|
சிந்தனை மற்றும் செயல்பாட்டு ரீதியில் மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள்
எந்தளவுக்கு அடிமைப் படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பது பாடலாசிரியர்
கவிஞர் வைரமுத்துவின் நூல் வெளியிட்டு நிகழ்வு ஒரு முக்கிய சான்றாக
அமைந்துள்ளது.
கருவாச்சி காவியம் படைத்தார் என்பதற்காகவோ, முனைவர் பட்டம் பெற்றார்
என்பதற்காகவோ, அவரை இங்கு அழைத்து சிறப்பு செய்வது, இம்மண்ணின் இலக்கியச்
செறிவுக்கு ஒருபோதும் ஆதாரமாகாது. இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர்,
தமது பாடலுக்கு தேசிய விருது பெற்றமைக்கும் சாகத்திய அகடமி விருது
வென்றமைக்கும் கவிஞர் வைரமுத்து இங்கு அழைக்கப்பட்டு சிறப்பு
செய்யப்பட்டார்.
தற்போது முனைவர் பட்டம் பெற்றார் என்பதற்காகவும், அவரின் அண்மைய
நூலுக்காகவும் அவரை மீண்டும் மீண்டும் இம்மண்ணில் முன் நிறுத்துவது ஒரு
சார்பு நிலை செயலாகும். அதிலும் குறிப்பாக சினிமா எனும் பெரும் வணிக
இயக்கத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களையே கவிஞர்களையே மலேசிய பார்வைக்கு,
இலக்கியத்தை ரட்சிக்க வந்த “சூப்பர் மேன்” களாக அடையாளப்படுத்த முயல்வது,
சமூக இலக்கிய நீதிக்கு இழைக்கப்படும் துரோகமாகும். அதிலும் குறிப்பாக
கவிஞர் வைரமுத்துவையே கவியுலகின் குல தெய்வமாக ஆராதனை எடுப்பது, ஒட்டு
மொத்த கவிஞர்களையும் அவமானப்படுத்தும் சுயநலமிக்க செயலாகும்.
இந்நடவடிக்கை மிகவும் எளிதாக, நியாயப்பூர்வமான கேள்விகளை கட்டவிழ்த்து
விடுகிறது.
* இந்நாட்டில் எந்தவொரு எழுத்தாளரும், பட்டம் பெற்று,மேன்மை அடைந்து நமக்கு
அரிய முன்னுதாரணங்களாகத் திகழவில்லையா? இந்நாட்டில் ஒருவரேனும்
வரவழைக்கப்படும் தமிழக எழுத்தாளர்களுக்கு நிகராக
முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கிறார்களா? தகுதி அற்றவர்களா மலேசியத் தமிழ்
எழுத்தாளர்கள்.?
* இந்நாட்டிலும்தான் நூல்கள் வெளியிடுகிறோம், சமூக கட்டமைப்பைப்
பிரதிநிதிப்பவர்கள் எத்தகைய முதன்மையை முக்கியத்துவத்தை உள்ளூர்
எழுத்தாளர்களுக்கு வழங்குகிறார்கள்? வைரமுத்து, சினேகன், பா.விஜய்
போன்றவர்களுக்கு மேடைகளை ஏற்படுத்தித் தருவதில் மட்டும் ஏன் இவ்வளவு
ஆனந்தம், அக்கறை, பிரயத்தனம்?
* எத்தனையோ எழுத்தாளர்கள் விருதுகள் பெறுகிறார்கள். சினிமா எனும் வெகுஜன
வட்டத்திற்கு அப்பால், மிகத் தீவிரமாக இலக்கியத்தில் உழன்று, சமரசமின்றி
மொழியை நேர்மையாகப் பாவித்து வருகின்றனர். அவர்கள் எல்லாம் தொடர்ந்து
மறுக்கப்பட்டும், குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டுமே கொண்டாடப்படுவதும் ஏன்?
ஏன் மூன்று தமிழ் நாளேடுகளும் தமிழைப் பாடமாக போதிக்கும் ஆசிரியர்
பயிற்சிக் கல்லூரிகள் சிலவும் ஒரு இந்திய ஆய்வுத் துறையும்
நூற்றாண்டுக்கும் மேற்பட்ட இந்திய அமைப்புகளும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட
எழுத்தாளர்கள்-கவிஞர்கள்-வாசகர்கள் என பறைச்சாற்றிக் கொள்பவர்களும்
தமிழாசிரியர்களும் தாராளமாகவே இருக்கும் இந்நாட்டில் ஐநூறு புத்தகங்களைப்
பதிப்பித்தால் நூறு பிரதிகளை விற்பதே பெரும் திண்டாட்டமாக உள்ளது.
இருண்மையும் சூன்யமும் கவ்விய அவநம்பிக்கையான இச்சூழலில், வணிகம் மற்றும்
செல்வத்தின் குறியீடாக பயமுறுத்தும் கவிஞர் வைரமுத்துவை இறக்குமதி செய்து,
விருது வழங்கி, அவரது காவியத்தை விற்றுக் கொடுத்து, போகிறபோது கூடுதல்
பணத்தையும் அவரிடம் திணித்து அனுப்புவது, மலேசியத் தமிழ் இலக்கியத்தின்
அவலத்தை மட்டுமே புலப்படுத்துகிறது.
இதுவும் ஒரு வகையான சுரண்டல்தான் இலக்கியச் சுரண்டல்! இதுவும் ஒருவகையான
ஏகாதிபத்தியம்தான். எழுத்து ஏகாதிபத்தியம்! யார் வேண்டுமானாலும், யாரை
வேண்டுமானாலும், யாரையும் அழைத்து, இலக்கிய மழையையும் இடியையும்
மின்னலையும் புயலையும் ஏன் சுனாமியையும் ஏற்படுத்த முற்படலாம். வெகுஜன
இலக்கியத்தின் நோக்கமும் வரையறையும் பணம்தான் என்றாகிவிட்ட பிறகு.
தீவிர - தூய கலைச்சிந்தனை கொண்ட சமூகமும் சிறுபான்மைதான் என்றாலும்,
பெரும்பான்மை மக்களை மலிவாக நினைத்து, விலை பேசுவதை அது ஒரு போதும்
விரும்பாது. உயர்ந்தவற்றை மதித்து, அங்கீகரிக்க தெரியாத இந்த குருட்டு
உலகின் இன்றைய தேவை கருவாட்டுச் சந்தையில் ரோஜா விற்கும் சூப்பர் மேன்களை
அல்லர்; ரோஜா சந்தையில் ரோஜா விற்கும் சராசரி மனிதர்கள்தான். தேடிப்
பாருங்கள் இந்நாட்டிலும் நிறையவே இருக்கிறார்கள்.
|
|