இதழ் 11
நவம்பர் 2009
  எனது நங்கூரங்கள் ...4
'கோபக்காரர்கள்'
இளைய அப்துல்லாஹ்
 
     
  பத்தி:

வீடும் விடுப்பட்ட நினைவுகளும்

தினேசுவரி

இந்திரா டீச்சர்
சு. யுவராஜன்


தொலைதலை முன்னிறுத்தும் 2 காட்சிகள்
சீ. முத்துசாமி


கட்டுரை:

சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய முன்னோடிகள் - ஓர் அறிமுகம்
முனைவர் M.S ஸ்ரீலக்ஷ்மி

இல‌ங்கை - நேரடி ப‌ய‌ண‌த்தில் போருக்குப் பின்பான‌ காட்சிக‌ள்
லதா

இழைகள்
இராம. கண்ணபிரான்


சிறுகதை:

அல்ட்ராமேன்
சு. யுவராஜன்


இரண்டாவது கிறுக்கு சித்தப்பா
ஜெயந்தி சங்கர்


தொடர்:


பல வேடிக்கை மனிதரைப் போல...4
ம‌.ந‌வீன்

பரதேசியின் நாட்குறிப்புகள் ...4
மஹாத்மன்


எனது நங்கூரங்கள் ...4
இளைய அப்துல்லாஹ்


கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...2


சித்தாந்தன்


புனிதா முனியாண்டி

முத்துசாமி பழனியப்பன்

ல‌தா

ஜீ.கே

ஷிஜூ சிதம்பரம்

ரேணுகா
     
     
 

லண்டனில் எங்களது வீட்டுக்கு அண்மையில் உள்ள பள்ளி வாசலுக்கு போன வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகைக்காக போயிருந்தேன். பொதுவாக அன்று தான் பள்ளி வாசல் தர்மகர்த்தா சபை உறுப்பினர்கள் தங்களை யார் என்று மற்றவர்களுக்கு தெரியப்படுத்தும் நாள்.

இலங்கையிலும் அப்படித்தான். வெள்ளிக்கிழமை தொழுகைக்கு வெள்ளுடுப்பு உடுத்து முன்னால் நிற்பார்கள். பள்ளி ட்றெஸ்டி என்றால் ஒரு பெருமைதானே.

இங்கு ஜூம்மா தொழுகைக்கு வருகிறவர்களை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தார். ஒரு வயதான ட்றெஸ்ட்டி. அப்படியே நின்று கொண்டிருந்தவரின் கவனம் உள் கதவு அருகில் வந்து நிற்பவர்களின் மீது விழுந்தது.

"கதவோடை நிற்க வேண்டாம்" என்று உருது மொழியில் சொன்னார். எல்லோருக்கும் தெரியும் எல்லாம் பெரியவர்கள் தானே. ஒரு முறை சொன்னா; கதவருகில் நிற்க வேண்டாம்" சரி போய்விட்டார்கள். அடுத்த கூட்டம் வந்து நின்றது. இவர்களுக்கு தெரியாது அவர் சொன்னது. "கதவோட நிற்க வேண்டாம்" பாகிஸ்தான்காரர்தானே அவர் முகம் சிவந்து விட்டது. கொஞ்சம் காரமாகவே சொன்னார்.

எண்ணை சட்டியில் பொரித்த பணியாரம் போல இருந்தது அவரின் முகம். அரை மணித்தியாலமாக கத்திக் கொண்டிருந்தார் "கதவுக்கு கிட்ட நிற்க வேண்டாம்" என்று. ஆனால் வருகிறவர்கள் புதியவர்கள் அவர்கள் என்ன என்று சுதாகரித்து அப்பால் போன பின்பு வேறு பலர் வந்து நிற்பார்கள். ஜூம்மா தொழுகைக்கு வந்த வண்ணமே இருந்தார்கள் மக்கள். பாங்கு சொல்லும் போதும் கொத்துபா ஓதும் போதும் பேசக்கூடாது என்று நபிகளார் சொல்லி இருக்கிறார்கள். அப்படி பேசினால் பள்ளிவாசலுக்கு தொழ வந்த நன்மையே இல்லாமல் போய் விடும்.

