இதழ் 10
அக்டோபர் 2009
  புத்தகப்பார்வை: மஹாத்மன் சிறுகதைகள்
சிவா பெரியண்ணன்
 
     
  பத்தி:

ஒரு மாட்டுத்தலை காதில் சொல்லிப் போன சேதிகள்

சீ. முத்துசாமி

எனக்குத் தெரிந்த மழை
யோகி


மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை; ஓர் இலக்கியப் பார்வை
சு. யுவ‌ராஜ‌ன்


கட்டுரை:

கதையும் நாடகப்பொருளும்
இராம. கண்ணபிரான்

மலைகள் மீதொரு ராட்சத யாளி
ஜெயந்தி சங்கர்


சிறுகதை:

பதிஎழு அறியாப் பழந்தமிழ் மக்கள்
அ.ரெங்கசாமி


மண் மீதும் மலை மீதும் படர்ந்திருந்த நீலங்கள்!
கோ.முனியாண்டி


தொடர் :


பல வேடிக்கை மனிதரைப் போல...3
"தமிழ் எங்கள் ...யிர்"

ம‌.ந‌வீன்


பரதேசியின் நாட்குறிப்புகள் ...3
மஹாத்மன்


எனது நங்கூரங்கள் ...3
இளைய அப்துல்லாஹ்

செம்புழுதி மழைச்சாரலில் கரைந்துருகும் காலம் ...8
சீ. முத்துசாமி


கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...1


ஜி.எஸ். தயாளன்


எம். ரிஷான் ஷெரீப்

ஷிஜூ சிதம்பரம்

புனிதா முனியாண்டி

சேனன்

ரேணுகா


பதிவு:

வல்லினம் இதழ் ஏற்பாட்டில் 'கலை இலக்கிய விழா'

ம. நவீன்


விமர்சனம்:

வல்லினம் கவிதைகள்

ஜாசின் ஏ.தேவராஜன்

வல்லினம் சிறுகதைகள்

சு. யுவ‌ராஜ‌ன்

"வல்லினம்" – ஒரு பார்வை (செப்டம்பர் மாத வல்லினம் இதழ் விமர்சனம்)

கவின் மலர்


புத்தகப்பார்வை:

மஹாத்மன் சிறுகதைகள்

சிவா பெரியண்ணன்


எதிர்வினை:

புத்தர், போதிமரம், சரணம் மற்றும் மரணங்கள்

தர்மினி

     
     
 

ஓர் இலக்கியப்பிரதியை வாசிக்கும் போது, அது ஓயாது வாசகனுடன் தொடர்பிலிருந்து கொண்டே இருக்கிறது. ஒரு நல்ல வாசகன் வாசிப்பின் மூலம், அவ்விலக்கியப்பிரதியுடன் உரையாடல் நிகழ்த்துபவன் என்றே நான் உணர்கிறேன். இங்கே உரையாடல் என நான் குறிப்பிடுவது அகவயமான ஒரு கூறு. ஒரு பிரதியை வாசிக்கும்போது ஏற்படும் கேள்விகள், பிரமிப்புகள், அலட்சியப்படுத்தல்கள், சந்தோஷங்கள், சோக உணர்வுகள் இப்படியாய், அப்பிரதியின் எழுத்தாளனோடு அவ்வாசகன் உரையாடிக் கொண்டிருக்கிறான். சில வேளைகளில் வாசகன் தட்டியதும் சாளரங்கள் திறந்து கொள்ளும் படைப்பானது, மாயப்பாயில் அவனைக் கிடத்தி, எழுத்தாளன் சிருஷ்டித்திருக்கும் தரிசனத்தை எவ்வித தடங்கலும் இல்லாமல் அவனுக்கு கொடுத்து விடுகின்றது. அதே போல், வேறு சில கணங்களில் படைப்பு கதவடைத்து கொள்வது போல் தோன்றுகிறது. வாசகனால் முன்னகர முடிவதில்லை. படைப்பானது காரிருளை போர்த்திக் கொண்டு முன் வீற்றிருப்பதாய் அவ்வமயங்களில் வாசகன் காண்கிறான். காரிருளில் என்ன பார்ப்பது? இருள்தான். பிடிவாதமான வாசகர்கள் அகவயமான இவ்விருட்டிலும், ஏதாவது பிடி கிடைக்குமா என்று துலாவித் துலாவி பார்ப்பவர்கள். எளிதில் தோற்றுப்போகாதவர்கள். நுனிப்புல் மேய்பவர்கள், இந்தப் பழம் புளிக்கும் என்று படைப்பைப் புறக்கணித்து விடுவார்கள். வாசிப்பில் அனுபவம் பெற்றவர்கள் இவ்விரு நிலைகளையும் நிச்சயம் அனுபவித்திருப்பார்கள் என்றே நம்புகிறேன்.

