|
|||
இதழ் 1 ஜூன் 2007 |
முகப்பு | உள்ளடக்கம் | ||
![]() |
கட்டுரை
நரம்புகளைத்துள்ளச் செய்யும் நகைச்சுவைச் சொல்லாடல் கோ.புண்ணியவான்
|
||
1975 வாக்கில் என் நண்பர் ஒருவர் சினிமாப்படம் எடுக்க வேண்டும் என்ற ஆதங்கத்தோடு புறப்பட்டுவிட்டார். அவரிடம் சினிமா தொழில் நுட்பம் பற்றிய பூரண அறிவோ போதுமான அளவுக்குப் பை நிறைய பணமோ கிடையாது என்பது எனக்குத் தெரிந்திருந்தாலும், அவருடைய பகீரதப்பிரயத்தனம் என்னை பிரமிக்க வைத்துக்கொண்டிருந்தது. அவர் ஒரு நல்ல மரபுக் கவிஞர். அந்தத் தகுதி மட்டுமே சினிமாத்துறையில் நுழைவதற்கான 'கடப்பிதழ்’ என்று அவர் எண்ணியிருக்க கூடும். சில ஆண்டுகளுக்கு முன்னால் சினிமாவுக்குப் பாட்டெழுதப் போனவர், அங்கு பட்ட அவஸ்தையால் திரும்ப வந்து விட்டதாக என்னிடம் கதை கதையாக சொல்லியும் இருந்தார். ஆனால் சினிமா ஆசை மட்டும் அவரை விடாது நிழல்போல மௌனமாக விரட்டிக் கொண்டே இருந்திருக்கக்கூடுமோ என்ற எண்ணம் அவருடைய இந்த திடீர் முடிவு நிருபித்த வண்ணம் இருந்தது. ஒரு சினிமா எடுக்க அந்தக்காலத்திலேயே பல லட்சம் ரூபாய்கள் வரை கைநழுவிப்போய்; தயாரிப்பாளர்கள் பலரைப் போண்டியாக்கித் தெருவில் குப்பையாய்த் தள்ளிவிட்டுப்போனது பற்றி பத்திரிக்கைகளில் படித்த பீதி அப்போது என்னுள் பிரவாகித்துக்கொண்டே இருந்தது. "உங்களிடம் படம் எடுக்க போதுமான பணம் இருக்கிறதா? அதற்கு எப்படி ஏற்பாடு செய்வீர்கள் ?" என்று கேட்டேன். அப்போதே அஞ்சிக்கும் பத்துக்கும் அல்லாடியவர் அவர்."சினிமா எடுக்க பணம் மட்டும்தான் முக்கியம்னு நினைக்காதிங்க... மனசுல தில்லும் தைரியமும் வேண்டும்," என்றார். "என்ன கதை" "எத்தனையோ கதை இருக்கு. கதைக்கா பஞ்சம்" என்றார். இப்படித்தான் அவரின் "திட்டங்கள்" தீர்க்கமாயிருந்தன "நடிகர்கள்லாம்" "பாதிப்பேர் இங்கேர்ந்து கொண்டுபோறேன்... மலேசியக் கலைஞர்களும், தமிழ் நாட்டுக் கலைஞர்களும் சேர்த்துதான் படம் எடுக்கப்போறேன்," என்று சொன்னவர், "நீ வர்ரியா, உன்னைக் கதாநாயகனாபோடுறேன்.. கையில் ஐயாயிரம் வெள்ளி இருந்தா சொல்லு," என்றார். ஐயாயிரம் வெள்ளி இருந்தால் நாயக பாத்திரத்துக்கான தகுதி வந்துவிடுமோ, என்னவோ? மலேசியக் கலைஞர்கள் என்று அவர் குறிப்பிட்டவர் எல்லோரும் ஆளுக்கு ஐயாயிரம் வெள்ளி வைத்திருப்பார்களோ என்று என்னை எண்ண வைத்தது. பத்து கலைஞர்களைச் சேர்த்துவிட்டால் ஐம்பதாயிரம் ஆயிற்று. ஊர் அந்நிய செலவாணிக்கு "கருப்பில்" பத்து வட்டத்தை எட்டி விடும். படம் எடுக்க பணம் மட்டும் முக்கியமில்லை என்று அவர் சொன்னது என்னுள் அப்போது அர்த்தமாகிக்கொண்டிருந்தது. கதை கைவசம் உண்டு. கவிஞர் என்பதால் பாடல்களையும் அவரே எழுதியும் விடுவார். அப்புறம் இசையமைக்க, நடிக்க, கேமரா மேனுக்கு, துணை நடிகர்களுக்கு, எடிட்டிங்குக்கு, ஏஜெண்டுகளுக்கு என இன்னும் நான் குறிப்பிட மறந்த பல