நேற்றிருந்தவள்
பின்னோக்கி
வெறிகொண்டோடிடும்
மரங்களும் கட்டிடங்களும்
இன்ன பிறவும்
பயணங்களில்
முன்னோக்கி செல்லுமென்னை
விஞ்சும் தோரணையில்
பின் காத்திருக்கும் அங்கேயே
என் திரும்புதல் பொருட்டு
அதனதன் இருப்பில்
கடக்கையில் நேற்றிருந்தவள்
உனை எதிர்பார்த்து
திரும்புதல் நிகழும் தருணங்களில்
நினைத்துக் கொள்வேன்
முட்டாள் நானென்று
கரைதலும் பறத்தலும்
பின்தொடரும்
நிழல் இருள்
இருள் இருள்
சாத்தியப்படும் தப்பித்தல்
நினைவுகளிலிருந்து
எங்ஙணம்
உசிதமல்ல ஒருபோதும்
சமாதானப் பிரிவென்பது
பரஸ்பரம் நிகழ்ந்திட வேண்டும்
காயப்படுத்தல்கள்
கொப்பளிக்கும் குருதியில்
நீநான், நான்நீ
கரைந்தழிந்து போகும் தருணம்
பறந்திடல் நிகழும்
அதி இலகுவாய்
இலாவகமாய்
துரத்தல்களின்றி
|