இதழ் 13
ஜனவரி 2010
  எதிர்வினை
 
     
  நேர்காண‌ல்:

"அர‌சாங்க‌த்திற்குத் தேவை ந‌ம்மை நாமே குறை சொல்லிக் கொள்ளும் ஏமாளித்த‌ன‌ம்"

பி. உத‌ய‌குமார்

சிறப்புப் பகுதி:

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் - ஒரு பார்வை


பத்தி:

தமிழகத்திலும் ஒரு நீரோ மன்னன்

அ. ரெங்கசாமி

அவஸ்தை
இராம. கண்ணபிரான்


கட்டுரை:

பிலிப் கலாஸ் : இசையின் தீராத‌ ப‌க்க‌ங்க‌ள்
அகிலன்

காற்று வேட்டை
கெ.எல்.

வரமா? சாபமா?
நெடுவை தவத்திருமணி

மொழி ஆணால் உருவாக்கப்பட்டது...
வீ.அ. மணிமொழி

இலங்கைத் தமிழர்களின் ஆங்கில நூல்கள்: நூல்தேட்டம் ஆங்கில நூல் தொகுப்புக்கானதொரு அறிமுகம்
என். செல்வராஜா

சிறுகதை:

குரங்கு
கிரகம்


பிரமைகள்
ஸ்ரீரஞ்சனி

தொடர்:


ப‌ல வேடிக்கை ம‌னிதரைப் போல‌ ...5
ம‌. ந‌வீன்

எனது நங்கூரங்கள் ...6
இளைய அப்துல்லாஹ்

நடந்து வந்த பாதையில் ...1
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

கவிதை:

இளங்கோவன்


இரா. சரவணதீர்த்தா


மன்னார் அமுதன்

ஏ.தேவராஜன்

பதிவு:

மலேசியத் தமிழ்க் கவிதாயினிகளின் முதலாவது மலையருவிக் கவியரங்கம்
தினேசுவரி

புத்தகப்பார்வை:

விட்டு விடுதலை காண்
நிந்தவுர் ஷிப்லி

லும்ப‌ன் ப‌க்க‌ம்:


ஒரு கோமாளியின் வ‌ருகை...
லும்ப‌ன்

அறிவிப்பு:


அஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்தும் சர்வதேச தமிழ்ச் சிறுகதை, கவிதைப் போட்டி

எதிர்வினை:


கடிதம்
     
     
 

டிச‌ம்ப‌ர் மாத‌ச் சிறுக‌தைக‌ள் - ஒரு பார்வை

வல்லினத்தில் வந்த சிறுகதைகளைப்பற்றி சில விஷயங்கள் எழுதலாம் என்று நினைக்கிறேன். எனக்கு மிகப் பெரிய ஆளுமை இலக்கியத்திலும் புனைகதைகளிலும் இல்லை என்பதால் இது தொடர்பாக இதுவரை எனது எண்ண ஓட்டத்தை பதிவு செய்ய எனக்கு நானே மறுத்திருக்கிறேன். ஆனால் நண்பர் யுவனின் ஆலோசனையினால் எனது கருத்துக்களை முன் வைப்பது நல்ல ஆக்கத்துக்கும் அடுத்தக்கட்ட நகர்விற்கும் உதவும் என்பதால் எழுதுகிறேன்.

டாக்டர் மா. சண்முகசிவாவின் 'அவள் - நான் - அவர்கள்'

வழக்கம்போலவே மிகப்பெரிய இறுக்கத்தை நமது மனதில் விட்டுச் செல்லும், டாக்டர் சிவாவின் இன்னுமொரு கதை. 'அழைப்பு' என்ற அவருடைய முன்பொரு கதை இதே கருவை ஏறக்குறைய கொண்டிருந்தாலும் இது முற்றிலும் வேறு ஒரு தளம். அவருடைய எழுத்தில் எனக்கு பிடித்த விஷயம், கதை நகர்வு. நமது வாசிப்பு வேகத்தை எந்த விதத்திலும் பாதிக்காமலும் அதே சமயம் நுட்பமான உணர்வுகளின் பாதிப்பை நமது கவனத்திலிருந்து தவறவிடாமலும், கதையை எந்த நிலையில் எந்தத் தளத்தில் இருந்து அணுகினாலும் வாசகரின் மனதில் அந்தக் கதையின் மையம் விலகாமலும் விட்டுச் செல்லும் நேர்த்தி அவரது எழுத்துக்கு உண்டு. கதைகளுக்கு இது ஒரு முக்கிய விஷயம் என்று நினைக்கிறேன். காட்சிகளை, படிமங்களை, கதாபாத்திரத்தையும் அவரது உளவியல் சார்ந்த விஷயங்களையும் சொல்லும்போது வாசிப்பை அளுப்புத் தட்ட செய்துவிடும் போக்கு பல எழுத்துக்களில் நிகழ்வது வழக்கம். இதன் காரணமாகவே புனைக்கதைகளை வாசிப்பதில் எனக்கு சிக்கல் உள்ளது. ஆனால் இவருடைய எழுத்தில் அப்படி ஒரு சோர்வு இதுவரை எந்தக்கதையிலும் நிகழந்ததே இல்லை.

