|
(கலை இலக்கிய விழா கவிதை திறனாய்விற்கென தயாரித்த
ஆய்வுக் கட்டுரை)
நமது நாட்டின் இலக்கிய வளர்ச்சி எப்படி இருக்கிறது?
மூன்று விஷயங்கள் மனதிற்கு உற்சாகமும் மகிழ்ச்சியையும் தருகின்றன. ம.நவீன்,
பா.அ.சிவம், மஹாத்மன் போன்றோர் வெளியிட்டுவரும் 'வல்லினம்', பாலமுருகனின்
'அநங்கம்', ஏ.தேவராஜனின் 'மெளனம்' மலேசிய சிற்றிதழ்களாக வெளிவருகின்றன.
பழம்பெரும் எழுத்தாளர்களால் செய்ய இயலாததை எல்லாம் இந்த இளைஞர்கள்
செய்கிறார்கள் என்பதும், பணத்தை முதன்மையாகக் கொண்டு சிந்திக்கும்
பத்திரிகைகள், முதலாளிகள், எழுத்தாளர்கள் மத்தியில் இலக்கியம் மட்டுமே
குறிக்கோளாகக் கொண்டு இலாப நோக்கமற்ற ஆத்மார்த்தமான இவர்களின் முயற்சிகள்
மலேசிய தமிழ் இலக்கியத்தைப் புரட்டிப் போடும் நெம்புகோல்கள். வாழ்க, வளர்க
இவர்களது முயற்சிகள்.
-பாமரன் பதில்கள், பக்கம் 35 செம்பருத்தி மாதிகை, ஏப்ரல் 2009
மலேசிய தமிழ் இலக்கியச் சூழல் எப்பொழுதுமே இப்படித்தான் என்று வரையறுத்துக்
கூற முடியாத அளவுக்கு அதன் நகர்வும் வெளிப்பாடும் கடந்த அரைநூற்றாண்டாய்க்
கவனிப்போருக்கு வெள்ளிடை மலை. இங்கு உற்பத்தியாகும் இலக்கியங்களுக்குக்
கருவறைகளாய் அடையாளப்படுத்திக் கொண்டவை ஞாயிறு பத்திரிகைகள்தான் என்று
இன்றளவும் பலர் நம்பவைக்கப்பட்டுள்ளனர். இதுவரை நடந்த நல்லது கெட்டது
எல்லாமும் பத்திரிகைகளைச் சார்ந்தவைதான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
ஞாயிறு இலக்கியங்கள் பல வேளைகள் நல்ல கருக்களைச் சுமந்தும் சில நேரங்களில்
கருக்கலைப்புகளையும் நிகழ்த்தியுள்ளன. இலக்கியங்களின் ஈனக்குரலும்
ஓலங்களும் அவற்றின் ஆழ்ந்த மெளனங்களும் பற்றி அவை பொருட்படுத்தியதாகத்
தெரியவில்லை. பிரசுரிப்பதும் பரிசளிப்பதும் மட்டுந்தானா இலக்கியப் பணி?
வாசகர்களின் நிமிர்தலும் பிரவேசிப்பும் கட்டுப்படுத்தப்பட்டதாகப் படுகிறது.
அதற்கொரு பத்திரிகை சார்ந்த அரசியலும் வணிக நோக்கும் காரணிகளாக இருப்பதால்
இலக்கியத்திலும் மக்களாட்சியின் குரல் மிக நிசப்தமாகவே ஒலிக்கிறது. அதிலும்
நவீன இலக்கியத்திற்கென்றால் சொல்லவும் வேண்டுமா ?
நடப்பு நிலவரம் இவ்வாறிருக்க, இதற்கொரு மாற்று வழியாகவும் இலக்கியத்தின்
உண்மை வெளிப்பாடாகவும் புறப்பட்டவைதான் சிற்றிதழ்கள். முன்பு சில
சிற்றிதழ்கள் வந்திருந்தபோதிலும் அவற்றின் போக்கும் நோக்கும் பழைமையைத்
தொற்றிக்கொண்டே குறுகிய வட்டத்திற்குள் வந்தமையால் அவற்றால் தீவிரமாய்
இலக்கியம் பேச முடியாது போயிற்று. தற்காலச் சூழலில் மலர்ந்துள்ள வல்லினம்,
அநங்கம், மெளனம் பேசுகின்ற மொழி சிறுகதைகளிலும்,
கவிதைகளிலும், கட்டுரைகளிலும் மலேசியச் சூழலில் மாறுபட்ட புறப்பாடு
என்பதற்குத் தமிழகத்திலும் இணையத்திலும் பிரசுரமான மலேசிய தீவிர படைப்புகளே
சான்று! ஞாயிறு இலக்கியங்களில் வேறு மாதிரியாய் அலங்கரிக்கப்பட்ட இவற்றில்
எழுதுகின்ற படைப்பாளிகளின் உண்மை முகங்கள் / அகங்கள் இந்தச் சிற்றிதழ்களில்
பட்டவர்த்தனமாய்த் தெரிந்தன. இவற்றில் வெளிப்படும்
காத்திரம், கருணை, விரக்தி, எதிர்பார்ப்பு, ஏமாற்றம், சுய வலி, புலம்பல்,
மென்மை, வண்மை எனச் சகல இரசபாவங்களும் நச்சென்று பதிவாகி தமிழ்
இலக்கியத்தின் நவீன காலச் சஞ்சாரத்திற்கு இட்டுச் சென்றுள்ளன. உலக
இலக்கியங்களை உள்வாங்கிக்கொண்டு தமிழும் அவற்றோடு சரிநிகராக நடைபோடும்
திறமும் மிடுக்கும் இந்தச் சிற்றிதழ்களில் இதுவரை வந்த படைப்புகளே தக்க
சான்று!
கவிதை வெளிகளில் புதிய தரிசனங்கள்...
இந்த மூன்று இதழ்களிலும் பிரசுரம் கண்ட கவிதைகளைப் பற்றி இந்தக் கட்டுரை
அமையவுள்ளது. காலந்தோறும் மாறிவரும் பயணங்களும் பாதைகளும் லெளகீகங்களும்
மனிதனின் பார்வைகளும் கவிதைகளில் பதிவாகியுள்ளன. கவிதைக்கென்று புது மொழிப்
பிரயோகம் தனித்த குரலில் இந்த மூன்று இதழ்களிலும் அழுத்தமாகக் காணக்
கிடக்கின்றன. பழைய தலைமுறை எழுத்தாளர்களின் மாறுபட்ட சிந்தனைத்
திறப்புகளோடு புதியவர்களின் துணிச்சலான சொல்வீச்சுகளும் இந்த இரு சாராரை
ஒரே வழியில் மிடுக்கோடு கைக்கோர்த்துச் செல்வதைப் பார்க்க
முடிகிறது. புளித்துப் போன சொற்களோடும் கருக்களோடும் மல்லுக்
கட்டிக்கொண்டிருந்த தமிழ்க் கவிதை இலக்கியம் உளுத்துப் போன 'அந்தச்'
சம்பிரதாயங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டுப் புதிய தோற்றத்தில்
புறப்பட்டுள்ளது. கவிதைகளில் கவிஞனின் குரலைவிட கவிதை பேசுகின்ற உணர்வுகள்
கவித்துவ வீச்சுடன் வெளிப்பட்டு வாசகர்களின் மாறுபட்ட அவதானிப்புகளுக்கும்
புரிதலுக்கும் வழிகோலியுள்ளன! கவிதை என்பது சட்டகத்தை வைத்தோ, அமைப்பியலை
வைத்தோ நிர்மாணிப்பதல்ல, உணர்விழைகளால் பின்னப்பட்ட நுட்பமான மொழி சார்ந்த
'தெய்வீக ஆக்கம்' என்பதை இந்தச் சிற்றிதழ்க் கவிதைகளை வாசிக்குந்தோறும் உணர
முடிகிறது. உலகக் கவிதை இலக்கியங்கள் இன்றைய நிலையில் வடிவத்தைவிட
சம்பத்தப்பட்ட மொழியின் வார்த்தைகள் கொடுக்கும் அதிர்வுகளுக்கே முகாமை
தருகின்றன. கவிதை என்பதன் புற அடையாளங்களை மறுத்து, நவீனமாய் வெளிப்படுவதன்
மூலம் சம்பத்தப்பட்ட மொழியொன்றும் செத்துப்போய்விடாது. மாறாக இலக்கியத்தின்
நீட்சிக்கே அது துணை போகும். தோராயமாகப் பத்து ஆண்டுகள் மட்டுமே கொண்ட
மலேசிய தீவிர நவீன கவிதைகள் இன்று சிற்றிதழ்களின் வருகையால் தம் இருத்தலை
மேலும் உறுதி செய்துள்ளன எனலாம். அயலக ஆய்வாளர் ஒருவர் மலேசிய நவீன
கவிதைக்குள் நுழைய வேண்டுமெனில், அவர் இந்தச் சிற்றிதழ்களுக்குள்தான்
புகுந்து பார்க்க வேண்டும். இவற்றின் தொடக்க கால நுழைவு 'காதல்' என்ற
சிற்றிதழிலிலிருந்து ஆரம்பமானதுதான் என்பதைப் பெருமிதத்துடன்
ஒப்புக்கொண்டாக வேண்டும். 'காதலில்' நவீன கவிதைகள் நன்கு அடையாளம்
காணப்பட்டிருந்தன.
ம.நவீன், பா.அ.சிவம், தோழி, சந்துரு, யோகி, மணிமொழி போன்றோர் யாருடைய
பக்கபலமின்றி சுயமாக நவீன கவிதைகள் பேசியபோது பெருங்கண்டனத்துக்கும்
கேலிக்கும் இலக்கானதை அத்துனைச் சீக்கிரத்தில் மறந்துவிடக் கூடுமோ? கடந்த
14.6.2009 ஆம் நாள் சிங்கப்பூரில் நவீன இலக்கியத்தை நோக்கி கருத்தரங்கில்
கே.பாலமுருகன், ஏ.தேவராஜன் ஆகியோரின் நூல் வெளியீட்டின்போது மலேசிய நவீன
கவிஞர்கள் பலர் பேராசிரியர் இராம.கண்ணபிரான் அவர்களால் அடையாளங்
காணப்பட்டனர்.
வல்லினம் கவிதைகளினூடாக...
ஜூன் - ஆகஸ்ட்டு 2008 வல்லினம் இதழில் மூன்று கவிதைகள் இடம்பெற்றிருந்தன.
மனஹரனின் கவிதைகள் அரிதாகவே படிக்கக் கிடைக்கும்படியாகவே இருந்தாலும் கடந்த
முப்பது ஆண்டுகளாகத் தமக்கென்று ஒரு கவிதை ஸ்தாபனத்தைத்
தக்கவைத்துக்கொண்டுள்ளார். அச்சு ஊடகங்களில் அத்திப் பூத்தாற்போன்றே இவரது
கவிதைகள் வெளிவருகின்றன. புதுக்கவிதைக் கூட்டத்தினரிடையே இவரது
கவிதைகளுக்கென்று ஓர் இடமுண்டு. கவிதையில் ஊடாடும் இறுக்கம், கொஞ்சம்
பிரச்சாரம், மோனையின் இயல்பான நுழைவு போன்றவை நவீன கவிதை போக்குக்குத்
தடங்கல் கொடுப்பினும், அணுகுவதற்குச் சுவை சேர்க்கத் தவறவில்லை இவரது
கவிதைகள். 'சுழியங்களின் இடமாற்றம்' எனும் இவரது கவிதை நமது நாட்டின்
அரசியல், தலைமைத்துவத்தின் கோளாறுகளையும் விளிம்புநிலை மக்களின் நிராசைகள்,
அமைதி போராட்டங்களையும் முன்வைக்கும் உணர்வில் எழுதப்பட்டது. இவர்களை
மீட்கும் இரட்சகர்களை யாசிக்கும் ஏழை மக்களின் ஏக்கத்தை இக்கவிதையில்
காணுகின்றோம்.
மெல்லிய
புல் நுனிமேல் வந்தமரும்
அணு பூச்சியாய்
எண்ணத்தில்
சத்திய ஓசை கொண்டாடிடும்.
பயணமிழந்தவர்களின்
பாசைகளுக்குள்ளே
குமுறிடும் கோபத்தில்
ஒரு நித்திய நாயகனின்
மெல்லிய கையசைக்கும் நினைவு
மின்னலாய் மொழியும்போது
புன்னகையைக் கக்கிவிட்டு
மெளனிக்கும் உதடு
கோசமிடும் கோபுரக்குரலுக்குள்
நெஞ்சுருகும் ஈரத்துடன்
போர் முரசு கொட்டாமல்
அமைதி மறியல்
அனுமதி காக்கும்
-மனஹரன்
பெண் கவிஞர்கள் மத்தியில் எடுத்த எடுப்பிலேயே நவீன கவிதைகளின் தாக்கத்தை
உள்வாங்கிக்கொண்ட ஒரு சிலரில் வீ.மணிமொழி மிகுந்த நம்பிக்கையளிக்கிறார்.
கவிதைக்கென்ற ஒரு மனோநிலை அமைகின்றபோது அச்சூழலைப் பொருத்தமான மொழியில்
இயல்பாகச் சொல்லத் தெரிந்திருக்கிறது மணிமொழிக்கு. எளிமை போல் தெரியும்
மணிமொழியின் இக்கவிதைக்குள் வாசக மனங்களுக்கேற்றபடியான வாழ்வு குறித்த
இழப்பும் தேடலும் மைய நீரோட்டமாகச் சலசலக்கிறது. இரவின் நிறம்
இருப்பதால்தான் வானழகை இரசிக்க முடிகிறது. சர்வ சாதாரணமாய் இதுவரை நம்மோடு
இருந்த ஒன்றைக் கண்டு வருகிற நாம், அது நம்மை விட்டு அகலும் நிலை
உருவாகும்போது அதன் மீது சற்றுக் கூடுதல் பிடிப்பு ஏற்படத் தோன்றுகிறது.
இரவு
நிறத்தை இழந்து கொண்டிருக்கிறது.
நிறத்தை இழந்து கொண்டிருக்கும் இரவின்
நாளைய
புதிய நிறத்தைப் பற்றிய
விவாதங்கள் தொடர்கின்றன
கருமை மறைக்கப்பட்டால்
நிலா
நட்சத்திரம்
மினுமினுப்பை இழக்க நேரிடும்.
காலங்கள் அதிவேகமாய் ஓடி வருகின்றன
இரவின் நிறத்தைப் பிடுங்கிச் செல்ல
-வீ.மணிமொழி
மொழியை அழகு செய்வார் சிலர். அதை ஆயுதமாக்கி உள்ளுணர்வைக் கிளர்த்துவார்
சிலர். வேறு சிலர் மொழியைத் தட்டையாகக் கையாண்டு இலக்கியம் என்று
புளகாங்கிதம் அடைவர். அநேகர் மொழி பற்றிய சுரணையின்றி இராசிபலனோடு மட்டும்
ஐக்கியமாகியிருப்பர். இதில் முதல் இரகத்தைச் சேர்ந்தவர்தான் கோ.முனியாண்டி.
தமிழ்க் கவிதைக்கு அழகு பூட்டி மகிழ்கின்ற உள்ளம் கோ.முனியாண்டியினுடையது.
யாப்புக் கவிதையுலகில் பலர் செய்திருப்பினும், மலேசிய கவிதையுலகில் அதை
அழுத்தந்திருத்தமாய்ச் செய்திருப்பவர் கோ.முனியாண்டி ஒருவரே! கோ.முனியாண்டி
என்றாலே அழகான சொற்களைப் புதுவிதமாய்க் கையாண்டு அழுத்தமான படிமங்களைச்
சொல்லோவியமாய்ச் சுரப்பவர் என்பதை அவரைத் தொடர்ந்து வாசித்து வருவோர்க்கு
வெள்ளிடைமலை. இவரது கவிதையின் வாசலில் நிற்கின்றபோதெல்லாம், பிரமிள் முகம்
மலர அழைப்பது போன்றே உணர்கிறேன். தும்பியொன்று பூவின் மீது
இலயித்திருக்கிறது. அதன் சிறகில் ஒரு பனித்துளி. அந்த ஒற்றைப்
பனித்துளிக்குள் பிரபஞ்சத்தையே உள்வைத்துக்கொண்டு நித்திரையில் இருக்கிறது
தும்பி. காலைப் பொழுதின் ஒரு சிறு காட்சிதான்.அந்த அதிசயத்தைக் கண்டு
கடவுள் பிரமிக்கிறார்! கடவுள் மட்டுமல்ல; கோ.முனியாண்டியின் கற்பனை
உச்சத்திலும் நாமும் வியக்கிறோம்! சொற்களிடை புணர்ச்சி விதிகளில்
முரணிருப்பினும், கோ.முனியாண்டி மலேசிய கவிதை உலகின் துருவ நட்சத்திரம்
என்பதில்
மாற்றுக் கருத்தில்லை !
மீள் துயிற் காதலீற்
றோய்ந்த
நல் அனந்த சயனத்திற்
மீளாமற் மிதக்கின்றதோர்
ஒற்றைத் தும்பி
பூவொன்றின் இதழ் மீது
வெண்பட்டுப் பனித்துளியைச்
சிறகிற்கும் மேற் சிரசிற்
மணிமுடியாய்த் தரித்தபடி
.......................
