|
முன்குறிப்பு:
இந்திய ஆய்வியல் துறையின் பேராசிரியர்களின் போதனை
திறமைகளையும், மேலாண்மை பண்புகளையும் நாட்டின் அமைச்சரவை வரை விவாதித்துக்
கொண்டிருப்பதால் மீண்டும் இங்கே நினைவுறுத்த வேண்டாம்.
இலக்கியமும் கல்விபுலமும் ஒரு தடத்தில் பயணிக்கும் இரண்டு தண்டவாளங்கள்
போன்றவை. இரண்டுக்குமிடையே கொடுக்கலும் வாங்கலும் எப்போதும் உண்டு.
கல்வி
புலத்தைச் சார்ந்தவர்களின் பார்வை ஆழமாகவே அல்லது ஆழமற்று
இருப்பினும் குறிப்பிடும் படியான மாற்றங்களை இலக்கியத்தில் நிகழ்த்தின
என்றால்
மிகையில்லை. உலக அளவில் பார்த்தால் சார்த்தர், தெரிதா, ழக்கான், பூக்கோ
போன்றவர்கள் இலக்கிய உலகில் மாற்றங்களை நிகழ்த்திய கல்வியாளர்களே. தமிழகத்தை
பார்த்தால் அ.மார்க்ஸ், கோவை ஞானி, தமிழவன், ராஜ்கௌதமன், பிரேம்
போன்றவர்களும் கல்வி புலத்தைச் சார்ந்தவர்கள்தான். ஈழம் என்றால்
நினைவுக்குச் சட்டென
வருவது பேராசிரியர் கைலாசபதி, சிவதம்பி, எம்.எ.நுக்மான். மலேசியாவில்
இத்தகையவர்கள் யாராவது இருக்கிறார்களா? இலக்கியத்தின் மீது மிகவும்
மதிப்பும்
நம்பிக்கையும் வைத்திருப்பவர்கள் யாரும் பட்டென பதில் சொல்ல இயலாமல்
இருப்பது புரிந்து கொள்ள முடிவதுதான்.
மலேசியாவில் அரசால் நிறுவப்பட்ட பல்கலைக்கழகங்கள் பல இருந்தாலும் மலாயாப்
பல்கலைக்கழகத்தில் அமைந்திருக்கும் இந்திய ஆய்வியல் துறையில்
மட்டும்தான் தமிழைப் பட்டப் படிப்புவரை படிக்க முடிவது நாம் அறிந்ததே.
1958இல் கோ.சாரங்கபாணியின் ‘தமிழ் எங்கள் உயிர்’ நிதியின் மூலம்
மக்களிடமிருந்து
திரட்டப்பட்ட நிதியைக் கொண்டு புணரமைக்கப்பட்ட இந்தத் துறை அரை நூற்றாண்டாக
மலேசியா வாழ் இந்தியர்கள் முக்கியமாக தமிழ் வளர்ச்சிக்கு ஆற்றி
வந்திருக்கும்
பங்கு நிச்சயம் குறிப்பிடத்தக்கதே.
இத்துறையில் தமிழ் படித்தவர்கள் அரசியல், வானொலி, தொலைகாட்சி போன்ற பல்வேறு
துறைகளில் முக்கியமானவர்களாகத் திகழ்ந்திருக்கிறார்கள். இப்பத்தியின்
நோக்கம் தமிழிலக்கியம் சார்ந்து இந்திய ஆய்வியல் துறையின் பங்களிப்பையும்
போதாமையையும் என் சிற்றறிவுக்கு எட்டிய வரை பதிவு செய்வதே ஆகும்.
தனிநாயகம் அடிகளார் தலைமையில் மலேசியாவில் நடைபெற்ற உலக தமிழாராய்ச்சி
மாநாட்டில் இந்திய ஆய்வியல் துறையின் பங்கு மிக முக்கியமானது.
