இதழ் 11
நவம்பர் 2009
  தொலைதலை முன்னிறுத்தும் 2 காட்சிகள்
சீ. முத்துசாமி
 
     
  பத்தி:

வீடும் விடுப்பட்ட நினைவுகளும்

தினேசுவரி

இந்திரா டீச்சர்
சு. யுவராஜன்


தொலைதலை முன்னிறுத்தும் 2 காட்சிகள்
சீ. முத்துசாமி


கட்டுரை:

சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய முன்னோடிகள் - ஓர் அறிமுகம்
முனைவர் M.S ஸ்ரீலக்ஷ்மி

இல‌ங்கை - நேரடி ப‌ய‌ண‌த்தில் போருக்குப் பின்பான‌ காட்சிக‌ள்
லதா

இழைகள்
இராம. கண்ணபிரான்


சிறுகதை:

அல்ட்ராமேன்
சு. யுவராஜன்


இரண்டாவது கிறுக்கு சித்தப்பா
ஜெயந்தி சங்கர்


தொடர்:


பல வேடிக்கை மனிதரைப் போல...4
ம‌.ந‌வீன்

பரதேசியின் நாட்குறிப்புகள் ...4
மஹாத்மன்


எனது நங்கூரங்கள் ...4
இளைய அப்துல்லாஹ்


கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...2


சித்தாந்தன்


புனிதா முனியாண்டி

முத்துசாமி பழனியப்பன்

ல‌தா

ஜீ.கே

ஷிஜூ சிதம்பரம்

ரேணுகா
     
     
 

காட்சி 1 - ஜென்மங்களைப் பின்தொடரும் துக்கம்

தொலைந்து போதல் என்பது, அது நமக்கு விருப்புள்ள ஒரு பொருளாக இருப்பின் மிகுதியான பதட்டத்தையும் மன உளைச்சலையும் விளைவித்து மனிதனை திண்டாட வைத்திடும் என்பது திண்ணம்.

சிறு பிராயத்து பிளாஸ்டிக் பொம்மை தொடங்கி செல்லமாய் வளர்த்த நாய்க்குட்டி பூனைக்குட்டி என்று குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் ஒருவர் வரை அந்தப் பட்டியல் நீளலாம்.

சமீபத்திய ஒரு பத்திரிக்கை செய்தி, இந்த தடத்தில் மனதை ஓட விட்டு சலனப்படுத்தி, அது குறித்த யோசனைகள் சற்றே ஆழ இழுத்துச் சென்றது.

தொலைந்த தனது செல்ல நாய்க்குட்டிக்கு - நெடுஞ்சாலையில் சில ஆயிரம் வெள்ளி பெறுமான பிரமாண்ட பதாகைகளை நிறுவி விளம்பரப்படுத்தி, தனது தேடுதல் வேட்டையை மும்முரப்படுத்தியிருந்த ஒரு சீன மாதுவின் கவலை தோய்ந்த கலங்கிய முகம், அந்தப் பக்கத்தை கடந்து போன பின்பும் கூடவே வந்து நின்று சங்கடப்படுத்தியது.

பத்திரிக்கைகளையோ அல்லது பிற ஒளி ஊடகங்களையோ கண்ணுறும் எவரும் எதிர்க்கொள்ளும் ஒரு அன்றாடச் செய்திதான் இது என்றாலும், அந்தச் செய்திக்குப் பின்னால் விரவிக் கிடக்கும் மௌன வெளிக்குள் ஊடுருவும் ஒரு மனதில், ஏதேனுமொரு மூலையில் பிடிபடாத ஒரு வலி தெறிப்பதை உணர இயலும்.

ஆகஸ்ட் 20, 2007லில் இத்தகையதொரு சம்பவம் நிகழ்ந்து நாட்டையே கலங்கடித்தது இன்னும் பலரின் நினைவில் பசுமையாக இருக்கலாம்.

நூருல் ஜஸ்லின் (Nurul Jazlin) என்கிற ஒரு எட்டு வயது மலாய்ச் சிறுமி, வங்சா மாஜூவிலுள்ள தனது இல்லத்திற்கு அருகே, இரவு நேரத்தில் இரவுச் சந்தைக்குச் சென்ற வழியில் கடத்தப்பட்டு காணாமல் போன செய்தி பரபரப்பாக பேசப்பட்டது.

