இதழ் 11
நவம்பர் 2009
  பரதேசியின் நாட்குறிப்புகள் ...4
மஹாத்மன்
 
     
  பத்தி:

வீடும் விடுப்பட்ட நினைவுகளும்

தினேசுவரி

இந்திரா டீச்சர்
சு. யுவராஜன்


தொலைதலை முன்னிறுத்தும் 2 காட்சிகள்
சீ. முத்துசாமி


கட்டுரை:

சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய முன்னோடிகள் - ஓர் அறிமுகம்
முனைவர் M.S ஸ்ரீலக்ஷ்மி

இல‌ங்கை - நேரடி ப‌ய‌ண‌த்தில் போருக்குப் பின்பான‌ காட்சிக‌ள்
லதா

இழைகள்
இராம. கண்ணபிரான்


சிறுகதை:

அல்ட்ராமேன்
சு. யுவராஜன்


இரண்டாவது கிறுக்கு சித்தப்பா
ஜெயந்தி சங்கர்


தொடர்:


பல வேடிக்கை மனிதரைப் போல...4
ம‌.ந‌வீன்

பரதேசியின் நாட்குறிப்புகள் ...4
மஹாத்மன்


எனது நங்கூரங்கள் ...4
இளைய அப்துல்லாஹ்


கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...2


சித்தாந்தன்


புனிதா முனியாண்டி

முத்துசாமி பழனியப்பன்

ல‌தா

ஜீ.கே

ஷிஜூ சிதம்பரம்

ரேணுகா
     
     
 

பதிமூன்றாம் திரிதல்:
(துன் டாக்டர் மகாதீர் பதவியை விட்டுப்போன காலகட்டம்)

ஜாலான் ராஜா சூழான் (சோழன்!?) வழியாக நடந்து கொண்டிருந்தேன். மாலை மணி ஏழு இருக்கும். எங்கு செல்வது என்று தெரியாமல் மெதுவாகக் கால் போன போக்கில் போய்க்கொண்டிருந்தேன். என்னை யாரோ கவனிப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. உள்ளுணர்வு, உள்ளத்தின் நாசி என்று மதாம் தெ ஜிராத்தின் சொல்லியிருக்கிறார். சுற்றும் முற்றும் பார்த்தேன், ஒருவருமில்லை. அன்று வாகனங்கள் கூட குறைவாகவே காணப்பட்டன. என்ன நினைத்தேனோ சட்டென வலது பக்க நடைபாதையில் பார்வையை செலுத்தினேன். ஒரு நாய் கம்பீரத்தோடு மெதுவாக வந்து கொண்டிருந்தது. மொட்டை வால். என் தோலின் நிறம். அந்த நாயை என்னருகே வைத்துப் பார்த்தால் என் இடுப்பிற்கு சற்று உயரமாகவே இருக்கும். பார்த்ததுமே பயம் உண்டாகிவிட்டது. இந்த மாதிரி பெரிய உருவமுடைய நாயை என் வாழ்வில் நேரடியாக நான் கண்டதேயில்லை.

என் சிறு பிராயத்தில் பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தபோது வழியில் ஒரு நாய்க்குட்டியைக் கண்டு, எடுத்து ஆசையாய் வளர்த்து வந்தேன். ஒரு மழைக்காலத்தில் சொற்ப ஆயுசில் அது காலமானது. நாய்க்கும் எனக்கும் ராசியில்லை என்றெண்ணியதாலோ என்னவோ அம்மா பூனை வளர்க்கத் தொடங்கினார்.

நாயின் நன்றியுணர்ச்சியைப் பற்றி உலக ரீதியில் கேள்விப்பட்டிருக்கிறேன். சில சினிமாக்களில்கூட கண்டதுண்டு. பாரதிராஜாவின் தலைச்சிறந்த படைப்பான ‘16 வயதினிலே’ படத்தில் சப்பாணி சொல்லும் “ஆத்தா ஆடு வளர்த்தா...” என்ற உரையாடல் பகுதியிலும் ‘நாயின் நன்றியுணர்வு’ சொல்லப்பட்டிருக்கும்.

