வல்லினத்தில் தேடுதல்

எழுத்துரு உதவி / Tamil Font Help 

 இதழ் 1
ஜூன் 2007
முகப்பு  |  உள்ளடக்கம்

கட்டுரை

 

மலேசியத் தமிழ் இலக்கியத்துறையில் பெண்கள்

நா. மகேஸ்வரி

 

       
 

இலக்கியத் துறையின் மீது மலேசிய பெண்களுக்கு ஆர்வம் அதிகம். அக்கறையும் அதிகம். ஈடுபாடும் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கவே செய்கிறது. பெரும்பாலும் வீட்டில் இருக்கும் நம் இனம் பெண்டிருக்கு வசதியான பொழுது போக்கு வாசிப்பாகவே இருந்திருக்கிறது.

இப்படி வாசிக்கும் பழக்கமே அவர்களை இலக்கியத் துறையின்பால் ஈடுபாடு கொள்ளச் செய்கின்றது.

மலேசியத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு பெண்களும் தங்களால் இயன்ற அளவுக்குக் கணிசமான பங்கினை வழங்கி வந்துள்ளனர். இன்று மலேசிய பெண் படைப்பாளிகளின் சிந்தனைகளில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதை இலக்கிய வடிவங்களின் வழியாக அறிய முடிகின்றது.

தங்களின் கருத்துகளைத் தயக்கமின்றி துணிவுடன் வெளிப்படுத்தும் அளவுக்கு சிந்தனை மாற்றங்களும் முன்னேற்றங்களும் அண்மையக் காலங்களில் தென்படுகின்றன.

சிறுகதை, கட்டுரை, கவிதை, குறுநாவல், நாவல் தொடர்கதைகள் வானொலி நாடகங்கள், சிறுவர் இலக்கியம் புதுக்கவிதை போன்ற இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் தங்களின் கருத்துக்களைப் பெண்கள் பதிவு செய்து கொண்டு வந்திருக்கின்றனர்.

மலேசியத் தமிழ் இலக்கியத்தின் புதிய தொடக்கம் 1946க்குப் பின்னரே என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும். 1950ஆம் ஆண்டுவாக்கில் தமிழ்நேசன் ஞாயிறு பதிப்பில் கதை வகுப்புத் தொடங்கி எழுத்தார்வம் உள்ளோருக்கு கந்தசாமி வாத்தியார் எனும் பெயரில் சுப.நாராயணனும், வானம்பாடியார் எனும் பெயரில் பைரோஜி நாராயணனும் இணைந்து கதை, கவிதை, உரைநடை, நாடகம் போன்ற பல்வேறு துறைகளிலும் பயிற்சியளித்துள்ளனர்.

பயிற்சி பெற்ற எழுத்தாளர்களுக்குத் தேர்வுகள் நடத்தி தரம்பிரித்து பட்டியலிட்டு ஊக்கமளித்து வகோட்டியுள்ளனர்.

பெரும்பாலும் ஆசிரியர்களும் சில மாணவர்களும் தமிழறிந்த அன்பர்களும் கலந்து கொண்ட கதைவகுப்பில் சில பெண்மணிகளும் இருந்துள்ளனர்.

பயிற்சிக்குப் பின்னர் தேர்வு செய்யப்பட்ட எழுத்தாளர்களில் ஆறு பெண்கள் இடம்பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் வாரந்தோறும் நடைபெற்று வந்த சிறுகதை எழுதும் போட்டிகளில் ஆர்வத்துடன் நா.மீனாட்சி, கமலச்செல்வி, இ.மேரி, மு.தனபாக்கியம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

தேர்வு பெற்ற எழுத்தாளர் வரிசையில் இடம் பெற்ற இ.மேரி என்பவர் கவிதை, கட்டுரை சிறுகதை என்று தொடர்ந்து எழுதி வந்தவர். பின்னாளில் திருமணத்திற்குப் பிறகு திருமதி. உஷா நாயர் என்று புகழ்பெற்று விளங்கியவர். தமிழ் மணி பட்டமும் பெற்றவர்.

சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் சோர்வின்றி தமது இலக்கியப் பணியைத் தொடர்ந்தவர். கவிதைத் துறையில் மிகுந்த ஈடுபாடு காட்டிய இவர் செந்தமிழில் சிறப்பாகப் பேசும் ஆற்றல் பெற்றவராகத் திகழ்ந்தார்.

