இதழ் 11
நவம்பர் 2009
  இரண்டாவது கிறுக்கு சித்தப்பா
சீன மூலம்: ஸூ ஷூயாங் |  தமிழில்: ஜெயந்தி சங்கர்
 
     
  பத்தி:

வீடும் விடுப்பட்ட நினைவுகளும்

தினேசுவரி

இந்திரா டீச்சர்
சு. யுவராஜன்


தொலைதலை முன்னிறுத்தும் 2 காட்சிகள்
சீ. முத்துசாமி


கட்டுரை:

சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய முன்னோடிகள் - ஓர் அறிமுகம்
முனைவர் M.S ஸ்ரீலக்ஷ்மி

இல‌ங்கை - நேரடி ப‌ய‌ண‌த்தில் போருக்குப் பின்பான‌ காட்சிக‌ள்
லதா

இழைகள்
இராம. கண்ணபிரான்


சிறுகதை:

அல்ட்ராமேன்
சு. யுவராஜன்


இரண்டாவது கிறுக்கு சித்தப்பா
ஜெயந்தி சங்கர்


தொடர்:


பல வேடிக்கை மனிதரைப் போல...4
ம‌.ந‌வீன்

பரதேசியின் நாட்குறிப்புகள் ...4
மஹாத்மன்


எனது நங்கூரங்கள் ...4
இளைய அப்துல்லாஹ்


கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...2


சித்தாந்தன்


புனிதா முனியாண்டி

முத்துசாமி பழனியப்பன்

ல‌தா

ஜீ.கே

ஷிஜூ சிதம்பரம்

ரேணுகா
     
     
 

புதிய வாழ்க்கை நிச்சயம் பழைய வாழ்க்கையின் இடத்தில் ஏறும். ஆனால், பழமையிடம் முற்றிலும் விடை கொடுப்பது என்பது மட்டும் சிரிப்புக்கு உரிய சாதாரண விஷயமில்லை. மிகவும் மனவலியுடையது மட்டுமில்லாது சாத்தியமானதும் இல்லை.

உதாரணத்திற்கு, நான் உயர்ந்த அடுக்ககத்திற்கு குடிபெயர விரும்புகிறேன். அதுவும் மிகவும் உயர்ந்த கட்டடத்தில் இருக்கும் அடுக்ககத்திற்கு குடிபெயர வேண்டும். பல குடும்பங்களுடன் பகிர்ந்து புழங்க வேண்டியிருக்கும் இந்த வளவை விட்டுப் போக நினைக்கிறேன். ஆனால், இரண்டாம் சித்தப்பாவுக்கு அந்த யோசனையில் துளிக்கூட விருப்பமில்லை. 'புறாக் கூண்டு' என்று சொன்னார். அவருக்கு உயர்மாடிக் கட்டடங்கள் என்றாலே வெறுப்பு. ரசனைகள் பலவிதம்.

அந்தக் காலத்தில் இரண்டாம் சித்தப்பா ஒரு காகிதப் பொருள் வியாபாரி. 'அந்தக் காலத்தில்' என்று ஏன் சொன்னேன் என்றால், அந்தவித வியாபாரங்கள் உண்மையில் இன்றைய பேய்ஜிங்கின் கடந்த காலம் தான்.

விடுதலைக்கு முன்பு இரண்டாம் சித்தப்பா காகித உருவங்கள் மற்றும் பொம்மைகள் செய்தார். இறுதி யாத்திரையில் கிளம்பும் நபர் வசதி மிக்க குடும்பத்து ஆளாக இருந்தால், அவர் தெருவையே நிறைத்திடும் எண்ணிக்கையில் காகித உருவங்கள் செய்வார். இளம் சிறுவர், சிறுமியர், ரதம், குதிரைகள், பல்லக்கு, அலமாரிகள், துணிமணிகள், தள்ளு வண்டிகள் என்று எல்லாமே செய்வார். அதில் அத்தியாவசியப் பொருட்களும் அடங்கும். நீலக் கண்கள் கொண்ட பூதகணங்கள், இளஞ்சிவப்புக் கன்னங்கள் கொண்ட தேவதைகள் கூட குச்சிகளின் உச்சியில் இருக்கும்.