- கோ.முனியாண்டி
'The Secret' எனும் தலைப்பில் பத்தாங்கட்டை பத்துமலை Denise Levertov
என்பாரின் கவிதையை மொழிபெயர்த்திருந்தார். ஒரு கவிதை சிறுமிகளிடம் போய்
சேர்ந்ததுவும் அக்கவிதை அவர்களின் வாழ்வுக்குப் பரிச்சயமானதாக அமைந்திருந்த
அனுபவத்தையும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் கவிஞர். அந்தச் சிறுமிகள்
அக்கவிதையின் புரிதலை உள்வாங்கிக்கொண்டு அக்கணமே மறந்துவிட்டதாகச் சொல்லும்
குழந்தைகளின் உலகம் நமக்கு உளத்தியல் கூறுகளை ஞாபகப்படுத்துகிறது. உலகக்
கவிதைகளின் மாறுபட்ட பார்வைகளை நம்மோடு பகிர்ந்துகொள்ளும் பத்தாங்கட்டை
பத்துமலைக்கு நன்றி.
அடுத்து, ஜனவரி - மார்ச் 2009 வல்லினம் இதழில் பிரசுரம் கண்ட கவிதைகளை
இவ்விடம் ஆய்வுக்குட்படுத்துகிறேன். இம்முறை கட்டுரை இதழாக வல்லினம்
மலர்ந்துள்ளதால் மொழிபெயர்ப்புக் கவிதைகள் மட்டுமே இடம்பெற்றிருந்தன.
அதுவும் எம்.ஏ.நுஃமான் அவர்கள் இந்தோனேசியக் கவிஞன் சைருல் அன்வரின்
கவிதைகளில் முக்கியமான சிலவற்றை மொழி பெயர்த்துத் தந்திருந்தார். 27 வயது
வரையே உயிர் வாழ்ந்த சைருல், தம் வாணாளில் 70 கவிதைகளை மட்டுமே
தந்திருந்தார். வாழ்வின் இடிபாடுகளில் நொறுங்குண்டவன், காலனித்துவத்திற்கு
எதிராகக் கவிதைக் குரல் எழுப்பியவன், அவன் ஒரு சுதந்திரப் பறவை,
இவற்றிற்கும் மேலாக சகலத்திலும் நவீன கவியாகவே வெளிப்பட்டவன் என்பது
அவசியம் குறிப்பிட்டாக வேண்டும். சுகர்னோ சற்றே சமாதானத்தைக்
கைக்கொண்டாலும் அன்வர் மிகுக் காத்திரமாக வெளிப்பட்டாலும் இருவரது
நோக்கமும் விடுதலையை மட்டுமே முன்னிறுத்துகின்றன என்று தமது கவிதையில் கோடி
காட்டுகிறார். பாரதத்தில் மகாத்மாவும் நேதாஜியும், இலங்கையில் விடுதலைப்
புலிகளும் பிற போராட்டவாதிகளும் வேற்றுக் கோட்பாட்டைக் கடைபிடிப்பினும்,
நோக்கம் என்னவோ மக்கள் விடுதலையை முன் வைத்தே நகர்த்தப்பட்டிருந்தன.
அன்வரின்,
நமது கப்பல்கள் நங்கூரத்தை இழுப்பதும் போடுவதும்
உனது நரம்புகளிலும் எனது நரம்புகளிலும்தான்
எனும் வரிகளே இதற்குச் சான்று.
மரணத்தின் கடைசிச் சொட்டில் நின்றபடி அதன் குரூரத்தைக்கூட கவிதையாய்த் தர
முடிகிறது சைருல் அன்வரால்!
இந்த முகம் காயங்களால் மூடப்பட்டிருக்கிறது
பெருகிவரும் ஓர் அழைப்பைக் கேட்கிறேன்
- என் இதயத்தில்? -
காற்று வீசிச் செல்லும் ஒலிதானா அது ?
எல்லாமே தடிக்கிறது, எல்லாமே இறுகுகிறது
எனக்கு ஒன்றும் தெரியவில்லை
போய் வருகிறேன்...!!
எனும் மாறுபட்ட நோக்கில் வெளிப்படுத்துவதானது அவரது கவிதைப் போராளியாகவே
அடையாளப்படுத்துகிறது. காதலை அதன் வலியுடன் ஏற்று அதை இலாவகமாய் வாசகனின்
உள்ளத்தில் பாய்ச்சுவது எல்லோருக்கும் வாய்க்காது. உண்மைக் காதல் எத்தகைய
நிறத்தையுடையது எனும் உள் ரூபத்தைக் காட்ட தன் காதலிக்குக் கூறும்
பின்வரும் வரிகள் எளிமையானவையெனினும் ஆழமாகவே வேர் பிடிக்கின்றன.
நீ விரும்பினால் உன்னை மீண்டும் ஏற்கிறேன்
முழுமனதுடன்
இன்னும் நான் தனிமையில்
நீ முன்பு இருந்தவள் அல்ல என்பது எனக்குத் தெரியும்
இதழ்கள் பிடுங்கப்பட்ட ஒரு மலர்
ஆனால்
ஒரு நிலைக்கண்ணாடியுடன்கூட
உன்னைப் பகிர்ந்துகொள்ள மாட்டேன்
என்று சொல்வதன் வாயிலாக அழுத்தமான காதலை நம்மாலும் கிரகிக்க முடிகிறது.
இப்படியாய்க் கவிதை வெளியில் தம்மைப் பிரஸ்தாபித்துக் கொண்ட சைருல் அன்வர்
முப்பத்து மூன்று வயதில் வாழ்வை முடித்துக் கொண்ட ஆத்மாநாமின் ஞாபகத்தை
நம்மில் ஏற்படுத்தத் தவறவில்லை. சைருல் அன்வர் நவீன கவிஞனைப் பற்றிய
புரிதலுக்கு வழியமைத்துக் கொடுத்த பேராசிரியர் எம்.ஏ.நுஃமான், சிறிது காலமே
மலேசியாவில் தங்கியிருந்தாலும் நவீன கவிதைத் துறைக்கு அவர் வழங்கிய
பங்களிப்பை நன்றியோடு நினைவு கூர்வதுவே நாம் அவருக்குக் காட்டும்
மரியாதையாகும்.
அநங்கம் கவிதைகளினூடாக...
மலேசிய சிற்றிதழ்ப் பங்களிப்பில் தற்போது முனைப்புடன் இயங்கி வருகின்ற
அநங்கம் கடந்த ஜூன் 2008- லிருந்து காலாண்டிதழாக இதுவரை மூன்று இதழ்களைத்
தந்துள்ளது. அயலகத் தமிழ் நவீன கவிதைகளோடு சிங்கப்பூர் பாண்டிதுரை,
ரமேஸ்.டே, தோழி, ஏ.தேவராஜன், இதழாசிரியர் கே.பாலமுருகன் ஆகியோரின்
கவிதைகளும் இடம்பெற்றிருந்தன.
கடுவன் பூனை பிற பூனைகளின் மீது செலுத்தும் ஆதிக்கத்தை ஒற்றைக் குறியீடாகக்
கவிதை நெடுக வியாபித்திருப்பதைப் பார்க்கிறோம். இக்கடுவன் எனும் ஆண்
பூனையைக் கொண்டே வாசகர்கள் தங்கள் புரிதலைத் தத்தம் சூழலுக்கேற்ப
உள்வாங்கிக்கொள்ளலாம். ஆதிக்கம் எனும்போது ஆணடிமை, தலைமைப் பித்து,
ஆதிக்கத்தின் தவறான ஆளுமை அல்லது துஷ்பிரயோகம் என அத்தளத்தை விரிவாக்கிக்
கொள்வதன் மூலம் இக்கவிதையை மிக எளிதாக உள்வாங்கிக் கொள்ளலாம்.
பூனைகள்
நினைப்பெல்லாம்
உயர்ந்துவிட்டதாகத்
தலைகால் புரியாத
கடுவன் பூனைகள்!
புதிதாய் வரும் பூனைகளை
எலியாய் நினைத்து
ஏப்பம் விடுகிறது!
............................
பூனைகளுக்கும் புரியும்
நிந்திக்கப்பட்ட நிர்ப்பந்தத்தாலே
சாதுவாக ஓடுகிறது!!!
-பாண்டிதுரை
இன்னொரு கவிதை நகர வாழ்வின் அழுத்தங்களையும் அவற்றை
எதிர்கொள்ளும் வகை தெரியாமல் புகலிடம் தேடி அல்லாடும் மனிதனையும் நன்கு
படம் பிடித்துக் காட்டுகிறது. இன்றைய நகர வாழ்வின் அகோரங்களை மனக் கண்ணால்
படம் போட்டுப் பார்த்தால் தாக்குப் பிடிக்க முடியாத விளிம்பு நிலை
மனிதர்களின் வாழ்விடங்களும் அவர்களைச் சுற்றிச் சுழன்றபடி நிகழும் சமூக அவல
நோய்களும் தெளிவாகத் தெரியும். பாண்டிதுரை, தமது கவிதையின் இறுதியில்,
..............................
மரணத்திடம்
யோனிகளுடன் உரசிக்கொண்டிருக்கும்
குறிகளும் சேர்ந்து மரித்துப் போக
பிரபஞ்சம் முழுமைக்கும்
மரணம் விரட்டத் தொடங்கிற்று
என்று முடியும் வரிகளில் மரணத்தைப் பற்றிக் கவலைப்படாத கட்டுப்பாடற்ற ஆண்
பெண் உறவின் உச்ச அற்பத்தையும் அதனால் ஏற்படும் தவிர்க்கவியலா மரணத்தையும்
எச்சரிக்கையாகப் பதிவு செய்கிறார் சிங்கப்பூர் பாண்டிதுரை.
ஒரு பரதேசி விட்டுச் சென்ற கவிதைகள் எனும் தலைப்பைத் தாங்கிய ரமேஸ்.டேயின்
கவிதை வருகிறது. பரதேசி என்பதற்கு பிற நாட்டான் அல்லது மெய்ஞ்ஞானி என்று
அர்த்தம் கற்பிக்கிறது அகரமுதலி. ரமேஸ்.டே இக்கவிதையில் தம்மைச்
சுதந்திரமானவன் எனவும் தம்மை யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும்
பயன்படுத்திக் கொள்ளலாம் எனப் பிரகடனப்படுத்துவதுதான் நவீன
கவிதையுலகம். இக்கவிதையில் வரும் பரதேசிக்கு வீடொன்றுண்டு. அவனைக்
கட்டுப்படுத்த யாருமிலர். இலக்கிய விவாதம் புரிய தம்மைத் தயார்நிலையில்
வைத்துக் கொள்கிறார். வம்ச விருத்திக்கும் தமது ஆண்மை தயார் எனக் கூறி,
இறுதியில் எதுவும் நிரந்தரமில்லையென வாழ்வியல் தத்துவத்தைச்
சொல்லிவிடுகிறார்.
.................................
எல்லாம் சரி,
படைத்தவனை நானும்
என்னை, படைத்தவனும்
தேடிக்கொண்டு போகையில்
தொலைத்தும் -
தொலைந்துவிட்டோம்
எங்களைக் கண்டுபிடிப்பது யார்?
- ரமேஸ் .டே
இது முகமூடிகளின் காலம் போலும்! நவீன கவிதைகளில் அநேக கவிதைகள்
முகமூடிகளைக் குறியீடாகத் தாங்கி வருகின்றன. தம்மைச் சுற்றியுள்ளவர்களின்
நிச்சயமற்றதும் போலியுமான உறவு நிலையைக் குறித்து அச்சத் தொனியுடன்
வெளிப்படுகிறது தோழியின் கவிதையொன்று. முகமூடி மனிதர்களை ஒரு பெண்
எதிர்கொள்வதற்கும் ஓர் ஆண் எதிர்கொள்வதற்கும் நிறையவே வேறுபாடுகள் உள்ளன.
தவிர, பெரும்பாலான முகமூடி கவிதைகள் ஆற்றா உணர்வையே வெளிக்கொணர்வதால்
மாற்றுச் சிந்தனையில் அணுக ஒன்றுமில்லை.
..............
எது முகமூடியற்றதென்பதை
மீண்டும் மீண்டும் பரிசீலிக்கும்போதெல்லாம்
தான்
திறந்த வெற்றிடத்தைத்
தேடி ஓடிவிடுகிறேன்!
- ஏ.தேவராஜன்
மனிதன் தான் சிருஷ்டித்த கடவுளுக்கும் கழிவிரக்கம் காட்டும் போக்கில்
புனையப்பட்டது 'கடவுளைக் கொன்றால் பிழைக்கலாம் ஆனாலும் பாவம்!' எனும்
ஏ.தேவராஜனின் கவிதை. மாயப் பொருளான கடவுளர்கள் நவீன வாழ்க்கையில் படும்
அவஸ்தைகளை என்னவென்று சொல்வது? கடவுளை இருத்தலை மறுதலித்து மனிதத்தையும்
இயற்கையையும் வாழ வைக்க கவிஞனின் மனம் துடிக்கிறது. அதற்காகக் கடவுளைக்
கொல்வது பாவமல்லவா? அவனும் ஒரு படைப்புத்தானே எனக் கடவுளுக்கும்
உயிர்ப்பிச்சை அளிக்கிறார் ஏ.தேவராஜன். இதுவரை கட்டப்பட்ட மரபார்ந்த
சிந்தனையை உடைப்பதும் முரண்படுவதும் நவீன கவிதையின் முக்கிய அம்சம்.
இக்கவிதையும் அதைத்தான் நிகழ்த்தியிருக்கிறது.
.....................
மாயை சூழ்
இயற்கையிலிருந்து
கடவுளை அப்புறப்படுத்துவதையும்
பாவம் என்கிறது
பாழாய்ப்போன மனம்
எங்கேயாவது வாழ்ந்து தொலைக்கட்டும்
என்கிறது
மனதிற்குள் ஒரு மனம் !
- ஏ.தேவராஜன்
நவீன கவிதைகளில் கடவுளின் சாயல்கள் மனிதனிடம் அதிகமாகவே பொருந்தி
வருகின்றன. கடவுளை அன்பின் வடிவம் என்று சொல்கிறோம். அவன் புறத்தோற்றத்தில்
ஆயுதங்களும் அக்கினியும் இணைந்தே வெளிப்படுகின்றன. இன்றைய நகர கட்டமைப்பில்
மனிதனும் அங்ஙனமே வெளிப்படுகிறான். இக்கவிதையை வாசிக்கின்றபோது மலேசிய
தமிழர்கள் மத்தியில் தாண்டவமாடும் குண்டர் கும்பல்தனம் அப்படியே பொருந்தி
வருகிறது. வாழ்வின் நிமித்தம் குரூரமாய்த் தோன்றும் மனிதனின் அதாவது இன்றைய
தமிழ் இளைஞனின் பழி வாங்கும் தோரணையின் பிரகடனம் இக்கவிதையின் இறுதியில்
அப்பட்டமாய்ப் பதிவாகியுள்ளது. கே.பாலமுருகன் நகர மனிதனின் சிதைவுகளைப்
பெரும்பாலான கவிதைகளில் அழுத்தமாகச் சொல்லியுள்ளார்.தவிர, கடவுள்
சிதைந்ததற்கான காரணம், மனிதன் சாத்தானாக மாறியதற்கான் காரணம் யாது என்பதை
ஒரு பட்டியலே போடலாம். அது பெரும் விவாதத்திற்கு இலக்காகும். இதுதான்
இன்றைய நவீன வாழ்வு ! கே.பாலமுருகன் பதிவு செய்துள்ளார் இப்படி:
....................
கடவுள்
சிதைந்துவிட்டார்
இனி நான்
சாத்தான்
என்று அலட்சியமாக
வந்தமர்கிறான்
மற்றுமோர் இரவில் !
- கே.பாலமுருகன்
தொடர்ந்து நவம்பர் 2008- இல் மலர்ந்த அநங்கத்திலும் அயலகக் கவிதைகளின்
பிரவேசம் அதிகமாகவே வெளிப்பட்டது. நவீன உலகில் தமிழ்க் கவிதைகள்
எவ்வாறெல்லாம் மாறியிருக்கின்றன என்பதை வாசகர்களுக்கு அளிக்க
முனைந்துள்ளார் இதழாசிரியர் கே.பாலமுருகனோடு, ப.மணிஜெகதீஸ், ரமேஸ்.டே,
ஏ.தேவராஜன் ஆகியோர். இவர்களில் ப.மணிஜெகதீஸ் மிகவும் குறைவாகவும் அதே வேளை
நிறைவான கவித்துவத்தோடு கவிதை தருவதில் உறுதி செய்துள்ளார். ப.மணிஜெகதீஸின்
கவிதை நுண் அரசியல் பேசுகிறது. பெரும்பாலும் நடைபெறுகின்ற கவிதை, கவிதைத்
தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவையும் அங்கு சம்பந்தமேயில்லாதவர்கள்
கவிதையைப் பற்றி பேசுவதையும் கவிஞன் தன் சுயம் சீண்டப்படுவதையும் அதனால்
கவிதையாய் இயங்கும் கவிதைகள் கேலிக்குள்ளாவதையும் மிக நேர்த்தியாகச்
சொலப்பட்ட
நவீன கவிதை இது.
சொற்களின் வித்தை
நான் சொல்லாத வார்த்தைகளின்
தொகுப்பு
இன்று வெளியீடு காண்கிறது
சொற்களின் மொத்த குத்தகைக்காரன்
ஒருவன் வெளியீடு செய்து
பேசுவதாக ஏற்பாடு
சொல்லாத சொற்களின் வித்தையைப்
பற்றி அவனுக்குப் பரிச்சயம் அதிகம்
எனத் தேர்ந்த சொற்களின்
சொந்தக்காரர்கள் சொல்லியிருக்கிறார்கள்
அவன் பேசப் பேச
என் தொகுப்பில் குவிந்திருந்த
சொற்கள் ஒவ்வொன்றாய்
உதிர்ந்து விழத் தொடங்கின
- ப.மணிஜெகதீசன்
நவீன கவிதைகளை நன்றாய் எழுத வரும் இவர் இன்னும் அதிகமாய் எழுத வேண்டும்
என்று சொல்வதற்கு நான் யார்?
