இதழ் 11
நவம்பர் 2009
  இல‌ங்கை - நேரடி ப‌ய‌ண‌த்தில் போருக்குப் பின்பான‌ காட்சிக‌ள்
லதா
 
     
  பத்தி:

வீடும் விடுப்பட்ட நினைவுகளும்

தினேசுவரி

இந்திரா டீச்சர்
சு. யுவராஜன்


தொலைதலை முன்னிறுத்தும் 2 காட்சிகள்
சீ. முத்துசாமி


கட்டுரை:

சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய முன்னோடிகள் - ஓர் அறிமுகம்
முனைவர் M.S ஸ்ரீலக்ஷ்மி

இல‌ங்கை - நேரடி ப‌ய‌ண‌த்தில் போருக்குப் பின்பான‌ காட்சிக‌ள்
லதா

இழைகள்
இராம. கண்ணபிரான்


சிறுகதை:

அல்ட்ராமேன்
சு. யுவராஜன்


இரண்டாவது கிறுக்கு சித்தப்பா
ஜெயந்தி சங்கர்


தொடர்:


பல வேடிக்கை மனிதரைப் போல...4
ம‌.ந‌வீன்

பரதேசியின் நாட்குறிப்புகள் ...4
மஹாத்மன்


எனது நங்கூரங்கள் ...4
இளைய அப்துல்லாஹ்


கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...2


சித்தாந்தன்


புனிதா முனியாண்டி

முத்துசாமி பழனியப்பன்

ல‌தா

ஜீ.கே

ஷிஜூ சிதம்பரம்

ரேணுகா
     
     
 

சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சர் ஜார்ஜ் இயோவுடன் அக்டோபர் 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை மேற்கொண்ட நான்கு நாள் இலங்கைப் பயணத்தில் பங்கு கொண்ட பத்திரிகையாளரும் எழுத்தாளருமான லதாவின் நேரடி பயண அனுபவமாக இக்கட்டுரை விரிகிறது.

நீண்ட கால போர் முடிந்து புதிய அத்தியாயத்தை இலங்கை ஆரம்பித்துள்ளது. இலங்கை மண்ணிலும் மக்கள் மனங்களிலும் போரின் ரத்தக் கறைகள் மெல்ல மறையத் தொடங்கியுள்ளன. கொழும்பு வாழ்க்கை வழமைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளது. அமெரிக்க விரைவு உணவகங்கள், இத்தாலிய கோப்பிக் கடைகள், பேரங்காடிகள் நிறைந்து வழிகின்றன. கொழும்புக் கடற்கரையின் இரவுகள், பேச்சுகளும் கொண்டாட்டங்களும் நிறைந்து குதூகலிக்கத் தொடங்கியுள்ளன.

ஆனாலும் கொழும்பில் செய்தியாளர் ஒருவரை சந்தித்தப்போது, அவர் என் நெற்றிப் பொட்டை தான் முதலில் உற்று நோக்கினார். சிறிய அமைதிக்குப் பிறகு “பொட்டு வைத்து, பஞ்சாபி ஆடை அணிந்துகொண்டு தைரியமாகக் கொழும்புத் தெருவில் நடக்க முடியாது,” என்றவர் மீண்டும் அமைதியானார்.

கேள்விகள் நிறைந்த அந்த அமைதியை பலர் முகத்திலும் காணமுடிந்தது. அமைச்சர்கள், அதிகாரிகள், ராணுவத்தினர், சிங்களவர்கள், தமிழர்கள் எல்லாருமே நிறைய பேசி, நிறைய சிரித்து, அன்றாட வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தாலும் அந்த பரபரப்புக்கு பின்னே விவரிக்க முடியாத ஓர் அமைதி தெரிந்தது. ஒரு பெரும் பேரிடருக்குப் பின்னர், வாழ்க்கையின் யதார்த்தம் புரியப்பட்டதில், விரக்தியில், அச்சத்தில், நம்பிக்கையில் ஏற்படும் கேள்விகள் நிறைந்த அமைதி அது. போரினால் பிளவுபட்ட இலங்கையில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களை இணைக்கும் மறுநிர்மாணம் வெற்றி பெறுமா என்ற கேள்வி நாட்டில் வாழும் மக்கள், வெளிநாட்டினர் அனைவர் முன்னும் பெரும் பூதமாக எழுந்து நிற்கிறது.

