|
இன்றைய நிலையில் தீவிர வாசிப்புக்குரிய அனைத்து தன்மைகளோடும் ஒரு பத்திரிகை
நடத்துவது என்பது அத்தனை எளிதல்ல. எந்தவித கைமாறும் எதிர்பார்க்காமல்
இருந்தாலொழிய அது சாத்தியமில்லை. சிரமப்பட்டு கையிலிருந்து பணம் செலவழித்து
இதழ் நடத்தி ஒரு கட்டத்தில் முடியாமல் போக அதை நிறுத்தியாக வேண்டிய
கட்டாயத்தில் ஏற்படும் வலி “வல்லினம்” ஆசிரியர் குழுவுக்கும்
ஏற்பட்டிருக்கும். அதன் வாசகர்களுக்கோ அதைவிட பெரிய வலி. இருதரப்பினரின்
வலிநிவாரணியாக வந்திருக்கிறது www.vallinam.com.my இணைய இதழ். காலாண்டிதழாக
வந்து கொண்டிருந்த “வல்லினம்” செப்டம்பர் 2009 முதல் இணைய இதழாக முதல்
கட்டமாக வருகிறது.
ஆழமான கட்டுரைகள், உணர்வுகள், புனைவுகள் என தளம் பூராவும் பரவிக்
கிடக்கின்றது. ஒவ்வொரு படைப்பிலும் ஒரு துடிப்பான ஆசிரியர் குழு பின்னால்
இருப்பது தெரிகிறது.
’சை. பீர் என்ற......’ என்ற தலைப்பிலான யுவராஜனின் கட்டுரை படிக்கத்
துவங்கி கொஞ்சநேரம் ஆனவுடனேயே ‘என்ன இது வெறும் அனுபவப்பகிர்வாகவே போகிறதே’
என்ற எண்ணம் தோன்ற ஆரம்பிக்கும்போது, எழுத்தின் பாதை திரும்புகிறது.
அதன்பின் ஒவ்வொரு வார்த்தையும் சவுக்கால் அடிப்பது போலிருக்கிறது. அதிகார
மையங்களை நோக்கிக் குழையும் மனிதர்களின் மேலுள்ள வெறுப்பும் ஆத்திரமும்
யுவராஜனின் விரல்வழி வெளியேறி சொற்களாகி இருக்கின்றன. அதே ஆத்திரம்
வாசகருக்கும் வருவது அவரது எழுத்தின் பலம்தானே!
மாரக்சீயத்தின் அவசியம் குறித்தும், முதலாளித்துவத்தின் பின்னடைவான, அண்மை
பொருளாதாரச் சரிவு குறித்தும் சேனனின் ‘HOW TO FIGHT BACK’ கட்டுரை
பேசுகிறது. உலக நாடுகளின் ராணுவத்திற்கு ஆகும் செலவுகள் குறித்து,
குறிப்பாக இலங்கையில் கடந்த முப்பது வருடத்தில் இராணுவச்செலவு 800 மடங்கு
உயர்ந்துள்ளது என்பன போன்ற புள்ளிவிவரங்கள் ஆங்காங்கே காணப்படுகின்றன.
’சிற்றிதழ்களும் தெருநாய்களும்’ என்ற தலைப்பில் சிவா பெரியண்ணன்
எழுதியிருக்கும் கட்டுரை தமிழ்நாட்டில் அதிகம் அறியப்படாத புதிய
செய்திகளைத் தருகிறது. மலேசிய நாட்டில் மக்களின் வாழ்முறையைத் தெரிந்து
கொள்ள முடிகிறது.
“பல வேளைகளில் ரோமங்கள் உதிர்ந்து சீழ் பிடித்து துர்நாற்றம் வீசும்,
அவ்வப்போது மனிதர்களை கடித்து வைக்கும் தன்மைகளையுடைய ஒரு தெருநாயின்
இருப்பில் யாருக்கு என்ன லாபம்?” என்கிறார் சிவா பெரியண்ணன். யார் மீது
என்ன கோபம் அப்படி?
”மொழியாகிய ஜீவன் அழிந்து விட்டபின்பு இனமென்பதே சவத்திற்கு சமமானதுதானே”
என்கிறார் ஓரிடத்தில்.
