இதழ் 12
டிசம்பர் 2009
  கார்ட்டூன் வரைபவனின் கதை
ம.நவீன்
 
     
  பத்தி:

டடவாவும் ஈ ஷந்தியனும்

அகிலன்

குருநாதர் கும்பமுனியின் பொன் வாக்கும் கலைந்ததொரு கனவும்
சீ. முத்துசாமி


Bye… Bye
தோழி

மலர்ந்தது ஈழம்!
அ. ரெங்கசாமி

கட்டுரை:

உல‌கில் புதிய‌ வ‌ழித்த‌ட‌ம் - ஏபெக் மாநாடு : ஒரு பார்வை
கெ.எல்.

மக்கள் எவ்வழியோ அவ்வழியே அரசும்
நெடுவை தவத்திருமணி

ஒரு தேசாந்திரியின் யாத்திரையில்
முனைவர் M.S ஸ்ரீலக்ஷ்மி

சிறுகதை:

அவள் - நான் - அவர்கள்
மா. சண்முகசிவா


கருப்பண்ணன்
சு. யுவராஜன்

ராதா: எண் 7, இருபத்து நான்காவது மாடி
முனிஸ்வரன்

உற்றுழி
கமலாதேவி அரவிந்தன்

கார்ட்டூன் வரைபவனின் கதை
ம. நவீன்

நீலக்கடல் மீது பாவும் நீலகண்டப் பறவைகள்!
கோ. முனியாண்டி

சிகப்பு விளக்கு
விக்னேஸ் பாபு

தொடர்:


செம்புழுதி மழைச்சாரலில் கரைந்துருகும் காலம் ...9
சீ. முத்துசாமி

பரதேசியின் நாட்குறிப்புகள் ...5
மஹாத்மன்


எனது நங்கூரங்கள் ...5
இளைய அப்துல்லாஹ்

கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...3


எம். ரிஷான் ஷெரீப்


தீபச்செல்வன்

தர்மினி

ஏ.தேவராஜன்

செல்வராஜ் ஜெகதீசன்

பதிவு:

"நா கோவிந்தசாமி எனும் படைப்பாளி"
புஷ்பலதா கதிரவேலு

குரு அரவிந்தனின் நூல், ஒலிவட்டு வெளியீட்டு விழா
மணிமாலா

இதழ் அறிமுகம்:

மரங்கொத்தி
மன்னார் அமுதன்

நேர்காணல்
பவுத்த அய்யனார்

புத்தகப்பார்வை:

குரு அரவிந்தனின் நீர்மூழ்கி நீரில் மூழ்கி... (குறுநாவல் தொகுதி)
முனைவர் கௌசல்யா சுப்பிரமணியன்
     
     
 

அப்போது நான் ஒன்றும் பேசவில்லை. சில நிமிட மௌனத்திற்குப் பின் தான் அப்பாவிடம் கூறினேன். ராஜா, அப்பாவின் தாய்மாமன். எல்லா மரணங்களும் கொடுக்கும் நிசப்தத்தை நாங்களும் கடைப்பிடித்தோம். அது அவரைப்பற்றி சில தருணங்களை அசை போடுவதற்கும் பெரிய ஓலத்திற்கான சக்தியைச் சேகரிப்பதற்கும் மரணத்தை ஏற்றுக்கொள்வதற்கும் தேவைப்பட்டது. அம்மா, அவர் விரும்பி சாப்பிடும் கீரை குழம்பு பற்றி பேச ஆரம்பித்து விட்டாள். அவர் ஐந்து வகையான கீரையை ஒன்றாகப் போட்டு கடைந்து சாப்பிட ஆசைப்பட்டதாகவும் இதுவரை தன்னால் மூன்று கீரை போட்டுதான் குழம்பு வைக்க முடிந்ததெனவும் வருந்தினாள். சில நிமிட தேம்புதலுக்குப்பின் அந்த இரண்டு கீரை கிடைக்காமல் போன சந்தர்ப்பங்களையும் கீரை கிடைக்காமல் செய்த இந்த நகர வாழ்வையும் நொந்துகொண்டாள். புலம்பல் நின்றபோது எட்டிப்பார்த்தேன். அன்றைக்கு வைத்த குழம்பை உள்ளங்கையில் சொட்டுவிட்டு உப்பு பார்த்தாள்.