அந்த நாய் போகட்டும் என்று எதிர்ப்பட்ட பேருந்து நிறுத்துமிடத்தில் உட்கார்ந்து கொண்டேன். எதிர்புறமாய் இருந்த அந்த நாய் நின்றது. என்னைப் பார்த்துக் கொண்டே இருந்தது. ‘ஏன் என்னையே பார்க்க வேண்டும்’ என்று யோசிப்பதற்குள்ளே அந்த நாய் சாலையை கடந்து வந்து என் பக்கத்தில் பின்னங்கால்களை மடக்கி உட்கார்ந்து கொண்டது. மிக அருகில் அதன் பெரிய உருவத்தைக் கண்டதும் என் இதயம் வேகமாக துடிக்கத் தொடங்கியது. அதன் பற்கள் என்னை பயமுறுத்தின. கண்கள் கருமைக் கண்ணாடிகள் போன்றிருந்தன. அதன் உரோமம் நன்றாக சீவப்பட்டதாக இருக்க வேண்டும். இந்த நாய் ஓர் உயர் ரகத்தைச் சேர்ந்தது என்றும் பணக்கார வீட்டில் வளர்க்கப்பட்டது என்றும் பார்த்தாலே தெரிந்தது. வழி தவறிய ஆட்டைத்தான் படித்திருக்கிறேன். ஆனால் இதென்ன, வழித் தவறிய நாய்?

‘மெட்ரோ’ பஸ் வந்து தானாகவே எனக்கு முன்னதாக நின்றதும் ஏறிக் கொண்டேன். ஒரு பெரிய நாயிடமிருந்து தப்பித்தோம் என்றெண்ணினேன். டிக்கெட் கொடுக்கும் நபர் “ஹோய்! அஞ்ஜிங் இனி தக் போலே நாய்க்...” (ஓய், நாயை பஸ்ஸில் ஏற்றுவதில்லை) என்று சத்தம் போட்டதும் திரும்பிப் பார்த்தேன். நாய் முதல் படிகளில் தன் கால்களை வைத்திருந்தது. “அஞ்ஜிங் இனி தஃடா சயா புஞ்ஞா...” (இந்த நாய் என்னதில்லை) என்று சொல்லியும்கூட ஓட்டுனர் என்னைப் பார்த்து “தூருன், தூருன்.. தோலோங் தூருன்” (தயவுசெய்து பஸ்ஸை விட்டு இறங்குங்கள்) என்ற ஆள்காட்டி விரலால் வெளியேறு என்று சைகை செய்தான். முன் இருக்கையில் அமர்ந்திருந்த மலாய் பெண்மணி “யீ... அப்பா இனி.... அஞ்ஜிங்.... யீ...” (என்ன இது நாய்) என்று அருவருப்பு செய்கையாகத் தன்னை சிலிர்த்துக் கொண்டாள். வேறு வழியில்லாமல் இறங்கினேன்.

நடக்க துவங்கியபோது அந்த நாயும் பின் வந்தது. சற்று நேரத்திற்குப் பிறகு சமமாய் நடந்தது. போவோர் வருவோரெல்லாம் ஆச்சரியமாய் பார்த்தனர். சிலர் நின்று விலகிச் சென்றனர். சில வாகனங்கள் வேண்டுமென்றே சத்தம் எழுப்பின. நாயின் உரிமையாளர் கண்டு அழைத்துக் கொண்டு போகக் கூடுமென்ற நம்பிக்கையில் எங்கெங்கோ சுற்றி சுற்றி நடந்து கொண்டிருந்தேன். பசியெடுத்ததும் பாபாவின் மையத்திற்குள் நுழைந்தேன். நல்ல வேளை, நாய் நுழையாமல் இருந்தது. பாபாவின் மையம் மூடப்படும் தருணமது. இருந்ததை சாப்பிட்டுவிட்டு பின்வாசல் வழியாக வெளியேறினேன். ஏ.ஐ.ஏ கட்டடத்தை அடைந்ததும் சாலையைக் கடக்கும்போது நாய் என்னை நோக்கி வருவதைக் கண்டேன். நான் ஓடினால் அதுவும் வரும். என் தொடையை பிடுங்கினாலும் பிடுக்கும் என்று பயம் கொண்டதினால் அங்கிருந்த பேருந்து நிறுத்துமிடத்தில் உட்கார்ந்தேன். நாய் அருகே வந்து ஒரே ஒரு முறை பலமாக குரைத்து அமைதியாகி எனக்கு முன்னால் உட்கார்ந்து கொண்டது.

