|
புலம்பெயர்தல்
தமிழருக்குப் புதியதன்று; தமிழர்கள் பலர் பஞ்சம் பிழைக்கவும், பொருளாதார
சுபிட்சத்தை நாடியும், பல்வேறு அரசியற் காரணங்களாலும் புலம்பெயர்தலை
மேற்கொண்டனர். பழமரம் தேடும் பறவை போலத் தாமாகப் புலம்பெயர்ந்து தமிழர்கள்
செல்வதற்கும், காலனித்துவ ஆதிக்கத்தின்போது ‘சஞ்சிக் கூலிகளாகக்’ கொண்டு
வரப்பட்டதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. முதல் வகையினர் அனுபவித்த அல்லது
அனுபவிக்கிற துன்பங்கள் அவர்களாலேயே உருவாக்கிக் கொள்ளப்பட்டவை அல்லது
அவர்களாலேயே உருவாக்கிக் கொள்ளப்படுகின்றவை. ஆனால் இரண்டாம் வகையினர்
காலனித்துவ ஆதிக்கத்தின் போது சொந்த இனத்தைச் சார்ந்த கங்காணிகளால்
வஞ்சிக்கப்பட்டு, ஆசை வார்த்தை காட்டப்பட்டு மோசம் செய்யப்பட்டவர்கள்;
இவர்களில் ஒரு பகுதியினர் தமிழகத்தில் நிலவிய சாதிக்கட்டுப்பாட்டுச்
சடங்குகள் காரணமாகப் பலிகடாவாக்கப்பட்டவர்கள். மலேசியாவில் வாழ்ந்த
தமிழர்களை இரண்டாம் வகைக்கு எடுத்துக் காட்டாய்க் கூறலாம்.
எந்த ஒரு நாடும் விடுதலை பெற்ற பிறகு அதன் எண்ணப்போக்கில் - சிந்தனைப்
போக்கில் மாற்றம் காண்பது நியதி - இயற்கை. மலேசியாவின் ஒரு பகுதியாக
இருந்து 1965இல் தனிநாடாகப் பிரிந்த சிங்கப்பூர் இன்று உலகநாடுகள்
பலவற்றுக்கும் முன்னுதாரணமாகத் திகழும் வகையில் சிந்தனைப் போக்கிலும்,
செயல் திறனிலும் வளர்ச்சி கண்டுள்ளது. அனைத்துக்கும் மேலாக இன, மத, மொழி
வேறுபாடுகள் இன்றி எல்லா மக்களுக்கும் சம வாய்ப்பு வழங்கி வருவது
சிங்கப்பூரின் ஏற்றமிகு கொள்கைகளில் ஒன்றாகும். இந்தக் கொள்கையின்
அடிப்படையில் சிங்கப்பூர் இயங்கி வருவதை எடுத்துக் காட்டுவது சிங்கப்பூர்த்
தேசிய நூலகம்.
சிங்கப்பூர் இயற்கை வளங்கள் ஏதுமில்லா நிலையில் மனித வளத்தை மட்டுமே நம்பி
வாழும் நாடு. மனித அறிவு, மனித உழைப்பு ஆகியவை மக்கள் வளத்தின்
ஆதாரசக்திகள். எனவே மக்கள் நலன் அரசாங்கத்தின் தலையாய குறிக்கோள். மக்களின்
அறிவைப் பெருக்கி, திறன்களை வளர்த்து, சிந்தனை ஆற்றலை வலுவாக்கிச்,
செயல்திறனை மேம்படுத்தக் கல்விக் கொள்கைகளில் காலத்துக்கேற்ற மாறுதல்களைச்
சிங்கப்பூர் அரசு செயல்படுத்தி வருவது யாவரும் அறிந்த செய்தியே. மனிதவள
மேம்பாட்டுக்கு வழிவகுக்கும் செயல்பாட்டில் தேசிய நூலகத்துக்கும் சீரிய
பங்கு உள்ளது. இந்த அடிப்படையில் எண்ணிப்பார்க்கும் போது மனிதவள மேம்பாடு
என்பது வெறும் பொருளியல் சார்ந்ததாக மட்டும் அமையாமல் மனவளத்தை
மேம்படுத்தும் கலை, இலக்கியம், பண்பாடு ஆகியன சார்ந்த மேம்பாடாகவும் இருக்க
வேண்டும் என்னும் உண்மையை அவதானிக்க முடிகிறது. இளந்தலைமுறையினரும்,
எதிர்காலத் தலைமுறையினரும் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்தின் கடந்தகால
வரலாற்றைப் பன்முக நோக்கில் அறிந்து கொள்ளவும் வழியமைப்பது சிங்கப்பூர்த்
தேசிய நூலகத்தின் பதினோராம் தளத்தில் அமைந்துள்ள ‘சிங்கப்பூரின் இலக்கிய
முன்னோடிகள்’ என்னும் பகுதி. அறிவுத்தாகம் கொண்டவர்களை ஈர்க்கும்
சிங்கப்பூர்த் தேசிய நூலகத்தில், 180 சதுரமீட்டர் பரப்பளவில் சிங்கப்பூரின்
இலக்கிய முன்னோடிகளைச் சந்திக்கலாம்.
