|
இயற்கையின் வரம் பெற்ற பூமி மலேசியா. செழிப்பு பிரவாகம் கொள்ளும் மண்.
இவ்வாண்டு தனது 50ஆவது சுதந்திர ஆண்டை கொண்டாடவிருக்கிறது. மிகவும்
அபரிமிதமான வளர்ச்சியை கடந்த 20 ஆண்டுகளாகப் பதிவு செய்து வருகிறது. கடந்த
ஆண்டின் பொருளாதாரம் பரிவர்த்தனை, முதன் முறையாக 1 திரில்லியனைத்
தாண்டியுள்ளது. 2020க்குள் தன்னை ஒரு வளர்ச்சியடைந்த நாடாக
பிரகடனப்படுத்திக் கொள்ள பல வியூகங்கள் அமைக்கப்பட்டு, பல்வேறு முன்னேற்றச்
சாத்தியக் கூறுகள் முன்னெடுக்கப்பட்டு தொடர்ந்து துரிதமான வளர்ச்சி கண்டு
வருகிறது. வானலாவியக் கட்டடங்கள், அதிநவீன போக்குவரத்து வசதிகள் என
மக்களின் வாழக்கைத்தரமும், நாட்டின் பெருமைக் கூறுகளும் பல்கிப்
பெருகுகின்றன.
வரங்களைச் சாபங்களாக மாற்றிக் கொள்வதில் மனிதன் தொடர்ந்து பங்காற்றி
வருகிறான். கட்டுப்பாடற்ற வளர்ச்சி, ஒருங்கிணைக்கப்படாதக் கட்டுமானத்
திட்டங்கள், இயற்கையமைப்பிற்கு முரணான மேம்பாட்டு முறைகள் என பல்முனைத்
தாக்குதல்களால் இன்று மலேசியா பெரும் இயற்கை இடர்களைச் சந்திக்க வேண்டிய
கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. மலேசியப் பொருளாதாரத்தின் மைய
இயங்குதளமான கோலாலம்பூர் திடீர் வெள்ளப் பாதிப்பால் நிலைகுலைந்து போவது
மனிதனின் மூர்க்க வளர்ச்சியின் மேல் விழும் இயற்கையின் அரை. வாழ்க்கை
வசதிகளில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சி, மக்களின் வாழ்க்கைத் தரத்தில்
பிரதிபலிக்கவில்லை. பொருளாதார வளர்ச்சியொன்றையே முன்னிறுத்தி
மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் அழிவுகளையே விளைவுகளாக கொண்டு வருகின்றன.
தாமதமாக இருப்பினும், இன்னும் அதிகமான எதிர்மறை விளைவுகளை தவிர்க்க,
வெள்ளப்பேரிடரை எதிர்கொள்ள அதன் சீற்றங்களை குறைக்க பல வகேளை அரசாங்கம்
ஆய்ந்து செயல்படுத்தி வருகின்றது. அத்தகையதோர் முன்னெச்சரிக்கை
செயல்திட்டம்தான் SMART என்று அழைக்கப்படும் `பெருமழை நீர் கையாளுகை
மற்றும் சுரங்கவழி' திட்டமாகும். (Stormwater Management and Road Tunnel)
SMART இயற்கையின் சீற்றத்தை மானுட வலுவால்- அறிவின் ஆற்றலால் எதிர்கொள்ள
விளையும் மிகப் பெரிய திட்டமாகும். மலேசிய அரசு மேற்கொள்ளும் இத்திட்டம்
தலைநகரின் தலையாய பிரச்சனையான திடீர் வெள்ளம், பெரும் மழைக்கால வெள்ளம்
ஆகியவற்றை எதிர்கொள்ள மேற்கொள்ளப்படும் மற்றுமொரு முயற்சியாகும்.
எம்.எம்.சி.(M.M.C.Ltd) கமுடா (GAMUDA Ltd) ஆகிய நிறுவனங்களின்
கூட்டுத்திட்டமான இதனை செயல்படுத்தும் நிறுவனங்களாக மலேசிய வடிகால்
நீர்பாசனத்துறையும், மலேசிய நெடுஞ்சாலை வாரியமும் பங்காற்றுகின்றன.
இந்நிறுவனங்கள் மேற்கொண்ட ஆய்வுகளின் வழி, கிள்ளான்- அம்பாங் ஆறுகள்
சங்கமிக்கும் இடம் வெள்ளம் கருகொள்ளும் இடமாகக் கருதப்படுகிறது. தவிர,
ஜாமேக் பள்ளிவாசல் அருகில் உள்ள பாலம் தாழ்வான நிலப்பகுதியில்
அமைந்திருப்பதோடு, குறுகலாகவும் இருப்பது திடீர் வெள்ளமேற்பட காரணமாகிறது.
