ஏதோ ஒன்று
தொடுவான் சிவந்த
அதிகாலை நேரம்
ஓடிக் களைத்த கருமேகமொன்று
இடைவழித் திரும்பி
மழை முகிழ்த்துத் செல்கிறது
முளைத் துளிர்க்கத் துடிக்கும்
அல்லி பதியனுக்காய்!
மின்மடல்களும்
தொலைப்பேசிகளும்
உறவின் வட்டத்தை
குறுக்கிக் கொண்ட
தனிமைப் பொழுதில்
அஞ்சல் பெட்டியில்
பரிச்சயமில்லாக் கையெழுத்தில்
திருமண அழைப்பிதழொன்று
இதுவரை காணாது
நனைந்துக் கிடக்கிறது
தொலைந்துப் போன
நட்பினைத் தேடி!
முடிவுகளற்ற முதல்
பிரிவின் உக்கிரம்
அறிமுகமான மௌனமாய்
உறைந்து விழிகள்
நிறைக்கின்றது கவிதையாய்!
ஓர் அதிகாலையில் அவசரமாய்
ஓடி வந்து என்னில்
பற்றிக் கொண்டது
உன் புன்னகை...
நாளெல்லாம் எனைத்
தொலைத்தும்
தொலையாமலே
காலைச் சுற்றும்
பூனைக்குட்டியாய்
வீடும் வந்து
சேர்கிறது...
இப்போது என் தனிமையிலும்
துணையாய் சேர்ந்திருக்கப்
பழகிக் கொண்டது
நீ அனுப்பி வைக்கும்
புன்னகை...
|