சரி. பேச்சுத் துணைக்கு ஆள் கிடைச்சாச்சு என்ற ரீதியில் பேசத் தொடங்கினேன். நாய் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தது. நாய்க்குத் தமிழ் தெரியும் போல. மறுப்பேதும் சொல்லாதிருந்தது. நாயின் பெயர் தெரியவில்லை. கழுத்தில் பட்டை இருந்தது. ஆனால் பெயர் எதுவும் இல்லாதிருந்தது. அமெரிக்கா என்றும் இந்தியா என்றும் நாய்க்கு பெயர் வைத்திருக்கிறார்கள். இப்போதெல்லாம் சேரன், சோழன், பாண்டியனெல்லாம் நாய்களாகத்தான் இருக்கிறார்கள்.

ஹிந்து மதம் சொல்லும் முப்பிறவிகள் மீதும் ஏழு பிறவிகள் மீதும் எனக்கு நம்பிக்கை கிடையாது. செடியாய், கொடியாய், நாயாய், பூனையாய், பேயாய், பூதமாய் பிறப்பெடுப்பதில்லை மனிதன் என்று அறிந்து வைத்திருக்கிறேன்.

இன்றைய சூழலில் ஒரு நாயை நன்றாக பராமரிப்பதற்கு குறைந்தபட்சம் நாநூறு வெள்ளியையாவது செலவு செய்ய வேண்டும். ஒரு நல்ல எஜமான் ஒரு நாய்க்கு ஆயிரம் வெள்ளியை செலவு செய்ய தயாராக இருப்பான். இங்கே இரண்டு கருத்துக்கள் சொல்லப்படுகின்றன.

1 - மனிதர்களை நம்புவதை விட நாய்களை நம்பலாம்.

2 - நாய், ‘ஹராம்’!

தொடக்கூடாத, தீண்டக்கூடாத இந்த ‘ஹராம்’ பற்றி என் கருத்துக்களை வெளியிட இந்த நாட்டில் தடையுண்டு. அதற்கு பயப்படுகிறேன், என் முன்னால் இருந்த அந்த நாய்க்குப் பயப்பட்டது போல. மத தூஷணம் என்று சொல்லி இந்த அரசே என்னைக் கைதுப் பண்ணும். வெளிநாட்டிற்கு போய் எழுதினால், தலைக்கு விலைப் பேசுவார்கள் உலக மதவாதிகள். எங்கே இருக்கிறது எழுத்து சுதந்திரம்?

நடுநிசி நெருங்கிக் கொண்டிருக்கும் போது நடக்க ஆரம்பித்தேன். நாயும்தான். நாயின் தலையைத் தொட்டு தடவினேன். மிகவும் மிருதுவாக மென்மையாக இருந்தது அதன் உரோமம். என்னை ஒரு முறை பார்த்து விட்டு நடையில் கவனம் செலுத்தியது. எப்படிப்பட்ட பிராணியாக இருந்தாலும் பழகினால் அதுவும் நண்பன்தான் போல.

லீ ரப்பர் என்ற கட்டிடத்தை நெருங்கியதும் என் பெயரைக் கூப்பிடும் சத்தம் கேட்டேன். நண்பர் ஒருவர் அக்கட்டிடத்தில் பாதுகாவலர் வேலை இருக்கிறது, வேண்டுமா எனக் கேட்டார்.

நாயைப் பார்த்தேன். மவுனமாயிருந்தது.

சம்மதித்தேன்.

உள்ளே போய் குளியல் முடிந்து வெளிவருகையில் நாயைத் தேடினேன். நாய், எங்கும் இல்லை.

வேதத்தில், கடவுளுடைய கட்டளையை மீறி தன் பாதையில் பயணித்துக் கொண்டிருந்த தீர்க்கதரிசி ஒருவனை தடுத்து நிறுத்தியது கழுதை ஒன்று. அவனுடைய வாகனமாக இருந்த அந்தக் கழுதை பேசியது. என்னோடு வந்த நாய் பேசவில்லை. நான் வேலையில் சேர்வதற்காகவோ என்னவோ, அந்த நாய் பேசாமல் பேசியது. யாருக்கு நான் நன்றி சொல்ல...

o பரதேசியின் நாட்குறிப்புகள் ...1
o பரதேசியின் நாட்குறிப்புகள் ...2

o பரதேசியின் நாட்குறிப்புகள் ...3

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768