|
பத்தாம் திரிதல்
(டத்தாரான் மெர்டேக்கா கீழ்த்தளத்தில் ‘பாரதியார்’ படம் பார்த்தக் காலம்)
அடைமழை பெய்தாலே தலைநகரில் உள்ள ஆற்றின் நீர் தேநீர் வண்ணத்திற்கு
மாறிவிடும். பாதைகளில் அங்குமிங்குமாக வெள்ளம் ஏற்பட்டு வாகனப்
போக்குவரத்து ஸ்தம்பித்துவிடும்.
பாதைசாரியான நான் ஏதாவதொரு
கட்டிடத்திற்குள் புகுந்து மழை நிற்கும் வரை நின்றுக் கொண்டே இருப்பேன்.
சில சமயங்களில் உற்புக அனுமதி மறுக்கப்பட்டு வாசலிலேயே நிற்கும் நிலை
ஏற்படும். சாரல் அடிக்கும்.
இந்தச் சாரல் அடிகளைத் தவிர்ப்பதற்காக ஒரு நாள் மாலை, டத்தாரான் மெர்டேக்கா
கீழ்த்தளத்திற்குள் நுழைந்தேன். பழைய நண்பர் ஒருவர் என்னைப் பார்த்ததும்
அகமகிழ்ந்து ‘தண்ணியடிக்க’ அழைத்துப் போனார். கறுப்புப் பீர்களை குடித்துக்
கொண்டிருக்கும்போது அவ்வழியாக அவர் மனைவியும் பிள்ளைகளும் வந்து
கொண்டிருப்பதைப் பார்த்ததும் திருதிருவென விழித்தார். பீர்களுக்குச்
செலுத்த வேண்டிய கட்டணத்தை விட அதிகமாகவே பணத்தொகையைக் கையில் திணித்து
விட்டு ‘ஸாரி’ சொல்லிவிட்டு பின்வாசல் வழியாக ஓடிவிட்டார்.
உண்மையைச் சொல்வதற்கும் உண்மையாய் வாழ்வதற்கும் மனிதனால் இயலாமல் போகும்
தருணங்களே தோல்விக்கான உறுதியான அடையாளங்கள். வாழ்வில், ஒரே ஒரு பெரும்
தோல்விதான் உள்ளது. அன்புக்குரியவர்களிடமே உண்மையாய் இராததுதான் அது.
என்னிடமிருந்த போத்தல்களை என் தோள்பையில் போட்டு கொஞ்சம் தள்ளாட்டத்துடன்
அவர்களுக்கு பின் சென்றேன். தியேட்டர் பக்கம் போனார்கள். அருகில் போய் என்ன
படம் எனப் பார்க்கையில் பாரதியார் படம். ஷாயாஜி ஷின் டே உருவத்தில்
பாரதியின் மீசை முறுக்கப்பட்டிருந்தது. போதையுடனும் போத்தலைத் திறந்து
கொஞ்சம் கொஞ்சமாகக் குடித்தும் படத்தை ரசித்தும் பார்த்தேன். பாரதியின்
சவத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஈக்கள் எண்ணிக்கைதான் பார்வையாளர்கள்
கூட்டம். படம் முடிந்து வெளியேறி டிக்கெட் வாங்கி மறுபடியும் பார்த்தேன்.
படம் முடிந்தது. மீண்டும் பார்க்க அனுமதியில்லை.
ஐந்தாறு பாதுகாவலர்கள் எல்லோரையும் வெளியேறும்படி அவசரப்படுத்திக்
கொண்டிருந்தார்கள். கார் நிறுத்துமிடம் வழியாக வெளியேற முற்படுகையில்
வெள்ளம் ஏற்பட்டிருந்ததைக் காண முடிந்தது.
ஒரு மாதத்திற்கு பிறகு ஒரு நாளில் அவ்விடத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டு
வாகனங்கள் சேதமடைந்தன. பல வழக்கறிஞர்கள் பாதுகாப்பைக் கருதி அங்குதான்
நிறுத்தியிருந்தார்கள். வழக்குப் போட்டார்கள். நஷ்ட ஈடு கிடைத்ததா
கிடைக்கவில்லையா எனத் தெரியவில்லை. செய்திகளை தொடர்ந்து கவனிக்கவில்லை.