பிப்ரவரி 2009-இல் வெளிவந்த அநங்கத்தில் சிங்கப்பூர் எம்.கே.குமார்,
மற்றும் இராம. வயிரவனோடு ரமேஸ்.டே, பா.அ.சிவம் கவிதைகளும்
இடம்பெற்றிருந்தன. இவற்றில் எம்.கே.குமாரின் கவிதைகளில் புதுக்கவிதையும்
நவீன கவிதைகளும் ஒரு சேர அமைந்திருந்தைப் பார்க்க முடிந்தது. ஆண்-பெண்
உறவில் ஏற்படும் புரிந்துணர்வின்மையையும் அதனூடே தோன்றும் விரிசலும்,
இவ்வாறாக வெளிப்படும் மனச் சிக்கல்கள் பழைமைதானெனினும் அவற்றை நவீன
மொழியில் சொல்வது மொழிக்குத் தனியழகைப் பிரதிபலிப்பதாகவே தோன்றுகிறது.
உடம்பொடு அலைதல்
.........................
பாதுகாப்புச் சுவர் தேடி
இருவரும் உமிழத் தொடங்குகிறோம்
உனது அந்தரங்கத்தை
வெளிக்கொணர்வதில் நானும்
எனது இயலாமையைக் கீறிக்காட்டுவதில்
நீயும்
வெறுமை வெளியில் தகிக்கின்றன
விரக அலைகள்
உரு வெளியில் நகரும் பிம்பத்தை
எனது வெளிச்சாயலில் ஒருவன்
- எம்.கே.குமார்
இது போல இவரது 'புணர்வு விளையாட்டு' எனும் மற்றொரு கவிதை இற்றை நாகரிக
மனிதர்களின் சிதைந்த கலாச்சாரத்தையும் கட்டுப்பாடற்ற பாலியல் வழக்கத்தையும்
அதன் பின்னணியில் நகர வாழ்வு வடிவமைத்துள்ள சமூகச் சிக்கல்களையும், இன்றைய
மனிதன் வாழும் விதம் மறந்து சிற்றின்பத்தில் சிக்குண்டிருப்பதை அழகாக
வெளிப்படுத்துகிறது இக்கவிதை.மேனாட்டுச் சூழலுக்கு ஒத்துப் போகக்கூடிய இந்த
நாகரிக வாழ்வு, நகர வாழ்வைப் புதிதாய் எதிர்கொள்ளும் தமிழ்ச்
சமூகத்துக்குப் புதிய நெருக்கடிதான். இன்றைய நவீன கவிதைகளின் வாயிலாகத்தான்
அதன் வலியை இயல்பாகச் சொல்ல முடியும் என்பது தக்கச் சான்று. இக்கவிதையை
இன்னும் ஆழமாய் விசாரிக்கத் தோதானது.
முண்டமாய் அலையும் மனிதர்களின்
எண்ணிக்கை
நேற்றிரவின் பனிப்பொழிவிற்குப் பின்
கூடிவிட்டிருக்கிறது
...........................
என்று தொடங்கி இறுதியில்,
முண்டங்களைச் சிறிதும் உணராது
பறந்த நிலையில் புணர்ந்து கொண்டிருக்கின்றன
நேற்றிரவின் பனிப்பொழுதிற்குப் பிறகு
மோகம் கொண்ட
இரு தட்டான்கள்
- எம்.கே.குமார்
'மலிவான பொருளெதுவோ' எனும் எழுதும் இராம வயிரவனின் கவிதை, சொந்த உயிர்களையே
துச்சமாக நினைக்கும் மனிதனின் போக்கைச் சாடுவதாய் உள்ளது. நவீன வாழ்வைப்
படம்பிடித்த இராம.வயிரவன், இந்தக் கவிதையில் அதிகபட்ச பிரச்சாரத்தை முன்
வைப்பதாகத் தோன்றுகிறது. அதனால், ஒரு கவிதையை அணுகுகின்ற மனோபாவம் எனக்குள்
தடைபட்டுப்போனது.
மலிவான பொருளெதுவோ
........................
இன்னுயிர்க்கு
ஏன் இந்த நிலை?
துப்பாக்கிகளே
தோட்டாக்களுக்குப் பதில்
அன்பை நிரப்புங்கள்!
'அன்பு' மலிவாகட்டும்
'உயிர்கள்' விலையேறட்டும்
- இராம.வயிரவன்
என்று முடியும் கவிதையில் ஏதோ மலைப்பிரசங்கம் செய்வது போலுள்ளது.
'விசாலப் பார்வையால் விழுங்கு வையத்தை! மானுட சமுத்திரம் நான் என்று கூவு!
அணைத்துக் கொள், சங்கமமாகு' எனும் பாவேந்தர் பாரதிதாசனின் கூக்குரல்தான்
ஞாபகத்திற்கு வருகிறது.
'இயல்பான உணர்ச்சிகளின் பொங்கல்தான் கவிதை' என்பார் மேனாட்டு நவீன கவிஞன்
ஜான்டன். மரபார்ந்த சம்பிரதாயங்களிலிருந்து மீண்டு இயல்புநிலையைப்
படைப்பதற்கு நமது தமிழுக்கு எல்லாத் தகுதிகளும் உள்ளன. மொழியின் மூலம்
ஊடறுக்கும் உணர்ச்சிகளை வாசகன் மனதில் ஊடுருவ நவீன தமிழ்க் கவிதைகளால்
சாத்தியமே என்பதைத் தொடர்ந்து வரும் பா.அ.சிவத்தின் கவிதை உயர்ந்த சான்று.
'அம்மாவின் துர்க்கதை' யெனத் தொடங்கும் இக்கவிதை தமக்குள் மூன்று கதைகளைச்
சொல்ல விழைகிறது.
'கதை ஒன்று' கவிதையில் அம்மாவின் ஈமச்சடங்கு! இறுதிக்கட்டத்தில் அம்மாவின்
பிரேதப் பெட்டி மூடப்படுவதற்கு முன், இதுவரை செய்யாத
'கெளரவிப்புகளையெல்லாம்' இரத்த உறவுகள் பதிவிசாகச் செய்ய முனைவதையும் அதன்
மூலம் அம்மாவின் ஆன்மா சுவர்க்கத்திற்குச் செல்வதையும் இயல்பாகச் சொல்லி
சோகத்தை மிக இலாவகமாக மனதுக்குள் நுழைத்துவிடுகிறார் பா.அ.சிவம். அலட்டிக்
கொள்ளாமல் ஒன்றை அதன் தன்மைகளோடு அணுகுவது நவீன, பின் நவீனத்துவ கூறுகளில்
ஒன்று. கவிதையில் செய்ந்நேர்த்தி திறம் கொண்ட பா.அ.சிவம் அதை வெகுச்
சிறப்பாகச் செய்திருக்கிறார். வாழும் காலத்தில் செய்வதை விடுத்துப்
போலிமையும் பேடிமையும் கொண்டு உலகியலுக்கான சம்பிரதாயத்திற்கே முன்னுரிமை
வழங்குகின்ற படித்தவர்கள் நிரம்பிய நகரியல்
'மடச்சாம்பிராணிகளின்' கூட்டத்தின் முகத்தைக் காட்டும்போது, இதுவரை நம்
அம்மாவுக்கு நாம் என்ன செய்திருக்கிறோம் எனக் கேட்கத் தோன்றுகிறது. 13
ஆண்டுகளுக்கு முன் வாசித்த மனுஷ்யபுத்திரனின் கவிதை ஒன்று ஞாபகத்திற்கு
வருகிறது. அதில், மனிதனின் போலி வைராக்கியத்தைச் சொல்கிறார் இப்படி,
'இவ்வளவுக்குப் பிறகும்/ அழாதிருந்தோம்./ அழுகை வராமலில்லை./ ஒரு
வைராக்கியம்/ உங்கள் முன்னால்/ அழக்கூடாது. சரி. பா.அ.சிவத்தின் வரிகளுக்கு
வருவோமா?
கதை ஒன்று
.............................
அலங்காரம் கொஞ்சம்
செய்து கொண்ட பின்னர்
ஏனென்று தெரிந்து
கொள்ள விரும்பாச்
சடங்குகளுக்குப் பின்னர்
இறுதியாய் ஒரு முறை
பார்த்துக் கொண்ட பின்னர்
அம்மாவின் பெட்டி மூடப்பட்டது
- பா.அ.சிவம்
இது போல சிவத்தின் ஏனைய இரு கவிதைகள் அம்மாவின் இழப்பையும் அதன்
துரத்தலையும் மீள்பார்வையோடு தனித்த குரலில் சொல்கின்றன.
மெளனம் கவிதைகளினூடாக...
மெளனம் தற்காலக் கவிதையிதழின் முதல் மூன்று இதழை மையமிட்டு இவ்வாய்வு
அமையவிருக்கிறது. ஏராளமான நல்ல கவிதைகளிருப்பதால் சூழல் கருதி சில கவிதைகளை
நுட்பமாக ஆய்ந்தும் பல கவிதைகளை அவற்றின் கவித்துவ வரிகளை மேற்கோள்களாகக்
காட்டலாம் என எண்ணியுள்ளேன். நாட்டின் அனைத்துக் கவிஞர்களும் ஒரு சேர
மெளனம் சிற்றிதழில் காணக் கிடைப்பதுதான் இலக்கியப் பொற்காலம் என்பேன்.
மெளனத்தின் கவிதைக்கான இலக்கை நாம் அடைந்துவிட்டதாக எனக்குப் படுகிறது. 90%
கவிதைகள் நம் கவனத்தை ஈர்க்கவே செய்கின்றன. கவிதையின் வெளிப்பாட்டு
முறை,பார்க்கின்ற கோணம், மரபார்ந்த சிந்தனையினின்று முரண்பட்டு
வெளிப்படுதல், இலக்கியத் துணிச்சல், மொழியைப் புதுமையாகக் கையாளுதல்,
பரிசோதனை முயற்சி மொத்தத்தில் நவீன-பின் நவீனத்துவக் கோட்பாட்டைக் கொண்ட
கவிதைகளே இங்கு இடம்பெறவ்ள்ளன. மெளனம் முதல் இதழ் அறிமுக இதழ் என்பதால்
அதன் ஆசிரியரே அதிகமான கவிதைகளை எழுதியிருந்தார். அவரோடு நண்பர்
ந.பச்சைபாலனும் அதிகமான கவிதைகளைத் தந்திருந்தார்.
மெளனம் ஜனவரி 2009 ஊடாக...
பா.அ.சிவத்தின் 'இடைப்பட்டவை' எனும் கவிதை தோட்டப்புறத்து
இளம்பெண்ணொருத்தியின் மானசீகக் காதலையும் அது நகர்ப்புறப் பெண்ணின்
வருகையால் தன் காதல் காவு கொடுக்கப்படுவதை அந்த அபலைப் பெண்ணின்
மொழியாடலாகச் சொல்லப்பட்ட மெல்லிய கையறு காதல் கவிதை. காதல்
கூடாமற்போனதற்கு இடையில் நடந்தவை என்ன என்பதை சம்பத்தப்பட்ட இளைஞனின் காதல்
குறித்த உணர்தல் என்ன என்பது நம் மனதுக்குள் எழுகிறது. கவிதையின் இறுதிக்
கண்ணியை விட இந்த வரிகளில் என் மனம் தொற்றிக் கொண்டது.
வயசுக்கு வந்தவுடன்
குறுத்தோலை, பச்சை மட்டை நான் கட்ட
இடைப்பட்ட துவாரத்தில்
ஒளிந்து ஒளிந்து பார்த்தாயே...
அப்பொழுது சொல்லியிருக்கலாமே !
- பா.அ.சிவம்
ம.நவீனின் சர்ச்சைக்குரிய இரண்டு கவிதைகள் இடம்பெற்றன.
கூண்டுக்குள் இருந்தபடியே
வெளியில் புணரும் தெருநாய் கண்டு
ஏக்கமாய்த் தூங்கும்
'ஜோனி' யின் குறி
விரைத்துச் சட்டெனச் சுருங்கும்
எதையோ நினைத்து.
0
பள்ளி முடிந்து திரும்பும் தம்பி
தெருவில் புணரும் நாயை
வியந்தபடி என்னைப் பார்ப்பான்
நான் 'சண்டை' என்பேன்!
- ம.நவீன்
முதல் கவிதை முழுக்க முழுக்க வாழ்வு முடக்கப்பட்ட, ஏக்கத்தின் வெளிப்பாடாக
அவதானிக்கத் தோன்றுகிறது. நாயின் புணர்தல் என்பது உரிமையும் உணர்வும்
சார்ந்த ஒரு செயல்பாடு. பாமர நாய்கள் அனுபவிக்கின்ற சின்னச் சின்ன
இன்பங்களைக்கூட சொகுசு நாய்களால் அனுபவிக்க முடியவில்லை. இக்கவிதையை மேலும்
விசாலப்படுத்தி இந்த நாட்டுச் சமத்துவக் கோட்பாட்டின் முரண்பட்ட
சூழலுக்குப் பொருத்திப் பார்த்தால், சுதந்திர நாட்டின் மூன்றாந்தர
குடிமக்களின் ஏக்கங்களும் நிறைவேறா ஆசைகளும் புரிய வரும். கவிதையில் வரும்
ஜோனியின் குறி எனும் சொற்றொடர் வீரியமான பொருளைக் கொண்டு வருகிறது.
இரண்டாவது கவிதையின் உள்ளார்த்தம்கூட மறைமுக அரசியல் பொருளைக்
கொண்டுவருவதாகவே படுகிறது. 'நான் சண்டை என்பேன்' எனும் சொற்றொடர்
மறுக்கப்பட்ட உரிமையை மறக்க நமக்கு நாமே சமாதானப்படுத்திக் கொள்ளக் கூறும்
வாசகங்கள்தாம். குறி என்பதும் புணர்தல் என்பதும் மலேசிய கவிதை உலகுக்கு
மிகப் புதிது. நவீன கவிதைகளில் எதுவும் கவிதையாகலாம் வாசகன் விசாலமானவனாக
இருந்தால்.
அடுத்து, பூங்குழலி வீரனின் தலைப்பற்ற கவிதை வருகிறது. நவீன கவிதைகள் தனி
மனிதனின் தவிப்பையும் அவனுக்குள் நிகழ்ந்தேறும் உள்மனப் போராட்டங்களையும்
சிற்கொடிந்த ஒரு பறவையின் ஏக்கங்களையும் மிகவும் நுட்பமாகப் பதிவு
செய்வதில் பெரும் வெற்றி பெற்றுள்ளன எனலாம்.மனம் சுமந்த வலிகளை மெல்லிய
இழையில் நின்றுகொண்டு அதிகபட்ச சொல்லாடலோ அலங்கார சொற்பிரயோகமோ இன்றி
கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் இயல்பான போக்கில் வாசகனுக்குள் நுழைந்து
அழுத்தமான தடத்தைப் பதிவு செய்வதில் இக்கவிதை கவிதையாய்
நிற்கிறது.குடும்பத் தலைவனின் மரணமும் அதற்குப் பின்னால் துரத்திக்கொண்டு
வரும் இழப்புக் குறித்த துக்கமும், குடும்பத்தில் இருக்கின்ற அனைவரிடமும்
சொல்லவொண்ணா உளைச்சலை உண்டாக்கி ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறப் பெலனின்றி
அதைப் பார்த்துக்கொண்டு மெளனமாய் அழுகின்ற இக்கவிஞரின் சொற்களிலிருந்து
கரைந்து வந்த அழுகை நம்மையும் தாக்குகிறது.இந்த உணர்வை வேறொரு கவிதை
வடிவில் சொல்வது ஒன்று மிகையாக இருக்கும் அல்லது ஜோடனையாக
இருக்கும்.இக்கவிதையின் சில இடங்களில் உரைநடைத் தன்மை மேலோங்கியிருப்பினும்
ஒட்டமுத்த அமைப்பில் உணர்வைக் கொண்டு செல்வதில் வெற்றி கண்டுள்ளது. 'பிரிவு
சுமந்த மனத்'தின் வலி தாக்கத்தை உண்டாக்குகிறது.
காலக்கயிற்றில்
தொங்கிக் கொண்டிருக்கிறது
வாழ்க்கை...
வாழ்விற்கும் மரணத்திற்குமான
சோகத்தினைச் சுமந்தபடி
யாருக்கில்லை
பிரிவின் துயரம்...?
கிழித்துக் கிழித்து
ஒட்டிய காகிதமாய்ப்
பிரிவு சுமந்த மனம்...
- பூங்குழலி வீரன்
தனிமையின் துன்பத்தை ஆழமாகச் சொல்கிறார் வீ.மணிமொழி தனது ஆல்பம் என்ற
கவிதையில். நண்பர்களோடு மகிழ்ச்சியாக இருந்த காலத்தை மென்மையாய் அசை
போடுகிறது கவிதை. முத்தாய்ப்பு வரிகளாக,
தனிமை கண்ணீரை
நீண்டதொரு புத்தகத்தில்
கணக்கெடுத்துக் கொண்டிருக்கையில்
கையில் தட்டுப்பட்ட ஆல்பம்
முன்பு
அதிகமாக நண்பர்கள் இருந்ததை
உறுதிப்படுத்தியது.
- வீ.மணிமொழி
கோ.புண்ணியவானின் புதிர் எனும் கவிதை மிக அழகான அலட்டிக் கொள்ளாத நவீன
கவிதை. ஒரு சிறு நிகழ்வே கவிதையாகிவிடுகிறது புண்ணியவானுக்கு.
எல்லோருக்கும் தட்டுப்படுகின்ற உரையாடல்தான். சந்திப்பின்போது ஒருவர் சொல்ல
வேண்டிய அதிமுக்கிய தகவலைப் பிறகு சொல்கிறேன் என்று கூறிய பிறகு அந்த
வினாடிகளுக்குப் பிறகு மனம் படும் பாட்டை அழகாகக் கவிதையாக்கியிருக்கிறார்
புண்ணியவான்.