விஷயங்களுக்கு பணம் தண்ணீராய் செலவு பண்ண வேண்டியிருக்கும். இதற்கெல்லாம் அவர் என்ன முடிவெடுத்திருக்கிறார்? என்ன பண்ணப்போகிறார் என்ற நினைவு திரண்டு வரும் மழை மேகம் மாதிரி அச்சுருத்திய வண்ணம் இருந்தது. சொன்னதுபோல ஒரு குழுவோடு அவர் சென்னையை நோக்கி கிளம்பியும் விட்டார். கலைத்துறையில் ஆர்வம் உள்ளவர்கள் பலருக்கு சினிமா மோகம் இருப்பது வியக்கவைக்கும் ஒன்றல்ல என்றாலும் அது உண்டாக்கும் புகழ் வெளிச்சம் தகுதியற்ற பலரை நோக்கி வலைவீசிய விந்தை நடந்தேறிய வண்ணம் இருக்கிறது. தகுதி உள்ளவர்களே தவிடுபொடியான சரித்திரம் கருப்பு எழுத்துக்களில் வார்க்கப்பட்டதை அறிந்திருந்தும் நீந்தத்தெரியாதவன் ஆழ்கடலுக்குக் குதித்துவிட்ட அமானுட தைரியத்தை என்னால் ஜீரணிக்க முடியாமல் திணறியவனாக இருந்தேன். என்ன நடக்கப்போகிறதோ என்று எதிர்பார்த்தவனாக பிரதி தினமும் ஓடிக்கொண்டிருந்தது. அவர் போய் இரண்டு மாதத்தில் சினிமா சூட்டிங் தொடக்க விழா அழைப்பு ஒன்று எனக்கு அனுப்பப்பட்டிருந்தது. அவர் பாதி கிணறு தாண்டிவிட்ட தைரியம் என்னைச் சுதாரிக்க வைத்துக்கொண்டிருந்தது. அடுத்த மூன்றாவது மாதத்தில் , எனக்கு வந்த கடிதம் நான் எதிர்ப்பார்த்தது நடந்து விட்ட நிலையை பறைச்சாற்றிக் கொண்டிருந்தது. தான் மீள முடியாத சிக்கலில் மாட்டிக்கொண்டுவிட்டதாகவும் திரும்புவதற்கு பண உதவி தேவை எனவும் கடிதம் கண்ர் வடித்துக் கொண்டிருந்தது. அவர் அழைத்துச் சென்ற பலரின் கதி என்ன ஆகியிருக்குமோ என்ற உபரி சிந்தனையும் என்னை அலைக்கழித்துக் கொண்டிருந்தது. சினிமாத்துறை அனுபவம் பற்றிப் பலர் சிறுகதை புனைந்திருக்கின்றனர். ஜெயகாந்தன், சுஜாதா, பாலகுமரன், பிரபஞ்சன் போன்றவர்களின் கதைகள் அவர்களின் அனுபவப்பகிர்வாக வெளிப்பட்டிருக்கின்றன. சினிமாவை முழுமையாக உள்வாங்கியவர்கள், சற்று சௌகர்யமான தூரத்திலிருந்து அவதானித்தவர்கள் என அவர்களுடைய கதையாடல் நிகழ்ந்திருக்கிறது. இவர்களுள் அசோகமித்திரனின் சினிமா அனுபவம் எவ்வளவு ஆழமானது என்று தெரியவில்லை. இருப்பினும் அவருடைய "நானும் ஜே.ராமகிருஷ்ண ராஜுவும் சேர்ந்து எடுத்த சினிமாப்படம்" என்ற சிறுகதை சினிமாவுக்கும் அவருக்குமான தொடர்பு பற்றி சரியான முடிவுக்கு வரமுடியாத நிலையை உருவாக்குகிறது. சினிமா பற்றிய கனவுகளில் மிதந்த ஓர் இளைஞனின் படம் எடுக்கும் ஆர்வத்தை நகைச்சுவையாக சொல்லிச் செல்கிறது கதை. சினிமா எடுப்பது என்றால் இப்படித்தான் இருக்கும் போலும் என்று சுயமாகவே கற்பனை செய்து கொண்டவனின் போக்கில் கதையாடல் நிகழ்த்துகிறார் அசோகமித்தரன். அதனால் தான் அவருக்கு நேரடி சினிமா தொடர்பு இருந்திருக்க வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு விமர்சகனால் வரமுடிகிறது. என் நண்பரைப்போல..! ஏதோ ஒரு பள்ளி நிகழ்வில் கடவுள் வாழ்த்து பாடுவதைக் கேட்ட ஜே.