|
சீன மொழியில் தாமரை எனும் சொல்லைப் போலவே அமைதி மற்றும் இணக்கம் ஆகிய
சொற்களும் உச்சரிப்பில் ஒற்றுமை கொண்டு விளங்கும். ஆகவே தான் தாமரையை
சீனத்தில் அமைதிக்கும் இணக்கத்துக்குமான ஒரு குறியாடாகவே கொள்கின்றார்கள்.
தாமரையைக் கண்ணால் காண்பதே அமைதியையும் பிரபஞ்ச இணக்கத்தையும் கொணரும்
என்றொரு நம்பிக்கை சீனக் கலாசாரத்தில் நிலவி வருகிறது.
சீனத்தில் மனிதத்தின் விடாமுயற்சியைக் குறிக்கக்கூடிய தாமரை மத்தியகிழக்கு
நாடுகள், ஆசியா, ந்யூ கினியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் தொன்று
தொட்டு காணப்பட்டாலும் தெற்காசிய புராணங்களில் தான் மிக அதிகமாக
சித்தரிக்கப்படுவதையும் குறிப்பிடப் படுவதையும் காணலாம். கீழைச் சமயங்கள்
தோன்றுவதற்கு முன்பே இந்து சமவெளி நாகரிகத்தில் தாமரை மிக முக்கிய
சின்னமாகக் கருதப் பட்டதற்கான அகழ்வாதாரங்களுண்டு. 5000 ஆண்டுகளாக பல்வேறு
தெற்காசிய மதங்களிலும் தாமரைக்கு முக்கிய இடம் கொடுக்கப்பட்டு வருகிறது.
அலங்கார மற்றும் வழிபாட்டுப் பயன்களுக்கென்று தாமரை பழங்காலம் முதலே
சீனத்தில் சாகுபடி செய்யப்படுகின்றது.
இந்து சமயக் கலைகளில் மட்டுமில்லாது பௌத்தக் கலைகளிலும் இலக்கியங்களிலும்
சிற்பக்கலைகளிலும் தாமரைக்கு மிக முக்கிய இடமுண்டு. சீனத்து ஓவியங்களிலும்
கவிதைகளிலும் தாமரை கருப்பொருளாகிறது. நளின நடனங்களிலும் கட்டடவியற்
கலையிலும் சிற்பக் கலையிலும் அன்றாட பீங்கான் பாத்திரச் சித்திரங்களிலும்
கூட தாமரை சித்தரிக்கப் படுவதைக் காணலாம். தாமரைச் சின்னங்கள் பௌத்த
மடாலயங்களில் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா போன்ற நாடுகளில் தாமரை மலர்கள்
அதன் அழகிற்காகவும் நறுமணத்திற்காகவும் குளங்களில்
வளர்க்கப்பட்டிருக்கின்றன. கி.மு முதல் நூற்றாண்டுகளில் பௌத்தம்
இந்தியாவிலிருந்து சீனத்துக்குப் பரவிய போது புத்தரைக் குறிக்க
முதன்முதலில் தாமரையைத் தான் பயன்படுத்தினர். அப்போதிலிருந்தே
பதாகைகளிலும், நுட்ப தையல் வேலைகளிலும், சின்னங்களிலும் ஓவியங்களிலும்
தாமரைக்கு மிகமுக்கிய இடமுண்டு. தாமரை தூய்மையின், ஞானத்தின் சின்னமாக
விளங்குகிறது. ஞானத்தேடலில் தாமரைக்கென்றொரு இடமிருக்கிறது. தாமரை சேற்றைத்
துளைத்துக் கொண்டு வானை நோக்கி எழுவது போல மறுபிறப்புகள் பல கொண்ட
சுழற்சியில் ஒவ்வொரு முறையும் உடலைத் துறந்து ஆத்மா முக்தி பெறுகிறது
என்பதில் பௌத்தர்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். தூய்மையான
இதழ்களைக் கொண்ட தாமரை ஞானத்தின் உறைவிடமாகிறது. மெதுவாக அது தன் இதழ்களைத்
திறந்து சூரியவொளியைத் தன்னுள் ஏற்று தன் அழகையும் தூய்மையையும் மணத்தையும்
இவ்வுலகுடன் பகிர்கிறது.