புத்திலக்கியங்களான நாவல், சிறுகதை, புதுக்கவிதை போன்றவை புரிதலும், புரியாத்தன்மையும் கொண்ட கலவையான அனுபவங்களை வாசனுக்கு ஏற்படுத்துவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். வாசகனின் வாழ்வு சார்ந்த பார்வை மற்றும் வாழ்வானுபவங்களைப் பொறுத்தே புரிதலும், புரியாத்தன்மையும் நிகழக்கூடும். புரியாமல் போகும் பட்சத்தில், அல்லது அப்பிரதி ஒரு வாசகனை தன்னுள் நுழைய விடாமல் விரட்டியடிக்கும் பட்சத்தில் வாசகன் மேலும் உழைக்க வேண்டியிருப்பதை அது உணர்த்துகிறது. இங்கே, என் சொந்த அனுபவமாக ஒரு விசயத்தை குறிப்பிடலாம். 2003-ம் ஆண்டுவாக்கில் நண்பர் யுவராஜன் மூலம் சாரு நிவேதிதாவின் 'ஜீரோ டிகிரி' நாவலின் அறிமுகம் எனக்குக் கிடைக்கிறது. படிக்கத் தொடங்குகிறேன். நாவலுக்குள் நுழைவது மிகவும் களைப்புத் தரும் ஒரு செயலாக இருந்தது. அப்புறம் என்ன? இந்தப்பழம் புளிக்கும் கதைதான். ஆனால், ஏறக்குறைய ஐந்து வருடங்கள் கழித்து, அப்படைப்பை மீண்டும் அணுகிய போது சாரளங்களைத் திறந்து கொண்டு அது என்னை சுவீகரித்துக் கொண்டதை உணர முடிந்தது. ஐந்து வருட இடைவெளியில் வாழ்வு என்னில் சில ஓவியங்களைத் தீட்டியிருந்தது, சில பாடல்களை இசைத்திருந்தது, சில நம்பிக்கைகளைத் தகர்த்திருந்தது.

'மஹாத்மன் சிறுகதைகள்' எனும் இந்தத் தொகுப்பில் மொத்தம் பதினொரு கதைகள் இருக்கின்றன. ஆசிரியர் முன்னுரையில் குறிப்பிடுவது போன்று, ஒரு குறுநாவலுக்கான மையச்சரடு இந்தப் பதினொரு கதைகளினூடாக பயணிப்பதை, கதைகளை முழுமையாக ஒருமுறை வாசித்து முடித்தவுடனேயே உணர முடிகின்றது. ஆசிரியர் இதனை உணர்ந்தே செய்திருக்கிறார் என்று நம்புகிறேன். ஒரு சிறுகதைத் தொகுப்பான இந்த நூலில், இவ்வகை உத்தி எந்தளவுக்கு வெற்றி பெறுகிறது என்பதை சக வாசகர்களின் வாசிப்பனுபவத்திற்கே விட்டு விடுகிறேன்.