எப்போதுமே பிறகு சொல்கிறேன்
என்ற தலைப்புச் செய்தியின்
புதிர்த்தன்மையோடு
புறப்பட்டுவிடுகிறார்
ஊகித்தறியா ஆர்வத்தில்
கோடிட்ட இடங்களை
நிரப்பிய வண்ணம் கழிகிறது பொழுது
அவரின் பிறகு சொல்கிறேன்
ஒற்றைச் செய்தியைத் தாண்டி
என்னிடம் நிறையவே சேர்ந்துவிடுகின்றன
புதிர்கள்.
- கோ.புண்ணியவான்
பிரிகை எனும் தலைப்பில் வந்த ஏ.தேவராஜனின் கவிதை மனித இருப்பின் அடையாளத்தை
முன்வைக்கின்ற தத்துவார்த்த விரக்தி சூல் கொண்ட கவிதையாகும்.
ஆடைகளை உரித்து
முகத்தையும் அகத்தையும்
எனை நேசித்தவர்களிடமெல்லாம்
ஆளுக்கொன்றாய் ஒப்படைத்துவிட்டுப்
பொட்டல் வெளிதனில்
விழிபடும் தலந்தோறும்
நடந்துகொண்டிருக்கிறேன்...
எங்கேனும் ஒரு திருப்பத்தில்
ஒரு வண்ணத்துப் பூச்சி
'நீ யார்?'
என்று கேட்க நேரிடில்
என்ன செய்வது?
- ஏ.தேவராஜன்
அது போல இவரது இன்னொரு கவிதை மதுப்பித்தனின்று வெளிப்படும் சொற்களின்
உன்னதத்தை உயர்த்திப் பிடிக்கும் கவிதையாய், அவனை உயர்த்திப் பார்க்கின்ற
கவிதையாக உய்க்க முடிகிறது.
மதுக்கடையினின்று புத்தன்
மது நெடிதானெனினும்
அன்னியோன்னியமாய் வந்துதிர்த்த
அந்த வழிப்போக்கனின்
இலக்கணம் மீறிய குழறிய சொற்கள்
போதையை மட்டும் வெளிக்காட்டி
உள்ளுக்குள் நூறு தத்துவார்த்தங்களையும்
கோட்பாடுகளுக்கப்பால்
'இஸங்' களையும்
அநாயசமாய்த் தெளித்தவனுக்குப்
போகிற போக்கில் பாவம்
ரெண்டு வெள்ளியையாவது
நீட்டியிருக்கலாம் !
ஆதி மொழிகள்
பொய் பேசாதிருக்க முடியவில்லை
காலாகாலமாய்
உண்மைகளாகிவிட்ட
பொய்களையும்கூட!
- ஏ.தேவராஜன்
ஏ.எஸ்.குணா இந்த நாட்டில் ஹைக்கூவை ஹைக்கூவாக எழுதுகின்ற சிலரில் அடையாளங்
காணப்பட்டவர். குணாவின் புதுக்கவிதைகளைவிட ஹைக்கூ எப்பொழுதுமே கவர்வதாக
உள்ளது. பார்க்கின்ற காட்சிகளை அப்படியே 'கிளிக்' பண்ண வேண்டியதுதான்.
இதில் ஹைக்கூ கவிஞனின் தலையீடோ மாயப் பொருளைச் சொற்களால் உணர்த்தவோ கூடாது.
குணா மிகத் தெளிவாகவே உள்ளார்.
ஊதாரித் தந்தை
பழம் பொறுக்கும் சிறுவன்
எதிர்காலம் சொத்தை
ஆடம்பரமாய் அலங்கார விளக்குகள்
இரவுகூட பகலாகிறது
குடிசையில் ஏழை
வாரம் ஒரு முறை
தரிசனம் கிடைக்கிறது
நாளிதழில் நடிகை
அரசியல் பரப்புரை
ஆயிரக்கணக்கில் மக்கள்
இலவச சாப்பாடு
இரவு தோறும்
குடும்பமே கண்ணீரில்
சின்னத்திரை அரங்கேற்றம்
புகை மூட்டம்
மூச்சு முட்டுகிறது
வெண்சுருட்டுடன் மாணவர்கள்
போன்ற ஹைக்கூக்கள் மலேசிய ஹைக்கூக்களாக அமைந்துள்ளமைக்காக ஏ.எஸ்.குணாவுக்கு
ஒரு பாராட்டுத் தெரிவிக்கலாம்.
அண்மைய கால மலேசிய கவிதைகளில் மஹாத்மன் போன்றே கையறு நிலை வாழ்வையும் மனச்
சுவாதீனமிழந்த தனி மனித ஓலமாகக் கவிதை புனைந்து வருபவர்களில் ரமேஸ்.டே-யும்
ஒருவர். தமிழ்க் கவிதைகள் தொடாத வார்த்தை வெளிகள் இவருக்கு வசப்பட்டுள்ளன.
பைபிளில் பரிச்சயமானவராக இருக்கலாம். இவரது கவிதையை நுட்பமாக வாசிப்போர்
இவரது வாழ்க்கைக் கோட்பாட்டையும் தமது ஆன்மீகப் புரிதல் மார்க்க
நெறிகளிலிருந்து விட்டு விலகிவிடும்படியான தோரணையிலிருப்பதையே
அவதானிக்கலாம். அநேகமாக இந்த இருவரின் கவிதைகளும் கடவுள் பிம்ப உடைத்தலைச்
சம்பத்தப்பட்ட வேதத்தைக் கொண்டே அதாவது வைரத்தை வைரத்தால்
அறுப்பதற்கொப்பாகவே வெளிப்பட்டுள்ளன. சிந்தாந்தக் கொள்கையில் முரண்பட்டு
புதிய இருப்பைச் சிருஷ்டிப்பதும் நவீன கவிதைகளின் கூறுதானே? ஒரு
பரதேசியிடமிருக்கின்ற சிறப்பம்சங்களைக் கோணல் கண்களோடு கவனிக்கும் உலகைச்
சாடுகிறார் ரமேஸ்.டே.
பரதீசுக்கு நியமிக்கப்பட்ட ஒரு பரதேசி நான்
அற்புத சிறகுகளிருக்கும் என் குதிரையை
இரைச்சலில்லாத இரவுப் பொழுதுகளில்
சீறிவருவதை யாரும் பார்ப்பதில்லை
..................................
பரதேசி என்பதால்
வெறுங்கையோடு நிற்கிறேன்
வாசலில்
- ரமேஸ்.டே
மஹாத்மனின் பெரும்பாலான கவிதைகளும் இதையே பாடுபொருளாகக் கொண்டிருக்கின்றன
என்பது கவனிக்கத்தக்கது. அதோடு, இதற்காகத் தனித்துவ மொழியைப் புழக்கத்தில்
கொண்டுள்ளார் என்பதைத் தனித்த அடையாளமாகக் காட்டுகிறது.
ஒரு பரதேசியின் வருகை
அடிக்கடி காப்பாற்றி வருகிற கடவுள் மனதைக்
குதூகலப்படுத்தும் வகையைத் தேடியலைந்தேன்
ஒருவர் வடக்குக்குப் போகச் சொன்னார்
வேறொருவர் ஒரு திசையைக் காட்டிச்
சாஷ்டாங்கமாய் விழு என்றார்
கைரேகையைப் பார்த்தவர் கடல்தாண்டிப் போகச் சொன்னார்
குல்லா அணிந்தவர்
தவறாமல் தொழுது பணிந்தாலே போதுமென்றார்
பிரசங்கியானவர் ஒவ்வொரு நாளும்
சிலுவையைச் சுமப்பதே மேலென்றார்
வழிப்போக்கனாய் வந்தவர்
மரத்தடியில் உட்காரச் சொன்னார்
சடாமுடி தரித்தவர்
ஒளியைப் பார்த்து ஒளியெழுப்பு என்றார்
சரி , எமக்கேன் வம்பு...
எல்லாவற்றையும் செய்து திருப்திப்படுத்த எத்தனித்தேன்
எம்மதமும் சம்மதம்
எல்லா ஆறுகளும் ஒரே கடலுக்குள் சங்கமம்
அரோகரா, அல்லாஹ் அக்பர், அல்லேலூயா
எல்லாமே 'அ'-வில் ஆரம்பிப்பதால்
ஆனந்தமாய் ஆர்ப்பரித்துக் கூத்தாடினேன்
களிகூர்ந்து கைத்தட்டினேன்
பார்த்துக்கொண்டிருந்த கடவுள் கோபமடைந்தார்
எரிச்சலடைந்து சலித்துக்கொண்டே
தனியனாகவே அலைந்து திரியெனச் சபித்தார்
கெட்ட கெட்ட வார்த்தைகளால்
ஓயாமல் திட்டிக் கொண்டும்
முணுமுணுத்துக்கொண்டுமிருக்கிறேன்
வானத்தைப் பார்த்துக்கொண்டே
பசிவந்து காதையடைத்தது
சப்தமெழுப்பாமல் காலடியெடுத்து வைக்கிறேன்
ஒவ்வொரு கடவுளின் கோயிலுக்குள்ளும்!
- மஹாத்மன்
எங்களூர் எழுத்தாளர் தமக்கு அறிமுகமான பிரபல்யத்தை நகைச்சுவையாகச்
சொல்வார். அந்தப் பிரபல்யம் சபலப் புத்தி கொண்டவர் என்பதற்குப் பெண்களை
அவர் காமாந்தரக் கண்களோடு வெறிக்கப் பார்க்கும் அவரது சுபாவத்தை
வேடிக்கையாகச் சொல்வார். “இந்த மனுசன் கல்லுக்குச் சேலை கட்டி விட்டாலும்
கற்பழிக்கிற மாதிரிதான் பார்ப்பான். வயசானா போதுமா, புலனடக்கம் வேணாமா?”
என்று சொல்வார். ரிவேகாவின் ஒரு கவிதை இதையே ஞாபகமூட்டியது. நவீன கவிதையில்
எளிமையான சொற்களோடு இதையெல்லாம் சொல்ல முடிகிறது என்பது பலம்.
காற்றில் தவறிய சேலையொன்று
முப்பரிமாணப் பாறையின் மீது
விழுந்தபோது
அதுவரை அமர்ந்திருந்த பறவைகள்
பறந்து போயின
மனிதக் கண்கள் வந்தமர்ந்தன
பாறையின் மீது
பருவப்பெண் படுத்திருப்பதாய்...
- ரிவேகா
தமிழுக்கப்பாற்பட்ட பிறமொழிக் கவிதைகள் சிலவற்றையும் மெளனத்தில் காணக்
கிடைத்தன. புதிய வாசிப்பானுபவமும் பிற மொழிக் கவிஞர்கள் கவிதையை அணுகும்
போக்கையும் உணர்ந்துகொள்ள வழியேற்பட்டது. ( காண்க மெளனம் 1 பக்கம் 28-29)
ஏழரை நாட்டுச் சனியனை முன்வைத்து மாறுபட்ட கவிதையொன்று கே.பாலமுருகனால்
வரையப்பட்டிருந்தது. சனியனுக்கு உருவமும் செயற்பாடுகளையும் தந்து
இவற்றையெல்லாம் நம்பாதே என்று கவிஞர் கூறுவதாக அமைந்துள்ளது. போலிச்
சம்பிரதாயங்களில் இதுவும் ஒன்று சொல்லாமல் சொல்லுகின்ற கவிதையிது.
சனி
கசிந்து
பெருகிக்
கருகி
ஊர்ந்து
வருகிறான்
சனி
வாய் பிளந்து
கண்கள் உருட்டி
நாக்கை இழுத்து
விழுங்கிக் கொள்கிறான்
சனி
நீர் போல வடிந்து
பற்பல உருவமெடுத்து
வடிவம் மாற்றி
பிம்பம் உடைத்துச்
சாகசம் காட்டுகிறான்
“சனிக்கு
நெய் விளக்கேத்து”
“சனியைப் பார்க்காமல்
வந்துவிடு”
என்
தலைக்கு மேல்
சனி
அமர்ந்திர்ப்பதாக
யாரோ ஒரு
மஞ்சள் காவி
புகை சூழப்
பயமுறுத்திக்கொண்டிருந்தான்
- கே.பாலமுருகன்
நவீன கவிதையுலகுக்குப் புதிதாய் நுழைந்தவர் ந.தமிழ்ச்செல்வி. பெண் மனதின்
கோபங்களும் ஆண் உலகுக்கெதிரான இல்லற எரிச்சலும் தமது குழந்தையிடமே ஆண்
உலகின் குணாம்சங்களும் பொருந்தியிருப்பதைக் கண்டு அலுத்துக் கொள்ளும் பெண்
மொழி வகையறா கவிதையிது.
போகிறாய் வருகிறாய்
ஒரு வெளவாலைப் போல்
விட்டத்தை அசூசையாக்கி
என் வாழ்வு நிச்சயமற்றுக்கிடக்கிறது
நீ என்னுடன் பகிர்ந்துகொண்டவற்றை
என்னால் கழுவமுடியாதபடி
என் குழந்தையிடமும்
ஒட்டிக்கொண்டு அதன் வாழ்வும்
நிச்சயமற்று
- ந.தமிழ்ச்செல்வி
இனப்பற்றும் மொழிப்பற்றும் இல்லாத தமிழன் போகிற இடமெல்லாம் ஏதிலியாக
ஏமாற்றப்படுகிறான், இன்னும் எவனாவது மிச்சமிருந்தால் வாருங்கள் தலையில் ஏறி
மிளகாய் அரைக்க என்று வெந்து நொந்து நூலாகிக் கோபக்கணைகளை வீசுகின்ற கவிதை
சை.பீர்முகம்மதுவினுடையது. தமிழனுக்குச் சமகாலத்தில் ஏற்பட்டுள்ள
பேரிழப்புகளே இதற்குச் சான்று.
தமிழ்ப் பொம்மைகள்
எப்படியும் கையாளலாம்
தூக்கிப் போடலாம்
சிறையில் அடைக்கலாம்
நடுத்தெருவில் கொளுத்தலாம்!
ஆனால்,
பொம்மைகள் எப்பொழுதும்
எவன் காலையும்
நக்கி வாழ்வதில்லை
தலையாட்டும்
தஞ்சாவூர்ப் பொம்மைகள்
எப்பொழுதும் ஆடுவதில்லை!
பாவைக்கூத்துப் பொம்மைகளின்
அசைவு
ஆட்டுபவனின் திறமையில்
இருக்கிறது!
தமிழன் பொம்மைகள்
எவன் கையிலும் ஆடும்
தன் முன் அழியும்
தனது இனம் கண்டு
பொம்மைகளால்
எதுவும் செய்துவிட முடியாது
ஆட்டுங்கடா ! ஆட்டுங்கடா !
இந்தத் தமிழ்ப் பொம்மைகளை
எவன் வேண்டுமானாலும்
எப்படி வேண்டுமானாலும்!
- சை.பீர்முகம்மது
மேற்கண்ட கவிதையைவிட சை.பீர்முகம்மதுவின் எனது நகல் என்ற கவிதையில்
கவித்துவம் மிகுந்திருப்பதைக் காண முடிந்தது. சை.பீர், எதைக் கவிதையாகச்
சொல்ல வேண்டும், எதை மண்டையில் அடிப்பதுபோல் சொல்லவேண்டும் என்று நன்றே
தெரிந்து வைத்திருக்கிறார். தான் இழந்துவிட்ட சுயம் அதாவது சுய
விருப்பு, நிம்மதி போன்றவற்றைத் திரும்பவும் தேடிக் கொண்டிருப்பதாகக் கவிதை
ஒலிக்கிறது.
தேடிக்கொண்டிருக்கிறேன்
கைவசமிருந்த என் நகலை
என் தாய்
இளமையிலேயே பிரிந்ததால்
எனது நகல்
அவளோடு சென்றிருக்கலாம்
எவ்வளவு முயன்றும்
அப்பாவிடமும் சித்தியிடமும்
அது இருக்கும்
அடையாளமே இல்லை!
உடன்பிறப்புகள் யாரிடமும்
எனது நகல்
இருக்க வழியே இல்லை!
என்னிலிருந்து நகல்
எடுத்துக்கொள்வதாகச் சொன்ன
நண்பர்களிடத்தில் தேடி
ஏமாந்ததுதான் மிச்சம்!
யாராவது
எனது நகலை வைத்திருந்தால்
சொல்லுங்களேன்...
காலம் முழுதும்
உங்கள் காலடியில் இருப்பேன்!
- சை.பீர்முகம்மது
ஐந்திறங்களோடு வலிய அன்பைப் பகிர்ந்துகொள்ள. மனிதரில் எல்லாருக்கும்
வாய்ப்பதில்லை. அபலை நாய்க்குட்டியொன்று அன்புக்குக் காத்திருக்கும் அதன்
மனம் இப்பொழுது வேதனைப்படப்போகிறது. ஆம். அது நேசித்த மூளை பிசகிய நல்ல
மனிதன் ஒருவன் விபத்தில் காவுகொள்ளப்பட்டுவிட்டான். இந்தத் துர்ச்சம்பவத்தை
எப்படிச் சொல்லப் போகிறான் இந்தக் கவிஞன்? நமக்குள்ளும் ஈரத்தைப்
பிழிந்தெடுத்து விடுகிறது சீ.முத்துசாமியின் கவிதை.
காத்திருப்பு
காலைக் கருக்கலில்
வாசல் கதவைத் திறந்து வைத்துத்
தெருவில் கால் பதிக்கத்
தாவி வந்து கட்டிப் பிடித்து
ஹலோ சொல்லிப் போகும்
இரவோடும் பனியோடும் சல்லாபித்துச்
சூல்கொண்ட குளிர் புடைத்த காற்று...