இந்தச் சாதகமற்ற சூழலை எதிர்கொள்ள மாற்றுவழித் தேவையைப் பூர்த்தி செய்ய
SMART சுரங்கவழி வகை செய்கிறது.
`SMART' எனும் இந்தப் `புத்திசாலித்தனமானத்' திட்டம், பெரும் மழைநீர்
தாழ்வான மாநகரப்பகுதிகளில் நுழைவதைத் தவிர்க்க உதவும். தற்காலிக நீர்
சேமிப்புக் குளம், சுரங்க பக்கவழி மற்றும் நீர் தேக்க மையம் போன்ற
ஒருங்கிணைந்த பெரும் திட்டத்தின் பலனாக இந்த முயற்சி
முன்னெடுக்கப்படுகிறது. வெள்ளப் பெருக்கினை எதிர்கொள்வது முதன்மை நோக்கமாக
இருப்பினும், SMART-இன் முதல் இரு தளங்களில் அமைந்துள்ள சுரங்கச் சாலை,
மாநகரின் தெற்கு வாசலில் ஏற்படும் வாகன நெரிசலை பெருமளவில் குறைக்க உதவுமென
எதிர்பார்க்கப்படுகிறது.
SMART-இன் பெருமழை நீர் வடிகால் சுரங்கம் 9.7 கி.மீட்டர் நீளமுடையதாகும்.
இச்சுரங்கத்தின் சிறப்பம்சம் அதனுள் அமைந்திருக்கும் 3 கிலோமீட்டர்
நீளமுடைய இரண்டு அடுக்கு சாலை வசதியாகும். இச்சாலை வசதி தெற்கு வாசல் வழி
வாகனங்கள் (KL- சிரம்பான் நெடுஞ்சாலை, கூட்டரசு நெடுஞ்சாலை, பெஸ்ராயா
மற்றும் கிழக்கு-மேற்கு ஆகியவை) மாநகருக்கு வந்து போகும் நெரிசலில் இருந்து
விடுபட உதவும். பிரதிபயனாக, பயண நேரம் குறிப்பிடத்தக்க அளவில் குறையும்.
உதாரணமாக, ஜாலான் இஸ்தானா- கம்போங் பண்டான் சந்திப்பிலிருந்து KL வர 5
நிமிடங்கள் போதுமானதாகும் (இப்போது 30 நிமிடம்).
மழைநீர் வடிகால் சுரங்கம் 11.7 மீட்டர் சுற்றளவைக் கொண்டுள்ளது. 1
மில்லியன் கன மீட்டர் நீர் கொள்ளும் அளவில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் வழி
வரும் மழைநீர் தற்காலிக நீர் தேக்கத்தில் சேமிக்கப்படுகிறது. கம்போங்
பெரெம்பானில் (கிளெனீகள் மருத்துவமனையின் பின்புறம்) அமைக்கப்பட்டுள்ள
இந்தச் சேமிப்பு மையம் 10 ஹெக்டர் சுற்றளவு கொண்டதாகும். இங்கே 6 லட்சம் கன
அடி நீர் சேமிக்கலாம். இது தவிர 22 ஹெக்டர் சுற்றளவில் தாமான் டேசாவில்
அமைந்துள்ள நீர்த்தேக்கம் 1.4 மில்லியன் கன மீட்டர் நீரைத் தேக்கிவைக்க வகை
செய்கிறது. இந்த ஏற்பாடுகளின் பலனாக வெள்ள நீரோட்டத்தை மாநகரின்
மையத்தினின்று திருப்பி, சீற்றத்தைக் குறைத்து சேதங்களை மட்டுப்படுத்தலாம்.
RM 1.9 பில்லியன் செலவில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணி அதீதப்
பொறியியல் முயற்சியாகக் கருதப்பட்டு, ஆஸ்ட்ரோ டிஸ்கவரி சேனலில் (Discovery
Channel) ஒலிபரப்பப்பட்டது. கோலாலம்பூர் மாநகரம் பெரும்பாலும்
சுண்ணாம்புக்கல்லால் ஆன மண்ணியல் அமைப்புக் கொண்டதாகும். அதிக நீர் கோர்த்த
நில அடுக்கு, செங்குத்தான மேடுகள், முகடுகள், உட்குடைவுகள், துளைகள்
நிறைந்த மண்ணமைப்பாகும் இது. இத்தகைய நில அமைப்பிற்கு ஏதுவான கட்டுமான முறை
பின்பற்றப்பட வேண்டியது மிக அவசியம். இதைத் தவிர்த்து பழைய, பயன்பாட்டில்
இல்லாத ஈய வயல்களின் வண்டல் மண்ணிற்கு ஏற்றவகையிலும் திட்டம்
மேற்கொள்ளப்படவேண்டும்.
