இதழ் 14
பிப்ரவரி 2010
  2009-ன் ஆண்டின் சில நினைவுக்குறிப்புகள்… கொஞ்சம் தாமதமாக
சு. யுவராஜன்
 
     
  நேர்காணல்: பகுதி 2

"இது வரைக்கும் நான் விலை போகவில்லை"

பி. உதயகுமார்

பத்தி:

நான் பார்த்த இளையராஜா

அகிலன்

காற்றின் மொழி
வீ. அ. மணிமொழி


2009-ன் ஆண்டின் சில நினைவுக்குறிப்புகள்… கொஞ்சம் தாமதமாக
சு. யுவராஜன்

தும்பி
ம. நவீன்

கட்டுரை:

தாமரை
ஜெயந்தி சங்கர்

சிறுகதை:

குரல்
சீ. முத்துசாமி


ஊமைகளின் உலகம்..!
குரு அரவிந்தன்

மறுபிறவி
கிரகம்

துளசிப்பாட்டி
க.ராஜம்ரஞ்சனி

தொடர்:


எனது நங்கூரங்கள் ...7
இளைய அப்துல்லாஹ்


நடந்து வந்த பாதையில் ...2
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...4


சு. யுவராஜன்


தர்மினி

தினேசுவரி

பா.அ.சிவம்

இளைய அப்துல்லாஹ்

மன்னார் அமுதன்

ரேணுகா

சிறப்புப்பகுதி:

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் - ஒரு பார்வை

புத்தகப்பார்வை:


'சிதைவு'களோடு 'தேம்பி அழாதே பாப்பா'
எம். ரிஷான் ஷெரீப்
     
     
 

மலேசியத் தமிழர்களின் அடிப்படையான குணத்தைத் தேர்வு செய்யும் குறுஞ்செய்தி போட்டி நிகழ்த்தினால் மட்டும் 'மறதி' என்று தட்டித் அனுப்பி 50 சென்னை இழக்கத் தயார். நல்ல செய்திகள் அவர்களுக்கு அநியாயத்திற்கு அரிதாக நிகழ்வதால், அவை நினைவின் சேகரத்தில் பதியும் முன்பே காலக் காற்றில் கரைந்து விடுகிறது. தினமும் நாளிதழ்களின் எதிர்மறையான செய்திகளின் பாரம் தாங்காமல் திணறிடும் தமிழர்கள் அவற்றை இறக்கி வைப்பதற்காக வைட்டமின் மாத்திரைகளைப் போல 'மறதி' மாத்திரைகளைத் தொடர்ந்து உட்கொள்வது, அவர்களின் மறதியை வேகமாக அதிகரிப்பதாகவும் சொல்லப்படுகிறது. இப்படியே போனால், 2070-ல் அரசாங்க கணிப்புப்படி மலேசிய மக்கள் தொகை 7 கோடி ஆகிறதோ இல்லையோ, 'மலேசிய ஹீரோவும்' புரட்சிகர சிந்தனையான 'ஒரே மலேசியா'வின் தந்தையுமான நஜிப்பின் சிந்தனைப்படி தமிழர்கள் தங்கள் இன அடையாளத்தை எவ்வித அழுத்தமின்றி சுயமாக மறந்து, 'ஒரே மலேசியர்' புதிய அடையாளத்தை பெரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார்கள் என நம்பதகாத வட்டாரங்களின் தகவல்கள் சொல்கின்றன.

இதன் அடிப்படையில், சென்ற மாதம் எழுதப்பட்டிருக்க வேண்டிய இக்குறிப்புகள், மறதியால் தாமதமாக இம்மாதம் இடம்பெறுவதற்கு முதலில் மன்னிப்புக் கோருகிறேன்.

