இதழ் 12
டிசம்பர் 2009
  உல‌கில் புதிய‌ வ‌ழித்த‌ட‌ம் - ஏபெக் மாநாடு : ஒரு பார்வை
கெ.எல்.
 
     
  பத்தி:

டடவாவும் ஈ ஷந்தியனும்

அகிலன்

குருநாதர் கும்பமுனியின் பொன் வாக்கும் கலைந்ததொரு கனவும்
சீ. முத்துசாமி


Bye… Bye
தோழி

மலர்ந்தது ஈழம்!
அ. ரெங்கசாமி

கட்டுரை:

உல‌கில் புதிய‌ வ‌ழித்த‌ட‌ம் - ஏபெக் மாநாடு : ஒரு பார்வை
கெ.எல்.

மக்கள் எவ்வழியோ அவ்வழியே அரசும்
நெடுவை தவத்திருமணி

ஒரு தேசாந்திரியின் யாத்திரையில்
முனைவர் M.S ஸ்ரீலக்ஷ்மி

சிறுகதை:

அவள் - நான் - அவர்கள்
மா. சண்முகசிவா


கருப்பண்ணன்
சு. யுவராஜன்

ராதா: எண் 7, இருபத்து நான்காவது மாடி
முனிஸ்வரன்

உற்றுழி
கமலாதேவி அரவிந்தன்

கார்ட்டூன் வரைபவனின் கதை
ம. நவீன்

நீலக்கடல் மீது பாவும் நீலகண்டப் பறவைகள்!
கோ. முனியாண்டி

சிகப்பு விளக்கு
விக்னேஸ் பாபு

தொடர்:


செம்புழுதி மழைச்சாரலில் கரைந்துருகும் காலம் ...9
சீ. முத்துசாமி

பரதேசியின் நாட்குறிப்புகள் ...5
மஹாத்மன்


எனது நங்கூரங்கள் ...5
இளைய அப்துல்லாஹ்

கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...3


எம். ரிஷான் ஷெரீப்


தீபச்செல்வன்

தர்மினி

ஏ.தேவராஜன்

செல்வராஜ் ஜெகதீசன்

பதிவு:

"நா கோவிந்தசாமி எனும் படைப்பாளி"
புஷ்பலதா கதிரவேலு

குரு அரவிந்தனின் நூல், ஒலிவட்டு வெளியீட்டு விழா
மணிமாலா

இதழ் அறிமுகம்:

மரங்கொத்தி
மன்னார் அமுதன்

நேர்காணல்
பவுத்த அய்யனார்

புத்தகப்பார்வை:

குரு அரவிந்தனின் நீர்மூழ்கி நீரில் மூழ்கி... (குறுநாவல் தொகுதி)
முனைவர் கௌசல்யா சுப்பிரமணியன்
     
     
 

நியூயார்க் நகரில் எக்கச்சக்கமாக ஒருவர் வாங்கிய வீட்டுக் கடன், மலேசியாவின் ‘கால் சென்டரில்’ வேலை பார்த்தவருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று யாருக்குத் தெரிந்திருக்கும்? அல்லது சிங்கப்பூரில் கணினிச் சில்லுகளை ஏற்றுமதி செய்பவருக்கு அல்லது ஹாங்காங் லாரி ஓட்டுநர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று யார் எண்ணிப் பார்த்தார்கள்.

ஆனால் இது நடந்தது.

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உலகையே புரட்டிப் போட்ட பொருளியல் சூறாவளி இப்படித்தான் ஆரம்பித்தது.

கடந்த 1930களில் உலகை உலுக்கிய ‘The Great depression’ என்ற மிக மோசமான பொருளியல் நெருக்கடிக்குப் பிறகு ஏற்பட்ட கடுமையான பொருளியல் நெருக்கடியாக இந்த நெருக்கடி வர்ணிக்கப்படுகிறது.

இதிலிருந்து உலகம் மீட்சி அடைவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியிருக்கும் வேளையில் உலகின் முக்கியமான 21 பொருளியல்கள் அண்மையில் ஒன்றுகூடின. ஏபெக் எனப்படும் ஆசிய பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பில் இணைந்துள்ள 21 நாடுகளும் சிங்கப்பூரில் நவம்பர் 8 முதல் 16 வரை கூட்டம் போட்டன.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, சீன பிரதமர் ஹூ ஜிந்தா முதல் ரஷ்யா, ஜப்பான், கனடா போன்ற நாடுகளில் தலைவர்களும் சிங்கப்பூர், மலேசியா, இந்தோனீசியா நாடுகளை உள்ளடக்கிய ஆசியான் நாடுகளின் தலைவர்களும் பேச்சு வார்த்தைகளை நடத்தினர். ஆசியான் நாடுகளுடன் அமெரிக்கா பேச்சு நடத்தியிருப்பது இதுவே முதல் முறை. ஏபெக் நாடுகள் கூட்டத்தின் ஒரு பகுதியாக ஆசியான் - அமெரிக்கா கூட்டமும் இடம்பெற்றது.