பதினொன்றாம் திரிதல்
(மஸ்ஜிட் இந்தியா மாலைச் சந்தையில் அலங்கார மேற்கூரை கட்டப்பட்ட காலம்)
ஆறு ஓடும் பாதையில் பாலங்கள் சில உண்டு. அப்பாலங்கள் வழி கீழே இறங்க
காலடித் தடயங்கள் ஏற்பட்டு அதுவே சிறு படிகளாகவும் மாறியது. வெள்ளம் இல்லாத
சமயங்களில் பாலத்திற்கு கீழே சில மனித நடமாட்டத்தைக் காணலாம். முக்கியமாக
மஸ்ஜிட் ஜாமேக் முன்பாக, தபால் பெரு நிலையம் முன்பாக, கிள்ளான் பேருந்து
நிலையம் முன்பாக இருக்கும் பாலத்திற்கு கீழ் இறங்கிப் பார்ப்போமென்றால்
போதைப் பொருள் விற்பனை
அமோகமாக நடந்தேறும். அங்கேயே அதனை பயன்படுத்துவோரும்
உண்டு. எங்காவது கொள்ளையடித்து விட்டு அல்லது திருடிக் கொண்டு பதுங்கும்
இடமாக- புகலிடமாக இம்மாதிரியான இடங்கள் அவர்களுக்குத் தோதாக இருக்கின்றன.
இவர்களின் ஓய்விடமாக, படுத்துறங்கும் இடமாக மஸ்ஜிட் ஜாமேக்
அமைந்திருக்கின்றது. காலை பதினொறு மணிபோல மஸ்ஜிட்டின் சிறிய இரும்புக் கதவு
திறக்கப்படும். ஆற்றின் ஓரத்திலிருந்து நீங்கள் பார்த்தாலே போதும்.
மஸ்ஜிட்டின் இரு பகுதிகளிலும் மனிதர்கள் கால் நீட்டி படுத்திருப்பதைப்
பார்ப்பீர்கள். இவர்களில் ஆன்மீகவாதிகளும் உண்டு. இவர்கள் உடற்சோர்வாக
படுத்திருப்பார்களே தவிர குரட்டை விடும் அளவிற்கு உறங்க மாட்டார்கள்.
தண்ணீர் குளம் அருகே உள்ள பகுதியில்தான் வேலையில்லாதவர்களும், வேலை செய்ய
விரும்பாதவர்களும், திருடர்களும், வழிப்பறி கேடிகளும், போதைப் பித்தர்களும்
படுத்துறங்குவார்கள்.
ஒரு நாள் ஓசிபிசி வங்கியருகே மலாய்ப்பெண் ஒருத்தியிடம் வழிப்பறி
நடந்திருக்கிறது. அவள் எதிர்த்து போராடிய சமயத்தில் அந்தக் கேடி, பேனா
கத்தியினால் வயிற்றை கீறி விட்டு பணப்பையையும் கைப்பேசியையும் எடுத்து
ஓடிவிட்டான். அப்பெண் அருகே உள்ள அல்லூரில் விழுந்ததைப் பார்த்த பொதுமக்கள்
உதவிக்கரம் கொடுத்திருக்கின்றனர். பொதுமக்கள் கொடுத்த தகவலின்படி
வழிப்பறிக் கேடி மஸ்ஜிட் ஜாமேக்குள் புகுந்ததாகச் சொல்ல, போலீஸ் தன்
படையோடும் ஒரு லாரியோடும் மஸ்ஜிட்டுக்குள் புகுந்தது. இந்தோனேசியாவில்
சுனாமி வந்த போது மஸ்ஜிட்டை மட்டும் விட்டுவைத்து மற்றெல்லாவற்றையும்
அழித்துச் சென்றது மாதிரி என்னை மட்டும் விட்டு வைத்து மற்றெல்லோரையும்
வாரி ஏற்றிக் கொண்டு சென்றது போலீஸ் லாரி. யா அல்லாஹ்!!