எப்படி இறந்தவர்கள் அந்தக் காகிதக் குதிரைகள் மற்றும் ரதத்தில் ஏறிச் செல்ல முடியும் என்று நான் சிறு வயதில் குழம்பியதுண்டு. மேலுலகப் பயணப் பாதையின் வழியில் காகிதப் பணத்தில் எப்படி கேக்குகள் வாங்கித் தின்ன முடியும் என்றும் யோசித்ததுண்டு. மேலுலக அரசரும் மேலுலக வாயிலைக் காவல் காக்கும் அவரது பூத கணங்களும் அந்தக் காகிதப் பணத்தைக் கொடுத்தால் பெருந்தன்மையுடன் உள்ளே விட்டு விடுவார்கள் என்று நம்புகிறார்களே, அந்தப் பணம் செல்லாதது என்று அவர்களுக்குத் தெரியாதா?

இறந்த பிறகு இறந்தவரின் மூளை செயலிழந்து விட்டதால் காகிதப் பொருட்களை உண்மை என்று நினைக்கிறதோ. இறந்தவருக்காக வருந்தும் துக்க நாட்களில் இறந்தவரின் ஆவியை உயிருடன் இருக்கும் மனிதர்கள் காகித உருவங்களைக் காட்டி மிகவும் சாமர்த்தியமாக ஏமாற்றுகின்றனர். இதென்ன மாதிரியான மனப் போக்கு? அதனாலேயே, வாழும் மனிதர்களின் பணத்தில் ஆவிகளுக்குரிய ஏமாற்றுப் பொருட்களைச் செய்து விற்கும் 'இரண்டாம் சித்தப்பா'வை நான் மிகவும் வெறுத்தேன். ஆனால், அவரோ எப்போதும் தன் திறனைக் குறித்து பெருமைகள் பேசித் திரிந்து கொண்டிருந்தார். ஒரு நாள் தங்கள் மூளைகளைத் தெளிவாக்கும் மருந்தை ஆவிகள் அருந்தினால் சரியானபடி இரண்டாம் சித்தப்பாவைக் 'கவனிப்பார்கள்' என்றெல்லாம் நினைத்துக் கொண்டேன். நான் அவரை 'இரண்டாவது கிறுக்கு சித்தப்பா' என்றழைத்தேன். அவரோ என்னை 'மூணாவது கிறுக்குப் பையலே' என்றழைத்தார். உண்மையில் யார் கிறுக்கு என்பதைத் தான் கடைசி வரை யாருமே கண்டுபிடிக்கவில்லை.

விடுதலைக்குப் பிறகு, காகிதப் பொருட்கள் செய்யும் இரண்டாம் சித்தப்பாவின் திறன்களின் தேவையற்ற நிலை வந்தது. ஆகவே, வேறு வழியில்லாமல் இரண்டாம் சித்தப்பா சுவரில் காகிதம் ஒட்டும் வேலையில் இறங்கினார்.

"மூணாவது கிறுக்குப் பையலே, பாரு எவ்ளோ அருமையான வேலை செஞ்சேன்னு. மேல விட்டத்தைப் பாருடா. நம்ம வீட்டு விட்டத்தோட தோற்றமே மாறிடுச்சில்ல. "விடாமல் தன் திறன் பற்றிய தற்பெருமையைப் பேசிக் கொண்டே போனார்.

பேய்ஜிங்கின் பெரும்பாலான வீடுகளின் விட்டங்கள் காகிதத்தால் ஆனவை. ஆகவே, அவருக்குத் தன் திறனைக் காட்ட நிறைய வாய்ப்புகள் குவிந்தன. ஒவ்வொரு வசந்தம் மற்றும் இலையுதிர்கால நாட்களில் அவர் மும்முரமாகி விட்டார். அவர் வேலை செய்யும் போது பார்த்திருக்கிறேன். அவருக்கு நிச்சயம் தனது வேலையில் முழுத் திறமை இருக்கத் தான் செய்தது. ஏணியிலால்லாமலே சாதாரண மூங்கிலாலான 'T' வடிவ சட்டத்தைக் கொண்டே அவரால் வேலை செய்ய முடிந்தது. பெரிய பெரிய அளவில் வெள்ளைக் காகிதத்தை 'ஸ்விஷ்' என்ற சத்தத்துடன் மேலே அவர் லாவகமாக ஒட்டினார். கண் சிமிட்டும் நேரத்தில் அவரால் தன் வேலை முடிக்க முடிந்தது. மிக நேர்த்தியாகவும் செய்தார்.