இறுதியில் நாடு முழுக்க முடுக்கி விடப்பட்ட தேடுதல் வேட்டை தோல்வி கண்டு, செப்டம்பர் 17 - 2007லில் பெட்டாலிங் உத்தாமாவிலுள்ள ஒரு கடை வீட்டின் படிக்கட்டில் கூறு போட்டு சிதையுண்ட நூருலின் உடலை பையில் திணித்து கைவிடப்பட்ட நிலையில் போலீசார் கைப்பற்றினர்.

மிகத் தீவிரமான பொதுமக்களின் ஒருமித்த அனுதாப அலையின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட வேட்டை தோல்வியுற்றது பலரையும் கலங்கடித்தது.

இத்தகைய பரபரப்பு ஏதுமில்லாமல், ஒரு பெட்டிச் செய்தியாகத் தலைகாட்டி சிலநாட்களில் மறக்கப்பட்டுவிடும் தொலைந்தோரின் எண்ணிக்கையே அதிகம் எனக் கருதலாம். அதிலும் செய்தி ஊடகங்களின் கவனத்தை ஈர்க்காத இன்னும் பல தொலைந்து போதல் நிகழ்ந்த வண்ணம் உள்ளது என்பதையும் கணக்கில் கொண்டால் இந்த தொலைந்து போதல் ஒரு பிரமாண்ட சமூகப் பிரச்சனையாக நாம் எதிர்கொள்ளும் தருணம் வரலாம்.

பள்ளிக்குச் சென்ற சிறுவனோ சிறுமியோ நாட்கள் பல கடந்த நிலையிலும் வீடு திரும்பாமல், வேலைக்குப் போன இளம்பெண் திரும்பும் வழியில் மாயமாய் மறைய, வீட்டில் ஏற்பட்ட தகராற்றில் சொல்லிக் கொள்ளாமல் தலைமறைவான கோபக்கார இளைஞனோ இளைஞியோ என நமது சமூகத் தளத்தில் இந்த தொலைந்து போதல் எனும் துயர நாடகம் தினந்தோறும் ஏதேனுமொரு வீட்டில் நடந்தேறியப்படி உள்ளது.

இதில் நிரந்தர தொலைந்து போனவர்களின் பட்டியலில் சேர்பவர்களின் நிலை என்னவாக இருக்கலாம் என்கிற நமது அடுத்த கேள்விக்குக் கிடைக்கும் பதில் ஒரு கலங்கடிக்கும் மனச் சித்திரமாகவே உள்ளது.

அதிலும் குறிப்பாக சிறுவர் சிறுமியர் இளம் பெண்கள் எனும்போது அது நமக்குள் தீட்டும் மனச் சித்திரம் கொடுமையானது.

ஐ.நா உலக மனித உரிமை ஆணையத்தின் அண்மைய அறிக்கைபடி நமது நாடு Human traficking என்கிற நாடுகளுக்கிடையிலான 'மனித கடத்தல்' பட்டியலில் முன்னணி நாடுகளில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது என்கிற பின்புலத்தில் வைத்து எண்ணும்போது இதன் விரிப்பு மிகவும் பயங்கர தோற்றம் கொள்கிறது.

இப்படி, நிரந்தர தொலைந்து போதல் பட்டியலில் சேர்ந்துவிடும் இளம் பருவத்தினரில் எத்தனை பேர் இத்தகையச் சர்வதேச கடத்தல் கும்பலிடம் சிக்கி சீரழிகின்றனர் என்பது ஒரு திரைமறைவு நாடகம். கண்களுக்குப் புலப்படாத துயரம். குறிப்பாக இளம் பெண்கள் பல்வேறு பாலியல் வன்முறைகளுக்காக‌ ஒரு கச்சாப் பொருளாக - சந்தை பொருளாக - இருள் மறைவில் கைமாற்று செய்யப்படும் கொடூரம் அதிகரித்துள்ளதாகவும் அறியப்படுகிறது.