தொகுப்பிலுள்ள கதைகள் பெரும்பாலும் எழுத்தாளன், தான் வடித்த கதாபாத்திரங்கள் மூலம் வாசகனுடன் நேரிடையாக பேசும் பாணியில் இடம்பெற்றிருப்பதால், இக்கதைகளை புரிந்து கொள்வதற்கு வாசகர்கள் சிரமப்பட மாட்டார்கள் என்றே நம்புகிறேன். ஆனால், இக்கதைகளில் பேசப்படும் விசயங்கள் கண்டிப்பாக வாசகனின் மனதில் அதிர்வலைகளை, கேள்விகளை, வியப்புகளை அளித்தவண்ணமே இருக்கும். என் பார்வையில் இக்கதைகளின் களனும், பாடுபொருளும் மலேசியச் சூழலுக்கு முற்றிலும் புதிதானது. இதை என் குறுகிய வாசிப்பு அனுபவத்தளத்தில் நின்று கொண்டு கூறுகிறேன். மாற்று கருத்துகள் இருக்கலாம்.

உலக இலக்கியங்களை தொடர்ந்து வாசிக்கும் ஒரு வாசகனுக்கு, இக்கதைகள் சலனம் ஏதும் ஏற்படுத்தாமல் போகலாம். ஆனால், நான் கூறுவது ஒரு சராசரி வாசகன். அதுவும் வெகுஜன எழுத்துக்களை அதிகம் வாசிக்கும் ஒருவனுக்கு, இக்கதைகள் பேசும் விளிம்பு நிலை கதாபாத்திரங்களின் போராட்டங்கள் முற்றிலும் புதியதானதும், அதிர்ச்சி தரக்கூடியதுமான வாசிப்பானுபாவத்தைக் கொடுக்க வல்லது.

மலேசிய இலக்கியப் படைப்புகள், உலகத் தமிழ் இலக்கிய ஆர்வலர்களிடையே பெரிதும் பாதிப்பை இதுகாறும் ஏற்படுத்தவில்லை என்று சொன்னால் அது மிகையாகாது. இலங்கை உள்நாட்டு போர் காரணமாக, புலம்பெயர்ந்த தமிழர்களின் வலிகளையும், வேதனைகளையும் பதிவு செய்யும் படைப்புகள் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றன. இந்தியா போன்ற ஏழை - பணக்காரர் இடைவெளி மிகுந்திருக்கும் நாட்டில், அந்த பொருளாதார இடைவெளி ஏற்படுத்தும் வாழ்வியல் சிக்கல்கள், அந்நாட்டு எழுத்தாளர்களின் மூலம் தொடர்ந்து படைப்பாக்கப்பட்டு கவனம் பெற்று வருகின்றன. பெரிய ஜனத்தொகை, குறைந்த வசதிகள், பொருளாதார நெருக்கடி ஏற்படுத்தும் உளவியல் பிரச்னைகள், ஜாதி, மதக் கலவரங்கள், ஜாதியை முன்னிறுத்தி சமூகப் புறக்கணிப்புகள் இப்படியாய் தமிழ்நாட்டு இலக்கியப்படைப்புகளின் களன் பல்வேறு தளங்களில் பயணிப்பதாலேயே அதை வாசிக்கும் உலக வாசகனுக்கு அது தரும் பிரதி இன்பம் (pleasure of text) முக்கியமாய் படுகின்றது. அதனைத் தொடர்ந்து அப்படைப்புகள் விரிவான தளத்திலே விவாதிக்கப்படுகின்றன. அதன் காரணமாக கவனம் பெறும் படைப்புகளாகவும் நிலைக்கின்றன.

