|
இந்திரா டீச்சரை முதலில் சந்தித்தபோது, நான் முதலாம் படிவத்தில் படித்துக்
கொண்டிருந்தேன். நான் படித்த இடைநிலைப்பள்ளியில் பெரும்பாலான மாணவர்கள்
ஆரம்பப் பள்ளியின் இறுதித் தேர்வான யூ.பி.எஸ்.ஆரில் குறைந்தது ஒரு
பாடத்தில் தோல்விக் கண்டவர்களாக இருப்பார்கள். அதிலும் என்னுடைய நண்பர்களாக
வாய்க்கப் பெற்ற செல்வராஜூ, தங்கராஜன் போன்றவர்கள் பல
பாடங்களில்
தோல்விக் கண்டு மகிழ்ச்சியாக காலத்தைக் கழித்துக் கொண்டிருந்தனர். பொதுவாக
மலேசிய தமிழ் மேல்தட்டு மாணவர்களின் மொழியில் ‘எஸ்டேட்டுகாரனுங்க’
பிள்ளைகள் பெருகி வழிந்த இடைநிலைப்பள்ளி அது.
நான் முட்டாளாக உணர்ந்த காலமது. ஆறு வருட ஆரம்பப் பள்ளிப் படிப்பையும், ஒரு
வருட புதுமுக வகுப்பையும் கடந்திருந்தேன். மலாயிலும், ஆங்கிலத்திலும் 10
வாக்கியங்கள் எழுதினால் இரண்டோ, மூன்றோ சரியாக இருக்கும். தமிழும் கணிதமும்
என்னை முழு முட்டாள் என நம்புவதற்கு பெரிதும் தடையாக இருந்தன. கணிதத்தில்
பத்தில் எட்டு சரியாக இருந்தது. தமிழ் இன்னும் ஒரு படி மேல். நான் பாட்டி
வீட்டில் வளர்ந்தேன். நான் வாழ்ந்த தோட்டத்தில், என் மாமாமார்கள்
படித்தவர்களாக இருந்தனர்.
வீட்டில் சிறிய நூலகம் இருந்தது. ஆரம்பப் பள்ளி முடிவதற்குள் மகாபாரதம்,
இராமாயணம் தொடங்கி சாண்டில்யன் வரை படித்து முடித்திருந்தேன். பெற்றோரை
விட்டு பிரிந்து வாழ்ந்ததால் அநாவசியமாக பேசாமல் இருப்பேன். சுற்றி
இருந்தவர்கள் ‘அமைதியான பையன்’ என்று பாராட்டிக் கொண்டிருந்ததால் தொடர்ந்து
அந்த முகமூடியையே அணியத் தொடங்கியிருந்தேன்.
அதுவரையில் எனக்கு கற்று தந்த ஆசிரியர்களை மனதில் வைத்து
பூசிக்கவிட்டாலும், புதுமுக வகுப்பு தமிழாசிரியரைப் போல வெறுத்ததில்லை. மிக
கண்டிப்பான ஆசிரியர். ஏற்கெனவே படிப்பின் மீது ஆர்வமில்லாத என் நண்பர்கள்
இவரைக் கண்டு அஞ்சியே பள்ளியை விட்டு நின்றுவிட ஆலோசித்துக்
கொண்டிருந்தனர். ஒருமுறை பேச்சு வாக்கில் குளிக்கும் துண்டை சட்டையின் மேலே
போர்த்திக் கொண்டு பட்டணத்திற்கு வரும் தோட்டத்து பெண்மணிகளைப் பற்றி
தரகுறைவாகப் பேசிக் கொண்டிருந்தார். எனக்கு கோபத்தில் மூச்சு வாங்கத்
தொடங்கியிருந்தது.
பாட்டி கூட பட்டணத்திற்கு பொருட்கள் வாங்க அப்படித்தான் செல்வார்.
விலையுயர்ந்த சால்வைகள் இருந்தால், பாட்டி வேண்டாமென்றா சொல்ல போகிறார்.
தீபாவளிக்கு மட்டுமே புத்தாடை வாங்கும் வீட்டின் பொருளாதார நிலைமை. எனக்கு
அவரைப் பிடிக்காமல் போனது. ஒன்பது வகுப்புகள் இருந்த முதலாம் படிவத்தில்,
எட்டாவது வகுப்பில் மறுவருடம் இருந்தேன்.
எனக்கு படிப்பின் மீதான ஆர்வம் குறைந்து கொண்டே வந்தது. வகுப்பில் கடைசி
வரிசை இருக்கைகளைத் தேடி அமர ஆரம்பித்திருந்தேன். தமிழ்ப் போதிக்க புதிதாக
டீச்சர் வந்திருந்தார். பெயர் திருமதி. இந்திரா. டீச்சர் அழகாக இருந்தார்.