தன் வாடிக்கையாளர்களிடம் தனக்குத் தேவையான காகித அளவை முன் கூட்டியே குறிப்பிட்டுச் சொல்லி விடுவார். மீதமிருக்கக் கூடிய காகிதத்தைக்கூட வீணாக்காமல் சிறு விரிசல்களில் ஒட்டினார். ஒரு சிறு விரலளவு காகிதத்தைக்கூட வீணடிக்க மாட்டார். காய்ந்ததும் நிமிர்ந்து விட்டத்தைப் பார்த்தால், எங்கெங்கே ஒட்டியிருக்கிறது என்று கண்டே பிடிக்க முடியாது. காங்கிரீட் பூச்சை விட அருமையான தோற்றத்தைக் கொடுத்தது.

"இது ஒரு கலைடா, மூன்றாவது பயலே! என் கையில வித்தையில்லாமலே நான் என் பெருமைப் படுவேனா, சொல்லு?", என்பார் இரண்டாம் சித்தப்பா. "உன்னோட அந்த எழுதற வேலையைப் போலவே இதுக்கும் பொறுமை வேணும்டா."

இந்த கட்டத்தில் தான் நான் அவருக்குக் கொஞ்சம் சாராயம் வாங்கிக் கொடுப்பேன். அவர் அதைக் குடித்து விட்டுத் தூங்கி விடுவார். நான் என் எழுத்து வேலையில் ஆழ்ந்து விடுவேன். இல்லையென்றால், சமாளிக்க முடியாது. ஆரம்பித்தால் லேசில் நிறுத்த மாட்டார். நானும் மரியாதையோடு கேட்டுக் கொண்டு நிற்க வேண்டும். அதுவும் மணிக்கணக்கில். பொறுமையிழந்த முக பாவனையைக் கொஞ்சமும் காட்ட முடியாது. அப்படி நான் காட்டினால், விரல்களைச் சுட்டிக் காட்டி எகிறுவார். "ஓ, எழுதறயாக்கும்,.. ம்,. இருக்கட்டும். அதுக்காக? நான் கேவலமாப் போயிடுவேனா? ம்? உன்னை சின்ன வயசுல நானும் எடுத்து சீராட்டியிருக்கேண்டா. சரி, அத விடு. எந்த எழுத்தாளர் தான் சின்ன வயசுல சீராட்டப் படாம இருப்பாரு? ம்? அதெல்லாத்தையுமே விடு. நான் ஓர் உழைப்பாளி. உழைப்பாளிகள், விவசாயிகள் மற்றும் போர் வீரர்களுக்கு இலக்கியம் சேவையாற்ற வேண்டாமா? ம்? நீ எனக்கு சேவையாற்றத் தானே வேண்டும்,? சொல்லேண்டா,..."

"சரி, சித்தப்பா. இதோ போறேன். இப்பவே போறேன். உடனே ஒரு புட்டி சாராயமும் ஒரு எடை பன்றிக் கறியும் வாங்கிவர ஆள் அனுப்பறேன்."

என்னை ஏச ஆரம்பித்தால், அவருக்கு விருந்து நிச்சயம் என்று நிலை. ஏன் வருமுன்னர் காக்கக் கூடாது? முன்பே சாராயமும் கறியும் வாங்கி வைத்தால் போயிற்று.

அடிக்கடி சித்தப்பா தன் கடந்த காலம் குறித்த மலரும் நினைவுகளில் ஆழ்ந்த போது என் பாடு திண்டாட்டம் தான். "இந்தக் காலத்துல எல்லாமே 'கூட்டுரிமை'யாயிடுச்சு. நல்லாவேயில்ல." அவருக்கு ஒரு முறை வயிறு சரில்லாமல் இருந்த போது சாராயத்துக்கு பதிலாக தேநீர் அருந்தினார். அது அவரை மேலும் புலம்பவே வைத்தது. சம்மந்தமே இல்லாமல் ஏதோ சொல்லிக் கொண்டே வந்தவரைப் பார்த்து, "சித்தப்பா, தேநீருக்கு போதை ஏற்படாது. போதையில இருப்பதைப் போல பாசங்கு செய்து உளறாதீங்க", என்றேன்.