அப்பா காலை மட்டும் வேகமாக ஆட்டிக்கொண்டிருந்தார். அப்படியென்றால் அவர் ஏதோ யோசனையில் இருக்கிறார் எனப் பொருள். அப்பாவின் கால்களுக்கு ஒரு மொழி இருந்தது. காலை குறுக்கலாகவிட்டு முட்டியை மட்டும் ஆட்டினால் ஆழ்ந்து சிந்திக்கிறார் என பொருள். நேராக நீட்டி அடிப்பகுதியை மட்டும் ஆட்டினால் கோபம் என பொருள். அம்மா அதில் கிளைவிட்டு பிரிந்து செல்லும் உட்பிரிவுகளின் தன்மைகளையும் நன்கு அறிந்து வைத்திருந்தாள். அது ஆடும் வேகத்தைப் பொருத்தும் சாயும் திக்கை வைத்துக்கூட அப்பாவின் மன நிலையை கணிக்கக் கூடியவளாக இருந்தாள். நான் உணர்ச்சியற்று அப்பாவின் முகத்தையும் காலையும் பார்த்த வண்ணம் இருந்தேன். கால் ஆட்டுவதை ஒரு நிமிடம் நிறுத்திவிட்டு, 'ரெண்டு மணிக்கு கிளம்பலாம்' என்றார்.

தாமதமாகப் போனாலும் ராஜா கோபித்துக் கொள்ள மாட்டார் எனத் தோன்றியது. குறைந்த பட்சம் இரண்டு மணி நேரமும் அதிக பட்சம் ஐந்து மணி நேரமும் நான் அவருக்குக்காகக் காத்திருந்ததுண்டு. சில மீட்டர் தொலைவில் நான் நிற்பதைப் பார்த்தாலும் எந்த அவசரமும் இல்லாமல் நிதானமாக அவர் சிவப்பு நிற 'கஞ்சில்' கார் என் அருகில் வந்து நிற்கும். என்னை காரில் ஏற்றியவுடன் 'கெ.எல் ரோட்டை நம்பி டைம மட்டும் ஃபிக்ஸ் பண்ணக்கூடாது' என்பார். இதற்கு முன்பு, தான் காக்க வைத்த நண்பர்களின் கோபங்களைச் சொல்வார். கொஞ்ச நேர சுவாரசிய பேச்சுக்குப்பிறகுதான் சில நிமிடத்திற்கு முன் நான் அவர் மீது கடுப்பில் இருந்தது நினைவுக்கு வரும். அதற்கு எந்தச்சலுகையும் தரவிடாமல் உரையாடல் பல தளங்களைச் சென்றடைந்திருக்கும். அவசரப்படும் எல்லா கார்களுக்கும் முன்னே செல்ல வாய்ப்பளித்துவிட்டு, நிதானம் தவறாத வேகத்தில் ராஜா காரை நகர்த்தி செல்வார். நெரிசலில் நகர்ந்து கொண்டிருக்கும் காரை ஓர் ஆமை ஏளனமாகப் பார்த்துவிட்டு தாண்டிச்செல்லும் கார்ட்டூனை முன்பொரு சமயம் கோலாலம்பூர் வளர்ச்சியை கிண்டல் செய்வதற்காக வரைந்ததை ராஜா பலதரம் சொல்லி சிரித்ததுண்டு.