ஏதோ நாட்டின் தலைவர்கள் ஒன்றுகூடி நலம் விசாரித்து விருந்து சாப்பிட்டுப் போனது போல் தோன்றலாம். ஆனால் முக்கிய கட்டத்தில் நடைபெற்ற மிக முக்கியமான கூட்டம் இது. இந்த நாடுகள் அனைத்தும் வெவ்வேறு வகையான பொருளியல்களைக் கொண்டவை. பலவகையில் மாறுபட்டவை. சில ஜனநாயகப் போக்குடையவை. வேறு சில கம்யூனிசக் கொள்கையிலிருந்து மாறி வருபவை. எனினும் இன்றைய சூழலில் உலகின் அனைத்து நாடுகளுமே ஒன்றையொன்று சார்ந்தே செயல்படுகின்றன, செயல்பட வேண்டியுள்ளது. உலக வர்த்தகத்தில் பாதிக்கும் மேல் இந்த ஏபெக் நாடுகளின் பொறுப்பில் உள்ளது.

ஏபெக்கில் இடம் பெறாத முக்கிய பொருளியல்களான இந்தியா, பிரேசில், ஐரோப்பிய ஒன்றியம் போன்றவற்றுடன் ஏபெக் நாடுகள் பல முக்கிய வர்த்தகப் பங்காளிகளாக உள்ளன. சொல்லப்போனால் ஏபெக் கட்டமைப்புக்கு இடையிலான வர்த்தக உடன்பாடுகளைக் காட்டிலும், இந்நாடுகளுக்கும் மற்ற நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உடன்பாடுகள் அதிகம் எனலாம்.

உதாரணமாக 2009 ஏப்ரல் வரையிலான புள்ளி விவரப்படி ஆஸ்திரேலியாவின் முக்கிய வர்த்தகப் பங்காளிகள் பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ள இந்தியாவும் ஏழாம் இடத்தில் உள்ள பிரிட்டனும் ஏபெக்கில் இல்லை. அதேபோல் அமெரிக்காவின் முக்கிய வர்த்தகப் பங்காளிகளில் பாதி ஏபெக்கில் இல்லாத பிரிட்டன் உட்பட்ட ஐரோப்பிய நாடுகளாக உள்ளன. மேலும் எல்லா நாடுகளுமே ஜி-8, ஜி-20, கிழக்கு ஆசிய கட்டமைப்பு, ஆசியான், ஆசியான் மற்றும் 3 நாடுகள் (ASEAN+3 - சீனா, தென்கொரியா, ஜப்பான்), என பல பல கூட்டமைப்புகளில் ஒன்றையொன்று பிணைத்துள்ளன. எனவே பொருளியல் தொடர்பாக இந்த ஏபெக் நாடுகள் முன்னெடுக்கும் போக்குகளும் திட்டங்களும் பரிந்துரைகளும் உலகத் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதனால் ஏபெக் பேச்சு வார்த்தைகள் உலகெங்கும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டன. அத்துடன் ஏபெக் மாநாட்டையொட்டி நடைபெற்ற வர்த்தகம், முதலீடு தொடர்பான வேறு பல கூட்டங்களில் மற்ற நாடுளும் பங்கேற்றன. சுருங்கச் சொல்வதென்றால், புதிய பொருளியல் போக்குகளை நாடுகள் கடைப்பிடிக்க வேண்டும் என்பது ஒருமித்த குரலாக ஒலித்தது. பழைய தன்னைப்பேணித் தனங்களைக் கைவிட்டு வளர்ச்சிக்கான புதிய திட்டங்களை மேற்கொள்ள ஆசிய பசிபிக் வட்டாரத் தலைவர்கள் ஒத்துக்கொண்டுள்ளனர்.