அவர் "கதவுக்கு கிட்ட நிற்க வேண்டாம்" என்று திட்டி திட்டியே அவரின் நன்மை எல்லாவற்றையும் ஒரு கோபக்காரராக இழந்து வெறுங்கையோடு அன்று வீட்டுக்கு போய் இருப்பார்.

எனக்கு முதலாவது கோபக்காரராக இன்னும் தெரிபவர் அரிவரி (முதலாம் வகுப்பு) வாத்தியார் தில்லையம்பலம்தான். அவரின் கோபம் எமது சுத்துபட்டு கிராமமும் அறிந்தது. தில்லையம்பலம் வாத்தியாரின் கோபம் காரணமாக ஒட்டுசுட்டான், கூளாமுறிப்பு, கருவேலன்கண்டல், கற்சிலைமடு, முத்தையன் கட்டு, புதுக்குடியிருப்பு, முள்ளிய வளை மட்டும் தெரிந்திருந்தது.

அவர் நல்ல சிமாட்டான மனிசன். ஆனால் அடி என்றால் நெவிள் பறந்த அடி. அதிபர் மார் ஏனைய பொம்பிளை ரீச்சர்மாரோடு கதைக்கும் போது சிரித்து சிரித்து நல்லா கதைப்பார். ஆனால் எங்களை கண்டால் மாத்திரம் முகத்தை கம்மாலைக்குள்ளை கிடக்கும் இரும்பு மாதிரி இறுக்கமாக வைத்திருப்பார். ஏதோ அடிக்க போறவர் மாதிரிதான் வருவார். ஆனால் ஒரு சண்டியனின் தோற்றம் அவரிடம் இல்லை. அவர் மெலிந்து அழகாக இருப்பார். அனேகமாக அவரின் முகம் இறுகியே கிடக்கும் எங்களை கண்டால். தில்லையம்பலம் வாத்தியார் எங்கள் பள்ளிக் கூடத்தை விட்டு மாற்றலாகி போறார் என்றால் எங்களுக்கெல்லாம் பெருத்த சந்தோஷம். ஆனால் அவர் போற பள்ளிக் கூடத்துப் பெடியன்கள் ஈரல் கருகி நிற்பாங்கள். ஆனால் அவரைத்தான் எங்கள் பெற்றோருக்கும் பிடிக்கும். பிள்ளைகளுக்கு வெறுப்பு. திரும்பத் திரும்ப எங்கள் சுத்துப்பட்டு கிராமத்தை விட்டு வேறு இடங்களுக்கு அவர் போகவேயில்லை. எங்கள் கிராமங்களின் கல்வி தொடர்பான அக்கறை அவருக்கு மிக அதிகமாகவே இருந்தது. ஆனால் சரியான கோபம் எங்களோடு.

அம்மாவின் கோபம் ஊரறிந்தது. நானும் தங்கச்சியும் தான். ஆனால் எனக்குத் தான் எடுத்ததெல்லாத்துக்கும் அடி விழும். ஏன் என்று நான் யோசிக்க முதல் அடி விழும். ஊரில் நான் பெரிய குழப்படிக்கார பிள்ளை இல்லை. சின்ன சின்ன குழப்படிகள் செய்வேன். எங்கள் அம்மய்யாவின் லெதர் பேர்ஸில் இருந்து இரண்டு ரூபா ஒரு ரூபா கள வெடுத்து விடுவேன். எப்படியோ அம்மாவுக்கு மூக்கடி வேர்த்து விடும். அதற்கும் சணல் பறந்த அடி அடிப்பா. குடத்தடியில் மண்குடம் என் கால் பட்டு உடைந்தாலும் அடி. கிணத்துக்குள் வாளி தவறி விழுந்து விட்டாலும் அடி.

