அமானுஷ்யப்புத்திரன்
கருவறைக்குள்
இருப்பதாய் உணர்கிறேன்
மீண்டும்
முன்பிருந்தது போலில்லை
தனியனாய்
பிரக்ஞையற்று
காற்றை கிழித்து கைகளை வீசுகிறேன்
கால்போன போக்கில் நடக்கிறேன்
நிர்வாணம் மறைத்து வாழப்பழகியிருக்கிறேன்
இருந்தும் என்ன
இருள் தின்று புடைத்திருந்த
பனிக்குடப் பொழுதுகளுக்கும்
வெளிச்சம் பொழியும்
காற்றுவெளி இருப்புக்கும்
என்ன வேறுபாடு இருந்திட முடியும்
கோடி மனிதர் ஊர்ந்து கொண்டிருந்தும்
கண்களுக்குப் புலப்படுவதில்லையே
எங்கிருக்கிறாய் நீ
தொப்புள்கொடி இல்லைதானேயொழிய
அல்லது இருக்கிறதா
தெரியவில்லை
உன் வழி பிரபஞ்ச சக்தியை உறிஞ்சி
சுவாசிக்கிறேன் இன்னும்
கோழி மேய்பவன் கதை
கோழி மேய்ப்பதும் பெருமை தரும்
'குமுனி'யில் என்பதால்
நன்றாக உடுத்திக்கொள்ள வேண்டும்
கோட்டும் சூட்டுமாய்
கழுத்துப்பட்டை கட்டாயம்
பெண் தரும், சுற்றம் கூடும்
வருமானத்தில் மிச்சமேயில்லாவிட்டால்கூட
கடன் தரும்
விதியொன்றுதான்
முதுகெலும்பை அடகு வைப்பது
நீங்கள் கேட்கலாம்
நடமாடுவது பிறகெப்படி சாத்தியப்படும்
வேற்றுலகவாசியான உங்களுக்கு
சொன்னாலும் புரியப்போவதில்லை
வாருங்கள் குமுனிக்குள்
நடக்காமல், பேசாமல்
முக்கியமாய்
சிந்திக்காமலேயே
வாழ்வு சாத்தியப்படும் வெளியிது
நேற்றில் உறைபவள்
நிகழ் பொய்த்திட்டத்
தருணங்களிலான வாழ்விது
உன்னோடு சுவாசித்த
உயிர்வளி சேகரம்
சிறிது மிச்சமிருக்கிறது
கைகோர்த்திருந்த கணங்களில்
கசிந்த பசுமை
இன்னும் கொஞ்சமிருக்கிறது
முத்தங்கள் கடத்திய உமிழ்நீரில்
தொண்டை காயாதிருக்கிறது
முன்னகர்த்துவதுமில்லை
சிறிதும் என்னை
உன் வேர்சூழுலகு
விட்டு விடுதலையாதல் சாத்தியம்
என்கிறாய் நீ
உறைந்திருக்கிறேன் இப்படியே
என்கிறேன் நான்
பாதிப்பெண்
சம்மதம் வேண்டி
நல்ல அழகு என்கிறார்கள்
நல்ல குணம் என்கிறார்கள்
நல்ல உத்தியோகம் என்கிறார்கள்
இன்னும் பிற நல்லவைகள்
அனைத்தும் பொருந்திய
முழுமைப்பெண் என்கிறார்கள்
உங்களிடம் சொல்ல பதில் இல்லை
கேள்வியொன்று இருக்கின்றது என்னிடம்
'யின் & யாங்' தெரியுமா உங்களுக்கு
பாதியாய் இருக்கிறேன் முழுநான்
எங்ஙணம் பொருந்துவது
உங்கள் முழுமைப்பெண்ணோடு
என்னை நானென உணரச்செய்வதெதுவோ
என் மீதியையும் கோருகிறது
கண்முன்னே தொலைந்திருக்கிறாள்
என் பாதிப்பெண்!
|