பேனர் வரைவதில் ஏற்படும் சிரமங்கள் தொடர்பில்தான் பெரும்பாலும் ராஜாவுடனான உரையாடல்கள் முடிந்துள்ளன. பெக்கெலிலிங் மண்டபத்தில் பொறுப்பாளராக இருந்தபோது தனக்கு இருந்த சுதந்திரம் கம்போக் பண்டான் மண்டபத்தில் கிடைப்பதில்லை என்றும் பேனர் வரைய துணியை விரித்ததும் தனது மேலாளர் மோப்பம் பிடித்து வந்துவிடுவதாகவும் அவர் நொந்துகொண்ட நேரங்கள் அநேகம். அதைவிட ஈராயிரத்தாண்டு தொடக்கத்தில் மிக வேகமாக வளர்ந்து கொண்டிருந்த டிஜிட்டல் முறையிலான பேனர் தயாரிப்பு ராஜாவை தூக்கம் இழக்க செய்தது. கணினியில் வடிவமைத்து ஒரே நாளில் கெட்டியான பிளாஸ்டிக் பரப்பில் உருவாகும் பேனர் பலரையும் கவர்ந்து, ஓவியர்களை வாடிக்கையாளர்கள் மறக்கடிக்க வைத்திருந்த காலம் அது.

மிஞ்சி இருக்கும் ஒரு சில வாடிக்கையாளர்களையாவது தக்கவைத்துக் கொள்ள பேனர் வரைவதை தீவிரப்படுத்தியும் கொஞ்சம் கூடுதலாகவே அழகுபடுத்தியும் விலையைக் குறைத்தும் பார்த்தார். அவர் சேவையை சில பத்திரிகை நண்பர்களும் எழுத்தாளர்களும் இலவசமாகப் பெறவே முன்வந்தனர்.

வர்ணங்களும் துணியும் வேலையற்று கிடந்த நேரத்திலெல்லாம் ராஜா எழுத்துகளை வரைவதை நிறுத்தவில்லை. தமிழ் எழுத்துகளுக்குத் தனது வசதிக்கு ஏற்ப உருவம் கொடுத்திருந்தார். ஓரிரு முறை எனது பெயரையும் வெவ்வேறு மாதிரி எழுதிப்பார்த்து வர்ணச்சாய வாடை தீரும் முன்னர் கொடுத்துள்ளார். அந்தப்பெயர் பதித்தத் துணியை இப்போது தடவி பார்த்தாலும் இறுதி காலங்களில் ராஜாவின் பேனர்கள் கேட்பாரற்று கிடந்தது நினைவுக்கு வரும்.

ஓவியராக இல்லாமல், நான் ராஜாவை கார்ட்டூனிஸ்டாகத்தான் அடையாளம் கண்டிருந்தேன். வேட்டி அணிந்த இரண்டு தொப்பை தள்ளிய நபர்கள் வேடிக்கையாக அவ்வப்போது ராஜாவால் பேச வைக்கப்படுவார்கள். இருவர் தோளிலும் துண்டு இருக்கும். இவர்கள் அரசியல் வாதிகளாகவும், அரிதாரம் அணிந்த அரசர்களாகவும், திருடர்களாகவும், அப்பாவித் தந்தைகளாகவும், பாவப்பட்ட கணவர்களாகவும் வெவ்வேறு ரூபம் எடுத்து இரண்டு வரிகளில் ஏதாவது பேசி சிரிக்க வைத்துச் செல்வார்கள். ஒரு முறை ராஜாவிடம், அவர் கார்ட்டூன்களில் வரும் கதாபாத்திரங்கள் பழைய சிகை அலங்காரத்துடனும் பழைய பாணியிலான உடைகளுடனும் எண்பதாம் ஆண்டுகளை நினைவு படுத்துகின்றன என்றேன். 'நான் பழைய ஆள்... அதனால்தான்' என சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

