வல்லினத்தில் தேடுதல்

எழுத்துரு உதவி / Tamil Font Help 

 இதழ் 1
ஜூன் 2007
முகப்பு  |  உள்ளடக்கம்

தொடர்

 

ஒரு மண்ணின் கதை:
செம்புழுதி மழைச்சாரலில் கரைந்துருகும் காலம் - 1

சீ. முத்துசாமி

 

       
 

அலாவுதீன் முனியாண்டியும் அற்புதப் பாடல்களும்

இப்போதெல்லாம், போகும் வழி எங்கும் தார் பூச்சில் பளபளப்புடன் மின்னுகின்றன நவீன சாலைகள். அதனைப் பயன்படுத்தியே நமது அனைத்துப் பயணங்களும் சொகுசாக அமைகின்றன. வட கோடியிலிருந்து தென் கோடியிலிருக்கும் சிங்கப்பூரை சில மணி நேரத்தில் அடைந்துவிட முடிகிறது. முன்பு போல் ஒரு நாள் பயணம் இல்லை.

அதற்கென அவரவர் வசதிக்கு ஏற்றாற்போல வாகனங்களைத் தேர்ந்தெடுக்கிறோம். அதில் இருக்கும் சொகுசு அம்சங்களை மிகுந்த அக்கறையோடு கேட்டறிகிறோம். கூடுதல் சொகுசு என்பது சமூகத்தின் பார்வையில் நம்மை மேல் நோக்கி நகர்த்தும் ஒரு கருவி என்ற பிரக்ஞையுடனேயே இத்தேர்வைச் செய்கிறோம்.

நமது இத்தகைய அபிலாசைகளைக் கணக்கில் கொண்டே, இன்றைய நவீன வாகனங்கள் தயாரிக்கப்படுகின்றன. பயனீட்டாளர்களைத் தங்கள் பக்கம் ஈர்க்க வாகன தயாரிப்பு நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. அதற்கேற்ப, பயணம் மேலும் சுகப்பட இன்றைய வாகனங்களில் பல்வேறு சாதனங்கள் பொருத்தப்படுகின்றன. குறிப்பாக, மேடு பள்ளங்களைக் கடக்கும் பொழுதுகளில் வாகனங்களில் ஏற்படும் அதிர்வுகளைக் குறைக்க டயர்களில் பிணைக்கப்படுகின்றன மேம்படுத்தப்பட்ட அதிநவீன `எப்சோபர்கள்’. வாகனங்களில் ஏற்படும் சின்ன ஆட்டமோ அசைவோ கூட நம்மை மிகவும் துன்புறுத்தி எரிச்சலுற வைக்கிறது.

ஒருவகையில், இந்த எரிச்சல் ஒரு விசித்திரம். அதிலும் தோட்டப்புற சிவந்த புழுதியில் விழுந்து முளைத்து வளர்ந்து மரமாகி காலக் கோலத்தின் விளைவாய், இன்று இடம் பெயர்ந்து வாழும் ஒரு முந்தைய தலைமுறை கூட அதனை ஒரு எரிச்சலாகப், பாவனை மொழியில் பகட்டான தொனியில், `என்ன காடிப்பா வச்சிருக்க? இந்தச் சத்தம் போடுது? இந்த ஆட்டம் ஆடுது?’ என்று கிண்டலடிக்கிறது.

தங்களது வேரடி மண்ணை மறந்து துறந்த மனிதர்களே இன்று அதிகம்.

செக்கச் செவேலென சிவந்த, குண்டும் குழியும் நிரம்பிய செம்மண் சாலைகள். அதில் கடகடத்துக் குலுங்கி ஓடும் லொடலொட பஸ்கள், தோட்டத்து லாரிகள், பஸ்களில் உட்கார்ந்தும், லாரிகளின் பின்புறம் நின்றபடியும், உடல் குலுங்க, காற்றோடு வரும் குளிர்ச்சியும் புழுதியும் முகத்தில் ஏந்தி சந்தோஷமாய் தொடர்ந்த பயணங்கள் எத்தனை?