மேடைப் பேச்சாளராகவும் ஆய்வுக் கட்டுரைகள் படைப்பவராகவும் குறிப்பாகப் பட்டிமன்றங்களில் நல்ல தமிழில் அழுத்தம் திருத்தமாகப் பேசுபவராகவும், இலக்கிய நிகழ்ச்சிகள் சிலவற்றில் தலைமையேற்று வழி நடத்துபவராகவும் திகழ்ந்தார்.

தமிழாசிரியராகப் பணியாற்றி மறைந்த திருமதி. உஷா நாயர் மலேசியத் தமிழ் இலக்கியத் துறையில் முத்திரைப் பதித்துக் கொண்ட மூத்த எழுத்தாளர்.

கதை வகுப்புகளில் கலந்து கொண்ட பெண்மணிகளில் திருமதி. கு.நா. மீனாட்சி அம்மையாரும் இருந்துள்ளார்.

ஆங்கில ஆசிரியராக இருந்தும் தமிழில் ஈடுபாடு கொண்டிருந்தவர். தமிழில் கதைகள் எழுதி அக்கால கட்டத்தில் குறிப்பிடத்தக்க பெண் படைப்பாளியாகப் பெயர் பெற்றவர். சிறுகதைகள் எழுதி எழுத்துலகில் பெயர் பதித்தவர்.

திருமதி. மு.தனபாக்கியம் என்பவரும் கதை வகுப்பில் கலந்து கொண்டு எழுத்துலகில் ஈடுபட்டுள்ளார். நூல் வெளியீடும் செய்துள்ளார்.

ஈப்போ- திருமதி கமலாட்சி ஆறுமுகமும் 1949 முதல் எழுதி வருவதாகக் குறிப்பிடுகின்றார்.

கதை வகுப்புகளில் கலந்து கொண்டு கமலச்செல்வி என்ற பெயரில் எழுதியவர் பின்னாளில் கமலாட்சி ஆறுமுகமாகப் புகழ்பெற்றுள்ளார்.

கதை, கட்டுரை, நாவல், வானொலி நாடகம் போன்றவற்றில் அதிக ஆர்வமுடன் எழுதி வந்தவர். இலக்கியத் துறையில் மட்டுமன்றி அரசியலிலும் ஈடுபட்ட இவர் சமூகப் பணியிலும் தொண்டாற்றி வருபவர். பொதுச் சேவைகளுக்குரிய விருதுகளும் பெற்றவர்.

இரு சிறுகதைத் தொகுப்புகள் (சிந்தனை மலர்கள், தியாகங்கள்) வெளியிட்டுள்ள இவர் டான் ஸ்ரீ ஆதி நாகப்பன் இலக்கிய விருதும் பெற்றவர்.

இரண்டாவது காலக்கட்டமாகக் குறிப்பிடப்படும் 1956 முதல் 1966 வரையிலான காலத்தில் பல பெண் படைப்பாளர்கள் உருவாகி தரமான கதைகள் எழுதி மலேசிய இலக்கிய உலகில் நிலையான இடத்தையும் பிடித்துள்ளனர்.

`எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று’ பாரதியார் பாடியது போல பெண்களும் இங்கே இலக்கியத்துறையில் தங்கள் திறமையை நன்கு வெளிப்படுத்தி தடம் பதித்துள்ளனர். போட்டிகளில் பவுன் பரிசுகளும் வென்றுள்ளனர். தேசிய அளவில் முதல் பரிசுகள் பெற்று முத்திரைப் பதித்துள்ளனர்.