இப்ப‌ய‌ண‌த்தில் பெரும்பாலும் சக பத்திரிகையாளர்களோடுதான் அதிகம் உரையாட முடிந்தது. “கொழும்பில் தமிழர்களுக்குச் சோதனை அதிகம்," என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட சிங்கள செய்தியாளரான திரு ரஷிகா (28), “ராஜபக்ஷே பல ஆண்டுகால போரை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தது பெரிய வெற்றி. நீண்ட காலப் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையையும் நாட்டின் பொருளியலையும் மேம்படுத்துவதில் உடனடி கவனம் செலுத்த வேண்டும்," என்றார்.

இலங்கையின் தலைநகராக கொழும்பில் 50 விழுக்காட்டுக்கும் மேற்பட்டவர்கள் தமிழர்கள் மற்றும் தமிழ் பேசும் முஸ்லிம் மக்கள். இலங்கையின் மொத்தத் தமிழ் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 50 விழுக்காட்டினர் வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு வெளியேதான் வாழ்கிறார்கள். வன்னிப் பகுதியில் 300,000 தமிழர்கள் அகதிகளாக அல்லல்படும் அதேநேரத்தில், மற்றப் பகுதிகளில் தமிழர்கள் இன்னமும் பயத்துடன்தான் வாழ்கிறார்கள் என பெயர் கூற விரும்பாத கொழும்பின் அரசதந்திரி ஒருவரின் வேதனையை பயனத்தினூடே கேட்டறிய முடிந்தது.

விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு விட்டாலும், சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்களுக்கிடையே உள்ள பிளவுகள் இன்னமும் களையப்படவில்லை என்பதே பெரும்பாலான சிறுபான்மை மக்களின் கருத்தாக இருக்கிறது. மிக ஆழமான காயம். ஆற்றுவது சாதாரணமானதல்ல... ஆனால் சாத்தியமானதுதான் எனப் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் நம்பிக்கையான வார்த்தைகள் கிடைக்கப்பெற்றன.

இந்த இலங்கைப் பயணத்தின் முக்கிய அங்கமாக அமைந்தது மன்னார், யாழ்ப்பாணம், திருகோண மலைப் பயணம். வடக்கு, கிழக்குப் பகுதிகளில் கட்டுமானங்களும் சீர்ப்படுத்தும் முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. கொழுப்பில் இருந்து மன்னாருக்கு ஹெலிகாப்டரில் கிட்டத்தட்ட ஒரு மணி நேர பயணம். வடக்கு நோக்கிப் போகப் போகப் பசுமை மறையத் தொடங்கியது. போரினாலும் பருவமழை இன்னும் வராததாலும் வறண்டிருந்தது மன்னார் நிலம். மன்னாரில் உள்ள மிகப் பெரிய அணையின் மறுநிர்மாணப் பணியையும் கண்ணிவெடி அகற்றும் பணிகளையும் நேரில் பார்வையிட்டோம்.

மன்னார் பெரிய அணை கட்டுமானத்தில் ஈடுபட்டிருந்த தமிழ்ப் பொறியியலாளர்கள், பணியில் காட்டிய ஆர்வமும் ஈடுபாடும் வியக்க வைப்பதாக இருந்தன. சிங்கள ராணுவத்தினருடன் இணைந்து அவர்கள் மும்முரமாக அணையைச் சீர்படுத்துவதில் ஈடுபட்டிருந்தனர். அதேபோல் பாதுகாப்புப் பணியிலும் கண்ணிவெடிகளை அகற்றுதல் உட்பட சீரமைப்புப் பணிகளிலும் ஈடுபட்டிருந்த ராணுவத்தினரின் கட்டொழுங்கும் கடப்பாடும் உண்மையில் பாராட்டத்தக்கதுதான்.

