|
தமிழ்நாட்டு வாசகர்களின் உள்நோக்கிய வாசிப்பையும்
தனித்தீவு மனப்பான்மைமையும் மாற்றும் முயற்சியில் வெளிநாட்டுத் தமிழர்களின்
படைப்புகளைத் தமிழ்நாட்டுப் பதிப்பகங்கள் வெளியிடத் தொடங்கியிருப்பது
முதலில் மகிழ்ச்சிக்குரிய செய்தி. அந்த முயற்சியின் ஒருவெளிப்பாடாக நமது
எழுத்தாளர் சை.பீர்முகம்மதுவின் திசைகள் நோக்கிய பயணம் காலச்சுவடு பதிப்பாக
வெளிவந்திருப்பது எங்களுக்கெல்லாம் களிப்பு ஏற்படுத்தும் நிகழ்ச்சி.
சை.பீர் உற்சாகமான மலேசிய இலக்கியவாதி. மலேசியத் தமிழ் இலக்கிய நிகழ்வுகள்
அனைத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்பவர். அவர் பரபரப்பூட்டும்
இலக்கியவாதியும்கூட. எந்தக் கூட்டத்திலும் அவர் குரல் ஆதரித்து ஒலிக்கும்
அளவுக்கு எதிர்த்தும் ஒலிக்கும். ஆக்கம் ஊட்டுவது ஒரு பக்கம் என்றால் கலகம்
செய்வதும் ஒரு பக்கம். ஆனால், அனைத்துமே மலேசியத் தமிழ் இலக்கியத்தை
முன்னெடுத்துச் செல்லும் ஆர்வத்தில் செய்யப்படுபவை என்பதால், அவர்மீது
கோபப்படுவரைக் காட்டிலும் பாசம் காட்டுபவர்களே அதிகம், நானும் அவர்களில்
ஒருவனே.
திசைகள் நோக்கிய பயணம் அவருடைய பன்முகங்களைக் காட்டும் துண்டு துண்டாகக்
கட்டுரைகள் கொண்ட நூல். அவருடைய இலக்கிய பின்மாலைப் பொழுதில் அவருடைய
நினைவுகளில் ஆதங்கங்களே அதிகம் தங்கியிருக்கும் நிலையில் அவற்றைத் திறந்து
கொட்டிவிடவேண்டும். என்றெழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. ஆகவே இந்தக்
கட்டுரைகள். எதையும் அவர் கவனமாகத் திட்டமிட்டு எழுதவில்லை. பிற்காலத்தில்
இவை ஒரு முக்கியமான தமிழகப் பதிப்பகத்தால் வெளியிடப்படும் என்ற
எதிர்பார்ப்பும் எழுதிய வேளையில் இருந்ததாகத் தெரியவில்லை. மனதில்
அவ்வப்போது எழுந்ததைத் தன் மனதின் மரத்தடியில் தண்ணோடு அமர்ந்து “தே
தாரிக்” அருந்தியவாறு தான் சொல்வதையெல்லாம் மறுபேச்சின்றி “ஓணக்கையாக”
கேட்டுக்கொண்டிருக்கும் மானசீக இலக்கிய நண்பனுக்காக எழுதியிருக்கிறார்.
இதிலும் ஒரு பெரும் நன்மை உண்டு. இப்படி ஒளிவு மறைவு இல்லாமல் பேசுவதில்
அவருடைய இதயம் தெரிகிறது. கோபம் தொனிக்கிறது; பின் வடிகிறது. தனக்கு
இலக்கிய இன்பம் ஊட்டியவர்களின் மேல் பாசம் பொங்குகிறது. தமிழின் பெருமையில்
விம்முகிறது. அதை விகாரப்படுத்துபவர்களைக் கண்டு எரிச்சல் வருகிறது. ஆகவே
வாசகனுக்கு ரசமான அனுபவம்.
இவை அனைத்தும் மண்ணும் மனிதர்களும் நூலில் இருந்த அதே வழுவழுப்பான, சுகமாய்
வாசகனைத் தூக்கிச்செல்லும் நடையில் எழுதியிருக்கிறார்.