இலைமறைவில் சம்மணமிட்டு
இஷ்டத்துக்கு இசையமைத்துப் பாடிய
ஏதோ பறவை சட்டென எழும்பி
தலைக்கு மேல் சிறகடித்துக்
காலை வணக்கம் சொல்லிப் போகும் தினமும்...
அம்மா இல்லாத அனாதை நாய்க்குட்டி
ரொட்டித் துண்டுக்காய்
இவன் வாசல் பார்க்க
வழிமேல் விழி வைத்துத்
தெருவோரப் படுக்கையில் தலை வைத்து...
பக்கத்து வீட்டுக் கொல்லைப்புற
ஒற்றை ரோஜா
பனியில் நீராடி நீர் சொட்ட
வேலி தாண்டி எட்டிப் பார்க்கும்
இவன் தரும் அன்பு முத்தம் வேண்டி..
நாதன் கடை நடைவாசலில் டீ குடிக்க
காத்திருக்கும் மூளை பிசகிய
இவனது பால்யகால சிநேகிதன்
எல்லாமும் நேற்று
வாகனப் பாதங்களில் துவம்சமாகி
இரத்தப் பிண்டமாய்
இவன் அள்ளிப் போனதை...
காத்திருக்கும்
காற்றுக்கும்
பறவைக்கும்
நாய்க்குட்டிக்கும்
ரோஜாவுக்கும்
பால்ய சிநேகிதனுக்கும்
இன்று யார் சொல்வது?
- சீ.முத்துசாமி
நவம்பர் 25-சம்பவத்தை மையப்படுத்திய ஹைக்கூக்கள் ந.பச்சைபாலனுடையவை.
மலேசிய ஹைக்கூக்களில் அதன் தடம் புரளாமல் அப்போதைக்கப்போது தமிழகச்
சாயலின்றி அசல் ஹைக்கூக்களில் நிமிர்ந்து நிற்பவர் இவர் மட்டுந்தான்
என்பதற்கு இந்த ஹைக்கூக்களே சான்று.
அமைதிப் பேரணியில் ஹைக்கூ பாடகன்
கண்ணீர்ப்புகை வீச்சு
எங்கள் கைகளில்
மகாத்மாவின் படங்கள்
நேற்று அமைதிப் பேரணி
இன்று சாலையோரத்தில்
மூதாட்டியின் வெற்றிலைப்பை
யார் எந்த அணி?
யாருக்கும் தெரியாது
சாலையில் அமைதிப்பேரணி
அமைதிப் பேரணியில்
ஆண்களோடு ஆண்களாய்
ஆங்காங்கே பெண்கள்
யார் தடுத்தும் முடியவில்லை
நாற்சந்தியை நோக்கி
ஆயிரமாயிரம் கால்கள்
போர்வைக்குள் தலைவர்கள்
விடியும்வரை போராட
விரையும் கால்கள்
சீறும் கண்ணீர்ப்புகை
திகைத்துப் பார்க்கும்
உலகத் தலைவர்கள்
ஒன்று கூடாதீர்கள்
தனித்தனியே இருங்கள்
தலைவர்கள் கோரிக்கை
- ந.பச்சைபாலன்
மெளனம் 2 இதழினூடாக...
பொறுப்பான இளைஞர்கள் இருவர் தேநீர்க் கடையில் உரையாடுகிறார்கள். அவர்களின்
உரையாடலில் இந்திய சமுதாயம் எதிர்கொள்கின்ற சமகால அரசியல்-சமுகப்
பிரச்சனைகள் உரைபொருளாக அமைகின்றன. நண்பன் நாளை வருவதாகக் கவிஞனிம் கூற,
நாளை தாம் 'இருக்கப்போவதில்லை' என்று கூறும்பொழுது, அந்தக் கடைசிச்
சொல்லில்தான் கவிதையின் ஒட்டுமொத்த முடிவும் மட்டுமல்ல, இந்திய இளைஞர்களின்
நிலையாமையும் அழுத்தமாகச் சொல்லப்படுகிறது. இந்தச் சந்திப்பு அநேகமாக இரவு
வேளையில் நிகழ்ந்திருக்கலாம். உரையாடலுக்குப் பின் வீட்டிற்குப் புறப்படும்
முன் இடைவெளியில் காவல் துறையினரால் இழுத்துச் செல்லப்படவிருக்கலாம்;
அடித்துக் கொள்ளப்படவிருக்கலாம் அல்லது கவிதையில் சுட்டப்பட்ட எதுவும்
நிகழலாம். பா.அ.சிவத்தின் கவிதைகளில் இந்த எளிமை மட்டுமல்ல, மனதோடு
பேசுகின்ற கவிதை மொழி, இனம்புரியா ஏக்கங்கள் என்ற பெரிய சிக்கல்களையும்
பிரச்சாரத் தொனியின்றிக் கவிதையாக்கிவிட முடிகிறது!
பழைய நண்பன்
ஒருவனைச் சந்திக்கிறேன்
அவனை அழைத்துக் கொண்டு
நேராகத்
தேநீர் அருந்தச் செல்கிறேன்
பழைய கதைகளைப்
பேசுகிறேன்
மணிக்கணக்காய்
பஞ்சபாண்டவர்களை
அடித்து இழுத்துச் சென்ற
கதை
சிறையில் முடிக்கப்பட்ட
சில கொடுமை
கதை
எந்தக் கல்லறையில்
புதைப்பார்கள்
எனச் சடலம் நொந்த
கதை
கதைகள்
முடியவில்லை
உணவகத்தை
இழுத்து மூடினார்கள்
நண்பன்
நாளையும் வருவதாகச்
சொன்னான்
நான் இருக்க மாட்டேன்
நாளை...
- பா.அ.சிவம்
தம்மால் பெண்ணொருத்திக்குப் பாதகம் ஏற்படப்போவதைக் குறித்துத் தாமே
அப்பெண்ணிடம் பாதுகாப்புக்குரிய வழிவகைகளைக் கூறுவதாய் அமைந்த ரமேஸ்
.டேயின் கவிதை மலேசிய கவிதை உலகுக்குப் புதிதுதான். பெண்ணுலகப் பார்வையில்
ஆணின் பிம்பம் கழுவப்படவில்லை. அவனுக்குள் இருக்கும் காமம் இயல்பான ஒன்று.
நல்ல மனிதனிடம் குடிகொண்டுள்ள காம உணர்வுக்காக முற்றும் முழுவதுமாய்த்
தகாதவன் என்று புறந்தள்ளுதல் நியாயமல்லவே எனும் மறைமுகப் பொருள்
சுட்டப்படுகிறது ரமேஸ்.டேயின் கவிதையில். இவரது கவிதையில் புதுமொழி
பிரயோகிப்பைக் கவனிக்க முடிகிறது.
உன் ஜன்னலை நன்றாக மூடிக்கொள்
படரும் என் கிளைகள்
படுக்கையறை வரை ஊடுருவக்கூடும்
...................................................
கூரை ஓடுகளின்மேல்
கண்ணாடித் துகள்களையும் ஆணிகளையும்
கவனத்தோடு பரப்பி வை
..................................................
என் வாசனையை முடிந்தால் வாடையை
மோப்பமெடுத்துக்கொள்ளவும்
கண்டவுடன் கண்ட கண்ட இடங்களில்
கடித்துக் குதறவும்
உனது வளர்ப்பு நாய்க்கு
விசேஷ பயிற்சி கொடு
.................................................
இவை யாவும் தோல்வியில் முடியுமானால்
கற்புத் தீயை மூட்டி
எனை எரித்துச் சாம்பலாக்கு!
- ரமேஸ்.டே
இந்திய சமுதாயத்தில் மட்டும் மதுப்பழக்கம் மிகத் தீவிரமாக
அடையாளப் படுத்தப்பட்டுள்ளது. மலேசிய தமிழ்ச் சிறுகதைகள் பலவும் இதைக்
கருவாகக் கொண்டு புனையப்பட்டபோதும் அதன் ஒட்டுமொத்த வீரியம் என்னவோ
கே.பாலமுருகனின் பல கவிதைகளில் அப்பட்டமாய்ப் பதிவாகியுள்ளன. நினைவுகளின்
மீளுருவாக்கம் சார்ந்த கவிதைகள் கே.பாலமுருகனுடையவை. குடிகாரனின் தள்ளாடல்
மட்டுமே வெளிப்பார்வையாகப் பார்த்து வந்த மலேசிய இலக்கிய உலகம், சற்று
ஆழமாக நுழைந்து மறைவிடங்களின் வீரிய-தளர்வுகளையும் பதிவு செய்ய மறக்கவில்லை
என்பதற்குப் பாலமுருகனின் கவிதை நல்லுதாரணமாகும். உகந்த சொல் நேர்த்தியும்
கவிதை மொழிக்கான ஒத்திசைவும் இசைவான தொலைவிலிருந்து சம்பவத்தைக்
கூறுவதாகவும் அடர்த்தியோடும் அமைந்துள்ளது குடிகாரனின் இரவுகள் எனும்
கவிதை.
குடிகாரனின் இரவுகள்
சரிந்து வீழ்ந்த
மௌனங்களினூடே
கதறலுடன்
வந்து தொலைகிறது
இரவு
தள்ளாடியபடியே
சாலையோரமாகச்
சேகரித்துக் கொண்டிருக்கும்
உள்ளாடையுடன்
இருள்
படுத்திருக்கிறது
பாதசாரிகள்
எட்டி உதைக்கும்
வலிகளுடன்
ஆண்குறி வலுவிழக்க
பாவப்பட்ட ஜென்மங்களின் மீது
விழுகிறது இரவுகள்
- கே.பாலமுருகன்
ஆன்மிகம், இறைமை என்பனவற்றை வாதிடத் துணிந்திருக்கிறது இற்றைக்
கவிதையுலகம். கட்டுடைப்பே நவீனத்தின் முதல் படி. கடவுள்
நிர்வாணமானவன்/ள்/து என்று பொருள் கொள்வதா அல்லது நிர்வாணத்தின் முன்
கடவுள் சிலையாகி நம்மைப்போல் மூர்ச்சையாகி விடுகிறாரா என்பதைக் கோடி
காட்டும் கவிதை ஏ.தேவராஜனுடையது. நாத்திகனுக்கும் ஆத்திகனுக்கும்
அவரவருக்கு ஏற்றபடி அவதானிக்க உதவும் கவிதையிது.
நிர்வாணத்தை வரைந்தேன்
சிலையாய் நின்றார்
கடவுள்
- ஏ.தேவராஜன்
'நிறம் சுமத்தல்' என்ற பூங்குழலி வீரனின் கவிதை தத்துவ வீச்சுடனும்
கவித்துவத்துடனும் ஆழத்துடனும் என் கருத்தைக் கவர்ந்தது. வாழ்வையும்
நிறத்தையும் பொருத்திப் பார்க்கும் இக்கவிதையில் மானுட வாழ்க்கையின் முன்
தட்டுப்படும் எத்தனையோ சந்தர்ப்பங்களைத் தேவைக்காகக் கிரகித்துக்கொண்டும்
தேவையில்லாப் பட்சத்தில் நமது சுய நிறங்களையும்
விடுவிக்கின்றோம். இக்கவிதையில் ஊடாடும் குழந்தை, தமது நோக்கமொன்றையே
கண்ணாகக் கொண்டு அடுத்தடுத்த சந்தர்ப்பத்தை நோக்கித் துரிதமாக நகரும்
இயல்பை மிக அழகாகச் சொல்கிறார் இக்கவிஞர்.கவிதை மென்மையானது என்றாலும், அதை
இறுக்கத்துடன் சொல்லும் சூட்சுமம் தெரிந்திருக்கிறது இக்கவிஞருக்கு!
தனக்குரிய நிறத்தை
தீர்மானித்தபடி
அடுத்த நிறம் நோக்கிப்
பாய்கையில்
பொய்களற்ற நிறங்களைச்
சுமந்தபடி...
அவளும் அவளது உலகமும்...
- பூங்குழலி வீரன்
'தொலைந்த பொருள்' எனும் மகேந்திரன் நவமணியின் ஒரு சிறு கவிதையில்,
கண்களுக்குத் தட்டுப்படாமல் வெகு நேரம் அறைக்குள் மறைந்து ஒளிந்திருக்கும்
ஒரு பொருளைத் தேடுகின்ற அனுபவத்தை இயங்குதளம் பிறழாமல் காட்சிப்
படுத்துகின்றார் இக்கவிஞர். தேவையற்ற விசாரணைகளோ, வர்ணைனைகளோ துளியுமின்றி
முழுமையும் கவிதையாகவே துலங்குகிறது. கவிதையின் உச்சமாக
...........
தேடாத
ஒரு பொழுதில்
தானாகவே கிடைத்தபோது
தொலைந்தே போயிருக்கலாம்
என்றது மனது...
- மகேந்திரன் நவமணி
என்ற வரிகளில் தேடலின் செயல்பாடுகளும் மனதின் விரக்தியும் தத்துவத்
தரிசனமாய் இறுக்கத்துடன் பளிச்சிடுகின்றன. 'வேண்டியது வேண்டியபின்
வேண்டியது வேண்டாமெனும் மனது' எனும் கனிமொழி கருணாநிதியின் கவிதை வரிகள்
சட்டென மனதில் நிழலாடுகின்றன.
ந.பச்சைபாலனின் கவிதைகளை உன்னித்து வருவோர்க்குக் காலத்தின்
மாற்றத்திற்குப் பணியும் அவரது கவிதைப் போக்கை மறுக்கமாட்டார்கள்.
வரலாற்றில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற முன்னோர்களும் சாதனையாளர்களும் இன்றைய
மனிதர்களின் ஏனோதானோ வாழ்க்கையையும் மையப்படுத்தி அலட்டிக்கொள்ளாமல்
எழுதப்பட்ட இக்கவிதைக்கு அதன் கவிதைமொழியே கைக்கொடுத்திருக்கிறதைக்
கவனிக்கலாம்.
யாருமற்ற அறையில்
நான் படித்து முடிக்காத புத்தகத்தின்
திறந்து கிடக்கும் பக்கங்களில்
நிறைந்து வழியும் எழுத்துகளில்
எப்போதோ இறந்துபோன மனிதன்
நடந்துபோன கடற்கரையோர
காலடிச் சுவடுகள்
அவற்றின் ஈரம் மாறாமல்
அப்படியே இருக்கக் கண்டேன்
அறைக்குள் நுழைந்து
புத்தகத்தின் பக்கங்களைப்
படபடக்கச் செய்து
தன் இருப்பை எனக்கு அறிவித்து
என் உடலையும் தீண்டி
வெளியேறுகிறது காற்று
ஒரு கள்வனைப்போல்
எந்த அடையாளமும் வைக்காமல்
வீட்டைத் தூய்மையாகத் துடைத்துவிட்டு
கதவின் வழி
வெளியேறுகிறோம் நம்மில் பலரும்
- ந.பச்சைபாலன்
வீ. மணிமொழியின் கவிதையொன்று அருமையான பரிகாசத்தோடு தமது
நேசிப்புக்குரியவரை(?) வெளுத்து வாங்குவதாக அமைந்துள்ளது. அன்பை
உதாசீனப்படுத்திய மனிதரையும் அவர்தம் அன்பையும் பேயாகவே பார்க்கிறார்
மணிமொழி. அறிமுகத்திற்கு முன்பும் முறிவிற்குப் பின்பும் அந்த அன்பைப்
பேயாகவே முடிவுகட்டிவிடுகிறார். எனக்குப் பிடித்த அம்சம் நவீன கவிதையில்
மூக்கைச் சிந்தாமல் அன்பை மறுதலிக்க முடிகிறதே என்பதுதான்! ம்... நவீன
கவிதைகள் நவீன பெண்கள்!
எனக்குப் பரிச்சயமான
நான் விரும்பிய...
நான் வளர்த்த...
பேயொன்று
என்னை...
எட்டி உதைத்து
முட்டித் தள்ளிக்
கத்திக் கொண்டு
நன்கு கறுத்த இறக்கையோடு
மிகச் சாதாரணமாய்ப்
பறந்தோடியது
எனதன்பைக் குப்பையில்
வீசிவிட்டு...
- வீ.மணிமொழி
தனக்கு வெளியே நடந்தேறும் அட்டூழியங்களையும் பின் தொடர்ந்து வரும்
அழிவுகளையும் தார்மீகக் கண்ணோடு நோக்கி நியாயத்தை வேண்டி நிற்கிறது
பூங்குழலி வீரனின் கவிதை. இக்கவிதை ஈழத்தின் உள் நிகழும் சிதறல்களை முன்
வைப்பதாகப் பட்டாலும் உலகலாவிய நிலையிலும் மண், மொழி, மதம், இனம் கடந்தும்
நோக்கலாம். இயற்கை வளமும் சுபிட்சமும் நிறைந்து செழிப்போடு திகழ்ந்த ஒரு
மண்,இப்பொழுது போரின் காரணமாக உடைந்து சிதிலமுற்று இதுகாறும் இருந்த அத்தனை
சிறப்புகளையும் காவு கொடுத்து ஆறாப் புண்களோடு வெறிச்சோடிக் கிடப்பதாகக்
காட்டுகிறது இக்கவிதை. எஞ்சியிருக்கின்ற சொற்ப உயிர்கள் வாழ்வா சாவா என்பதான
உயிர்ப்போராட்டத்தில் வாழ்வை நகர்த்தி வருகின்ற நிர்மூலச் சூழல் நம்மையும்
ஒரு கணம் உருக வைக்கிறது. எளிமையான ஆனாலும் ஆறா வடுவை ஏற்படுத்திய கவிதை
பூங்குழலி வீரனுடையது.