அவர்களில் சிலரை அறிமுகம் செய்து கொள்வோம். பெண் படைப்பாளிகள் என்றதும் முதலில் நினைவுக்கு வருபவர் திருமதி பாவை. புஷ்பலீலாவதி எனும் பெயர் கொண்டவர். 1965 முதல் எழுதி வருபவர். 150க்கும் மேற்பட்ட சிறுகதைகள் 5 குறுநாவல்கள் 30 வானொலி நாடகங்கள் என்று எழுதிக் குவித்துள்ளவர். கட்டுரை, மரபுக்கவிதை, புதுக்கவிதை என பல பிரிவுகளிலும் இன்றும் அயராது எழுதி வருபவர். 1973, 1974ஆம் ஆண்டுகளில் நேசன் பவுன் பரிசுகள் 2 முறை பெற்றுள்ளார். அன்னமேரி நினைவு சிறுகதைப் போட்டியில் தங்கம் வென்றவர். 1998, 1999-இல் மலாயா பல்கலைக்கழகப் பேரவை சிறுகதைப் போட்டியில் 2ஆம், 3ஆம் பரிசுகளும் பெற்றவர். பேரவை சிறுகதைப் போட்டியில் மட்டும் 13 முறை பரிசுகள் வென்றவரின் சாதனையைப் பாராட்டி 2000ஆம் ஆண்டு பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்தனர். `ஞானப்பூக்கள்’, `கோடுகள் கோலங்களானால்’ என இரு நூல்கள் 2000ஆம் ஆண்டு வெளியிட்டார். தே.நி.நி.கூ. சங்க சிறுகதைப் போட்டியிலும் முதல் பரிசை வென்றுள்ளார். 5 தங்கப் பதக்கங்கள் பெற்றவர்.

1967 முதல் எழுதி வருபவர் கெடா சுங்கைப்பட்டாணி திருமதி. க.பாக்கியம். சிறுகதை, கட்டுரை, புதுக்கவிதை, நாவல், திறனாய்வு விமர்சனங்கள் என பல்வேறு பிரிவுகளிலும் திறனை வெளிப்படுத்தி முத்திரைப் பதித்துள்ளவர்.

`முரண்பாடுகள்' எனும் சிறுகதைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளார். பல போட்டிகளில் பரிசு பெற்றுள்ளவர். டான் ஸ்ரீ ஆதி நாகப்பன் விருதும் பெற்றுள்ளார். சமூகப் பிரச்சனைகளைக் கருப்பொருளாகக் கொண்டு சீர்கேடுகளைச் சாடியும், பெண்ணிய உரிமைகளைப் பற்றி அதிக அக்கறையுடன் சிந்திப்பவருமாவார்.

மலேசிய சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க வள்ளலார் மன்ற தலைமைப் பொறுப்பேற்று சமூகப்பணியாற்றியும் வருபவர். பெண்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்குகள் போன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வநேடத்தி வருபவர். கூரிய சமூகப் பார்வையுடைய பெண்ணியவாதி இவர். தமிழாசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

திருமதி துளசி - குவாந்தான்
1958-இல் சிறுகதை மூலம் இவருடைய எழுத்துப்பணி தொடங்கியது என்றாலும் 1962ஆம் ஆண்டில்தான் தீவிரமாக எழுதத் தொடங்கியுள்ளார். சிறுகதைகள், கட்டுரைகள், தொடர்கதை போன்றவற்றை எழுதி பெண் எழுத்தாளர்கள் வரிசையில் பெயரைப் பதிவு செய்து கொண்டவர். பல சிறுகதைத் தொகுப்புகளில் இவருடைய கதைகள் இடம்பெற்றுள்ளன. 1962-இல் தமிழ் நேசன் கட்டுரைப் போட்டியில் 2ஆம் பரிசும் 1994ல்- எழுத்தாளர் தின கட்டுரைப் போட்டியில் முதல் பரிசும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இவரும் ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

திருமதி. இராஜம் கிருஷ்ணன்
1960களில் எழுதத் தொடங்கிய குமாரி.இராஜம் கண்ணன் திருமணத்திற்குப் பிறகு இராஜம் கிருஷ்ணன் என்று பெயர் கொண்டவர். சிறுகதை, வானொலி நாடகம், நகைச்சுவை நாடகம் போன்றவற்றில் தீவிரம் காட்டியவர் பல பரிசுகளும் பெற்றுள்ளார். 1995ல் ஆனந்த விகடன் நடத்திய நகைச்சுவை நாடகப் போட்டியில் 2ஆம் பரிசும் பாராட்டும் பெற்றவர்.

திருமதி. நேசமணி - மலாக்கா
1960களில் குமாரி. நேசமணியாக எழுத்துலகிற்கு வந்தவர். சிறுகதை, கட்டுரை, நாவல் போன்றவற்றை எழுதியுள்ளார். இருமுறை இலக்கிய விருது பெற்றவர். இவர் மலாக்கா வானொலி நிலையத்திலும் பணியாற்றியுள்ளார். தற்போது பல பொது அமைப்புகளில் ஆலோசகராக இருந்து சேவையாற்றி வருகின்றார்.