பௌத்தத்தின் எட்டு முக்கிய புனித சின்னங்களுள் தாமரையும் ஒன்று.திபெத்தில்
தாமரை காணக் கிடைக்காதது. அங்கே உள்ள சீதோஷணம் தாமரை வளர்வதற்குகந்ததல்ல.
இருந்தும், அவர்களின் கலை வடிவங்களிலும் தாமரையைக் குறியீடாகக் காணலாம்.
ஆலயங்களிலும் தெய்வங்களின் சித்திரங்களிலும் எட்டு புனித சின்னங்களிலும்
காணலாம். தாமரையின் உருவத்தையும் பயனையும் தத்துவார்த்தமாக்கி பரப்பியதே
பௌத்தம் தான். தாமரை நிரந்தரத்தையும் தூய்மையையும் குறிப்பதாக பௌத்தத்தில்,
அதிலும் குறிப்பாக சீனத்தில் நம்பப்படுகிறது. ஏனெனில், பருவ மழைக்குப்
பிறகு காய்ந்து போன குளத்தடியிலிருந்து தாமரைகள் துளிர்ப்பதைக் கண்ட
பழங்கால மக்களுக்கு தாமரை மறுவுயிர்ப்பின் அடையாளமாகத் தோன்றியிருக்கிறது.
சீனத்தில் முக்கிய பத்து மலர்களில் தாமரையும் முதன்மை பெற்று விளங்குகிறது.
பளீரென்ற வண்ணமும் பெரிய இதழ்களும் இனிய நறுமணமும் கொண்ட தாமரை சட்டென்று
வளரக் கூடியதாக இருந்திருக்கிறது. தொன்று தொட்டு சீனத்தில் அரச மாளிகையின்
சோலைகளில் தாமரைப் பூக்களை வளர்த்திருக்கிறார்கள். சேற்றுடனிருக்கும்
குளத்து நீரில் வளரக் கூடியது தாமரைக்கொடி. சீனத்தில் அதன் வேர் உணவாகிறது.
அதனால் தான் எளிய பின்னணியிலிருந்து வந்தபோதிலும் வாழ்வில் முன்னேறி
பிரகாசிக்கும் ஆட்களை சீனர்கள் தாமரைக்கு ஒப்பிடுவார்கள். பெரும்பாலும்
சிகப்பாகவோ வெள்ளையாகவோ இருக்கும் இம்மலர்கள் சீன மருத்துவத்தில்
மூலிகையாகின்றன. கிட்டத்தட்ட தாமரையின் எல்லா பாகங்களுமே பயனுள்ளவை.
சீனாவில் நீரிருக்கும் குளம் குட்டைகளிலெல்லாம் வளரக் கூடிய தாமரை
மழைக்காலத்தில் அறுவடை செய்யப்படும். இதன் வேர் கிழங்கைப் போன்றிருக்கும்.
மாவுச்சத்து, அமீனோ அமிலங்கள், நூண்ணுயிர்ச்சத்து, புரதம் போன்ற அனைத்தும்
அடங்கிய சத்துமிக்க வேரை உணவாகக் கொள்கின்றனர். தென்சீனத்தில், பறித்ததும்
வெடுக்கென்றிருக்கும் பசுமையான நிலையில் பழத்தைப் போலச்
சுவைத்துண்கிறார்கள். வடக்கிலோ காய வைத்து பல்வேறு உணவுப் பதார்த்தங்களில்
பயன்படுத்துகிறார்கள். தாமரை வேரிலிருக்கும் துளைகளில், பாதி வெந்த அரிசிச்
சோற்றை அடைத்து ஆவியில் அவித்தெடுக்கிறார்கள். பின்னர், துண்டுகளாக வெட்டி
சர்க்கரை சேர்த்துப் பரிமாறுகிறார்கள். தாமரை மணத்துடன் இனிப்பாக இருக்கும்
இந்தப் பதார்த்தம் சீனத்தில் மிகவும் பிரபலம்.