பன்னிரெண்டாம் திரிதல்
(இந்திய வாலிபர்கள் சீன ஸர்ப்ப நடனம் ஆடிய காலம்)
மாரியம்மன் கோயிலில் என்ன விசேஷம் என்று ஞாபகத்தில் இல்லை. கல்யாண கச்சேரி
இல்லை. ஏதோவொரு சமய விழாதான் அன்று. வழி நெடுகிலும் வந்து கோயிலுக்குள்
நுழைந்து பிரதான வாசற்பகுதி வரை மயிலாட்டம், கோலாட்டம் மற்றும் சீன ஸர்ப்ப
நடனமும் அரங்கேறியது. இந்தியர்களின் மேளதாளத்தோடு சீன மேளச் சத்தமும்
அவ்விடத்தை அதிரச் செய்தது. அவ்வட்டார சீனர்கள் கூட்டமே வந்து வேடிக்கைப்
பார்த்துச் சென்றது. நடனம்
ஆடியவர்கள் அனைவரும் இந்தியர்கள் என்பதே
ஆச்சரியம். தவறில்லாமல் தாளத்தோடு பிசிறில்லாமல் ஆடி பாராட்டுக்களை அள்ளிச்
சென்றனர். இந்த நடனத்தை பாராட்டி சிலரும் குறை சொல்லி புலம்பிய வண்ணம்
சிலரும் பேசிக் கொண்டே கலைந்து சென்றதைப் பார்த்தேன்.
வெளியே கோயில் வாசற்படி இரு மருங்கிலும் சிலர் துண்டுப் பிரதிகளை இலவசமாக
தந்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, வெளியேறி, பெற்றுக் கொண்டேன். அதில்
சீர்டி சாய் பாபா மையம் லெபோஹ் அம்பாங் பகுதியில் திறப்பு விழா
காணவிருப்பதையும் இலவச உணவு வழங்கப் படுமென எழுதப்பட்டிருந்தது.
‘ஆர்வத்துடன், ஏழைகளுக்காக நற்பணி ஆற்றும் அன்பு எங்கு உள்ளதோ, அங்கு,
இறைவன் இருக்கின்றார்’ என்று சொன்ன மகாத்மா காந்திக்கு நன்றி. ஹே ராம்!
சீர்டி சாய்பாபா, பரதேசி கோலத்தில் ஒரு மஸ்ஜிட் முன்பாக இருந்த
மரத்தினடியில் ஒரு கல்மேல் உட்கார்ந்திருந்தவர். தன் உபதேசத்தால்
ஈர்த்தவர். தலையில் துண்டு கட்டு. ஒரு காலின்மேல் ஒரு கால் போட்டு
உட்கார்ந்து தரும் காட்சி பிரசித்தம். கிழிந்த ஆடை. ஏழைகளுக்கு அன்னதானம்
தந்ததில் பிரசித்தம் என்று அவரைக் குறித்து முன்பே அறிந்திருந்தவன் நான்.
ஆனால் வேதம் இருக்குமளவுக்கு அவர் பிரசித்தம் என்று அறியாதவன்.
தன்னைத் தானே கடவுள் என்று சொல்லிக் கொண்டவரின் நிலைமையை இப்போது
கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சக்கர நாற்காலியில்!
ஆனால், சீர்டி பாபா வேறு. இவருடைய உபதேசங்களும் குரு நானாக் உபதேசங்களும்
ஏறக்குறைய ஒன்றே. கிருஷ்ணனும் நானே- அல்லாவும் நானே- இயேசுவும் நானே என்று
அவதாரத் தொனியில் பேசுபவர், பாபா! அந்தந்த மார்க்க-மத வேதங்களை வைத்து
ஆராயும்போது ‘நானே’ என்ற பிரசங்கம் அடிபட்டுப்போகும். இதைவிடுத்து, பாபா
மையத்தில் உட்கார்ந்து தியானிக்கவும் பசியைப் போக்கவும்தான் எனக்கு
பேருதவியாய் இருந்தது.
