|
மலேசியச்
சிற்றிதழ்களான 'காதல்', 'வல்லினம்' ஆகிய பருவ ஏடுகளின் ஆசிரியர்
குழுக்களில், இணைந்து பணியாற்றியிருக்கும் சு.யுவராஜன், படைப்பிலக்கியக்
கதை வாசிப்பு வெளியில் தம் சிறு வயது முதல் சஞ்சாரம் செய்து, அதில் தம்மைக்
கரைத்துக் கொண்டவர்.
இவருடைய சின்ன தாத்தா மலையகத்தின் பிரபல கதை எழுத்தாளராக விளங்கிய அமரர்
பீடோங் மா.பூ.சோழன் ஆவார்.
'காதல்' பத்திரிகையில் இரண்டு சிறுகதைகளும், 'வல்லினம்' இதழில் ஒரு
சிறுகதையும், 'அநங்கம்' ஏட்டில் ஒரு சிறுகதையுமாக யுவராஜனின் நான்கு
சிறுகதைகள் இதுவரையில் வாசிக்கக் கிடைத்ததுள்ளன. பல்கலைக் கழகப்
பட்டதாரியான யுவராஜன் எழுதியிருக்கும் இந்த நான்கு சிறுகதைகளைக் கண்ணோட்டம்
இடுகிறது இந்தக் கட்டுரை.
பால்மரம் வெட்டும் ஸ்காப்ரோ தோட்டத்திலிருந்து பட்டணத்துப் பள்ளியில்
படிக்கும் மணி, தன் ஸ்கூல் நெடுந்தூர ஓட்டப்பந்தயத்தில் இரண்டாம் நிலை
வெற்றிக் கோப்பைப் பெறுவதை, 'அநங்கம்' ஏட்டில் வெளிவந்த 'காணாமல் போன
கோப்பை' சொல்கிறது. அத்துடன், தோட்டத்து, பட்டணத்துப் பொருளியல்
வேறுபாட்டைக் காட்டி, ஒரு வழிநடைக் காட்சியையும் அது பின்னியுள்ளது.
லயத்தின் பலவகை வீடுகள், வெளியே அலையும் தெருநாய்கள், உண்பதற்குப் பொறித்த
துண்டு மீன்கள், கிழிசல்கள் தெரியும் பள்ளிக் காலணிகள் முதலியன தோட்டப்புற
ஏழ்மையையும்; பளிங்குத் தரை பாவிய கல் வீடுகள், உள்ளேயே வளர்க்கப்படும்
செல்ல நாய்க்குட்டிகள், பொரித்த முழு நீள மீன்கள், 'சரி' கோடுகளுடன்
பளிச்சிடும் ஸ்கூல் சப்பாத்துக்கள் முதலியவை பட்டணச் செழிப்பையும்
காட்டுகின்றன.
வளைவுகள் உடைய ஓட்டப்பந்தயப் போட்டிப் பாதை ஓர் இரயில் பாலத்தையும், ஒரு
கான்வெண்ட் பள்ளியையும் கடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், மணி தன்னுடைய
நகரப் பள்ளியிலிருந்து தன் தோட்டக் காட்டுக்கு வெற்றிக் கோப்பையுடன்
கொளுத்தும் பகல் வெய்யிலில் நடந்து செல்கின்ற பாதை, அயர்ச்சியுடன் நீண்டு
கிடக்கின்றது. அவன் காந்தி மண்டபத்தைக் கடக்க வேண்டும்; லெபாய்மான்
கம்பத்திற்கு முன்னே எழுந்தருளியிருக்கும் சுப்பிரமணியக் கோயிலைத் தாண்ட
வேண்டும்; இரு மருங்கிலும் உணவுப் பதார்த்தங்கள் நிரம்பிய கடைத்தெருவை,
கிள்ளும் பசியுடன் மீள வேண்டும்; பத்து டுவாவின் மாரியம்மன் கோயிலைக் கடக்க
வேண்டும்; கெலாங் லாமா அருகிலுள்ள செம்மண் சாலையை மிதிக்க வேண்டும்; பசும்
வயல்வெளிகளைக் கொன்றுவிட்டு, கரும் புகை கக்கும் தொழிற்சாலைகளுக்கான தார்ச்
சாலையில் பசி மயக்கத்துடன் தள்ளாட வேண்டும். மணியின் கால்நடைப் பாதை, ஒரு
வரை ஓவியமாக இழைக்கப்பட்டு, பந்தயப் பாதையில் ஈட்டிய கோப்பை இங்குத்
தொலைக்கப்படுவதாகக் காட்டப்படுகிறது.
