|
பெரியார் சின்னப்பெண்ணாகப் பார்த்து கல்யாணம் செய்து கொண்டார் என்பதற்காக
தன்மானத்தை இழந்த தம்பிகள் தனிக் கட்சி கண்டனர். அக்கட்சியின் இன்றைய
நிலையோ அசாதரமானது. சமபந்தி போஜனத்தைக் கட்டிக் காப்பாற்றி வரும் கட்சி
அது. பந்தியிலும் சில விதிமுறைகள் உண்டு. முதலில் சாப்பிடுவது திமுக
தலைமையின் குடும்பத்தார். வேறு உறவினர்களே இல்லை என்றால் தன் காலடியையே
சுற்றி வரும் தன் மானச்சிங்களுக்கும் பந்தியில் இடம் கிடைக்கும்.
கிடைத்தவரை சாப்பிட்டுக் கொள்ளவும் அனுமதி கிடைக்கும்.
ஆசியாவிலேயே பெரும் பணக்காரர்களை கொண்ட கட்சி திமுக. டிவி, பேப்பர்,
விமானம், சினிமா, இன்னும் வெளியில் சொல்ல முடியாத அளவுக்குச் சொத்துக்கள்,
எண்ணிப் பார்க்க இயலாத அளவுக்கு காசு கொண்டது திமுக. ஒருவேளை இவர்கள்தான்
உலகப் பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருப்பார்கள் என்று கூடச்
சொல்லலாம். பின்னே ஒரு ஓட்டுக்கு இரண்டாயிரத்தை கொடுத்தால், நினைத்துப்
பாருங்கள். பில்கேட்ஸால் தலைக்கு இரண்டாயிரம் கொடுக்க முடியுமா?
உடன்பிறப்புகளை சேவகம் செய்யவும், அறிக்கைகள் கொடுக்க பெயரைக் கொடுக்கவும்,
தன்னைக் கைது செய்தால் போராட்டம் செய்யவும்தான் திமுக தலைமை பயன்படுத்திக்
கொள்ளும். தந்தை கட்சியின் தலைவர், இளைய தமயன் பொருளாளர், பேரன் கழகத்தின்
பத்திரிக்கை பொறுப்பு, மத்திய அரசில் மூத்த மகன் அமைச்சர், மகள் எம்பி,
பேரன் அமைச்சர், டிவியோ கழகப் பொறுப்பில. பேத்தி, கொள்ளுப்பேரன்கள்
விரைவில் அரசியலில் பெரிய பதவிகளில் உட்கார வைக்கப்படுவார்கள். அண்ணா
காலத்திலிருந்து உழைத்த உடன்பிறப்புகள் எல்லாம் பேரன் பேத்திகளுக்கு சலாம்
போட வேண்டியதுதான். அவர்களைப் பற்றிய ஹேஸ்யச் செய்திகளை தமிழத்தின் முன்னனி
பத்திரிக்கைகள் எழுதக்கூடும். மேலும் வெளியே தெரியாத கட்சி, அரசுப்
பதவிகளில் எல்லாம் தலைமையின் உறவினர்கள் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். மற்ற
பதவிகளுக்கு வேறு வழி இல்லாத காரணத்தால் உடன்பிறப்புகள் பலரைப் பதவிகளில்
ஒட்ட வைத்திருக்கின்றார்கள். தேவையென்றால் பதவியை விட்டு தூக்கிக் கடாசி
விடுவார்கள். கட்சியின் விதிகளை மீறிவிட்டார் என்று அறிக்கைகள் வெளிவரும்.
எவராவது தலைமையை எதிர்த்துப் பேசினால் அடுத்த நிமிடம் அவர்களின் கதி
அதோகதிதான். இம்மாதிரிக் கட்சிகளைத்தான் தேர்தல் கமிஷன் ஜனநாயக
மக்களாட்சியின் அரசியல் கட்சி என்று சொல்கின்றன. என்ன கன்றாவியோ
தெரியவில்லை. திமுகவின் கட்டமைப்பு படு ஸ்ட்ராங்கானது. குடும்ப
உறுப்பினர்களை மட்டும் கட்சியின் பொறுப்புகளுக்கு கொண்டு வந்தால் போதுமா?
ஓட்டுப் போட ஆட்கள் வேண்டுமே என்பதால், கட்சிக்கு ஓட்டுப் போட ஒரு
கூட்டத்தையும் உருவாக்க வேண்டுமென்று ஏற்கனவே வேலையே பார்க்காமல் சம்பளம்
வாங்கிக் கொண்டிருக்கும் அரசு அலுவலர்களுக்கு அதிக சம்பளமும் கொடுத்து,
புதிய சம்பளக்காரர்களையும் உருவாக்கி அவர்களைத் தன் கட்சிக்கே ஓட்டுப் போட
வைக்கவும் செய்து விட்டார் கட்சித் தலைவர். அதுவும் யார் காசில்? மக்களின்
பணத்தில் தனக்கும், தன் கட்சிக்கும் நன்மை பயக்குமாறு செய்வதில் மன்னர்,
விற்பன்னர். இதைத்தான் சிலர் அறிவியல் ஊழல் என்று சொல்லுவார்கள். நோகாமல்
நோன்பி கும்பிடுவது என்றும் சொல்லுவார்கள். ஒரே கல்லில் பல மாங்காய்
அடிப்பதில் மன்னர்கள் திமுகவினர். செய் நன்றிக் கடன் மறவாத கூட்டமாயிற்றே
நம் தமிழர் கூட்டம் ஆகையால் வேலை கொடுத்தவருக்கே ஓட்டு என்று குத்து
குத்துன்னு குத்தி தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்ளும்.
ஓட்டு மெஷினில் கள்ள ஓட்டுப் போடுவது எப்படி என்பது அரசு அலுவலர்களுக்கு
அத்துப்படி. எலக்ஷன் நடத்தும் எலக்ஷன் கமிஷன் தான் இந்தியாவிற்கே
நகைச்சுவைச் சக்கரவர்த்தியாய் இருக்கிறது. எலக்ஷன் போது கமிஷனர் அறிக்கைப்
பட்டாசுகளைக் கொளுத்திப் போடுவார். அது ஊசிப் பட்டாசையும் விடக் கேவலமானது.
