|
ஒரு
நிகழ்வின் அழைப்பிதழைக் கோலாலம்பூர் நகரத்தில் வாழும் என் பால்ய
நண்பருக்குக் கொடுத்து சில பழையக் கதைகளையும் பேசி வரலாம் என நான் சென்ற
ஒரு நாளில்தான் நகர வீடுகளின் மரணிப்பை உணர்ந்தேன். இன்ப அதிர்ச்சி
கொடுக்கலாம் என்று ஞாயிறு மதியம் சென்ற எனக்குக் கிடைத்தது வெறும் ஏமாற்றம்
தான். வீட்டில் யாரும் இல்லை என்ற பணிப் பெண்ணின் வாயசைப்பையும் அதற்கு ஈடு
செய்யும் வகையான கையசைப்பையும் மட்டுமே காண முடிந்தது. சரி, இரவு சென்று
பார்ப்போம் என்றால் அப்பொழுதும் நான் தேடிச் சென்ற என் நண்பர் வீட்டில்
இல்லை. அவர் மனைவியாவது இருப்பார் என்றால் அவரும் இல்லை. இது வேலைக்காகாத
ஒன்று என்று கைப்பேசியில் தொடர்புக் கொண்டேன். நண்பரோ ‘ரொம்ப’ வேலை எனவும்
தான் வீட்டில் இருப்பதே அதிசயம் என்றார். அழைப்பிதழை பணியாளிடமே கொடுத்து
விடுமாறும் கூறினார். நண்பர் நிகழ்விற்கு வந்தாலே போதும் என்றாகி விட்டது
எனக்கு. நகர வாழ்வு பற்றியும் வீட்டின் நிலைப்பாடுகள் குறித்தும் பல
கேள்விகள் என்னுள் எழுந்த வண்ணம் இருந்தன.
நகர வாழ்வுக்குள் தனித்தனி வீடுகளிலும் அடுக்குமாடி வீடுகளிலும் சேகரித்த
சேகரிக்கப்போகும் பொருட்களுக்காக மட்டுமே வீடுகளை நம்பியிருக்கிறோம்.
நச்சரித்துக் கொண்டேனும் நகர வாழ்வில் நசுங்கிப்போகிறோம் பகட்டான வாழ்வில்.
ஆனால் உண்மையில் மிஞ்சுவது என்ன? இறுக்கங்களும் இறுகிப் போன மன நிலைகளும்
தான். நின்று இரசிக்க, பல வேளைகளில் சிரிக்க, சிலருடனாவது மனம் விட்டு பேச,
உறவுகளைப் பலப் படுத்திக் கொள்ள பொழுதில்லை நமக்கு. இயந்திரங்களோடு
பெருவெளியில் நாமும் இரத்த நாளங்கள் கொண்ட இயந்திரமாகி நகர்ந்து
கொண்டிருக்கிறோம்.
அட்டவணை வாழ்வில் அடங்கி, அவசர உணவுகளில் வயிறு நிறைத்து, எண்கள் வழி
மனிதர்களை அடையாளங் கண்டு நகர புகைகளை நுகர்ந்து, வெண்சுருட்டு புகைகளில்
கரைந்து வேலையென பண உலகுக்காக நம்மையும் மனதையும் அடகு வைத்து இருட்டோடு
வீடு திரும்புகிறோம் வீட்டின் இருத்தல் விடுதியாக மாறிப் போய்க்
கொண்டிருக்கிறது.
தோட்ட வாழ்க்கையில் வீடுகள் ‘லயம் லயமாக’ இருந்தாலும் இன்றும் லயித்து
நிற்கிறது மனதில். நகர வாழ்வில் சம்பாதிக்கும் பணம் பத்து மடங்கு
இருந்தாலும் தோட்ட வாழ்க்கையில் மாளிகைகளாய் இருந்த வீட்டு நினைவுகள் நகர
வாழ்வில் மயானங்களாகி விட்டதை மறுக்க முடியாது. ராஜா ராணி கதை சொன்ன
பாட்டியின் குரல்களும், ஒன்றாய்தான் சாப்பிட வேண்டும் என்று மறுக்கப்படாத
தாத்தாவின் சட்டமும், ரப்பர் பால் காயாத வேலைகாட்டு உடையோடு அப்பாவை
தழுவிக் கொண்ட நாட்களும், அம்மாவின் கை மணக்கும் கருவாட்டுக் கறியும்
புளிச்சக் கீரையும், இரவுகளில் வெளிச்சமாகிப் போகும் மொத்த வீடும்
பசுமையாய் இருக்கும் இன்னமும் பலர் மனப்பக்கங்களில்.