ஐயா சின்ன வயதில் கோவிச்சுக் கொண்டு போய் விட்டார். அதனால் தான் அம்மா அந்த கோபத்தையெல்லாம் என் மீது காட்டுகிறா என்று ஊர்ச்சனம் சொன்னது எனது காதிலும் விழுந்தது. ஒரு நாள் பள்ளிக் கூடம் விட்டு வரும் பொழுது வீரப்பழம் புடுங்குற சண்டையில் மணிவண்ணனின் கையை கடித்து விட்டேன். கை துண்டாகி விட்டது. நான் வீட்டுக்கு போக முதல் யாரோ விசயத்தை சொல்லி விட்டார்கள் அம்மாவுக்கு. வீட்டில் புதுக் கம்பு முறித்து அம்மா தயாராக இருப்பா என்று தெரியும் எனக்கு. வீட்டில் ரூபாய் புத்தகத்தை வைத்தது தான் தெரியும். அடி என்றால் இப்படி ஒரு அடி.

நான் பிறகு வளர்ந்து விட்டேன். ஒருநாள் எனக்கு அம்மா என்னத்துக்கோ அடிக்க வந்தா. நான் ஒரு முறை முறைத்துப் பார்த்தேன். அதற்கு பிறகு அவ அடிக்கிறதை நிறுத்தி விட்டா.

பிறகு சித்தப்பாவை இரண்டாம் தாரமாக கலியாணம் கட்டிக் கொடுத்தாப் பிறகு அவளின் கோபம் தணிந்து விட்டது. ஊராக்கள் சொன்னது சரிதான் என்று எனக்கு பட்டது.

ஊரில் சுந்தரலிங்கம் என்றொரு ஓ.ஐ.சி இருந்தார். அவர் பெரும் கோபக்காரர் என்று பிரபல்யம் பெற்றவர். பிடிக்கிற இயக்கப் பெடியன்களை எல்லாம் அடித்து முறித்து போடுவார். அவரிடம் அகப்பட்டால் எலும்பு முறிந்துதான் வீட்டுக்கு வருவார்கள் பெடியன்கள். அவ்வளவு அடி. ஊரே பயந்து போய் இருந்தது.

இயக்கப் பெடியன்கள் அவரை கொல்ல வேண்டும் என்றே கங்கணம் கட்டி இருந்தார்கள். அவ்வளவுக்கு உபத்திரவம் அவர். மானுருவியில் வைத்து அவர் கொல்லப் பட்டு விட்டார் என்ற கேள்விப்பட்ட போது எல்லோருக்கும் சந்தோசம். அவர் இனிமேல் அடிக்க மாட்டார் என்ற சந்தோஷம் தான் அது.

நான் வேலை செய்த அலுவலகத்தில் ஒரு மனேஜர் இருந்தார். அவர் வேலை செய்யும் ஊழியர்களை கண்டால் ஏதோ எதிரியை பார்ப்பது மாதிரித்தான் பார்ப்பார். வேலை செய்பவர்கள் தங்கள் பாட்டுக்கு வேலை செய்து கொண்டிருப்பார்கள்.

கொஞ்சம் சிரித்து கதைத்தால் கூப்பிட்டு கேட்பார் "ஏன் சிரித்து கதைக்கிறீர்கள், என்னென்ன வேலை செய்கிறீர்கள் என்று எழுதி கொண்டு வாருங்கள்" என்பார். அவருக்காக நான் செய்யும் கிழமை வேலைகள், மாத வேலைகளை ஒரு துண்டில் எழுதியே வைத்திருக்கிறேன். கேட்ட உடனே கொண்டு போய் கொடுத்து விடுவேன். காலையில் போகும் போதும் எனக்கு அருகால்தான் போவார். ஒரு குட் மோணிங் சொல்ல மாட்டார். தனக்கு விருப்பமென்றால் மாத்திரம் சிரிப்பார். சிலரோடு மட்டும் சிரிப்பது என்ற விரதத்தோடு இருப்பார்.