ராஜா தன்னை நவீனப்படுத்த விரும்பாமல் இருந்தார். அவர் கார்ட்டூன் கதாபாத்திரங்கள் அவரைப்போலவே மென்மையான குரலில் பேசின. தனது நகைச்சுவை மெல்லியதொரு புன்னகையை ஏற்படுத்தினால் போதுமென ராஜா முடிவெடுத்திருக்கக்கூடும். ராஜா உருவாக்கிய பாத்திரங்கள் ஈராயிரத்து இரண்டில்கூட வேட்டி சட்டை சகிதமாய் எம்.ஜி.ஆர். மீசையுடன் சந்தையிலும் பூங்காவிலும் தோட்டத்திலும் நடமாடியே வந்தன. அவரது 'இளைஞர்கள்' கூட ஜெமினி கணேசன் பாடல்களையே பாடினர். அவர்களால் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்பட்டதில்லை. சிறை, ஐ.எஸ்.ஏ, போராட்டம், கூச்சல், கண்ணீர் அவர்கள் அறியாதது. அவர்கள் வயிற்றில் யாரும் கத்தியால் குத்தினாலும் 'இது கத்தி செருகும் உறையில்லை' என மென்மையாகக் கூறி கத்தியை வெளியே எடுத்து தரும் நல்லவர்கள். ஆனாலும் அவருடனான உரையாடல்களில் நகைச்சுவைக்குரியவர்களாக சக எழுத்தாளர்கள் அடிக்கடி வந்துவிடுவதுண்டு. நான் கொண்டாடிய எழுத்தாளர்கள் போதையில் என்னென்ன உளருவார்கள் என்பதை ராஜாவின் மென்மையான உச்சரிப்பில் கேட்பது சுவாரசியமானது. பணம் தராமல் உழைப்பைச் சுரண்டும் பத்திரிகை ஆசிரியர்களை விட்டு விலக முடியாதபடிக்கு ஏதோ ஒரு போதை அவரை ஏமாற்றியே வைத்திருந்ததை அவர் உணர்ந்தே இருந்தார்.

ராஜா தூக்குப்போட்டுக்கொள்ளும் முன்பு இந்தப் பத்திரிகை ஆசியர்களையும் அவர்களின் மாயத் தோற்றத்தையும் புழுத்துப்போன அவர்களின் சமூக உணர்வையும் நினைத்து ஒரு தரம் காரி துப்பியிருக்கலாம். அவரால் அதிக பட்சம் அதைதான் செய்ய முடிந்திருக்கும். இன்னும் சொல்லப்போனால் அந்த நேரத்தில் ஏதாவது பத்திரிகை ஆசிரியர் தனது புகழைக் கொண்டாட நடத்தும் வாசகர் விழாவுக்கு பேனர் வரைய கேட்டிருந்தால் ஓரிரு நாட்கள் தன் தற்கொலை முயற்சியைத் தள்ளி வைத்திருக்கவும் கூடும்.

அவருக்கு இறுதிவரை இந்தச்சமூகத்தின் மீது நம்பிக்கையும் அவநம்பிக்கையும் ஒன்றோடொன்று முட்டி மோதி மேலெழுந்த வண்ணம் இருந்தன. மற்றவர்கள் சொல்வது போலவோ ராஜாவின் தற்கொலைக்கு முன்பான கடிதம் சொல்வது போலவோ எனக்கு அவர் நீரிழிவு நோயின் கொடுமையால் தற்கொலை செய்து கொண்டார் எனத் தோன்றவில்லை. இந்தச் சமூகத்தின் மீது இறுதித் துளி நம்பிக்கையும் காய்ந்த பின்பே அவர் தற்கொலையைப்பற்றி சிந்தித்திருக்க வேண்டும்.

ஆரம்பத்தில் நான் இதை தற்கொலை என்றே நம்பவில்லை. அதற்கான காரணங்களை உங்களிடம் விளக்கியாக வேண்டும். இது ஓவியர் ராஜாவின் வாழ்வில் மர்மமான பகுதி. ஒரு வித திகில் கொடுக்கும் பாணியில்தான் ராஜா எனக்கு அந்தப் புகைப்படங்களைக் காட்டினார். கம்போங் பண்டான் நகராண்மைக் கழக மண்டபத்தில் பணி புரிவதற்கு முன் அவர் பணியாற்றிய ஒரு நகராண்மைக் கழக மண்டபத்தில் (கவனிக்க... இங்கு நான் அந்த மண்டபத்தின் பெயரைக் குறிப்பிடாதது என் பாதுகாப்புக்கருதிதான்) சில அந்நிய இனத்தவர் செய்த ஊழல்களை ராஜா படம்பிடித்து வைத்திருந்தார்.