மொழி அழிந்துவிட்டால் இனம் அழிந்துவிடும் என்பது உண்மையா? இங்கு இனம்
என்பதற்கு எப்படி பொருள் கொள்ளவேண்டும் என்பதிலேயே பல குழப்பங்கள் உண்டு.
மொழி சார்ந்ததையும் இனம் என்கிறோம். உதாரணம்: தமிழினம். சாதி
சார்ந்ததையும் இனம் என்கிறோம். உதாரணம்: தேவர் இனம். நிறம் சார்ந்ததையும்
இனம் என்கிறோம். உதாரணம்: கறுப்பினம். இப்படி வேறு வேறு விஷயத்திற்குக் கூட
ஒரே சொல்லை பயன்படுத்தும் அளவிற்கு தமிழ்மொழியில் சொற்பஞ்சம் இருக்கிறது.
“இனவுணர்வு கொள்” என்றால் எந்த இனவுணர்வு கொள்வது என்ற குழப்பமே மிஞ்சும்.
இங்கே இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் இனம் தமிழினம் என்றேதான்
பொருள்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆதியிலே மொழி தோன்றுவதற்கு முன்னும்
மனிதர்கள் தன் சக மனிதர்களோடு தொடர்பில்தானே இருந்தார்கள்? பாவனை மூலம்தானே
நினைப்பவற்றை தெரிவித்திருப்பார்கள்? இடையில் வந்த மொழி அழிந்துவிட்டாலே
அந்த இனம் சவத்திற்குச் சமம் என்று எப்படி சொல்லமுடியும்? மொழி
முக்கியம்தான். அதிலும் தாய்மொழி மிகவும் முக்கியம். ஆனால் அம்மொழி
செத்துவிட்டால் அம்மொழி பேசியவரை சவம் என்று எப்படி சொல்ல முடியும்? மொழி
சாகலாம். மனிதர்களுக்கு சைகை மொழி இருக்கும்வரை சவம் என்று சொல்லமுடியாது.
அப்படிப் பார்த்தால் வாய்பேச முடியாத, பிறவியிலேயே ஊனமுற்றவரெல்லாம் சவமா?
அவர்களுக்கு தமிழ் மட்டுமல்ல உலகின் எந்த மொழியுமே தெரியாதுதானே? இதே
வல்லினத்தில் வெளியாகியுள்ள அந்தோணியின் கதை என்ன? “எனக்கு நிறைய
கண்கள்” என்கிறானே! அந்த நம்பிக்கையை மொழியா கொடுத்தது? மொழி அவ்வபோது கதை,
கவிதை, இலக்கியம் எல்லாம் வாசிக்கவைக்கிறது. அழகியலை உணரவைக்கிறது. ஒரு
இனிமையான இசையைக் கேட்டால் அதை சொற்களைக்கொண்டு நிரப்பி பாடவைக்கிறது.
இவற்றைத்தவிர மொழி தொடர்புக்கான ஒரு கருவி. அவ்வளவே. அதற்குமேல் அதில்
புனிதப்படுத்த என்ன இருக்கிறது? மொழியை புனிதப்படுத்தும்போதுதான் அதன்மீது
வெறி வருகிறது. அதன்மேல் உணர்வு அரசியல் கட்டமைக்கப்படுகிறது. அதன்
விளைவுதான் இன்று நாம் அனுபவிப்பது. ஆக, மொழியை தொலைத்தால் சவமாவோம் என்பது
மொழியைப் பற்றிக்கொண்டு வெறியோடு திரிந்தால்தான் சரி என்ற பொருளாகிறது.
இப்படிச் சொல்வதால் வேற்றுமொழிக் கலப்பை அல்லது வேற்று மொழியை ஆதரிப்பதாகப்
பொருள் கொள்ளக் கூடாது. தமிழ் அதனளவில் சிறந்த மொழி. பல சிறப்புகளை
தன்னகத்தே கொண்டிருக்கிறது அதுபோலவே பல இழிவுகளையும். ஆனால் இவையெல்லாம்
ஒரு பக்கம் இருந்தாலும், தமிழுக்கு மலேசியாவில் பிரதிநிதித்துவம் இல்லை
எனும்போது போராடத்தான் வேண்டும்.