பல ஆண்டு காலமாக நீடித்த இனப்போரை இலங்கை அரசாங்கம் முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ராணுவத்தின் கடப்பாடும் ஈடுபாடும் ஒரு முக்கிய காரணமாக இருந்துள்ளது என்பது இலங்கை ராணுவத் தளபதிகளையும் வீரர்களையும் நேரில் சந்தித்தபோது உணர முடிந்தது. அவர்கள் சிலரிடம் பேசியபோது போரின் உக்கிரம் குறித்தும், பல ஆண்டுகளாக பலவீனமடைந்திருந்த ராணுவம், தலைமைத்துவம் தந்த தன்னம்பிக்கை, ஊக்குவிப்பினால் முழு அர்ப்பணிப்போடு செயலாற்றியது குறித்தும் விவரித்தனர். காயமடைந்தவர்களின் சோகங்களைப் பகிர்ந்து கொண்டனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் தீவிரம், வீரம் குறித்தும் பேசினர். அவர்களது குரலில் தெரிந்த பற்றும் கண்களில் விரிந்த போர்க் காட்சிகளும் அவர்களது ஒவ்வொரு வார்த்தையும் நம்பத் தகுந்தவை என விளக்கின.

எங்க‌ளுட‌ன் உரையாட‌த்தொட‌ங்கிய‌ ஒரு ராணுவ‌ அதிகாரி, "தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளைக் கடந்த இரண்டரை ஆண்டுகளாகக் கடும் போரிட்டு இலங்கை ராணுவத்தினர் கைப்பற்றினர். மே 19ம் தேதி புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப் பட்டதுடன் இலங்கையின் உள்நாட்டுப் போர் ஒரு முடிவுக்கு வந்தது. போரில் 6,000-த்திற்கும் அதிகமான வீரர்களை இழந்தோம். 27,000-த்திற்கும் அதிகமான வீரர்கள் காயம் அடைந்தனர். இதில் ராணுவ வீரர்கள் பலர் காயமடைவதற்குக் காரணமாக இருந்தவை கண்ணி வெடிகள்," என்றார்.

“ராணுவத்தைப் போலன்றி, புலிகள் வேண்டுமென்றே கண்ணி வெடிகளை ஓர் ஒழுங்கற்று புதைத்துள்ளனர்," என்று விவரித்தார் ம‌ற்றொரு ராணுவ அதிகாரி ஒருவர். அந்தக் வெடிகளை அகற்றுவதுதான் ராணுவத்திற்கு தற்போது பெரும் சவாலாக உள்ளது. கண்ணி வெடிகளை அகற்றிய பின்னரே அப்பகுதிகளில் மக்களைக் குடியமர்த்த முடியும். எனினும் இந்த ஆண்டு இறுதிக்குள் சில ஆயிரம் பேர்களையாவது குடியமர்த்தி விட முடியும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

அதேபோல் இந்தப் பருவ மழையில் மன்னாரின் பெரிய அணை நிறைந்து விடும் என்றார் பொறியியலாளர் திரு என். யோகராசா (38). உலக வங்கி அளித்த 385 மில்லியன் இலங்கை ரூபாய் தொகையில் அருவியாற்றில் அமைந்துள்ள இந்த அணையின் மறுநிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 31,500 ஏக்கர் அடிகள் தண்ணீர் கொள்ளளவு கொண்ட இந்த அணை, கிட்டத்தட்ட 32,422 ஹெக்டர் வயலுக்கு நீர்ப்பாசன வசதியைத் தருகிறது. அணையின் மறுநிர்மாணத்தின் மூலம் கிட்டத்தட்ட 20,000 குடும்பங்கள் பயனடைய முடியும் .

இதனூடே வடக்கையும் தெற்கையும் இணைக்கும் நெடுஞ்சாலைகளின் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததை காண முடிந்தது. எனினும் மக்களை இணைப்பதற்கான நடவடிக்கைகளை காணும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.

