|
மீண்டும் அகம். மீண்டும் இளைஞர்கள் கூட்டம். இளஞ்செழியன்
ஏற்பாடு செய்திருந்த இக்கூட்டத்தில் இளைஞர்களுக்கு உற்சாகம் ஊட்டும்
வகையில் கலந்துகொண்டார் டாக்டர் சண்முக சிவா.
எந்த வகையான திட்டமிடுதலுமின்றி ஆரம்பப் பேச்சே, கேலிச் சித்திரங்களைப்
பற்றிக் கொண்டது. ஓவியர் சந்துருவின் ஓவியங்களைப் பற்றிப் பேசிய டாக்டர்
சண்முக சிவா, அவர் கேலிச் சித்திரத்திலும் காட்ட வேண்டிய கவனத்தைப் பற்றி
எடுத்துரைத்தார். “கேலிச் சித்திரம், நிறுவப்பட்ட உண்மையை மறுக்கும் போது
பிறக்கிறது. சர்க்கஸில் கூட மேடையில் தோன்றும் கோமாளி பல வகையான
சாகசங்களைச் செய்ய முயன்று கீழே தொப்பென்று விழுகிறான். இறுதியில்
அச்சாகசக் குழுவின் மிக உயர்ந்த திறனையெல்லாம் அவன் எளிதாக
செயல்படுத்திவிட்டு செல்கிறான். கேலிச் சித்திரம் என்பது ஒரு சமுதாயத்தின்
எண்ணத்தைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். கேலிச் சித்திரம்
வரைபவர்களுக்கு மிகப் பெரிய சுதந்திரம் உண்டு. அதுபோல மிகப் பெரிய கடமையும்
அவர்களுக்குண்டு.”
இம்முறை கவிதைகளைப் பற்றி அதிகம் பேசப்பட்டது. ஆத்மாநாமின் `கடவுளைக்
கண்டேன்’ என்ற கவிதையில் எழுந்துள்ள `கடவுள்’ எனும் படிமத்திற்கான
விளக்கங்கள் கோரப்பட்டது. டாக்டர் சண்முக சிவா “அறிவியலில் கூறப்படும் ஒரு
சொல் மிக நுட்பமான ஆதாரங்கள் உள்ள அர்த்தங்களைக் கொண்டிருக்கும். ஆனால்,
கவித்துவ வெளிப்பாட்டில் எழுந்துள்ள கடவுள் என்று குறிப்பிடுவது எந்தக்
கடவுளை?, அவர் சொன்ன கடவுள் யார்?, நான் நம்பியுள்ள கடவுளையோ நீங்கள் நம்பி
உள்ள கடவுளையோ இக்கவிதையில் புகுத்த முடியாது. அவர் கடவுள் என்று நம்பிய...
அல்லது அதற்கு நிகரான ஒன்று அவருக்குத் தரிசனம் கொடுத்திருக்கிறது.”
டாக்டர் சண்முக சிவாவின் விளக்கத்திற்குப்பின் ஒரு சிறிய மௌனம் நிலவியது.
தொடர்ந்து சுந்தர ராமசாமி(சு.ரா)யின் கவிதைக் குறித்தான பார்வையை டாக்டர்
சண்முக சிவா பகிர்ந்து கொண்டார். “கவிதை ஒவ்வொருவருக்கும் தனி அல்லது புது
அர்த்தங்களைத் தருகிறது. அவரவர் அனுபவம், சிந்தனை, வாசிப்பு ஆகியவற்றின்
அடிப்படையில் அமைகிறது. இக்கருத்தை முன் நிறுத்தும் வகையில் சு.ரா
சொல்கிறார், “ஒரு படைப்பை வரையறுத்துப் பேசுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை.
படைப்பாளிக்கு ஒரு படைப்பை உருவாக்க முழு சுதந்திரம் உண்டும். அதுபோல
அப்படைப்பை மறுப்பதற்கும் ஏற்றுக்கொள்வதற்கும் வாசகனுக்கு முழு சுதந்திரம்
உண்டு. நல்ல ஆரோக்கியமான இலக்கியச் சூழலுக்கு இவை இரண்டும்
தேவையாகப்படுகிறது.”
“இந்தச் சுதந்திரம்தான் மரபுக்கவிதைகளில் கிடைக்காமல் போகிறது. ஏற்கனவே
இருக்கின்ற ஒரு சட்டத்திற்குள் கவிதை புனைய வேண்டும் என்பது மிகப்பெரிய
வன்முறையாகப்படுகிறது” என்றார் மஹாத்மன்.
ஏறக்குறைய படைப்பாளனின் சுதந்திரமும் வாசகனின் சுதந்திரம் பற்றி அகம்
கூட்டத்தில் கலந்துரையாடப் பட்டது. தொடர்ந்து, தனது படைப்பு அனுபவத்தைப்
பற்றி பேசிய கி.இ.உதயா “காலத்திற்கேற்ப எனது படைப்பு மனம் மாறுகிறது.
ஆரம்பத்தில் காதல் கவிதைகளையும் பிறகு தத்துவங்களையும் இன்று வாழ்வின்
அனுபவங்களையும் பதிவு செய்துக் கொண்டிருக்கிறேன்” என்றார்.