எவர் கேட்கப்போகின்றார்கள்? ஒருத்தரும் கேட்கப்போவதுமில்லை. எந்த எலக்ஷன்
ரூலையும் மதிப்பதில்லை. எதற்கு எலக்ஷன் கமிஷன் என்றே தெரியவில்லை. சரி
விஷயத்துக்கு வருகிறேன்.
மேலும் ஒரு இடைச்செருகலாய் இந்தியாவிற்கே முன்மாதிரியாக இருந்த தமிழக
நிர்வாகம், மாண்புமிகு திரு கருணா நிதி அவர்களால் படுபாதாளத்துக்கு
தள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த மாண்புமிகு ஜெயலலிதா
அவர்களாலும் பின்பற்றப்பட்டு இன்றைக்கு மற்ற மா நிலத்தாரால்
கேளிக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது என்கிறார் துக்ளக்கில் திரு முருகன்
அய்யேயெஸ் அவர்கள்.
இதுவரையிலும் பொறுமையாக படித்து வந்த வா சகா, இவ்விடத்தில் உனக்கு ஒரு
பிழைக்கும் வழியினைச் சொல்லித்தருகிறேன். கேட்டு புத்திசாலித்தனமாக
பிழைத்துக்கொள்.
பணப் பசை உள்ள இடத்தில் ஒட்டிக் கொள்வதுதான் புத்திசாலித்தனம்.
இப்போதைக்குப் பசையான இடம் திமுக. பேப்பரை எடுங்கள். பறக்க விடுங்கள்
உங்கள் கற்பனைக் குதிரையை. ஆட்சியிலிருக்கும் கட்சித் தலைவரைப் பாராட்டி
எழுதிக் குவியுங்கள் கவிதைகளை. கலைமாமணி விருதும், சிறந்த தமிழன்,
புரட்சிக் கவிக்கோர் கவி என்ற பட்டங்களும் சில வாரிய பதவிகள் கூட
கிடைக்கும் சந்தர்ப்பம் இருக்கிறது. அதுவுமின்றி சினிமாவில் ஹீரோவாக நடிக்க
கூட சான்ஸ் கிடைக்கலாம். அப்படித்தானே ஒரு கொத்தகக் கவிஞர் ஹீரோ ஆனார்.
கவிதை எப்படி இருக்க வேண்டுமென்ற ஒரு சாம்பிள் தருகிறேன்.
தலைவர் அவர்
தங்கத் தமிழர் அவர்
ஆள்காட்டி விரலசைத்தால்
அகிலமே குலுங்கும்
மான் என்றாலும் நீதான்
மயிலென்றாலும் நீதான்
ஆகமொத்தம்
மானாட மயிலாடுவதே
உங்களால்தான்
இப்படி இன்னும் அதிகமாய். உதாரணமாக இமயமலையே, அமெரிக்காவிற்கே ஆசானாய்,
சைனாவுக்கே சவால்விடும் தலைவனாய் இன்னும் இப்படியெல்லாம்... என்ன புரிகிறதா
உங்களுக்கு?
சரி, இப்போது தொடர்ந்து திமுகவைப் பற்றி பேசலாம்.
பங்காளிச் சண்டையோ அல்லது சொத்துச் சண்டையோ என்னவென்று தெரியாமலே மூவரின்
உயிரைப் பறித்தது திமுக ஆதரவுப் பத்திரிக்கையான தினகரன் வெளியிட்ட
கருத்துக் கணிப்புச் செய்தி. யாரால் சாகடிக்கப்பட்டார்கள், என்ன காரணம்,
சட்டத்தின் நடவடிக்கை என்ன என்பதெல்லாம் நமக்குத் தெரிந்த ஒன்றுதான்.
அதாவது குடும்பத்துக்குள் ஏற்பட்ட குத்து வெட்டுப் பிரச்சினைக்கு
பொதுமக்கள் பலியாகின்றார்கள். எவன் வீட்டு நெய்யே, என் பொண்டாட்டி
கையேன்னானாம். இவர்கள் அடித்துக் கொள்ள ரோட்டில போறவன் சாவுறான்.
கோர்ட்டாவது, சட்டமாவது, புண்ணாக்காவது, புடலங்காயாவது. கோர்ட்டு, சட்டம்
இவர்களை கேள்வியா கேட்கப் போகின்றது? அதெல்லாம் தான் வீட்டின்
வாசல்புறத்தில் மண்டியிட்டுக் கிடக்கின்றனவே.
மனச்சாட்சி என்பது எள்ளளவும் இன்றி பக்கத்து நாட்டில் தமிழ் மக்களை கொன்று
குவிக்க நெஞ்சம் பதறாமல் லெட்டர் எழுதிக் கொண்டு, வயிறு சரியில்லை என்பதால்
காற்றாட வந்து உண்ணாவிரதம் என்று சொல்லி படுத்திருந்த கூட்டம் தான் திமுக.
அதைப் பார்த்திருந்தது ஒரு கூட்டம். அது தான் தமிழர் கூட்டம். எவ்வளவு
அடிச்சாலும் தாங்குகிறார்கள். எவ்வளவு நல்ல மனிதர்கள் தமிழர்கள். சரி
போகட்டும் சுய எள்ளல்.
அரசியலும் அரசியல்வாதியும் இல்லாத இடமே இல்லை என்று ஆகிவிட்டது. ஒரு
காலத்தில் இந்தியாவிற்கே முன்மாதிரியாக இருந்த தமிழகத்தின் ஆட்சி, இன்று
இந்தியாவிலே பலராலும் கிண்டலடிக்கும் அளவுக்குச் சென்று விட்டது
(துக்ளக்கில் திரு முருகன் அவர்கள்). அய்யேயெஸ், அய்ப்பியெஸ்
அதிகாரிகளெல்லாம் அரசியல்வாதிகளின் அடிப்பொடிகளாய் மாறிவிட்டனராம். கழக
ஆட்சிகள் ஆட்சிப் பணியாளர்களை தங்களது அடிமைகளாக்கி விட்டனராம். போதாத
குறைக்கு வேலையே பார்க்காத அரசு அலுவலர்களுக்கு சம்பளத்தை கூட்டிக்
கொடுத்து தங்கள் கட்சியின் கர்ணனாக்கி இன்றைய ஆட்சியாளர்கள். ஆனால் கர்ணன்
பாவம் இல்லையா?