திருமதி.கோ. அமிர்தவல்லி
1961-இல் எழுதத் தொடங்கியவர். சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் எழுதுவதில் அதிக ஈடுபாடு கொண்டவர். இவருடைய கவிதைகள் பல முதல் பரிசினைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். 1986ல் ம.தி.க. நடத்திய கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றுள்ளார். 1988-இல் லண்டன் முரசு கவிதைப்போட்டியில் முதல் பரிசும் குவாந்தான் இந்தியர் சங்க வெள்ளி விழாவில் சிறுகதைக்கு முதல் பரிசும் பெற்றுள்ளார். 150 கதைகள் வரை எழுதி பெயர் பதித்துள்ள மூத்த எழுத்தாளர்.

திருமதி.வில்வமலர் - கோலாலம்பூர்
1959 முதல் எழுதி வருவபர். தொடர் கதை, சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்களும் எழுதியுள்ளார். தமிழ்மலர், தினமணி, தமிழ்நேசன் போன்ற நாளிதழ்களில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர். துங்கீசம் சமய சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் பணியாற்றி வருபவர். `உருப்பெறும் உண்மைகள்’, `மலேசியத் திருக் கோவில்கள்’ (கட்டுரைகள்) ஆகிய 2 நூல்களை வெளியிட்டுள்ளார். ம.இ.கா. கலாச்சாரப் பிரிவு இவருக்கு `அறநெறிச் செல்வி’ என்னும் விருது வழங்கியுள்ளது.

திருமதி.ஜனகா சுந்தரம் - பினாங்கு
1963ல் எழுதத் தொடங்கியவர். சிறுகதைகள், கட்டுரைகள், தொடர்கதைகள், கவிதைகள், நாடகங்கள் எழுதியுள்ளார். சித்த மருத்துவம் பயின்றவர். தமிழ்நேசன் பவுன் பரிசு, தமிழ் முரசு கவிதைப் போட்டியில் முதல் பரிசு, எழுத்தாளர் சங்கத்தின் பவுன் பரிசும் பெற்றவர். குன்றக்குடி அடிகளார் `செந்தமிழ் செல்வி` விருதும் ம.இந்துசங்கம் `தொண்டர் மாமணி’ விருதும் வழங்கியுள்ளது.

திருமதி.சரஸ்வதி அரிகிருஷ்ணன்
பெ.சரசு என்ற பெயரில் 1954ஆம் ஆண்டிலேயே எழுதத் தொடங்கியவர். சிறுகதைகள், கட்டுரைகள், தொடர்கதை, தொடர்கட்டுரைகள், நாவல், நாடகங்கள் மாணவர்கதைகள் போன்ற பல பிரிவுகளில் எழுதியுள்ளவர். பள்ளிக்கூட ஒலிபரப்பிலும் சிறுவர் நாடகங்கள் எழுதியுள்ளார். மலேசிய வானொலியின் `வனிதையர் சோலை’ நிகழ்ச்சியில் 36 வாரத் தொடர் கட்டுரை வழங்கியவர். தமிழ் மலர் நாளிதழில் `தோட்டப்புறத் தமிழர்களின் நிலை’ எனும் 86 வாரத் தொடர்கட்டுரையும் எழுதியவர். `பனிமலர்’- சிறுகதைத் தொகுப்பு, நிறம் மாறும் பூக்கள் ( மாணவர் தொடர்) சரஸ்வதி அரிகிருஷ்ணனின் இலக்கியப் படைப்புகள் (தொகுப்பு) மற்றும் இரு நாவல்களும் வெளியிட்டுள்ளார். அரசியல், சமூக, இலக்கிய ஈடுபாடுகள் கொண்டவர். வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம் `மலேசிய மகளிர் திலகம்’ விருது வழங்கியுள்ளது.