செம்மண் சாலை என்பது தோட்டப்புற வாழ்வின் ஓர் உறுப்பு. கித்தாமரம், கித்தா பால், ஒட்டுப்பால், ஒட்டுப் பால் சாக்கு, மழை திட்டி, வாளிக்கடை, டபுள் வெட்டு, காண்டா வாளி, சம்பளம் பிளாஞ்சா, பால் கொட்டா என்பது போல். கித்தா காட்டின் மையத்தில் சில நூறு சதுர அடிகளுக்குள், லயங்கள் எனும் வரிசைக் கொட்டில்களுக்குள் முடக்கப்பட்டிருந்த அவர்களின் வாழ்வை, ஓரளவேனும் அதன் எல்லைகளை விஸ்தரித்து, அவர்களுக்கான வெளி உலகத்துடனான குறைந்தபட்ச தொடர்புக்கான ஓர் இணைப்புப் பாலமாய் அது விளங்கியது என்பதே அதன் மகத்துவம். இன்று அதனை விட்டு விலகி தூரச் சென்று, முற்றிலும் வேறொரு சூழலில் தங்களைப் பிணைத்துக் கொண்ட சிலருக்குள்ளேனும், இன்னமும், மிக ஆத்மார்த்தமாய் பொத்தி வைத்துப் பாதுகாக்கப்பட்டு வரும் அந்த வாழ்வு. அது விதைத்துப் போன சுவடுகளில் அடிநாதமாய், அந்தச் செம்மண் புழுதியின் நிறமும் மணமும், நினைவின் அடியாழத்தில் வண்டல் மண்ணாய் நிச்சயம் படிந்து கிடக்கும்.

எனது நினைவிலும் இன்னமும் அதன் செழுமை மாறாமல், சிவந்து நீண்டு கிடக்கிறது, எங்கள் தோட்டத்துச் சடக்கு.

மேட்டுக்குச்சி மாரியம்மன் கோயிலில் தொடங்கி, சர்ரென்று இறங்கும் ஆபீஸ் பள்ளத்தில் இறங்கி மூத்திரக்குண்டி மரத்தின் பக்கமிருக்கும் ஆத்துப் பாலத்தைக் கடந்து கீழ் குச்சி மேட்டில் லாவகமாய் ஏறி பழைய மாரியம்மன் கோயில் முச்சந்தியில் இரட்டைக்கிளை வெடித்து, இடது வாட்டத்தில் அம்மா பங்களா சுடுகாடு இருக்கும் திசை பார்த்து ஓட, பிரதான சடக்கு வலப்பக்கம் நீண்டு ஓடும்.

சுங்கைப்பட்டாணி பட்டணத்தின் பிரதான நில அடையாளங்களில் ஒன்று மணிக்கூண்டு. அங்கிருந்து, வடக்கு நோக்கி ஓடும் பிரதான சாலையில் ஓர் இரண்டு கிலோ மீட்டர் போனால் வலப்பக்கம் தெரியும் அரசாங்க மருத்துவமனை. அதனை ஒட்டி ஒரு நூறு மீட்டர் கடக்க, இந்துக்களின் மயானக்காட்டுக்கு நேர் எதிர்புறமாக ஓடும் ஒரு சாலை.

அந்தச் சாலைக்கு அப்பால், உள்ளடங்கியிருந்த மருத்துவமனை விஸ்தரிக்கப்பட்டு இப்போது சாலையைத் தொடுகிறது. இடது பக்கத்தில் சுமார் இருநூறு மீட்டர் தொலைவில் இருந்த பிணக்கொட்டகை சில அடி தூரத்திற்கு நகர்ந்து வந்திருந்தது. சாலை ஓரத்தில், வரிசைப் பிடித்து நிற்கின்றன மலாய்க்காரர்களின் அங்காடிக் கடைகள். சற்று தள்ளி, ஒரு காலத்தில், கித்தாக் காடாய் இருந்த இடம், காங்கிரிட் காடாகிவிட்டிருந்தது.