அரசியல் விளையாட்டில் செய் நன்றி காட்டி அடாது செய்பவர்களோடு துணையாய்
நிற்பவர்கள் பாண்டவர்களால் கொல்லப்படத்தான் போகின்றார்கள் என்று சொன்னது
அந்த கருமை நிறக் கண்ணனின் பகவத் கீதை அல்லவா? அரசு அலுவலர்கள் பலரும் தான்
செய்துகொண்டிருக்கும் பாவத்தால் பட்டு வரும் அல்லல் கொஞ்ச நஞ்சம் அல்ல.
உப்புத் தின்றால் தாகம் வந்தே தீரும். தாகம் வந்தால் தண்ணீர் குடித்தே ஆக
வேண்டும். தப்பு செய்தவன் தண்டனையை அடைந்தே ஆகவேண்டும் வா சகா.
”சிவன் சொத்து குல நாசம்“ என்பார்கள். என்னிடத்தில் எத்தனையோ உண்மைச்
சம்பவங்கள் இருக்கின்றன. எழுதப் புகுந்தால் அது தனிக் காவியமாகும்.
வல்லினம் அனுமதி தந்தால் எழுதுவேன்.
அந்தப் பிரச்சினை இப்போது நமக்கு எதுக்கு வா சகா? ஆகையால் தொடருவோம்.
கலைஞர் டிவியில் விஜயகாந்த் நடித்திருக்கும் படத்தினை பெரும்பாலும் பீக்
அவரில் காட்டமாட்டார்கள். அந்த தினகரன் பிரச்சினை ஆரம்பித்த பிறகு சன்
டிவியில் அதிகமாய் விஜயகாந்த் படங்கள்தான் ஒளிபரப்பப்படுகின்றன.
காலணாவிற்கு பிரயோசனமின்றி சன் டிவி ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாது.
சன் டிவியின் மார்க்கெட்டிங் டெக்னிக் பற்றி ஒரு சமாச்சாரம்.
சன் டைரக்ட் டிஷ் டிவி கருவி, வெறும் நானுற்றி நாற்பது ரூபாய் என்று
அலம்பல் விளம்பரம் வருகிறதல்லவா அதன் உண்மையான விலை என்ன தெரியுமா
கிட்டத்தட்ட ஆயிரத்து நானூற்றிச் சொச்சம். இன்னும் ஐநூறு ரூபாய் சேர்த்தால்
டிஷ் ஆண்டனா மற்றும் செட்டாப் பாக்ஸையோ விலைக்கே வாங்கி விடலாம். இது
நமக்குச் சொந்தமாகி விடும். சில டிவிக்களைப் பார்க்க பணம் கட்டவில்லை
என்றாலும் ஃப்ரீ சேனலையாவது பார்க்கலாம். ஆனால் சன் டைரக்ட் வாங்கினால்
மாதா மாதம் ரீஜார்ஜ் செய்ய வேண்டும். இல்லையென்றால் வீட்டுக்கு வந்து
பாக்சை தூக்கிச் சென்று விடுவார்கள். இது எப்படி இருக்குன்னு பாருங்க
மக்கா. டிஷ்ஸும், பாக்ஸும் இலவசம் என்று தனது இணையதளத்தில்
போட்டிருக்கின்றார்கள். கொடுத்ததை புடுங்கிக் கொண்டு போனால் அது எப்படி
இலவசமாகும் என்று தெரியவில்லை.
சன் டிவி சினிமா தயாரிப்பில் இறங்கி இருக்கிறது. ஓடாத படத்தையெல்லாம்
விளம்பரத்திலேயே சூப்பர் ஹிட் என்று சொல்லும் விளம்பரத் திறமை
கொண்டிருக்கிறது. அந்த அதீத திறமை காரணமாய் அடுத்து தமிழக அரசியலில்
புயலைக் கிளப்ப எத்தனிக்கிறதோ என்ற சந்தேகம் கொஞ்ச நாளாய் வருகிறது.
அப்படிப் புயலைக் கிளப்பினால் எத்தனை பேர் கொலையாகப் போகின்றார்களோ
தெரியவில்லை. ஒரு சாதாரண கருத்துக் கணிப்புச் செய்திக்கே அப்பாவி மூவரைக்
காவு கொடுத்த கொண்ட பெருமை வாய்ந்தது சன் குழுமம்.
நுண்ணிய அரசியல் உள்ளே வைத்து மார்க்கெட்டிங் செய்து பணம் சம்பாதிக்கும்
சன் குழுமம் எப்படி விஜயகாந்த் நடித்த படங்களை அடிக்கடி ஒளிபரப்புகிறது?
காரணம் என்னவாக இருக்குமென்று நீயே யோசித்துக் கொள் வா சகா.
இங்கும் ஒரு இடைச்செருகலாய் ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். டைம்
பத்திரிக்கையில் இத்தாலியின் பிரதமர் பர்லஸ்கோனி 1993இல் பல டெலிவிஷன்
நட்சத்திரங்களை தன்னுடன் சேர்த்துக் கொண்டு தேர்தலில் வென்றார். வெற்றி
பெற்ற பின்னர் அரை நிர்வாண அழகியை மந்திரியாக்குகிற அளவுக்கும் அவர்
சென்றார். தனது டெலிவிஷன் சேனலில் ஆபாசத்தை அள்ளிக் கொடுத்து வெற்றி
கண்டார். டெலிவிஷன் சானல்கள் மூலம் தனக்கு ஒரு வாக்கு வங்கியை ஏற்படுத்திக்
கொண்டு அரசியலில் நுழைந்தார் அவர் என்று அவரைப் பற்றிய புத்தகத்தை
எழுதியவர் கூறுகிறார்.
தன்னை எதிர்ப்பவர்கள் மீது வழக்குத் தொடுப்பது, அவர்களுடைய பத்திரிக்கைகளை
முடக்கப் பார்ப்பது, இவையெல்லாம் பர்லஸ்கோனியின் வழக்கமான அணுகுமுறைகள்.