தொலைந்து போதல் எனும் இந்தக் கொடூர நாடகம் என் வீட்டுக் கதவை ஒருநாள் தட்டியபோது அது இழுத்துச் சென்ற திசையில் அல்லாடி மூச்சுத் திணறி தள்ளாடி நின்றதை என்றும் மறக்க இயலாது.

அதன் நீட்சியாகவே அத்தகைய செய்திகள் ஒன்றுள் எப்போதுமே அதிர்வலைகளை ஆழச்செலுத்தி, நீண்டதொரு மௌனம் கனக்கும் கலக்கத்தில் கொண்டு போய் நிறுத்தி விடுவதாய் உணருகிறேன்.

ஒரு காலை பொழுதின் இருள் பிரிந்து வெளிச்சம் நுழைய காத்திருக்கும் வேளை வீட்டு வாசலில் ஒரு சிறுமியின் குரல். அன்டி ஜீவா எங்க? இன்னக்கி ஸ்கூலுக்கு வரலியா?

முன் அறையில் ஜன்னலண்டை தலைவைத்து காலைத் தூக்க மயக்கத்தில் ஆழ்ந்திருந்தவனை தூக்கிப் போட வைத்த குரல்.

அதற்குள் மனைவி வெளி கேட்டை அடைந்து என்னம்மா சொல்ற? ஜீவா அங்க இல்ல? இப்பதான வீட்டுக்கு வந்தேன்.

அன்றாடம் காலையில் பள்ளிக்குச் செல்ல, பள்ளி பஸ் வரும்வரை சாலையோரம் விட்டு வருவதுண்டு. சாலை விளக்கின் மங்கிய ஒளி அவர்கள் நின்றிருக்கும் பலா மரத்தடி வரை நீண்டிருக்கும். நாலைந்து மாணவர்கள் வந்து கூடி பஸ்சுக்குக் காத்திருக்கும் இடம் மனைவி மகளை அங்கே விட்டு வந்த பொழுது துணைக்கு அங்கே ஒருவருமில்லை.

பதறி எழுந்து விழுந்தடித்து அங்கே போய் நின்றபோது மரத்தடியில் மங்கிய ஒளி மட்டுமே படர்ந்திருக்க மகன் நின்ற இடம் சூன்யமாக மௌனத்தில் ஆழ்ந்திருந்தது.

அந்தக் காலை பொழுதின் குளிரையும் விஞ்சி உடல் குப்பென வியரத்துக் கொட்ட நடுக்கம் பரவியது. இதயம் அதி வேகத் துடிப்பில் தடதடக்க தலை சுற்றியது.

ஏதோ நடக்க கூடாத ஒன்று நடந்து விட்டது என்பது மட்டும் மனதுக்கு உறுதியாகத் தெரிந்தது.

அந்தக் கணத்தில் ஆயிரம் பயங்கர கற்பனைச் சித்திரங்கள் மனத் திரையில் காட்சிகளாக விரிய தொடங்கிய தேடல், பள்ளி தொடங்கி இறுதியாக காவல் நிலையத்தில் கொண்டு நிறுத்தியது.

காலை நேர தூக்கக் கலக்கத்திலிருந்த ஒரு போலீஸ்காரன் எங்களை எதிர்கொண்டு வரவேற்று மிகுந்த அசிரத்தையுடன் நாங்கள் விவரித்ததைக் கேட்டு ரிப்போட் எழுதிக் கொண்டார்.

கையெழுத்து போடும்போது சொன்னார் 'இஞ்சே அட கம்பார் டியா பகி அவாக் புன் ச்சாரி. கித்தாபுன் ச்சாரி களொ அவாக் டபாட் ச்சாரி, பகி தவு சயா ஓகே. (அந்த பையனின் போட்டோ இருந்தா குடுங்க. நாங்களும் தேடறோம் நீங்களும் தேடுங்க. கிடச்சா சொல்லுங்க.

அந்தச் சூழலின் இறுக்கத்தில் பிள்ளையைத் தொலைத்த பெற்றோரின் அவல மன நிலையைக் கிஞ்சிற்றும் உள்வாங்காத ஓர் அரசாங்க காவலாளியின் அசிரத்தையான போக்கை நேரடி அனுபவமாக முதல்முறை எதிர்கொண்டதில் உள்ளுற மூண்ட கோபம் இதுநாள் வரை தொடர்கிறது.