முன்பொரு காலத்தில் அந்த நிலம்
முன்பொரு காலத்தில் என்று தொடங்கும்
கதையில்
அந்த நிலம் அமைதியின் வடிவாய்
வாய்த்திருந்தது
தனக்கே உரிய ஈரத்துடன்
மறுதலிக்க முடியாத அடையாளத்துடன்
அந்த நிலம் கனிந்திருந்தது
கொஞ்ச காலமாக உடைந்து கொண்டிருந்தது
அந்த நிலம்...
அந்த நாட்டில் வாழ்ந்த
அத்தனை அமைதிகளும் புலம்பெயர்ந்துவிட
வெற்றிடமாய் அந்த நிலம்...
இன்றுவரை காயங்கள் காயங்களாகக்
குருதியை மட்டும் சுமந்தபடி...
எதையும் விட்டுச் செல்ல முடியாமல்
கொஞ்ச உயிர்கள்
இன்னும் எஞ்சி இருக்கின்றன
அந்த நாட்டில்
தன் உயிரை விதைத்தபடி...
- பூங்குழலி வீரன்
மீராவாணியின் அன்பை முதன்மைப்படுத்தி ஏக்கத்தைச் சுமந்த கவிதை கண்ணாமூச்சி
ஏனடா. பிள்ளையின் அன்பா, கணவரின் அன்பா அல்லது அந்த மாயக் கண்ணனின் அன்பா
என்பதை வாசகப் புரிதலுக்கே விட்டுவிடுவோம். மெல்லிய கவிதை மொழி
கைக்கொடுத்திருக்கிறது.
கண்ணாமூச்சி ஏனடா..?
என்றோ...
நீ வாசித்த
புல்லாங்குழல் கீதம்
சன்னமாய்...
மிகச் சன்னமாய்...
ஒலித்துத் தேய்கிறது...
உன் 'வரவுகள்'
நிகழாமல் போனதால்
என் கண்கள்
நேற்றைக்கும்...
இன்றைக்கும்...
நாளைகளுக்கும்
சேர்த்தே
செலவு செய்துகொண்டிருக்கிறது
கண்ணீரை...!
- மீராவாணி
இவ்வாறாகப் பாடும் மீராவாணி, நகர்-கிராமம் சார்ந்த பெண்களின் தொழில்நிலை
மாறுபாடுகளைச் சொல்லி இருவருமே வாழ்வியல் போராட்டங்களை எதிர்கொள்வதாக
விவரித்து உச்சமாகப் பெண்ணாகப் பிறந்தாலே இன்னும் ஆணாதிக்கத்தின் பிடியில்
அவதியுற வேண்டும் என்பதை அழகாகச் சொல்லுகிறார் இப்படி,
'அவளின்'... 'இவளின்'...
இனி 'எவளின்'...
உணர்வுகளுக்கும்
ஆணின் பசித்திருக்கும்
பருவங்கள்...
பரிதாபப்படுவதேயில்லை...!
- மீராவாணி
கூச்சமா இருக்கு என்று செவியன் கூறும் கவிதையிலும் உண்மையிருக்கு.
மறைக்கப்படும் ஒரு பொருள் எப்பொழுதுமே தேடுதலுக்கும் உணர்தலுக்கும்
இலக்காகும். சங்க இலக்கியத்திலும் திரைப் பாடல்களிலும் எவ்வளவோ
சொல்லப்பட்டுள்ளனவெனினும், அவை கூட பூடகமாகவேதான் வெளிப்பட்டுள்ளன. அவை
பற்றிய இரசனைபாவங்கள் வாசகத்தன்மைக்கேற்றபடி மிகுத்தும் திரித்தும்
விளக்கப்பட்டுள்ளன. அவற்றில் குறிப்பாக நிர்வாணம் அது சார்ந்த இயக்கங்கள்
எப்பொழுதுமே மனித ஆவலுக்குத் தீனி போடுவதாய் அமைந்துள்ளன என்பதை மறுக்க
முடியாது. பல்வேறு சம்பிரதாய மரபுகளுக்குக் கட்டுப்பட்ட மனிதன்,
பிரணிகளிடம் கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கிறது. செவியனின் இக்கவிதையில்
கருத்துண்டு. ஆனால், கவிதை மொழி சற்றுத் தூர இருப்பதாகப் படுகிறது.
ஆடை கிழித்தெறிந்து
அம்மணமாய்த் திரிவோம்.
மறைத்து மறைத்து
வாழ்வின் நுட்பம் மறந்தே போனோம்.
ஆதியில் பூட்டிக்கொள்ள
ஏதுமின்றி
வெட்ட வெளியில் களித்திருந்தோம்.
புணர்தலில் புரிதலின்றி
வாழ்வின் நுட்பம் அறிந்ததாயில்லை.
தெருநாய் புணர்தலில்
வாழ்வின் தாபம் அறிந்து தெளிகிறான்
ஆதலின்...
வாருங்கள் வாருங்கள்
ஆடை கிழித்தெறிந்து
அம்மணமாய்...
- செவியன்
பரிசோதனை முயற்சியாக இரு கவிதைகள் மெளனம் 2-ஐ அலங்கரித்தன. மணிக்கொடியனின்
'என்னோடு முடியட்டுமென்று முடிவெடுக்கிறேன்' விரக்தியையையும்
மனித நேயத்தன்மையையும் வலியுறுத்தும் உரைநடைக் கவிதை. பாரதியின் வசன கவிதை
இதற்கு முன்னோடியென்றாலும் மணிக்கொடியனின் கவிதையில் அதன் பாடுபொருளால்
தனித்துவம் தாங்கி நிற்கிறது. கடவுளாலும் பிசாசானவனாலும் கைவிடப்பட்டவனின்
நியாயம் விளம்பும் கவிதையாக உணர்ந்துகொள்ள முடிகிறது. மனித குலத்தில்
அரங்கேறும் அத்தனை கருமாந்தரங்களும் அட்டூழியங்களும் தன்னோடு முடியட்டும்
என்று கவிதை முன்வைக்கின்றன. கொஞ்சம் அசந்தால் அழுத்தமான பத்தியை
வாசிக்கின்ற உணர்வு ஏற்படும் என்பதைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை.
'இல்லாமையில் ஏங்கியதும் இயலாமையில் வேஷம் போட்டதும் யாருக்கும்
தெரியப்போவதில்லை என்றிருந்தேன். சாத்தான்கூட கைவிட்டதில் நாதியற்றவனானேன்.
எலும்புக்கும் ஊனுக்கும் நடுவே ஊடுருவிப் பாய்கிறது தோல்வியின்
மின்னதிர்வு. மனதிலிருந்து கக்கிய விஷத்துளிகளில் தோய்த்தெடுக்கிறேன்
சொற்களை. அவை கவிதை வடிவமாய் உருவெடுத்து நரகம் காட்டுகின்றன. மதம் பிடித்த
மனம் வரிசையாய்ச் சென்றுகொண்டிருந்த பலநிற எறும்புகளைக் கொன்று குவித்தது.
ஒரு காலம் போய் இன்னொரு காலம் வந்தது. ஒதுக்கி வைத்தது நிறம்; வெறுக்க
வைத்தது மதம்; புறந்தள்ளியது மொழி; மறக்கடித்தது பணக்குவியல்; அழவைத்து
வேடிக்கை பார்த்தது அன்பு; இல்லையென்று பாவத்தோடு சொல்லி கண்டுகொள்ளாமல்
சென்றது. இன்னொரு காலம் போய் புதிய காலமொன்று வந்தது; விசித்திரங்கள்
கண்டதையும் மேய்ந்தன; அங்கவீனமாகிப் புலம்பல் பாடின; ஏமாற்றம் அடைந்து
விரக்தி கொண்டன; உருமாற்றம் படைத்து வேதனையடைந்தன; பழையதை உடைத்துத்
துரோகம் செய்தன; புதியதை வெறுத்து அறிவிலிகளெனப் பறை சாற்றின; தன் விலா
எலும்பைத் தானே உடைத்துச் சாகசம் என்றன; மேகங்கள் மேல் நடப்பதாய்ச்
சூளுரைத்து மாய்மாலம் செய்தன; புத்தனைத் துரத்தியடித்து வீரம் என்றன;
காந்தியின் முகத்தில் கல் வீசி மாலையிடுகின்றன. புதிய காலம் போய் நவீன
காலத்திற்குள் அடியெடுத்து வைக்கிறேன்; அசட்டுத் துணிச்சலின் மரண ஓலங்கள்;
கீழ்ப்படியாமையின் துன்ப விளைவுகள்; அடங்கிப் போகும் கோழைத்தனங்கள்; கனவை
அறுத்து விற்கும் கேவலங்கள்; பிணத்தின் பக்கத்தில் உணவருந்தும் கோரங்கள்;
ஈன்றெடுத்ததை விழுங்கும் அவலங்கள்; ஒரே குலம் ஒரே தேவனாய் இருக்க நடக்கும்
பயங்கரப் போராட்டங்கள். கருகி புகைக்காடுகளாய்க் காட்சிகள். ஆகவே,
முடிவெடுக்கிறேன் முடியட்டுமென்று என்னோடு.'
- மணிக்கொடியன்
அடுத்துச் சக்கை என்ற தலைப்பில் ஏ.தேவராஜனால் எழுதப்பட்ட கவிதையொன்று
பரிசோதனை முயற்சியாகும். இது முழுக்க முழுக்க ஒரு நேரிசை வெண்பா. இந்தப்
பாவினத்தில் இதைத்தான் சொல்ல வேண்டும் என்ற மரபு தமிழிலக்கியத்தில்
வரையறுக்கப்பட்டுள்ளது. அதை மீறியதோடு, நவீன பாணியில் சொல்லப்பட்டதானது
மரபில் பரிச்சயமில்லாதவர்களுக்குப் புரியாது. கவிதையின் கருப்பொருள் மனித
மனத்தின் உறுதியில்லாமையும் அதன் பட்டுத்தெளிதலுந்தான். கவிதையில் இருக்க
வேண்டிய மென்மை இக்கவிதையில் இல்லை என்பதையும் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.
முச்சந்தி வாழ்க்கை
முகமட்டும் பூண்டிருக்கும்
பிச்சையேந்தும் கண்கள் -
பிரிந்தலையும் இச்சைபடி
திக்கெல்லாம் யாசித்துச்
சீர்பெற்றோ கெட்டழிந்தோ
சக்கையுடல்
தேடிவரும்
தாமாய்...
- ஏ.தேவராஜன்
மெளனம் 3 - இதழினூடாக...
தனக்கென்று ஒரு கவிதை மொழியோடு கடந்த கால்நூற்றாண்டாக எழுதி வருபவர்
கோ.முனியாண்டி. தமக்கான கவிதையை ஒரு வசதியான வெளியில் நின்றபடி தேவையான
சொற்களை இலாவகமாகவும் பல வேளைகளில் இலக்கண விதிகளை மீறியும் சொல்கின்ற பாணி
கோ.முனியாண்டியுடையது என்பதை அவரது பெரும்பாலான கவிதைகள் கட்டியங்கூறும்.
'காற்றின் வலி' எனும் அவரது கவிதை நினைவின் மீட்டெடுப்பைப் பதிவு செய்ய
வருகிறது. வயதைத் தாண்டி ஒரு காலக்கட்டத்திற்கு வந்த பிறகு, அடடே! இவ்வளவு
நாள் இதைச் சொல்லாமல் போய்விட்டோமே எனும் தவிப்பு ஏற்படுவது தவிர்க்க
முடியாததுதான். படைப்பாளி ஒருவனுக்கு இது மாபெரும் வரம். காரணம் அவனால்
மட்டுமே வாழ்க்கையை இலக்கியத்தரமாய்ப் பதிவு செய்ய இயலும். இங்கே
கோ.முனியாண்டியின் நீண்ட கவிதை வருகிறது. இதில் வரிகளைத் துவம்சம் செய்து
கவிதை கூறும் வாழ்க்கையைத் தரிசிக்க இயலாது. நேசத்திற்குரிய இரு
உள்ளங்களின் பிரிவும், அதற்குப் பின் சேர்ந்த புது இணைவும் ஒரு புறமிருக்க
இருவரது நெஞ்சங்களிலும் கல்வெட்டாகப் பதிந்துவிட்ட உண்மைக் காதல் என்றும்
மறையாது என்பதை அடர்த்தியாகச் சொல்லிவிடுகிறார் கோ.முனியாண்டி.
கோ.முனியாண்டி பழையவரென்றாலும் அன்றிலிருந்து இன்றுவரை நவீன
கவிதைகளுக்கப்பாற்பட்ட மொழியாளுமையை இவ்விடம் வலியுறுத்தக்
கடமைப்பட்டுள்ளேன்.
காற்றின் வலி
துக்கமும் துயரமுமான
அச்சமும் ஆவேசங்களும்
நிரம்பிய,தாழி உடைந்த
சாமநேரத்து-
சந்திப்பும் பிரிவும்
இடிகளைவிடவும்
மின்னல்களை விடவும்
கொடுமையானதும்
கடுமையானதுமென
இருவருக்கும் தெரியும்.
ஆராதனைக்குரிய
ஒரு கவிதைப் பூவின்
ஒப்பனைகளைக் கலைத்துவிட்ட
விகாரமான இரவென்று
இப்பொழுது நினைத்தாலும்
சில்லிட்டுப் போய்விடுகிறது
உடல் மட்டுமல்ல!
உயிரும்தான்.
நீயூன்றிய விதைகளும்
நான் ஊன்றிக்கொண்ட
விதைகளும்
பழுதின்றி முளைவிட்டு மரங்களுமாகி
தோப்புகளாகவும்
பூப்பதும் காய்ப்பதுமாகக்
களைகட்டி நிற்கின்றன.
துவக்கைகளின் ரவை குண்டுகள்
பிரிபட்டுச் சிதறாத தொலைவில்தான்
தொலைவில்தான்
பழகிவிட்ட பகல்களையும்
ஏங்கும் இரவுகளையும்
கடக்கின்றோம்!
காற்று அசைத்து அறுக்கும்
ஒவ்வொரு பூவின் காய்ந்த
இதழ்களாய் மாறி எல்லாத் திசைகளிலும்
மிதக்கின்றோம்.
எதிரெதிர் நின்றாலும்
கடந்தேகிச் சென்றாலும்
யாரோ! யார்? யாராகவோவென
மொழியறியாக் காற்றாகி
விலகுகிறோம்!
யிருவருக்குள்ளும் யிருவரும்
பதிவாகியிருப்பதை
யறிந்தும் கூட!
தொடுவானத்தில் தோன்றிய
துருவ நட்சத்திரங்கள்தான்
நாமிருவருமென்றாலும்
அனலிடை சொற்களை
கல்மேற் செதுக்கிச்
சினமடைந்த சிற்பிகள் அல்லவா!
யுன்னை அடக்கிவென்ற 'அங்குச'
வார்த்தைகளின் எச்சம் எதுவும்
என்னிடம் மிச்சம் இல்லை.
நீ!உதிர்த்து நான் உள்வாங்கிய
வார்த்தைகள் எதுவும்
யுன்னிடமும் நிறைபட்டிராதென
யானும் நம்புகிறேன்;
கடைசியாக...
என் காதலிகளின் அட்டவணையில்
உன் பெயர் இல்லாதது
பற்றியும்
உன் காதலர்களின் அட்டவணையில்
என் பெயர் இல்லாதது பற்றியும்
ஆன அனுபவ பகிர்தல்களை
இருவரும், என்றேனும் ஒருநாள்
எதிரெதிர் நின்று எதிர் ஒலி கொண்டு
உலகறியச் செய்து விடுவோம்!
- கோ.முனியாண்டி
இவரைப் போல கவிதையில் அழுத்தங்களைக் கொடுப்பதில் தேர்ந்தவர் சீ.முத்துசாமி.
அழுத்தமான படிமக் கூறுகளுடன் அசகாய கற்பனாளுமையைக் கொண்டு கவிதைகள்
தரக்கூடியவர். 'பட்டாம்பூச்சிகள்' எனும் தலைப்பைத் தாங்கிய இவரது கவிதை
பிரசவ காலத்தையும் பிரசவ உச்சத்தையும் கடுமையான சொல்லாட்சியோடு இரசிக்க
வைக்கிறது. தாயின் துன்பத்தைப் பகிர்ந்துகொள்ள வருகிறது பட்டாம்பூச்சி -
எப்படி? முத்தம் பட்ட(?) இடத்தில் புது முத்தம் வைக்க!
பட்டாம்பூச்சிகள்
கல்லறையின் நிலவறை.
துக்க அனுஷ்டானத்தின் வெக்கை நிரம்பிய
எனக்கேயான பகற்பொழுதின் நடுப்பொழுது.
மென்காற்றின் மூர்க்கத் தழுவலில் உள்வாங்கும் கதவு.
நிறையும் ஒளிப்புணலைப் புணர்ந்து
பின் நகரும் இருள்.
கர்ப்பகாலம்.
கூரிய வாள்கொண்டு தாயின் குதத்தை வகுந்து
ஜனிக்கும் இரணியர்கள் கூட்டம்.
தொடரும் உதிர மழையில்
விலா எலும்புகளின் இரசவாதம்,கிளைக்கும் சிறகுகள்.
சிறகசைக்க எனது கல்லறைக்குள்
ஓராயிரம் வானவில்களின் இராஜ பவனி .
எனது தோட்டத்திலும்
வசந்தம் பூத்ததாய் எழும் பாட்டுக் குரல்.
பன்னெடுங்கால மரணித்தலை மரணிக்கச் செய்து
உயிர்த்தெழும் புனித நாள்.
உயிர் வேரின் முதல் மூச்சு.
ஒரேயொரு விண்ணப்பம்.
விடைபெறுமுன் எனது கன்னங்களில் அன்பு முத்தம் இட வேண்டி.
அழுகிக்கொண்டிருக்கின்றன
பட்டாம்பூச்சிகள்
முத்தம் பதித்த வழித்தடமெங்கும்.