கோட்டையின் இடிந்த சுவர்கள் வழியே யாழ்ப்பாண நகருள் நுழைந்தபோது, மதிய வெய்யில் சுட்டெரித்தது. தலையிழந்த கட்டடங்களும் ராணுவத் தற்காப்பு அரண்கள் சோதனைச் சாவடிகளும் வழிநெடுகிலும் போரின் அடையாளங்களைப் பறைசாற்றின. செடிகளில் பூக்களும் வீடுகளில் துணிகளும் காய்ந்துகொண்டிருந்தன. அன்று தீபாவளியாக இருந்தபோதும் நகரின் துடிப்பும் களிப்பும் இருக்கவில்லை.

யாழ்ப்பாணத்தின் வரலாற்றுச் சின்னங்களான யாழ்ப்பாண நூலகமும் நல்லூர் கந்தசாமிப் பிள்ளை கோயிலும் தமிழ் மக்களப் போலவே கடும் தாக்குதலைகளைத் தாங்கி கம்பீரமாக எழுந்துநின்றன. கோப்பாய் என்ற இடத்தில் உள்ள அகதி முகாமுக்குப் போனபோதுதான் அதிகமாக மக்களை ஒன்றாகக் காணக்கிடைத்தது. முகாமாக‌ மாற்றப்பட்டுள்ள அந்தப் பள்ளிக் கூட வளாகத்தில் கிட்டத்தட்ட 165 குடும்பங்கள் அதாவது 411 பேர் வசிக்கின்றனர். தனித்தனி ஓலைக் குடில்கள் நிறைந்திருந்தன. சிறு பிள்ளைகள், பெண்கள், வயதானவர்கள்தான் அதிகமாக இருந்தனர்.

“வடக்குப் பகுதியில் உள்ள முகாம்களில், இதை 7ஸ்டார் முகாம் எனக் கூறலாம்," என்றார் அங்கிருந்த தொண்டூழிய நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர்.

ஏறக்குறைய ஓராண்டு காலமாக முகாமில் தங்கி இருப்பதாகக் கூறினார் திருமதி தீபாஞ்சலி (29). அவரது தாயாரும் பிள்ளைகளும் வன்னியில் இருப்பதாக குறிப்பிட்டார். முகாமில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்படுபவருக்கு அரசாங்கம் ரூ.5,000 கொடுக்கிறது. “அதை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும்," என அகதி முகாமில் இருந்த அருள்பிரசாகம் என்பவர் கவலை தெரிவித்தார். போரினால் இடம்பெயர்ந்து அகதிகளாக முகாம்களில் வாழும் கிட்டத்தட்ட 300,000 மக்களின் தேவைகளை அரசாங்கம் உடனடியாகக் கவனிக்க வேண்டும். மழை தொடங்கிவிட்டால் ஓலைகளாலும், ரப்பர் ஷீட்டுகளாலும் கட்டப்பட்டுள்ள அந்தத் தற்காலிக முகாம்களின் நிலைமை மிக மோசமாகி விடும் என அனைத்துலகத் தொண்டூழிய நிறுவனங்கள் தொடர்ந்து எச்சரித்தும் வருகின்றன.