ஜியாங்ஸ¤ மற்றும் ஜேஜியாங் ஆகிய மாநிலங்களில் ஏராளமாகப் பயிராகிறது தாமரை.
வேரிலிருந்து பெறப்படும் மாவுச்சத்தை எடுத்துப் பதப்படுத்தி சந்தைப்
படுத்தும் தொழிற்சாலைகள் இப்பகுதிகளில் நிறைய இருக்கின்றன. அந்த மாவை
உடனுக்குடன் கரைத்து கஞ்சி காய்ச்சிக் குடிப்பார்கள். இளம் சூடான நீரில்
சர்க்கரையும் சேர்த்துக் கலந்து சீராகக் கரைத்துக் கொண்டு கொதிக்கும்
நீரைச் சேர்த்தாலே கஞ்சி தயாராகி விடுகிறது. இந்தக் கஞ்சி பசியை
தாகத்தையும் போக்கும் சத்துடையது.
தாமரை உள்ளார்ந்த அமைதியை ஏற்படுத்தி மனத்தூய்மையைக் கொடுப்பதாகவும்
புத்தருக்கு உகந்ததென்றும் சீனர்கள் நம்புகிறார்கள். உணவாகவும்
மருந்தாகவும் இருக்கும் தாமரை, ஆசைகளைக் கடந்த மனதை நினைவு படுத்தி
புத்தரின் போதனைகளை ஒற்றிய சிந்தனைகளை எழுப்பவல்லது. பௌத்தத்தின் அனைத்து
தெய்வங்களுக்கும் தாமரையுடனான ஏதோ ஒருவித தொடர்பிருக்கிறது. முழுமையாய்
மலர்ந்த தாமரையின் மீதமர்ந்திருக்கும் புத்தரையும், கையில் ஒரு தாமரை மலரை
வைத்திருக்கும் புத்தரையும், நின்று கொண்டு இரு பாதங்களுக்கும் இரு
தாமரைகளைக் கொண்டிருக்கும் புத்தரையும் பௌத்தத்தில் நாம் காணலாம்.
பெரிதாக இருக்கும் தாமரை இலைகள் பூவிதழைப் போலவே நீருறிஞ்சும் தன்மையற்றவை.
சேற்றில் பூத்தாலும் மண் மணமற்று நறுமணம் கமழும் மலர்களைப் போலவே இலையானது
பூக்களுடன் இருந்த போதிலும் தனித்திருக்கிறது. சேறு கலந்த நீருக்கு மேல்
வரும் இலைகள் கீழிருக்கும் பகுதிகளுக்கு நிழல் கொடுக்கின்றன. இந்தக் காட்சி
புத்தரையே குறிப்பதாக பௌத்தர்கள் சொல்வார்கள். அவரது நல்லியல்புகள், அன்பு
மற்றும் போதனைகள் அனைத்துயிர்களுக்கும் புகலிடமாகிறது. லௌகீக வாழ்வெனும்
சேற்றுக்குள்ளிருந்து அனுபவம் எனும் நீரைத் துளைத்து ஞானம் எனும்
சூரியவொளியை நோக்கி மலர்வதே தாமரை.
மூடியிருக்கும் தாமரை ஞானத்துக்கான ஆன்மபலத்தையும், திறந்த இதழ்களைக் கொண்ட
மலர் முழு ஞானத்தையும் குறிக்கும். பொதுவாகவே, புத்தர் முழுமையாக மலந்த
தாமரையில் வீற்றிருப்பதைக் காணலாம். அதுவும் எட்டு இதழ்கள் கொண்ட மலரில்.