சிங்கப்பூரின் 30 எழுத்தாளர்கள் இலக்கியமுன்னோடிகளாக அறிமுகமாகிறார்கள்.
இவர்கள் சீனம், ஆங்கிலம், மலாய், தமிழ் ஆகிய நான்கு மொழிப் பிரிவைச்
சார்ந்தவர்கள். இவர்களின் படைப்புகள், இவர்கள் பெற்ற விருதுகள், இவர்கள்
பயன்படுத்திய எழுது பொருட்கள், எழுத்துக்கலையோடு தொடர்புடைய பேனா,
தட்டச்சுப்பொறி போன்ற உபகரணங்கள் இவர்களின் கைவண்ணங்கள் (கையெழுத்துப்
பிரதிகள்) போன்றவை கண்காட்சியில் இடம்பெற்று எழுத்தாளர்களின் குரல்களையும்
இங்கே செவிமடுக்கலாம். பெரும்பாலான எழுத்தாளர்கள் இறந்துவிட்டாலும்,
‘சிங்கப்பூரின் இலக்கிய முன்னோடிகள்’ என்னும் நிரந்தரக் கண்காட்சிப்
பிரிவில் அவர்களை சிரஞ்சீவிகளாகக் காணலாம். நான்கு மொழிப்பிரிவினருள் -
முப்பது எழுத்தாளர்களுள் ஒரு சிலர் இன்னும் உயிரோடு இருக்கின்றனர் என்பது
சிங்கப்பூர்த் தேசிய இலக்கியத்திற்குக் கிடைத்த பரிசு எனப் பெருமைப்பட்டுக்
கொள்ளலாம். பல இனக் கலாச்சாரச் சூழலில் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்னும்
உயர்ந்த கோட்பாட்டு நெறியை வாழ்வியல் நெறியாகக் கொண்டு ‘சிங்கப்பூரின்
இலக்கிய முன்னோடிகள்’ என்னும் பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் சிங்கப்பூரிலேயே பிறந்து
வளர்ந்தவர்களும், மலேசியா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளில் பிறந்தாலும்
சிங்கப்பூரர்களாக வாழ்ந்தவர்களும் அடங்குவர். இவர்களின் படைப்புகள்
சிங்கப்பூரின் பிரச்சனைகளைப் பேசுபவை; சிங்கப்பூரர்களின் வாழ்க்கை முறை,
பழக்கவழக்கங்கள், பண்பாட்டுக் கூறுகள் ஆகியவற்றைச் சித்திரிப்பவை.
சுருங்கக்கூறின் சிங்கப்பூரின் மண்மணம் கமழும் படைப்புகளை உருவாக்கியவர்கள்
இம்முன்னோடிகள். இவர்களின் படைப்பிலக்கியங்கள் பல்வேறு வகையின; கவிதை,
நாடகம், நாவல், சிறுகதை, திறனாய்வு, கட்டுரை என அவற்றை வகைப்படுத்தலாம்.