பாபா விக்ரகத்திற்கு ஆரத்தி எடுத்தப்பின் உட்காரும் சடங்கு இருந்ததால்
பின்பற்ற வேண்டி வந்தது. இங்கு கல்விமான்களும், அறிவுஜீவிகளும்
பணக்காரர்களும் (டத்தின்ஸ்ரீ இந்திராணி உட்பட) பலரும் வந்துப் போகும்
வண்ணம் இருந்தனர்.
வணங்கப்போகும் பக்தன் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் பாபாவின்
விக்ரகத்தைத் தொடலாம். முத்தமிடலாம். கட்டியணைக்கலாம். ஏழை - பணக்காரன்-
பரதேசி- கோமாளி என்ற வேறுபாடில்லை. பெண்ணுக்கு தீட்டு என்ற பேச்சுக்கே
இடமில்லை. இவர்களே மாலையைச் சாத்தலாம். மலர் போட்டு அர்ச்சிக்கலாம்.
இதுவொரு புரட்சி என்றே பக்தர்கள் மத்தியில் பேசப்பட்டது. இது தவறு- பாபம்-
குற்றமென ஒரு சாரார் விமர்சித்தும் வந்தனர். இப்படி அங்கு நடக்கும் ஒவ்வொரு
காரியங்களிலும் காலரில்லாத சட்டையுடனும் தலையில் இறுக்கிக் கட்டப்பட்ட
வெள்ளைத் துணியுடனும் சுறுசுறுப்புடன் செயல்பட்டுக் கொண்டிருந்தார்
அம்மையத்தின் தலைவர்.
வந்த பக்தர்களுக்கு உணவு பற்றாக் குறையாகிவிடுமோ என்ற பதற்றத்தில் உணவுப்
பரிமாறுபவர்கள் கொஞ்சமாக கொடுக்க, இரண்டாம் முறையும் சில நேரங்களில்
மூன்றாம் முறையும் உணவை கேட்டு பெற்று சாப்பிட்டிருக்கிறேன்.
ஒரு நாள் ஒரு பெண்மணி பக்தர்கள் முன்னிலையில் ‘நான் உணவுக்காகவே இங்கு
வந்தேன்...’ என்ற தனது சாட்சியைச் சொல்லும்போது சிலர் அதிர்ந்து போயினர்.
சிலர் தலை கவிழ்ந்தனர். என் மனம் ‘சபாஷ் பெண்ணே!’ என்றது.
பிரசாதம் கொடுத்துக் கொண்டிருந்த காவியுடையணிந்தவரை உற்றுப் பார்த்தேன்.
அவர் கொடுத்த லட்டுவை உண்டதில் வயிறு எரிந்தது. பக்தர்கள் முன்னிலையில்
அவர் உபதேசிக்கும்போது அதுவும் தமிழிழும் தேர்ந்த ஆங்கிலத்திலும்
விவரிக்கும்போது மனம் எரிந்தது. என் அப்பாவும் அம்மாவும் வியர்வை சிந்தி
உழைத்த பணத்தில் இவர் உதவியோடு ஒரு வீட்டை வாங்க முயன்றார்கள். இவர்
அப்பணத்தை வாயில் போட்டு ஏப்பமிட்டு அவ்வீட்டை எங்களுக்கு இல்லாமல் செய்து
விட்டார். கொடுத்த பணத்தையாவது வட்டியில்லாமல் திருப்பித் தாருங்கள்
என்றதற்கு நீதிமன்றம் தன்னை ‘பேங்கராப் ஸீ’-யாக்கி விட்டதாகச் சொன்னார்.
அதனால் பணம் இல்லை என்றார். பிள்ளைகளை வெளிநாட்டில் பயில்விப்பதற்கு பணம்
உண்டு. இங்கு இவருக்கு ஆஸ்தான உபதேசி பொறுப்புவேறு. ஆத்திரம் பொங்கியது.