மலேசியாவில் அதுபோன்ற நெருக்கடிகள் நமக்கு இல்லையா? மலேசியாவில் நல்ல இலக்கியங்கள் வருவதற்கான வாய்ப்பு குறைவு என்று தமிழ்நாட்டு எழுத்தாளர் ஒருவர் சொன்னதாக ஞாபகம். எழுத்தாளர் பெயர் நினைவில் இல்லை. அதற்கு அவர் கூறிய காரணம், மலேசியாவில் இந்தியர்கள் (பெரும்பான்மை தமிழர்கள்) சொகுசான வாழ்க்கை வாழ்கிறோமாம். இந்த கூற்று எந்தளவுக்கு உண்மை என்பதை நாம் பரிசீலனை செய்து பார்ப்பது அவசியம். 25 நவம்பர் 2007 பேரணி நிகழ்விற்கு பின்பு, உலகத் தமிழர்களிடையே மலேசியத் தமிழர்கள் குறித்தான சிந்தனையில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது என்பதை நாம் அறிய முடிகின்றது. ஆனால், அதற்கு முன்பு, பெரும்பாலும் நாம் இங்கே சொகுசாக இருக்கிறோம் என்ற எண்ணமே அவர்களிடம் மேலோங்கி இருந்ததை, அந்த எழுத்தாளரின் கூற்று பிரதிபலிக்கின்றது. ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை?

மலேசியத் தமிழர்களிடமும் வாழ்வுசாற் நெருக்கடிகள் காலங்காலமாக மிகுந்து இருந்தன; இருக்கின்றன; இனி வரப்போகும் காலத்திலும் இருக்கும். ஆனால் சிக்கல் என்னவென்றால், அந்நெருக்கடிகள் நம் படைப்புகளில், கவனம் பெறும் அளவிற்கு வெளிப்படவில்லை என்பதே. மலேசியப் படைப்புக்களாக இதுகாறும் வெளிப்பட்டிருப்பவைகளை நாம் மூன்று பிரிவுகளாக பிரித்துக் கொள்ள முடியும். சுதந்திரத்திற்கு முன்பான போராட்ட வாழ்வை பேசுபவை; சுதந்திரத்திற்குப் பின்பான மலேசியத் தோட்டப்புறம் சார்ந்த சிக்கல்களை மையமிட்டு எழுதப்பட்டவை; 1990-ம் ஆண்டுகளின் பிற்பகுதியில் தோட்டப்புறங்களில் இரப்பருக்கு பதிலாக செம்பனை பயிரிடப்பட்டு, அதனால் வேலையிழந்து, வாழ்விடம் இழந்து பட்டணப்புறங்களில் புறம்போக்கு பகுதிகளில் குடியேறி, இந்தியர்கள் அனுபவித்த, அனுபவிக்கும் அக, புற சிக்கல்களை பதிவாக்குபவை. இவற்றிற்கு இடையே சமகால வாழ்வியல் பிரச்னைகளை மையமிட்டு ஒவ்வொரு காலக்கட்டத்திலும் படைப்புகள் வந்துள்ளன. உதாரணமாக, மலேசியாவில் வங்காளதேச தொழிலாளர்களுடனான தமிழ் பெண்களின் தொடர்பு. ஒரு காலத்தில் இது ஒரு பெரும் சமூகச் சிக்கலாக நம் நாட்டுப் படைப்புகளில் பிரதிபலித்து வந்தது. மேலும், பட்டணம்சாற் வாழ்வு மற்றும் அதன் நெருக்கடிகள் குறித்தும் சில படைப்புகள் வந்திருக்கின்றன. ஆனால், உலகத் தமிழ் வாசகர்கள் நம்மை அங்கீகரிக்க, கொண்டாட இந்த விசயங்கள் மட்டுமே போதுமானதாக இல்லை என்பதே நிதர்சனம்.

மேற்கூறியவற்றைத் தவிர்த்து, வாழ்வு தனக்களித்த பரந்துபட்ட அனுபவங்களை படைப்பாக்குவதில் மலேசிய எழுத்தாளர்களுக்கு என்னதான் சிக்கல் இருக்க முடியும் என்று யோசித்துப் பார்க்கையில் எனக்குச் சில விசயங்கள் தோன்றுகின்றன. அவற்றுள் முக்கியமானதாக நான் கருதுவது, பொதுவில் மலேசிய எழுத்தாளர்கள் பலரும் ஒரு குறிப்பிட்ட எல்லையை வகுத்துக் கொண்டு, அந்த வரையறையைச் சார்ந்தே படைப்புகளை படைக்கின்றனர். இதற்கு முக்கியக் காரணம் சமூகம் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அளித்திருக்கும் முகத்திரை, அதன் காரணமாக ஏற்படும் சமூக அந்தஸ்த்து. மலேசியத் தமிழ் எழுத்தாளர்களில் பெரும்பாலோர் ஒருபோதும் இந்தச் சமூக அந்தஸ்த்தை இழந்து விடத் தயாராக இல்லை. இதனால் வாழ்வு தனக்களித்த, அல்லது தான் பார்த்து, கேட்டறிந்த பல விசயங்களையும் வடிகட்டியே (filter) படைப்புகளாக்கும் நிலை இங்கு ஓங்கியுள்ளது.

