|
இரக்கவாளர்களின்
உடைகள்
அகதிகளுக்குக்
குடிசைகள் கட்டினர்.
அழுக்கேறிய ஒற்றை
ஆடைக்குப் பதிலாக
இரக்கவாளர்களின்
உடைகளைத் துவைத்து
அணிவித்தனர்.
அரிசி,பருப்பு,சீனி
மற்றும் மாவும்
மூடைகளாக முதுகுகளில்
ஏற்றித்
தணலாய் கிடக்கும்
வயிறுகளைக் கஞ்சியால்
கழுவ
நிவாரணந் தந்தனர்.
மேலுஞ் சில
ரூபாய்களைப் பொத்திக்
கொடுத்துப்
புகைப்படங்களும்
பிடித்தனர்.
உழுத நிலத்தைக் கறவை
மாடுகளை
குளத்து மீன்களை
குடியிருந்த துண்டு
நிலத்தைக்
குண்டுகள் கொட்டிக்
குலைத்து
தின்ற சோற்றைத்
தட்டிக் கொட்டி
வரிசையாக நிறுத்தி
வள்ளல்களாய்
நிவாரணங்கள்
வழங்குதலில்
தீர்ந்தது தீர்வு.
மனிதர்களை
விலங்குகளை
முக்கால் உயிருடன்
மணலள்ளி மூடி
தப்பியோடுகையில்
முதுகிற் சுடுபட்டு
தண்ணீரிற் செத்துக்
குவிந்த சாம்பலில்
கொட்டுகின்றனர்
தங்கள் இரக்கங்களை.
பிணக்காட்டிற்
செத்துக்கிடந்த
பிள்ளைகளை
பெற்றவரை
துணையை
அயலவரை
நீள் வரிசைகளில்
நின்று கேட்கின்றனர்.
எந்த நிவாரணத்தில்
வழங்குவீர்?
|
|