தமிழ் இலக்கிய முன்னோடிகளாக அமரர் நா.கோவிந்தசாமி (1946-1999); அமரர்
ந.பழநிவேலு (1908- 2000), அமரர் கா.பெருமாள் (1921- 1979) புதுமைதாசன்
என்றழைக்கப்படும் பி.கிருஷ்ணன் (1932), அமரர் சே.வெ.சண்முகம் (1933- 2001)
ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். புதுமைதாசன் மட்டுமே நம்மிடையே இன்று வாழ்ந்து
வருகிறார்.
அமரர் நா. கோவிந்தசாமி:
சிங்கப்பூரிலேயே பிறந்து வளர்ந்த நா.கோவிந்தசாமி ‘தமிழ் இணையத்தந்தை’ எனப்
போற்றப்படுபவர். உலகம் போற்றிய - போற்றும் சிங்கப்பூரரான இவர் 1960களில்
தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகமானவர். சிறுகதை, நாடகம்,
நாவல்/குறுநாவல்,
கட்டுரை, திறனாய்வு எனப் பல தளங்களில் இயங்கிய பன்முகப்படைப்பாளி.
தமிழாசிரியராகப் பணிபுரியத் தொடங்கிய இவர் மற்றவர்களுக்குக் கல்வி
கற்பித்ததோடு தாமும் கற்று விரிவுரையாளராக உயர்ந்தார். தேசியக் கல்விக்
கழகத்தில் தமிழாசிரியர்களை உருவாக்கினார். தேசியக் கலைகள் மன்றம், தேசியத்
தகவல் கலைகள் அமைச்சு எனப் பல அமைப்புகளிலும் பங்கேற்றுத் தமிழ் இலக்கிய
வளர்ச்சிக்குப் பாடுபட்டார்.
தாம் ஓர் எழுத்தாளராக வளர்ந்ததோடு மட்டுமின்றிப் பல எழுத்தாளர்களையும்
உருவாக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டார். 1975இல் சிங்கப்பூர்த் தமிழ்
எழுத்தாளர் கழகம் தொடங்கப்பட்ட வேளையில் அதன் செயலாளராகத் திறம்படச்
செயலாற்றினார். எழுத்தாளர்களை இனங்கண்டறிந்து அவர்களின் படைப்பாற்றலை
வெளிக்கொணரும் பொருட்டு ‘இலக்கியக்களம்’ என்னும் அமைப்பை நிறுவினார்.
இவ்வமைப்பின் மூலம் சிங்கப்பூர், மலேசிய எழுத்தாளர்களின் சிறுகதைகளைத்
தொகுத்துத் தரமான சிறுகதைத் தொகுப்பு நூலை வெளியிட்டு எழுத்தாளர்களை
உற்சாகப்படுத்தினார்.
எழுத்துக்கலைக்கும் தீவிரமான வாசிப்புக்கும் நெருங்கிய தொடர்புண்டு.
எழுத்தாளன் சுயமாகப் படைப்பதற்கு ஆழமான வாசிப்பும், அகலமான வாசிப்பும்
அத்தியாவசியமானவை. சிங்கப்பூரில் தமிழ் படிக்கத் தயங்கிய இளையர்கள்
எழுபதுகளிலும் இருந்தனர். இவ்விளையர்களிடம் மறைந்துள்ள படைப்பாற்றலை
வெளிப்படுத்த அவர்கள் தீவிரவாசகர்களாக வேண்டும் என எண்ணிய திரு.நா.கோ.
‘வாசகர் வட்டம்’ என்னும் அமைப்பினை உருவாக்கி இளையர்களைத் தமிழ்நூல்களை
ஆர்வத்துடன் படிக்கத் தூண்டினார். இவ்வாசகர் வட்டத்தில் உருவான
எழுத்தாளர்களில் பலரும் இளம் எழுத்தாளர்களாகப் பின்னர் காணப்பட்டனர்.
1988இல் எழுத்தாளர் வாரம் சிங்கப்பூரில் தொடங்கப்பட்டது. தம் அந்திமகாலம்
வரை (1999) சிங்கப்பூர் எழுத்தாளர் வாரத்தில் தமிழ்ப்பிரிவுக்கு அதன்
செயற்குழு உறுப்பினராகச் சேவை செய்துள்ளார்.