திருமதி.பத்மாதேவி - பினாங்கு
1965-இல் எழுத்துப் பணியைத் தொடங்கி சிறுகதைகள், கட்டுரைகள், குறுநாடகங்கள், வானொலி நாடகங்கள், நாவல் போன்றவற்றைப் படைத்துள்ளார். சுமார் 150 சிறுகதைகள் எழுதியிருப்பதுடன் குறிஞ்சிப் பூக்கள் எனும் சிறுகதைத் தொகுப்பும் வெளியிட்டுள்ளார். எழுத்தாளர் சங்க சா.ஆ. அன்பானந்தன் விருதும் தங்கப் பதக்கமும் ம.த.இலக்கியப் படைப்பாளர் சங்கத்தின் டத்தோ பத்மநாதன் இலக்கிய விருதும் பெற்றவர். பினாங்கு ராமகிருஷ்ணர் ஆசிரம மகளிர் பகுதியின் செயலவை உறுப்பினராக சமூகப் பணியும் ஆற்றி வருகின்றார்.

திருமதி. மல்லிகா சின்னப்பன்- தெலுக் இந்தான்
1966ஆம் ஆண்டு முதல் எழுதி வருபவர். கட்டுரைகள், சிறுகதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்ட இவரின் படைப்புகள் பரவலாக எல்லா ஏடுகளிலும் வெளிவந்துள்ளன. `மகிழ்ச்சியான குடும்பமே வளமான நாட்டை உருவாக்குவதற்கான அடித்தளம்’ எனும் தலைப்பில் உதயம் இதழ் நடத்திய கட்டுரைப் போட்டியில் 2ஆம் பரிசும் பெற்றவர். மன்றங்கள் இயக்கங்கள் நடத்தும் போட்டிகளில் பங்குபெற்று பரிசுகள் பெற்றுள்ளார், 1995ல் பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம் இவரது இலக்கியப் பணியைப் பாராட்டி பரிசளித்துள்ளது. தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

திருமதி. நிர்மலா ராகவன்- சுங்கை பூலோ
1967இல் முதல் கட்டுரையைப் படைத்து எழுத்துலகில் நுழைந்தவர். பட்டதாரியான இவர் இடைநிலைப் பள்ளியில் பௌதீக ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் . தமிழில் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் ஏராளமாக எழுதி வருபவர். சிறுகதை, கட்டுரை, வானொலி நாடகம், தொடர் நாடகங்களும் எழுதி வருபவர். பயணக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். சமூகப் பிரச்சனைகள், குடும்பம், பெண்கள் இளையோர், கல்வித்துறை பற்றிய ஆய்வுக் கட்டுரைகளுடன் ஆலோசனைகளும் வழங்கி வருபவர். ஆங்கில நாளேட்டில் 300 கட்டுரைகள் வரை எழுதியுள்ளார். ( HER WORLD) ஆங்கில இதழில் இருமுறை பரிசு பெற்றவர். 2004ஆம் ஆண்டு பாரதிதாசன் நினைவு விழா சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு தங்கம் பெற்றவர். நேசன் பவுன் பரிசும் பெற்றுள்ளவர்.

திருமதி. வீ. தீனரட்சகி
தமிழ் முரசு நாளிதழ் `மாணவர் மணி மன்ற மலர்’ மூலம் சிறுவர் இலக்கியம் வளர்த்த காலத்தில் எழுதத் தொடங்கியவர்களில் ஒருவர் வீ.தீனரட்சகி. சிறுகதைகள், தொடர்கதைகள், வானொலி நாடகங்கள் எழுதி பெயர் பதித்த மூத்த எழுத்தாளர்களில் இவரும் இடம் பெறுகின்றார். பாரதிதாசன் இலக்கியக் குழுவினர் இவருக்கு பாரதிதாசன் நினைவுப் பரிசு வழங்கிச் சிறப்பித்துள்ளனர். மலேசிய வானொலியின் மகளிர் பகுதியில் வனிதையர் சோலை நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கியவர்.

திருமதி.நா.மு.தேவி (கெடா)
பள்ளியில் படிக்கும்போதே 1960ஆம் ஆண்டு முதல் தமிழ் முரசு மாணவர் மணிமன்ற இதழில் எழுதத் தொடங்கியவர். 16 ஆண்டுகள் தமிழ்ப்பள்ளியிலும் 10 ஆண்டுகள் தெலுங்கு மொழிப்பள்ளியிலும் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளவர். அக்காலக்கட்டத்தில் வெளிவந்த எல்லா இதழ்களிலும் சிறுகதைகள், கட்டுரைகள், தொடர்கதைகள் எழுதியிருப்பதோடு, மலேசிய சிங்கை வானொலியிலும் சிறுகதைகளும் தொடர் உரையாடல்களும் எழுதியிருப்பவர். இ.மூ.நியூஸ், தமிழ் மலர் இவற்றில் தொடர்கதைகள் எழுதியுள்ளார். தெலுங்கு மொழியிலும் 3 சிறுகதைகள் படைத்துள்ளார்.