அவர் மீது ஊழல் வழக்கு இருக்கிறது. ஆனால், அது அவருக்கு தண்டனையில்
முடியும் என்ற எதிர்பார்ப்பு இல்லை..
விஷயம் அறிந்த இத்தாலியர்கள், இந்த நிலை கண்டு வருந்துகிறார்கள். ஆனால்
பர்லஸ்கோனியின் பிடி – டெலிவிஷன் பிடி. அது இறுகிக் கிடக்கிறது என்று
கூறுகிற டைம், இத்தாலியின் அரசியலை மாற்றுவதற்கு முன், அந்த நாட்டின்
கலாச்சாரத்தை (தனது டெலிவிஷன் சானல்கள் மூலமாக) பர்லஸ்கோனி மாற்றினார்.
அந்த மாறிய கலாச்சாரத்தில், அரசியலை மாற்றினார் என்று கூறுகிறது. ( நன்றி
துக்ளக்)
மேற்கண்ட சம்பவத்தோடு சன் டிவியில் சமீபத்தில் நட்த்தப்படும் டீலா நோ டீலா,
ராணி 6, ராஜா யாரு? (ஆறு பெண்களை அதுவும் அவுத்துப் போட்டு ஆடும்
ஆட்டக்காரிகளை ஆண்களுடன் ஆட விட்டு மனதைக் கவர்ந்தவர் யார் என்று நடிகைகள்
தேர்வு செய்வார்களாம். தமிழகத்திற்கு மிகவும் தேவையான நிகழ்ச்சி இது
அல்லவா? சன் டிவியின் சேவை எந்தளவுக்கு இருக்கிறது என்பதற்கு இது ஒரு
உதாரணம்)
இப்போது அடிக்கடி சன் டிவியில் காட்டப்படும் விஜயகாந்த் பட்த்திற்கும்,
மேற்கண்ட இத்தாலி பிரதமரைப் பற்றிய டைம் பத்திரிக்கையின் கட்டுரையைப்
பற்றியும் ஒப்பிட்டு நோக்கினால் ஒரு ரகசியம் உனக்குப் புரிய வரும் வா சகா.
புரிந்து கொள்ள முயற்சி செய்.
இது பற்றிய கட்டுரையை திரு சோ துக்ளக்கில் நினைத்தேன் எழுதுகிறேன் என்ற
பகுதியில் எழுதி இருக்கிறார். தமிழ் சமூகத்தின் பால் தினிக்கப்படும் டிவி
கலாச்சார அழிவுப் போக்கு தமிழக சிந்தனையாளர்கள் மத்தியில் கவலைகளை
உருவாக்கி இருப்பதாக சொல்லுகிறார்.
கட்சி ஆரம்பித்த காலத்திலிருந்தே திரு விஜயகாந்த் அவர்கள் கூட்டணி என்ற
பேச்சுக்கே இடமில்லை என்று சொல்லி வருகிறார். அதாவது கூட்டுக்கொள்ளை அடிக்க
விருப்பமில்லை என்கிறார் போலும். அதிமுகவின் ஓட்டுக்கள் இனி எங்களுக்குத்
தான் என்று குதூகலித்துக் கொண்டிருக்கிறார்கள் தேமுதிகவினர். ஓட்டு வாங்கி
என்னத்தைக் கிழிக்கப் போகின்றார்களோ தெரியவில்லை. இவரிடம் ஏதாவது
திட்டமிருக்கின்றதா என்று கேட்டால் லஞ்சத்தை ஒழிப்பேன், ரேஷன் அரிசியை
உங்கள் வீட்டுக்கே கொண்டு வந்து தருவேன் என்கிறார். என்னடா கொடுமை இது?
ஏற்கனவே இலவசம் இலவசமென்று மக்களைப் பிச்சைக்காரனாக்கியது போதாது என்று
பிச்சைக்காரனை தேடி வந்து பிச்சை போடுகிறேன் என்கிறார். கட்சியின் தலைவர்
இன்றைக்கும் ஏதாவது சின்னப் பெண்ணாகப் பார்த்து கட்டிப் பிடித்து தன்
பெருத்த, கருத்த, வயதான முகத்தை நடிகையின் முலை மீது வைத்து தேய்த்து
பாட்டுப் பாடி வருகிறார். வருங்கால எம்ஜியார் என்ற அடைமொழி வேறு. எம்ஜியார்
ஆட்சிக்காலத்தில் செய்த சாதனைகள் என்னவென்று தான் இதுவரைக்கும் எனக்குப்
புரியாத மர்மம். இன்றைய தமிழகத்தில் கல்வி கொள்ளை நிறுவனங்கள்
ஆரம்பிக்கவும், தனியார் கல்லூரிகள் ஆரம்பிக்கவும் அச்சாரம் போட்டு
தமிழனுக்கு தரமான கல்வி கிடைக்க விடாமல் செய்தவர் எம்ஜியார்தான். நல்ல
அரசின் முதல் கடமை மக்களுக்கு காசின்றி தரமான கல்வி வழங்குவது. ஆனால்
எம்ஜியார் செய்தது என்ன? அதுவுமின்றி முல்லைப் பெரியார் அணையின் பாதுகாப்பை
கேரளாவிற்கு தாரை வார்த்து விட்டு இன்றைக்கு அணைப்பக்கமே எட்டிப் பார்க்க்
முடியாதவாறு செய்தவரும் இவர்தான்.
அதிமுகவினரின் சில அரசியல் நிலைப்பாடுகள் தேமுதிகவினருக்குச் சாதகமாய்
கனிந்த காலங்களும் உண்டு. ஆனால் அதே நிலைமை தொடருமா என்றால் நடக்குமா?
தேமுதிக தலைவர் போராட்டக் களத்திற்கு வருகிறார். ஆவேசமாய் பேசுகிறார்.
