட இந்நூலின் 2ஆவது பதிப்பு 1984இல் செலாங்கூரில் வெளியிடப்பட்டுள்ளது. சிங்கப்பூர் 'தமிழரசு’ பத்திரிகையின் ஆசிரியராயிருந்தவரும், இயற்றமிழாசிரியருமான யாழ்ப்பாணம் ஏ.ஆறுமுகனார் அவர்கள் இந்நூலாசிரியர், இந்நூலிலுள்ள பாடல்கள் தமிழ்மறையான தேவார திருவாசகங்களிலிருந்து தொகுக்கப்பெற்றவை. அகச்சுத்தி, புறச்சுத்தி, புறப்பாடு, தேற்றரவு, மயானம், தீயணைவித்தல், அறவுரை என்று ஏழு பகுப்பில் 84 பாடல்களுடன் இந்நூல் வெளிவந்துள்ளது.

சைவசமய சார சங்கிரகம் என்ற நூல் தி.க.கந்தையாபிள்ளை அவர்களால் கோலாலம்பூர்: மலாயன் அச்சுக்கூடத்தில் தை 1941இல் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், புலோலி ஸ்ரீலஸ்ரீ தில்லைநாத நாவலவர்களின் மருகரும் மாணாக்கருமாகிய தமிழ்ப்பண்டிதர் தி.க.கந்தையாபிள்ளை அவர்கள் மலாயாவிலிருந்து சேர்.பொன்.அருணாசலம் அவர்களின் ஞாபகர்த்தமாக அர்ப்பணம் செய்து வெளியிட்டுள்ள நூல் இதுவாகும். பரம ஐஸ்வர்யங்களாகிய விரத வரலாறுகளின் இலக்கணங்களையும், வருஷப்பிறப்பு முதலிய நற்கருமங்களையும் இன்னும் சில சமய, வரலாற்று விளக்கங்களையும் இந்நூல் வழங்குகின்றது.'பன்மணிக் கோவை’ என்ற மற்றொரு நூல் ம.ஆறுமுகம் என்பவரால் சிங்கப்பூர்: இலங்கைத் தமிழர் சங்கத்தின் வாயிலாக செப்டம்பர் 1937இல் 144 பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் மனநோயாளர் வைத்தியசாலைத் (Mental Hospital) தலையெழுத்தாளர் ப.கந்தையா அவர்களுக்குச் சமர்ப்பணமாக்கப்பட்ட இந்நூல், பண்டைத் தமிழகத்தின் பழம்பெருமை தொடங்கித் தமிழ் இலக்கியம், தமிழறிஞர் தம் செம்மொகேள், அவற்றால் இந்தியவுலகமடைந்த நலம், சைவசித்தாந்தச் சிறப்பு, கிறிஸ்துவ, இஸ்லாமிய மதங்களின் சாரம், சமயங்களின் சமரச நோக்கம், சாதி மற்றும் சீதனக் கொடுமைகள், மகாத்மா காந்தி முதலான பெரியோர் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகள், நட்பு, நன்றி, இல்லற மாண்பு ஈறாகப் பல்வேறு தலைப்புகளில் பல கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

Analysis of the Unseen என்ற ஆங்கிலத் தலைப்புடன் வெளியாகியுள்ள தத்துவ ஆராய்ச்சி என்ற வி.எஸ்.ஸ்ரீபதி அவர்களது நூல் சிங்கப்பூர் M.Mohamed Dulfakir, Book Seller வாயிலாக 1933இல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூல் நூலாசிரியர் தனது தாயார் மாது ஸ்ரீ பாலாம்பிகை அம்பாள், செல்வாம்பாள் அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்யப்படுவதாக அமைந்துள்ளது. இலங்கைத் தமிழர்களிடையே காணப்படும் சரமகவி என்ற கல்வெட்டுப் பாரம்பரியத்தின் மற்றொரு பரிமாணமாக இந்நூல் அமைந்திருப்பது இங்கு குறிப்பிடத்தகுந்தது.

நூலாசிரியர், இலங்கையில் யாழ்ப்பாணம். வண்ணார்பண்ணை களட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தொழில்வாய்ப்பின் நிமித்தம் புலம்பெயர்ந்து மலேயாவுக்குச் சென்று குடியேறியவர். இவர் எழுதிய 'தேகத்தைப் பக்குவமுடைத்தாக்கல்’ என்ற மற்றொரு நூலும் இங்கு குறிப்பிடத்தகுந்தது. கிள்ளானில் 1933இல் வெளியிடப்பட்ட இந்த நூலில் , மலேயாவில் பத்துபகாட் நாட்டுக்கோட்டைச் செட்டியார்களின் சங்கத்தில் ஸ்ரீபதி அவர்கள் செய்த உடற்பயிற்சி பற்றிய உபந்நியாசம், தேகாப்பியாச விளக்கப்படங்களுடன் 38 பக்கங்களில் தரப்பட்டுள்ளது. தங்களது மேடைப்பேச்சுக்களை, உரைகளை நூலுருவில் பதிவாக்குவதில் ஈழத்தமிழர்கள் மலேயாவில் வாழ்ந்திருந்த வேளையில் அக்கறை கொண்டிருந்திருக்கிறார்கள் என்று நம்பமுடிகின்றது.