1. SPM தேர்வில் 10 பாடங்கள் மட்டுமே எடுக்கும் திட்டத்தை கல்வி அமைச்சு அறிவித்தது தமிழை இன்னும் தேர்வு பாடமாக எடுக்க விரும்பும் தமிழர்களிடையே பெரும் சலசப்பை ஏற்படுத்தியது. அத்தேர்வில் அடிப்படையாக எடுக்க வேண்டிய பாடங்களே பத்தை நெருங்குவதால் தமிழ் மற்றும் தமிழ் இலக்கிய பாடங்களின் நிலையும், அப்படியே கூடுதலாக எடுக்கும் பட்சத்தில் அதன் அங்கீகாரமும் குறித்து பல குழப்பங்கள் எழுந்தன. அரசியல்வாதிகள் எப்போதும் போல மேலும் தங்கள் குழப்பான அறிக்கைகளால் இன்னும் மூளையைக் கலங்க செய்துக் கொண்டிருந்தனர். திரு. திருவேங்கடம் மலேசிய நண்பன் இதழில் இது குறித்து தொடர்ந்து எழுதி முத்தாய்பாக 12/12/2009-ல் ஒரு பேரணியும் நடத்தினார். பேரணி என்றால் ஊர்வலம் போவது அல்ல. தோட்ட மாளிகையில் இப்பிரச்சனையின் எழுந்த குழப்பங்களுக்கு விளக்கமும், தமிழர்களின் இப்பிரச்ச‌னையின் தீர்வையும் எதிர்பார்ப்பையும் அரசுக்குத் தெரிவிக்கும் முகமாக ஒரு மனுவிலும் கையெழுத்திட்டு வழங்கினோம்.

திரு. திருவேங்கடம் முன்னாள் அரசியல்வாதி என அறிகிறோம். பொதுவாக இன்றைய பெரும்பாலான இளைஞர்களைப் போல நானும் அரசியல்வாதிகளை நம்புவதில்லை. ஆனால் அன்றைய கூட்டத்தில் அதிசயப்படும் வகையில் திருவேங்கடம் மிகவும் நிதானமாக உரையாற்றினார். (அன்று மிகவும் கொதிப்படைந்து சீறத் தொடங்கி பேரணியை திசைமாற செய்த பெருமை நமது மதிப்புக்குரிய எழுத்தாளர் சங்கத் தலைவரையே சாரும்.) தன்னுடைய உணர்ச்சியைவிட, பிரச்சனை தீர்வே அவசியம் என தொக்கி நின்ற உரை அது. நமது பிரச்சனைகளை முன்னெடுப்பவர்களிடம் அருகி வரும் பண்பு இது.

ஜனவரியில் பள்ளித் தொடங்கும் முன்பே சாதகமான பதில் அரசிடமிருந்து வரும் என ஒரு நம்பிக்கை அன்றைய தினம் எனக்குள் அதிசயமாக முளைத்தது. ஆனால் நமக்கெல்லாம் அவ்வளவு சீக்கிரம் நல்லதெல்லாம் நடந்து விடுமா? நாள் பிப்ரவரியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் இவ்விடயம் குறித்து முறையான தகவல்களோ முடிவுகளோ இல்லை. கல்வியிலும் இனவாதத்தின் ரேகைகள் படர்வது ஆழ்ந்த சோர்வையும் வேதனையும் தருகிறது. ஈழம் தன்னிச்சையாய் நினைவுக்கு வருகிறது.

2. இந்திய ஆய்வியல் துறையில் நமது பேராசிரியர்களின் உச்சக்கட்ட ‘தத்துவ மோதல்’ மலாயாப் பல்கலைக்கழகத்தில் வெடித்து நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. அவர்களின் தலைமைத்துவப் பண்புகள் கேள்விக்குள்ளாக்கப்பட்டு ஒரு வட இந்தியர் தலைவராக அமர்த்தப்பட்டதாகச் சொல்லப்பட்டது. பாட்டாளிகளிடம் பணம் திரட்டி தமிழவேள் கோ. சாரங்கபாணி அவர்களால் தொடங்கப்பட்டத் துறை இத்தகைய கதியை எட்டியதை எண்ணி தமிழன்னை கண்ணீர் விட்டு கதறியிருப்பாள்.