முதல் கட்டுரையில் புதுமைப்பித்தன் மலேசியத் தமிழ் நேசன் நாளிதழின் “வருஷ
விசேஷ மலர் (1973)” பற்றி ஒரு குறிப்பு எழுதியிருப்பதை - அது அவ்வளவாக அந்த
மலரைப் பெரிதுபடுத்தாவிட்டாலும் - சை.பீர். கொண்டாடும் விதத்தைப்
பார்க்கும்போது, தழிம்நாட்டின் அங்கீகாரத்துக்காக - அது ஒரு செல்லக்
குட்டாக இருந்தாலும் - மலேசியத் தமிழரகள் எவ்வளவு ஏங்குகிறார்கள் என்பதைக்
காட்டுகிறது. “புதுமைப்பித்தன் வாயால் ஏசப்பட்டோம்” என்பதும் ஒரு பெரிய
விஷயம் என்றே அவர் கருதுகிறார்.
பல கட்டுரைகள் - மேற்சொன்ன புதுமைப்பித்தன் கட்டுரை உட்பட - மலேசிய
வாசகர்களுக்குப் பரவலான இலக்கியத் தகவல்களை அளிப்பதற்காக எழுதப்பட்டவை.
இவற்றுள் “கரடி, புலிக்கறி தின்ற பாரதிதாசன்”, “சித்தர்களும் பித்தர்களும்”
போன்றவை சுவையானவை. கூகி வாதியாங்கோவின் “சிலுவையில் தொங்கும் சாத்தான்”
மிக அரிய கட்டுரை. எனக்கே பல புதிய தகவல்களையும் உணர்வையும் தந்த கட்டுரை.
ஆனால் சை. பீரின் எண்ண ஓட்டம் காற்றில் அடிப்பட்டுப் பறக்கும் சிறகுபோல்
ஓர் ஒழுங்கில்லாமல் வாசகனை இழுத் தடிக்கிறது என்பது உண்மை.
சை.பீர் மலேசியத் தமிழ் இலக்கிய உலகில் ஒவ்வொரு கட்டத்திலும் பின்னிப்
பிணைந்தவராக இருந்தாலும் இப்போது அந்த நிகழ்வுகளைச் சொல்ல வரும்போது அருடைய
நினைவில் விரிசல்கள் கண்டிருப்பதுபோலத்தான் தோன்றுகிறது. கட்டுரைகள்
‘தென்றல்’ இதழில் தொடராக வந்த காலத்திலேயே சிலர் இதனைச்
சுட்டிக்காட்டிருக்கிறார்கள்.
“சுந்தர ராமசாயின் வருகையும் நமது நிலையும்” என்ற கட்டுரையில் இந்தக்
குற்றச்சாட்டுகள் சிலவற்றுக்கு அவர் பதில் கூறுவதுபோல் இருக்கிறது.
“இலக்கியச் சிந்தனை அமைப்பில் தொடர்புடைய ஓரிருவரையாவது கலந்து ஆலோசித்து
உண்மைகளைத் தெளிவுபடுத்திக்கொண்டு அவர் தமது மூலக் கட்டுரையை
எழுதியிருந்தால் பின்னால தம்மை அவர் தற்காத்துக்கொள்ள வேண்டிய நிலை
வந்திருக்காது. பிறர் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை நினைவிலிருந்து எழுதும்போது
அது பிழையில்லாமல் இருக்கவேண்டியதைக் கவனித்துக்கொள்வது எழுத்தாளனின்
பொறுப்புத்தான்.
“ஆளுமைகள்” என்ற வரிசையில் கோ.சாரங்கபாணி, முருகு.சுப்பிரமணியம், ஆதி குமணன்
ஆகியோர் பற்றி அவர் எழுதியிருப்பவை சரி. ஆனால், கொலை செய்யப்பட்ட
தா.கிருஷ்ணன் என்னும் அமைச்சர் பீருக்கு வரவேற்பு கொடுத்ததாலும் அவருடைய
நூல் வெளியீட்டுக்கு ஏற்பாட்டுசெய்து கொடுத்ததாலும் இந்த வரிசையில்
இடம்பெற்றுள்ளது அபத்தமாக இருக்கிறது. தா.கிருஷ்ணன் பீரின் வாழ்க்கையோடு
தொடர்புடையவர் என்பதால் அவருடைய நினைவுக்குறிப்பில் இடம்பெற
வேண்டியவர்தான். ஆனால் “ஆளுமை” என்ற வரிசையில் அவர் நிற்பது பொருத்தமில்லை.