சமச்சீரான, நிலைத்தன்மையான, நீடித்த பொருளியல் வளர்ச்சிக்கான வழிமுறைகளை ஆராய வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்கவில்லை. வரிகள், ஏராள விதிமுறைகள் போன்ற தடைகளைத் தவிர்த்து, நாடுகளுக்கு இடையே தடையற்ற வர்த்தகத்துக்கு வழி அமைக்க வேண்டும் என்பது சிங்கப்பூரின் தலைமையில் நடைபெற்ற இந்தப் பொருளியல் மாநாட்டில் முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கை. இதன் மூலம் வர்த்தகம் எளிதாகும். நேரம் மிச்சமாகும். இருதரப்புக்கும் ஆதாயம் கிடைக்கும். இருதரப்பும் வளர்ச்சி காண முடியும்.

ஏபெக் தலைவர்களின் உச்சநிலைக் கூட்டத்தின் இறுதியில், கூட்டு அறிக்கையின் முக்கிய கருத்துகளை தொகுத்து அளித்த சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், வேலைகளை உருவாக்கி அனைத்து மக்களுக்கும் பயனளிக்கக்கூடிய நிலைத்த பொருளியல் மீட்சிக்கு, “சமநிலையான, அனைத்துத் தரப்பையும் ஒன்றிணைத்த நிலைத்தன்மையான பொருளியல் வளர்ச்சியை மேற்கொள்வது முக்கியம்” என்றார்.

“பழைய வழிமுறைகள் எதிர்காலத்தில் பயன்படாது என்பது நமக்குத் தெரியும். இது புதிய உலகம். ஆசியா உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதும், அமெரிக்கா கடன் வாங்குவதும் இறக்குமதி செய்து, கொள்முதல் செய்வதும் இனிமேல் சாத்தியமாகப் போவதில்லை. வேறுவகையான சமநிலைகளை நாம் காண வேண்டும். தாக்குப்பிடிக்ககூடிய வகையில் நமது மக்கள் வளப்பம் காண வேறொரு வழியை நாம் கண்டறிய வேண்டும்,” என்று விளக்கினார் திரு லீ சியன் லூங்.

உலகம் புதிய தடத்தில் சுழலத் தொடங்கியுள்ளது. பொருளியல் சக்தி தாக்கத்தில் உலகம் மறு உருவாக்கம் கண்டுவரும் வரலாற்றின் முக்கிய கட்டத்தில் இருக்கிறோம். வேக வளர்ச்சி கண்டு வரும் இந்தியாவும் சீனாவும் உலகப் பொருளியலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும் உலகம் மிகவும் சிக்கலாகி உள்ளது. பருவநிலை மாற்றங்கள் போன்ற பெரும் சக்திகள் முன்னைய பொருளியல் சமநிலைகளை தலைகீழாக மாற்றிவிடும்

இணையம் உலகத்தை அதிக வெளிப்படையாகவும், அதிக அளவில் ஒன்றை ஒன்று சார்ந்தும், சமூக சமநிலையை அதிக அளவின் கோருவதாகவும் மாற்றியுள்ளது. இந்நிலையில் ஏராளமான சவால்களையும் வாய்ப்புகளையும் நாடுகள் எதிர்கொள்கின்றன. ஆசிய நாடுகள் உற்பத்தி செய்வது, அமெரிக்கா இறக்குமதி செய்வதும் இனிமேல் தொடராது.

“ஏற்றுமதி சார்ந்த பொருளியலை ஆசியான் நாடுகள் மாற்றியமைக்க வேண்டும். உலக வளர்ச்சியை சமர்சீராக்க வேண்டும். அல்லது நெருக்கடியிலிருந்து மீண்டுமொரு நெருக்கடிக்கடிக்குச் செல்லும் அபாயத்தை எதிர்கொள்ள வேண்டும்” என்று ஏபெக் கூட்டத்தில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் ஒபாமா வலியுறுத்தியுள்ளார்.

இவ்வட்டார நாடுகள் புதிய சந்தைகளை உருவாக்க வேண்டும். உள்ளூர்ச் சந்தைகளை வளர்க்க வேண்டும். “ஆசிய நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் 55% விழுக்காடு ஆசிய வர்த்தமாக உள்ளது. வட்டார நாடுகளுக்கிடையிலான நேரடி வெளிநாட்டு முதலீட்டில் 60% இந்த வட்டாரத்தினுடையது எனவே ஆசிய நாடுகள் ஒன்றின் எதிர்காலத்தில் ஒன்று முதலிடுகிறது. ஆனால் வட்டார நாடுகளுக்கிடேயே நிதி ஒருக்கிணைப்பு குறைவாகவே உள்ளது. லண்டனுடனும் நியூயார்க்குடனும் உள்ள அளவு நிதி ஒருங்கிணைப்புகள் ஆசிய நாடுகளுக்கிடையே இல்லை,” என்று கூறியுள்ளார் ஹாங் காங்கின் தலைமை நிர்வாகி திரு டொனால்ட் சாங் (Donald Tsang).