அந்த நிலப்பரப்பில், கடந்த காலத்தின் நினைவுகளை இன்னமும் சுமந்து அசைபோட்டப்படி தலையாட்டி, பழமையின் ஒரே எஞ்சிய சின்னமாய் கேட்பாரற்று, அதன் முனையில் இன்றும் நிற்கிறது அந்தப் புளியமரம்.

இன்றும் அன்று பார்த்தது போலவே. அடி மரம் சற்றே பருத்து வேர்கள் தடித்துக் கிடந்தன. கிளைகளில் இலைகளின் அடர்த்தி சற்றே குறைந்திருப்பது போல் தோன்றியது. அதன் அடர்ந்த பச்சை சற்றே வெளுத்திருந்தது. நிழலின் பரப்பளவு நிச்சயம் கூடியிருந்தது. முதுமையின் ரேகைகள் எதையும் காணோம். ஆனாலும், பெரிய கிளைகள் ஒன்றிரண்டு முறிந்து கிடந்தன. இன்றும், சீஸன் காலங்களில் கொத்துக் கொத்தாய் காய்த்துக் கிடக்கிறது.

நாங்கள் சிறுவர்களாய் இருந்தபோது, பள்ளி முடிந்து வந்து, ரத்தினம் காடிக்காக காத்திருந்த மரத்தடி அது. கூப்பாடு போட்டு நொண்டி அடித்து ஆட்டம் போட்ட இடம். அங்கிருந்து கூப்பிடும் தொலைவில்தான். ஒரு பத்தாண்டுகள் முன்பு வரை கூட இருந்தது நான்கு டிவிஷன்களுக்குமான தோட்டத்து ஆஸ்பத்திரி. அங்கு வரும் நோயாளிகளும், நோயாளிகளைப் பார்க்க வருவோரும் போவோரும் பஸ்சுக்காக காத்துக் கிடக்கும் இடம் அதுதான். அப்போது, அவர்களுக்கு விருப்பமான பெரிய குவளை ஸ்பெஷல் தேத்தண்ணி போட்டுக் கொடுத்த நொண்டி நாயரின் ஒட்டுக் கடைகூட அதன் நிழலில்தான் இருந்தது.

இப்போது நாயர் கடை இல்லை. தோட்டத்து ஆஸ்பத்திரி இருந்த இடம் புதர்மண்டி வெறிச்சோடிக் கிடக்கிறது. மண் சடக்கு இருந்ததற்கான எந்தவித தடயமும் இப்போது அங்கில்லை.

ஆனால், அது இருந்தவரை, அதன் தொடக்கப் புள்ளி, இந்தப் புளியமரத்தடிதான். இங்கிருந்துதான் நீண்டு வளைந்து, ரப்பர் மரங்களுக்கிடையே ஓடி, யூ.பி, (பின்நாளில், இது ஆறுமுகம் பிள்ளை தோட்டமானது) ரூசா, சென்ட்ரோல், கடைசியாக `பதினாலு’ என்கிற யூ.பி.சிலம்போ டிவிஷன்.

பூமி மழை காணாத வெயில் காலத்தில் சிவந்த புழுதி மண்டிக் கிடக்கும். காலடி போன்ற சிறு சீண்டலுக்கும் புழுதி சுழன்றும் மேலெழும். தோட்டத்து பஸ்சும் லாரியும் வேகமெடுத்து ஓட கேட்க வேண்டாம்? புயல் மையத்தில் சிக்கியது போல் புழுதி சுழன்றடிக்கும். கண்ணுக்கெட்டிய தூரம் வரை புழுதிக் காடாய் தெரியும். அந்த நேரத்தில் நடந்தோ, சைக்கிளை மிதித்தோ சடக்கில் போவோரின் பாடு தர்மசங்கடமாகிவிடும். மூக்கைப் பொத்திக் கொண்டு தீம்பாருக்குள் ஓடிவிட வேண்டும். தவறினால், அந்தப் புழுதி போர்வைக்குள் மறைந்து போவோம்.