"ஏண்டா பேசக் கூடாது?", என்று முறைத்தார். "பெரிய இவனா நீ? இந்த 'கூட்டுரிமை'க்கு நான் எதிரியில்ல. ஆனாப் பாரு, கொஞ்சம் நீக்குப் போக்கா இல்லாம ரொம்ப இறுகிக் கெடக்குதுன்னு தான் சொல்ல வரேன். இப்ப அந்த ‘தோஃபூ’வையே எடுத்துக்கோயேன். முன்னையெல்லாம் அத நல்லெண்ணையோட சாப்ட எப்படியிருந்துச்சு? மிக அருமையா இருக்கும். இப்ப என்ன ஆச்சு? அது காணாமப் போச்சு. இந்த சந்தோட கடைசியில இருக்கே ஒரு சின்னக் கடை. அங்க விக்கிறான். ஆனா, நல்லாவா இருக்கு? ம்? பஞ்சுப் பொதியக் கடிச்ச மாதிரி நல்லாவேயில்ல", என்று சொல்லிக் கொண்டே உதட்டைப் பிதுக்கினார். "இப்பல்லாம் அரிசிமா 'பாண்' கெடைக்கிதா? ஹூஹூம்,.. எங்க? முன்னயெல்லாம், பனிக் காலத்துல காத்து சும்மா குளுகுளுன்னு அடிக்கிற நேரத்துல, மூங்கில் தாளம் போட்டு கிட்டே வருவானே. சத்தத்தைக் கேட்டதுமே தெரிஞ்சிக்கலாம். 'அரிசிமா பாண்'னு சத்தம் வேற கொடுப்பான் வியாபாரி. அது சாப்பிட நல்லாயிருந்திச்சில்ல? ம்? அதெல்லாம் எவ்ளோ அருமையான நாட்கள்? இப்பல்லாம் சத்தத்தைக் கேக்கவே முடியறதில்ல."

அவரின் அந்த விவரிப்புகள் என்னை எனது சிறுவயதுப் பருவத்துக்கு இட்டுச் சென்றது. குளிர்க் காற்றினூடே கேட்ட வியாபாரியின் அந்த முனகிடுவது போன்ற கூவல்கள் இன்னும் கூட என் காதுகளை நிறைத்தன. அவ்வியாபாரிகள் ஏதோ ஒரு கவித்துவத்தைத் தங்களிடம் வைத்திருந்தார்கள். ஆமாம், பேய்ஜிங்கின் அக்கால வாழ்க்கையே ஒரு வித புதுக்கவிதையாகத் தான் இருந்தது.

"எல்லாமே காணாமப் போச்சு!", என்று அலுத்துக் கொண்டார் சித்தப்பா. தொடர்ந்தும் நிறைய உதாரணங்களை முன்வைத்துப் பேசினார். அதையெல்லாம் கேட்டதும், பழைய பேய்ஜிங் வாழ்க்கைக்கு என் மனமே ஏங்கியது என்பதை நான் ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும். அப்படி நினைப்பது சரியா தவறா என்றும் தெரியவில்லை எனக்கு.

"போதும் சித்தப்பா", என்றேன் நான். "இப்போது வாழ்க்கை முன்னேறிக் கொண்டே வருகிறது. எதற்கு கடந்த காலத்தை நினைத்து உழல வேண்டும்? நிச்சயமா சில சுவைமிகு பதார்த்தங்களும் வண்ணக் காட்சிகளும் இப்போது இல்லை என்பது உண்மை தான். ஆனால், அவையெல்லாம் இறந்த காலத்தின் சின்னங்களாகிப் போயின. புதியவை வரும் போது பழையவை அகலும். அப்போது சில நல்லதும் சேர்த்தடித்துக் கொண்டு போகும் தான். ஆனால், மேலும் சிறந்தவை அதனிடத்தைப் பிடிக்கும். இல்லையா?"

"இல்லை. இல்லவேயில்லை", என்றார் ஒரே போடாக. "சுவைமிகு உணவு வகைகளையும் வண்ணக் காட்சிகளையும் நாம் தக்க வைத்துக் கொள்ளத் தான் வேண்டும் என்கிறேன் நான். சாக்கலேட்டுகள் புதுசா வந்திருக்கு. ஆனா, ரொம்ப விலை அதிகம். தொண்டையில ஒட்டிக்கும். என் தேர்வு மிட்டாய் தான்."

"நவீன உடையணிந்த ஒரு பெண், கேசத்துக்கு சாயம் போட்டு, சுருட்டிக் கொண்டிருக்கிறவள் கையில் 'ஸோர்கும்' கம்பை வைத்துக் கொண்டு வீதியில் நடந்து கூவிக் கொண்டே, மிட்டாயைக் கையால் பிடித்து இழுத்து உருவங்கள் செய்து விற்றால் எப்படியிருக்கும்? ஏன்? நமது தேசிய பாரம்பரியத்துக்கு என்ன குறை?"