ஆனால் இது கதை என்ற எண்ணத்தை பின் தள்ளி, ஒரு சுய குறிப்புப் போன்றோரு உணர்வை ஏற்படுத்திவிடுகிறது. அவருடைய இயல்பான குணம் (கேலியும் கிண்டலுமான) பல இடங்களில் பளிச்சிடுவதும் அதற்கேற்ப கதாப்பாத்திரத்தின் சிவா என்ற பெயரும், அவருடைய நண்பரான மகற்பேரு மருத்துவர் தணிகாசலம் பெயரும் இது ஒரு கதை என்பதையும் தாண்டி ஒரு நெருடலை ஏற்படுத்தி விடுகிறது. வழக்கம்போல் எல்லாவற்றுக்கும் நல்ல காரணத்தை எப்படியாவது முன்வைத்துவிடும் அவர், இதற்கும் நல்லதொரு விளக்கமாக 'என்னைப் பற்றித் தெரிந்ததால் உனக்கு அப்படி தோன்றுகிறது, மற்றவர்களுக்கு நிச்சயமாக அப்படித்தோன்ற வாய்ப்பில்லை' என்று சொன்னால், அது உண்மைதான் என்று நான் ஏற்றுக்கொண்டாலும், இத்தகைய அணுகுமுறையை அவர் தவிர்த்திருந்தால் இன்னும் நன்றாக இருக்குமோ என்றுத் தோன்றுகிறது.

அரசியல்வாதிகள், கட்சிகள், பத்திரிக்கைகளைப்பற்றியச் சாடல்கள் இலக்கிய ஆளுமையைத் பின் தள்ளி சாதாரண விமர்சன பார்வையாகவே தெரிகிறது, அது நன்றாகவும், தேவையானதாகவும், கதைக்கு தவிர்க்கமுடியாததாகவும் இருந்தாலும்.

அவரிடம் நான் கோபித்து கொள்ள ஒரு விஷயம் இருக்கிறது. சிலரை அவர் கிண்டல் பண்ணும் தொனி. அது அவர் இயல்பாகவே ஆகிவிட்டது. பலரை அவர் இப்படி செய்திருக்கிறார், என்னையும் சேர்த்தே. ஏன் அந்தத் துர்காபாயை அவர் ஒரு நகைச்சுவை கதாபாத்திரத்தை சித்தரிப்பதுபோல் கடைசிவரை காட்டமுயற்சிக்கிறார் என்று தெரியவில்லை. துர்க்காபாயை ரொம்ப சீரியஸான பத்திரப்படைப்பாக ஆக்கியிருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. துர்க்காபாயின் பாத்திரத்தை அவரிடமிருந்து வெளிப்படுத்தியிருந்தால் இந்தப் புரிதலை தவிர்த்திருக்கலாம். ஆனால் சிவாவினுடைய பார்வையிலேயே அந்தப் பாத்திரம் அணுகப்படுவதால், அந்த கதையின் மையமாய் இருக்கும் முக்கியமான பாத்திரங்களில் ஒன்றான துர்க்காபாயின் கதாபாத்திரம் நமது மனதில் ஆழமாக பதியவில்லை.

உச்சம் இந்த வரியில் தெரிகிறது. 'தினா அம்மா, இவரு நம்ம டொக்டரு, இவருகிட்ட தகிரியம்மா எல்லாத்தையும் சொல்லும்மா'. அந்த 'நம்ம' என்பதற்கு அழுத்தம் கொடுத்தாள். 'நம்ம' கதையில் அந்த குறிப்பிட்டச் சூழலுக்கு இது தேவையில்லாத ஒரு அழுத்தம். அதனாலேயே இறுதி வரியில், 'ச்சே.. ச்சே.. யார பார்த்து யார் கும்பிடறது, நான்ல உங்கள' வலது கை ஸ்டேரிங்கில் இருந்ததால் இடதுக் கையால் அவளது கூப்பிய கரங்களைப் பற்றிக் கொண்டேன்' என்ற வரியில் அதுவும் 'வலது கை ஸ்டேரிங்கில் இருந்ததால்' என்ற வரியை கடக்கும் போது, இது போன்ற கதைகள் வழக்கமாக விட்டுச்செல்லும் இறுக்கத்தையும் மீறிய நகைச்சுவை உணர்வை தவிர்க்க முடியவில்லை.