பொருளியல் மீட்சி அடையத் தொடங்கி விட்டாலும் ஏராளமான சவால்களை உலகம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. நாடுகளிடம், மக்களிடம் முனைப்பும் முயற்சியும் இல்லாவிட்டால் பொருளியல் ஊக்குவிப்புத் திட்டங்களாலும் ஏனைய உதவித் திட்டங்களும் தாக்குப் பிடிக்க முடியாது.

பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் (Price Water House Coopers) என்ற நிபுணத்துவ சேவை நிறுவனமும் ஏபெக் கூட்ட ஏற்பாட்டாளர்களும் சேர்ந்து 350 வர்த்தகத் தலைவர்களிடம் நடத்திய ஆய்வில், 30 விழுக்காட்டுக்கும் குறைவானர்கள் “அடுத்த 12 மாதங்களில் வேலையின்மை விகிதம் பொருளியல் நெருக்கடிக்கு முன்னர் இருந்த அளவை எட்டும்” என்பதை ஒத்துக்கொண்டனர்.

“மீட்சிக்கு நீண்ட காலம் ஆகும். வேலையில்லாப் பிரச்சினை தொடர்ந்து நீடிக்கும்” என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

எல்லாருக்குமே தெரிந்த ஒரு பெரிய பொருளியல் சொல் - வேலை.

வேலை, வருமானம், கட்டுப்படியாகக் கூடிய விலையில் பொருட்களின் விலை. உலக மக்கள் அனைவரும் வேண்டுவது இதைத்தான். பொருளியல் சமநிலையான வளர்ச்சியைக் கண்டால் இவை அனைத்தும் சரியாக அமையும். வேலை இருக்கும். உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். வேலைகளால் தயாரிப்புகள், உற்பத்திகள் பெருகுவதால் தேவையான அளவுக்கு பொருட்கள் சந்தையில் இருக்கும். ஏற்றுமதி அதிகரிக்கும். வருமானம் இருப்பதால் இறக்குமதியும் கூடும்.

மேலும் நாடுகளுக்கிடையே வர்த்தகம் செய்வதற்கான கட்டுப்பாடுகளும் தடைகளும் அகற்றப்படுவதால் இறக்குமதிப் பொருட்களுக்கும் செலவும் குறையும். அதனால் எல்லாப் பொருட்களின் விலைகளும் கட்டுப்படியாகக்கூடியதாக இருக்கும். அடுத்து வரும் மாதங்களில், ஆண்டுகளில் ஏபெக் நாடுகளின் விருப்பங்கள் நடைமுறை சோதனைகளைச் சந்திக்கும்.

வேலையின்மை விகிதம் அதிகமாக இருக்கும் சூழலில் வர்த்தக தாராளமயத்தை அமெரிக்கா போன்ற நாடுகள், விரும்புமா என்பது கேள்விக்குறி.

தடையற்ற வர்த்தக உடன்பாடுகளை முன்னெடுப்பதில் உள்ளூர் அரசியல் கொள்கைகளும் சிக்கல்களும் இடையூறாக இருக்கலாம். நம்பிக்கை தரும் வகையில் பொருளியல் மீட்சி தொடராவிட்டால், நாடுகள் தன்னைப்பேணித்தனத்தைத் தொடரலாம். எடுத்துக்காட்டாக வெளியூர் பொருட்கள் வேண்டாம், உள்ளூர் பொருட்களுக்கே முன்னுரிமை கொடுக்கக்கபட வேண்டும் என்ற கொள்கையில் சில நாடுகள் இறங்கலாம்.

பேச்சுகளைச் செயல்படுத்துவதில் ஏபெக் - ஆசியான் நாடுகள் கடுமையான சோதனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எது எப்படியிருந்தாலும் பொருளியல் சூறாவளியில் சுழற்றி எடுக்கப்பட்ட உலகம், இனிமேல் புதிய வட்டத்தில் சுற்றத் தொடங்கும். புதிய உலக அமைப்பில், புதிய திறன்கள், புதிய வேலைகள், புதிய போட்டிகள், சவால்களுக்கு மக்கள் தயாராக வேண்டும்.

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768