'வல்லினம்' இதழில் பிரசுரமான அறுவைச் சிகிச்சை சிறுகதையில், கதைப் பகுதிகள்
முன்பின்னாகச் சொல்லப்படுகின்றன. அண்ணன், தங்கை நினைவோட்டங்களிலும் கதை
நகர்த்தப்படுகிறது. அம்மாவும், அப்பாவும் மூத்த தலைமுறையினர். பெரியவன்
இளன், இளையவன் வினோத், தங்கை விஜயா ஆகியோர் அடுத்த தலைமுறைக்காரர்கள். இரு
தலைமுறையினருக்கும் இடையே எண்ணப் போக்குகளில் வித்தியாசங்கள் எழுந்தாலும்,
பினாங்கு மருத்துவமனையில் வயிற்றுப் புற்று நோய்க்காக அறுவை சிகிச்சை
செய்யப்பட்டு, மூன்று தினங்கள் ஐ.சி.யு பிரிவில் மயக்க நிலையில் இருக்கும்
அம்மாவினால், இவர்கள் துக்கத்தில் ஆழ்கிறார்கள்; ஒன்றிணைந்து
நிற்கிறார்கள்.
காலையில் மணி அடித்து, சாமி கும்பிடும் வழக்கமுடைய அப்பா,ஆஸ்பத்திரியில்
யாரோ ஒருவர் தரும் விபூதிப் பொட்டலத்தைத் தம் மனைவியின் தலையணையின் கீழ்
வைத்து, அவள் உடல் தேர வேண்டும் என்று வேண்டுகிறார். வினோத் கடவுள்
நம்பிக்கை இல்லாதவன். சரியான திட்டமிடல்களோடும் ஒன்றிய சிந்தனைகளோடும்
செய்யப்படும் காரியங்கள் பெரும்பாலும் ஜெயிக்கும் என்று நம்புகிறவன்.
பொதுவில் இளன் அமைதியானவன் என்றாலும் தன் அம்மாவைப் பற்றிய டென்ஷனில்
கேளிக்கை விடுதிக்குச் செல்கிறான்; பீர் குடிக்கிறான்; விலை மகளோடு
சேர்கிறான். விஜயாவோ தன் வீட்டில் தனித்திருக்கும் தன் செல்லப் பிராணி
குட்டியின் ஞாபகத்தில் இருக்கிறாள். ஆயினும், வயிற்றுப் பிள்ளைகள்
அனைவரையும் கட்டிப்போடும் இழையாக, அம்மாவின் குடும்ப அர்ப்பணிப்பு
அமைந்துவிடுகிறது. தன் பிறந்த வீட்டில் வறுமையில் உழன்ற அம்மா புகுந்த வீடு
வந்ததும், இருபது வருடங்கள் ரப்பர் மரங்கள் சீவினாள்; பத்து வருடங்கள்
தொழிற்சாலையில் பலகைகள் அடுக்கினாள்; தன் பிள்ளைகளைக் கணவர் துணையோடு
பல்கலைக்கழகக் கல்வியில் உயர வைத்தாள்.