திருமதி. கண்மணி கிருஷ்ணன்- கோலாலம்பூர்
1966 முதல் எழுதிவரும் மூத்த எழுத்தாளர். சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், வானொலி நாடகங்கள் எழுதியுள்ளவர். ம.வானொலியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். `இதய நாதம்’ என்னும் முழு நீள மேடை நாடகம் எழுதியதுடன் சமய குறு நாடகங்களும் படைத்துள்ளார்.ம.த.எ.சங்கம், சீ.வி.குப்புசாமி விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது. இலக்கியப் படைப்பாளர் சங்கம் டத்தோ. பத்மநாதன் விருது அளித்துள்ளது.

திருமதி. சந்திரா சூரியா
சிறுகதை, தொடர்கதை, வானொலி நாடகங்கள் எழுதுவதுடன் மலேசிய வானொலியில் அறிவிப்பாளராகவும் நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் பணியாற்றியவர். மேடை நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குபவர். தொலைக்காட்சி நாடகமும் எழுதியுள்ளார். பாரதிதாசன் இலக்கியக் குழுவின் நினைவுப் பரிசும் பெற்றவர்.

திருமதி. சாரதா கண்ணன்
1967ஆம் ஆண்டு எழுத்துலகில் அடிவைத்தவர். சிறுகதை, கட்டுரை, தொடர்கதை போன்ற பிரிவுகளில் எழுதிவந்ததுடன் மயில், இதயம் போன்ற இதழ்களில் துணையாசிரியராகவும் பணிபுரிந்து வந்தவர். எழுத்தாளர் சங்க செயலவை உறுப்பினராக இருந்த போது மாதாந்திர சிறுகதைக் கருத்தரங்குகளையும் பொறுப்பேற்று நடத்தியுள்ளார். பத்துமலை தமிழ் இளைஞர் மணிமன்றச் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசை வென்றவர். டான்ஸ்ரீ ஆதிநாகப்பன் விருது, டத்தோ பத்மநாதன் விருது, எ.ச.முருகு சுப்பிரமணியம் விருதும் பெற்றுள்ளவர்.

திருமதி.சு.கமலா- பினாங்கு
1982 முதல் எழுதி வருபவர். உங்கள் குரல் இதழின் துணை ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் புரட்சிகரமான சிந்தனைச் செல்வி. சிறுகதைகள், நாவல் சரித்திர நாவல் படைத்தவர். 1987இல் சா.ஆ. அன்பானந்தன் நினைவு விழா- சரித்திர நாவல் எழுதும் போட்டியில் `தீமலர்’ (துன்பாத்திமா) நாவலுக்காக முதல் பரிசை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்க சாதனையாகும். பாரதிதாசன் நூற்றாண்டு விழா சிறுகதைப் போட்டியிலும் முதல் பரிசை வென்றுள்ளார். டேவான் பகாசா நடத்திய போட்டியிலும் பரிசு பெற்றுள்ளார்.மலாய் மொழியில் சிறுகதையும் கவிதையும் வெளிவந்துள்ளன. உங்கள் குரலில் இளையோர் கதைகள் எழுதி வருகின்றார்.

திருமதி. ஆதிலட்சுமி- பத்தாங் பெர்சுந்தை
சிறுகதை, கவிதை, தொடர்கதை, நாடகம், இலக்கிய நாடகம் போன்ற பல பிரிவுகளில் எழுதி வருபவர். சிறுவர்களுக்காகவும் எழுதியுள்ளார். தமிழ்நேசன் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசும், தே.நி.நி.கூ சங்க சிறுகதைப் போட்டியில் 2ஆம் பரிசும் பெற்றவர். தலைவன் மாத இதழில் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார்.

திருமதி. எம். ஜெயலட்சுமி
இவர் பாலர் பள்ளி ஆசிரியை சிறுகதை, வானொலி நாடகங்கள் அதிகமாக எழுதியுள்ளார். 7ஆவது பேரவை சிறுகதைப் போட்டியில் ரி.ம. 2500 சிறப்புப் பரிசும் , 8ஆவது பேரவை போட்டியில் 2ஆம் பரிசும் பெற்றவர். ம.எ.சங்கத்தின் முருகு சுப்ரமணியன் விருது பெற்றவர்.