1965இல் தொடங்கிய எழுத்துப் பயணத்தில் 1968 வரை இவர் பதினான்கு
சிறுகதைகளைப் படைத்துள்ளார். 1967இல் தமிழர் திருநாளை ஒட்டி நடத்தப்பட்ட
சிறுகதைப் போட்டியில் ‘காட்டாற்றின் கரையினிலே’ என்னும் சிறுகதை
முதற்பரிசினை வென்றது. இப்பரிசினைப் பெற்ற நா.கோ பின்னர் ஏராளமான வானொலி
நாடகங்களை எழுதினார். எழுபதுகளில் தொலைக்காட்சி நாடகங்களையும்
எழுதியுள்ளார். ‘அன்புக்கு அப்பால்’ , ‘அலைகள் ஓய்வதில்லை’ போன்ற வானொலித்
தொடர் நாடகங்கள் மிகவும் பிரபலமானவை. சமகாலப் பிரச்சனைகளைக் கருவாகக்
கொண்டு நா.கோ எழுதியதால் அவரது நாடகங்கள் பரவலான வாசகர் கவனத்தை ஈர்த்தன.
வானொலி நாடகத்துறையில் ஏழு ஆண்டுகள் மும்முரமாக இயங்கினார். பின்னர்
எழுபதுகளின் பிற்பகுதியில் பத்திரிக்கைகளில் சிறுகதைகள் எழுதித் தம்
எழுத்துலகப் பயணத்தைத் தொடர்ந்தார்.
நா.கோ. விருதுகள் பல பெற்ற வித்தகர். இவரது ‘தேடி’ என்னும் புனைகதைத்
தொகுப்பு நூல் தேசியப் புத்தக மேம்பாட்டுக் கழகத்தின் (1992) விருதினைப்
பெற்றது. தென்கிழக்காசிய எழுத்து விருது 1994இல் இவருக்கு வழங்கப்பட்டது.
1968இல் ‘தமிழ் முரசு’ நடத்திய சிங்கப்பூர் மலேசியச் சிறுகதைப் போட்டியில்
‘காட்டாறு’ என்னும் இவரது சிறுகதை முதற்பரிசை வென்றது.
நா.கோ. சில நூல்களின் தொகுப்பாசிரியராகவும் விளங்கினார். நான்கு மொழித்
தொகுப்பு நூல் திட்டத்தில் தமிழ்மொழிப்பிரிவின் பொறுப்பாசிரியராகத்
திகழ்ந்து ‘Fiction of Singapore (1990)’, ‘Asean Drama Anthology’ ஆகிய
நூல்களின் உருவாக்கத்துக்கும், வெளியீட்டுக்கும் உறுதுணைபுரிந்தார்.
‘சிங்கப்பூர்ப் புனைகதைகள்’ என்னும் தொகுப்பு நூலைத் திரு. இளங்கோவனுடன்
இணைந்து தமிழ்ப் புத்தகாலயத்தின் மூலம் வெளியிட்டார்.
நா.கோ. சிறந்த ஆய்வாளராகவும் திகழ்ந்தார். அவரது ஆய்வுக்கட்டுரைகளை
ஆய்வாளர்கள் இன்றளவும் மேற்கோள்காட்டிவருவது குறிப்பிடத்தக்கது.
