|
கழற்றப்பட்ட துணி துவைக்கும் இயந்திரங்கள், தொலைக்காட்சிகள், வானொலிகள்,
மின் விசிறிகள் இவற்றோடுதான் எனது ஆரம்பப் பள்ளி மாணவ பருவம் விருத்திக்
கண்டது. அப்பாவின் பொழுது போக்கு வித்தியாசமானது. பழுதடைந்த இயந்திரங்களை
வீட்டிற்குக் கொண்டு வந்து அவற்றைப் பழுதுப் பார்த்து அதிக விலைக்கு
விற்றுவிடுவார். அப்போது நாங்கள் வசித்த கம்பத்து வீட்டில் இயந்திரங்களைப்
பழுது பார்ப்பதற்கென்றே தனி அறை இருந்தது. பல்வேறு கருவிகளால் நிரம்பி
கிடந்த அவ்வறையினுள் நுழைந்தாலே எதையாவது எடுத்து கலற்றிப்பார்க்கத்
தோன்றும்.
ஒரு பொருளைப் பழுதுப் பார்க்கும் வரைதான் அது அப்பாவினுடையது. ஒரு வேளை
அப்பொருள் முற்றிலுமாகப் பழுதடைந்திருந்தால் அது எனக்கு உரிமையாகிவிடும்.
பல்வேறு கருவிகளைக் கொண்டு கலற்றுவதும் இணைப்பதுமாக நேரம் கழியும்.
பொதுவாகவே மாணவ பருவத்தில் விளையாட்டுப் பொருட்களைக் கலற்றிப் பார்ப்பது
அவ்வயதின் இயல்பான குணம். எனக்கு கலற்றிப்பார்க்க பல பிரமாண்டமான பொருட்கள்
இருந்தன. கலற்றியப்பின் அவ்வளவு நேரம் அந்த இயந்திரங்களுக்குள்
ஒழிந்துக்கொண்டிருக்கும் உபரிப்பாகங்கள் தொப்பென குதித்து நான்கு
திசையிலும் ஓடத்தொடங்கும். இயந்திரங்களின் வெளிதோற்றத்தைச் சேதாரம்
இல்லாமல் என்னால் இணைக்க முடிந்திருந்ததே தவிர இது போன்ற சின்ன சின்ன
உபரிகளை எங்கே எப்படி பொருத்துவதென தெரியாமலே இருந்தது.
எனது சேமிப்பில் இருந்த உபரி பாகங்களை வைத்துக்கொண்டு என்ன செய்வதென
தெரியாமல் விழித்தக் காலங்களில் அவை எனதறையில் பெரிய குப்பையாக வளர்ந்தது.
எல்லாவற்றையும் ஒவ்வொரு நாளும் தரையில் கொட்டி ஒன்றோடொன்று இணைத்துப்
பார்த்தேன். அந்தந்தப் பொருட்கள் அந்தந்த இடத்தில்தான் இருக்க வேண்டும்
என்ற கட்டுப்பாடுகள் முதன் முதலாக உடைபடும் போதுதான் கண்டுப்பிடிப்புகள்
உருவாயின. உபரிப்பாகங்களை மீண்டும் பொருத்தமுடியாத வருத்தம் ஓடி அவற்றை
வைத்து எனக்கான விளையாட்டுப் பொருட்களைத் உற்பத்தி செய்து கொண்டேன்.
உருவாக்குதலில் சிலிர்ப்பு எனக்கு ஓரளவு புரிந்தது.
***
கொஞ்ச நாட்களில் எனக்கு இயந்திரத்தனமான பொருட்கள் மீது ஆர்வம் குறைந்தது.
அதிக பட்சம் அவற்றைக்கொண்டு ஒலி மற்றும் ஒளி மட்டுமே எழுப்ப இயன்றது.
ஆனாலும் அவற்றுக்கு எனக்கும் பெரிய உறவுகள் இல்லாமலேயே இருந்தது. யாரோ
ஒருவரின் எச்சத்தை நான் மறு சீரமைத்து பயன் படுத்துவது மனதில் ஒட்டாமல்
விலகியே நின்றது. எளிய பொருட்கள் ஆனாலும் சொந்த கண்டுப்பிடிப்பாக இருக்க
வேண்டும் என நினைத்தேன். கண்ணில் தெரியும் பொருட்களையெல்லாம் எப்படி
விளையாட்டுப் பொருட்கள் ஆக்குவதென ஏங்கித்திரிந்தேன்.
