வல்லினத்தில் தேடுதல்

எழுத்துரு உதவி / Tamil Font Help 

 இதழ் 1
ஜூன் 2007
முகப்பு  |  உள்ளடக்கம்

கடிதம்

 

ஏப்ரல் பூல்

ம.நவீன்

 

       
 

கடந்த ஆண்டு ஒரு மாலை நேர கவிதை கூட்டத்தில் வைரமுத்துவை பாரதியின் கவிதை வாரிசாக அறிவித்து கைதட்டல்களைப் பெற்றுக்கொண்டவர்கள் கடந்த ஏப்ரல் ஒன்றில் வைரமுத்துவுக்கு பாராட்டு விழா நடத்தி பிறந்த பலனை அடைந்துள்ளனர். அவருக்கு மலேசியாவில் பாராட்டு விழா செய்வது இதோடு மூன்றாவது முறை என கருதுகிறேன். தமிழில் எந்தப்புதுமையும் அல்லது பரிசோதனை முயற்சியும் செய்யாது வெறும் அரசியல் மேடைக்கான மொழியை வைத்துக்கொண்டு இசைப்பாடல் வழியும் கலைஞருக்கு காக்காய் பிடிப்பதன் வழியும் மலேசிய தமிழ் எழுத்தாளர் தலைவர்களைக் கவர்ந்தது வைரமுத்துவின் வணிக உலகுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றிதான்.

எழுத்தாளர் சங்கத்தின் மூலமாக நிகழ்த்த முடியாத இப்பாராட்டு விழாவை தனிமனிதனாக நின்று (இக்கடிதத்தை முடிக்கும் வரை எந்த இயக்கமும் இதை நடத்தியதாகத் தகவல் இல்லை) நிகழ்சி ஏற்பாட்டாளர் நடத்தியே தீர வேண்டிய அவசியம்தான் என்ன?என்ற வினாவிற்கு “அது என் விருப்பம்” என்ற பதில் கிடைக்கலாம்.அதற்காக நான் ஏற்பாட்டாளருக்கும் கவிஞருக்கும் தனிப்பட்ட வியாபார நோக்கம் இருக்குமோ... அடுத்த எழுத்தாளர் சங்கத் தேர்தலை குறிவைத்து இத்திட்டமோ... வைரமுத்துவிடம் இருக்கும் சினிமா வெளிச்சம் தனக்குக்கிடைக்க செத்த உக்தியோ... என சந்தேகம் கொள்ள மாட்டேன்.என்னிடம் இருப்பவை வேறு சில கேள்விகள்.

தனது எழுத்தை யதார்த்தவாதம் எனும் வைரமுத்து இதிகாசம் என்றும் காவியம் என்றும் தலைப்பிட்டிருக்கும் முரண்போல்தான் அவர் வாழ்வு.தொடர்ந்து தொடர்கதைகளை நாவலாக தொகுத்து தமிழுக்கு கொடுப்பதால் தொழிலாளர் தினத்தில் அவருக்கு சிறந்த உழைப்பாளி என்ற பட்டத்தை கொடுக்கலாமே ஒழிய, ஒரு இலக்கிய வாதியாக மலேசிய மக்கள் முன் நிறுத்துவதும் அதற்கு நமது கல்விமான்கள் ஒத்துப்போவதும் இந்நாட்டு இலக்கிய வளர்ச்சியின் மேல் அவநம்பிக்கையைத் திணிக்கிறது.