அறிக்கைகளை வீசுகிறார். ஆனால் அதிமுக தலைமையோ அறிக்கை அரசியலும்,
அடிப்பொடிகளை வைத்து ஆர்ப்பாட்டங்களும் நடத்தி வருகின்றது. இன்றைய மக்கள்
ஃபாஸ்ட் ஃபுட் கலாச்சாரத்தினர். எதுவாக இருந்தாலும் உடனடி(Instant)
முடிவுகளையே எதிர்பார்க்கின்றார்கள். முல்லைப் பெரியாரு அணைப் பிரச்சினையை
தமிழகத்தையே உலுக்கி எடுக்கக்கூடிய அளவுக்கு அரசியலாக்கி, அதன் மூலம்
அதிமுக தன்னை முன்னிலைப் படுத்திக் கொண்டிருக்கலாம். ஏனென்றால் இது
மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை. கட்சியுடன் இணைந்து எளிதில் போராட
மக்களும் வருவார்கள். திமுக ஆட்சியினரை அலற வைத்திருக்கிலாம். இன்றைக்கு
ஆந்திராவில் உண்ணாவிரதமென்ற பெயரில் பெரும் ரகளை நடக்கிறதே அப்படி. ஆனால்
அதிமுக தலைமை சொதப்பி விட்டது. பிரச்சினையை திசை திருப்பும்
சாமர்த்தியமாவது இருக்கிறதா என்றால் சொல்லிக் கொள்ளும் படி இல்லை.
இந்தியாவிலேயே நடந்த மிகப்பெரிய 60,000 கோடி ரூபாய் ஸ்பெக்ட்ரம் ஊழலை
பதினெட்டு வருஷம் கழித்து வந்த லிபரான் அறிக்கையினை வைத்து எதிர்க்கட்சி,
பத்திரிக்கைகளை மறக்க வைத்த டெக்னிக்கைப் போல அதிமுகவினருக்கு செய்ய வராது.
திமுகவினரைப் போல நாமும் சம்பாதிக்க வேண்டுமென்ற ஆசையினால் தொண்டர்களே
ஏதாவது செய்யனும். இல்லையென்றால் சேலை கீலை கிழியனும். எங்கிருந்தாவது
வாய்ஸாவது வரணும். மக்கள் பிரச்சினைக்கு நடக்கும் போராட்டத்திற்கு கூட
தலைவர் வரமாட்டார். வெயில் அலர்ஜி போலும். மன்னார்குடி மாஃபியா(நன்றி திரு
சுப்ரமண்யம் சாமி) விடம் அதிமுக அடிமைப்பட்டுக் கிடக்கிறது என்று பலரும்
சொல்லிக் கொண்டிருக் கின்றார்கள். உண்மை என்றே நினைக்கக் கூடிய செயல்களை
அதிமுக செய்து வருவது அதன் வளர்ச்சிக்கு ஆபத்தாக முடிந்து விடும்.
அதிமுகவின் அதிகார மையம் வேண்டுமானால் மன்னார்குடியில் இருக்கலாம். ஆனால்
தொண்டர்களுக்கு பதவி வாய்ப்பும், வருமானம் வரக்கூடிய அளவுக்கு
வாய்ப்புகளையும் பெற்றுத் தர வேண்டும். ஆண்டான் அடிமை மனோபாவம் அரசியல்
கட்சிக்கு ஆப்பு வைக்கும் ஆபத்தை தேடித்தந்து விடும். மன்னார்குடியினரின்
ஜாதி வழக்கங்கள் தொண்டர்களை தலைவர்களாக்கும் அளவுக்கு இன்னும் உயர்ந்து விட
வில்லை என்பது அவர்களின் சில மூவ்மெண்டுகளை அவதானிக்கும் போது தெரிய
வருகிறது.
அடுத்ததாக, நேரு குடும்பத்தின் காங்கிரஸ் கம்பெனியின் தமிழக நிலவரம் பற்றி
பார்க்கலாம். காங்கிரஸ் ஏன் இன்னும் நேரு குடும்பத்திடம் அடகு
வைக்கப்பட்டிருக்கிறது என்றே தெரியவில்லை. காங்கிரஸில் காலம் காலமாய்
இருக்கும் வேறு தலைவர்களே இல்லையா?
தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்பார்கள். யெம்மெல்லே ஆகினாலுமொரு
கோஸ்டி, செயலாளர் ஆனாலுமொரு கோஷ்டி என்ற தமிழக காங்கிரஸ் கோஷ்டிகளில் ஒரு
கோஷ்டித்தலைவரான திரு ஈவிகேஎஸ் இளங்கோவன், காங்கிரஸ் கட்சியை
தமிழகத்திலிருந்து ஒழித்துக் கட்டி விடுவது என்ற முடிவுக்கு வந்து
விட்டார். வெகு விரைவில் காங்கிரஸ் தமிழகத்திலிருந்து காணாமல் போக கூடிய
அளவுக்கு தமிழ் நாட்டில் அதிரடி அரசியல் செய்து வருகிறார் பெரியாரின்
பேரன். தமிழும், தமிழனும் தான் தமிழகத்தில் செல்லுபடியாவான். அவ்வப்போது
நோன்பு கஞ்சியெல்லாம் குடிக்கனும். நோன்புக் கஞ்சி குடிக்கும்
அரசியல்வாதிகள் தாங்களை மதச்சார்பற்றவர்கள் என்று சொல்லிக்
கொள்வார்கள்.(என்ன கொடுமைடா இது?) தேர்தலின் போது இதர மத,ஜாதிக் கட்சிகளின்
தலைவர்களை விட்டு சால்வை போர்த்தி ஆதரவு அறிக்கை கொடுக்க வேண்டும். ஆனால்
இவரின் அதிரடிப் பேச்சு அரசியல் நடவடிக்கைகள் தமிழர் விரோதம் பாராட்டுவதாக
இருப்பது அனைவருக்கும் அக்கட்சியின் மீதான் வெறுப்பை உண்டாக்குகிறது.