சித்ரா ரமேஸ் எழுதிய 'ஒரு டோடோ பறவையின் வரலாறு‘ இலக்கியத்தின் வகைகளைப்
பற்றி விரிவாகப் பேசுகிறது. நவீனத்துவம், அது தோன்றிய வரலாறு,
பின்நவீனத்துவ காலம், இலக்கியத்தில் அதன் தாக்கம் போன்றவற்றை டோடோ பறவையின்
உதாரணத்தோடு சொல்கிறது கட்டுரை. மிக ஆழமான விஷயங்களையும் எளிமையான நடையில்
சொல்ல முயன்றிருப்பது தெரிகிறது. ஆனால் பேச வரும் விஷயங்கள் ஆங்காங்கே
தனித்தனியாக தொக்கி நிற்பது போன்ற உணர்வு தோன்றுவதைத் தவிர்க்க
முடியவில்லை.
’ஏய் டண்டனக்கா... ஏய் டனக்கணக்கா’ என்கிற லும்பனின் பதிவு
வாசிக்கும்போது இரண்டு விஷயங்கள் தோன்றின. ஒன்று, ஏற்கனவே சை.பீர் குறித்த
ஒரு பதிவு இருக்கையில் அதே இதழில் மீண்டும் அவரைக்குறித்த அதே செய்தி
இடம்பெறுவதைத் தவிர்த்திருக்கலாம். இரண்டு, கட்டுரையாசிரியர் குறிப்பிடும்
“கைப்பழக்கம்” குறித்து அவர் கூறுவது நம் சமூகத்தில் பேசப்படாத பல
விஷயங்களை பேசத்துணிந்ததன் அடையாளமாக வைத்துக்கொள்ளலாம். அதோடு
மட்டுமல்லாமல் வேறொரு நினைவும் உள்ளுக்குள் ஓடியது. ஒரு ஆண் இவ்வாறு
எழுதுவது குறைந்த அளவே சர்ச்சைக்குள்ளாகிறது அல்லது
ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இதையே ஒர் பெண் எழுதி இருந்தால் அந்த எழுத்துக்கு
இந்நேரம் வானத்துக்கும் பூமிக்குமாக குதித்திருப்பார்கள். குட்டிரேவதி
எழுதிய ‘முலைகளுக்கும்’ சல்மாவின் ‘எல்லா புரிதலுடன் விரிகிறதென் யோனி”
க்கும் இன்னும் இதுபோன்ற பெண் எழுத்துக்களுக்கும் எத்தனை எதிர்ப்புகள்?
பெண்ணுணர்வுக்கு எந்த மதிப்பும் இல்லாத சமூகத்தில் ஆண்களின் இந்த
சுதந்திரத்தை கேள்வி கேட்கும் வகையில் பெண்கள் தங்களின் படைப்புகளை
காத்திரமாகத் தர முயல வேண்டும். வல்லினம் அதற்கொரு தளமாக இருக்கவேண்டும்.
வீ.அ.மணிமொழி எழுதிய ”நிறைய கண்களுடன் ஒருவன்” வாசிக்கும்போது தோன்றிய
உணர்வுகள் அற்புதமானவை. தொலைக்காட்சியில் ஞாயிறு மதியம் காது கேளாதோருக்கான
செய்தி அறிக்கையை பார்த்ததைத் தவிர இது தவிர வேறு பரிச்சயமில்லாத என்
போன்றவர்களுக்கு, ஒரு மனிதனால் இந்த முறையில் கூட கல்வி கற்று பட்டம் பெற
முடியுமா என்ற பிரமிப்பு நம்மை ஆட்கொள்கிறது. குறிப்பாக அந்தோணிக்கு பாடம்
கற்றுக்கொடுக்கும் அந்த ஆசிரியை செய்யும் இன்றியமையாத பணி குறித்த மரியாதை
உயர்கிறது. “எனக்கு நிறைய கண்கள்” என்ற காதுகேளாத வாய்பேசாத அந்தோணி
கூறும்போது விஸ்வரூபமெடுத்து நிற்கிறான்.
‘தி பியானிஸ்ட் – அடையாளம் கடந்த நேயம்‘– The Pianist திரைப்படம் குறித்த
யுவராஜனின் ஆழமான விமர்சனம் சமூக வரலாற்றுப் பார்வையோடு வந்திருக்கிறது.