தைப்பூச நெருக்கத்தில் வரும் காலம் அது என்று நினைக்கிறேன். ரப்பர்க்காடு இலைகள் பழுத்து உதிர்த்து அம்மணமாய் நிற்கும். வெயில் தங்குதடை இல்லாமல் மரக்கிளைகளைக் கடந்து தரை தட்டும். உதிர்ந்த இலைகள் காய்ந்து தரையில் சருகுகளாய் மெத்தை விரித்திருக்கும். கால் வைக்க சரசரக்கும். சருகுகள் சுலபமாய் தீ பிடிக்கும். உடனே கவனித்து அணைக்காமல் போனால், பல மரங்கள் வெந்து கருகிக் கட்டையாகிப் போகும். உடனே அணைத்தால் சேதம் குறைச்சலாக இருக்கும். இப்படி பலமுறை நடந்துள்ளது.

அப்போதெல்லாம், வெளிக்காட்டு ஆட்களை வைத்து சேதமுற்ற மரங்களுக்குச் சிகிச்சை அளித்து காப்பாற்ற முயற்சி நடக்கும். சுண்ணாம்புக் கரைச்சல் போன்ற ஒருவகை வெள்ளைத் திரவத்தைத் தீக்காயம் பட்ட மரங்களுக்குப் பூசுவார்கள் வெளிக்காட்டு ஆட்கள். பத்து நாட்களில் பச்சைத் துளிர்கள் தெரிய வேண்டும். இல்லையெனில், அதனைக் காப்பாற்ற மேற்கொண்ட முயற்சி தோற்றுவிட்டது என்று அர்த்தப்படும். காய்ந்த விறகாக வீட்டுக்குப் போகும்.

அதைத் தடுக்க ஒரு வழி தோட்ட நிர்வாகங்களால் வழக்கமாய் கடைப்பிடிக்கப்பட்டது. வெயில் காலம் முடிந்து கொட்டிய இலைகள் துளிர்ந்து கித்தாக்காடு மீண்டும் பசுமை காடாக மாறும் வரை தோட்ட நிர்வாகம் அதனை அமுலில் வைத்திருக்கும். பால்வெட்டு முடிந்து அந்தி வேலைகளுக்குப் போகும் ஆண்கள், வெயில் காலம் முடியும் வரை நெருப்பு ஜாகாவுக்கு அனுப்பப்படுவார்கள். மரங்களை அணைந்து நிற்கும் சருகுகளைக் கூட்டி அப்புறப்படுத்துவதும் தற்செயலாய் மூளும் தீயைப் பரவாமல் தடுப்பதுமே அவர்களுக்கு இடப்பட்ட வேலையாக இருக்கும். அவர்களின் கண்களையும் ஏமாற்றி சமயங்களில் தீ பெரிதாய் வளர்ந்து விடுவதும் உண்டு. அப்போது உதவிக்கு ஆள் சேர்க்க குச்சிக்காட்டுக்கு ஆள் ஓடும். குச்சிக்காடு பரபரத்து, `டோ ய் பத்தாம் நம்பர் பொறங்கான் தீம்பாருல நெருப்பு புடிச்சிருச்சான்டா..... கௌம்புங்கடா டோ ய்...’ என்று குரல் கேட்கும். கையில் கிடந்ததைத் தூக்கிக் கொண்டு ஓடும். அதில் துடைப்பக்கட்டை சகிதம் அரிசி சாக்கு, பால் வாளி எல்லாம் இருக்கும்.