முன்னைய நூல் போன்றே, 'பார்ப்பது எதை’ என்ற மற்றொரு நூலும் இதற்கு உதாரணமாக அமைகின்றது. கா.இராமநாதன் அவர்கள் எழுதி, கோலாலம்பூரில் ஏப்ரல் 1960இல் வெளியிடப்பட்ட இந்நூலில், புதுவயல் சரஸ்வதி சங்கத்தின் வெள்ளிவிழாவின்போது விஞ்ஞானி சா.கிருஷ்ணன் தலைமையிலும், யாழ்ப்பாணம், வறுத்தளைவிளானில் இடம்பெற்ற விசேட கூட்டமொன்றில் பிரம்மஸ்ரீ சி.கணேசையர் தலைமையிலும் 'பார்ப்பது எதை’ என்ற தலைப்பில் கா.இராமநாதன் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவுகள் இரண்டும் இடம்பெறுகின்றன.

சிவயோகத்தில் அமர்ந்து சைவாகமங்களின் பொருட்களை அடக்கி ஆண்டுக்கொன்றாகப் பாடியருளிய திருமூலரின் திருமந்திரப் பாடலொன்று விரிவாகப் பல உதாரணங்களுடன் இவ்வுரையில் விளக்கப்பட்டுள்ளது. அரிய மானிடப் பிறவியைப் பெற்ற நாம் பல இன்பதுன்பங்களை அனுபவித்துக்கொண்டு ஐம்பொறிகளில் ஒன்றாகிய கண்களினால் நல்லதும் கெட்டுதுமான பல காட்சிகளைப் பார்க்கின்றோம். அப்படிப் பார்ப்பதில் பார்க்கத்தக்கது எது என்பதை ஆழ்ந்த சிந்தனையின் வெளிப்பாடாக இக்கட்டுரை தருகின்றது.

ஆன்மீகம், இலக்கியங்களுடன் மாத்திரம் அவர்களது நூல்வெளியீடுகள் நின்றுவிடவில்லை. மலேயாவின் பண்டைய, சமகால வரலாறுகள் தமிழில் பதியப்படவேண்டும் என்ற உரத்த சிந்தனை கொண்டவர்களாகவும் ஈழத்தமிழர் அந்நாளில் புலம்பெயர்ந்து வாழ்ந்திருந்த வேளையில் விளங்கியுள்ளனர். பண்டைய ஈழத்தின் வரலாறு இலக்கியங்களாகவன்றி, அறிவுபூர்வமாக, முறையாகப் பதியப்படாத ஏக்கம் மலேயாவின் சமகால வரலாற்றுப் பதிவின்மேல் அவர்களின் அக்கறை தீவிரமாக உதவியிருக்கலாம்.

'மலாய மான்மியம்’ என்று மலாயாவின் வரலாறு கூறும் முதல் தமிழ் நூல் யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையைச் சேர்ந்த சரவணமுத்துப்பிள்ளை முத்துத் தம்பிப்பிள்ளையவர்களால் சிங்கப்பூர் விக்டோ ரியா அச்சகத்தில் அச்சிடப்பட்டு மே 1937இல் முதலாவது பாகம் 247 பக்கங்களிலும், ஜனவரி 1939இல் இரண்டாவது பாகம் 172 பக்கங்களிலும் வெளியிடப்பட்டுள்ளன.

பிரித்தானியாவின் ஆறாம் ஜோர்ஜ் மன்னரின் மகுடாபிஷேக (Coronation) ஞாபகார்த்தமாக இந்திய இலங்கை மக்களின் சார்பாக ஆசிரியரால் வெளியிடப்பட்ட முதலாவது பாகத்தில், நூலாசிரியர் தான் மலாய் நாடுகள் பலவும், சேய்கூன், கம்போஷா, அங்கோர்வாட், சீயம், யாவா முதலிய நாடு முழுவதும் திரிந்து திரட்டிய குறிப்புக்களையும், மலாய் தொடர்பாக இதுவரை வெளியான சுமார் 16 நூல்களையும் ஆராய்ந்து இத்தொகுப்பினை உருவாக்கியுள்ளார். முதற்பாகத்தில் முதல் 55 பக்கங்களிலும் மலாயாவின் வரலாறு பதிவுக்குள்ளாகியுள்ளதுடன், மலாயா வரலாற்றில் பதியப்படவேண்டும் என ஆசிரியர் கருதிய பல்வேறு பிரமுகர்களது புகைப்படங்கள் சகிதம் எஞ்சிய அவர்வர்களது வாழ்க்கைக் குறிப்பும் இந்நூலில் இடம்பெற்றுள்ளது. ஆறாம் ஜார்ஜ் மன்னரின் சாதகமும், நூலாசிரியரின் சாதகமும், அவற்றின் பலன்களும், ஆதாரக் குறிப்புகளுடன் மலாயாவில் வாழும் இந்திய இலங்கைப் பிரமுகர்களின் புகைப்படங்களுடனான அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன. முதலாம் தொகுதியின் 1-55ஆம் பக்கம் வரை விரிந்த மலாயாவின் வரலாற்றுப்பதிவின் தொடர்ச்சி, இந்நூலின் இரண்டாம் தொகுதியின் 6-32 பக்கங்களில் இடம்பெறுகின்றன. 33 ஆம் பக்கத்திலிருந்து 168 ஆம் பக்கம் வரை சிங்கப்பூர் மலாயாவில் பிரபல்யமான மேலும்பல இலங்கை, இந்திய பிரமுகர்களின் உருவப்படங்களுடன் அவர்களது சீவிய சரித்திரக்குறிப்புகள் காணப்படுகின்றன. இவ்விரு தொகுதிகளும் பிரித்தானிய நூலகத்தில் இன்று பார்வையிடப்படக்கூடிய நிலையில் பேணப்பட்டும் வருகின்றன.