இப்படி எப்போதும் ஒரு திரைப்படத்தை எடுத்துக்கொண்டு நல்ல சினிமாவை
அறிமுகப்படுத்தலாம். குறும்படங்களையும் ஆவணப்படங்களையும் இந்தப் பகுதியில்
சேர்த்துக்கொள்ளலாம் (எங்கே கிடைக்கும் என்ற தகவல்களுடன்).
’உலகின் இறுதி நாள் 21-12-2012 - மாயன்கள் உறுதி!’ - விக்னேஷ்வரன்
அடைக்கலம் எழுதிய கட்டுரை மாயா இனத்தவர்கள், அவர்களோடு சேர்த்து அவர்களின்
நாகரீகமும் புதைந்து போனதைக் கூறுகிறது. இந்தியாவின் சிந்து சமவெளி
நாகரீகத்திற்கும் இதற்கும் ஓரளவு ஒற்றுமை இருப்பதாகப் படுகிறது. இது
குறித்த ஆய்வாக இக்கட்டுரை உள்ளது. அழகான பிரமிடுகள், அவர்களின்
நம்பிக்கைகள் என பல தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறது கட்டுரை.
சீ. முத்துசாமியின் ‘வசூல்’ ஏற்கெனவே பேசப்பட்ட விஷயத்தையே பேசுகிறது. ஒரே
விஷயத்தை ஒரே இதழில் மூன்று முறை படிக்க நேர்வது சிரமமான விஷயம். அந்த அளவு
எழுத்துப்பஞ்சமா என்றே எண்ணத் தோன்றுகிறது. ஒரே விஷயத்தைக்கூட ஒரே இதழில்
கட்டுரை, கவிதை, சிறுகதை என வெவ்வேறு வடிவங்களில் கொடுத்தால் அதில்
நிச்சயமாக அலுப்பு தட்டாது. இப்படி ஒரே விஷயத்தைப் பற்றி மூன்று முறை
கட்டுரை வடிவில் மட்டுமே வருவது சற்று அலுப்பூட்டுகிறது. இதை ஆசிரியர் குழு
நண்பர்கள் கொஞ்சம் கவனத்தில் எடுத்துக்கொண்டால் நல்லது.
கதைகளின் பக்கம் கொஞ்சம் பார்வையைத் திருப்பினால், முதல் கதையாக
கண்களுக்குத் தெரிவது “ஒரு மழைப் பொழுதில் கரையும் பச்சை எண்கள்”.
முனிஸ்வரன் எழுதியது. பீட்சாவை வீடுகளுக்குக் கொண்டு சேர்க்கும் தொழில்
செய்யும் ஒருவரின் பார்வையில் இந்தக் கதை எழுதப்பட்டிருக்கிறது.
‘இவர்களுக்கு இன்சூரன்ஸ் பாலிசி இருக்குமா? உயிரைப் பணயம் வைத்து இப்படி
அதிபயங்கர வேகத்தில் செல்லும் இவர்கள் வேறு தொழில் ஏன் செய்யக்கூடாது?
முதலாளிகளும் பன்னாட்டுக் கம்பெனிகளும் வயிறு வளர்க்க இவர்கள் இந்தப் பாடு
படுவதேன்?’ – தினமும் சாலையில் செல்லும்போது மின்னல் வேகத்தில் பறக்கும்
இந்த பையன்களைப் பார்க்கும்போதேல்லாம் தோன்றும். இப்படி ஒரு பீட்சா பையனின்
அனுபவமே இந்தக் கதை. சொல்லப்பட்ட விதம் ரசிக்கும்படியும் அழகாகவும்
இருக்கிறது. “இந்த மழை இருக்கிறதே, இது மிக விசித்திரமான ஒன்று. வா வா
என்று கம்பளம் விரித்துக் கூப்பிடும் இடங்களுக்குப் போகாமால் போ போ என்று
விரட்டியடித்தாலும் வெட்கமில்லாமல் வந்து கால் வரை விழுந்து பின் மண்ணோடு
மண்ணாகிப் போகும் மானங்கெட்ட இயற்கை அது. கவிஞன் கிடக்கிறானைய்யா. மழையை
வர்ணிப்பான் வீட்டுக் கூரையின் இதமான பாதுகாப்பில்” – இந்த வரிகளை
வாசித்தவுடன்
”தங்கறதுக்கு வூடும்
திங்கறதுக்கு சோறுமிருந்துட்டா
சவுரியத்துக்கு எழுதுவியாடா மயிரானே
ஒண்ணு தெரிஞ்சுக்கோ
மழை ஜன்னலுக்கு வெளியதான்
எப்பவும் பெய்யுது உனக்கு
எங்களுக்கு எங்க பொழப்பு மேலயே.”