அமரர் ந. பழநிவேலு:
தமிழகத்தில்
பிறந்து தமது 21ஆம் வயதில் மலாயாவுக்கு வந்தார். பின்னர் 1930இல்
சிங்கப்பூரில் குடியேறினார். 1935ஆம் ஆண்டில் எழுத்துலகப் பிரவேசம் செய்த
இவர் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தம் வாழ்நாளின் இறுதிக்காலம் வரை
தொடர்ந்து எழுதி வந்தார். கவிதை, சிறுகதை, நாடகம், கட்டுரை எனப் பல இலக்கிய
வகைகளின் மூலம் தம் எழுத்தாற்றலை வெளிப்படுத்தினார். தமிழர் சீர்திருத்தம்
என்பது இவரது தொடக்ககாலச் சிறுகதைகளின் நோக்கமாக அமைந்திருக்கிறது. 1935
முதல் 1960 வரை இவர் எழுதியவை 50 சிறுகதைகள். இவர் வாழ்ந்த காலச் சூழல்
இவரது கதைகளில் செம்மையாகப் பிரதிபலிக்கின்றன. தமிழகச் செல்வாக்கு இவர்
படைப்புகளில் காணப்படுவதை சுகுணசுந்தரம் அல்லது ஜாதிபேதக் கொடுமை (1936) என
இரட்டைப் பெயர் சூட்டும் வழக்கிலிருந்து அறியமுடிகிறது. இவர் ‘கவிதை
மலர்கள்’ என்னும் கவிதைத் தொகுப்பு; ‘கலியின் நலிவு’ என்னும் கவிதை நாடகம்;
‘பாப்பா பாடல்கள்’ என்னும் சிறுவர் கவிதை நூல், ‘காதற்கிளியும் தியாகக்
குயிலும்’ என்னும் சிறுகதைத் தொகுப்பு ஆகிய நூல்கள் தவிர எஞ்சிய படைப்புகள்
கவிஞர் ந. பழநிவேலு படைப்புக் களஞ்சியம் என்னும் பெயரில் இரண்டு தொகுதிகளாக
வெளிவந்துள்ளன. கலை, இலக்கியத் துறைகளில் இவரது பங்களிப்பு காரணமாகச்
சிங்கப்பூர் சமூக வளர்ச்சித் துணையமைச்சு 1987இல் ‘கலாச்சாரப்
பதக்கத்தை’யும், சிங்கப்பூரின் பாஸ்கர் நாட்டியப் பள்ளி 1978இல் ‘நாடக
சிகாமணி’ என்னும் பட்டத்தையும், 1987இல் சிங்கப்பூர் இந்திய நுண்கலைக்கழகம்
‘கலாரத்னா’ விருதையும், 1997இல் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்
‘தமிழவேள் இலக்கிய விருதை’யும் வழங்கி இவரைச் சிறப்பித்தன.
அமரர் கா. பெருமாள்:
தமிழகத்தில்
பிறந்த கவிஞர் கா.பெருமாள் 1938ஆம் ஆண்டில் மலாயா வந்தார். கேமரன்மலையில்
‘போ’ என்னும் தோட்டத்தில் தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கிய இவர்
தமிழ்க்கல்வி கற்றதன் பயனாக இலக்கியப்பணியிலும் ஈடுபட முடிந்தது. இவரின்
தமிழ்ப்பணி மலாயா வானொலி, சிங்கப்பூர் வானொலி ஆகியவற்றின் வாயிலாகவும்
தொடர்ந்தது. ‘சிங்கப்பூர்ப் பாடல்கள்’ என்னும் நூல் பண்ணோடு பாடப்படும்
தமிழ்ப் பாடல்களைக் கொண்டது. ‘சீறா இசைச் சித்திரம்’, ‘துங்கு அப்துல்
ரகுமான் வில்லுப்பாட்டு’, ‘அன்பு என்னும் தத்துவம்’ ஆகியவை இசுலாத்தின்
கொள்கைகளையும், சிறப்புக்களையும் கூறும் பாடல்களைக் கொண்டவை. இசையோடு
தமிழைப் பரப்பிய கா. பெருமாள் கவிஞராகவும், புனைகதை ஆசிரியராகவும்
விளங்கினார். ‘கட்டைவிரல்’ என்னும் கவிதை நாடகம் இவரது கவியாற்றலுக்குச்
சான்றாகும். தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு
‘துயரப்பாதை’ என்னும் புதினத்தைப் படைத்தார்.
