|
கரை சுருக்கி விரியும்
வாழ்வு
மஞ்சப்பொடி மீன்களும் மைனாக்களும்
நிறைந்திருந்த
கரை தேடி வந்தது அலை
நீளக் கைவீசி நடந்த
வெளியைக் காணோம்
ஆறிக் கிடந்த
மணலும் இல்லை
மரவீடுகளிலும்
உரமேறிய கரங்களிலும்
பற்றோடும் பிடிப்போடும் உயிர்த்திருந்த
நிலத்தை அலை அறியும்
நிலம் பிரிந்த ஒரு நடு இரவில்
தலைவனின் சொட்டுக் கண்ணீரில்
மெல்ல எழுந்தது
காலப் பெரும் புகார்
பெருங்கடல்கள் தாண்டிச்
சுழன்ற அது
ஆயிரம் ஆயிரம் மக்களை
சிறு நிலம் கொணர்ந்தது
மாடிகள், ஏரிகள், வீதிகளை விளைத்தது
எனினும்
ஒளியும் விழாக்களும் கடவுள்களும்
வேலைகளும் நிறைந்த
நகரின் முகம்
மாறாது இருப்பதான
தோற்ற மயக்கத்தில்
பற்றுறுதி எடுக்கின்றனர் குடியினர்
புறாக்களையும் மைனாக்களையும்
அழித்தொழிக்க
மொழி இழந்த பாடலில் இணைகின்றனர்
பெருங்காற்றைத் தழுவிக்கொண்ட
தீவின்
தனித்த மௌனமாக
உதிரா இலைகள், கனியா விதைகளுடன்
நகரா நிறைக்கும்
அடர்ந்த மரங்கள்.
|
|