நாங்கள் கருத்தளவில் ஒத்துப் போனதேயில்லை. அவர் மேலும் மேலும் அலுத்துக் கொள்ள ஆரம்பித்தார். ஏனெனில், ஒரு மாடியுடனான தரைவீடுகளின் இடத்தில் உயர் அடுக்ககங்கள் வந்தன. இதிலிருந்து தப்பித்துவிட்டிருந்த வீடுகளோ வீட்டின் உட்கூரையான விட்டத்தில் காகிதம் ஒட்டும் பழக்கத்தைக் கை விட்டனர். காங்கிரீட் கலவையைக் கொண்டு பூசிக் கொண்டனர். சித்தப்பா வேலையில்லாத நிலையில் ஓய்வெடுத்தார். அவரது செய்நேர்த்தி எத்தனையோ சிறப்பாக இருந்த போதிலும், வேலை மட்டும் கிடைக்கவில்லை.

சித்தப்பா தனது விட்டத்தைக் காகிதம் ஒட்டியே வைத்திருந்தார். காங்கிரீட் பூசித் தருவதாக வீடமைப்புத் துறை ஐந்து முறை சொல்லியும் அவர் ஏற்கவில்லை. புது முறைகளைக் கடைபிடிக்க வேண்டாம் என்று எனக்கும் கட்டளை இட்டிருந்தார். தனது கடந்த காலத் தொழிலின் நினைவாக வீட்டின் காகித போலிக் கூரைக்கு அவர் ஒரு வித புனிதத் தன்மையை வலுவில் ஏற்றியபடியிருந்தார்.

அவரின் அலட்டல்களைப் பொறுக்க முடியாமல் அவரைத் திருப்திப் படுத்த நான் என் அறையை பழங்காலச் சின்னமாக வைத்திருக்க நேரிட்டது. எலிகள் இரவுகளில் மேற்கூரைக்கும் காகித உட்கூரைக்கும் இடையே ஓடி ஓசை எழுப்பின. காய்ந்திருந்த பசையையும் வெள்ளைக் காகிதத்தையும் கிர்ர் கிர்ரென்று கொறித்தன. அங்கே இருந்த மூங்கில் கீற்றுகளில் தங்களின் பற்களைக் கூர்மைப் படுத்தத் தீட்டின.

தலையில் தூசி விழுந்த படியே இருந்தது. எலிகள் ஏற்படுத்தியிருந்த துளைகளின் வழி நூலாம்படைகளுடன் விழுந்தன. எல்லாமே என் தலையில் விழுந்த போது நான் சிரித்துக் கொண்டே என் மனைவியிடம், "எதிர்காலத்தில் எழுதும் போது நீ பேசாமல் ஓலை தொப்பியை அணிந்து கொள். பார்க்கவும் நன்றாக இருக்கும். 'சன்ச்சோவின் டோன் க்விக்ஸ்டோ'வைப் போல", என்றேன். எனக்கு அந்த காகித போலிக் கூரையைக் கண்டாலே வெறுப்புடனான எரிச்சல் வந்தது.

இவை எல்லாவற்றையும் தவிர மழைக் காலத்தில் அந்தத் தூய வெண்பரப்பில் உலக வரைபடம் தோன்றியது. ஆனால், சித்தப்பாவுக்கு அதெல்லாம் மிகவும் பிடித்திருந்தது. வாரம் ஒரு முறை புதுக்காகிதத்தை ஒட்டித் தன்னை மும்முரமாக வைத்துக் கொண்டிருந்ததில் அவருக்கு பொழுது போனது. என் அறையில் இவ்வருடத்தில் மட்டும் எட்டு முறை காகிதம் ஒட்டினார். அதுவும் நான்கே மாதத்தில். நீங்கள் கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். காகித செலவுகளைக் குறித்து ஒன்றுமே சொல்லாமல் இருப்பது தான் எப்படி? நிம்மதியாக எழுதவும் முடியாத ஒரு நிலை.

ஒரு ஞாயிற்றுக் கிழமையில் சித்தப்பா ஓடோடி வந்தார். "மூன்றாமவனே, எனக்கு ஒரு உதவி செய்டா. வீடமைப்புப் பேட்டைக்குப் போய் என் வீட்டைத் தகர்க்க வேண்டாம்னு கொஞ்சம் சொல்லுடா", என்றார்.

"ஏன்? என்ன ஆச்சு?"

"நம்ம வீட்டை இடிக்கப் போறாங்களாம். இந்தத் தெருவில் எல்லா வீட்டையும் தான். இங்க உயர் மாடிக் கட்டடம் கட்டப் போறாங்க."

"ஆஹா, எவ்ளோ நல்ல விஷயம்! உயர்மாடிக் கட்டடத்தில் வசிக்கக் கூடிய வாய்ப்பு உங்களுக்குக் கெடச்சிருக்கு. சித்தப்பா, எனக்கு உங்க மேல பொறாமையா இருக்கு."