சு. யுவராஜனின் 'கருப்பண்ணன்'

இந்தக் கதை தளத்தை தேர்ந்தெடுத்தற்காகவே யுவராஜனை பாராட்டவேண்டும். இது முற்றிலும் நுண்ணுர்வுகளை மையப்படுத்தும் கதை. நுண்ணுர்வுகளைப் பேசக்கூடிய கதைகளம் மலேசியாவில் மிகவும் அரிது. காட்சிகளையும், கதாபாத்திரங்களையும், சம்பவங்களையும் முன்னிருத்தி நகர்த்தப்படும் கதைகள் மிக எளிது எழுதுவதற்கும், வாசிப்பதற்குமே. ஆனால் நுண்ணுர்வுகளை மையப்படுத்தி எழுத்தப்படும் கதைகள் மிகவும் சிரமமானது. அதை சிறப்பாகவும் செய்திருக்கிறார் யுவா. ஆனால் கதை சூழலை
நகர்த்துவதில் உள்ள கற்பனை வறட்சி கதைக்குள் செல்வதில் பெரும் தடையை ஏற்படுத்துகிறது. நுண்ணுர்வுகளை வெளிக்கொணர்வதில் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாக தோன்றுகிறது. மாடுகளோடு தொடங்கிய கதை, அந்த மாடுகளையும் ஒரு கதாபாத்திரம்போல் சித்தரித்துக் கொண்டு போகும் தொனியில், அவைகளும் கதை முழுக்க ஓர் ஆளுமையான கதாபாத்திரமாக வந்திருக்க வேண்டியது. அதை யுவா விரும்பவில்லை போலும், அதன் காரணமாக மாடுகளை பிரதானப்படுத்தும் முற்பகுதி தேவையற்ற நீளமாகப்படுகிறது. தொடக்கமும் முடிவும் எதாவது ஒரு முனையில் சந்தித்திருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. மனிதர்கள் மறுக்கும் மாடுகளின் உலகில் கருப்பண்ணனும், கருப்பண்ணின் உலகில் மாடுகளும், புறாக்களும் நெருக்கமாக அணுகப்பட்டிருக்கலாமோ என்று தோன்றுகிறது.

ம. நவீனின் 'கார்ட்டூன் வரைபவனின் கதை'

இது இன்னொரு அற்புதமான கதை. இது முழுக்க முழுக்க உளவியல் சார்ந்த கதைக்களம். அதுவும் கார்ட்டூன் வரைபவன் என்கிறபோது அதன் உளவியல் கூறுகளே நல்ல இலக்கிய வாசிப்பிற்கு வழிவிட்டிருக்கவேண்டும். அது இங்கு முற்றிலும் தவிர்க்கப்பட்டிருக்கிறது. கதையில் ராஜாவின் மாற்றங்கள் முழுக்க முழுக்க உளவியல் மாற்றங்கள். 'ஒரு நகராண்மைக் கழக மண்டபத்தில் (கவனிக்க... இங்கு நான் அந்த மண்டபத்தின் பெயரைக் குறிப்பிடாதது என் பாதுகாப்புக்கருதிதான்)' என்ற வரி தவிர்க்கப்பட்டிருக்கலாம். அது சட்டென்று கதையை ஒரு உண்மை சம்பவப் பதிவு என்ற வாசகர் மனநிலையையும் வாசிப்பையும் புரட்டிவிடுகிறது.

தற்கொலையை தேர்ந்தெடுக்கும் அந்த மனநிலை இன்னமும் ஆழமாக அணுகப்பட்டிருக்கலாம். வலிகள் இன்னும் ஆழ பதிவாகியிருக்கலாம். '...தனது இறுதி காலத்தில் தன்னையே ஒரு கார்ட்டூனாக மாற்றிக்கொண்ட...' இது மிகவும் நுட்பமான வரி. நமது மனநிலையை அது சார்ந்து தயார்படுத்திவிட்டு, வெருங்கையோடு இறுதியில் அனுப்பிவிடுகிறார் நவீன். கதையின் முதல் இரண்டு பத்திகள் இந்த கதை நகர்விற்கு தேவையே இல்லை என்று தோன்றுகிறது. இந்த கதையை இன்னும் ஆழத்தோண்டி மீட்டெடுக்கலாம், நவீன்.

