இதழ் 12
டிசம்பர் 2009
  பரதேசியின் நாட்குறிப்புகள் ...5
மஹாத்மன்
 
     
  பத்தி:

டடவாவும் ஈ ஷந்தியனும்

அகிலன்

குருநாதர் கும்பமுனியின் பொன் வாக்கும் கலைந்ததொரு கனவும்
சீ. முத்துசாமி


Bye… Bye
தோழி

மலர்ந்தது ஈழம்!
அ. ரெங்கசாமி

கட்டுரை:

உல‌கில் புதிய‌ வ‌ழித்த‌ட‌ம் - ஏபெக் மாநாடு : ஒரு பார்வை
கெ.எல்.

மக்கள் எவ்வழியோ அவ்வழியே அரசும்
நெடுவை தவத்திருமணி

ஒரு தேசாந்திரியின் யாத்திரையில்
முனைவர் M.S ஸ்ரீலக்ஷ்மி

சிறுகதை:

அவள் - நான் - அவர்கள்
மா. சண்முகசிவா


கருப்பண்ணன்
சு. யுவராஜன்

ராதா: எண் 7, இருபத்து நான்காவது மாடி
முனிஸ்வரன்

உற்றுழி
கமலாதேவி அரவிந்தன்

கார்ட்டூன் வரைபவனின் கதை
ம. நவீன்

நீலக்கடல் மீது பாவும் நீலகண்டப் பறவைகள்!
கோ. முனியாண்டி

சிகப்பு விளக்கு
விக்னேஸ் பாபு

தொடர்:


செம்புழுதி மழைச்சாரலில் கரைந்துருகும் காலம் ...9
சீ. முத்துசாமி

பரதேசியின் நாட்குறிப்புகள் ...5
மஹாத்மன்


எனது நங்கூரங்கள் ...5
இளைய அப்துல்லாஹ்

கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...3


எம். ரிஷான் ஷெரீப்


தீபச்செல்வன்

தர்மினி

ஏ.தேவராஜன்

செல்வராஜ் ஜெகதீசன்

பதிவு:

"நா கோவிந்தசாமி எனும் படைப்பாளி"
புஷ்பலதா கதிரவேலு

குரு அரவிந்தனின் நூல், ஒலிவட்டு வெளியீட்டு விழா
மணிமாலா

இதழ் அறிமுகம்:

மரங்கொத்தி
மன்னார் அமுதன்

நேர்காணல்
பவுத்த அய்யனார்

புத்தகப்பார்வை:

குரு அரவிந்தனின் நீர்மூழ்கி நீரில் மூழ்கி... (குறுநாவல் தொகுதி)
முனைவர் கௌசல்யா சுப்பிரமணியன்
     
     
 

பாதுகாவலனாக வெவ்வேறு கால கட்டங்களின் திரிதல்கள்:

மிகவும் சுலபமாக கேட்ட மாத்திரத்தில் கிடைத்த வேலைதான் பாதுகாவலர் பணி. முதன் முதலாக அனுப்பப்பட்ட ‘போஸ்ட்’ (வேலையிடம்) ஞாபகமில்லை. எங்கும் நிலைத்து வேலை செய்ததில்லை. இடைவெளி விட்டு, இடைவெளி விட்டு பாதுகாவலர் பணிதான் என்னைத் தேடி வந்ததும் நான் தேடிப் போனதும். இந்தப் பணியில் எனக்கு கிடைத்த அனுபவங்கள் வித்தியாசமானவை. ருசிகரமானவை. சம்பவங்கள் மறக்க முடியாதவை.