ஒரு முறை கோயில் உபயத்தில் நாதஸ்வரம் வாசிப்பதைப் பார்த்தவுடன் எனக்கும்
நாதஸ்வரம் வாசிக்கும் ஆர்வம் எழுந்தது. வாயில் நீண்டதொரு குழாயை
வைத்துக்கொண்டு தலையைக் சுழற்றும் பாவனை மேல் ஆர்வம் எழுந்தது. நாதஸ்வரம்
செய்ய முடிவெடுத்தேன். அப்போது எங்கள் வீட்டைச் சுற்றிலும் பழ மரங்கள்
அதிகம். வீட்டின் பின்புறத்தில் பப்பாளி மரங்கள் குவிந்திருக்கும்.
அவற்றில் காய்ந்து விழும் பப்பாளி இலைகளின் காம்புகள் நாதஸ்வர குழாயை
நினைவுப்படுத்த அவற்றை எடுத்து சீர் செய்தேன். அடியில் அகன்றும் நுனியில்
கூர்மையாகவும் இருக்கும் பப்பாளி இலையின் காம்பு வாயில் வைத்து சுழற்ற
வசதியாக இருந்தது. ஓசை எழும்ப நீர் உரிஞ்சும் குழாயை எடுத்து முன்புறம்
கூர்மையாக வெட்டி ஓசை வரச்செய்தேன்.நீர் உரிஞ்சும் குழாயைக் காம்பில்
பொருத்தினேன். உருவானது நாதம். எனக்காக நான் உருவாக்கிய நாதம்.
இயற்கையிடம் நான் பெற்றுக்கொள்ள வேண்டியது அதிகம் இருப்பதாக உணர்ந்தேன்.
எங்கள் வீட்டில் மரவள்ளிக்கிழங்கு மிகப் பிரயசித்தம். வீட்டிற்கு
வருபவர்களுக்கு இலவசமாகவே அம்மா கிழங்கைத் தருவார். ஏதேச்சையாய் ஒருதரம்
மரவள்ளி பாத்தியில் அம்மா வேலை செய்து கொண்டிருக்கும் போது ஓர் இலையைப்
பறித்து நான் விளையாடிக் கொண்டிருந்தேன். மரவள்ளி இலையைத் தாங்கியிருக்கும்
சிவப்பு காம்பின் சிறப்பினை நான் உணர்ந்த நிமிடம் அது. மற்றக் காம்புகள்
போலல்லாமல் மரவள்ளியின் காம்புகளை உடைத்தால் அதன் சிவப்பு நார்கள்
மறுமுனையில் இருக்கமாக ஒட்டியே இருக்கும். தொடர்ந்து காம்புகளை உடைத்து
கீழ் நோக்கி இழுக்க கோர்வையாய் இறங்கி சங்கிலியாய் உருவானது. நான் எனக்கான
சங்கிலியை தினம் தினம் மரவள்ளிக் காம்பிலிருந்து உருவாக்கினேன். இலையை
வடிவாக கிழித்து அணிந்து கொண்டேன்.
சங்கிலி தயாரானவுடன் மோதிரம் அணிந்துகொள்ளும் ஆர்வம் வந்தது. பல்வேறு
மூலங்களில் இருந்து பொருட்களை எடுத்து மோதிரம் உருவாக்கத் தொடங்கினேன்.
ஒன்றும் சரிவரவில்லை. மோதிரத்தின் மினுமினுப்பைத் தேடித் திரிந்தபோதுதான்
மணல் மேட்டில் மினு மினுக்கும் கண்ணாடிகள் கண்ணில் பட்டன. வீட்டை மறு
சீரமைப்புச் செய்ய அப்பா வாங்கி குவிந்திருந்த மணலில் அந்த அதிசயம்
இருந்தது. ஒன்றின் மேல் ஒன்று ஒட்டியபடி அடுக்கடுக்காக இருந்தன அந்தக்
கண்ணாடி துகல்கள். சூரிய ஒளியில் மினு மினுத்த அவை என் மோதிரத்தின்
வைரங்கள் ஆயின. கம்பிகளிலும் தகரங்களிலும் மோதிரத்தை உருவாக்கி வைரங்களைப்
பதித்தேன்.