சருகுகள் நிறைந்த கித்தாக்காடு இன்னொரு விதத்திலும் ஆபத்தானதாக இருந்தது.

ஊலகுப்பான் பாம்பு என்கிற ரூபத்தில் இருந்தது அது. இரண்டு சாணுக்குள் அடங்கிவிடும் உடல். தட்டையான தலை. சருகோடு ஒத்துப்போகிற ஒருவகை ரோசாப்பூ தோலின் நிறம். அதுவே அதன் சாதக நிலை. எதிராளியின் கண்களில் மண்ணைத் தூவ அது போதுமானதாக இருந்தது. பொழுது போய் வெளிக்குப் போக யாராவது ஒருத்தர் வந்து சிலுவாரைக் கழட்டி உட்காருவார். அவசரத்தில் பாம்பு பயம் பறந்திருக்கும். இப்படி, வருடத்தில் ஒருவராவது ஊலகுப்பான் கோபத்திற்கு ஆளாவதுண்டு.

சீறிப் பாய்ந்து குறிபார்த்து சூத்தாமட்டையில் போட்டு விடும். அதிலும் முட்டையிட்டு அடைகாக்கும் பெட்டைப் பாம்பாக இருந்தால் சீற்றம் கூடுதலாய் இருக்கும். பற்களும் ஆழ இறங்கி விஷத்தைத் தாராளமாய் ரத்த ஓட்டத்தில் பாய்ச்சியிருக்கும். போட்ட வேகத்தில், `சிவனே’ என்று தலையைச் சுருட்டி வைத்து அப்பாவி போல் அது படுத்துவிடும் அழகே அழகு. உயிருக்குப் பயந்து வாலை சுருட்டிக் கொண்டு தலைதெறிக்க ஓடுவதெல்லாம் கிடையாது.

அந்தச் சடக்கில்தான், கடிபட்டவனையும் கடித்த பாம்பையும் அடித்துக் கொன்று கயிற்றில் சுருக்கும் போட்டு லாரியில் தூக்கிப் போட்டு கொண்டு புழுதி பறக்க, பத்து பதினைந்து மைலுக்கு அப்பால் இருக்கும் தோட்டத்து ஆஸ்பத்திரிக்கு ஓடுவார்கள். ஆஸ்பத்திரி வாசலில் போய் நிற்கும் நேரம் சூத்தாமட்டை `பொறபொன்’னு வீங்கியிருக்கும். பத்து நாள் படுத்துக் கிடந்து வரவேண்டும்.

அதற்கு பகல் பொழுதில் கண் தெரியாது என்று சொன்னது இரண்டு வீடுகள் தள்ளியிருந்த பெரியான்தான்.

அவர் ஒண்டிக் கட்டை. என் நினைவுக்கு எட்டிய வரை, யாரோ அவரது சொந்தமென்று சொல்லிக் கொண்டு ஒரு நாள் வீட்டு வாசலில் வந்து நின்றவனை நம்பி கப்பலேறி ஊர் போகும் வரை அப்படிதான் இருந்தார். அவருக்குத் துணையாக அவரோடு இருந்தவர் அலாவுதீன் முனியாண்டி.

நன்றாக நினைவிருக்கிறது. லயத்தில் தொங்கல் வீடு எங்களுடையது. இரண்டு வீடுகள் தள்ளி இருந்தது அவர்களது வீடு. அலாவுதீன் முனியாண்டிக்கு நல்ல குரல் வளம். எப்போதும் ஏதோவொரு பாடலை முணுமுணுத்தப்படியோ சீட்டியடித்தப்படியோ இருப்பார். காலியாள் வீட்டுக்கென சில அங்க அடையாளங்களைச் சொல்வது வழக்கம். தாறுமாறாய் இறைந்து கிடக்கும் பொருட்கள், விளக்குமாற்றின் ஸ்பரிசம் காணாத தரை. அதன் விளைவாக மூக்கைத் துளைக்கும் கவுள் வாடை.