'யாழ்ப்பாணக் குடியேற்றம்: பாகம் 1’ என்ற தலைப்பில் சிவானந்தன் என்பவர் 1933இல் எழுதி, கோலாலம்பூர்: ஆர்ட் பிரின்டிங் வேர்க்ஸ் வயோக அச்சிட்டு வெளியிட்ட நூலொன்று பற்றிய தகவலும், இராம சுப்பையாவின் தமிழ் மலேசியானாவில் காணக்கிடைக்கின்றது.

மலேசியாவில் படைப்பிலக்கியம்

மலேசியாவில் தமிழ் இலக்கியம் கிட்டத்தட்ட 118 ஆண்டுகளை இன்று எட்டிப்பிடித்திருக்கின்றது. இந்த நாட்டில் குடியேறிகளாக கொண்டுவரப்பட்ட காலத்திலேயே தங்களுடைய மூட்டை முடிச்சுகளுடன் கப்பலேறிய தமிழ் மக்கள் தத்தமது நாட்டு இலக்கிய உணர்வுகளையும் சேர்த்துக் கட்டிக் கொண்டுதான் வந்தார்கள்.

மலேசிய தமிழ் நாவல் இலக்கிய வளர்ச்சியில் கால இடைவெளிகள் ஏற்பட்டுள்ளதை மலேசிய இலக்கிய ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த இடைவெளிகள் இரு முறை ஏற்பட்டுள்ளன. 1918 முதல் 1931 வரை 12 ஆண்டுகளும், 1938 முதல் 1948 வரை 10 ஆண்டுகளும் இலக்கியத்திலும், நூல்வெளியீட்டு முயற்சிகளிலும் இருண்ட ஆண்டுகளாகவே காணப்படுகின்றன. இவற்றுக்கு அன்றைய காலத்தில் நிலவிய போர்க்காலச் சூழலே காரணம் என்று குறிப்பிடப்படுகின்றது. இரண்டாம் உலக மகாயுத்தம் மலேசிய மண்ணில் ஜப்பானியரின் ஆதிக்கத்தை தோற்றுவித்தது. அக்காலக்கட்டம் இலக்கியத்துறைக்கு இருண்டதொரு காலகட்டமாக அமைந்துவிட்டது. சப்பானியரின் பிரச்சாரத்திற்காக ஓரிரு ஏடுகள் அக்காலகட்டங்களில் நடத்தப்பட்டன. சீரான வளர்ச்சி கண்டு வந்த கல்வி, தொழில், பொருளாதாரம் அனைத்தும் 5 வருடகாலப் பின்னடைவைக்கண்டு தேக்கமடைந்தது. இக்கால கட்டத்தில் யாழ்ப்பாணத் தமிழர்களில் பெரும்பங்கினர் ஓய்வுபெற்று தாயகம் நோக்கிய தமது மீள்குடியேற்றத்தை மேற்கொண்டனர். சிலர் மட்டுமே தம்மை மலேசியப் பிரஜைகளாக்கிக் கொண்டு மலேசிய மண்ணிலேயே தங்கி விட்டனர்.

31.8.1957இல் மலேசியா ஆங்கிலேய காலனித்துவத்திலிருந்து விடுதலை பெற்றது. விடுதலைக்குப் பின் மலேசிய இலக்கியம் வீறுகொண்டெழுந்து பன்முக வளர்ச்சி கண்டது. இதற்குப் பின்னரே மலேசியத் தமிழர்கள், மலேசியாவே தங்கள் நாடு என்ற உணர்வுடன் தங்களுக்கே உரித்தான, தனித்துவமான மலை இலக்கியத்தைப் படைக்கத் தொடங்கினர். இந்திய இலங்கைத் தமிழர்களின் ஆதிக்கம் அங்கு படிப்படியாகக் குறைந்தது. பல்வேறு வாழ்வியல் பிரச்சினைகளையும் இயற்கை, காதல், இனவுணர்வு, மொழியுணர்வு, நாட்டுப்பற்று, போன்றனவற்றையும் பாடுபொருளாகப் புனைந்து மலேசியத் தமிழ்க் கவிதைகள், நாவல்கள், உரைநூல்கள், அறிவியல் நூல்கள் என்று பெருகத் தொடங்கின. இன்றுவரை வீறுடன் மண்ணின் இலக்கியங்களாக வளர்ச்சி கண்டு வருகின்றது.