ஆனால், மலேசியாவிலுள்ள இன்றைய இளம் படைப்பாளிகளிடையே இந்தச் சிந்தனையின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளதை நாம் உணர முடிகின்றது. அவர்கள் தங்களின் நிர்வாணத்தையும் படைப்புகளாக்கத் தயங்குவதில்லை. மஹாத்மன் சிறுகதைகள் தொகுப்பை வாசிக்கும்போது இந்த உணர்வு மேலிடுவதை தவிர்க்க முடியவில்லை. இந்தத் தொகுப்பிலுள்ள சிறுகதைகளில் மஹாத்மன் பதிவு செய்திருக்கும் வாழ்வானது, சமூகத்தளத்தில் அந்தஸ்த்தையும், முகத்திரையையும் இழக்க விரும்பாதவர்களால் எழுதக்கூடியது அல்ல. அந்த வாழ்வு தான் பார்த்த, கேட்டறிந்த விசயங்களாக மட்டுமே இருக்கும் பட்சத்தில், இந்தக் கதைகளில் வெளிப்படும் வாழ்வுசாற் நுண்ணிய அவதானிப்புகளின் விவரணைகள் பிரமிப்புக் கொள்ள வைக்கின்றன. அவரது மொழி ஆளுமை சிறப்பாக வெளிப்பட்டிருக்கின்றது. இதுவே அவரது சொந்த வாழ்வானுபவங்களாக இருக்கும் பட்சத்தில், அவற்றை பதிவுச் செய்யத் துணிந்த மஹாத்மன் பாராட்டப்படவேண்டியவர். தமிழகத்தின் முக்கிய எழுத்தாளர்களான சாரு நிவேதிதா மற்றும் ஜெயமோகன், தங்கள் பால்ய வாழ்வு குறித்தான தகவல்களை சில பதிவுகளில் வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் எஸ். ராமகிருஷ்ணன் மற்றும் கோணங்கி போன்றோர், தேசாந்திரியாக தான் சுற்றிய அனுபவத்தின் சாரத்தை தன் படைப்புகள் பிரதிபலிப்பதாக பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளனர். சொந்த வாக்குமூலமாக இவர்கள் சொல்லியிருக்கும் தகவல்கள் அடிப்படையில் பார்க்கும்போது, இவர்களின் படைப்புகள் சமகாலத்து எழுத்தாளர்களின் படைப்புகளிலிருந்து ஏன், எப்படி வேறுபடுகின்றன என்ற ஐயங்களுக்கு விடை கிடைக்கும். மஹாத்மன் தன் கதைகளின் மூலம் சிருஷ்டித்திருக்கும் உலகமும் அத்தகையத் தன்மையுடையதே.