அகில‌ன்



கதா ஆசிரியரின் எண்ணத்தின் நிழலா அல்லது நிஜத்தின் நிறமா என்று எண்ணும் அளவிற்கு உயிரோட்டமான கதை.படிப்பவர்களின் ஐம்புலன்களையும் துலங்க வைக்கும் எழுத்தின் வல்லமை என்னவென்று சொல்வது! இந்திய சமூதாயத்தின் தற்கால அவலங்களையும் விளம்பரங்களுக்குப் போஸ் கொடுக்கும் அரசியல் வாதிகளின் நீலிக் கண்ணீரும் கதையில் ஓடவிட்டிருப்பது உண்மையை எடுத்தியம்பும் எழுத்தாண்மையைப் புலப்படுத்துகிறது. ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் உயிரோட்டமான வர்ணனைகளின் மூலம் உயிர்கொடுத்து படிப்பவர் மனதில் பயிர்செய்திருக்கிறார். ஏதாவது செய்யவேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருப்பவர்கள் மத்தியில் சொல்லாமலேயே சேவை செய்யும் ஆயம்மாவின் குணச்சித்திரம் அனைவராலும் பத்திரப்படுத்தவேண்டிய குணநலம். செய்தி கிடைத்தால் போதுமென்று இடம் பொருள் ஏவல் அறியாது மனிதம் அற்ற சில பத்திரிக்கைகாரர்களின் போக்கைச் சாடிய கையாடல் உணர்வற்றவருக்கும் உறைத்திருக்கும். தொழில் பக்தியைக் காட்டும் மருத்துவரின் கருத்துக்கள் காரமாக இருந்தாலும் தரத்தைப் பற்றிய சிந்தனை இல்லாதவர்களைச்சாடும் சாயல் சாட்டையடி கொடுக்கிறது. அவள்-நான்-அவர்கள் என் ஆத்மாவில் ஈரம் கசிய வைத்தவர்கள்

இரா. சரவணதீர்த்தா, மலாக்கா



அன்புடையீர்,

நீண்ட நாட்களுக்குப் பின் சண்முக சிவாவின் எப்போதும் போலான, நல்ல கதையைப் படிக்க முடிந்தது. அவருக்கு என் அன்பும், வல்லினத்துக்கு வாழ்த்துக்களும்.

கலாப்ரியா, தமிழ்நாடு



//“ராணுவத்தைப் போலன்றி, புலிகள் வேண்டுமென்றே கண்ணி வெடிகளை ஓர் ஒழுங்கற்று புதைத்துள்ளனர்," என்று விவரித்தார் ம‌ற்றொரு ராணுவ அதிகாரி ஒருவர்.//

சாமாதான காலத்தில் கண்ணிவெடி அகற்றுதல் சம்பந்தமான ஆராய்ச்சி ஒன்றிற்காக HDU நிறுவனத்துடன் இணைந்தது பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களுக்கு புலிகள் தாம் விதைத்திருந்த கண்ணிவெடிகளின் விபரங்களை (mapping ) கொடுத்திருந்தார்கள். ஆனால் இராணுவத்திடம் அப்படியான ஆவணங்கள் எவையும் இருக்கவில்லை. அத்துடன்புலிகள் புதைத்த anti-personal land mines-இல் பெரும்பான்மையானவை jony வகையை சேர்ந்த உள்ளூர் தயாரிப்புகளே. இவற்றின் ஆயுள் காலம் சில வருடங்களே (3 - 5). ஆனால் இராணுவத்தினர் புதைத்த எண்ணற்ற கண்ணிவெடிகள் 50 வருடங்கள் பழுதாகாமல் வெடிக்கத்தயாராக இருக்கக்கூடியவை. கண்ணிவெடி புதைத்தலில் புலிகளுக்கு இருந்த நிதானம் அரசபடைகளுக்கு இருக்கவில்லை என்பதே உண்மை.