திரு. பசுபதி போன்றவர்கள் மலாயாப் பல்கலைக்கழகத்தினரிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் இந்த முடிவு தற்காலிகமானதுதான் என விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் இப்போது ஒரு மலாய்க்காரர் துறைத் தலைவராக இருப்பதாக அறிகிறோம். தமிழ் சமுகத்தின் அடுத்தக் கட்ட நகர்வுக்கு சிந்தனைப் புள்ளியாக இருந்து வளர்ச்சிப் பணியாற்ற வேண்டிய பேராசிரியர்கள் ஒற்றுமையின்மையால் இப்படி வீழ்ந்துக் கிடக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எங்கேயோ படித்த கவிதை வரியை இப்படி மாற்றி சொல்லவேண்டும்போல் தோன்றுகிறது. 'இருப்பாய் தமிழா செருப்பாய்'.

3. கார் திருட்டு சம்பந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த குகன் பிறகு மர்மமான முறையில் போலிஸ் நிலையத்தில் இறந்து கிடந்தார். அவரது நுரையீரலில் தேங்கியிருந்த திரவத்தால்தான் அவருக்கு மரணம் சம்பவித்ததாக போலிசார் தெரிவித்தனர். சவப் பரிசோதனை முடிந்து உடலை பெறுவதற்காக சென்ற குகனின் குடும்பத்திற்கு அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. குகனின் உடலில் வலுவாக தாக்கப்பட்ட வடுக்கள் நிறைந்திருந்தன. அதன் பிறகு மலேசிய தினசரிகளில் தலைப்பு செய்தியாக குகன் சில வாரங்கள் இருந்தார்.

போலிசார் முறையற்ற வகையில் இந்த பிரச்சனையை மூடி மறைக்க முயன்றதோடு மறு பரிசோதனை வேண்டிய குடும்பத்தினரையும் முடிந்தவரை அலைக்கழித்தனர். இதை ஒரு கொலை என்று வர்ணித்த சட்டத்துறை அலுவலகம் இதில் சம்பந்தப்பட்ட 11 போலிசார் மீதும் முறையான நடவடிக்கை எடுக்கும் என முன்பு சொல்லப்பட்டது. ஆனால் இப்போது கடுமையாக தாக்கியதாக P. நவிந்திரன் என்ற ஒரு கடைநிலை காவலர் மீது மட்டும் வழக்கு பதிவு செய்துள்ளது சட்டதுறை அலுவலகம்.

ஹிண்ட்ராப் இயக்கம் இத்தகைய காவல் தடுப்பில் நிகழும் இந்தியர்களின் இறப்பை எதிர்த்துதான் முதலில் தொடங்கப்பட்டது என்பதை முதலில் நாம் நினைவில் கொள்வோம். ஹிண்ட்ராப் பிறகு பெரிய அரசாங்க எதிர்ப்பு இயக்கமாக உருமாறியதோடு, இந்தியர்கள் ஆளும் தேசிய முன்னணியை தேர்தலில் புறக்கணித்ததும் வரலாறு. நமது அரசு வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்வதேயில்லை.

4. காவல் துறையினரின் தடுப்பு காவல்களில்தான் மரணம் ஏற்படுவதாக நினைக்க வேண்டாம். ஊழல் தடுப்பு பிரிவினரின் தடுப்பு காவலிலும் தியோ பெங் ஹோக் என்ற முப்பது வயதைக் கொண்ட இளைஞர் மரணமடைந்தார். இவர் சிலாங்கூர் மாநிலத்திலுள்ள சட்டமன்ற உறுப்பினரின் செயலாளராக இருந்தவர். ஊழல் சம்பந்தமாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் மறுநாள் பிணமாக ஐந்தாவது மாடியில் கண்டெடுக்கப்பட்டார். பதினான்காவது மாடியிலுள்ள ஊழல் தடுப்பு அலுவலகத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்டதாக முதலில் சொல்லப்பட்டது.