இத்தொகுப்பிலுள்ள கதைகளினூடாக, மஹாத்மன், மதம் மற்றும் மதம் சார்ந்த நம்பிக்கைகளைத் தீவிர மறுபரிசீலனைக்கு உட்படுத்துவதாக எனக்குப் படுகின்றது. 'மதம் பிடித்தது' என்ற இத்தொகுப்பின் முதல் கதை படிப்பதற்கும், நேரிடை அர்த்தத்தில் புரிந்து கொள்வதற்கும் எந்தச் சிக்கலும் இல்லாத கதை. ஆனால், என் பார்வையில் இக்கதையின் பின்னால் ஒளிந்திருக்கும் ஒரு சமூக உண்மை மிகவும் உணர்ச்சிகரமான, சக மலேசிய எழுத்தாளர்கள் பலரும் எழுதத் துணியாத விசயமாகவே எனக்குப் படுகிறது. மலேசியச் சூழலில், தோட்டப்புறங்களைக் குறி வைத்து, பல காலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த மதமாற்ற நடவடிக்கையை மிகவும் சாவதானமாகச் சொல்லும் கதையிது. என் மதம் பெரிது, உன் மதம் சிறிது என்ற வாக்குவாதங்கலெல்லாம் இன்றைய வாழ்விற்கு கிஞ்சிற்றும் பயனளிக்காதவை என்றே நம்புபவன் நான். ஆனால் ஒரு மனிதனின் ஏழ்மையை அல்லது இயலாமையை காரணமாக்கி, இன்றைய வணிக உலகில் மிகவும் பிரபலமாக விளங்கும் Multi Level Marketing (MLM) என்ற வணிகவியல் உத்தியின் அடிப்படையில், மதம் சார்ந்த நடவடிக்கைகள் இருப்பதை, இருந்து வந்துள்ளதை பார்க்கும்போது, கடவுள் பெயரில் மனித மனங்களின் வக்கிரங்களே வெளிப்படுவதை புரிந்து கொள்ள முடிகின்றது. இவற்றின் தொடர்ச்சியாக இத்தொகுப்பிலுள்ள வேறு சில கதைகளும், மதம், மதம் சார்ந்த நமது நம்பிக்கைகள், கடவுள்கள் நடத்துவதாக நாம் நம்பும் அதிசயங்கள், அந்த நம்பிக்கைகள் பொய்க்கும் போது ஏற்படும் ஏமாற்றம், ஏமாற்றத்தால் ஏற்படும் நிம்மதியின்மை மற்றும் அந்த நிம்மதியின்மைத் தரும் அலைக்கழிப்புகள் போன்றவற்றை பேசுகின்றன.