- சீ.முத்துசாமி
நகர்சார்ந்த போலி வாழ்க்கையைத் தோலுரித்துக் காட்டிய கவிதை சீ.அருணுடையது.
ஆரோக்கியமும் சுகந்தமும் நிரம்பித் தளும்பிய தமிழனின் வாழ்வு சகலத்தையும்
தாரை வார்த்துவிட்டு பகட்டில் பித்தளையாய் மின்னிக்கொண்டிருக்கிறது.
வாழ்வு, மொழி, சுதந்திரம், அடையாளம் என அடேயப்பா...! தமிழன் தொலைத்ததைப்
பட்டியல் போட்டால் இங்கு இடம் கொள்ளாது. மீள்பார்வை / மீளுருவாக்கம்
செய்யச் சொல்லித் தருகிறது. நவீன கவிதைகளில் வார்த்தைகளைவிட அவை
கிளர்த்தும் அலைகள் இன்றியமையாதவை. அந்த அலைகள் இக்கவிதையிலும்
தரிசிக்கிறேன்.
செம்பனை மரங்களிடையேயும்
இரப்பர் காட்டினிடையேயும்
நீ கத்தித் தொலைத்த
அற்புத பகல் பொழுதைப்
பொறுக்கியெடுக்க
நீ வெளியே வா!
காருக்குள்ளும்
களவுபோகாத வீட்டுக்குள்ளும்
எவ்வளவு காலம் ஒளிந்துகொண்டிருப்பாய்?
கொல்லைப் புதரில்
தேடியெடுத்த காடை முட்டைகளின்
மனத்தை மறந்த மூக்கு...!
குருவிப்பழச்சுவை
எப்படியிருக்குமென்று எண்ணியெண்ணி
தோற்றுப்போகிறது மூளை...
துவையலுக்காக அம்மியில்
நடனமாடிய அம்மாவின் கையசைவுகள்
மங்கிய நிழலாக...
இவையெல்லாவற்றையும் துறந்துவிட்டுத்தான்
“நாமெல்லாம் வாழ்க்கையை வென்றவர்கள்”, எனச்
சொல்லிக்கொண்டிருக்கின்றேன் மகனிடம்!
- சீ.அருண்
சை.பீர்முகம்மதுவின் கவிதைகள் பெரும்பாலும் ஆன்மீகத்தைக் கடந்த உச்ச நிலை.
உலகையும் மனிதநேயத்தையும் உளப்பூர்வமாய் மதிக்கின்றவர்களால்தான் இவரது
கவிதையின் உட்பொருளை உணரக்கூடும். தான் சார்ந்த சமுகம் மற்றும் மொழியைத்
தாண்டி இப்படியொரு துணிச்சலான கருத்தை முன்வைக்கின்ற துணிச்சல் வேறு
யாருக்குமே வாரா! அஃது இன்னொரு 'பீர்முகம்மது' வால் மட்டுமே கூடும்.
ஆழம்பொதிந்த எளிமையான இக்கவிதை மதத்தின் பேரால் நடக்கின்ற மடைமைகளை
விளாசுகிறது. பீர்முகம்மது கேட்கின்ற கேள்விகளுக்கு மதவாதிகள் எவராலும்
பதில் சொல்ல முடியாது! ஆம். மனிதனை மனிதன் நேசிக்க. கடவுள் தூர நின்றால்
போதும்! உலகம் நிலைக்கும்!
மந்தைகளை
மேய்த்தவர்கள் தீர்க்கதரிசிகள்
மேய்ப்பவர்கள் எல்லாம்
தீர்க்கதரிசிகள் அல்லர்!
புல்லைத் தின்று
புழுக்கையும் சாணமுமிட்டு
இனப் பெருக்கம்
செய்வதே வாழ்க்கையாகிவிட்டது!
கண்ணனின் குழலும்
மயங்கியது
ஏசு,நபி கோலுக்கும் தோளுக்கும்
அடங்கியது
உங்கள் வாழ்க்கை!
ஏன் உங்கள் மந்தையில்
இத்தனை பிரிவுகள்?
தீர்க்கதரிசிகளின்
மந்தையிலிருந்து தப்பியவைகளின்
கூட்டமா இது?
மந்தைகளில் இருந்து
தப்பியவை
வேட்டைக்காரர்களின்
வலையில் மாட்டிக்கொண்டன!
ஒரே இடத்தில் மாட்டினாலும்
வேறு வேறு முறையில்
அறுக்கப்படுகின்றன!
- சை.பீர்முகம்மது
விரகப் பிரவேசம் பிரம்மன் எனும் கவிஞனால் புனையப்பட்ட ஒரு சிக்கலான
கவிதையாகப் படுகிறது. திருமணமான ஆண்-பெண்ணுக்கிடையே நிகழ்கின்ற விரகம்
சார்ந்த ஊடலும் அதில் பெண் காட்டுகின்ற வெறுப்புந்தான் கவிதையின் அடிநாதம்.
அவனுக்கு மாற்று வழி தேவைப்பட, அயலகப் பெண்கள் கனவு மூலமாக வந்து அவனை
ஆற்றுப்படுத்தியதாகக் கவிதை சொல்கிறது. மலேசியாவில் வந்த கவிதைகளில் இதுவரை
அழுத்தமாகச் சொல்லப்படாத சமாச்சாரம். இந்த நவீன கவிதைக்குள் நவீன வாழ்வின்
சொல்லப்படாத வெளிகள் இன்னும் உள்ளன.
விரகப் பிரவேசம்
எங்கேயோர் அறைக்குள்
நடந்திருக்கவேண்டிய
விரகச் சண்டையாகத்தானிருக்கும்
அது
சீன தேசமோ ஜப்பானோ
அல்லது தைவானோ
தெரியவில்லை
மொழி பிரயோகிப்பதாய்
இதழ்களின் அசைவும்
அவயங்களின் புடைப்பும்
தென்சீனக் கடல் தாண்டி
அவனுக்குள் ஊடுருவி
சொப்பனக் கிளர்ச்சியில்
ஸ்கலிதத்தை
நிகழ்த்தியிருந்தது
பூரண ஆற்றலில் நெக்குருகி நின்றபோது
நீளிரவின் களைப்பில்
அவள் ஆழ்ந்திருந்தாள்
அவளை எழுப்பாதவாறு
சொப்பன விரகம்
அவனைத்
தலைகோதிவிட்டிருந்தது
நாளையும் வருவதாய்
அந்தச் சொப்பனம்
இஷ்டாக் போல்
அன்பை ஏந்திச் சென்றபோது
இந்த இரவும் அவன்
அழு தான்...
- பிரம்மன்
பல நேரம் நம்மை மீறியே சில தவறுகள் நிகழ்ந்துவிடுவதுண்டு. பின்னர், அதற்காக
வருந்துகிறோம். வாசிப்பு நிகழ்ந்துகொண்டிருக்கின்ற வேளையில் இடையூறு
செய்கின்ற சின்னஞ் சிறிய உயிரிகளால் கலவரமடைந்து வன்முறையில்
இறங்கிவிடுகிறோம். அவற்றைக் கொல்வதுதான் சரியான வழியென்பது அப்போது யாருமே
உணர்வதில்லை. ஓர் இரத்தக்களரிக்குப் பிறகு சொற்ப நேர வெற்றியில் மகிழ்ந்து
நீண்ட நேர அழுகைக்கு ஆளாக நேரிடுகிறது. கோ.புண்ணியவானின் பின்வரும்
கவிதையில் கொசு செய்த பாவந்தான் என்ன என்று எண்ணத் தோன்றுகிறது.
என்னைச் சுற்றியே
என் கவனத்தைக் கொன்றது
நிசப்தமான பறத்தலில்
நரகமென உணர்த்த
வாசிப்பில் தோய்ந்த நேரத்திலும்
நெற்றியைக் குறிவைத்து மையமிட்டது
வாசிப்பைச் சற்றே நிறுத்தி
எரிச்சலில் தாக்க முயன்று தோற்றதில் உக்கிரமாகிறேன்
காதருகே பறந்தபோது
அடிவிலகி செவிப்பறை நங்கென்றது
ஒருமுறை கன்னத்திலும் என்னறை விழ
வெகுண்டது கோபம்
நேரம் தின்று நினைவைத்
தின்று ஊறும்
கோபத்தருணத்தில்
தொடையில் கடிப்பதுணர்ந்து
அறைந்து பார்க்கிறேன் உள்ளங்கையை
என் மனதிலும் வடிந்தது இரத்தம்.
- சீ.அருண்
கோ.புண்ணியவானின் சிறந்த ஐந்து கவிதைகளில் பின்வரும் கவிதையைத் தாராளமாக
மேற்கோள் காட்டலாம். பெண்ணாகப் பிறப்பெடுத்தால் கால நகர்ச்சியில்
ஒவ்வொன்றாக அவள் இழந்து வரும் மகிழ்ச்சியை அழகிய கவித்துவத்தோடு
ஆர்ப்பாட்டச் சொற்களின்றி வெற்றிகரமாகக் கவிதையாக்கியிருக்கிறார். பூ
என்பது குறியீடுதான். அன்புக்கும் காதலுக்கும் துணைபோகின்ற பூக்களின்
பின்னே மிகப்பெரிய சோகம் இருப்பதை இங்குப் பெண் கவிஞர்கள்கூட சொன்னதில்லை!
அப்படியே சொல்லியிருந்தாலும் பிரச்சாரத் தொனியில் காவுகொடுத்தே வந்துள்ளன.
பிறந்தபோது அவளிடம்
நிறைய பூக்களிருந்தன
பூப்பெய்திய தருணத்தில்
அவை வாசமும் மிகுந்திருந்தன
பெண்பார்க்கும் சடங்குகளின்போது
சில பூக்கள் தொடங்கின உதிர
திருமணம் முடிந்து சிலவும்
மனைவியான போதும் தாயானபோதும்
பூவுதிர்காலம் தொடர்ந்தது
வாசல் தொடங்கி அடுப்படியிலும் ஆலை வேலையிலும்
அளவில்லாமல் உதிர்ந்தன
பூவாய் நரைத்து நாராய்க் கிழிந்து கிடக்கிறாள்
இப்போது அவளிடமிருந்து
உதிர்வதற்கோ பூப்பதற்கோ பூக்களேதுமற்றவளாய்.
- கோ.புண்ணியவான்
ஒரு தீர்க்கமான பதிலுக்குக் காத்திருக்கும் தருணத்தில்
எதிர்ப்பக்கத்திலிருந்து மெளனமே பதிலாக வருகையில் காத்திருக்கும் மனது
இரணங்கொள்ளத்தான் செய்யும். கூடவே கோபமும் இரட்டிப்பாகி பதில் வேண்டி
அடம்பிடிக்கும்; மனம் வெறுப்புக்குள்ளாகிப் பூதமாகிக் கொன்றொழிக்கும்.
ஆனால், அன்பின் காரணமாக அதே மனம் பின்பு திருந்தி சற்று நெருங்கிப்
பார்க்கையில் வெளியே சொல்ல முடியாதவாறு ஆசைகளை மனதுக்குள் பூட்டி
வைத்திருக்கும். ம.நவீனின் இக்கவிதை அன்பும் அது சார்ந்த
அலைக்கழிப்புகளையும் மையப்படுத்தி வெளிப்படுகிறது. ம.நவீனின் மூன்று
கவிதைகளிலும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை. சில கோபதாபங்கள்,
ஊடல்கள், மெளனப் போராட்டங்கள், சீண்டல்கள், ஆக்ரோஷமும் நெகிழ்வும் மாறி
மாறி தொனிப்பதைப் பார்க்கிறோம். தவிர, வார்த்தைகளைத் தாண்டிய தீவிர
கவிதையின் போக்கு இதில் தூக்கலாயிருப்பதே இக்கவிதையின் பலம்.
1
உனது மெளனத்தில் கிளர்ந்த
என் பூதம்
தனது கூரிய நகத்தால்
உன் முகத்தைத் தூக்கிப் பார்த்தது.
சொற்களால் ஆன
ஒரு மாளிகையை அது இன்று
இரவிற்குள் தயார் செய்யச் சொன்னது.
கட்டளையை நிறைவேற்றாத அந்த இரவு
உன்னை
ஒரு சவப்பெட்டியில் அடைத்துப்
புதைத்தது.
உன்னைக் காப்பாற்றும் நோக்கில்
நான் பூதத்தைக் கொன்று
பெட்டியைத் திறந்தேன்
உள்ளே
நீ மெளனத்தாலான
ஒரு மணல் வீடு கட்டிக்கொண்டிருந்தாய்
2
எல்லாப் பிசாசுகளையும் போல
எனது பிசாசும்
ஆச்சரியமான சில வரங்களைப் பெற்று வந்தது
ஒன்றாவதாக
அது தன்னை ஒரு பிசாசு என்று
அறியாமல் வாழ்வது
இரண்டாவதாக
அது என்னையும் மனிதனென
மறக்கடிப்பது
மூன்றாவதாகத்
தன்னை விரும்பும் காதல் மனங்களைக்
கருணையில்லாமல் கொல்வது
3
கட்டையான
குண்டான
கறுப்பான
கோரமான
அந்த உருவத்துக்குக்
குட்டிச் சாத்தான் எனப் பெயரிட்டோம்
அது வளரவும் பலம் பெறவும்
இருவருமே முயன்று
ஒரு முடிவுக்கு வந்தோம்
வாரம் ஒரு முறை
நீ மெளனம் காப்பாய்
நான் கொச்சை பேசுவேன்
வேறு எல்லா உணவை விடவும்
கொச்சையால் ஆன சொற்கள்
குட்டிச் சாத்தானுக்குப் பிடிப்பதாக
நீ கூறிச் சிரித்தாய்
நானும் சிரிக்க முயன்றேன்
- ம.நவீன்
ந.பச்சைபாலனின் சிறந்த கவிதைகளுள் இக்கவிதைக்குத் தக்க இடமுண்டு.
இக்கவிதைக்குள்ளே முதுமையைத் துரத்திவரும் திடீர் மரணம்
அதிர்ச்சியூட்டுவதாய் அமைவதை அழகாகச் சொல்கிறது. நேற்றுவரை
கைத்தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்த நட்பு வட்டம் இறுதியாக
வைத்துப்போனவை குறுஞ்செய்திகளாக இருக்கின்றபோது அவற்றை வாசிக்கின்ற நமக்கு
எப்படியிருக்கும்? நாளை நமக்கும் இதுபோலொரு சூழல் ஏற்படுகின்றபொழுது
இப்படித்தானே எல்லோரும் கைத்தொலைபேசியில் பெயரை அழிக்கவும் அழிக்க
முடியாமலும் திண்டாடுவார்கள்! ந.பச்சைபாலனின் இக்கவிதைக்குள் ஆழமான நட்பின்
உணர்வு அர்த்த புஷ்டியாய் உள்ளது.
பட்டங்களோடு இணைக்கப்பட்ட நூலாய்
எனக்குத் தெரிந்தவர்களும் நெருங்கியவர்களும்
என்னுடன் எண்களால்
இணைக்கப்பட்டுள்ளார்கள்
நூலறுந்த பட்டமாய்
அவர்கள் புறப்பட்ட பிறகு
எண் இணைப்பு அவசியமின்றி
அவர்களின் எண்களை நீக்கிவிடுகிறேன்
முந்திய ஆண்டு ஸ்ரீரெங்கன், வாசுதேவன், சந்திரசேகரன்
கடந்த ஆண்டு மாதவன், கிருஷ்ணசாமி, ரஹிம், சான் லாய்
இப்படி ஒவ்வொரு பெயரின் எண்கள்
மறைந்துகொண்டிருக்கின்றன
இன்பாக்ஸில் அவர்களில் சிலர் எப்போதோ
அனுப்பிய குறுஞ்செய்திகள் இன்னும்
இருக்கின்றன
யார் எண்களை யார் நீக்குவது முதலில்?
அறிவிக்காத இந்தப்போட்டி கணந்தோறும்
நிகழ்ந்துகொண்டிருக்கிறது நம்மில்
எண்களை நீக்கும் என் செயல்
தொடர்ந்து கொண்டேயிருக்கும்
யார் யாரோ தங்கள் கைப்பேசியில்
என் எண்களை நீக்கும்வரை
- ந.பச்சைபாலன்
ஒவ்வொரு மனிதருக்குள்ளும் புனிதம் பொதிந்துள்ளது. இன்று நகர்மய
வாழ்க்கையின் நெருக்குதல்களை எதிர்நோக்குகின்ற மனிதன், அப்புனிதத்தைச்
சபலத்தின் காரணமாக இழந்துவருகிறான். புனிதர்களாகக் கருதப்பட்டவர்கள்கூட
நகரவெளியில் 'கடவுளிஸத்தைச்' சுமந்துகொண்டு நடக்கமுடியவில்லை. இது
இறையாண்மையைச் சாடுகின்ற கவிதையல்ல. இன்றைய சர்வதேச மனித உலகின்
உளத்தியலில் நேர்கின்ற சிக்கல். சாத்தானின் சேட்டைகள் அதன் இயல்புநிலையாகி
இருக்கின்ற வேளையில், கடவுளர்களே இப்பாதகத்தை எதிர்கொள்கின்றபோது இவற்றை
வேதத்திலா பதிவு செய்ய முடியும்? கே.பாலமுருகனின் கவிதையில் வரும் கடவுள்,
அரவாணிகள்,காமம் போன்ற சொற்கள் வெறும் குறியீடுகள்தான் என்று உருவகித்தால்
எப்பேர்ப்பட்ட வாசகர்களுக்கும் சிக்கலில்லை! துணிச்சலான, புதிய போக்குடைய
கவிதை இது!