அன்றைய வீட்டின் ஒவ்வொரு சுவரும் நம் வாழ்ந்த கதை பேசும். வாசல் கோலங்கள்,
காத்து சேட்டைகள் அண்டக்கூடாது என ஆணி அடித்த வாயிலில் ஒற்றை நாணயம்,
வெள்ளைப் படம் பேசும், வரவேற்பறையில் கதவு கொண்ட தொலைக்காட்சிப் பெட்டி,
சுவர்களில் ‘அரைஞாண்’ கயிறு கட்டிய பல் முளைக்காத படம், கட்டுமஸ்தான
தாத்தாவின் புன்னகைக்காத புகைப்படங்கள், வரிசை வரிசையாய் மழைநீர் பிடித்து
வைக்கும் தொட்டிகள் தோம்புகள், மழைக்காலங்களில் மயங்க வைக்கும் மரவள்ளி
கிழங்குகளும், ‘வரக் காப்பி’யும் என ஆயிரம் கதைப் பேசும் வாழ்ந்த பழகிப்போன
பழைய வீடுகள்.
இன்று அதிவேகமாக நகரும் நகர வாழ்வில் வீடுகள் பேசும் மௌன மொழிகளைக் கேட்க
மனமும் இல்லை நமக்கு. அலுவல்களில் மூழ்கி போகும் போதெல்லாம் நகர வீடுகள்
நரகமாகி வெறிச்சோடிக் கிடக்கின்றன. இரவில் வீடு வந்து வயிறு நிரப்பி
உறக்கத்தில் ஆழ்ந்து குறட்டைகளை மட்டுமே தற்போதைய வீடுகளின் காதுகள்
கேட்டுக்கொண்டிருக்கும். பிள்ளைகளின் ஆனந்தக் குரல்கள் அமிழ்ந்து போகின்றன
புத்தகங்களில், தேர்வுகளில் மிஞ்சிப் போனால் கணினி விளையாட்டுகளில்.
எந்தவொரு சுகமான நினைவுகளையும் பதிவு செய்து கொள்ள முடியவில்லை நகர
வீடுகளால். பதிவு செய்யும் சிற்சில சொற்களும் இந்தோனேசிய பணிப்பெண்களின்
கலப்படமான குரல்கலாகவே மீந்துகின்றன. அதை உள்வாங்கிக் கொள்ளும் நகர வீடுகள்
மீண்டும் உமிழ்ந்து விடுகின்றன ஜீரணிக்க முடியாததால்.
இருந்தும் விடுமுறை காலங்களிலாவது விடுப்பட்ட நினைவுகளை வீடுகள் நிரப்பிக்
கொள்ள காத்து கிடக்கின்றன. அங்கும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. உறவுகளை
வளர்ப்பதற்கு விடுமுறைகளில் நகர வீடுகள் பூட்டி விடப் படுகின்றன அவர்களின்
உல்லாசப் பயணங்களில், திரையரங்குகளில், செயற்கைப் பூங்காக்களில். இன்னமும்
நகர மனிதர்கள் வீடு திரும்பும் ஆனந்தத்தை அறிந்திருப்பார்களா என்பது
சந்தேகம்தான்.
நிகழ்வின் அழைப்போடு நண்பனுக்கு சிறு குறிப்பு எழுதி வைத்தேன்.
'மற்றொரு நாள் நான் உன் வீட்டிற்கு வரும் போது பணியாளர் இல்லாத உன் வீடு
தனது வாயை அசைத்து நீ இல்லாததை தெரிவிக்க முயலலாம்; அதற்கு ஈடு செய்யும்
வகையான கையசைப்பை செய்ய முயன்று...'
|
|