'காதல்' பத்திரிகையில் இடம் பெற்ற 'சாவி' என்ற படைப்பின் கதை சொல்லி, ஒரு
மோட்டார் சைக்கிள் திருட்டில், போதைப் பித்தன் ஃபிட்டுப் பாபுவைச்
சந்தேகித்து பிறகு தன் தவற்றை உணர்ந்து வருந்துகிறான். இக்கதையில் கதை
சொல்பவனின் நினைவுகள் வழியாகப் பழைய நிகழ்ச்சிகளை இணைக்கும் இழை உத்தி
மும்முறை பயன்படுத்தப்படுகிறது.
கதைச் சொல்லி தன் மோட்டார் சைக்கிளைத் தன் ஜாகை அருக்கே நிறுத்தியவுடன்,
அவனுக்கு மூக்கு நுனி மூக்கு வெக்கையில் எரிய ஆரம்பிக்கிறது.
அக்கணத்திலிருந்து அன் நினைவு ஃபிட்டுப் பாபுவுக்குப் படர்கிறது. பாபுவின்
பரட்டைத்தலை, சோகை தட்டிய முகம், அவனிடமிருந்து எழும் துர்நெடி முதலியன
அருவருப்பைத் தருகின்றன. கதைச் சொல்லியின் நினைவுத்தடம் முடிவதை அவன் நுனி
மூக்கில் ஏற்பட்ட எரிச்சல் அவன் முகத்திலும் பரவியது என்ற கதையின் இடை
வாக்கியம், ஓர் இழையாய் வந்து சொல்கிறது.
கதைச் சொல்லி செல்பவன் குளிக்கும் போது அவன் கண்களுக்குக் கீழே வழிந்தோடும்
நீர்க்கோடுகள், ஒரு வாரத்திற்கு முன், அவன் பக்கத்து அறைத்தோழன் சுரேஷ்
அழுது கொண்டிருந்ததை அவனுக்கு நினைபடுத்துகின்றன. குளியல் நீரும்,
கண்ணீரும் சம்பந்தப்பட்ட இந்த இழை, பழைய நிகழ்ச்சிக்கு நேரடியாகவே
தாவுகிறது. அந்தச் சம்பவத்தில், காவல் நிலையத்தில் தன்னை விசாரிக்கும் ஒரு
போலீஸ்காரரிடம் சுரேஷ் தன் மோட்டார் சைக்கிளின் ஹேண்டில் பூட்டிலேயே
மறதியாகத் தன் சாவியை வைத்துவிட்டதைச் சுயவெறுப்புடன் விசும்புகிறான்.
கனவுக்கும் நனவுக்குமாகச் சாவி சிறுகதை நிறைவுறும் போது இவ்விரண்டுக்கும்
உள்ள மாறுதல் இழை உருவாகிறது. போதைப் பொருள் வாங்கக் கையிலே காசில்லாமல்,
சுரேஷின் மோட்டார் சைக்கிளைப் ஃபிட்டுப் பாபு திருடுகிறான் என்பதாகக்
கதைசொல்லி கனவு காண்கிறான். ஆனால் அவனுடைய அறைக் கதவைத் தட்டி, “வாகன
நிறுத்துமிடத்தில் உங்கள் மோட்டார் சைக்கிளின் பூட்டிலேயே உங்கள் சாவியை
மறந்துபோய் வைச்சிட்டீங்க. இந்தாங்க உங்க சாவி. இது கே.எல்! தலைநகர். தம்பி
கவனம்!” என்று ஃபிட்டுப்பாபு சொல்கையில், நனவு நிஜத்துடன் நிமிர்கிறது.
'காதல்' ஏட்டில் வந்த சு.யுவராஜனின் இன்னொரு ஆக்கம், 'மூன்று அல்லது நான்கு
கதைகளும் சிகரெட்டும்' என்பதாகும். தலைப்பே முன்னுரைப்பது போல இது
ஒன்றுக்கும் மேற்பட்ட சம்பவக் கதைகளைக் கொண்டுள்ளது. இவற்றைப் பொருத்தும்
இழையாக வெண்சுருட்டு பங்காற்றுகிறது.