தனது கவிதை மனதைப் பற்றி பேசிய ஜீவன், “இதுவரையில் என் வாழ்வில்
நிகழ்ந்துள்ள மிக நுட்பமான அனுபவங்களை ஒரு கவிதை தன் வரிகளின் மூலம்
வெளிப்படுத்தி இருந்தால் அது என்னை பிரமிக்க வைக்கிறது. அது என் மனதில்
பதிந்து விடுகிறது”.
தொடர்ந்து பேசிய மஹாத்மன், “எது என்னை உயிர்ப்பிக்கச் செய்கிறதோ அதுவே நல்ல
கவிதை என நான் நம்புகிறேன். பாரதியின் `அக்கினிக் குஞ்சு’ என்ற வரியுள்ள
கவிதையும் `நல்லதோர் வீணை செய்தே’ என்ற கவிதையும் சோர்ந்திருக்கும் என்னை
மீண்டும் மீண்டும் தட்டி எழுப்புகிறது.”
இடையில் குறுக்கிட்ட ம.நவீன், “ஒருவனுக்கு தன்முனைப்பு ஏற்படுத்துவதையும்
அவன் வாழ்வில் மேன்மையடைய உதவுவதை மட்டுமே கவிதை என நம்பிக்
கொண்டிருப்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்னைப் பொறுத்தவரை அறிவுரை
சொல்வது மட்டுமே கவிதை இல்லை என நம்புகிறேன்.” இதற்கு பதில் கூறும்
வகையில், டாக்டர் சண்முக சிவா, “பலர் அலங்கார வார்த்தைகளுடன் உலகுக்கு நீதி
சொல்வது ஒன்றே கவிதை என நம்புகின்றனர். நாம் அதைப் பற்றி சிந்திக்க
வேண்டியதில்லை. அதுபோன்ற அலங்கார வகையான சிந்தனைகள் நம்மை என்றுமே
வளர்க்காது.”
“ஒரு சிலர், பாரதிக்குப் பிறகு நாங்கள் யாரையுமே கவிஞர்களாக ஏற்றுக்
கொள்வதில்லை என்கிறார்களே”, என்றார் ஜீவன். “அவர்களால் பாரதிக்குப் பிறகு
வந்த கவிஞர்களைப் புரிந்து கொள்ளமுடியவில்லை அல்லது அவர்கள் வாசிக்கவே
முயலவில்லை என்பதுதான் உண்மை. என்னைப் பொறுத்த வரையில் இதுவரையில் நான்
அனுபவிக்காத எண்ணியும் பார்க்காத ஓர் உணர்வு என்னை தீண்டினால், அந்தக்
கவிதை மிகவும் இரசிக்கும்படி செய்கிறது”, என்றார் சந்துரு.
“ஒரு படைப்பை உருவாக்குவதற்கு அனுபவங்கள் மிக முக்கியம். வண்ணதாசன்,
ஜெயகாந்தன் போன்றோர் சந்தித்த, பார்த்த அனுபவங்கள் அதிகம். அவர்கள்
வாழ்க்கை மிகவும் அடர்த்தியானது. அதன் மூலமே அவர்கள் நாவல் எழுதுவதற்கும்
தகுதியானவர்களாகிறார்கள். என் போன்றோர் வாழ்க்கை அப்படியானதல்ல”, என்றார்
டாக்டர் சண்முக சிவா.
தொடர்ந்து பேசிய ம.நவீன், “ஒரு கட்டுரையில் ஜெயமோகன், `ஒருவன் தன் வாழ்வு
முழுவதையும் சாகசங்கள் நிறைந்ததாக மாற்றினாலும் அவனால் இவ்வுலகின்
எல்லையற்ற அனுபவங்களின் முழுமையைப் பெற முடியாது. இவ்வனுபவங்களைப் பெற
படைப்பு நமக்கு உதவி புரிகிறது’ என்கிறார்.”
“நீங்கள் சொல்வது போல ஒரு படைப்பாளி இலக்கிய படைப்புகளை மட்டுமே படிப்பவனாக
இருக்க கூடாது. மாறாக, பெரியாரிசம், மார்க்ஸிசம், பெண்ணியம் போன்றவற்றையும்
அறிந்திருக்க வேண்டும். குறிப்பாக, மார்க்ஸின் கருத்துகள் மூலம் பல
இயக்கங்களின் செயல்பாடுகள் பணம் சம்பாதிக்கும் நோக்கத்திலேயே நடைபெறுவதை
அறிய முடியும்”, என்றார் டாக்டர் சண்முக சிவா.
இம்மாதத்தின் கதையாக கி.ராஜநாராயணனின் `கதவு’ கதை வாசிக்கப்பட்டது. அக்கதை
தொடர்பாக கலந்துரையாடலும் நடைபெற்றது. அதே போல் மஹாத்மனின் `மதம்
பிடித்தது’ என்ற கதையும் பாராட்டு பெற்றது. அக்கதையின் மொழி நடை
மலேசியாவைப் பொறுத்தவரை மிகப் புதிது என்று டாக்டர் சண்முகசிவா கூறினார்.
அக்கதையை ஒட்டிப் பேசிய ம.நவீன் “நினைக்கும் எல்லாவற்றையும் சொல்லும்
மொழித்திறன் மஹாத்மனுக்கு வாய்த்திருக்கிறது. பல இடங்களில் கவித்துவம்
ததும்பும் வரிகளும் உண்டு” என்றார். அடுத்த சந்திப்பில் அக்கதை பற்றி
ஆழமாகப் பேசலாம் எனும் முடிவோடு விடைப்பெற்றோம்.
|
|