பிறகு சவப் பரிசோதனையில் தாக்கப்பட்டதிற்கான அறிகுறிகள் தெளியப்பட்டது. வழக்கு நடத்துக் கொண்டிருக்கிறது. குகன் வழக்கைப் போல கடைசியில் ஒரு கடைநிலை ஊழியர் தண்டிக்கப்பட்டு பிரச்சனையை மூடப்போவது இப்போதே ஊர்ஜிக்க முடிகிறது. தியோ எதிர்க்கட்சியைச் சார்ந்தவர். சென்ற தேர்தலில் 2/3 பெரும்பான்மையை இழந்துவிட்ட அரசு எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்களைப் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இத்தகைய நடவடிக்கைகளால் ஆளும் அரசு இன்னும் அதிகமாக தன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொண்டிருப்பது மட்டும் தெளிவாக உணர முடிகிறது.

5. கடந்த ஆண்டில் நடந்து முடிந்த மாஇகா தேர்தலில் துணைத் தலைவருக்குப் போட்டியிட்ட 'மக்கள் தலைவர்' சுப்பிரமணியம் மீண்டும் தோற்றுப்போனார். மஇகா இந்தியர்கள் பிரச்சனைகளை ஆழ்ந்த கவனத்தோடு உணர்ந்து களையும் கட்சியாக வெகுநாட்களாக இல்லை. அதன் தலைவர்கள் தங்கள் பதவியைத் தக்கவைத்துக் கொள்ள மட்டுமே விரும்பும் பக்கா அரசியல்வாதிகள். அவர்களில் யார் வென்றாலும் வீழ்ந்தாலும் சாதாரண இந்திய மக்களின் வாழ்வில் பெரிதாக எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை. இந்த வகையில் சாமி, சுப்ரா, பழனி எல்லாருமே ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.

விஷயம் அதுவல்ல, ஒரு பட்டத்தை இவர்களின் பெயருக்கு முன் இணைத்தது, கூலிக்கு மாரடிக்கும் கூட்டம்தான் என்றாலும் தலைவருக்காவது கொஞ்சம் வெட்கம் வேண்டாமா? சரி மக்கள் தலைவர் என்றால் யார்? நான் வெகுநேரம் யோசித்த‌ப் பிறகு காமராஜர் ஞாபகத்திற்கு வருகிறார். (மலேசியாவில் இதுவரை என்னால் யாரையும் அப்படி சொல்ல முடிவதில்லை).

காமராஜர் இறந்த போது மூன்று மாற்று உடைகள்தான் இருந்தன. (அவர் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தவர் என்பதைக் கொஞ்சம் இங்கே யோசித்துக் கொள்ளுங்கள்). மக்களுக்கு ஒழுங்காக பணியாற்ற தவறிய பாவ மூட்டை போதாதா நீங்களெல்லாம் சுமப்பதற்கு!

6. சரி ஏதாவது நல்ல செய்தியோ, நிகழ்வோ நடைப்பெற்றதா என யோசிக்கும் பொழுது, மண்டை அதிகமாக காயத்தான் செய்கிறது. தமிழ் அறவாரியம், மலேசிய இந்திய அறிவார்ந்த இயக்கம் (MISI), மலேசிய சமுக கல்வி அறவாரியம் (MCEF), EWRF போன்ற அரசு சாரா இயக்கங்கள் இணைந்து நடத்தும் தமிழ்ப் பள்ளி மாணவ‌ர்களுக்கான 'அறிவியல் விழா' மிக முக்கியமான முயற்சியாகும். அறிவியல் விதிகளை நிரூபிக்கும் அறிவியல் பரிசோதனைகளை ஆசிரியர்கள் உதவியுடன் உருவாக்குவதோடு அதை தெளிவாக நீதிபதிகள் முன் விளக்கவும் வேண்டுகிற இவ்வறிவியல் போட்டி மாணவர்களை அறிவியல் சிந்தனையுடையவர்களாக உருவாக்குவதோடு அவர்களின் பேச்சுத் திறனையும் தன்முனைப்பையும் வளர இவ்விழா பெரிதும் உதவுகிறது.