வீட்டுப் புழக்கத்திற்கான பொருட்கள் மிகச் சொற்ப எண்ணிக்கையில் இருந்த காலம் அது. பிள்ளைக் குட்டிகள் நிறைந்த வீடுகளில் கூட விரல் விட்டு எண்ணி விடும் அளவே புழக்கத்திற்கான பொருட்கள் இருக்கும். எல்லாமே அடிப்படைத் தேவைகளைக் கூட ஓரளவே பூர்த்திச் செய்யும் தகுதி கொண்டவை.

வாசலில் ஒரு நீண்ட வாங்கு. இன்றைய கணக்கில் அதுதான் அன்றைய சோபாசெட். ஓய்வெடுக்க. பொழுது போய் விளக்கு வைத்து உட்கார்ந்து கதை பேச. படுக்க கூரைப் பாய்கள்; பஞ்சுத் தலையாணைகள். தரையில்தான் படுக்கை. சில வீடுகளில் மட்டும் கயிற்றுக் கட்டில் இருக்கும். அது வீட்டு ஆம்பளைக்கு பிரத்தியேக உரிமை. இரவு நேரத்து இருளைப் போக்க மண்ணெண்ணெய் விளக்கு, அரிக்கேன் விளக்கு. தண்டல் வீடுகளில் மட்டும், அவர்களின் அந்தஸ்தைப் பறைசாற்றும் கேஸ்லைட் விளக்குகள். அடுப்பாங்கரையில், மண்சட்டிகள். மங்குகள். ஆணியில் வரிசையாய் தொங்கும் குவளைகள் சில. குடிக்கும் நீர் ஊற்றி வைக்கும் மண் தக்கர். அடுப்பை பற்ற வைக்க உதவும் கோட்டுப் பால் கொஞ்சம். எரிய அடம்பிடிக்கும் பச்சை விறகை ஊதி எரிய வைக்க, ஊதாங்கோல் ஒன்று. வேலைக்குப் பயன்படும் மரம் சீவும் கத்தி, தீட்டுக்கல், வாளி, காண்டா, வெளிக்காட்டு வேலையாளாக இருந்தால், மம்மட்டி, முள், தாசா கத்தி, வெட்டுக் கத்தி.

எல்லா வீடுகளிலும் கட்டாயம் இருக்கும் இன்னொரு பொருள் மணக்கட்டை. அரையடி உயரத்திற்கு மேல் இருக்காது. குத்துக்கால் போட்டுதான் உட்கார வேண்டும் அதில். இன்றைய கணக்கில் அது ஒரு சின்னஞ்சிறு நாற்காலி. மழை விளாசி ஓய்ந்த ஒரு மாலைப் பொழுதில், இருள் கவிய காத்திருந்து, குசினிப் பின்னால் அம்மா பதமாய் வளாவி வைத்த சுடுநீரை, ஒவ்வொரு குவளையாய் உடம்பில் ஊற்றிய போது, சொர்க்கம் தெரிந்தது உண்மைதான். சுடுநீர் குளியலுக்கு இணையாய் இருந்தது விறகடுப்பின் முன்னால் உட்கார்ந்து உள்ளங்கைகளுக்குச் சூடு ஏற்றுவது.

மனைக்கட்டை தவிர எல்லா வீடுகளிலும் உரல் ஒன்றும் நிச்சயமாய் இருக்கும். இப்போது வீடுகளில் இருக்கும் கிரைண்டருக்கு ஒப்பானது அது. தோசைக்கு, இட்லிக்கு, புட்டுக்கு மாவு இடிப்பது; காய்ந்த மிளகாயை வறுத்துப் போட்டு உலக்கையால் இடித்து பொடியாக்குவது எல்லாம் அதில்தான்.