நமது நாட்டு புத்தகக்கடைகளில் வெறும் 70 ரிங்கிட்டுக்கு விற்கப்படும் இந்நூல் 100 ரிங்கிட்டுக்கு திட்டமிட்டு விற்கப்பட்டதும் பிறகு 75 ரிங்கிட் ஆனதும் வெளியில் 50 ரிங்கிட்டுக்குக் கிடைத்ததும் (பாசார் மாலாம் தோற்றது போங்க) மிகச்சிறந்த வணிக உக்தி.இதுபோன்ற ஒரு சிரத்தையை மலேசிய எழுத்தாளர்களுக்காக சங்கம் செய்திருந்தால் இன்று அரு.சு.ஜீவானந்தன்,சாமிமூர்த்தி போன்றோரை இலக்கிய உலகம் தொலைத்திருக்காது.2 பதிப்புகள் விற்று தீர்த்து மூன்றாம் பதிப்பை மலேசிய வாசகர்கள் தலையில் கட்டி ,சினிமா புகழில் உழலும் ஒருவருக்கு பல ஆயிரம் பெற்று தர முடிந்த ஏற்பாட்டாளர்களால்,தமிழகத்தில் பதிப்பிக்கப்பட்ட (எழுத்தாளர் சங்க நாவல் போட்டியில் வெற்றிபெற்ற) இரண்டு நாவல்களுக்கான கதாசிரியர்களுக்கு தலா ஆயிரம் ரிங்கிட்டும் 100 புத்தகப்பிரதிகளும் கையில் கொடுக்கும் சுரண்டலும் அடுத்து அரங்கேரப்போவதாக அறிகிறேன்.

இவர்கள் சார்ந்த பத்திரிகைகளிலும் இதழ்களிலும் “கருவாச்சி காவியத்தை” உலகத் தரமான நாவலாக வர்ணிப்பதும் இந்த வியாபார நுட்பத்திற்கு நல்ல சந்தைக்கூவலாகத் தெரிகிறது. உலக இலக்கிய தரத்திற்கென்று சில உச்சங்கள் உள்ளதாக நான் அறிகிறேன்.புஷ்கின், துர்கனேவ், தோல்ஸ்தோய், அந்தான் செகாவ், அலெக்ஸான்டர் குபின், மார்க்சிம் கார்க்கி என நீளும் இப்பட்டியலோடு வைரமுத்துவையும் சேர்க்கும் அளவுக்கு ஏற்பாட்டாளர்களிடம் இருக்கும் இலக்கிய பரிட்சயத்தை எண்ணி வியக்கிறேன்.அடுத்த ஆண்டு இப்பட்டியலில் ரமணி சந்திரனை சேர்த்துக்கொண்டாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. தொடர்ந்து சினிமா ஆடை பூண்டவர்களையே (சினேகன்,பா.விஜய்,வைரமுத்து) இங்கு முன்னிருத்தி கைதட்டல் பெருவதற்கும் சினிமா நடிகையை கொண்டு நிகழ்ச்சி நடத்துவதற்கும் பேதங்கள் அதிகமில்லை.

சொல்லணித்தன்மையோடு, மேடைப்பேச்சின் அழகியலைக்கொண்ட வைரமுத்துவின் வரிகளில் அடங்கியிருக்கின்ற மொழித்தொழில் நுட்பத்தை அறியாமலும் சின்னத்திரை கொடுக்கும் மிகையுணர்சியே அவர் நாவல்களில் எஞ்சியுள்ளது என்பது புரியாமலும் அவரே பாரதிக்கு அடுத்து என்று கூறும் இலக்கியத் தலைவர்கள் இருக்கும் வரை தமிழகம் சென்றால் மாலை போடுவதையும், கலைஞரோடு கதைக்க நேரம் கிடைப்பதையும்,வைரமுத்து வீட்டில் விருந்து சாப்பிட்டதை மட்டுமே நினைத்து நாம் புலங்காகிதம் அடையலாம்.மேலும் மேலும் எங்களுக்கு மாலையும் மரியாதையும் வேண்டும் என கெஞ்சிக்கேட்டு பெற்றும் கொள்ளலாம்.

இந்தக் கூத்து அரங்கேறிய அந்த இரவில் ஒரு கனவு வேறு வந்தது. விமான நிலையம் வரை அவரை வழியனுப்ப வந்த அவரின் தீவிர பற்றாளர்களை நோக்கி கையசைத்து விமானத்தில் ஏறியபடியே வைரமுத்து சொல்கிறார்...”ஏப்ரல் பூல்”. பற்றாளர்கள் மீண்டும் கைத்தட்டுகிறார்கள்.

 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
     
  முகப்பு  |  உள்ளடக்கம்  
     

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768