மனதிற்குள் சபித்தேன். பாபா என்னை முறைத்துக் கொண்டிருந்தார்.
கனடாவிலிருந்து வந்த பரத நாட்டியப் பெண்மணி அற்புதமாக நடனமாடினார். (ஆனால்
யார் வந்து ஆடினாலும் மையத்தலைவர் ஆடிய சனீஸ்வர நடனம் என்னால்
மறக்கவியலாது.) அன்று மாலை கருவிக் கொண்டிருந்தது என் மனம். அந்த
கடன்காரனைத் தனியாக அழைத்துச் சென்று அடித்து உதைத்து நடைப் பிணமாக்கலாமா
என்று மனம் கொத்தளித்து கூச்சலிட்டது. அங்கு யார் யாரோ என்னிடம் சொன்ன அந்த
இடத்தின் பிரச்சனைகளையெல்லாம் மறந்து போயிற்று. துரோகி என் முன்னே முனிவன்
போலிருந்தான். நடனம் முடிந்து ஆசி வழங்கும் நேரம் வந்தது. மையத் தலைவர்
பாபாவிற்குச் செலுத்தப்பட்டிருந்த காணிக்கைப் பெட்டியை எடுத்து பாபாவின்
காலடியில் வைத்து திறந்தார். மையத் தலைவர் தன்னிடம் உள்ள நீண்ட மயிலிறகை
தலையில் வைத்து, கோலை தோளில் வைத்து, பாபாவின் நாமத்தைச் சொல்லி,
ஆசிர்வதித்துக் கொண்டிருந்தார். எனக்கு முன்னால் பரத நாட்டியப் பெண்மணி -
அவரின் தாயார் - அவரின் உறவினர்.
ஒருவரை ஆசீர்வதித்ததும் அப்பெட்டியிலிருந்து கையளவு வந்த பணத்தை தந்துக்
கொண்டிருந்தார். எல்லோருக்கும் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி.
கொடுக்கப்பட்டதைக் கண்களில் ஒற்றிக் கொண்டனர். சிலர் மையத் தலைவரின் காலைத்
தொட்டு வணங்கினர். எனக்கு வந்ததை இரு கரங்களால் இறுக்கமாக மூடிக் கொண்டேன்.
எனக்கு முன்னால் இருந்தவர்களுக்குச் சில்லறைத் தாட்கள். ஒரு வெள்ளி- ஐந்து
வெள்ளி தாட்களே இருந்தன. பாபாவைச் சுற்றிவிட்டு சுவரோரமாய்
சப்பனமிட்டமர்ந்து தரையில் வைத்துப் பார்த்தேன். எல்லாமே ஐம்பது வெள்ளித்
தாள்கள். என்னருகே நின்று மோதிக் கொண்டிருந்த கூட்டம் அதனை உற்றுப்
பார்க்க, உடனே அள்ளி என் தோள் பையில் போட்டு வெளியேற முற்பட்டேன்.
படியிறங்கும்போது ஒரு சிறுமி என் சட்டை நுனியைப் பிடித்து நிறுத்தினாள்.
திரும்பிப் பார்த்தேன். தன் பால் பற்களைக் காட்டி, கரங்கூப்பி “சாய் ராம்!”
என்றாள்.
நடக்கும்போது ரவீந்திரநாத் தாகூரை நினைத்துக் கொண்டேன். அவர் தன்
கீதாஞ்சலியில் இப்படி எழுதியிருக்கிறார்:
‘என் ஆசைகள் பல; என் ஓலம் பரிதாபமானது; ஆனால், கண்டிப்பான மறுப்புகள்
மூலம், என்னை நீ என்றும் காப்பாற்றி வருகிறாய். இந்த வன்மையான கருணை, என்
வாழ்வில் முழுக்க கலந்துள்ளது.’
- தொடரும்
o
பரதேசியின்
நாட்குறிப்புகள் ...1
o பரதேசியின்
நாட்குறிப்புகள் ...2
|
|