விடுதலைப் புலிகள், இலங்கைத் தமிழர் நிலைப்பாடு பற்றி காங்கிரஸார் அறிக்கை
விடுவது படு தமாஷ். தன்னைத் தோற்கடித்த விடுதலைப் புலி பிரச்சாரத்தால்
இலங்கைத் தமிழர்கள், விடுதலைப் புலிகள் என்றாலே எட்டிக்காயாக கசந்து போய்
விடுகிறது இளங்கோவனுக்கு. தன் இருப்பை காங்கிரஸில் காட்டிக் கொள்ள
அவ்வப்போது அறிக்கை விடுகிறார். ஈரோட்டில் விடுதலைப்புலிகளை ஆதரித்து
வைக்கப்பட்ட தட்டிகளை போராட்டம் என்ற பெயரில் கிழித்து எறிகிறார். தட்டிகளை
வைத்தவர்கள் மேல் நடவடிக்கை எடுங்கள் என்று போராடுவது என்பது அரசியல் மரபு
அதுதான் சட்டமும் கூட. ஆனால் அத்தட்டிகளை கிழித்து எறிவது ஆணவத்தின்
உச்சக்கட்டம். இவருக்கு யார் அத்தகைய அதிகாரம் கொடுத்தது? சென்சிடிவான
சந்தர்ப்பங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதே தெரியாமல் அறிக்கை
விட்டு பேனர்களைக் கிழித்து எறிகிறார். இவரின் பேச்சை மக்கள் கவனித்துக்
கொண்டுதான் இருக்கின்றார்கள். காங்கிரஸ் கட்சியினர் திமுகவிற்கோ அல்லது
அதிமுகவிற்கோ அல்லக்கைகளாக மாறிபோய் எத்தனையோ வருடங்களாகி விட்டன. இடையில்
நாங்கள் காமராசு ஆட்சி அமைப்போம் என்று பெரிய ஜோக் அடிப்பார்கள். (அந்த
மாதிரி அறிக்கைகளுக்கு தங்கபாலுதான் சூப்பர்)
அடுத்து, பாமக செய்வதறியாது குழம்பிப் போய், மக்கள் டிவியில்
டெலிமார்க்கெட்டிங்க் விளம்பரங்களைப் போட்டுக் கொண்டிருக்கிறது. வருமானம்
இல்லாத காரணமாயிருக்கலாம். பேசாமல் திமுகவிலேயே இருந்திருக்கலாம். வருடம்
ஆயிரம் கோடியாவது மிஞ்சியிருக்கும். சகோதரியை நம்பிப் போய் நட்டாற்றில்
சம்பாதித்த காசும்போய் நிற்கிறார், என் வாரிசுகள் பதவிக்கு வந்தால் என்னை
கட்டி வைத்து அடியுங்கள் என்று உரக்கச் சொன்ன மருத்துவர். மாண்புமிகு
அன்புமணி இவரின் தவப்புதல்வர் இல்லை போலும். தத்து எடுத்திருப்பார் போல.
தத்து எடுத்தது தெரியாமல் பத்திரிக்கைகள் மருத்துவரை ஏகத்துக்கும்
கிண்டலடிப்பது சோகம். இப்போது தான் மரவெட்டிக் கட்சி என்ற பெயரை அனைவரும்
மறந்து இருக்கின்றார்கள். இனிமேல் மரம் வெட்டியாவது கட்சி நடத்த வேண்டிய
நிலைக்கு பாமக தள்ளப்பட்டிருப்பது காலத்தின் கோலம்.
மதிமுக, பாவமோ பாவம் – இதற்கு முழுக்காரணமும் வைகோ தான். அரசியல்வாதிகளிலே
சற்றுக் கம்பீரமானவர் வைகோ. இலக்கியவாதி. என்ன செய்வது? விதி! திமுகவில்
அட்ஜெஸ்ட் செய்து கொண்டிருந்தால் இந்த நேரம் சைரன் காரில் அமைச்சராய் வலம்
வருவார். இவரைத் திமுகவிலிருந்து நீக்கிய போது தீக்குளித்தவர்களின்
தியாகமெல்லாம் விழலுக்கு இறைத்த நீராகி விட்டது. அரசியலில் இன்னும்
பாலபாடத்தைக் கூட படிக்காதவர். கூட்டணி என்றால் பேரம் என்றுகூட தெரியாமல்
அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் எவ்வளவு அடிச்சாலும் தாங்கும் நல்லவர்.
மக்களைப் பற்றி இன்னும் ஏனோ புரிந்து கொள்ள முடியாமலிருக்கிறார். அய்யா
வைகோ அவர்களே திரு கக்கனைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? கொஞ்சம் அவரைப்
பற்றி நினைத்துப் பாருங்கள்.
பிஜேபியோ துரோகிகளால் நிரம்பிக் கிடக்கிறது. காங்கிரஸுக்கு மாற்றாக
உருவெடுத்துக் கொண்டிருந்த கட்சி இன்றைக்கு பிய்ந்து போய்க் கிடக்கிறது.
கடைசியாய் பால் ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
கம்யூனிஸ்டுகள் கொள்கை இழந்து மக்கள் சேவையிலிருந்து பின்வாங்கி
விட்டார்கள். தனி மனிதனுக்கு ஒரு சிறிய பிரச்சினை என்றாலும்
போராட்டக்களத்தில் குதித்த கம்ப்யூனிஸ்டுகள் இன்றைக்கு கார்பொரேட்
பிசினஸ்கார்ர்கள் போல கட்சி நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். மக்கள் விரோத
நடவடிக்கைகளில் தாங்களும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்று காட்டிக்
கொண்டிருக்கிறார்கள். அதற்கு உதாரணம் மேற்கு வங்கம் மற்றும் கேரளா.
காங்கிரஸ் ஆட்சிக்கு ஆதரவளித்துக் கொண்டிருந்த போது இவர்கள் அடிக்க கூத்தை
என்னவென்று சொல்வது? இந்தியா டுடே வாங்கிப் பாருங்கள். கம்ப்யூனிஸ்ட்
கட்சித் தலைவர்களின் எத்தனை பேட்டிகள் எத்தனை ஆர்ப்பாட்டங்கள். இப்போது
இருக்குமிடம் தெரியாமல் போகுமிடமும் தெரியாமல் அல்லாடிக் கொண்டிருக்கும்
அரசியல் அபலைகளாகி விட்டார்கள். இவர்களுக்கு கம்யூனிசமெல்லாம் பேச்சுக்கு
மட்டும்தான். பக்கத்து கேரள மாநிலத்தில் கடலுக்குள் தண்ணீரைத் திறந்து
விட்டாலும் விடுவோம் தமிழனுக்கு மட்டும் தரமாட்டோம் என்று சொல்லுகிறார்
காரல்மார்க்ஸின் கொள்கைகளை மீட்டிங்குகளில் ஆவேசமாய் பேசும் திரு
அச்சுதானந்தன். ”என்ன கொடுமை சரவணன் இது? இது தான் அரசியல்” என்கிறார்
சரவணன். சரவணன் வாய்செல்லாம் பழங்கதையாகிப் போனதொரு வரலாற்று சம்பவம்...