திருமதி- நிர்மலா பெருமாள்
அதிகமாகச் சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதியிருப்பதோடு 4 சிறுகதைத் தொகுப்புகளும் ஒரு நாவலும் நூல் வடிவில் வெளியிட்டுள்ள பெருமைக்குரியவராவார். தமிழக `சாவி’ இதழிலும் எழுதியுள்ளார். பாரதிதாசன் நூற்றாண்டு விழாச் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு. தமிழ் எழுத்தாளர் தினச் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு, பினாங்கு மாநில சிறுகதைப் போட்டி, பேரவைக் கதைகள் போட்டி போன்றவற்றிலும் பல பரிசுகளைப் பெற்றுள்ளார். சூரியன் மாத இதழின் சிறந்த எழுத்தாளர் விருது, டத்தோ பத்மநாதன் இலக்கிய விருது போன்றவற்றையும் பெற்றுள்ளவர்.

திருமதி.வே.இராஜேஸ்வரி- காஜாங்
1976ல் எழுதத் தொடங்கியவர். புதிய சிந்தனையும், புரட்சி மனப்பான்மையும், பெண்ணிய சிந்தனைகளும் கொண்டவர். புதுக்கவிதைகளும், சிறுகதைகளும் எழுதி வருபவர். எழுத்தாளர் சங்க சிறுகதைப் போட்டியில் 2ஆம் பரிசும், புதுக்கவிதைப் போட்டியில் 2ஆம் பரிசும் பேரவை சிறுகதைப் போட்டியில் பரிசுகளும் பெற்றுள்ளார். பவுன் பரிசுகளும் பெற்றுள்ளவர். எழுத்தாளர் சங்க சீ.வீ.குப்புசாமி விருதும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. `சலங்கை’ மாத இதழில் பெண் எழுத்தாளர்கள் பற்றிய நேர்காணல் கட்டுரைகள் படைத்துள்ளார்.

திருமதி.தா.ஆரியமாலா-பந்திங்
சிறுகதைகள், கட்டுரைகள் தொடர்கதை போன்றவற்றை எழுதியுள்ளார். தமிழ்நேசன் மாதாந்திர சிறுகதைப் போட்டியில் 3 முறை பவுன் பரிசுகள் பெற்றவர். பூச்சரம் எனும் தொகுப்பு நூல் ஒன்றும் வெளியிட்டுள்ளார்.

திருமதி. இ.தெய்வானை- மூவார்
1965 முதல் எழுதி வருகின்றார். சிறுகதைகள், கட்டுரைகள், வானொலி நாடகங்கள் எழுதியுள்ளார். தமிழ் நேசன் பவுன் பரிசும் பெற்றவர். எழுத்தாளர் சங்கத்தின் முருகு சுப்ரமணியன் விருதும், பாரதிதாசன் குழுவினரின் எழுத்தாளர் தின விருதும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

திருமதி. பத்மினி ராஜமாணிக்கம்
1979 முதல் எழுதி வருபவர். சிறுகதைகள், கட்டுரைகள், தொடர்கதைகள், புதுக்கவிதைகள் வானொலி நாடகங்களும் எழுதியுள்ளார். சுற்றுச்சூழல் அமைச்சு நடத்திய கட்டுரைப் போட்டியிலும், தே.நி,நி.கூட்டுறவுச் சங்கக் கட்டுரைப் போட்டியிலும் முதல் பரிசு பெற்றிருப்பதுடன் தமிழ் நேசன் சிறுகதைப் போட்டியிலும், நவீன இலக்கியச் சிந்தனை புதுக்கவிதைப் போட்டியிலும் பரிசு பெற்றுள்ளார். ம.த.எ. சங்க மாதாந்திர சிறுகதைத் தேர்விலும் இவர் கதை பரிசு பெற்றுள்ளது. செம்பருத்தி மாத இதழின் குறுநாவல் போட்டியில் 2ஆம் பரிசு பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. பத்திரிகையாளராக பல நேர்காணல்கள் கண்டுள்ளதுடன், சமூக, மகளிர் பிரச்சனைகளைத் தொட்டும் எழுதிவருபவர்.