ஆரம்பகால இலக்கியத்தில் ஈழத்தமிழர்

ஆரம்பகால மலேசிய இலக்கியங்களில் ஈழத்தவரின் பங்கு மலேசிய இலக்கிய வரலாற்றுடன் பிரிக்கமுடியாதபடி பின்னிப்பிணைந்துள்ளது. 1910ஆம் ஆண்டுக்கும் 1920ஆம் ஆண்டுக்குமிடையே மலேசியா தனது முதல் நாவலைப் பெற்றுள்ளது. இக்காலக்கட்டத்தில் இரு நாவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தின் வெங்கடரத்தினம் அவர்கள் எழுதிய கருணாசாகரன் அல்லது காதலின் மாட்சி என்ற நாவல் 1917இலும், புலோலியூர் க.சுப்பிரமணியம் என்ற ஈழத்தமிழர் எழுதிய பாலசுந்தரம் அல்லது சன்மார்க்க ஜெயம் என்ற நாவலின் இரதண்டாம் பாகம் 1918 இலும் வெளியாகின. மலேசிய நாவல் இலக்கியத்தின் முன்னோடியாகக் காணப்படும் இரண்டு நூல்களும் இவ்விரு பாகங்களைக் கொண்டன.

ஈழத்தவரின் நாவலின் இரண்டாம் பாகமே 1918இல் வெளியாகியுள்ளமை இங்கு அவதானிக்கத்தக்கது. இதன் முதலாம்பாகம் பற்றிய தகவல் இல்லாதிருப்பதால், 1917இல் வெளியானதும் வெங்கடரத்தினம் அவர்கள் எழுதியதுமான 'கருணாசாகரன் அல்லது காதலின் மாட்சி’ என்ற நாவலே முதல் நாவலாக இன்றுவரை வரலாற்றில் பதிவில் உள்ளது. என்றாவது இந்த நாவலின் முதற்பாகம் ஆவணக்காப்பகங்களில் இருந்து எமது கண்களை எட்டினால், மலேசிய தமிழ்நாவல் இலக்கிய வரலாறு மீளவும் திருத்தி எழுதப்படலாம்.

புலோலி க.சுப்பிரமணியம் அவர்களால் எழுதப்பட்ட 'பாலசுந்தரம் அல்லது சன்மார்க்க ஜெயம்’ என்ற நாவலின் இரண்டாம் பாகம், பினாங்கு, சி.அரிகிருஷ்ண நாயுடு அவர்களால் 1918இல் பினாங்கு, எட்வார்ட் பிரஸ் வாயிலாக 183 பக்கங்கள் கொண்டதாக அச்சிடப்பட்டிருந்தது. மலேசியாவில் Krian Licensing Boardஇல் அங்கத்தவராயிருந்த ஆசிரியர் யாழ்ப்பாணம் புலோலியைச் சேர்ந்தவர். பின்னாளில் புலம்பெயர்ந்து மலாயாவுக்குச் சென்றவர். மலேசிய தமிழ் நாவல் இலக்கியம் தொடக்க காலத்திலேயே சமுதாய சீர்திருத்தக் கருத்துக்கள் பொதிந்தனவாக அமைய ஆரம்பித்துவிட்டன என்பதற்கு இந்நாவல் எடுத்துக்காட்டாகவுள்ளது. ஒழுக்கம் நேர்மை ஆகியவற்றால் வரும் உயர்வைப்பற்றி விளக்கும் இந்நாவலின் இரண்டாம் பாகம் 22ஆம் அத்தியாயத்திலிருந்து 36ஆம் அத்தியாயம் வரை கொண்டுள்ளது. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி மலாயா நாடு இந்நாவலின் கதைக்களமாகின்றது. பிரித்தானியர் ஆட்சி, கோலாலம்பூர் நகர உருவாக்கம், கிறிஸ்தவ சமயப்பரம்பல், இலங்கை- இந்தியத் தமிழர்களுக்கு இடையிலான பிணக்குகள் முதலிய பல வரலாற்றுத் தகவல்கள் கதையில் விதைக்கப்பட்டுள்ளன. இந்நாவலின் தொடர்ச்சி 'நீலாக்ஷி அல்லது துன்மார்க்க முடிவு’ என்ற மற்றொரு நாவலாக (1923) அமைந்துள்ளது. மலேசிய தமிழ் நாவல் இலக்கிய வரிசையில் இடம்பெறும் இந்நாவல் இலங்கைக்கும் மலேசியாவுக்கும் தமிழ் இலக்கியப் பாலமாக அமைந்துள்ளது.