காரணம், அதன் பிறகு அவர்களிடமிருந்து அந்தப் பிரச்சனை குறித்த எவ்வித விசாரிப்பும் கண்டறிதலும் இடம்பெறவில்லை என்பதே. ஒருவேளை அவர்களைப் பொறுத்தவரை அது ஒரு வீண் வேலை என்பதாக நினைத்திருக்கலாமோ என்னவோ?

அதிர்ஷ்டவசமாகவோ தெய்வாதீனமாகவோ எனது மகனை ஓர் அரை நாள் இடைவெளியில் வீட்டு வாசலில் கொண்டு வந்து நிறுத்தினார் நண்பர் பன்னீர்செல்வம்.

அவன் கடத்தப்பட்டதும் - பிறகு இன்றுவரை விடுவிக்க இயலாத காரணங்களுக்காக விடுவிக்கப்பட்டதும் நடந்தேறிய உண்மைச் சம்பவம்.

எனவேதான், எனது சுய அனுபவ வெளியில் நிறுத்துப் பார்த்து, அத்தகைய செய்திகளை எதிர்கொள்ளும் தருணங்களின், தனிப்பட்ட முறையில் எனது கலக்கம் அர்த்தமுடையதாகிறது.

அதன் வீச்சு என்ன என்பதும் உறவு நிலை சார்ந்து அதன் தாக்குதல் எத்துனை வலிமை மிக்கது என்பதும் நன்குணர்ந்த ஒருவனின் சத்தியமான வாக்குமூலம் இது என்பதை எவரும் தாராளமாக நம்பலாம்.

இனியேனும் அத்தகைய செய்திகளை கடக்க நினைக்கும் தருணம் தோறும்-

எங்கோ யாரோ ஒரு தாயும் தந்தையும் நிராதரவாக கையைப் பிசைந்து கண்கள் கலங்கி, எங்கோ இந்நாட்டின் ஏதோவொரு மூலையில் இருக்கும் காவல் நிலையத்தின் உதவியும் கருணையும் வேண்டி மன்றாடி நிற்கும் காட்சி உங்கள் கண்களில் கணப்பொழுது கடந்து போக வேண்டும்.

நூருலின் மரணத்தை விஞ்சிய சோகம் உள்ளுறைவது நிரந்தர தொலைதல் எனும் தொடர் நாடகம். மரணம் விடை கிடைத்து விட்ட புதிர். காலம் காயத்தை ஆற்றிடலாம். நிரந்தர தொலைதல் இறுதி மூச்சு வரை விடை கிடைத்திராத புதிர்.

அடுத்தடுத்த ஜென்மங்களையும் பின்தொடரும் துக்கமாகலாம்.


காட்சி 2 - தொலைதல் எல்லா சந்தர்ப்பங்களிலும் துக்ககரமானதும் அல்ல!

தொலைதலின் துக்கக் காட்சியை காணும் எவருக்கும் அதன் மறுபக்கம் மறைந்திருக்கும் சந்தோஷக் காட்சி ஒன்று பார்வைக்குள் வராமல் விலகிப் போகலாம்.

அது நிறைவேற வாய்ப்பில்லாத ஒரு துரதிர்ஷ்ட கற்பனை காட்சிதான் எனினும் குறைந்தபட்சம் கற்பனையிலாவது அந்தத்தீரா விருப்பத்தை நிறைவேற்றி திருப்திபட்டுக் கொள்வோமே!

அட எவண்டா இவன்? இத்தன வருஷமா (சரியாக சொல்வதனால் 28 வருடங்கள்) நம்ம தலமேல உக்காந்துவிட்டு தொலைஞ்சு போவாம கழுத்தறுத்திக்கிட்டிருக்கான்... என்று இந்த நாட்டின் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமே காட்டுக் கத்தாய் கத்தியும் நமது மாபெரும் தலைவன் டத்தோ சிரி (நன்றி நவீன்) சாமிவேலு அவர்கள் இன்னமும் ஏதேனும் ஒரு வழியில் 'தொலைந்து' போகாமல் அட்டை போல் ஒட்டி உறிஞ்சிக் கொண்டிருக்கிறார்.