ஹா.. ஹா...
நாளடைவில் தமிழகமே ஏதாவதொரு கட்சிக்கு அடிமைப்பட்டுக் கிடக்கும் போல.
அடிமைத் தனத்திலிருந்து மக்களை காப்பாற்ற யார் வரப்போகிறார்கள் என்பது
விதியின் கையிலே. அது நீயாகக்கூட இருக்கலாம் வா சகா.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி இனிமேல ஆட்சிப் பொறுப்புக்கு வரும்
என்பதெல்லாம் நடவாத காரியம். மற்ற கட்சிகள் தங்களிடம் இருக்கும் ஓட்டு
வங்கிக்காக திமுகவுடனோ அல்லது அதிமுகவுடனோ பேரம் பேசி கொஞ்சம்
சம்பாதித்துக் கொள்ளத்தான் முடியும். தேமுதிகவினரின் முதலமைச்சர் ஆசை திரு
கருணாநிதியிடமும், திரு ஜெயலலிதாவிடமும் பலிக்காது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட்
இவர்களை நம்பினார் என்றாலும் கூட ஆட்சிக்கு வர முடியாது. தமிழகத்தில்
மீண்டுமொரு தேர்தல் பேரக் கட்சியாகவே தேமுதிகவினர் இருப்பார்கள் என்பதுதான்
உண்மை.
கட்சிகளெல்லாம் தனி மனித ஆதாயத்தை முன்னுறுத்தி வருவதால் எக்கட்சியிலும்
சேராமலிருக்கும் தனி மனிதன் என்ன செய்வான். அவனுக்கு ஒரு வழியைச்
சொன்னால்தானே இந்தப் பத்தி ஓரளவுக்கு நிறைவாய் இருக்குமென்பதால்
சொல்கிறேன்.
இங்கே பாருங்க வா சகாக்களே (தமிழ் நாட்டிலிருப்பவர்களுக்கு மட்டும்),
உங்களுக்கு ஒன்றைச் சொல்ல ஆசைப்படுகிறேன். கேட்கின்றவர்கள்
உருப்படுவீர்கள். கேட்காதவர்கள் மதிமுக வைகோ மாதிரி வீணாய்ப் போவீர்கள்.
திமுகவிலோ, அதிமுகவிலோ, காங்கிரஸ்ஸிலோ முடிந்தால் கட்சி ஒவ்வொன்றிலும்
அடையாள அட்டையை பெற்று வைத்துக் கொள்ளுங்கள். ஆட்சி மாறினால் உடனே கட்சி
மாறிவிட வேண்டும். அப்போது தான் பிழைக்க முடியும். கட்சியில் உறுப்பினர்
என்றால் தான் கவுன்சிலர் கூட லெட்டர் தருவார். கவுன்சிலர் சொன்னால்தான்
காவல்துறை கொஞ்சமாவது உங்களை மதிக்கும். ஆகவே காரியத்தில் உடனே இறங்கி
வெற்றி வாகை சூடுங்கள். விரைவில் ஏதாவதொரு கரை வேட்டியோடு உங்களைப்
பார்ப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. சரி தொடருவோமா...
இது வரையிலும் கட்சிகளைப் பற்றி பார்த்தோம். இனிமேல் தான் கச்சேரியே
இருக்கிறது. தொடர்ந்து படியுங்கள்...
தனிமனிதன் ஒருவனால் சமூகத்தில் மிகப் பெரிய மாறுதல்களை உருவாக்கம் செய்ய
இயலும் என்பதை பலமுறை வரலாறு நமக்கு காட்டி இருக்கிறது. தன் கொள்கைகளை
தலைவர்கள் பொது மக்கள் சார்ந்தவையாக மாற்றிக் கொள்வதில்தான் அந்த தலைவரின்
வெற்றி அல்லது கொள்கையின் வெற்றி அடங்கியிருப்பதாக சொல்வார்கள். அவ்வாறு
பொதுமக்களின் பிரச்சினைகளை சார்ந்து உருவாக்கிய தனது கொள்கைகளால் தமிழக
மக்களின் அன்பிற்கு உரித்தானவர் பெரியார்.
தினமலர் - வாரமலரில் நடுத்தெரு நாராயணன் திண்ணைப் பகுதியில் வெளியிட்டு
இருக்கும் பத்தி கீழே:
முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் வந்த பத்திரிகை சமரன்; முற்போக்கு இதழ்.
அதில், "பிள்ளையார் பேசுகிறார்' என்ற தலைப்பில், சூடான அரசியல் விமர்சன
கட்டுரைகளை புனைப்பெயரில் எழுதி வந்தார் ஒருவர். மிகப் பின்னாளில் தான்,
அதை எழுதி வந்தவர் எழுத்தாளர் வல்லிக்கண்ணன் என்பது தெரிய வந்தது. "ஆட்சிக்
கட்டிலில் எலிகள்' என்ற பெயரில், பின்னர் அது நூலாகவும் வெளி வந்தது.
செப்., 29, 1963, சமரன் இதழில் வெளியான ஒரு கட்டுரையில்:
"என்னிடத்தில் 35 ரூபாய் சம்பளத்திற்கு இருந்தவர் அண்ணாதுரை. இன்று
அவருக்கு கார் இருக்கிறது; பங்களா இருக்கிறது. இது எல்லாம் எப்படி வந்தது?'
- இப்படி கேட்கிறார் பெரியார் ஈ.வெ.ரா., ரொம்ப ரசமான கேள்வி. இதை திராவிட
கழகத் தலைவர், திராவிடர் தந்தை பெரியார் ராமசாமி அம்பலத்தில் அறைவது
மிகுந்த ரசம் சேர்க்கிறது.