சாம்பசிவம் ஞானாமிர்தம் அல்லது நன்னெறிக் களஞ்சியம் என்ற நாவல் அ.நாகலிங்கம் அவர்களால் 1927இல் எழுதப்பட்டது. இது 343 பக்கம் கொண்டது. 29.02.1901இல் பிறந்த இந்நூலாசிரியர், 1917இல் மலேயாவுக்குச் சென்று அங்கு கோலாப்புலாவில் 22 வருடங்கள் திறைசேரியில் தலைமை இலிகிதராக (Clerk)பணியாற்றி ஓய்வு பெற்றவர். தனது 26ஆவது வயதில் எழுதிய நாவல் இதுவாகும். மலேயாவில் இவர் உத்தியோகம் பார்த்த கோலப்புளாவில் முழுவதும் விற்றுத் தீர்க்கப்பட்ட நாவல் இதுவாகும். கோரகாந்தன் அல்லது தொன்மலாயாகிரியில் வட இலங்கைத் துப்பாளி. என்ற நாவல் மு.சீ.செல்வத்துரை அவர்களால் எழுதப்பட்டு கோலாலம்பூர் பத்து பகாட், எம்.எஸ்.சுப்பபையா அவர்களால் 1934இல் 326 பக்கம் கொண்ட நூலாகப் பதிப்பிக்கப்பட்டது. ஈழத்தமிழரின் இந்நாவல் துப்பறியும் நாவலாக மட்டுமல்லாது, வாசர்களுக்கு நல்ல அறிவுரை கூறுவதாகவும் எழுதப்பட்டுள்ளது. மலேசிய தமிழ்ச்சமுதாயத்தில் தென்னிந்திய சீர்த்திருத்தவாதிகள்ளின் கருத்துக்கள் ஊடுருவியிருந்த காலகட்டத்தில் உருவான நாவல் இது. கொள்ளையர் கூட்டமொன்றைச் சேர்ந்த கோரகாந்தன் என்பவனைப் பிடிக்க முயற்சிக்கும் துரைராசா என்ற துப்பறிவாளர் பற்றிய கதை. யாழ்ப்பாணத்திலிருந்து மலாயாவுக்குப் புலம்பெயர்ந்து சென்ற நூலாசிரியர் இலங்கைத் தமிழர் மலாயாவுக்குப் புலம்பெயர்ந்து சென்ற நூலாசிரியர் இலங்கைத் தமிழர் மலாயாவுக்கு வந்து குடியேறியதையும், இவ்விரு நாடுகளுக்குமிடையே இருந்த தொடர்புகளையும் சமகாலத்தில் மலாயாவில் வாழ்ந்த மலாய்க்காரர் பற்றியும் இந்நாவலில் விபரித்திருக்கின்றார்.

'நேசமலர் அல்லது கற்றோரின் கனா' என்ற மற்றொரு நாவல், செ.சிவஞானம் அவர்களால் சிங்கப்பூர் ஈஸ்டேர்ன் பிரிண்டிங் வேர்க்ஸ், வாயிலாக 1936 இல் 110 பக்கம் கொண்டதாக வெளியிடப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம் சுழிபுரத்திலிருந்து மலேயாவுக்குப் புலம்பெயர்ந்த நூலாசிரியர் எழுதிய சமூகநாவல் இதுவாகும். யாழ்ப்பாணத்தினை கதைக்களமாகக் கொண்டு அமைந்துள்ளதுடன், அக்காலகட்டம் வரை மலேசிய தமிழ் நாவல் வரலாற்றில் உண்மைக் காதலை நயம்பட உரைப்பதுடன் காதல் உணர்வை ஆழமாகவும் வேகமாகவும் வெளிப்படுத்தும் சிறந்த நாவல் என்று புகழப்பெற்றது. மணியம் மகாலிங்கர் என்பவர் தனது மகள் நேசமலரை விஜயரத்தினம் என்ற வக்கீலுக்கு 70000 ரூபா வரதட்சணை வழங்கித் திருமணம் முடித்துவைக்க நிச்சயிக்கிறார். நேசமலரோ வக்கீலின் துர்நடத்தைகளை அறிந்து அவரை ஒதுக்கி ஏழைத் தொலோளியின் மகனான நேசகமலனை பலத்த எதிர்ப்புக்கிடையே மணம் முடிக்கிறாள். வரதட்சணை, கல்வி, ஆலயங்களில் உயிர்ப்பலி, விலைமகளிர், அரசியல், சாதப்பிரச்சினை என்று பல செய்திகளை இந்நாவலில் தூவியிருக்கிறார்.

'அழகானந்த புஷ்பம்’ என்ற நாவல், மற்றொரு இலங்கையரான க.டொமினிக் அவர்களால், சிங்கப்பூர் விக்டோ ரியா பிரஸ் வாயிலாக 1936 இல் வெளியிடப்பட்டது.

பழமையில் ஊறிக்கிடக்கும் கிராமவாசிகளுக்கும், நாகரீக முதிர்ச்சிபெற்ற நகரப்புறவாசிகளுக்கும் இடையே ஏற்படும் சில சிக்கல்கள் இந்நாவலில் சித்தரிக்கப்படுகின்றன. உயர்கல்வியும் ஆங்கில மோகமும் கொண்ட செல்வத்துரையின் வாழ்வு அவனது துர்நடத்தை காரணமாக திசைமாறிச் சீரவேதாகவும், ஏழைக்குடியானவனான அழகானந்தன சுயமுயற்சியால் வாழ்வில் முன்னேறிச் செல்வதாகவும் கதை நகர்த்தப்படுகின்றது. சுகாதாரம், கல்வி, அறம், சமுதாய இன்னல்கள், பெண்களின் நிலை, ஆங்கில மோகம் போன்றவற்றைப் பற்றிய அறிவுரைகள் நாவலின் கதாபாத்திரங்களின் வயோக உபதேசிக்கப்படுகின்றது. விடுதலைக்கு முந்திய மலேசியத் தமிழ் நாவல்களிலேயே இந்நாவல் ஒன்றில் தான் ஏராளமான பாடற் பகுதிகளும் பழமொகேளும் கையாளப்பட்டுள்ளன. இலங்கைத் தமிழோடு இலக்கியத் தமிழும் இந்நாவலில் உரையாடல்களாகின்றன. இராமலிங்கம் என்ற கதாபாத்திரத்தின் வாயிலாக அன்றைய மலாயாவில் வாழ்ந்த இந்தியத் தொலோளர்களின் நிலைகள் விளக்கப்பட்டுள்ளன. இது இந்நாவலுக்கு மலேசிய மண்வாசனையத் தந்துள்ளது. மற்றெந்த இலக்கியத்திலும் இல்லாதவகையில், இந்நாவலில் ஆசிரியர் யாழ்ப்பாணத்துத் தமிழர்களை மலாயா வராது தடைசெய்து தத்தமது சொந்த ஊரிலிருந்தே நல்வாழ்வு வாழும்படி அறிவுறுத்துகின்றார். இது மலேயாவுக்கான யாழ்ப்பாணத்தவரின் புலம்பெயர்வில் திருப்புமுனைக் காலக்கட்டம் என்று சமூகவியலாளர்கள் கருதுகின்றனர்.