உரலுக்கு நிகராக இருந்த இன்னொரு பொருள் அம்மி. கறி வைக்கத் தேவையான மசாலைப் பொருட்களை நைய அரைக்க உதவியது. மேல் பாகத்தில் முகத்தில் அம்மை போட்டு விழுந்த சிறு சிறு குகேள் மாதிரி. அரைப்பதற்கு உருளைக் குளவி ஒன்று. மாலை வேளைகளில் குசினிப் பக்கம் பெண்கள் ஒரு காலை நீட்டியும் இன்னொரு காலை மடக்கியும் போட்டு நெருக்கி உட்கார்ந்து இரண்டு கைகளாலும் குளவியைப் பிடித்து தண்ரில் ஊற வைத்த காய்ந்த மிளகாயை சர்....சர்ரென்று அரைக்கும் ஓசை ஒரு சங்கீதம். அதிலும் கல்யாணமாகாத குமரிகள் வாலிப முறுக்கோடு வளையல்கள் குலுங்க அரைக்கும் போது எழும் ஓசையே அலாதி.

நாளடையில் அம்மி தேய்ந்து, குகேள் தூர்ந்து போவதுண்டு. அதனைச் சீர் செய்ய வேண்டும். இல்லையெனில் அரைபடும் மிளகாய் திப்பித் திப்பியாய் வரும். நன்றாக நினைவிருக்கிறது. மாதம் ஒருமுறை நல்ல பிற்பகல் வெயிலில் குச்சிக்காட்டில் அந்தக் குரல் கேட்கும். `அம்மி கொத்தலையோ.... அம்மி...’

குள்ளமாய், நான்கடி உயரத்தில் வந்து வாசலில் நின்று, குரல் கொடுப்பவரின் தொழிலுக்கான பொருட்கள் இரண்டுதான். கையிலிருக்கும் சுருக்குப் பையில் ஓர் உளி, ஒரு சிறு சுத்தியல். அவர் நிஜப் பெயர் இன்னதென்று எவருக்கும் தெரியாது. `அம்மி கொத்தரவரு’ என்பதே அவருக்குரிய பெயராக நிலைத்துப் போனது. காலை நீட்டிப் போட்டு அம்மிக்கு எதிரில் உட்கார்ந்து ஒரு கையால் உளியை லாவகமாய் நகர்த்தியப்படி சுத்தியலால் அதன் தட்டையான தலையில் தட்டியபடி நகரும்போது எழும் அந்த போன ஒலிக்கூறுகளில் முக்கியமான ஒன்று.

பெரியான், அலாவுதீன் முனியாண்டி இருவருமே காலியாட்கள், காலியாள் வீடு இது என்கிற வார்த்தையைப் பொய்யாக்கிய புண்ணியவான்கள் அவர்கள். அந்த வியாக்கியானத்துள் விடாப்பிடியாய் வர மறுத்தவர்கள். எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தி இருக்கும். எப்போது தலையை உள் நுழைத்து பார்த்தாலும் எதுவும் இடம் மாறி இருக்காது. சின்ன சாப்பாட்டு மேசை. அதன் மேல் இரண்டு அலுமினிய மங்குகள். நான்கு குவளைகள். ஒரு போஜனக் கொறடா ஊறுகாய் பாட்டில்.