"உயர்மாடியா? நானா போவேன்? நீ போய் சொல்லு. போ,.."

"நான் எப்படிப் போக? எல்லாரோட வீட்டையும் இடிச்சா உங்களோட வீட்டை மட்டும் விட்டு வைப்பாங்களா? அதெல்லாம் சத்தியமேயில்ல."

கிழவர் ஒன்றுமே சொல்லவில்லை. எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தார்.

"அந்தப் பழைய வீட்டுல எதுக்கு இருக்கணும்?"

"முதல் காரணம், உயர்மாடி அடுக்ககத்துல பூச்செடிகள் வளர்ப்பது எப்படி? அதுவுமில்லாம, பூச்சிகளின் ஓசையே கேக்காதுடா."

"ஒரு ஜாடியில கொஞ்சம் பூச்சிகள வச்சிக்கோங்களேன்."

"ஹ்ஹா,.. அது செயற்கை. பனிக் காலத்துல கணப்பைச் சுற்றி அமர்ந்து அரட்டை அடிக்க முடியுமா? மின் கணப்பு தானே இருக்கும் அங்கே. ரேடியேட்டரைச் சுத்தியா உக்கார்ந்துக்கறது? நாம கணப்புல தேநீர் கூட கொதிக்க வைப்போமே. ரேடியேட்டர்ல முடியுமா? எந்த அயோக்கியனுக்குத் தோணின யோசனை இது? உயர் மாடி வீடுகள் கட்டி பேய்ஜிங்க்கையே கெடுக்கற இந்த யோசனை? வெளி நாட்டினரின் வாழ்க்கை முறை அது. அது சீனர்களுக்குரியதே இல்லை. தெரியுமா?"

"பெரிய கோட்பாட்டுப் பிரச்சனை போல பேசாதீங்க சித்தப்பா. நான் போய் சாராயம் வாங்கிட்டு வரேன். பன்றிக்கறி கூட நல்லதாப் பார்த்தேன்."

"நான் தின்னப் போவதில்லை. ஹூஹூம்,.. என்னைத் தூங்க வைக்கப் பாக்கறியா? என்னைச் சகிச்சுக்க முடியல்ல உன்னால இல்ல? முடியாது. இன்னிக்கு நான் குடிக்க மாட்டேன்டா."

கிழவர் மிகவும் வருத்தமாகத் தான் தெரிந்தார். ஆனால், எத்தனை வருத்தப்பட்டாலும் நடக்க இருப்பதைத் தடுக்க முடியாது என்று அவர் அறிவார். பழைய பேய்ஜிங்கிற்குள் வரும் உயர்மாடிக் கலாசாரத்தைத் தனியொருவராகத் தடுக்க முடியாது என்றும் அவருக்குத் தெரியும்.

"நான் கெளம்பறேன். ஓரறை வீட்டுக்கு பதிலாக இரண்டறை வீடு கொடுத்தால் தான் என்ன? எனக்கு அந்த கோபுரக் கட்டடத்தில் வாழ வேண்டாம்."

நான் கேட்டேன். "உங்க மகளுக்குச் சம்மதமா?"

"அவளுக்கு சம்மதம் இல்லாட்டா பிரிஞ்சுடுவோம். யாராவது தரை வீட்டுக்கு இந்த புது மாடி வீட்டை வாங்கிக்கிறாங்களான்னு கேட்டு ஊரெல்லாம் போய் நான் 'சுவரொட்டி' ஒட்டப் போறேன்."

அவரது மகள் மணமாகாத ஒரு மருத்தவர். பெற்றோர் மீது மிகவும் பாசமும் பக்தியும் கொண்டவள். அவளது அக்கறையும் கவனமும் மட்டும் இல்லா விட்டால் வெகு காலம் முன்பே போய் சித்தப்பா சேர்ந்திருப்பார். இப்போதோ இராப்பூச்சி ஓசையைக் கேட்டுக் கொண்டே தரைவீட்டில் வசிக்க அந்த அருமை மகளையே விட்டுப் பிரிய நினைத்து விட்டார். அவரது மன உறுதி அதில் தெரிந்தது.

அடுத்த நாள் 'அவசரம்' என்ற குறிப்புடன், வீடு மாற்றிக் கொள்ள விழைவோரைக் கவரும் அறிவிப்புகளை ஆங்காங்கே ஒட்டியிருந்தார். நானே விளக்குக் கம்பத்தில் சிலவற்றைக் கண்டேன். அத்தகைய அறிவிப்புகள் பெரும்பாலும் பயனற்றவை. அந்தத் தெருவில் இருந்த வீடுகள் இடிக்கப் படுவது உறுதி.