இதைவிட இந்திய ஆய்வியல் துறையின் முக்கிய சாதனையாக 1985இல் இருந்து
நடத்தப்பட்டு வரும் பேரவை கதைகள் நிகழ்வு. மாணவர் மற்றும் பொது பிரிவு என
இரு
பிரிவுகளாக நடத்தப்படும் சிறுகதைப் போட்டியில், வெற்றி பெறும் சிறுகதைகள்
புத்தகங்களாக பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. இப்போட்டிக்கான
நீதிபதிகளின்
தரத்தில் எனக்கு மாறுபட்ட கருத்து இருந்தாலும், நாட்டில் நடைபெறும்
நம்பகமான போட்டியாக இதை ஏற்றுக் கொள்ளலாம்.
மலாயா பல்கலைக்கழக தமிழ் பேரவையோடு இணைந்து நடத்தப்படும் இப்போட்டியின்
பெரிய பலவீனம் இன்னும் சமுதாயத்தையே நாசப்படுத்திக் கொண்டிருக்கும்
தலைவர்களையே நன்கொடைக்காக நம்பி இருப்பது. நூல்களை விற்கும் முறையான
திட்டமும், இத்தகு நிகழ்ச்சிகளுக்கு உதவ தயாராக இருக்கும் உண்மையான
அமைப்புகளை அடையாளம் காண வேண்டிய பொறுப்பு மாணவ சக்திக்கும், ஆலோசகராக
இருக்கும் பேராசிரியர்களுக்கும் நிச்சயம் உண்டு.
குறிப்பு: 2001-ல் நண்பர் பா.அ.சிவமும், 2002-ல் சிவா பெரியண்ணனும் பேரவை
கதைகள் நிகழ்வுக்கு இயக்குநர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. என்னால்
சிறுகதைகள் எழுத முடிகிற உண்மை இந்த போட்டியின் மூலமாகத்தான் தெரிய வந்தது.
பட்டப்படிப்பை நிறைவு செய்யும் இறுதியாண்டில் முடிக்கப்பட வேண்டிய ஆய்வுகளை
பற்றி நாம் அறிவோம். தமிழ் நூலகத்தில் தொகுக்கப்பட்டிருந்த ஆய்வுகளை ஒரு
பார்வை இட்ட போது மலேசியாவின் முக்கிய எழுத்தாளர்களான, சை.பீர்,
மா.சண்முகசிவா, கோ.புண்ணியவான், எம்.ஏ இளஞ்செல்வன் போன்றவர்களுடையப்
படைப்புகள்
குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பது காண முடிந்தது. கொஞ்சம்
செதுக்கி, புத்தகங்களாக வெளியிடப்பட்டிருந்தால் ஆழமான விமர்சனமாக
இல்லாவிட்டாலும்,
எழுத்தாளர்கள் குறித்த நல்ல பதிவாகவாவது இருந்திருக்கும்.
இவ்வேளையில் இந்திய ஆய்வியல் துறையின் இலக்கிய துறையில்
சம்பந்தப்பட்டவர்களுக்கு சில கேள்விகள்:
1) மாணவர்களின் தரமான ஆய்வுகளை நூல்களாக வெளியிடுவதற்கு இந்திய ஆய்வியல்
துறையிடம் ஒதுக்கீடு உள்ளதா?
2) ஒதுக்கீடு உள்ளதென்றால், அது அரசாங்க ஒதுக்கீடா இல்லை தனியாள்
ஒதுக்கீடா?
3) ஒதுக்கீடு இல்லையென்றால், அதை பெறுவதற்காக ஆய்வியல் துறை எத்தகைய
முயற்சிகளை எடுத்துள்ளது?
4) தங்கள் உறவினர்களின் ஆய்வுகளை மட்டுமின்றி மற்ற மாணவர்களின்
ஆய்வுகளையும் மலேசிய எழுத்தாளர் சங்கம் வெளியிடும்படி இந்திய ஆய்வியல் துறை
எப்போதாவது கோரிக்கை வைத்துள்ளதா?
5) தரமான இலக்கிய ஆய்வுகள் நூலாக்கம் பெறும்போது சிறு சலனத்தையாவது இலக்கிய
உலகில் நிகழ்த்தும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா?
இந்த எளிய கேள்விகளுக்கு உங்கள் அரிய நேரத்தை வழங்கி பதிலளித்தால் நிச்சயம்
மகிழ்வேன். இல்லாவிட்டால் இருக்கவே செய்கிறது ஒளிந்து கொள்ள
புறக்கணிப்பும் மௌனமும்.
|
|