மலேசிய மண்ணில் விளைந்த ஈழத்தவரின் மற்றொரு நாவலான 'சயம்புநாதனும் சன்னாசியாரும் அல்லது அறிவாளி’ என்ற நாவல் பற்றிய குறிப்பொன்றை மலேசிய இலக்கிய வரலாற்று நூல்களில் காணமுடிகின்றது. 1935இல் கதிரேசம்பிள்ளை அவர்கள் எழுதியதாகக் கருதப்படும் இந்நாவலும், ஏற்கெனவே குறிப்பிட்ட, 'பாலசுந்தரம் அல்லது சன்மார்க்க ஜெயம்’ முதலாவது பாகம் போன்றே காணக்கிடைக்காத நூலாகிவிட்டது.

மலேசிய மண்ணுக்குரிய இலக்கியத்தின் மலர்வு

மலேசிய இயக்கத்தின் மீள்பிறப்புக் காலமாக 1946 கருதப்படுகின்றது. பிரித்தானிய-ஜப்பானிய போர் அனர்தங்களிலிருந்து மலேசிய மக்கள் மீண்டு மூச்சுவிட ஆரம்பித்த காலகட்டத்தின் தொடக்கம் இதுவாகும். இந்தக்கால கட்டத்தில் ஈழத்தமிழராகத் தம்மை இனம்காட்டி இலக்கியம் படைத்தவர்கள் தாய்நாடு திரும்ப, மலேசிய மண்ணின் இலக்கியத்தில் ஈழத்தமிழரின் பங்கு கணிசமாகக் குறைய ஆரம்பித்தது. அந்த இடத்தை, மலேசிய மண்ணின் மைந்தர்களான மா.இராமையா, சி.வீ.குப்புசாமி, சுப.நாராயணன், பைரோஜி நாராயணன், பி.ஏ.கிருஷ்ணதாசன், அ.இராமநாதன் போன்றோர் நிரவி முழுமையான மண்வாசனை கொண்ட மலேசிய இலக்கியங்களை மலேசிய மண்ணைக் கதைக்களனாகக் கொண்டு படைக்க ஆரம்பித்தனர். அவர்களுடன் இன்று ரெ.கார்த்திகேசு, சை.பீர்.முகம்மது, மு.அன்புச்செல்வன், முல்லை ராமையா, வே.சபாபதி, டாக்டர்.சண்முகசிவா, சி.முத்துசாமி என்ற படையணி இலக்கியத்தை நகர்த்திச் செல்கின்றன.

மலேசியாவில் ஈழத்தமிழர்களின் தற்கால இலக்கியப் பணி

மேற்சொன்ன மலேசியத் தமிழ் இலக்கியகர்த்தாக்களிடையே, ஈழத்தமிழர்களைப் பிரித்து நோக்கும் வாய்ப்பு இல்லாத போதிலும், தவத்திரு தனிநாயகம் அடிகளின் தமிழாய்வுப்பணியின் பங்களிப்பை அங்கு போற்றிவரும் பாங்கு காணப்படுகின்றது. மலேயாப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையின் முன்னாள் தலைவர்களாகவிருந்த இரண்டாம் தலைமுறை ஈழத்தவர்களான தேவபூபதி நடராஜா, திலகவதி போன்றவர்கள் அறிவார்ந்த படைப்பிலக்கியப்பணிகளையும், ஆன்மீகத் துறை வெளியீடுகளையும் காலத்திற்குக் காலம் முன்னெடுத்து வந்திருக்கிறார்கள். இன்று மலாயாப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையில், ஈழத்து இலக்கியங்களுக்கென்றொரு தனியான இடம் இந்திய ஆய்வியல் துறைத் தலைவராகவுள்ள பேராசிரியர் வே.சபாபதி அவர்களின் நேரடிப் பொறுப்பில் உள்ளது. (Professor Dr.V.Sabapathy, e-mail: sabavenu@um.edu.my)

முதலாவது மலேசிய திருமந்திர மாநாடு பற்றிய தொகுப்பு நூலொன்று தேவபூபதி நடராஜா அவர்களால் கோலாலம்பூர், மலேசிய இந்து சங்கத்தின் வாயிலாக மார்ச் 2000 இல் வெளியிடப்பட்டிருந்தது. 118 பக்கம் கொண்டதும், வண்ணத் தகடுகள் நிறைந்ததுமான இம்மலரில், மலேசியா, கோலாலம்பூரில் 10.3.2000 தொடக்கம் 12.3.2000 வரை நடந்தேறிய முதலாவது மலேசியத் திருமந்திர மாநாட்டு நிகழ்வுகள், கட்டுரைகள் அடங்கியிருந்தன.