இது ஞானமார்க்கத்தின் எட்டு நிலைகளைக் குறிக்கும். தாமரை மலரின் அவ்வந்த
நிறமும் குறிப்பிட்ட பொருளை உணர்த்தும். வெண்தாமரை முழுமையான தூய்மை, பூரண
ஆன்மிகம், மனிதத்தை ஆற்றுப்படுத்தும் நல்லியல்பு, மன மற்றும் ஆன்மத் தூய்மை
போன்றவற்றைக் கொண்டு விளங்கும் 'போதி'யைக் குறிக்கும். பௌத்த இறைவியான
தாராவுக்குரியது புண்டரீகா என்றறியப்படும் வெண்தாமரை. தாராவின் உடலும்
வெண்மையாக இருக்கும். கமலா எனப்படும் செந்தாமரை அன்பையும் நேயத்தையும்
குறிக்கும். நேயத்துக்குரிய போதிசத்வரான அவலோகிதீஸ்வரருக்குரியது இந்த
செந்தாமரை. உத்பலா எனும் நீலத் தாமரை அறிவையும் புலன் கட்டுப்பாட்டையும்
குறிக்கிறது. அதனால் தான் அது அறிவுக்கும் ஞானத்துக்குமுரிய பௌத்த தெய்வமான
மஞ்ஜூஸ்ரீக்கு உரியதென்கிறார்கள். பொதுவாகவே தாமரையில் அரிதான ஊதா நிறம்
இறைத்தன்மையைக் குறிப்பதாகச் சொல்வர் சீனர். இளஞ்சிவப்பு நிறத் தாமரை தான்
மிகவும் உயர்ந்தது. ஆகவே தான், பத்மா எனப்படும் இளஞ்சிவப்பு தாமரை
புத்தருக்கே உரியதென்று அவர்கள் நம்புகிறார்கள்.
மூங்கில்கள், காய்கறிச்செடிகள், வாழைமரங்கள் மற்றும் எலும்பிச்சை வகை
மரங்கள் நிறைந்திருக்கும் பூ மோன் பௌத்த ஆலயத்தின் தாமரைகளும் அல்லிகளும்
சீனத்தில் மட்டுமின்றி உலகளவிலும் பிரபலம். ஆலயத்தை சுற்றியிருக்கும்
தோட்டங்களிடையேயான சுற்றுப்பயணிகளின் முக்கிய ஈர்ப்பே ‘தாமரை தோட்டச்
சுற்றுலா’.
ஹோங்ச்சுச்சியாவோ என்ற இடத்தில் தென் சோங் காலத்தில் ஒரு கள் வடிக்குமிடம்
இருந்திருக்கிறது. அதை மேற்கு ஏரிக்கரைக்கு மாற்றியது ச்சிங் காலத்தின்
காங்ஸி என்ற பேரரசர். அதன் பிறகு தான் இந்தப் பெரிய ஏரியோரப் பூங்காவும்
ஏரியும் தாமரைகளுக்குப் பெயர் பெற்றது. 'கோணல் முற்றத்து தென்றலில் ஒரு
தாமரை' என்ற பொருள் கொண்டு 'ச்சுயுவான் ஃபெங்ஹே' என்றறியப்படுவது
ஹாங்ஜோவ்வின் மேற்கு ஏரியில் மிக முக்கிய இயற்கைக் காட்சி. கோடையில்,
மாடங்களும் கோபுரங்களும் பாலங்களும் கொண்ட பூங்காவுக்கருகில் இவ்வேரியின்
தாமரைகள் கண்ணைப் பறிக்க பூத்துக் குலுங்கும். ஆண்டுதோறும் மிகப் பெரிய
எண்ணிக்கையிலான ஆர்வலர்களை இழுக்கக் கூடிய அற்புதக் காட்சியாக
விளங்குகிறது.
|
|