அப்படியொரு 'தொலைதல்' நிகழுமாயின் அதுவே இச்சமூகம் குதூகலித்துக் கொண்டாடும் இன்னுமொரு மங்கள தீபாவளியாக அமையலாம்.

ஆனாலும், இன்றைய சூழலின் பல்வேறு அடுக்குகளையும் பரிசீலனைக்கு உட்படுத்தும் எவருக்கும் அது ஒரு பகற்கனவு என்பது தெளிவாகவே புலனாகும். அந்த காரணங்களுள் முதன்மை காரணியாக நமக்குப் புலப்படுவது 'சாபம்' எனும் கொடிய நிவர்த்திக்க இயலா அரூப சக்தி.

மிகவும் சாந்தமாக வெளியில் தெரிகிற சுப்ரா எனும் செல்லப் பெயர் பூண்ட உள்ளே மிகுந்த கோபக்கார மாமுனிவரின் இந்திர பதவி ஆசையை நிறைவேற்றித் தராத இச்சமூகத்தைப் பார்த்து உருப்படாமல் போகக் கடவாய்! என நீண்ட காலத்திற்கு முன்பே அவர் இட்ட சாபம் இந்தச் சமூகத்தைக், காலைச் சுற்றிய பாம்பாய் - தீண்டி கொன்று கொண்டிருக்கிறது. எனவே, இந்தச் சமூகம் உய்ய சாபவிமோசனம் பெறுவது தவிர வேறு வழியில்லை.

ஆனாலும் அதற்கான வாய்ப்பு இன்றைய சூழலில் மருந்துக்கும் இல்லை என்பதால் வேறு மாற்று வழி ஏதேனும் தென்படுகிறதா என்று தேடிப் பார்ப்பதே நமக்கிருக்கும் ஒரே மார்க்கம்.

இதனைத் தவிர்த்து , ஒருவேளை தெய்வாதீனமாக புராண காலத்து கல்லாய் அமைந்த அகலிகை சாபவிமோசனம் பெற இராமனின் பாதங்கள் உதவியது போல , யாரேனும் ஒரு நவயுக அவதார புருஷனின் பாதங்களோ அல்லது அதனைத் தாங்கி நிற்கும் ஏதேனும் ஒரு பொருளோ கல்லாய் கிடக்கும் நம் தலைகளைத் தீண்டி ஒரே நொடிப் பொழுதில் சாபவிமோசனம் சாத்தியப்பட்டு, இச்சமூகம் ஏறுமுகம் கண்டு பிற சமூகங்கள் மூக்கின் மேல் விரலை வைத்து ஆச்சரியப்பட வைக்கலாம்.

அப்படி ஓர் அதிசயம் நிகழ்வதற்கான சாத்தியக் கூறுகள் புராண காலத்தோடு முடிந்துபோன கதையாகி விட்டதால் மாற்று வழி ஒன்றே இதற்கான ஒரே தீர்வாக இருக்க இயலும்.

நமது சிற்றறிவுக்கு எட்டிய தூரத்தில் தெரியும் தீர்வு இதுதான்.

இந்த ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் ஒன்றுபட்டு தங்களது ஒட்டுமொத்த சொத்து பத்து பதவி பரிசு என இதுநாள்வரை சேகரித்து வைத்துள்ள அனைத்து வித உடைமைகளையும், ஒரு தட்டில் வைத்து (எம்.ஐ.இ.டியை தாரை வார்த்துக் கொடுத்தது போல) மாபெரும் தலைவரிடமோ அல்லது அன்னாரது பாசத்துக்கும் நேசத்துக்கும் உரிய தமையனாரிடமோ தாரை வார்த்து கொடுத்து விட வேண்டும்.

அதன் பொருட்டு 'சாமி' அகமகிழ்ந்து ஆனந்தக் கூத்தாடி மறந்தபடி ஏதேனுமொரு உயரமான திரும்ப இயலாத மலையாகப் பார்த்து ஏறி, நிரந்தரமாக (2 மாதங்களோ 20 வருடங்களோ அல்ல) தொலைந்து போகலாம்!

தொலைந்து போதல் எல்லா சந்தர்ப்பங்களிலும் துக்ககரமானதும் அல்ல!

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768