மற்றப்படி முகத்தை வாய் மூடிய ஒட்டகத்தை போல வைத்திருப்பார். அவருக்கு இரண்டு முறை ஹார்ட் அட்டாக் வந்திருக்கு இன்னொரு முறை வந்தால் போய் விடுவார். அவரின் பதட்டம்தான் அவருக்கு எமன். அவரை சிரிக்க வைக்க அவரது மனைவியால் கூட முடியாது என்று மனைவியே ஒருமுறை என்னிடம் சொன்னா. விஸ்க்கி குடிக்கும் போது சிரிப்பார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

சாவகச்சேரியில் நான் கார் பூட்டு திருத்தும் கடை ஒன்றில் வேலை பழகினேன். கனகரத்தினம் அவரின் பெயர். அவர்தான் முதலாளி. அவருக்கும் பெயருக்கும் சம்பந்தமில்லாத தோற்றம் அவருடையது. முகத்தில் முடியிருக்கும் தலையில் இல்லை. அவர் ஒரு கோபக்காரர். பொதுவாக கராஜ்காரர், மெக்கானிக்மா எல்லோரும் ஒரு வகை கோபக்காரர்கள்தான். எப்படி அவரின் கராஜூக்கு வேலைக்கு போனேன் என்பது மறந்து விட்டது.

அவர் எடுத்ததற்கெல்லாம் அடிப்பார். அவர் நல்ல வேலைக்காரர் என்பது ஊரெல்லாம் அறிந்த செய்தி.

ஒரு நாள் ஏதோ செய்து விட்டேன் என்று தலையில் சாவியால் அடித்து விட்டார். தலையில் பெரிய கட்டி வந்து விட்டது. அந்த ஆத்திரத்தில் ஓடுகின்ற யாழ்தேவியில் விழுந்து தற்கொலை செய்து கொள்வோமோ என்று நினைத்தேன். யாழ்தேவி கராஜுக்கு பின்னால் தான் தண்டவாளத்தில் போகும். பிறகு உவருக்காக ஏன் விழுந்து சாவான் என்று நினைத்துவிட்டு ஊரில் குமாரண்ணையின் செத்த வீட்டைச் சொல்லிவிட்டு பையைத் தூக்கி கொண்டு சாவகச்சேரியும் வேண்டாம் அவரும் வேண்டாம் என்று கைகழுவி விட்டு வந்து விட்டேன். அதுக்கு பிறகு 2005ஆம் ஆண்டுதான் 25 வருஷத்துக்கு பிறகு ஒரு டிவி டொக்கியூமன்றி எடுப்பதற்காக போனேன். நான் அடிவாங்கிய அந்த கோபக்காரரின் இடம் காடுபத்திப் போய் இருந்தது.

மனைவியை எனது மகன் ஒரே கோபப்படுத்திக் கொண்டே இருப்பான். இதனை ரூமில் வைத்து எழுதிக் கொண்டிருக்கும் போதும் மனிசி ஏதோ சன்னதமாடிக் கொண்டுதான் இருக்கிறது குசினிக்குள்.

தலை முடி வெட்டுதல், குளித்தல், முகம் கழுவுதல், சாப்பிடுதல் எல்லாவற்றையும் மனிசி நினைக்கிற மாதிரி அவன் செய்ய மாட்டான்.

ஒரு உடுப்பை போடச் சொன்னால் அவன் கேட்க மாட்டான். அம்மாவை கோபப்படுத்தாதேயடா, அம்மா நாங்கள் இருக்கும் வரை அவ ஆரோக்கியமாக இருக்க வேணுமடா என்று அவனுக்கு சொன்னால் வலது காதால் கேட்டுவிட்டு இடது காதால் விட்டு விடுவான்.

மனிசியை சாந்தப்படுத்துவதில்தான் எனது காலம் கரைகிறது. "தகப்பன் எண்டு இருக்கிறியள் நாலு அடி போட்டு உவனை திருத்துங்கள்" என்று என்மீது ஏறி விழும். அவனுக்கு இனி அடித்து லண்டனில் அவன் திருந்தி........

இப்படித்தான் அவன் சின்னப்பிள்ளை 12 வயது என்றால். அதற்கும் என்மீது ஏறி விழும். சில நேரம் நான் அவனின் ஆய்கினை தாங்காமல் கத்தினால் "என்ன புள்ளைக்கு ஏசுறியள்" என்று மூஞ்சையை அஸ்ட கோணத்தில் வைத்திருக்கும். எல்லாவற்றையும் ஒரு சிரிப்போடு காலம் கடத்த எனக்கு நல்லாத் தெரியும்.

-தொடரும்

o எனது நங்கூரங்கள் ...1
o எனது நங்கூரங்கள் ...2

o எனது நங்கூரங்கள் ...3

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768