தனியார் பாதுகாவல் நிறுவனங்கள் முதன் முதலாக எனக்குத் தந்த சீருடை மஞ்சள் நிற சட்டை. எனக்கென்று தங்கும் இடம் இல்லாததால் பாதுகாவலர் தங்கும் விடுதியில் இருக்க நேர்ந்தது. ஒவ்வொரு நாளிலும் எவருடைய பொருளோ காணாமல் போகும் சம்பவம் நடக்கும். பகலில் வேலை செய்தவர்கள் இரவிலும், இரவில் வேலை செய்தவர்கள் பகலிலும் விடுதியில் படுத்துறங்கி எழுவார்கள். கட்டிலோ மெத்தையோ எவருக்கும் சொந்தம் கிடையாது. பந்திக்கு முந்தி போல மெத்தைக்கு முந்திச் செல்வார்கள். நன்றாக அயர்ந்து தூங்குபவர்களுக்கு மூட்டைப்பூச்சி தொல்லை தெரியாது. மெத்தைகளும் தலையணைகளும் ஒரு வித துர்வாடைக் கொடுக்கும். இதனால் தரையே மேல் என்றெண்ணி அட்டையை போட்டு படுப்பவர்களும் உண்டு. தங்கும் விடுதிக்கென்று பராமரிப்பாளரோ மேற்பார்வையாளரோ இல்லாததால் எங்கும் அலங்கோலமாகவும் அசுத்தமாகவும் இருக்கும். கழிப்பறையோடிருக்கும் குளியலறையை கேட்கவே வேண்டாம். எங்கும் கருமஞ்சள் கறைகள். வாளிகளில் நாள்கணக்கில் ஊறிப்போய் கிடக்கும் துணிகள். கேட்டால் சண்டை தான் வரும்.

இத்தனியார் நிறுவனங்களின் கீழ் பாதுகாவலர்களாக இருப்பவர்கள் பெரும்பாலும் முன்னாள் கைதிகள். போலீசாரால் தேடப்பட்டு வருபவர்கள் இருப்பது கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. நிறுவனத்தைப் பொறுத்தவரை வேலையாட்கள் வேண்டும். தேடப்படுபவர்களைப் பொறுத்தவரை ஒரு புகலிடம் வேண்டும்.

நிறுவன அதிகாரிகள் அடையாளக் கார்டை நகல் எடுத்து வைத்துக் கொள்வார்கள். ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் போலீஸ் புகார் கொடுப்பதற்கு இது உதவும். உயர் ரக அடுக்குமாடிகள் தோன்றுவதற்கு முன்பு ஒரு பாதுகாவலரின் சம்பளம் ரிங்கிட் 500 - 700 வரைதான். இப்போதும் கூட இதே சம்பளத்தில் உள்ள பாதுகாவலர்கள் உண்டு. எனக்கு முதன் முதலில் தரப்பட்ட சம்பளம் ரிங்கிட் 750 தான். மலாய் மொழி எழுதப் படிக்கத் தெரிந்ததால் அச்சம்பளம் வழங்கப்பட்டது. வித விதமான அடுக்குமாடிகள் வந்தவுடன் சம்பளம் ரிங்கிட் 850 வரை வழங்கப்படுகின்றது. இப்போது ஆங்கிலமும் மலாயும் சரளமாக எழுதவும் படிக்கவும் தெரிந்தால் ரிங்கிட் 1,200 வரை கொடுக்கிறார்கள். பல நிறுவனங்கள் EPF / SOCSO-வை சம்பளத்திலிருந்து வெட்டி, நிறுவனத்தின் பங்காக கணக்கில் சேர்த்துவிடுகிறது என்று சொல்லப்பட்டாலும் (சம்பள விவரத் தாளில் இருந்தாலும்) உண்மையில் பாதுகாவலரின் பெயரில் சேர்க்காமல் ஏமாற்றும் நிறுவனங்களே இங்கு ஏராளம். கூடுதல் நேர வேலையின் கணக்கு விவரம் அநியாயமாக இருக்கும். எழுநூறு வெள்ளி சம்பளம் என்றாலும் அடிப்படை சம்பளம் இருநூற்றைம்பது என்று இருக்கும். அந்த அடிப்படை சம்பளத்தின்படி வகுத்து கூடுதல் வேலைக்கு ஒரு மணி நேரத்திற்கு கணக்கை அமைத்து வைத்துள்ளார்கள். படித்தவன் எப்படி பாதுகாவலர் வேலைக்கு வருவான்?

வேலையாட்கள் பற்றாக்குறை காரணமாக பகலில் வேலை செய்தவனே இரவிலும் வேலைப் பார்க்கும்படியான நிர்ப்பந்த சூழல் ஏற்படும். எல்லாவற்றையும் இழுத்து மூடிவிட்டு நள்ளிரவுக்குப் பின் அவன் கண்ணையர்வது நியாயமாகவே படும். அந்த நேரத்தில் கொள்ளையன் வந்தால் அது அவனின் துரதிஷ்டம். கூடுதல் நேர வேலையை (24 மணி நேரம் / 36 மணி நேரம்) பாதுகாவலர்களே மணமுவந்து ஏற்றுக் கொள்வோரை விட நிறுவன அதிகாரியே பாதுகாவலர்களை கட்டாயப்படுத்துவதுதான் உண்மை. ஒரு பகல் வேலையின் சம்பளம் 25 ரிங்கிட் என்றால் அவன் தொடர்ந்து இரவில் வேலை செய்தால் 15 ரிங்கிட் சம்பளமே கொடுக்கப்படும். இது அநியாயமில்லையா?