ராட்சத இடிக்கும் இயந்திரங்கள் வந்து பேரிடியாகப் பழங் கட்டடங்களின் மீது போர் தொடுத்தன. கடந்த காலத்தின் அனைத்து அடையாளங்களையும் கொடூரமாகத் தகர்த்தன.

வீட்டு வாயிலின் நிலையை இடிப்பதைப் பார்த்தபடி தனது இரும்புக் கம்பிக்கிராதி அருகே நின்றிருந்தார் சித்தப்பா. செங்கல் சுவரைப்பிடித்துக் கொண்டு, "நான் போக மாட்டேன். இது என் வீடு. நான் இங்கு தான் இறப்பேன். அது தான் என் விருப்பம்", என்று அரற்றினார்.

சுற்றிலும் அண்டை வீட்டார் கடைசியாக ஒரு முறை தங்களின் வாழ்விடத்தை கண்டபடியே நின்றிருந்தனர். எல்லா வயதினரும் சேர்ந்து அந்த இடிக்கும் கொடூர நாடகத்தைப் பார்த்தனர். அவர்களின் உணர்வுகள் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஒருங்கே காட்டின. இருந்தும், சித்தப்பாவின் எதிர்ப்பு அவர்களுக்கு விநோதமாகவே இருந்தது. நல்ல ஒரு புத்திசாலி புது வாழ்க்கையை எப்படி மறுப்பான் என்று நினைத்தனர். அவர்மீது பதிந்ததிருந்த அவர்களது பார்வை பல கேள்விகளைக் கொண்டிருந்தது. சிலர் அவர் அருகே சென்று அவரைச் சமாதானம் செய்து பேசினர். நான் வாயைத் திறக்கும் முன்னர் அவர் என் முகத்தின் பாவனைகளால் அறிந்தார்.

"உன்னோட பேசி ஒரு பயனுமில்ல. பெய்ஜிங்கின் மீது உனக்கு கொஞ்சமேனும் அக்கறை இருந்தால், கொஞ்சமேனும் உனக்கு மனசாட்சி இருந்தால் நீ முன்பே போய் அதிகாரிகளோடு பேசியிருப்பாய். இந்தப் பாரம்பரியம் மிகுந்த வீடுகளை இடிப்பது ஆலயங்களை இடிப்பதற்கு ஒப்பாகும். தெரியுமா? இனி பெய்ஜிங் இல்லை. இதையெல்லாம் உன் இரண்டாவது சித்தப்பா சொன்னேன்னு போய் சொல்லு போ. போடா."

அவரை எப்படிச் சமாதானப் படுத்துவது என்றே எனக்குத் தெரியவில்லை. அவர் மகள் மென்மையாக, "கத்தாதீங்கப்பா. கத்தினா மறுபடியும் உங்களுக்கு மாரடைப்பு வந்துடும். பாருங்க, உங்க நெஞ்சு படபடன்னு அடிச்சுக்குது", என்ற படியே அவர் நெஞ்சைத் தடவி விட்டாள். என்னைப் பார்த்து, "இவரக் கொஞ்சம் பார்த்துக்கோங்க அண்ணா. நான் இவருக்கு ஒரு ஊசி போடணும்", என்றாள்.

"ஊசி போட்டுக்க மாட்டேன். போடாத" - சித்தப்பா குழந்தையைப் போலப் பிடிவாதம் பிடித்தார்.

"நீங்க ஊசி போட்டு கிட்டாலும் போட்டுக்கல்லைன்னாலும் 'புல்டோஸர்'ரை நாம நிறுத்த முடியாது. உங்க உடம்பு மோசமாயிடுச்சுன்னா அப்புறம் யார் மூன்றாம் அண்ணனோட வீட்டு 'ஃபால்ஸ் ஸீலிங்கு'க்கு பேப்பர் ஒட்டுவதாம்?"

மருத்துவர்கள் உலகிலேயே ஆக புத்திசாலிகள் என்று நினைக்கிறேன்.

அவளது சொற்கள் அவரிடம் ஏற்படுத்திய மாற்றம் அபாரமானது. சித்தப்பா கொஞ்சம் நிதானத்துக்கு வந்தார். அவர் என்னைப் பார்த்தார். ஒரு கையை நீட்டினார். அவரது மகள் சட்டென்று ஊசியைச் செலுத்தினாள். சீக்கிரமே அமைதியானார். அவரது கண்கள் சொறுகிக் கொண்டன. சித்தப்பாவின் மகள், "சீக்கிரமா ஒரு டாக்ஸிய கூப்பிடுங்க அண்ணா", என்றாள்.