என்ற ஆதவன் தீட்சண்யாவின் ‘வேறு மழை’ கவிதை நினைவுக்கு வருகிறது.
மிக இயல்பாகப் போய்க்கொண்டிருக்கும் கதையில் ஒரே ஒரு சொல் வந்து
இடறிவிட்டது. ”அவைதான் எனது ஆண்மையைச் சோதித்துப் பார்க்கும் சக்தி மிகுந்த
எண்கள்.” என்கிறார் முனீஸ்வரன். அதென்ன ஆண்மை? வேகம் ஆண்களுக்கு மட்டுமே
உரித்தானது. பெண்கள் சோம்பேறிகள். அப்படித்தானே? ”பெண்கள் முழுமையாக
விடுதலை பெறவேண்டுமென்றால் ‘ஆண்மை’ என்ற பதம் அழியவேண்டும்” என்கிறார்
பெரியார். ஆண்களின் ஆண்மையை ஒழித்துவிட்டால் அவர்கள் வண்டி ஓட்டக்கூட
முடியாது போலிருக்கிறதே!
”தூரத்தே தெரியும் வான் விளிம்பு” சிறுகதை ஜெயந்தி சங்கரின் கற்பனை..
படித்துக்கொண்டிருக்கும் பள்ளியை விட்டு விலகி புதுப்பள்ளியில் சேரும் ஒரு
மாணவனுக்கு ஏற்படும் உளவியல் சிக்கலைச் சொல்கிறது கதை. புது சூழலுக்கு
ஒவ்வாமையால் அவனுக்குள் நிகழும் மாற்றங்களும் அதன்பின் பழைய நண்பர்களை
சந்தித்தபின் ஏற்படும் மனமாற்றத்தையும் நுணுக்கமாக சித்தரிக்கிறது கதை.
ஒவ்வொரு மனிதருக்கும் இதுபோன்றதொரு சூழல் வாழ்நாளில் எங்கேனும் எப்போதேனும்
ஏற்பட்டிருக்கும். இந்தக் கதையில் பள்ளி. சிலருக்கு வீடாக இருக்கலாம்.
சிலருக்கு அலுவலகமாக இருக்கலாம். சிலருக்கு ஊராக இருக்கலாம். சிலருக்கு
தேசமாகவும் இருக்கலாம்.
"பல வேடிக்கை மனிதர்கள் போல!” தொடரில் மலேசியத் தரகர்கள் குறித்து ம.நவீன்
எழுதியிருக்கிறார். ”பதிப்புத் துறையில் தேர்ந்த உயிர்மை, காலச்சுவடு,
தமிழினி போன்ற பதிப்பகங்களில் புத்தகம் பதிப்பிக்கப்படுவதன் மூலம் இயல்பாக
ஒரு புத்தகம் நல்ல இலக்கியத்திற்கான அடையாளத்தைப் பெற்றுவிடுகின்றது”
என்கிறார் நவீன். அது எப்படி ஒரு பதிப்பகம் வெளியிடுகிறது என்பதற்காக அதனை
நல்ல இலக்கியம் என்று அடையாளம் பெற்றுவிடும் என்று கூற முடியும்? நவீனுக்கு
இப்பதிப்பகங்கள் குறித்த ஒரு மயக்கம் இருக்கிறதோ என்று தோன்றுகிறது. இவை
தமிழ்சூழலில் செய்யும் அரசியல் குறித்து எந்த விமர்சனமும் இன்றி இப்படி ஒரு
நற்சான்றிதழ் கொடுப்பது எப்படி சரியாகும்?
மஹாத்மன் எழுதும் ‘பரதேசியின் நாட்குறிப்புகள்’ என்ற தொடரும் இந்த
இணையதளத்தில் வெளிவருகிறது. வீடற்ற, முகவரியற்ற நிலை என்பது உலகத்தைப்
புரிந்துகொள்ள உதவுகிறது. கிடைத்த இடத்தில் உறங்கி, சோறு கண்ட இடத்தில்
உண்டு வாழ்வது பரதேசி வாழ்க்கை. இந்த வாழ்க்கை வாழ்பவர்களுக்கு இயல்பாக
’வீடுபேறு’ பெற்று, குடும்பம் குட்டி என வாழ்பவர்களை விட அதிக அனுபவங்கள்
கிடைக்கும். இவ்வகை அனுபவங்கள் இத்தொடரில் காணக்கிடைக்கிறது.