தமிழ்நாட்டில், பல குட்டித் தலைவர்கள் முளைப்பதற்கு ஆதிகாரணர், அரசியல்
தலைவர் ஈ.வெ.ரா., அப்படி தலையெடுத்த தம்பிரான்களுக்கு (நேரடியாகவோ,
மறைமுகமாகவோ) குருவாக விளங்குகிறார் அவர். அரசியலை பிசினஸ் ஆக்கி, பணம்
பண்ணுவதற்கு வழி காட்டியவரே அவர் தான். அரசியல் தலைவர், சமூக
சீர்திருத்தவாதி, கட்சித் தந்தை என்று பெயர் பண்ணி, வெறும் பேச்சு பேசி
வாழ்ந்து வருவதன் மூலம் மக்களை வசீகரித்து, மயக்கி, பணம் பிடுங்க முடியும்
என்பதை வெற்றிகரமாக நிரூபித்து வந்திருக்கிற, வருகிற பெருமை ஈ.வெ.
ராமசாமிக்கு உண்டு.
வீடுகளும், தோட்டங்களும், "வெள்ளி தோட்டா'க்களும், காகித நோட்டுகளும்,
ஈ.வெ.ரா., கேட்டு வந்திருக்கலாம்; கேட்காமலே வந்து சேர்ந்திருக்கலாம்.
அப்படி சொத்தாகவும், பணமாகவும், இதர பல பொருட்களாகவும் ஈ.வெ.ரா., பெற்று
வந்திருப்பது மட்டும் நியாயமான சம்பாத்தியம் ஆகிவிடுமா, என்ன?
இப்படியெல்லாம் பணம் திரட்ட முடியும் என்று வழிகாட்டி, பணம் பண்ணுகிறாரே
என்ற பொறாமையை அடியார்களிடம் உண்டாக்கி, அரசியல் மூலம் நாமும் பணம்
பண்ணலாமே எனும் ஆசையை சில்லரைத் தலைவர்கள் உள்ளத்திலே வளர்த்து,
அவர்களையும் தனித்தனியே தனிக்கட்சி, அமைக்கும்படி வழிவகுத்தவர் ஈ.வெ.ரா.,
என்று சொன்னால், அது வெறும் உயர்வு நவிற்கு அல்ல.
— இப்படி எழுதியுள்ளார் வல்லிக்கண்ணன். (வல்லிக்கண்ணன் நூல்களை முதல்வர்
கருணாநிதி நாட்டுடமை ஆக்கியுள்ளார்!)
பெரியாரைப் பற்றிய யாருக்குமே தெரியாத செய்தியைக் கொளுத்திப்
போட்டிருக்கிறது தினமலர். இச்செயலை பார்ப்பனீயத்தை வளர்க்கும் தினமலரின்
அயோக்கியத்தனம் என்று அலறுவார்கள் சிலர். அதெல்லாம் போகட்டும்.
இக்கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் சம்பவங்கள் இன்றைக்கும் தமிழகத்தில்
நடந்து கொண்டு தானே இருக்கின்றது. அதை எவராலும் மறுக்க முடியுமா? தமிழக
அரசியல் கட்சிகளில் நடக்கும் கூத்துகளைத்தான் நீ மேலே படித்த்து வா சகா.
இது கொஞ்சம். இன்னும் எழுதலாம். விரைவில் ஒரு படா கட்டுரையினைப்
படிக்கலாம். என் கட்டுரையினை விரைவில் வெளியிட வேண்டுமென்று வல்லினத்தின்
ஆசிரியருக்கு கடிதம் எழுதிப் போடுங்கள்.
பெரியாருக்கும் இன்றைய தமிழகத்தின் நிலைக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு
என்பது பலருக்கும் தெரிந்த ஒரு விஷயம். பெரியாரின் திகவிலிருந்து பிரிந்தது
திமுக. திமுகவிலிருந்து பிரிந்தது அதிமுக. திமுகவிலிருந்து மீண்டும் ஒரு
கட்சி அது மதிமுக. சினிமா ரசிகர்களையும், விசிலடிச்சான் குஞ்சுகளையும்,
மற்ற கட்சிகளில் வாய்ப்புக் கிடைக்காதவர்களையும், மற்ற அரசியல் கட்சிகளின்
மீது வெறுப்புக் கொண்டவர்களையும் சமயம் பார்த்து கட்சி ஆரம்பித்து உள்ளே
இழுத்துக் கொண்டவர் பெரிய காலேஜ் முதலாளி விஜயகாந்த். ஆரம்பத்தில்
திமுகவினருக்கு சலாம் போட்டு வந்தவர் தான் இன்றைய தேமுதிக தலைவர். ஆக
ஒருவழியாக இவரும் திமுகவிலிருந்து பிரிந்தவர் என்றே நினைத்துக் கொள்ளலாம்.
பெரியாரின் வழி வந்தவர்களாக இவர்களைக் கருதலாம் அல்லவா வா சகா.
தமிழகத்தை தொடர்ந்து ஆளப்போவது திமுகவோ அல்லது அதிமுகவோதான். மற்ற
கட்சியினர் தமிழகத்தை ஆள்வது என்பது இப்போதைக்கு நடக்கப் போவது இல்லை.
இந்தியாவிலேயே மிக அதிக இமாலய அளவு ஊழல் செய்ததாகச் பலராலும் சுட்டிக்
காட்டப்படுவது திமுக கட்சியினரைதான். இனிமேல் அந்த அளவுக்கு ஒரு ஊழல்
நடைபெறுமா என்பதெல்லாம் கேள்விக்குறிதான். ஏகப்பட்ட நன்மைகள் செய்தவன் ஒரே
ஒரு கொலை செய்தானென்றாலும் அவனைக் கொலைகாரன் என்று தான் இச்சமூகம்
சொல்லும். பெரியாரால் நடந்த பல நன்மைகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விடலாம்.
ஒரு குடம் அமிர்தத்தில் ஒரு துளி விஷமென்றாலும் குடமே விஷமாகி விடுமல்லவா?
இப்போது நீ மேலே படித்த கட்சிகளைப் பற்றிய பாராவை நினைவு படுத்திக் கொள்.
நீயே சொல் : பெரியார் தமிழகத்தின் வரமா? சாபமா?
|
|