//சீரமைப்புப் பணிகளிலும் ஈடுபட்டிருந்த ராணுவத்தினரின் கட்டொழுங்கும் கடப்பாடும் உண்மையில் பாராட்டத்தக்கதுதான்.//

இலங்கை இராணுவம் மிகவும் கட்டுக்கோப்பானது என்பதில் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை. இந்திய இராணுவத்தோடு ஒப்பிடுகையில் (IPKF) மிக குறைவான
எண்ணிக்கையிலேயே யுத்தத்துக்கு புறம்பான வன்முறைகளும் படுகொலைகளும் இடம்பெற்றுள்ளன. ஆனாலும் யுத்தத்தின் போது அப்பாவி மக்கள் மீதான தாக்குதல்கள்
(வான், எறிகணை, துப்பாக்கி சூட்டு) இடம்பெற்றுள்ளன.

உண்மை விரும்பி



வ‌ல்லின‌த்தில் இட‌ம்பெற்றுள்ள‌ சிறுக‌தைக‌ள் மிக‌ அருமையாக‌ உள்ள‌ன‌. சிற்றித‌ழின் த‌ர‌த்தோடு வ‌ல்லின‌ம் வ‌ருவ‌து ம‌கிழ்ச்சி த‌ருகிற‌து. இத‌ழாக‌ வ‌ரும்போது கிடைப்ப‌த‌ற்கு சிர‌ம‌மாக‌ இருந்த‌ நிலை இணைய‌ இத‌ழால் ச‌ரிக‌ட்ட‌ப்ப‌ட்டுள்ள‌து. ந‌ன்றி.

க‌விய‌ர‌சி, கிள்ளான்



வ‌ல்லின‌ம் வார‌ இத‌ழாக‌ வ‌ந்தால் இன்னும் சிற‌ப்பாக‌ இருக்கும். ம‌லாயாவில் இத்த‌னை சிற‌ப்பான‌ ஆளுமைக‌ள் உண்டா என‌ ஆச்ச‌ரிய‌ம் கொள்ள‌ வைக்கிற‌து வ‌ல்லின‌ம். எங்க‌ள் ப‌டைப்புக‌ளை வெளியிடுவீர்க‌ளா?

சோம‌சுந்த‌ர‌ம், த‌மிழ்நாடு



கம‌லாதேவி அர‌விந்த‌ன் அவ‌ர்க‌ளுக்கு, தங்களின் உற்றுழியைப் படித்தேன்.

நடந்த கதையென்று எண்ணுகிறேன். வைதேகியை உங்களிடமிருந்து பிரித்துப் பார்க்க முடியவில்லை.

திசையற்று வாழும் சில படித்த அவலட்சணங்கள், தமக்குள்ளாகச் சில கோணல் நியாயங்களைக் கற்பித்துகொண்டு அவற்றின் அதிகாரத்திலே சுகம் காணும் கொடுமையை நன்றாகவே சித்திரித்துள்ளீர்கள். இருவரைப் பற்றியும் கூச்சப் பட்டு எழுதாமல் நீங்கள் விட்டு விட்ட சில விபரங்களும் தொக்கி நிற்கின்றன.

பெரும்பாலும் இத்தகையினர் சிறுவயதில் பிரச்னைகள் நிறைந்த குடும்பச் சூழலில் வாழ்ந்தவர்களாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. மற்றவர்களைக் காட்டிலும் தம்மை ஏதாகிலும் ஒரு வழியில் மேம்பட்டவர்களாகக் காட்டுவதன் மூலம் சமுதாயத்தைப் பழி வாங்குவதாக ஒரு போலி நிறைவைத் தேடுகிறார்கள் போலும்.

பேதிக்குப் பிந்திய உணர்வுதான்.

சத்தியா



சில சமயங்களில் நியாயங்களை முன்வைப்பவர்களே நியாயமற்று நடந்து கொள்வது காண முடிகின்றது. சமுதாயத்தில் நாமும் ஒரு பகுதி என்பதைப் பல தருணங்களில் மறப்பதே பல சீர்கேடுகளுக்கு வித்திடுகின்றன. ஒவ்வொரு தனி மனிதரிடையே தோன்றும் பழக்க வழக்கங்கள் சமுதாயத்தின் அடையாளமாய் காணப்படுவதை மனக்கண்ணில் நிறுத்தினால் நம் நடைமுறை பழக்கங்களும் சிந்தனையும் மேன்மையுற வாய்ப்புண்டு. சமுதாயத்தை முன்வைத்து பார்க்கும் நாம் அதன் பின்னால் நாம் ஒவ்வொருவரும் அணிவகுத்துள்ளதையும் நினைவில் கொள்ள வேண்டும்.'உற்றுழி' கதை இவ்வாறான சிந்தனைகளை நம் முன்வைத்து கவர்கின்றது. பாராட்டுக்கள் அம்மா.

க.ராஜம்ரஞ்சனி

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வவல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768/span>