வாரத்தில் ஒரு நாள் விடுமுறை என்று ஒன்றில்லை பாதுகாவலர் வேலையில். அரசாங்கம் வழங்கிய பொதுவிடுமுறைகளுக்கு இரட்டிப்பு சம்பளம் என்பதே கிடையாது. ஓரிரு பாதுகாவலர் நிறுவனங்கள் மட்டும் அரசாங்க விதிமுறைகளை பின்பற்றுவதுண்டு. போதைப் பித்தர்களையும் முன்னாள் கைதிகளையும் இவை வேலைக்கு சேர்த்துக் கொள்வதில்லை.

பாதுகாவல் பணியை ‘ஜாகா வேலை’ என்று சொல்வதுண்டு. சோம்பல் தரும் வேலை. வேலையிடம் (போஸ்ட்) பொறுத்து இந்தச் சோம்பல் அசதியாவதுமுண்டு. நின்றுக் கொண்டே இருக்க வேண்டும் அல்லது ஒரு மணி நேரத்திற்கொருமுறை சாவி (clocking) கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் (12 முறை).

அநேக ஜாகா போஸ்ட்களில் கழிப்பறை இருக்காது. மின் விசிறி இருக்காது. உட்கார ஒரு நல்ல நாற்காலி இருக்காது. அது இருந்தால் இது இருக்காது; இது இருந்தால் அது இருக்காது. இரவில் கொசுவர்த்திகளின் புகைக்கு கொசுக்கள் கொஞ்சங்கூட பயப்படாமல் இஷ்டம் போல இரத்தம் குடித்துவிட்டு மந்தகதியில் பறந்துச் செல்லும்.

இங்குள்ள அநேக தனியார் பாதுகாவல் நிறுவனங்களை பல காரணங்களுக்காக உடனே இழுத்து மூடலாம். ஆனால் முடியாத காரியம் அது. லஞ்சம் கொடுத்தும் வாங்கியும் பழகிப் போய் விட்டதால் மூடப்படும் என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை. சாதாரண சிகரெட் பழக்கத்தையே விட முடியாமல் தவிக்கிற எனக்கு, ‘லஞ்சம்’ போன்ற விஷயத்தைப் புரிந்துக் கொள்ள முடிகிறது. வேரூன்றி விழுதுகள் விட்ட ஆலமரம் அது.

பெரும்பாலான பாதுகாவல் நிறுவனங்கள் ‘மூன்றாம் தரப்பு’ அதிகார வட்டத்தில்தான் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களின் லைசென்ஸ்கள் அரசாங்க அதிகாரிகள் / மந்திரிகள் தங்களுக்கு வேண்டப்பட்ட மாமனுக்கோ மச்சானுக்கோ எடுத்து கொடுத்திருக்கிறார்கள். அந்த மாமனும் மச்சானும் தங்களுக்கு நெருங்கிய தோழரிடமோ தோழியிடமோ கொடுத்து மாதா மாதம் ஒரு தொகையை வசூலித்துக் கொள்கிறார்கள். அந்தத் தோழியோ தோழரோ தங்கள் நெருங்கிய வட்டத்திலுள்ள நம்பிக்கையானவரை தேர்வு செய்து ‘வாடகை லைசென்ஸ்’ என்ற அடிப்படையில் வியாபாரம் நடத்த பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள்.

ஆக, தனக்கு மேலே மூன்று நபர்களுக்கு முழுத்தொகையிலிருந்து வெட்டி வெட்டி கொடுத்து பிறகு மிஞ்சியதைத்தான் தொழிலாளர்களுக்கு சம்பளம் சரி பார்க்கிறார்கள். தான் கொடுத்த லஞ்சத்தை சரிகட்ட தொழிலாளியின் வயிற்றில் கை வைக்கிற கொடூரம் இந்நாட்டில் அமோகமாக நடைப்பெற்று வருகின்றது.