மண்டபத்திற்கு அதிகமான கட்டணம் வசூலித்து பொய்கணக்கு எழுதுவது, மண்படத்தின் உடமைகளைச் சுயத் தேவைக்குப் பயன்படுத்துவது, மண்டபத்தில் சில தகாத நடவடிக்கைகளில் ஈடுபடுவது, என இன்னும் நிறைய 'வது'களை அவர் பட்டியல் போட்டு, கணக்கு புத்தகத்தைப் படி எடுத்து என்னிடம் காட்டியபோது 'இதெல்லாம் உங்களுக்கு எதுக்கு' என்றே முதலில் வினவினேன். அமைதியே உருவான அவருள் குடிகொண்டிருந்த துணிச்சல் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அப்போதெல்லாம் ராஜா, விஜயகாந்த் படங்களை அதிகம் பார்த்திருக்க வேண்டும். அவர் யார் சொல்லியும் கேட்பவராய் தெரியவில்லை. முறையான கடிதத்தோடு அனைத்தையும் தனது மேலதிகாரிக்கு அனுப்பி வைத்தார். சில வாரங்களிலேயே பணியிட மாற்றக் கடிதம் ராஜாவுக்கு பத்திரமாக வந்து சேர்ந்தது. வசிப்பிடத்திலிருந்து அதிக தூரம் பயணிக்க வேண்டிய நிலையைவிட நேர்மைக்கும் நீதிக்கும் மதிப்பில்லை என்ற உண்மை ராஜாவை அதிகம் வதைத்தது. தான் வேலை மாற்றம் காணும் இறுதிநாள் அந்த ஊழல் பேர்வழிகள் 'விரைவில் உன்னை பழி தீர்ப்போம்' என மிரட்டியதை எந்த உணர்ச்சியுமற்று ராஜா அடிக்கடி சொன்னதுண்டு.

ஓவியர் ராஜா இறந்த அன்று அந்த அந்நிய தொழிலாளர்களின் மிரட்டல்தான் எனக்கு திரும்பத் திரும்ப நினைவுக்கு வந்தது.

ராஜா, மண்டபத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார். அந்த மூன்று ஊழல் பேர்வழிகள் இன்னும் சில நண்பர்களோடு வருகின்றனர். ராஜாவை மிரட்டுகின்றனர். அவர் குடும்பத்தை அழிக்கப்போவதாகக் கூறுகின்றனர். ராஜாவின் தைரியத்தைக் கேலிசெய்து ஒருவன் தனது இடது கையை உருண்டையாக மடித்து வலது கையால் இடது கை சந்தில் காற்றலுத்ததோடு அடிக்கிறான். சத்தம் 'டொப்' என கேட்கிறது. நோயின் கொடுமையில் ராஜா பலவீனமாகிறார். அவர்களிடம் மன்றாடுகிறார். அவர்கள் ராஜாவை சுயமாகத் தூக்குப்போட சொல்கின்றனர். அவர்களின் விழிகள் போதையில் சிவந்திருக்கின்றன. தனது கார்ட்டூன் முடிவு போல இறுதியில் ஒரு சின்ன திருப்பத்தில் அத்தனை சம்பவங்களும் நகைச்சுவையாகிவிடலாம் என்ற நம்பிக்கை ராஜாவுக்கு இறுதிவரை இருக்கிறது. ராஜா பிளாஸ்டிக் கயிறை எடுத்து கழுத்தில் மாட்டுகிறார். நாற்காலி தள்ளிவிடப்படுகிறது. கயிறு கழுத்தை இறுக்குகிறது. வலி கொடுமையில் ராஜா தனது கைகளை கயிற்றின் இடையில் நுழைக்கிறார். ராஜாவுக்கு முன் இருவர் வேட்டியும் தோளில் துண்டுடனும் தோன்றுகின்றனர்.

'ஏய் சோமு... ஓவியர் ராஜா என்ன செய்யுறாரு?'

'புதுசா ஊஞ்சல் ஆட முயற்சி செய்யுறார் கோமு'.

இந்த வகையில் ராஜாவின் மரணத்தை சிந்தித்துப் பார்த்தபோது ராஜா இறுதியாக 'என் மரணத்துக்கு யாரும் காரணமல்ல...' எனத் தொடங்கும் கடிதத்தை கைப்பட எழுதி வைத்தது யூகத்திற்குச் சரியாகப் பொருந்தாமல் இடித்தது. நிச்சயமாக ராஜா எழுதிய தமிழ் கடிதம் ஊழல் பேர்வழிகளின் கட்டளைக்குப் பணிந்ததாக இருக்காது எனப் பட்டபோது கற்பனையை அழித்துவிட்டேன்.