திருமதி. கோமகள்
1984 முதல் எழுதி வருபவர். பத்திரிகைத் துறையில் நிருபராகவும் மாத இதழ் ஆசிரியராகவும் பணியாற்றியவர். `உயர்வோம்’ என்னும் இதழின் துணை ஆசிரியராகவும் இருந்துள்ளார். சிறுகதைகள், தொடர்கதை, கட்டுரைகள் கவிதைகள் எழுதியுள்ளார். நேர்காணல், திறனாய்வு, கண்ணோட்டம், போன்ற பல பிரிவுகளில் பங்களிப்பு செய்துள்ளார். கோ.சாரங்கபாணி அவர்களின் நூற்றாண்டு விழாவின் மரபுக்கவிதைப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். `புதுமைப் பெண்’- சிறுகதைத் தொகுப்பும் வெளியிட்டுள்ளார். மலேசிய தமிழ்ப் பெண் படைப்பாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்து `கயல்விழி’ எனும் நூலாக வெளியீடு செய்தவர். மலேசிய இலக்கியத் துறையில் பெண்களை அடையாளம் காட்டியுள்ளார்.

திருமதி எஸ்.பி.பாமா- கோலாலம்பூர்
1980 முதல் எழுதி வருபவர். சிறுகதை தொடர்கதை, வானொலி நாடகம் தொடர் நாடகம், வானொலியில் கட்டுரைகள், தொலைக் காட்சி நாடகங்கள் போன்றவற்றை எழுதியுள்ளவர். இவர் வானொலியில் தான் அதிகமாக எழுதியிருக்கின்றார். சிறுகதைத் தொகுப்பு ஒன்றும் வெளியிட்டுள்ளார். ம.த.எ.சங்கத்தின் மாதாந்திர பவுன் பரிசும் பெற்றுள்ளார். பாரதிதாசன் குழுவின் நினைவுப் பரிசும் வழங்கப்பட்டுள்ளது. மலேசியத் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர்.

திருமதி ஆரியமாலா குணசுந்தரம்- கெடா
1972ஆம் ஆண்டு முதல் எழுதி வருகின்றார். சிறுகதைகள், வானொலி நாடகங்கள், சிறுவர் நாடகங்கள், கட்டுரைகள் போன்றவை படைத்துள்ளவர். துன் சம்பந்தன் நினைவு நாள் சிறுகதைப் போட்டியிலும் இளைஞர் மணிமன்றப் போட்டிகளிலும் பரிசுகள் பெற்றுள்ளார். பாரதிதாசன் இயக்கம் படைப்பிலக்கிய `சோதி’ விருது அளித்துள்ளது. ம.தி.க. பினாங்கு மாநில மகளிர் பகுதித் தலைவியாகவும் உள்ளார். பல இயக்கங்களிலும் ஈடுபாடு கொண்டுள்ளவர். `நம்பிக்கை வாழட்டும்’ என்னும் சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்.

திருமதி. ச.சுந்தராம்பாள்- கெடா
1969 முதல் எழுதி வந்துள்ளவர். சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், புதுக்கவிதைகள், எழுதியுள்ளார். வானொலிக்கும் எழுதியுள்ளார். இவருடைய சிறுகதையொன்று தமிழகத்தில் சிறந்த மாதாந்திரச் சிறுகதையாகத் தேர்வு பெற்றுள்ளது. ம.த.எ.சங்கம் சா.ஆ.அன்பானந்தன் விருது வழங்கியுள்ளது. 1948 முதல் எழுதி வந்துள்ள மூத்த எழுத்தாளர்கள் சிலருடன் நிகழ் காலத்தில் நிறைய எழுதி பெயர் பதித்துக் கொண்டிருக்கும் சிலரும் என் பார்வைக்குக் கிட்டியுள்ளனர்.

தோழி, யோகி, பூங்குழலி, இராம.சரஸ்வதி என இளந்தலைமுறையினர் பலர் ஆர்வமுடன் எழுத்துலகில் அறிமுகம் பெற்று வருகின்றனர். இந்தப்பட்டியல் நீள வேண்டும். மலேசிய எழுத்துலகில் இவர்கள் தங்களுக்கென தனி இடத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதே நம் அவா.

 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
     
  முகப்பு  |  உள்ளடக்கம்  
     

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768