இளைய அப்துல்லாஹின் ”எனது நங்கூரங்கள்” இலங்கையின் வட்டார வழக்கு மொழியில்
அமைந்து நிறைய புதிய வார்த்தைகளை அறிமுகப்படுத்துகிறது. வாசிக்கும்போது
நமக்கும் நம் பள்ளிக்கூட நினைவுகளும் பால்யமும் தவிர்க்கமுடியாமல்
மனக்கண்ணில் வந்து போகின்றன.
தளத்தில் இடம்பெற்றிருக்கின்ற கவிதைகளும் அவற்றின் மொழியும் பாடுபொருளும்
மனதைத் தொடுகின்றன. பொதுவாக கவிதைகளில் அழகியலும் அவலச்சுவையும் மாறி மாறி
இழையோடுகின்றன.
”சிதைவடைந்த ஊரிற் செழித்துக் கிடப்பவையோ
சுடுகாடும் இடுகாடும்”
- இது தர்மினியின் கவிமொழி. அவருடைய “சாவுகளால் பிரபலமான ஊர்” ஊரே
சுடுகாடாய் மாறிய அவலத்தை வலியோடு காத்திரமாகச் சொல்கிறது.
”என் மனம் சங்கடப்படக்கூடாது
என்று நினைப்பவர்களுக்குமாகவும்
அவர்கள் சங்கடப்படக்கூடாது
என நான் நினைப்பதாலும்
நிகழ்ந்துகொண்டிருக்கிறது
சில நட்புகளும்
சில முறிவுகளும்”
என்கிறார் சந்துரு. உண்மைதான். வாழ்க்கையில் சில நேரங்களில் உண்மைகளை சொல்ல
முடியாமல் அவற்றை மென்று தின்று செரித்து விடுகிறோம். அதனாலேயே சில
நட்புகள் வாழ்கின்றன. சில நட்புகள் முறிகின்றன. இன, மொழி, தேச பேதமற்று
எல்லோருக்கும் பொருந்தக்கூடிய கவிதை இது.
”நகர மையத்தின் நடுவில்
கிளர்ச்சியூட்டிய தனிமையும்
ஏறித் தாவிய அரைச் சுவரும்
இரவுகளை மலர்த்திய கொண்டாட்டங்களும்
பிசாசுகளாய் மாறி
பக்கத்து அரும்பொருளகத்தில்
அலைவதாய்
சொல்கிறார்கள்
காதல் உறைந்த பாடல்கள் கருகுகின்றன
வாழ்வைத் தேக்கிய காற்றும் கலைகிறது”
இவை லதாவின் ”நேற்றிருந்த நாடு” கவிதையின் வரிகள். புலம்பெயர் துயரத்தின்
கண்ணீர் மிதக்கும் வரிகள்.
தினேசுவரியின் “அனுமானங்கள்” கவிதை இதோ:
“திரும்பிப் பார்க்கும்
ஒவ்வொரு கணங்களையும்
பதிவு செய்து கொள்கிறேன்...
திரும்பாத பொழுதுகளில்
என்ன நடந்திருக்கும் என்று....”
இக்கவிதையின் உள்ளீடாய் இருக்கும் துரோகம் மனதைத் தைக்கிறது.
பார்க்காதபோது, நாம் அறியாதபோதுதானே நமக்கெதிரான துரோகம் நிகழ்கிறது.
பார்க்க நேரும்போது அதை உணரும் தருணம் வலி நிறைந்த்து. அந்த வலியையும் அது
தரும் எச்சரிக்கை உணர்வையும் மிக அழகாக பதிவு செய்கிறது இக்கவிதை. அதேபோல
இன்னும் மூழ்காத பால்யத்தை சித்தரிக்கும் “மூழ்காத காகிதக் கப்பல்”
கவிதையும் அழகானது.
”உலக வரைபடத்தில் ஒரு கண்ணீர்த்துளி” கவிதை சாத்தான், போதிமரம் போன்ற
குறியீடுகளை வைத்து சொல்ல முயன்ற செய்தி மிக முக்கியமானதாகத் தோன்றுகிறது.