மாத்தாளை சோமுவின் பங்களிப்பு

இலங்கையின் பிரபல மலையக இலக்கியவாதியான மாத்தாளை சோமு அவர்கள் தற்போது அஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருபவர். அவரது இலக்கியப் பங்களிப்பு இன்றைய காலகட்ட மலேசிய இலக்கியத்துடன் இணைந்ததாக அமைந்துள்ளது.

`மாத்தாளை முதல் மலேசியா வரை’ என்ற அவரது பிரயாண இக்கிய நூல்.. திருச்சி தமிழ்க்குரல் பதிப்பகத்தின் வாயிலாக உறையூரில் மார்ச் 2000 வெளியிடப்பட்டிருந்தது. 126 பக்கங்கள் கொண்ட இக்கட்டுரைத் தொடரில் மலேசிய நாடு பற்றியும், மலேசிய மக்கள் பற்றியும், மலேசியத் தமிழர்களின் கலை இலக்கிய பத்திரிகைத்துறை முயற்சிகள் பற்றியும் பல அரிய தகவல்கள் திரட்டித் தரப்பட்டுள்ளன. தனது மலேசிய இலக்கியப்பயணத்தின் போது கண்டு கேட்டு அனுபவித்த தகவல்களின் தொகுப்பாக இப்பயணக்கட்டுரை அமைந்திருந்தது.

ஏற்கெனவே மலேசிய தமிழ் உலகச் சிறுகதைகள் ,என்ற தலைப்பில் மாத்தாளை சோமு அவர்கள் 1995ஆம் ஆண்டு ஒரு நூலை வெளியிட்டிருந்தார். 14 மலேசிய தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகள் இதில் அடங்கியிருந்தன. பின்னிணைப்பாக மா.இராமையா, இலங்கை-குன்றின் குரல் டிசம்பர் 1992 இதழுக்காக எழுதிய மலேசிய தமிழ் இலக்கியம்- ஒரு நினைவோட்டம் என்ற கட்டுரையும் இடம்பெற்றிருந்தது. மலேசிய இடைநிலைப் பள்ளிகளில் பாடப்புத்தகமாகவும் வைக்கப்பட்ட சிறப்பு இந்நூலுக்கு உண்டு.

அண்மையில் மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தனி நூலாகவும் வெளியிட்டிருந்தார். இதன்மூலம் சமகால மலேசிய மண்ணின் படைப்பிலக்கிய கர்த்தாக்களின் மண்வாசனைமிக்க படைப்புக்கள் சர்வதேச அரங்கில் எடுத்துச் செல்லப்படும் வாய்ப்புக்கிட்டியுள்ளது.

மலேசிய நூல்தேட்டம்

இலண்டனில் 1997முதல் வெற்றிகரமாக வெளிவந்துக் கொண்டிருக்கும் தேசம் என்ற கலை இலக்கிய சமூகவியல் சஞ்சிகையின் வெளியீட்டாளர்களின் அனுசரணையுடன், 05.04.2003 அன்று இலண்டன் Stradford Library Hallஇல் மலேசிய தமிழ் இலக்கிய நிகழ்வும், மலேசிய தமிழ் நூல்கண்காட்சியும் நடத்தி வைக்கப்பட்டன. மலேசிய மண்ணுக்கு வெளியே ஐரோப்பிய தேசமொன்றில் இடம்பெற்ற முதலாவது மலேசிய இலக்கிய விழா இதுவேயாயும். ஈழத்தமிழர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வில், பல மலேசிய எழுத்தாளர்களின் தொடர்பு ஐரோப்பிய ஈழத்தமிழர் எழுத்தாளர்களுக்கும், இலக்கியப் பிரமுகர்களுக்கும் இந்நிகழ்வின்போது கிட்டியது. அத்தருணம், மலேசியத் தமிழ் இலக்கியம்: தேசம் சிறப்பிதழ்’ என்ற மலர் ஒன்றும் என்.செல்வராஜா, த.ஜெயபாலன் ஆகியோரைத் தொகுப்பாசிரியர்களாகக் கொண்டு 48 பக்கங்களில் வெளியிடப்பட்டது. இவ்விதழில் மலேசிய இலக்கியம் பற்றிய ஈழத்து, மலேசிய எழுத்தாளர்களின் ஆக்கங்களும், கண்காட்சியில் வைக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட மலேசிய சஞ்சிகைகள், நூல்கள் ஆகியவற்றின் விபரங்கள் கொண்ட மலேசிய நூல்தேட்டம் பதிவுகளும் இடம்பெற்றிருந்தன.