படைப்பிலக்கிய துறையில் மட்டுமின்றி, ஆய்வு செய்வதிலும் நாட்டம்
செலுத்தினார் கவிஞர் கா.பெருமாள். ‘தத்துவக்கலை’, ‘கூத்துக்கலை’, ‘நாடகம்
பிறந்தது’, ‘மலைநாட்டு உழைப்போர் இலக்கியம்’ ஆகிய ஆய்வுக் கட்டுரைகளையும்
படைத்தார். இசைச் சித்திரமும் இவருக்குக் கைவந்த கலை என்பதனை ‘வாழ்க்கை
விநோதம்’ போன்ற இசைச் சித்திரங்கள் வழி அறிகிறோம். கலைத்துறையில் அளவற்ற
ஈடுபாட்டுடன் செயல்பட்ட கவிஞர் கா.பெருமாள் சங்கமணி, ஜனோபகாரி, முத்தமிழ்
போன்ற இதழ்களிலும் உருவகக்கதைகள், சிறுகதைகள், நெடுங்கதைககள் போன்றவற்றைப்
படைத்துப் புனைகதை இலக்கியத்துக்கும் வளம் சேர்த்தார்.
புதுமைதாசன் (பி.கிருஷ்ணன்):
மலேசியாவில் பிறந்த பி.கிருஷ்ணன் சிங்கப்பூர்க் குடிமகனாகித் தம்
படைப்புகளுக்குச் சிங்கப்பூரையே களமாகக்
கொண்டவர்.
திரு.நா. கோவிந்தசாமி போலச் சிங்கப்பூர் மண்ணின் மீது வேர்ப்பற்றுடையவர்.
பத்திரிக்கை, வானொலி, தொலைக்காட்சி எனப் பல ஊடகங்கள் வழியே இலக்கியப்பணி
ஆற்றியவர்.
1953இல் இயங்கிய சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் அமைப்பாளர்களுள்
ஒருவரான இவர் அதன் செயலாளராகவும் பணியாற்றினார். சிங்கப்பூர் வானொலியின்
தமிழ்ப் பள்ளிகளுக்குரிய ஒலிபரப்புப் பிரிவு, இந்தியப்பகுதி ஆகியவற்றில்
பகுதிநேரக் கலைஞராகச் சேவை செய்தார். சிறுகதை, நாடகங்கள், மொழிபெயர்ப்பு,
இலக்கியச் சொற்பொழிவு, கட்டுரைகள் ஆகியவை இவருடைய படைப்பாற்றலின்
வடிகால்களாக விளங்கின.
சிறுவயது முதற்கொண்டு போட்டிகளின் மூலம் தம் எழுத்தாற்றலை வளர்த்துக்
கொண்டார். ‘இலக்கியக் காட்சிகள்’ (இலக்கிய நாடகங்கள்), ‘புதுமைதாசன்
கதைகள்’ (சிறுகதைத் தொகுப்பு), ‘மெக்பெத்’ (மொழிமாற்று நாடகம்),
அடுக்குவீட்டு அண்ணாசாமி (2 தொகுப்பு- நாடகங்கள்) போன்ற பல நூல்களைப்
புதுமைதாசன் வெளியிட்டுள்ளார். புதுமைப்பித்தன் மீது கொண்ட ஈடுபாடு
காரணமாகப் ‘புதுமைதாசன்’ என்னும் புனைபெயரைச் சூட்டிக்கொண்ட திரு.பி.
கிருஷ்ணன் விருதுகள் பல பெற்றவர். வானொலியில் 25 ஆண்டுகளுக்கும் மேலாகச்
சேவை ஆற்றியதற்காக 1992 இல் கௌரவிக்கப்பட்டார். அவ்வாண்டிலேயே தேசிய தின
விருந்தளிப்பில் இவருக்குச் ‘செயல்திறன்’ விருது வழங்கப்பட்டது. 1994இல்
தேசிய புத்தக மேம்பாட்டு மன்றத்தின் பாராட்டு விருது, 1998இல்
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் ‘தமிழவேள் விருது’, 2005இல்
‘தென்கிழக்காசிய எழுத்து விருது’ போன்றவை இவரின் படைப்பிலக்கியப் பணிக்குக்
கிடைத்த மரியாதை எனலாம்.