நான் நான்காம் படிவம் படிக்கும்போதுதான் அறிவியல் பரிசோதனை உபகரணங்களைத் தொடவே அனுமதிக்கப்பட்டேன். அதற்கு முன்பு வரை மேஜிக் நிபுணரைப் போல ஆசிரியரே பரிசோதனைகளைச் செய்வார். நாம் வாயைத் அகலமாக திறந்து பார்த்துக் கொள்ள வேண்டியதுதான். ஆரம்பப் பள்ளியிலேயே அறிவியல் பரிசோதனைகளைப் பற்றி முறையான தகவல்களை அறிந்துக் கொள்ளக் கூடிய வாய்ப்பினைப் பெற்றுள்ள இந்த இளைய சகோதரர்களைக் காணும்போது கொஞ்சம் பொறாமையாகத்தான் இருக்கிறது. எதிர்காலத்தில் அறிவியல் உலகம் கொண்டாடும் சிறந்த மலேசிய இந்திய அறிவியலாளரை உருவாக்க இவ்விழா நிச்சயம் உதவும் என்ற நம்பிக்கை மனதில் வளர்கிறது.

7. மக்கள் கூட்டணி ஆட்சியில் இருக்கும் சிலாங்கூர் மற்றும் பினாங்கில் தமிழ்ப் பள்ளிகளுக்கு மாநில அரசுகள் மானியம் வழங்கியுள்ளன. சிலாங்கூரில் 1.6 மில்லியன் என்று அறிகிறோம். இன்றைய தேதியில் இது ஒன்றும் பெரிய தொகையில்லை என்றாலும் கொடுக்கப்பட்டதற்காக மகிழ்ச்சிதான். இருப்பினும் சில சிந்தனைகள் மனதை சஞ்சலத்துள்ளாக்குகின்றன. தேசிய முன்னணியின் தமிழ்ப்பள்ளிகள் மீதான மாற்றாந்தாய் போக்கு ஆயிரத்துக்கும் மேலிருந்த தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கையை 523–ஆக கடந்த ஐம்பது ஆண்டுகளில் குறையச் செய்துள்ளது. 523 பள்ளிகளிலும் அரசாங்கத்தின் முழு மானியம் பெறும் பள்ளிகள் வெறும் 150 சொச்சம்தான். மீதமுள்ள 300க்கும் மேற்பட்ட பள்ளிகள் பகுதி மானியம் பெற்று பரிதாபமான நிலையில் காலத்தைத் தள்ளிக் கொண்டிருக்கின்றன.

கொஞ்சம் சுயநினைவோடு யோசிப்பவர்கள் யாரும் கேட்க கூடிய கேள்விதான். மீதமுள்ள பள்ளிகளையும் முழு மானிய பெறும் பள்ளிகளாக மாற்றிவிட்டால் இந்த உதவித் தொகை தர தேவையில்லை அல்லவா. இப்படிதானே இதற்கு முன் தேசிய முன்னணியும் பிய்த்து பிய்த்து பிச்சைப் போட்டுக் கொண்டிருந்தது. அப்புறம் தேசிய முன்னணிக்கும் மக்கள் கூட்டணிக்கும் என்ன வித்தியாசம்?

8.


9.

பி.கு. : குறைந்தது எட்டுக் குறிப்புகளாவது எழுத வேண்டுமென்றுதான் முதலில் நினைத்தேன். ஏழாவ‌து குறிப்பு எழுதிக் கொண்டிருக்கும்போதே 'மறதி நோய்' என்னையும் தாக்கிவிட்டது. நானும் தமிழன்தானே. சில நண்பர்களிடம் குறிப்புகள் கேட்டுப் பார்த்தேன். சமூகம் என்றதும் 'Selective amnesia' அவர்களையும் தாக்கியிருந்தது. ஒருவர் பட்டென்று தனக்கு மகன் பிறந்திருப்பதாக சொன்னார். எனக்குப் புதிய இடத்தில் வேலை. இப்படி எதாவது சொல்லிக்கொள்ள வேண்டியதுதான். வேறு வழி?

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768