மெதுவாக பேசினாலும் உறுதியான குரலுடையவர். பாடத்திட்டத்தைத் தாண்டி தமிழின்
பொதுவான கூறுகளைப் பற்றியும் இணைத்துப் பாடம் நடத்துவார். பெரும்பாலான
ஆசிரியைகளுக்கு குறைவாக இருக்கும் நகைச்சுவை தன்மை டீச்சரிடம் வளமாக
இருந்தது. எப்போதும் கண்டித்துக் கொண்டேயிருக்காமல், தவறு செய்யும்
மாணவர்களை நகைச்சுவையினாலேயே கூனிக் குறுக செய்து விடுவார். நல்ல மாணவர்கள்
தொடங்கி பலவீனமான மாணவர்கள் வரை அவருடைய கண்காணிப்பு வளையத்தின் உள்ளேயே
வைத்திருந்த அவருடைய திறனை இப்போது ஆச்சரியமாக நினைத்துக் கொள்கிறேன்.
இப்படியான நாட்களில், கந்தப்புராணத்தைப் பற்றி பாடம் நடத்தியதாக ஞாபகம்.
கந்தப்புராணத்தை எழுதியது யார் என்று கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு
முன்னால் அமர்ந்திருந்தவனின் பின்னால் தலை தாழ்த்தி மறைந்துக் கொண்டேன்.
டீச்சர் என்னை எழுந்து நிற்க சொன்னார். சரியாக பதிலளித்ததற்காக மற்ற
மாணவர்களைத் கைத் தட்ட சொன்னார். மாணவனாக எனக்குக் கிடத்த முதல் கைத்
தட்டல். மிகவும் சிரமப்பட்டு, வந்த கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொண்டேன்.
பிறகு என்னைத் தனியே அழைத்து விசாரித்தார். என் மாமாவை அவருக்கு
தெரிந்திருந்தது. மற்ற ஆசிரியர்களிடம் என்னுடைய கல்விநிலையை
விசாரித்திருப்பார் போலும். “இன்னும் கொஞ்சம் அக்கறையாக படிக்கலாமே” தோளில்
கை வைத்து அமைதியாக சொன்னார். நான் அக்கறையாக புத்தகம் படிக்கும் சித்திரம்
மனதில் தோன்றி மறைந்தது.
சில மாதங்கள் கழித்து எங்களில் சில மாணவர்களை மட்டும் தனியே அழைத்தார்.
கூலிமில் ஒரு இடைநிலைப்பள்ளியில் தமிழ் சார்ந்த போட்டி நிகழ்வுகள்
நடக்கவிருப்பதாகவும், எங்கள் மூவரின் பெயரை முன்மொழிந்திருப்பதாகவும்
சொன்னார். நான் திருக்குறள் மனனம் போட்டியில் கலந்து கொண்டேன். டீச்சரின்
செலவிலேயே ஒரு ஒட்டுநரை அமர்த்திக் கொண்டு சென்றோம். கூட வந்த கருணாகரன்
அருமையாக பேசினான். என்னுடைய போட்டி நண்பகலில் நடைபெறுவதாக
சொல்லியிருந்தார்கள். முதலில் எங்களை உணவருந்த பணித்தார்கள் ஏற்பாட்டு
குழுவினர்.
ஏதோ தகவல் பரிமாற்றத்தில் கோளாறு நிகழ்திருந்தது. நாங்கள் உணவருந்தி
வருவதற்கு முன்பே, நான் கலந்து கொள்ளவிருந்த போட்டி முடிந்திருந்தது.
கண்ணீர் உருண்டு விழுவதற்கு எந்நேரமும் காத்துக் கொண்டிருந்தது. டீச்சர்
தூரத்தில் ஏற்பாட்டு குழுவினரோடு கோபமாக பேசிக் கொண்டிருந்தது மங்கலாக
தெரிந்தது. ஏற்பாட்டு குழுவைச் சார்ந்த அக்கா என்னிடம் வந்து மன்னிப்பு
கேட்டு கொண்டார். ‘அடுத்த வருடம் உனக்குதான் முதல் பரிசு’ தோளில்
கைப்போட்டவாறே டீச்சர் சொன்னார். எப்போதும் முகத்தில் தவழும் புன்னகை
அப்போது இல்லை.
முதல் பரிசு வாங்குவதற்கு நான் இரண்டு வாரம்தான் காத்திருக்க
வேண்டியிருந்தது. டீச்சர் பள்ளி ரீதியில் தமிழ் போட்டி நிகழ்வுகளை நடத்த
தொடங்கினார். பேச்சு, புதிர், பட்டிமன்றம், கவிதை, சிறுகதை, திருக்குறள்
மனனம் என போட்டிகள் நிகழ்த்தி ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த மாணவர்களை
அடையாளம் கண்டார். பள்ளியிலேயே அதிக நிகழ்வுகளுடன் உற்சாகமான கழகமாக,
தமிழ்க் கழகம் திகழ்ந்து கொண்டிருந்தது.
இரண்டாம் படிவத்தில் நான் முதல் வகுப்பிற்கு முன்னேறியிருந்தேன். மாவட்ட
ரீதியில் நடந்த தமிழ்ப் புதிர் போட்டியில் முதல் பரிசும், அதன்
தொடர்ச்சியாக மாநில ரீதியில் மூன்றாவதாகவும் தேர்வானேன். எதிர்பார்த்த
அளவுக்கு முட்டாள் இல்லை என நம்பத் தொடங்கிய காலம்.