அமரர் சே.வெ. சண்முகம்:
தமிழகத்தில்
பிறந்து தமது பதினெட்டாம் வயதில் சிங்கப்பூரில் குடியேறியவர். நாடகம்,
சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு எனப் பல துறைகளிலும்
இலக்கியப் பணி புரிந்தவர். 1951ஆம் ஆண்டில் இவரது ‘திரையழகி’ என்னும்
சிறுகதை தமிழ்முரசின் சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது. அன்று
எழுதத் தொடங்கிய திரு.சே.வெ. சண்முகம் திரு.ந. பழநிவேலு போலத் தம்
அந்திமகாலம் வரை தொடர்ந்து எழுதியவர். நகைச்சுவையாக எழுதுவது இவருக்குக்
கைவந்த கலை. சிங்கப்பூரின் பெர்னாட்ஷா எனத் தமிழர்கள் மத்தியில் புகழ்
பெற்றவர். இவர் வள்ளிமணாளன், வள்ளி அக்காள், சானா மூகு சாகு, பெர்னாட்ஷா,
குமாரி காருண்யா ஆகிய புனைபெயர்களில் எழுதினார். ‘மீன் வாங்கலையோ’
(நகைச்சுவைத் தொகுப்பு 1968), ‘சிங்கப்பூர் மாப்பிள்ளை’ (நாடக நூல், 1984)
‘இரணியூர் நாகரெத்தினத்தேவர்’ (வாழ்க்கை வரலாறு, 1987), ‘சிங்கப்பூர்க்
குழந்தைகள்’ (1989), ‘பழத்தோட்டம்’ (வானொலி நாடகத் தொகுப்பு 1990) போன்றவை
அமரர் சண்முகத்தின் நூல்கள். இவர் எழுதியவை பல இன்னும் நூலுருப் பெறவில்லை.
முன்னர்க் குறிப்பிட்ட ‘திரையழகி’ என்னும் சிறுகதை பரிசு பெற்றது போன்று
இவருடைய பல படைப்புகள் பரிசு பெற்றுள்ளன. ‘கள்ளநோட்டு’ புதுயுகம் நடத்திய
போட்டியில் முதல் பரிசு (1955), ‘மீண்ட வாழ்வு’- தமிழ் மலர் நடத்திய
போட்டியில் முதல் பரிசு (1967), ‘சிங்கப்பூர்க் குழந்தைகள்’- சிங்கப்பூர்த்
தமிழாசிரியர் சங்கம் நடத்திய போட்டியில் முதல்பரிசு (1975), ‘சான் லாய்
செங்’ ‘பாட்டி’ ஆகிய இரண்டும் சமூக வளர்ச்சி அமைச்சின் சிறுகதைப்
போட்டியில் முதல் தகுதியும், இரண்டாம் பரிசும் பெற்றன (1975), ‘மற்றொன்று’-
தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் நடத்திய போட்டியில் முதல் பரிசு (1988),
‘தமிழச்சியின் தைரியம்’ பாரீஸில் (Paris) நடத்தப்பட்ட உலகளாவிய சிறுகதைப்
போட்டியில் முதல் பரிசு (1994), ‘புதிய சாவித்திரி’- தேசிய கலைகள் மன்றமும்
சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்சும் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில்
இரண்டாம் பரிசு (1955) எனப் பல பரிசுகள் பெற்றவர். இவரது எழுத்துப் பணி
இவருக்குப் பல விருதுகளையும் சம்பாதித்துக் கொடுத்தது. 1974இல்
‘சிங்கப்பூர் பெர்னாட்ஷா’ என்னும் சிறப்புப்பட்டம்; 1984இல் சிங்கப்பூர்த்
தமிழர் இயக்கம் வழங்கிய 'சிறந்த நாடகாசிரியர்’ என்னும் பட்டம், 1989இல்
இந்தியக் கலைஞர் சங்கம் வழங்கிய ‘எழுத்துச் சிற்பி’ என்னும் பட்டம்,
1994இல் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் வழங்கிய ‘தமிழவேள்’ விருது
ஆகியவை சே.வெ. சண்முகத்தின் இலக்கியப் பணியை என்றென்றும் நினைவுகூறும்
என்பதில் ஐயமில்லை.
சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய முன்னோடிகளாகத் தேசிய நூலகம் மேற்கூறப்பட்ட
ஐவரைத் தெரிவு செய்து அவர்களின் பங்களிப்பை வரலாற்றுப்பதிவாக
ஆவணப்படுத்தியுள்ளது. ஆயின் தமிழர்கள் மத்தியில் படைப்பிலக்கியப் பணியில்
ஈடுபடாத ஒரு சிலரும், சிங்கப்பூரிலேயே பிறந்து வளர்ந்து படைப்பிலக்கியத்
துறையில் ஈடுபட்டுள்ள ஒரு சிலரும் ஏன் தங்களைச் சிங்கப்பூர்த் தமிழ்
இலக்கிய முன்னோடிகளாகக் கருதவில்லை என நினைக்கக் கூடும். மேலும் தங்கள்
எழுத்துகள் கண்காட்சியில் வைக்கப்படவில்லையே என ஏங்கவும் கூடும். இவ்வாறு
நினைப்பவர்கள் ‘தான்’ என்னும் அகம்பாவம் உடையவர்களாகவே எனக்குத்
தோன்றுகின்றனர். மொழி வளர்ச்சிக்காக இலக்கியம் சமைப்பது வேறு; மொழி
வளர்ச்சிக்காகப் பாடுபடுவது வேறு. இன்னும் விளக்கமாகச் சொன்னால் மொழியைக்
கற்பிக்கும் ஓர் ஆசிரியர் எழுதும் கட்டுரைகளை அதிலும் குறிப்பாகக்
கற்பித்தல் பணி சார்ந்த கட்டுரைகளை எப்படி நாம் இலக்கியமாக ஏற்க முடியும்?
எனவே ‘இலக்கியம்’ என்னும் சொல்லின் ஆழமான பொருளை உள்வாங்கிக் கொண்டு
இலக்கியம் படைத்திருக்கிறோமா? என நன்கு சிந்திக்க வேண்டும். எனவே
படைப்பிலக்கியத்துறையில், சிங்கப்பூரின் மண்வாசனை புலப்பட எழுதியோர்தான்
முன்னோடிகளாக இடம்பெற்றுள்ளனர் என்பதை உணர்ந்தால் மேற்காட்டியோரின்
நினைப்பு தவறாவது கண்கூடு.
சிங்கப்பூரிலேயே பிறந்து வளர்ந்து சிங்கப்பூர்ப் படைப்புகளை உருவாக்கிய ஒரு
சிலரும் தாங்கள் ‘சிங்கப்பூர் இலக்கிய முன்னோடிகள்’ என்னும் பகுதியில் இடம்
பெறவில்லை என்று ஆதங்கப்படக் கூடும். இவர்களின் ஆதங்கம் வீணாணது;
பொருளற்றது. இவ்வாறு ஆதங்கப்படுவோர் முன்னோடிகளா? எனச் சிந்திக்க வேண்டும்.
முன்னோடிகள் என்னும் சொல்லின் பொருள் என்ன? என்பதை அறிந்து கொண்டால்
இவர்களின் ஆசையும் பொருளற்றுப் போய்விடும். எனவே, தேசிய நூலக வாரியம்
சிங்கப்பூர் இலக்கியம் பற்றி விழிப்புணர்வை ஊட்டுதல்; வருங்காலத்
தலைமுறையினரைப் படைப்பிலக்கியத் துறையில் ஈடுபடத் தூண்டுதல் அளித்தல்; நம்
முன்னோடி எழுத்தாளர்களுக்கு உரிய அங்கீகாரம் அளித்தல் ஆகிய உயர்ந்த
நோக்கங்களோடு தனது பணியைச் செம்மையாகச் செய்துள்ளது. கலை, இலக்கியம்,
பண்பாடு ஆகிய சமூகக் கூறுகளைச் சிங்கப்பூர் அரசாங்கம் சிறந்த முறையில் பேணி
வளர்த்து வருவதை உலகுக்கு எடுத்துக் காட்டுவது சிங்கப்பூர்த் தேசிய
நூலகமும் அதன் இலக்கிய முன்னோடிகள் என்னும் பகுதியும் ஆகும் என்பதை யாரால்
மறுக்க முடியும்?
|
|