ராஜா உண்மையில் தற்கொலைதான் செய்து கொண்டிருந்தார். ராஜாவின் தற்கொலை எங்கிருந்து தொடங்கியது என மனம் யோசிக்கத் தொடங்கியது.

நல்ல கார்டூனிஸ்டான அவர், தனது இறுதி காலத்தில் தன்னையே ஒரு கார்ட்டூனாக மாற்றிக்கொண்ட போதுதான் அவர் அந்த அபாயகரத்தை எதிர் நோக்கியிருக்க வேண்டும். கூரிய மூக்கும் கோதிய முடியும் ராஜா ரஜினியாக வாய்ப்பு கொடுத்திருந்தது. கருப்பு கண்ணாடி சகிதமாய் பொது நிகழ்ச்சிகளில் பவனி வந்ததும் ஒரு வாசகர் விழாவில் ரஜினி பாட்டுக்கு நகைச்சுவையாக பாவனை பிடித்ததும் அவர் மன அழுத்தத்தின் வேறொரு ரூபமாகவே எனக்கு கட்சியளித்தது. ராஜா எனும் அடையாளத்தை அவரே அறியாமல் அழித்தப் பகுதி. தான் விரும்பாத விஷயங்களையே ராஜா செய்யத் தொடங்கியிருந்தார். தான் அதிகம் நேசித்த ஓவியத்தை மறந்து, கார்ட்டூனை மறந்து, எழுத்துருவை மறந்து, அமைதியை மறந்து, நிசப்தத்தை மறந்து, ராஜா ஒட்டுதாடி மீசையுடன் பவனி வந்த காலத்தில் நான் அவரைச் சந்திப்பதை முற்றிலுமாக நிறுத்தியிருந்தேன். அங்கீகாரத்திற்கு ஆசைப்பட்ட தனது ஏக்கப்பார்வை வெளித்தெரியாமல் ராஜா அணிந்திருந்த முகமூடி வசீகரம் இல்லாதது.

ராஜா ஏதோ ஒரு வகையிலாவது இவ்வுலகுக்கு மீண்டும் தன்னை நிரூபிக்க நினைத்தார். அதற்கு அவருக்கு ரஜினி தேவைப்பட்டது ஆச்சரியமான முடிவாக இருந்தது. ரஜினியின் பாடல் முடிவதற்குள் ஒரு பெண்ணின் உருவத்தை வரைந்து சபையோர்களிடம் கைதட்டல் பெற துணிந்தார். விரலை சுழற்றி சுழற்றி வசனமெல்லாம் பேசினார். 'புஷ்... புஷ்..' என காற்றை வாயில் விட்டு சத்தம் எழுப்பினார். தானே முன் வந்து தானே வசனம் பேசி போகும் இலவச ரஜினியை அதிகமே விரும்பின வாசகர் விழாக்களும் பத்திரிகையாளர் கூட்டங்களும். ராஜாவின் சாகசத்தை நிகழ்வின் ஒரு பகுதியாகவே நிகழ்ச்சி நிரலில் இணைந்துக்கொண்டன. ராஜாவைச் சுற்றியிருந்த ஆரவாரங்கள் ஓயும் வரை நான் காத்திருந்தேன். அவரிடம் கோபமாகப் பேச சொற்களைச் சேகரித்து வைத்திருந்தேன்.

இறுதியில் ராஜா தனக்கே உரிய அமைதியில்தான் படுத்திருந்தார். வாழ்வு முழுதும் அவர் உருவாக்கிய கார்ட்டூன் கதாப்பாத்திரங்கள் கூட்ட நெரிசலில் ஓடியபடியும் நகைச்சுவை சொல்லியபடியும் சிரித்தவாரும் இருந்தன.

"ஏய் கோமு ராஜாவை ஏன் எதுக்குள்ளவோ வைத்து மூடுறாங்க?"

"அது ராஜாவோட சின்ன வீடு ராமு."

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768