நிச்சயமாக உனதென்றே சொல்
உன் வரண்ட தொண்டைக்குழிக்கு
தண்ணீரை எடுத்துச் செல்கையில்
ஈரலித்துக்கொள்கிறது
பின்னும்
இரையும் வயிற்றுக்கென நீ
உள்ளே தள்ளிடும்
எல்லாவற்றையும் சுவைத்துப்பார்க்கிறது
எதையும் தனக்கென வைத்துக்கொள்ளாமல்
தானும் உபயோகித்துக்கொண்டு
முழுதாக உனக்கே தருவதென்பது
ஆச்சரியம் தானென்ன
எல்லோரையும் தூற்றியபடியும்
எச்சிலில் குளித்தபடியும்
தினமொரு ஆளைத்தேடி
உன் கண்களால் செவிகளால் வார்த்தைகளால்
அலையுமது
ரோசா வண்ணத்திலல்லது இளஞ்சிவப்பில்
மிகவும் திமிர்பிடித்துக்
கொழுத்துப் போய்க்கிடக்கிறது
அதற்கு மெல்லவென நான் சிக்கியபொழுதில்
மேலண்ணத்துக்கும் கீழண்ணத்துக்குமிடையிலதனைத்
துடிதுடிக்க வைத்து
கட்டற்ற பொய்களை
அவதூறுகளை வசைமொழிகளை
வெளியெங்கும் இறைத்தது
தேளுக்கில்லை
அரவத்துடையது மிகவும்
மெல்லியது, பிளந்தது, கூரியது
இரண்டெனவும் கூறலாமெனினும்
அதனைப் போன்றதல்ல
உன்னுடையது
தீண்டப்பட்ட எல்லா மனங்களையும்
கொல்லும்
கொடிய விஷத்தினைக் கக்கியபடி
வழியெங்கும் தொடரும்
பாவப்பட்ட அது
கடவுள் தந்த பொழுதிலிருந்து
காயங்களெதுவும் கண்டிரா
பரிபூரணத் தூய்மையோடு துடித்திட்ட அது
மழலை வாடையை எங்கும் பரப்பும்
பூக்களை இறுக்கமாகப் பொத்தி வைத்திருக்கும்
ஒருநாள் குழந்தையின்
உள்ளங்கையினைப்போலவும்
மொட்டவிழக் காத்திருக்கும்
தாமரையொன்றின் உட்புற இதழைப்போலவும்
மிகவும் மென்மையானது
சில சலனங்களை
பின்விளைவறியாது ஏற்றுப்பின்
கலங்கியது துவண்டது
வாடிச் சோர்ந்தது
ஞாபக அடுக்குகளில்
சேமித்துக் கோர்த்திருந்த
எனதினிய பாடல்களின் மென்பரப்பில்
உன் கால்தடங்களை மிகுந்த
அதிர்வோடு ஆழமாய்ப் பதித்த வேளையில்
ஏமாளியாய் நின்றதைத்தவிர்த்து
வேறென்ன பாவம்தான் செய்தது
வதைக்கவென நீ தேர்ந்தெடுத்த
என் ஒற்றை மனது
|