மேலோட்டமாகப் பார்க்கையில், சமூகம் என்ற கட்டமைப்பு, ஒவ்வொரு தனிமனிதனின் இருப்பையும் பெரிதாகக் கண்டுகொள்ளாததுப் போன்ற ஒரு தோற்றத்தைக் கொண்டிருப்பதாக நாம் உணரலாம். மாட்டிக் கொள்ளாத வரை அல்லது குற்றம் புரிந்ததாக நிரூபிக்கப்படாதவரை நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இந்தச் சமூகத்திற்கு நீங்கள் ஒரு பொருட்டல்ல. ஆனால், ஒரு முறை மாட்டிக் கொண்டு விட்டால், பிறகு ஆயுளுக்கும் கண்கொத்திப் பாம்பாக இந்தச் சமூகம், உங்களை தன் கண்காணிப்பில் வைத்திருக்கும், தான் இயற்றி வைத்திருக்கும் சட்டங்கள் மூலமாக. நீங்கள் உங்கள் மனசாட்சிக்கு உட்பட்டு எந்தத் தவறும் செய்யாதபோதும், சந்தர்ப்ப சூழ்நிலைகள் உங்களுக்கு எதிராக இருக்கும் பட்சத்தில் உங்கள் கதி, அதோ கதிதான். ஒரு முறை தவறு செய்தவன், மாட்டிக் கொண்டு விட்ட பட்சத்தில், திருந்தி வாழ முற்பட்டாலும், இந்தச் சமூகம் அவனை ஒருபோதும் முழுமையாக நம்பத் தயாராகயில்லை. சந்தேகக் கண் என்ற நிழல் அவனைத் தொடர்ந்த வண்ணமே இருக்கும். நிபந்தனைகளுக்குட்பட்ட விடுதலை (conditional release) என்கிற ஒரு நடைமுறை நம் சட்டத்தில் உள்ளது. இந்த முறையில், சட்டத்தின் பிடியிலிருந்து விடுபடுபவர்களின் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியது. அந்த விடுதலை தற்காலிகமானது. எப்போது வேண்டுமானாலும், எங்கே வேண்டுமானாலும் சந்தேகத்தின் பேரில் அந்நபர் மீண்டும் கைது செய்யப்படலாம். இந்தச் சூழல் 'நடந்தது என்னவென்றால்...' என்ற கதையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆல்பர்ட் காம்யூ-வின் (Albert Camus) The Stranger நாவலை வாசித்தபோது, அந்நாவல் ஏற்படுத்தும் அபத்த (absurd) உணர்வை உள்வாங்கிக் கொள்வதில் எனக்குச் சற்று சிரமம் ஏற்பட்டது. ஒரு மனிதனின் வாழ்வை, சந்தர்ப்பச் சூழ்நிலைகள் இப்படியும் சிதைக்கக்கூடும் என்கிற உணர்வே அச்சமளிப்பதாக இருந்தது. வாழ்வு எப்போதும் நம் முன் தெரிவுகளை (choices) வைப்பதில் தவறுவதில்லை. நாம் எதைத் தேர்ந்தெடுக்கிறோமோ, அதை முன்னிட்டு விளைவுகளைச் சந்திக்க நேரிடுகிறது. The Stranger நாவலின் மையக் கதாபாத்திரத்தின் முன்பும் வாழ்வு இப்படியானதொரு தெரிவை வைக்கின்றது. அவன் குடியிருக்கும் பகுதியில், மற்றவர்களால் புறக்கணிக்கப்படும் ஒருவன், இந்த மையக் கதாபாத்திரத்தின் நட்பைக் கோருகிறான். அவன் நினைத்திருந்தால், அந்த நட்பை தவிர்த்திருக்கலாம். ஆனால், அவன் அப்படிச் செய்யவில்லை. அந்தத் தேர்வு எப்படியெல்லாம் அவனை அலைக்கழிக்கின்றது, அவன் வாழ்வை புரட்டிப் போடுகின்றது என்பது அந்நாவலில் சித்தரிக்கப்பட்டிருக்கும். இந்த அபத்த உணர்வு, மஹாத்மன் சிறுகதைகளை வாசிக்கும்போதும் ஏற்படுவதை என்னால் உணர முடிகின்றது. முக்கியமாக 'ஓ லாவே' என்ற கதையில் வெளிப்படும் சூழல், The Stranger நாவலில் வெளிப்படும் சூழலுடன் ஒத்துப்போகின்றது. மேலும், இத்தொகுப்பிலுள்ள மற்ற கதைகளைக் காட்டிலும், இந்த 'ஓ லாவே' சிறுகதையில் வடிவமைதியும், அழகுணர்வும் மிகுந்திருப்பதாக நான் நினைக்கின்றேன்.

மொத்தத்தில், 'மஹாத்மன் சிறுகதைகள்' என்ற இந்தத் தொகுப்பு, கருப்பொருள் மற்றும் மொழியாளுமை என்ற வகையில் மலேசிய இலக்கியச் சூழலில் தனித்து நிற்கக்கூடியச் சிறப்பினைப் பெறுகின்றது என்று நான் நம்புகிறேன். இருப்பினும், சிறுகதைகள் என்ற அளவில் இவை எந்தளவு வெற்றி பெற்றிருக்கின்றன என்பதை என்னால் அறுதியிட்டுக் கூற முடியவில்லை. சில கதைகளில் வடிவம் சார்ந்த பிரச்னை இருப்பதாக எனக்குப் படுகின்றது. இருப்பினும், ஆசிரியர் தன் முன்னுரையில் கூறியிருப்பது போன்று, இவை சோதனை முயற்சிகள் எனும் பட்சத்தில் இந்தக் கதைகளின் வடிவமும், உள்ளடக்கமும் பரவலான விவாதங்களுக்குட்படுத்தப்பட வேண்டும்.

புத்தகத்தை வாங்க விரும்புவோர், தகவலுக்கு இங்கே சொடுக்கவும்.

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768