நாமே உருவாக்கிய பொருட்கள் நம் உடலில் ஒட்டியிருக்கும் தருணங்கள் ஆச்சரியம்
அளிக்கக் கூடிய உணர்வுகளை ஊட்டக்கூடியது.
***
கொஞ்ச நாட்களில் கம்பத்தில் இருந்த மந்திரிக்கும் தாத்தாவின் அறிமுகமும்
பக்கத்து வீட்டு கொய்தியோ மணியத்தின் அறிமுகமும் மூலிகைகளின்பால் நாட்டத்தை
ஏற்படுத்தியது. கீழாநெள்ளி, கரிசலாங்கன்னி, ஆடத்தொடை, நொச்சி இலை, எறுக்கஞ்
செடி, சிறு நங்கை, பெரு நங்கை, கர்ப்பூரவள்ளி என எங்கள் கம்பத்தில்
கிடைக்காத மூளிகைகள் இல்லை. ஒவ்வொன்றின் பயன்பாடும் துள்ளியமாய் எனக்கு
அறிமுகமாயின. சதா காடுகளில் சுற்றித்திரிந்த காலத்தில் செடிகளின் தன்மைகள்
ஓரளவு புரிந்தன. மூலிகைகளைக் கொண்டு புதிதாக மருந்து ஏதாவது தயாரிக்கும்
ஆர்வம் எழுந்தது.
ஏதேதோ செடிகளைப் பறித்து ஒன்றாகக் கலந்து அதன் வாடைகளையும் தன்மைகளையும்
ஆராய்ந்தபடி இருப்பேன். அவற்றின் ஒன்றும் பேதம் தெரியாது போனாலும் ஏதோ
ஒன்றை செய்து கொண்டிருப்பது மனதிற்கு உற்சாகம் தந்தபடி இருக்கும். ஏதாவது
ஒரு தருணத்தில் மூலிகைகளைச் சேமித்து வைத்திருக்கும் எனது பிளாஸ்டிக்
குடுவையில் இருந்து எழப்போகும் அதிசயத்திற்காகக் காத்திருந்தேன்.
***
பின்னாளில் ஓரளவு விபரம் தெரிந்த பின்னர் எனது கண்டுப்பிடிப்புகள் பற்றிய
அத்தனை பெருமைகளும் சிதையத் தொடங்கின. நான் சந்தித்த எனது நண்பர்கள்
பலருக்கும் என்னைவிட நேர்த்தியாய் மின் பொருட்களை இயக்கத் தெரிந்திருந்தது.
சைக்கிள் ப்ரேக்கைப் பிடித்தால் விளக்கு எரிவதும் ஒலி எழுப்புவதுமாக
அவர்களின் கண்டுப்பிடிப்புகள் உயர்ந்திருந்தன.
எனது நாதஸ்வரத்தைக் கண்ட மாமா அதை தான் சின்ன வயதிலேயே செய்து ஊதி
பார்த்ததைப் பகிர்ந்து கொண்டார். அம்மா சிறுவயதில் தன் தங்கைக்கு மரவள்ளிக்
கிழங்கு காம்பில் சங்கிலி செய்து கொடுத்ததைச் சாதாரணமாகச் சொன்னார்.
எல்லாவற்றுக்கும் மேல் எனது பாட்டிக்கு எந்த மூலிகை என்ன செய்யும் என
துள்ளியமாகத் தெரிந்தது.
இப்படி நான் கண்டடைந்த அனைத்துமே ஏற்கனவே யாரோ ஒருவருக்கு அறிமுகமானதாக
இருந்தது. அவை அவர்களுக்குத் தங்கள் மூதாதையர்கள் மூலம் அறிமுகமானதாக
இருந்தது. எனது கண்டடைதல்களில் நான் நம்பிக்கை இழந்தேன்.