விடுமுறை முடிந்து மூன்றாம் படிவம் துவங்கிய போது டீச்சர் வேறு பள்ளிக்கு
மாற்றலாகி போயிருந்தார். ஏமாற்றமாக இருந்தது. புது ஆசிரியர் ஏமாற்றத்தை
ஊதிப் பெருக்கிக் கொண்டிருந்தார். மூன்றாம் படிவப் பொதுத் தேர்வில்
அறிவியல் பிரிவுக்கு தேர்வாகிற அளவுக்குப் புள்ளிகள் கிடைத்திருந்தது.
தமிழ்ப் பாடத்திற்கு சிறந்த மாணவனாக என்னைத் தேர்ந்தெடுத்திருந்தார்கள்.
பரிசு வாங்கிய அந்த சபையில் டீச்சர் இருந்திருந்தால் இன்னும் மகிழ்வாக
இருந்திருக்கும்.
அதன் பிறகு டீச்சரைச் சந்திக்கும் தருணங்கள் அரிதாகவே இருந்தன. மலாயாப்
பல்கலைக் கழகம் வந்தப் பிறகு, டீச்சரின் சகோதரி திருமதி. கோமதி அவர்கள்தான்
தமிழ் நூலகத்தின் பொறுப்பளராக இருக்கிறார் என மாமா சொல்லியிருந்தார். நானே
வலிந்து சென்று டீச்சரின் மாணவன் என அறிமுகம் செய்துக் கொண்டேன். டீச்சரைப்
பற்றிய புதிய தகவல்களை அவர்தான் அவ்வப்போது சொல்லிக் கொண்டிருந்தார்.
டீச்சரைக் கடைசியாக அவருடைய கணவரின் இறுதி சடங்கில் பார்க்க நேர்ந்தது.
கிட்டதட்ட 13 வருடங்களுக்கு பிறகு, சில வெள்ளைத் தலைமுடிகள் தவிர பெரிதாக
மாற்றமில்லை. முகத்தில் எப்பொது இருக்கும் சிரிப்பு மட்டும்
தொலைந்திருந்தது. அவர் கணவர் புற்று நோயால் தாக்குண்டிருந்த போது,
டீச்சரிடம் இருந்த மனதைரியத்தைப் பற்றி வியப்பாக ஒரு சந்திப்பில்
சொல்லியிருந்தார் திருமதி கோமதி. எனக்கு அதில் வியப்பொன்றுமில்லை.
சில மாதங்களுக்குப் பிறகு, திருமதி கோமதி சொன்ன இன்னொரு விடயந்தான்
அதிர்ச்சியாகயிருந்தது. டீச்சரும் புற்று நோயால் பாதிப்புற்றிருந்தார்.
அந்த நேரத்தில் என் அம்மாவும் வயிற்று புற்றுநோய் கண்டு, அறுவை சிகிச்சை
முடிந்து மருத்துவ மனையிலிருந்தார். 70 கிலோ அம்மா 40 கிலோவாக
சுருங்கியிருந்தார். டீச்சர் ஏற்கெனவே சிறிய உருவந்தான்.
டீச்சர்
மறைந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. அகிரா குரோசவாவின் ‘மடாடாயோ’விலிருந்து (Madadayo)
ஒரு காட்சி. அப்படத்தில் வரும் கல்லூரி ஆசிரியர் இதய சுத்தி நிறைந்தவர்.
மாணவர்களுக்கு பாடத்தோடு அன்பையும் போதிப்பவர். அவருடைய மாணவர்கள் பெரிய
நிறுவனங்களில் நிர்வாகிகளாகவும், உயர் பதவிகளிலும் வீற்றிருப்பவர்கள்.
வருடா வருடம் அவர் பிறந்த நாளில் விழா எடுப்பவர்கள். ஆசிரியருக்கு
குழந்தைகள் இல்லை.
அவர் பூனை ஒன்றை வளர்க்கிறார். ஒரு நாள் பூனை காணாமல் போய்விடுகிறது.
ஆசிரியர் உடைந்து போகிறார். பூனை காணாமல் போனதை துண்டு அறிக்கையில் அடித்து
பள்ளிகள் தோறும் விநியோகிக்கிறார். பூனைகளைக் கண்டுபிடித்துத் தரச் சொல்லி
பள்ளிப் பிள்ளைகளிடம் கெஞ்சுகிறார். அவருடைய மாணவர்கள் ஆசிரியரின்
நிலையெண்ணி கலங்குகின்றனர். அவர்களும் பூனையைத் தேடி தெருத்தெருவாக
அலைகின்றனர். பூனை கிடைக்கவில்லை. ‘ஆசிரியர் எவ்வளவு நல்லவர், அவருடைய
பூனையைக் கூட நம்மால் தேடித் தர இயலவில்லை, அவரது துக்கத்தை எவ்வாறு
தீர்ப்பது?’ என விசும்பி அழத் தொடங்கி விடுவார் ஒரு மாணவர்.
நல்லாசிரியர்களை அடைந்தவர்கள் உணர்ந்து கொள்ள முடிந்த துக்கம் அது.
|
|