"அது இதய நோய்க்கான ஊசியா?"

"இல்ல. அது மயக்க மருந்து."

ஓஹோ அப்படியா! கிழவர் மயக்கத்தினூடான கனவில் தன் புது வாழ்க்கையினுள் நுழைவார். உயர்கட்டடத்தின் அடுக்கத்தில் நின்று விழிப்பார். காலைச் சூரியனை வரவேற்பார். எத்தனை சாமர்த்தியம் இவளுக்கு!

வாகனம் வந்தது. சித்தப்பா அரைத் தூக்கத்தில் உள்ளே திணிக்கப் பட்டார். கிளம்பும் முன்னர் என் கையை அழுத்தி, "ஞாபகம் வச்சுக்கோ. அந்த பேப்பர் 'ஃபால்ஸ் ஸீலிங்'கை அப்படியே வச்சிரு", என்றார் சித்தப்பா மகள். காற்றெனப் பறந்தது வாகனம், தன்னுள் பேய்ஜிங்கின் 'கலாசாரக் காவல'ரையும் ஏற்றிக் கொண்டு.

புதிய சாலையும் புதிய உயர்மாடிகளும் எழுவதற்குத் தடையாகயிருந்த ஒவ்வொரு தரைவீடும் இடிக்கப் பட்டது. கூரைகள் பறந்தன. சுவர்கள் தூள் தூளாகக் கீழே விழுந்தன. காலம் காலமாக அங்கே வாழ்ந்தவர்கள் உறைந்து நின்றனர். சிலர் கண்ணீர் வடித்தனர். அந்த வீடுகளுக்கான கண்ணீரா? இல்லை ஆங்கே வாழ்ந்த வருடங்களுக்கானதா? ஒரு வேளை அங்கே கிடைத்திருந்த மகிழ்ச்சிகள் மற்றும் துயரங்களுக்கானதோ? எப்படியிருந்தாலும், இது வரை ருசித்தேயிராத புது வாழ்க்கை அவர்களுக்குக் காத்திருந்தது.

என் வீட்டுக்கும் இதே நிலை வருமோ என்று நினைத்த படியே நானும் மலைத்து நின்றேன். அப்படி வந்தால், நான் எப்படி அதை எதிர்கொள்வேன்? அப்போதும் சித்தப்பாவைப் பார்த்துச் சிரிப்பேனா?

ஆம், பழையன எப்போதும் கழிக்கப் படுகின்றன. அழகும் இனிமையும் சேர்ந்தே தான். எப்படியாயினும் அவை இறந்த காலம் தானே. "நல்லனவெல்லாம் நிலைத்திருக்க வேண்டும்", என்று சித்தப்பா சொல்வதில் பொருள் இல்லையா? அதுவும் பெயிஜிங் மற்றும் அதன் வாழ்க்கை முறையில்? எல்லாம் ஒரே குழப்பமாக இருந்தது.

நான் சித்தப்பாவைக் காணச் சென்றேன். ஒரு வேளை விழித்தெழும் போது உயர்மாடி அடுக்ககத்தில் இருப்பது அவருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தால்? மாடிப் படியைப் பாவிக்கப் பழகாமல் தடுக்கி கூட விழலாம்....

ஆங்கில மொழிபெயர்ப்பு: Gladys Yang

மூல ஆசிரியர் குறிப்பு:

1956 முதல் ஓய்வு நேரத்தில் எழுத ஆரம்பித்தார். 1960ல் பட்டம் பெற்ற பிறகு ஸூ ஷூயாங் கல்லூரில் கற்பித்தார். 1977ல் 'விசுவாச இதயங்கள்' மற்றும் 'அண்டை அயல்' ஆகிய இரண்டு நாடகங்களையும் எழுதிய பிறகு தான் ஸூ ஷூயாங் பிரபலமானார். 1979ல் அவர் பல புதினங்கள் மற்றும் சிறுகதைகள் எழுதினார். 'பூர்வீக ஊர்' பிரசுரமானது. 'சூரியாஸ்தமனத்தின் கீழ் ஒரு வீதி' மற்றும் பல ஆக்கங்கள் அச்சாகின. இவரின் எல்லாப் படைப்புகளும் தீவிரமான உள்ளூர் வழக்கு மொழியில் பேய்ஜிங்கின் எளிய மக்களைப் பற்றிப் பேசுபவை.

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768