இந்நிகழ்வின் தொடர்ச்சியாக, மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்களை பதிவுசெய்யும் முயற்சியும் இலண்டனில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தினதும், மலாயாப் பல்கலைக் கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையினதும், தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்கத்தினதும் ஆதரவுடன் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அமரர் இராம. சுப்பையா அவர்கள் 1969இல் தொகுத்திருந்த தமிழ் மலேசியானாவின் அடியொற்றி விரிவான முறையில் தயாராகும் இந்த நூற்பட்டியலின் வெளியீட்டுடன், மலேசிய நூலியல் முயற்சிகளில் ஈழத்தமிழரின் பங்களிப்பு மேலும் ஒரு படி நெருக்கமடையும்.

முடிவுரை

மலேசியாவில் தமிழ் வளர்க்கும் தகைமையாளர்கள் அவ்வப்போது தோன்றி, தமிழ் மக்களிடையே தமிழுணர்வையும் இன உணர்வையும் அவ்வப்போது வளர்த்து வந்துள்ளார்கள். ஏதாவது ஒரு புதுமை என்றால் அது மலேசிய மண்ணில் தான் நிகழ்கிறது என்ற கருத்து இன்று வலுவாகி வருவதற்கு அங்கே நிகழ்ந்து முடிந்த பல முதல் மாநாடுகள் சான்றாக அமைகின்றன. முதல் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, உலகத் தமிழ்ப் பண்பாட்டு விழா, உலகத்திருக்குறள் மாநாடு, உலகத் தமிழர் மாநாடு, உலகத் தமிழாசிரியர் மாநாடு, உலகத் தமிழ் எழுத்தாளர் தினம் எனப் பட்டியல் நீளும்.

இத்தகைய விடயங்களை உலகளாவிய நிலையில் சிந்திப்பதற்கு, சந்திப்பதற்கு செயல்படுவதற்கு முதல் கால்கோள்விழாவை மலேசிய மண்ணில் மலேசியத் தமிழர்கள் தான் செய்கின்றார்கள். இருந்தும் மலேசிய இலக்கியங்கள் குடத்துள் விளக்காகவே நீண்டகாலம் ஒளிபாய்ச்சி வந்துள்ளது. இவ்விளக்கை குன்றின் மீது ஏற்றி வைக்கக் கை கொடுப்பதற்கு மலேசிய இலக்கியவாதிகள் அண்மைக்காலம் வரை பெருமளவில் நம்பியிருந்த தமிழகத்தின் படைப்பிலக்கிய உலகம் முன்வரவில்லை. இன்று வெறும் ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் மலேசிய படைப்பிலக்கிய கர்த்தாக்கள் எதிர்பார்க்கவில்லை. தம்முடன் தோள்கொடுத்து, மலேசியத் தமிழ் இலக்கியத்தை உலகறியச் செய்வதற்கான துணையையே அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.அதை மானசீகமாக உணர்ந்தவர்கள் ஈழத்துத் தமிழர்களே என்ற கருத்தும் மலேசிய இலக்கியவாதியிடம் மேலோங்கியுள்ளது. ஈழத்தமிழர்களின் படைப்பிலக்கியங்களுக்கும், அவர்களது அண்மைக்கால புலப்பெயர்வு வரை இத்தகைய நிலைமையே காணப்பட்டு வந்துள்ளது.

மலேசிய மண்ணில் இன்று மலேசியாவின் அடையாளச் சின்னமாக நிமிர்ந்து நிற்கும் இரட்டைக் கோபுரங்கள் கூட, யாழ்ப்பாணத்திலிருந்து புலம்பெயர்ந்து மலேயாவுக்குச் சென்றடைந்தது இன்று மலேசியாவின் பெற்றோலியத் துறையின் பெரும் பங்காளராக இருக்கும் தமிழர் ஒருவருக்கே உரியது என்ற செய்தியும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

மலேயாவுக்கு பொருளாதார வளம்நாடிக் குடியேறிய யாழ்ப்பாணத்துத் தமிழர்களின் மேலாதிக்கப் போக்கினால் தமது மூதாதையர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட மனக்காயங்கள் நடந்து முடிந்த வரலாறாகியுள்ள இன்றைய நிலையில் நவீன ஈழத்தமிழர்களின் தாயக மீட்பும், புலம்பெயர்வாழ்வும் மலேசியத் தமிழர்களிடையே புதியதொரு பார்வையை- அக்கறையை ஈழத்தமிழர்களின் பால் ஈட்டியுள்ளது. இதற்கு ஆதாரமாக பல விடயங்களை அந்த மண்ணில் காண முடிகின்றது.

கோலாலம்பூரிலிருந்த 'செம்பருத்தி’ என்ற மாத இதழ் நீண்டகாலமாக வெளிவருகின்றது. ஈழத்தமிழரின் ஆதரவுக் குரல்கள் அதில் வெளிப்படையாக ஒலிக்கின்றன. பெ.கோ. மலையரசன் அவர்கள் 2003இல் பாய்புலி பிரபாகரன் பிள்ளைத்தமிழ், என்ற இலக்கியத்தை கோலாலம்பூரில் படைத்துள்ளார். அந்நூல், விடுதலைப்புலிகளின் போர்ப்பரணியாக மலேசியத் தமிழர்களின் கரங்களில் தவழ்கின்றன. இந்தப் பட்டியல் முடிவில்லாது நீண்டு செல்கின்றது.

 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
     
  முகப்பு  |  உள்ளடக்கம்  
     

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768