சுங்கைப்பட்டாணிக்கு அருகிலிருக்கும் ஒரு ரப்பர் தோட்டத்தில் குடியிருந்த
போது, அரசிக்குப் பத்து வயது. ஒவ்வோர் இரவும் கை லாம்பு விளக்கை ஏந்தியபடி,
கோரைச் சாப் சுருட்டும், நெருப்புப் பெட்டியும் எடுத்துக் கொண்டு, தோட்ட
மலக்கூடத்திற்குத் தன் பாட்டி சென்று கொண்டிருப்பதை அவள் காண்கிறாள். ஒரு
சமயம் காரணம் கேட்ட போது, “மலக்குழியிலிருந்து எழுகின்ற குடலைப் புரட்டும்
நாற்றத்தைத் தாங்க முடியாமல்தான், நான் சுருட்டு குடிக்கிறேன்,” என்கிறார்
பாட்டி. அரசி முதல் படிவம் படிக்கும் வேளையில் அவளுக்குச் சக மாணவியாக
நோர்டியானா அறிமுகமாகிறாள். ஒரு நாள் பள்ளிக் கட்டொழுங்கு ஆசிரியை ஒருவரால்
பிட்டத்தில் பிரம்படி பெறுகிறாள். அவமானத்தில் குன்றிய நோர்டியானா, “வேலை,
வேலை என்று இரவும் வெகுநேரம் கழித்தே, என் பெற்றோர் இல்லம் திரும்புவர்.
தனிமையும், பயமும் என்னை வாட்டி வதைக்க, நான் வீட்டிலேயே புகைக்கத்
தொடங்கினேன்” என்று கூறி, மறுநாளே வேறு பள்ளிக்கு மாற்றலாகிப் போகிறாள்.
பட்டணத்தில் குடிபெயர்ந்து, அரசி நான்காம் படிவம் படிக்கிறாள். அவள்
அக்காள் ஒருவனோடு ஜொகூருக்கு ஓடிப் போக, அவளுடைய அப்பா அவளை மிக அதிகமாய்க்
கண்காணிக்க ஆரம்பிக்கிறார். அந்த உளைச்சலில், வீட்டில் யாரும் இல்லாத ஒரு
தினம் அரசி சிகரெட் புகைக்கிறாள். நிக்கோட்டின் மயக்கத்தில், அரசி
வனாந்திரக் கனவில் மிதக்கிறாள். தன் பல்கலைக்கழகப் பருவத்தில், புகைப்பது
தொடர்பாகத் தொலைக்காட்சிப் பேட்டியில் பேசுகிறாள் அரசி. அந்த ஆங்கிலப்
பேட்டி புகைத்தல் நல்லதா கெட்டதா என்று பிரிக்காமல், சார்பற்ற முறையில்
அமைந்திருக்கிறது.
தற்காலச் சிறுகதைப் படைப்புகளில், கதைத் திட்டத்தைப் பொறுத்தவரை ஏறுமுகம்
இறங்குமுகப் போக்கு இருப்பதில்லை. அக நினைவுகள் மேலோங்க, நிரலற்ற துண்டுச்
சம்பவங்கள் கொப்பளிக்க, வடிவங்கள் இல்லாக் கதை ஆக்கங்களே
பிறப்பெடுக்கின்றன. இவற்றைப் படிக்கும் இன்றைய வாசகர்கள் தத்தம்
அர்த்தப்புரிதல்களுக்கு, கதைப் பின்னல்களில் காணப்படும் பொருள் இழைகளைத்
தேடிப் பெறுகிறார்கள். சு.யுவராஜனின் சிற்றேட்டுச் சிறுகதைகளிலும் நினைவு
இழை, ஆதார இழை, புகை இழை, தொலைப்பு இழை போன்ற இழைவகைகள் தென்படுகின்றன.
நன்றி : யுகமாயினி
|
|