***
இன்று சிந்திக்கும் போது ஒன்று தெளிவாகத் தெரிகிறது. மாணவ பருவத்தில்
ஒவ்வொருவருமே புதிய கண்டடைதலையே தேடி அலைகின்றனர். ஒரு குழந்தைக்கு மனம்
உருவாகும் தருணம் மிக அற்புதமான கனம்.
சந்தைகளில் குவித்து விற்கப்படும் விளையாட்டுப் பொருட்கள் அனைத்திற்குமே
குழந்தைகள் கொண்டிருக்கும் அர்த்தம் முற்றிலும் வேறானதாகப் படுகிறது.
அவற்றின் மூலம் குழந்தைகள் தங்களின் உலகை கண்டடைய முயல்கிறதே தவிற அதுவே
அதன் உலகாவதில்லை. பொருட்களை குழந்தைகள் உடைப்பதும் நாம் வீசி எரியும்
பொருட்கள் குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்கள் ஆவதும் இந்த
அடிப்படையில்தான் என நினைக்கிறேன்.
புதியதை தேடுவதிலும் புதிதாக ஒன்றை உருவாக்குவதிலும் பெரும்பாலான
மானிடர்களுக்கு பிரவியிலேயே ஓர் ஆர்வம் இருக்கவே செய்கிறது. துரதிஷ்டமாக
நமது சமூகத்தில் அவ்வார்வத்தை மேலும் மேலும் வார்த்தெடுப்பதில் நாம்
அக்கரையில்லாமலேயே இருக்கிறோம்.
ஆனால் அண்மைய காலமாக சி.சி.ஐ மற்றும் தமிழ் அறவாரியம் மூலமாக நடத்தப்பட்ட
'இளம் ஆய்வாளர்கள்' போட்டி நாடு முழுதும் நடைப்பெற்று வருகிறது. ஓர் பள்ளி
ஆசிரியராக நான் இது போன்ற போட்டிகளில் மாணவர்கள் செலுத்தும் ஆர்வத்தைக்
கண்கூடாகக் கண்டு வருகிறேன்.அது பள்ளிப் பாடங்களைவிட பன்மடங்கு அதிகமானது.
இது போன்ற போட்டிகள் மூலம் மாணவர்கள் சுயமாகவோ ஆசிரியர்களின்
வழிக்காட்டலிலோ புதிய கண்டுப்பிடிப்புகளை செய்துள்ளனர் என்பது அதன்
இறுதிச்சுற்றில் காண முடிகிறது. பெரும்பாலான நிகழ்வுகள் போல இதுவும்
வருடத்திற்கு ஒரு விழா போல நடந்து பின் மறந்து விடப்படும் நிலையிலேயே கடந்த
ஆண்டுகளில் இருந்தது. அந்த ஆரோக்கியமான சூழல் அதன் தன்மை மாறாமல் இனி ஆண்டு
முழுதும் தொடர மிக விரைவில் சி.சி.ஐ 'தும்பி' எனும் அறிவியல்
மாணவர்களுக்காக ஆங்கிலம் தமிழ் என இரு மொழிகளிலும் கொண்டுவர
திட்டமிட்டுள்ளது.
'தும்பி' எனும் காலாண்டு அறிவியல் இதழுக்கு ஆசிரியராக
நியமிக்கப்பட்டுள்ளார் இலக்கிய உலகில் நன்கு அறிமுகமான யுவராஜன். இயற்பியல்
துறையின் பட்டதாரியான அவரின் முழுமையான ஆற்றலில் அவ்விதழ் நிச்சயம்
தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே நல்ல அறிவு வளர்ச்சியையும் அறிவியல்
அறிமுகத்தையும் கொடுக்கும். இலக்கியம் கலை எழுத்து என்பதை மீறி தனது அடுத்த
தலைமுறைக்கு ஏதாவது நன்மைகளை விட்டுச்செல்ல எழுத்து மட்டுமல்லாது
நேரடியாகவே களத்தில் இறங்க வேண்டியுள்ளது. அதற்கு பலரும் தயாராக
இருப்பதில்லை.
அது தவறும் ஆகிவிடாது. சில உன்னதமான மனிதர்களால் மட்டுமே உன்னதமான்
விஷயங்களை செய்ய முடிகின்றது.
|
|