ராமகிருஷ்ணராஜு கதை சொல்லியை ஒரு நாள் தன் அலுவலகத்துக்கு வரச்சொல்கிறார். அந்த அலுவலகத்தில் இருந்த ஒற்றை நாற்காலியில் அமரச் சொல்லி கிருஷ்ணமூர்த்தி பந்தவாகச் சொல்வதும், அந்த நாற்காலியில் அமரமுடியாத அளவுக்கு சுவரையும் மேடையையும் நெருக்கிப் போடப்பட்டிருப்பதையும், அப்படி இடுக்கிப்போடப்பட்ட நாற்காலியில் அமர்வதற்குக் கதை சொல்லி சிரமப்படுவதைப்பார்த்து, மிகச்சாவகாசமாக மேசையில் ஏறி பின்னர் இடுக்கில் நுழைந்து நாற்காலியில் அமரச் சொல்லும் உத்தியை சொல்லும்போது வாசகன் மனதுக்குள் குலுங்கிச் சிரிக்க ஆரம்பித்து விடுகிறான். பின்னர் இந்த இருக்கைதான் ஆபீஸ் ஆபீஸ் என்று சொல்லுக்குச் சொல் பிரகடனம் செய்து கொண்டு போகிறார், ஜே.கிருஷ்ணராஜ். படத்தில் யார் அர்ச்சுணன் (நாயகன்) வேடம் பூணுவது என்று கதைசொல்லி கேட்க "ஏன் நான்தான்" என்கிறான் ஜே.கி. நாயகி யார் என்று வினவப்பட்டபோது ஜி.வரலட்சுமி என்று சொல்கிறான் ஜே.கி. ஏணி வைத்தாலும் எட்டாத பொருத்தம் ஜே.கி வுக்கும், ஜி. வரலட்சுமிக்கும். ஜே.கி உருவத்தோற்றம் கொடுரமானது. குள்ளமாக, முன் பற்கள் நீண்டு பார்க்கச் சகிக்க முடியாமல் இருக்கும் . இவன் வசீகரிக்கும் நடிகையாகிய ஜி.வரலட்சுமியோடு இணைவது கற்பனையிலும் பொருந்தாத, சினிமா ரசிகர்களை சித்ரவதை செய்யப்போகும் ஒன்றாகவே சித்தரிக்கிறார் கதை சொல்லி. "குள்ளமான நீ எப்படி உயரமான ஜி.வரலட்சுமியோடு இணை சேர முடியும்?" என்று வினவியபோது நாற்காலியில் நின்றவாறு படத்தை எடுத்துவிடமுடியும் என்று சாதரணமாகவே சொல்கிறான் ஜே.கி. இதில் இன்னொரு விஷேசம் என்னவென்றால் அப்போது பிரபலமாக இருக்கும் இன்னொரு நாயக நடிகனை பஞ்சபாண்டவர்களில் ஒருவராக (உபபாத்திரமாக) போடப்போவதாக சொல்கிறான் ஜே.கி. இப்படி கற்பனா உலகத்தில் சஞ்சாரம் செய்யும் ஒரு பாத்திரப் படைப்பை முன்னெடுத்துச் செல்லும் இக்கதை முழுநீள நகைச்சுவை கதையாகவே மிளிர்கிறது. ஒரு கட்டத்தில் ஜே.கியின் அலுவலகத்துக்கு புதிய பெயர்ப்பலகை செய்து கொண்டு வந்து நின்றபோது வாசலில் ஆஜானுபாகுவான ஒரு உருவத்தைப்பார்த்து பீதியோடு அவரிடம் ஜே.கியைப் பார்க்க வந்ததாகச் சொல்கிறார் கதை சொல்லி அந்த நேரத்தில் ஜன்னலில் தோன்றி கதைசொல்லியைப்போய் விடும் படி சாடை காட்டுகிறான் ஜே.கி. பின்னர் விசாரித்தபோது அவர் தன் தந்தையென்றும் , தான் சினிமா எடுப்பதைக் கேள்விப்பட்டு ஊரிலிருந்து வந்து தன்னை நையப்புடைத்துவிட்டு படித்து உருப்படுகிற வேலையைப்பார் என்று அறிவுருத்தியதாகச் சொல்லும்போது, அசோகமித்திரனின் கதையாடலில் முகிழ்ந்து வெடிக்கும் சிரிப்பொலி வாசகனை வசீகரிக்கும் ஒன்றாக வெற்றிபெறுகிறது. அசோகமித்திரனின் நகைச்சுவையுணர்வும், அதனை வெளிப்படுத்தும் திறனும் மிக நுட்பமாக கையாளப்படுகிறது. |
|||
முகப்பு | உள்ளடக்கம் | |||
வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine
For Arts And Literature |