“நகரத்தின் பெரும்துயரம்”
1
நகரத்தின்
பெருந்துயரம்
வெக்கை போல
அலைந்து கொண்டிருந்த
வேளையில்
அரவாணிகளின் சுகம்
தேடி
ஓரு புனிதத்தைச்
சுமந்தபடியே
நுழைகிறான்
ஆசாமி ஒருவன்
அவன்
சுமந்திருந்த புனிதம்
சுருள் சுருளாக
மிதந்து
நகரத்தில் பெரும்
துவாரத்தை
உற்பத்தி
செய்து
கொண்டது
துவாரத்திலிருந்து
கடவுள்கள்
வெளிப்பட்டார்கள்
கால்களுக்கு ஒரு கடவுள்
கைகளுக்கு ஒரு கடவுள்
யோனிகளுக்கு ஒரு கடவுள்
உடல் துர்நாற்றத்திற்கு
ஒரு கடவுள்
அக்குளில் பிசுபிசுக்கும் வியர்வைக்கு ஒரு கடவுள்
கடவுள்கள்
நிரம்பி வழிய
நகரம்
பரபரப்பிற்குள்ளானது
பரதேசிகளாகச்
சோம்பேறிகளாகச்
பாமரர்களாகப்
பம்மாத்துக்காரர்களாக
வேடிக்கையாளர்களாக
விபச்சாரியின் அடிமைகளாக
நகரம்
மனித ஒழுக்கக்கேடுகளை
விழுங்கிக் கொண்டு
கடவுள்களின்
புனித சேட்டைகளால்
நிரம்பிக் கொண்டிருந்தது
2
ஆசாமிகள்
தங்களது
ஆடைகளைக்
கழற்றியெறிந்து
கொட்டுகிறார்கள்
காமத் துளிகளை
நகரத்தின் சாலையெங்கிலும்
வழிந்தோடுகிறது
பண்பட்ட வெறுமை
காமங்களை ஏந்தியபடி
3
எங்கோ
ஓர் இடத்தில்
கடைத்தெருக்களின் சந்துகளிலோ
அல்லது
பட்ஜெட் ஹோட்டல்
அறையிலோ
எங்கோ
ஓர் இடத்தில்
விந்து காய்ந்த
வாடை
வீசிக்கொண்டேயிருக்கின்றது
- கே.பாலமுருகன்
எந்தச் சூழலிலும் பதற்றமின்றி கவிதை தருவதில் மா.சண்முகசிவாவுக்கு என்றுமே
தனித்த இடமுண்டு. மிகப் பெரிய சிக்கல்களைக் கூட மெல்லிய மொழியில்
கவிதையாக்கிவிடுகிறார் சண்முகசிவா. ஒரு கவிதைக்குப் பின்னே ஒரு சமூகத்தின்
குரல் ஒலிப்பதை நிகழ்கால சூழல்களே தீர்மானிக்கின்றன; நிர்மாணிக்கின்றன.
சமூகம் எதிர்பார்ப்பது எத்தைகைய வாழ்க்கையை, அச்சமூகத்தின் அடிமட்ட
வாழ்வின் நீட்சி, வாழ்க்கையென்பது அவனவன் தலையெழுத்து - ஆட்சி பீடத்தை யார்
அலங்கரித்தாலும் மாற்றமுடியாத இக்கட்டு, இப்படித்தான் இந்த வாழ்வின் அவலம்,
காலாகாலம் நசுக்கப்பட்ட சமூகத்தின் சக்தியற்ற சமூக-அரசியலின் குரலாகவும்
மா.சண்முகசிவாவின் இக்கவிதையின் அடிநாதம் கேட்கிறது.
உங்களது கைகளில் களிமண்
உருட்டி, திரட்டி,
பிசைந்து, இசைந்து,
உருவாக்குங்கள்
உங்களுக்குப் பிடித்த உருவங்களை
வாழ்க்கையைப் போல
என்றான் அவன்
உருட்டி, திரட்டி மட்டுமல்ல
உதைத்தும், மிதித்தும், வளைத்தும்
என்னை உருவாக்கியது வாழ்க்கை
இதில் நானென்ன
உருவாக்குவது வாழ்க்கையை
என்றான் இவன்
- மா.சண்முகசிவா
கவிதைக்குச் சுருங்கிய வடிவமும் அடர்த்தியான பொருளும் இருக்குமேயானால் அதன்
வீரியமும் கவனிப்புக்குரியதாயிருக்கும். நவீன கவிதை உலகிற்குக்
கிடைத்திருப்பவர் ந.தமிழ்ச்செல்வி. கணவன் மனைவியின் பரஸ்பர உறவுக்கு இரு
பாலரிடமும் ஒத்திசைவு இருத்தல் அவசியம். இங்கே கணவனின் பொறுப்பற்றத் தன்மை
அவ்வுறவுக்குக் கேள்விக்குறியாய் அமைந்து விரக்தியின் விளிம்புக்கே
சென்றுவிடுவதாய் ஒரு பெண்ணின் குரலாய் இக்கவிதை நன்கு வெளிப்படுகிறது.
கவிதையில் வரும் 'வாடகை வீடு' என்பது முழுமைத்துவத்தைத் தருகிறது.
நான்கு வரியல்ல
நாற்பது வரிகளிலும்
சொல்ல முடியாத அழுத்தத்தால்
செல்லரித்துப் போகிறது மனம்
சொல்லிப் பயனில்லை...
பூட்டி வைத்துக் காப்பதற்கல்ல...
நீ இருப்பது
வாடகை வீட்டில்.
- ந.தமிழ்ச்செல்வி
கவிதையில் கவிதை மறைந்திருக்கும் இடத்தைத் திட்டவட்டமாகக் கூற இயலாது.
சம்பந்தப்பட்ட கவிஞனின் மனதில் எழுகின்ற வாழ்வியல் அலைகளை அதே உணர்வோடு
வாசகனின் உள்ளத்தில் ஊடுருவச் செய்வதில் ஒரு சிலரே வெற்றியடைந்துள்ளனர்.
பா.அ.சிவம் தமது ஆருயிர் நண்பனொருவனின் மறைவையொட்டி ஒட்டுமொத்த உணர்வையே
பிரதிபலிப்பதாகக் கவிதையின் குரல் ஒலிக்கிறது. எல்லா மரணங்களுக்கும் உள்ள
பொதுமையும் அலட்டலில்லாத மொழிப் பயன்பாடும் இழப்பின் வலியைச் சொல்லமுடியாத
தவிப்புமே வரிசை பிடித்த சொற்களைக் கவிதையாக்கிவிடுகின்றன. பா.அ.சிவத்தின்
அநேகக் கவிதைகளில் பணக்காரச் சொற்கள் கிடையாது. மிக எளிய சொற்களாலேயே
பிரமாண்டத்தை நிறுவிவிடுகிறார்.
மீண்டும்
பார்க்க முடியாது
என்பதைத் தவிர
வேறு
என்ன உண்டு
உனது சாவில்
நண்பா...
- பா.அ.சிவம்
அண்மைய இலங்கைப் பிரச்சனையை முன் வைக்கிறது கருணாகரனின் கவிதை. மனிதம்
செத்துப்போன மண்ணில் நிகழ்ந்த வன்கொடுமையின் உச்சம், எப்படியெல்லாம்
நமக்குள் ஆவேசத்தைக் கிளர்த்துகின்றது என்பதற்குச் சான்றாக அமைகிறது
இக்கவிதை. இந்தக் கவிதையில் கவிதையைவிட முழக்கமே மேலோங்கியிருக்கிறது.
ஆனால், கவிஞனால் என்னதான் செய்ய இயலும் அழவும் எழுதவும் தவிர எனச்
சொல்லவரும் இடம் கவிதையைக் காப்பாற்றுகிறது.
குருதி வேட்டை
அகப்பட்டான்;
மூச்சுத் திணற நெருக்கினேன்.
தொட்டுச் சுகித்த விரல்கள்
கணு கணுவாய் நறுக்கினேன்.
மிதித்த பாதங்கள்,
வெட்டிச் சிதைத்தேன்.
வீர முலைகள்,
கடித்துக் குதறிய சண்டாள நாக்கு,
அறுத்து வீசினேன்.
காத்திருந்தது நாய்.
கோரப் பற்கள்,
இரத்தம் கசிய உடைத்தேன்,
வலியின் வலி உணர்ந்து...
உயிர் துடித்தான்.
காம வெறி விழிகள்.
தோண்டி பிசைந்து கரைத்தேன்.
அறுத்தெறிந்த ஆண்குறி
எரித்த வாடை.
சல்லியாய்க் கொத்திய
அடையாளம் இழந்த முகம்.
விஷம் தளும்பிய இதயம்.
பிடுங்கியெறியச் செத்தான்.
எமது வீரப் பெண்டிர்
சாந்தியடைந்திருப்பர்...!
குருதியில் குளித்தெழுந்தேன்...!
என்னால் எழுத மட்டுமே முடிகிறது.
- கருணாகரன்
விலைவாசி உயர்வை நினைத்தால் ஏற்படும் அச்சத்தைச் சொல்லவருகிறது
ஆ.குணநாதனின் கவிதை.
பசியும் மறந்து போச்சு!
இப்போதெல்லாம்
எனக்குப்
பசிப்பதே இல்லை!
விண்ணை முட்டும்
விலைவாசி
விலையைக் கேட்டாலே
வியர்த்து விடுகிறது.
ஏழைக்கேற்ற எள் உருண்டையாம்!
சின்ன உருண்டை ஒரு வெள்ளி...
எல்லாம் எண்ணெய் விலை ஏற்றம்தான்...
தடுமாறுகிறது ஊதியம்...இதில்
உருண்டையாவது...?
மண்ணாவது...?
குளிர்சாதன அறையில்
குந்திக்கொண்டவர்களின்
விலையேற்றம் பற்றி
வாய் கிழிய பேச்சுகள்...
மந்திரி கடைசியாய் எப்போது
மார்க்கெட்டுக்குப் போனார்?
உனக்குத் தெரியுமா?
பயிற்றங்காய் விலை என்ன
பதவியில் உள்ளவர் அறிவாரா?
சம்பளமும் கிம்பளமுமாய்
வாரிச் சுருட்டியவர்கள்
எல்லாவற்றையும்
வசதியாய் மறந்து போனார்கள்!
கம்பிமேல் நடப்பவன்
சர்க்கஸகாரன் மட்டும் தானா?
நானும்தான்...
குடும்பச் செலவுக்காகக்
குஸ்தி போடக்கூட நான் தயார்...
வீட்டுக் கடனெல்லாம் முந்திக்கொண்டு
வீதிவரை வந்து விட்டது...
முழுச் சம்பளத்துடன்
வீடு செல்ல முடிகிறதா...?
நடுத்தரவாசியின் நிலை
நாயைவிடக் கேவலம்...
இதில்
ஏழையை எந்தப் பட்டியலில்
சேர்ப்பது...?
கனவில்கூட
அலாவுதீன் விளக்கு வருவதில்லையே!
இப்போதெல்லாம்
எனக்குப்
பசிப்பதே இல்லை!
- ஆ.குணநாதன்
தனக்கு வெளியே நடந்தேறும் அட்டூழியங்களையும் பின் தொடர்ந்து வரும்
அழிவுகளையும் தார்மீகக் கண்ணோடு நோக்கி நியாயத்தை வேண்டி நிற்கிறது
பூங்குழலி வீரனின் கவிதை. இக்கவிதை அநேகமாக ஈழத்தின் உள் நிகழும் சிதறல்களை
முன் வைப்பதாகப் பட்டாலும் உலகலாவிய நிலையிலும் மண், மொழி, மதம், இனம்
கடந்தும் நோக்கலாம். இயற்கை வளமும் சுபிட்சமும் நிறைந்து செழிப்போடு
திகழ்ந்த ஒரு மண், இப்பொழுது போரின் காரணமாக உடைந்து சிதிலமுற்று இதுகாறும்
இருந்த அத்தனை சிறப்புகளையும் காவு கொடுத்து ஆறாப் புண்களோடு வெறிச்சோடிக்
கிடப்பதாகக் காட்டுகிறது இக்கவிதை. எஞ்சியிருக்கின்ற சொற்ப உயிர்கள் வாழ்வா
சாவா என்பதான உயிர்ப்போராட்டத்தில் வாழ்வை நகர்த்தி வருகின்ற நிர்மூலச்
சூழல் நம்மையும் ஒரு கணம் உருக வைக்கிறது. உண்மையாகிவிட்ட தீர்க்கதரிசனக்
கவிதைதான் இது.
முன்பொரு காலத்தில் அந்த நிலம்
முன்பொரு காலத்தில் என்று தொடங்கும்
கதையில்
அந்த நிலம் அமைதியின் வடிவாய்
வாய்த்திருந்தது
தனக்கே உரிய ஈரத்துடன்
மறுதலிக்க முடியாத அடையாளத்துடன்
அந்த நிலம்
கனிந்திருந்தது
கொஞ்ச
காலமாக உடைந்து கொண்டிருந்தது
அந்த நிலம்...
அந்த நாட்டில் வாழ்ந்த
அத்தனை அமைதிகளும் புலம்பெயர்ந்து
விட
வெற்றிடமாய்
அந்த நிலம்...
இன்றுவரை காயங்கள் காயங்களாகக்
குருதியை மட்டும்
சுமந்தபடி...
எதையும் விட்டுச் செல்ல முடியாமல்
கொஞ்ச உயிர்கள்
இன்னும் எஞ்சி இருக்கின்றன
அந்த நாட்டில்
தன் உயிரை விதைத்தபடி...
- பூங்குழலி வீரன்
மெளனம் கவிதையிதழில் ம.அ.சந்திரனின் மரபுக் கவிதையும் இடம்பெற்றுள்ளது.
அவரது கவிதை நேரடியாக என்னுடன் உரையாடுவது போல் அமைந்துள்ளதால் அந்தக்
குரலைத்தான் கேட்க முடிந்தது. கவித்துவத்தைத் தேடுவதற்கு இம்மியளவு சிரமும்
யத்தனமும் தேவைப்படாமல் போனது எனக்கு. கவிஞர் நாணல் தொடர்ந்து நம்மோடு
வந்து புதிய தரிசனங்களைக் காண வேண்டும். இருவருக்கும் எமது நன்றி!
முடிவுரையாக ஒரு பொதுப்பார்வை
'ஒரு சமுதாயத்தில் குவிந்துவிட்ட முரண்பாடுகளை அதன் முற்போக்குச் சக்திகள்
தீர்க்காவிட்டால், அந்த வேலை பிற்போக்குச் சக்திகளால் செய்து
முடிக்கப்படுகிறது'
-கார்ல் மார்க்ஸ்
பொதுவாக, நவீன இலக்கியம் என்பதே நேற்றுவரை சொல்லிக் கொடுத்ததை ஏற்றுக்
கொள்ள மாட்டேன், எனக்கென்று தனிப்பாதை உண்டு, இனம், மொழி, மதம் வைத்துப்
பார்க்காமல் தனி மனிதனை வைத்துப் பார்ப்பது நவீன இலக்கியம். இதில்
தனிச்சுவை உண்டு, நிறைய அனுபவமும் அதைப் புரிந்துகொள்ளும் தகுதியும்
எனக்கிருக்கிறது, திறனாய்வும் கட்டுடைப்பும் அவசியமானவை, முரண்படல்
அவசியம், உள்ளார்ந்த ஒரு தனிக்குரல் கொண்டது, பழக்கத்திலிருந்தவை
புதியவற்றை அணிந்து கொள்கிறது. அதில் புதிய உலகத்தைக் காட்டுதல்,
அவசியமெனில் கட்டுடைப்புச் செய்தல் எனும் பார்வைதான் நவீன இலக்கியத்தின்
முதல் படி. ஆய்வுக்குரிய பல கவிதைகளில் இக்கூற்றை அவதானிக்க முடிந்தது
என்பது பெருமைக்குரிய விடயமாகும்.
ஆக இக்கவிதைகளில் நவீனம் என்பதன் அகநிலைத் தேடல்களாக இருக்கலாம் என
நினைக்கிறேன். அதோடு எடுத்துரைப்புப் பாங்கு, கவிதை சொல்லும் பல்வேறு
பாணிகள், புலப்பதிவுகள், சுய ஆக்க கற்பனைத் திறன், மனித உறவு முறைமையின்
மாற்றங்கள், குறியிட்டு முறை, அரூபச் சித்திரிப்பு, உத்தி, சொல்லத் தயங்கிய
வாழ்வுகள், காத்திரமான கருத்தாடல், கவிதை அளிக்கும் முறை, மரபைக்
கேள்விக்குள்ளாக்கும் இலக்கியப் பரீட்சார்த்தங்கள், கருதுகோள்களை
மறுதலிக்கும் இதுவரை இருந்த மரபார்ந்த வெளிப்பாடுகள், புதிய
உணர்முறை, பின்புலங்களை மீறிச் செல்லும் முறைமை, விடு நிலை, எடுத்துரைப்பு
ஆகியவை இக்கவிதைகளில் இல்லையென்று மறுதலிக்க முடியவில்லை. கவிதையின் மூலம்
சொல்ல வருவது, உணர்த்த வருவது என்ன என்பதற்கு ஒன்றுமே இல்லாதது போல்
தென்படலாம். அல்லது குழப்பம் தருவனவாகவும் அருவருப்பாகவும் இருக்கலாம்.
அறிவியக்க ரீதியை விடுத்து உணர்வு ரீதியாக அமைந்த கவிதைகளும் பல உள்ளன.
பிரச்சார தொனிகளும் சம்பவப் பிரதானிகளும் கொண்ட கவிதைகளும் உள. மொத்தத்தில்
புத்தாயிரத்தின் மலேசிய தமிழ் இலக்கியம் மாறுபட்ட நவீன கவிதையுலகை நோக்கி
பயணிக்கத் தொடங்கியிருக்கிறது என்பதுதான் வெற்றி!
|
|