மேசைக்கு நேர் எதிர் சுவரில் சாமி மேடை. சதுர வடிவிலான பால் பெட்டிதான் சாமி மேடை. தோட்டத்து வங்குசா கடையில் கடைக்காரரிடம் முன்கூட்டியே (அதற்கு குச்சிக்காட்டு ஜனங்களிடம் பெரிய கிராக்கி இருந்தது... கோகேள் முட்டையிட்டு அடைபடுக்க ரொம்ப வசதி) சொல்லி வைத்து வாங்கி வந்திருந்தார் பெரியான். நீள வாக்கில் வைத்து, சுவரில் ஆணி அடித்துப் பதித்து உருவாக்கிய மேடை. நடுவாய் முருகர் படம். தைப்பூசத்திற்கு டவுனுக்குப் போன சமயம் ஒட்டுக்கடை முத்தையா கடையில் வரிசையாய் தொங்கிய படங்களிலிருந்து நீண்ட நேரம் தேடி, மனசுக்குப் பிடித்ததாய் இது ஒன்றுதான் இருந்ததாய் பெரியான் சொன்னார். மேடையில் காமாட்சி விளக்கு. திருநீறு தட்டு. அலாவுதீன் முனியாண்டி சாமி கும்பிட்டு பார்த்ததில்லை. வழியில் யதேச்சையாய் சந்திக்கப் பழக்கப்பட்ட நபரைப் பார்ப்பது போல் நின்று நிமிர்ந்து பார்த்து நகர்ந்து போவதோடு சரி.

பெரியான் ஒரு மீன் பிடி பிரியர். மழை அடித்து விட்டதும் தூண்டிலோடு பெரிய ஆத்துக்குப் புறப்பட்டுவிடுவார். அந்தத் தூண்டில் வழக்கமாய் உத்திரத்து நடுத்தூணில் தொங்கும். மூங்கில் கழியின் முனையில் நரம்புக் கட்டி தூண்டில் முள் பிணைக்கப்பட்டிருக்கும். நீரில் தூண்டிலை விசிறி எறிய அது மிதக்காமல் நீருக்குள் அழுந்த ஏதுவாய் ஈயக் குண்டுகள் தொங்கும் இத்தனையிலும் என்னை ஈர்த்தது, முன் கதவைத் திறந்தவுடன், இடப் பக்க மூலையில் இருந்த அந்த புல்டாக் நாய் வாயைப் பிளந்து குரைக்கும் படம் போட்ட ஒரு கிராமபோன் பெட்டியும் அதன் பக்கமே நாற்காலி மேல் வைக்கப்பட்டிருந்த பெரிய ஒலி பெருக்கி பெட்டியும்தான்.

அந்தக் கிராமபோன் பெட்டியில் சதா ஏதாவது ஒரு ரெகார்டு சுழன்றபடி இருக்கும். பெரும்பாலும் மெல்லிசைத் தாலாட்டும் அற்புதப் பாடல்களாக இருக்கும் அவை. `தேவதாஸ்’ கண்டசாலா.... `கனவிதுதான் நிஜமிதுதான் விதி யார் வெல்லுவார்...? எனை யார் சொல்லுவார்...? என்று தெலுங்குத் தமிழில் பாடி அறிமுகமானது அங்குதான்.

அந்தக் குரலின் சோகம் முதல்முறை என்னைத் தீண்டியது இன்னமும் நினைவிருக்கிறது. மயிர்கால்கள் குத்திட நிலைகுத்திப் போனேன். அவரைப் பின் தொடர்ந்து அறிமுகமானார் ஏ.எம்.ராஜா. அலாவுதீன் முனியாண்டியின் ஆஸ்தான பாடகர் ஏ.எம்.ராஜா குறித்த நிறைய தகவல்களைச் சொல்வார். பின்னாளில் ஏ.எம்.ராஜாவின் பரம விசிறியாக நான் மாறியதற்கு அவரே பொறுப்பு.

வீட்டுச் சுவரில் சாய்ந்து உட்கார்ந்து, ஏ.எம்.ராஜாவின், `சிற்பி செதுக்காத பொற்சிலையே' பாடலில் மூழ்கித் திணறி கண் கலங்கிய அலாவுதீன் முனியாண்டியை, கொஞ்சமேனும் உணர்ச்சி வசப்படாமல் இன்றும் கூட எந்தவொரு கணத்திலும் என்னால் நினைவுகூர முடிவதில்லை.

 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
     
  முகப்பு  |  உள்ளடக்கம்  
     

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768