அந்த ஒரு வாடகை லைசென்ஸை வைத்துக் கொண்டு பாதுகாவல் சேவையை (!?) நாடும் கம்பெனிகளை தேடுகிறார்கள். அதிலும் போட்டா போட்டி. வாடகை லைசென்ஸ் வைத்திருப்பவர்கள் தனக்கே வேண்டும் என்ற ஆசையில் மாதம் பத்தாயிரம் ரிங்கிட் வருமானம் வருகின்ற இடத்தில் இவர்களில் ஒருவன், “எனக்கு ஒன்பதாயிரம் போதும். ஆயிரம் நீயெடுத்துக் கொள்” என்று சொன்னால் பாதுகாவல் சேவையை நாடும் கம்பெனி இன்னொருவனை அழைத்து, “அவன் ஒன்பதாயிரம் என்கிறான். நீ என்ன சொல்கிறாய்?” என்று பேரத்தில் ஈடுபடும். தொகை குறையக் குறைய சேவைத் தரம் குறையும். சேவையின் தரம் குறையும் போது தகுதியற்ற பாதுகாவலர்களே பணியில் அமர்த்தப்படும் சூழல் ஏற்படும். அதுதான் இன்றைய அலங்கோலம்.

இந்த அலங்கோலத்தின் விளைவு என்ன தெரியுமா? இங்கே பாதுகாவலனுக்கே பாதுகாப்பு இல்லாமலிருப்பது. பத்து லட்சம் மதிப்புள்ள பொருட்களை பாதுகாப்பதற்கு கொடுக்கப்பட்ட ஒரே ஆயுதம் கைத்தடி என்ற சோட்டா. இப்படி இருந்தால் பிறகு ஏன் நடக்காது கொள்ளையும் கொலையும்? நகைக் கடைகளிலும் வங்கிகளிலும் துப்பாக்கி ஏந்தி நிற்கும் பாதுகாவலர்களே திண்டாடும் நிலையில் இங்கே தொழிற்சாலைகளைக் கேட்பானேன்?

இவையெல்லாம் புதிதாக சொல்லப்படும் விஷயங்கள் அல்ல. ‘மலேய் மெயில்’ ஆங்கில நாளேடு காலை பத்து மணிக்கு வெளி வந்துக் கொண்டிருந்த காலத்திலேயே நாட்டுக்கே அம்பலப்படுத்திய விஷயங்கள்தான். அந்த நாளேட்டின் நிருபர்கள் ‘மாறுவேஷத்தில்’ (அடையாளக் கார்டு இல்லாமலும் கூட) ஒரு தனியார் பாதுகாவல நிறுவனத்திற்குச் சென்று நேர்முக பேட்டி முடிந்து, அன்றைய இரவே எல்லோரும் வேலையில் சேர்ந்து, மூன்று நாள் அனுபவத்தை விலாவாரியாக எழுதி முதல் பக்கத்தில் கொட்டை எழுத்தில் பிரசுரித்தார்கள். அப்படி பக்கம் பக்கமாக வெளியிட்டும் அரசாங்கம் ஒன்றுமே செய்யாமல் வேறு விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசிக் கொண்டிருந்தது. கண்டுக் கொள்ளவே இல்லை. காரணம் என்னவென்றால் இப்பிரச்சனை பயங்கர சிக்கலாகிப் போனதொன்று. விசாரிக்கத் தொடங்கினால் டத்தோ - டத்தோஸ்ரீ - டான் ஸ்ரீகளுமே முன் நிற்க வேண்டி வரும். அவர்களை எப்படி விசாரிப்பது? பார்த்தார்கள். ஏதாவது செய்தாக வேண்டுமே என்ற நிர்ப்பந்தத்தில் ஒரே ஒரு காரியத்தை வெற்றிகரமாக மாற்றியமைத்தார்கள்.

அதுதான் மஞ்சள் சீருடையை (சட்டையை) அகற்றி கருநீல சீருடையும் விரும்பினால் வெள்ளை சீருடையும் அணியும்படி கட்டளையிட்டார்கள். தீர்ந்தது ஒரு பிரச்னை. சரியான - நேர்மையான மிகச் சிறந்த நடவடிக்கை.

சபாஷ் மலேசியா!

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768