உண்மையில் இந்த வரிசையில் விட்டுப்போன பெயர் கு.அழகிரிசாமி. கு.அ. பற்றி ஒரு
நல்ல கட்டுரையில் சை.பீர். ஏற்கெனவே எழுதியுள்ளார். இலக்கியத்தின்
வளர்ச்சிக்குத்ப் பங்களிப்புப் பற்றிப் பேசத் தகுதியானவர் சை.பீர். ஆனால்
விட்டுவிட்டார்.
சை.பீரின் இலக்கியப் பயணம் ஒரு புறம் இருக்க, அவருக்கு ஞானப் பயணம் ஒன்றும்
இருக்கிறது. ஒரு காலத்தில் ஓஷோவின் நூல்களை அவர் வெறித்தனமாகப் படித்தவர்
என்பது எனக்குத் தெரியும். சூஃபிகள், சித்தர்கள், தத்துவஞானிகள் பற்றி
அறிந்துகொள்வதிலும் அவர்கள் பற்றிப் பேசுவதில்லும் அவர் மிகுந்த ஆர்வம்
கொண்டவர். அந்த ஆர்வம் இந்த நூலிலும் வெளிப்பட்டிருக்கிறது. “நாடு
கடத்திக்கொண்ட புத்தர்”, “ஞானப்பயணம்”, “மரணம் எப்பொழுதும் வரலாம்” என்னும்
கட்டுரையிலும் இவர் ஞானிகளைத் தேடிச் செய்த புறப்பயணமும் ஞானத்தைத் தேடிச்
செய்த அகப்பயணங்களும் சொல்லப்படுகின்றன. வாசகன் தன் சொந்த ஞானப் பயணங்களை
ஓப்பிட்டுப் பார்த்துக்கொண்டு பயன் பெற உதவும் கட்டுரைகள்.
“தமிழுக்குச் செம்மொழி தகுதி” என்ற கட்டுரை, பூரிப்பினிடையே தமிழைப் பற்றி
நிதானமாகச் சிந்திக்கும் கட்டுரை. தமிழின் தொன்மையைப் பெரிதுபடுத்தி அதன்
தொடர்ச்சி பற்றி அலட்டிக்கொள்ளாத சோகத்தையும் அவர் இதில் காட்டுகிறார்.
இவ்வளவு பரந்த, தெளிந்த மனம் உள்ள இலக்கியப் போட்டிகளில் தனக்குப் பரிசுகள்
கிடைபதில்லை என்ற உண்மையைப் பல இடங்களில் “அம்பலப் படுத்தி அதற்கு
நீதிபதிகள் தன்மேல் கொண்ட காழ்ப்புணர்ச்சியே காரணம் என்று கூறிக்கொள்வது
அற்பமாகத் தெரிகிறது. முதலில் சை.பீர் போன்ற ஓர் இலக்கிய ஆளுமையும் “குரு”
போன்ற பெருமையும் உள்ளவர் போட்டிகளில் கலந்து கொள்வதும் பரிசுகளுக்கு
ஆசைப்படுவதும் ஆபத்தம். மலேசியத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடி என
அங்கீகரம் பெற்ற ஒருவருக்கு இளம் மாணவர்கள் கலந்துகொள்ளும் போட்டியில்
பரிசு பெறுவது பெரிய பெருமையா?
போட்டிகளை நிர்வகிப்பதிலும் பரிசு கொடுப்பதிலும் அபத்தங்கள் நிகழ்வது உலகம்
முழுவதும உண்டு. பரிசு பெறாதவர்கள் புளித்த பேச்சுகள் பேசுவதும் எங்கும்
நிகழ்வதுதான். இவற்றையெல்லாம் தவிர்க்க வகேள் இருப்பதாகவும் தெரியவில்லை.
சை.பீர். தன்னை அந்த நிலைக்கு ஏன் ஆளாக்கிக்கொள்ளவேண்டும்? ஆடித் தேற்றவர்
ஆட்டத்தைக் குறைசொல்லக்கூடாது.
நமது மலாய் மொழி எழுத்தாளர்கள் தங்களை வருணித்துக்கொள்ளப் பயன்படுத்தும்
“நெத்திலிமீன்” ஒப்புமை எனக்கு மிகவும் பிடிக்கும். நெத்திலி அளவில்
பெடிசுதான். ஆனாலும் அது முழு மீன். தமிழ் நவீன இலக்கியம் என்னும்
பெருங்கடலில் பெரிய மீன்களுக்கிடையே சுதந்திரமாக நீந்திக் களிக்கும் இந்த
நெத்திலி மீனை எனக்கு மிகவும் பிடிக்கிறது.
|
|