அரசாங்கம் நீண்ட போரை நடத்தியுள்ளது. மறுநிர்மாணப் பணிகளுக்கு காலம் தேவை. ஆனால் போரில் முழுக் கவனமும் செலுத்தியதால் புறக்கணிக்கப்பட்ட நாட்டின் தெற்குப் பகுதியின் வளர்ச்சியிலும் அரசாங்கம் உடனடி கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. சுமார் 21 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட இலங்கையின் மக்கள் தொகையில் ஏறக்குறைய 70 விழுக்காட்டினரான சிங்கள மக்களின் வாக்குகள் தமது நிலையை உறுதிப்படுத்த அதிபர் மகிந்த ராஜபக்ஷேவுக்கு அத்தியாவசியம். விரைவில் தேர்தலை நடத்தத் திட்டமிட்டிருக்கும் அதிபர் மகிந்த, பெரும்பான்மை வாக்குகளுடன் ஏக பலத்துடன் வெற்றிபெற கணக்குப் போட்டுள்ளார். அதற்கு ராஜபக்ஷே சகோதரர்கள் மிகக் கவனத்துடன் காய் நகர்த்த வேண்டியுள்ளது. பொருளியல் வளர்ச்சி முயற்சிகள், முதலீடுகளை ஈர்ப்பது போன்றவற்றுடன் துரித மீள்குடியேற்றத்துக்கான அனைத்துலக அழுத்தம், சிங்கள மக்களைத் திருப்திப்படுத்துவது, தனிஈழ உணர்வு மீண்டும் தலை தூக்காமல் பார்த்துக்கொள்வது என ஒரே சமயத்தில் பலவற்றில் தீவிர கவனம் செலுத்த முனைந்துள்ளதாகத் தெரிகிறது.

ஒன்றினால் மற்றொன்று அடிபட்டுப் போகாமல் கத்தி மேல் அரசியல் நடத்த வேண்டிய நிலை ராஜபக்ஷேவுக்கு. ஆரம்ப முயற்சிகள் சிறு நம்பிக்கையைத் தருவதாக உள்ளன. போர் முடிந்த பின்னர் நாடாளுமன்றத்தில் தமிழில் பேசிய அதிபர் மகிந்த ராஜபக்சே, நாட்டு மக்களை ஆங்கிலம், தமிழ், சிங்களம் ஆகிய மூன்று மொழிகளையும் கற்கச் சொன்னார். கிழக்குப் பகுதியில் கல்வியை மேம்படுத்துவதுதான் அடுத்த கட்ட முக்கியப் பணி எனக் குறிப்பிட்டார் கிழக்கு மகாணத்துக்கான ஆளுநர் திரு மோகன் விஜயவிக்ரமா.

தமிழர்களும் சிங்களவர்களும் பல ஆண்டுகளாகப் பிளவுபடுத்தப்பட்டு விட்டார்கள். சிங்களவர்கள் சிங்களமும் தமிழர்கள் தமிழும் தனித்தனியே படித்து தனிமையாகி விட்டார்கள். இந்நிலையில் அங்கு சந்திக்க வாய்ப்பு கிடைத்த சமூகவியல் பேராசிரியர் கா.சிவதம்பி, “இலங்கை மக்களை ஒன்றுபடுத்த கல்வி முறை மாற்றப்பட்ட வேண்டும். எல்லாருக்கும் ஒரே கல்வி வழங்கப்பட வேண்டும். சிறுவயதிலேயே ஒற்றுமையை விதைக்க வேண்டும்," என்றார். சமூக மறுகட்டுமானம் பற்றிய விஷயங்களில் சிங்கள அறிவுஜீவிகள் வாயை மூடிக் கொண்டு இருக்கிறார்கள். தமிழர்கள் பயப்படுகிறார்கள்,” என்பது அவரது வருத்தமாக இருந்தது.

யாழ்ப்பாணத்தில் எங்களது வாகன ஓட்டுனராக இருந்த திரு சுவாமிநாதன் தனேந்திரனின் (53) “வடக்கில் தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும். வேலை வாய்ப்புகளைப் பெருக்க வேண்டும். வேலை இல்லாததுதான் இங்குள்ள பலரின் பிரச்சினை,” எனக் கூறினார். இலங்கை பிரச்சனை பற்றி கூற ஒவ்வொருவருக்கும் ஏதாவதொரு கருத்து இருக்கவே செய்தது.

இலங்கையின் பங்குச் சந்தை ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. துறைமுகம், விமான நிலையம், தெருக்கள், நீர்பாசன வசதிகள் போன்ற அடிப்படைக் கட்டுமானப் பணிகளில் அரசாங்கம் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. சமூகக் கட்டுமான முயற்சிகளைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768