சாத்தான் சரியாக ஏன் போதிமரத்தின் கீழ், பெட்டியைப் புதைக்க வேண்டும்?
புதைத்தபின் “எது நடந்ததோ அது சரியாகவே நடந்தது” என்ற கீதை வரிகளை ஏன்
சொல்லவேண்டும்? இவற்றிற்கெல்லாம் பதில் நுட்பமாகப் புரிந்து
கொள்ளக்கூடியதாக இருக்கிறது.
பிரிவின் வலியை அழகாகச் சொல்ல யோகி எழுதிய கவிதை ஓர் ஆணாதிக்க மனநிலையில்
எழுதப்பட்டதால் கவிதை தோற்றுப்போகிறது.
"பிரிவதற்கு முடிவெத்தபின்
சிலவற்றுக்கு ஆய்த்தமாகவேண்டியுள்ளது
.
.
.
சேர்த்து எழுதின பெயரை மீண்டும்
பிரித்தெடுப்பதை
ஆசையுடன் போட்டுக்கொண்ட
சில நகைகளை கழட்டி எறிவதை"
ஏன் பேரை சேர்த்துக்கணும்? அப்புறம் பிரித்தெடுக்கணும்? திருமணத்துக்குப்
பின் வந்து சேரும் நகை என்று பார்த்தால் தாலியும் மெட்டியும்தான். ஏன்
ஆசையோடு அதைப் போட்டுக்கணும்? அப்புறம் கழட்டி எறியணும்?
”பின்வந்த நாட்களில்
பச்சை சாந்தப்படுத்தியது;
நின்றேன்
சிவப்பு உற்சாகப்படுத்தியது;
பயணித்தேன்”
இவை ரேணுகாவின் “சிவப்பில் பயணிப்பவள்” கவிதை வரிகள். அதிகார மையங்கள்
கட்டமைத்த அர்த்தங்கள்தானே ஒவ்வொரு நிறத்திற்கும்! இது நிறத்திற்கு
மட்டுமல்ல! எல்லாவற்றையும் தீர்மானிப்பது யாரோ! எங்கேயோ! அதற்குக்
கீழ்ப்படிய வேண்டியது அனைவரின் கடமை. இப்படித்தான் இங்கு சமூக அமைப்பு.
அந்த சமூக அமைப்பின் ஒழுங்கை ஆச்சரியமூட்டும் வகையில் குலைத்துப் போட்டு
கலகம் செய்கிறது இக்கவிதை.
பௌத்ததின் பெயரால் ஆட்சி நடத்தும் இலங்கை அரசு மக்களைக் கொன்றழிக்கிறது.
ஆனால் இன்றைய சூழலில் இந்துத்வாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்து மதத்தை
ஒழிக்க பௌத்தமே முன்வைக்கப்படுகிறது. ஆக, திரும்ப திரும்ப புத்தரை
போருக்குள் இழுப்பது சரியா என்று தோன்றுகிறது. இது போன்ற கவிதைகள் நிறைய
தமிழ்சூழலில் சமீபமாக வெளிவந்திருக்கிறது. இதிலும் இளங்கோவனின் கவிதை
அப்படியான ஒன்றுதான்.
மிகவும் எளிமையான சொற்கள், கவிதைகள் தலையைப் பிய்த்துக்கொள்ளாமலேயே
புரிகின்றன. இதற்கு வல்லினத்திற்கு முதல் நன்றியை உரித்தாக்கலாம்.
வடிவமைப்பைப் பொறுத்தவரை மிக நன்றாகவே இருக்கிறது. வாசிக்கும்போது தொல்லை
செய்யாத வடிவமைப்பு கவருகிறது. ஆங்காங்கே எழுத்துப்பிழைகள் கண்ணில்
படுகின்றன.
கட்டுரைகள், பத்திகள், கதைகள், கவிதைகள், தொடர்கள் இப்படி எல்லாவற்றிலும்
ஒரு முத்திரை முயற்சி உள்ளது. மலேசியாவில் இருந்து உலகெங்கும் உள்ள தமிழ்
உறவுகளோடு உரையாட, பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள ஒரு அற்புதமான தளம்
வல்லினம்.
|
|