இவை அனைத்தையும் கருத்தில் கொண்டே சுரங்கப் பொறி கட்டுமான முறை தேர்வு
செய்யப்பட்டது. இத்திட்டம் நீர்மக் கலவையை தடுத்து சுரங்கம் அமைப்பதில்,
பெரும் வெற்றி அளிக்கவள்ளது. (Slurry Shield Tunnel Boring Machine (TBM).
இந்தக் கட்டுமான முறையினால் அடுக்குகளில் ஏற்படக்கூடிய எதிர்மறை விளைவுகளை
குறைக்க முடியும்.
SMART திட்டம் மூன்று நிலை செயல்பாடுகள் கொண்டது. முதலாவதாக, மழையற்ற
காலங்களில் வாகனப் போக்குவரத்துக்கு மட்டுமே பயன்படும். இரண்டாம் நிலையில்,
சற்று அதிகமான மழைநாட்களின் போது, SMART முறை செயல்படத் தொடங்கும்.
இந்நிலையில், வெள்ளநீர் சுரங்க பக்கவழியில் உள்ள கீழ்அடுக்கு வாகன வழிக்கு
திருப்பிவிடப்படும். இக்காலக்கட்டத்தில் மேல் அடுக்கு வாகன வழி தொடர்ந்து
வாகன பயன்பாட்டுக்கு திறந்தே இருக்கும். மூன்றாவது நிலையில், கடுமையான
மழைநாட்களில், வெள்ள நாட்களில் சுரங்க வழி வாகனங்களுக்கு மூடப்படும்.
தானியங்கி வாயில் செயல்படத் தொடங்கி வெள்ளம் வழிந்தோட வகை செய்யும்.
வெள்ளம் வழிந்த 48 மணி நேரத்துக்குள் சுரங்கப் பாதை வாகன
போக்குவரத்துக்குத் திறந்து விடப்படும்.
SMART சுரங்க வழியின் ஒவ்வொரு கிலோ மீட்டரிலும் சக்தி வாய்ந்த காற்றோட்டப்
புழை அமைக்கப்பட்டுள்ளது. இவற்றின் வழி தூய காற்று சுரங்கத்தினுள் வருவதால்
காற்றின் தரம் பராமரிக்கப்படுகிறது. மழைக் காலங்களில் சுரங்கப் பாதையில்
அமைக்கப்பட்டுள்ள சுரங்க வாயிற்குகேள் மாசடைந்த காற்றை வெளியேற்றவும் புதிய
காற்று உட்செல்லவும் வவேகுக்கும். இத்தகைய முன்னெச்சரிக்கை திட்டங்களின்
வழி தீச்சம்பவங்களால் ஏற்படக்கூடிய புகையையும் கட்டுப்படுத்தலாம். சுரங்க
வழியின் ஒவ்வொரு கிலோமீட்டர் இடைவெளியில் தீயணைப்பு, தொடர்பு சாதனங்கள்
மற்றும் கண்காணிப்புச் சாதனங்களும் வைக்கப்பட்டுள்ளன.
ஆசியாவின் 2ஆவது மிகப் பெரியதும், தென்கிழக்கு ஆசியாவின் ஆகப் பெரியதுமான
இந்தச் சுரங்க வழித் திட்டம் மார்ச் மாதம் இறுதியில் சாலை போக்குவரத்துக்கு
திறந்துவிடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது என பொதுப்பணி அமைச்சர்
டத்தோஸ்ரீ ச.சாமிவேலு தெரியப்படுத்தியுள்ளார். எனினும் வெள்ள வடிகால்
திட்டம், திட்டமிட்டபடி வரும் ஜூன் மாதத்தில்தான் நிறைவுபெறுமென
எதிர்பார்க்கப்படுகிறது. இச்சுரங்கச்சாலை ஏறத்தாழ 2 இலட்சம் வாகன
மோட்டிகளுக்குப் பயனளிக்கும் என நம்பப்படுகிறது.
பரிசோதனை/ பரீட்சார்த்த நடவடிக்கையின் போது, வாகன வழி மட்டுமே
பயன்படுத்தப்பட்டது. பெரிய அளவில் துப்புறவுப் பணிகள் செய்ய வேண்டும்
என்பதால், வெள்ள வடிகால் சோதனை மேற்கொள்ளப்படவில்லை என்பது இங்கு
குறிப்பிடத்தக்கது.
ஆக, இன்னும் இரண்டு மிக முக்கியக் கேள்விகள், தொக்கி நிற்கின்றன. ஒன்று
கடுமையான வெள்ளப் பேரிடரை இந்தத் திட்டம் எப்படி கையாளும்? அடுத்தது,
இந்தச் சுரங்கச் சாலையைப் பயன்படுத்த எவ்வளவு (toll) கட்டணம் செலுத்த
வேண்டி வரும்? முதல் கேள்வியின் பதில் இயற்கையின், `கையில்'; அடுத்த
வினாவின் பதில்- அமைச்சரின் அறிவிப்பிற்காக காத்திருக்கலாம்!
|
|