|
கடந்த மாதத்தின் தொடர்ச்சி...
கேள்வி: ஹிண்ட்ராபின் போராட்டம் நேர்மையானதுதானா? ஒவ்வொரு
குடும்பத்திற்கும் ஒரு லட்சம் ரிங்கிட்டை நஷ்ட ஈடாக ஹிண்ட்ராப் பெற்றுத்
தரும் எனும் பிரச்சாரத்தினால் கூடிய கூட்டம் என சொல்லலாமா?
பதில்: நாங்கள் எந்த இடத்திலும் அவ்வாறு பிரச்சாரம் செய்யவில்லை. ஒரு
கூட்டத்திற்கு நாங்கள் செல்லும் போது 100க்கும் மேற்பட்ட வீடியோ கேமராக்கள்
எங்களை படம் எடுக்கின்றன. அவ்வாறு பதிவு செய்யப்பட்ட ஏதாவது ஒன்றில்
நாங்கள் அவ்வாறு வாக்குறுதி கொடுத்ததாக நிரூபிக்கப்பட்டால் அடுத்த நிமிடமே
நான் இந்த இயக்கம், போராட்டம் அனைத்தையுமே கலைத்து விடுகிறேன். உண்மையில்
மக்களிடம் இதுபோன்ற தகவல்களை நம்ப வேண்டாம் என்றுதான் கூறிவந்தோம். பொய்யான
சிலரின் பிரச்சாரத்தினால் பரவிய வதந்தி இது. தமிழ் இனத்தின்
போராட்டத்திற்காகக் கூடிய கூட்டம் அது.
கேள்வி: ஆனால் ஹிண்ட்ராப் மூலம் வசூலிக்கப்பட்ட நிதி குறித்து மக்களிடம்
நிலவி வரும் குழப்பத்திற்கு என்ன பதில் கூறப்போகிறீர்கள்?
பதில்: பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் நாங்கள் சிறைவாசம் சென்றோம்.
ம.இ.காவை போன்றோ அல்லது இதர கட்சிகளைப் போன்றோ ஹிண்ட்ராப் எனும் அமைப்பு
பெரிய வரலாற்று பின்னணியையோ உறுதியான கட்டமைப்பையோ கொண்டிருக்கவில்லை.
அதில் முழுமையாக இயங்கியவர்கள் நானும் என் சகோதரரும்தான். நல்ல வேளையாக
அக்காலக்கட்டத்தில் என் சகோதரர் வெளிநாடுகளில் பிரச்சாரத்தை
மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் ஹிண்ட்ராபிற்கு பல லட்சங்கள்
கிடைத்துள்ளதாக பல தரப்பினர்கள் கூறியுள்ளனர். நீங்கள் கூறியதுபோல மக்களின்
குழப்பத்தை நீக்க அதற்கான கணக்கறிக்கையைத்தான் ஆதாரங்களுடன் தயாரித்துக்
கொண்டிருக்கிறோம்.
கேள்வி: இது குறித்து போலீஸ் தரப்பிலிருந்து விசாரணை இல்லையா?
பதில்: விசாரித்தார்கள். என் யூகப்படி ஹிண்ட்ராப் கணக்கில் இரண்டு லட்சம்
இருக்கும் என்றேன். மேற்கொண்டு பணம் ஹிண்ட்ராபிற்கு வழங்கப்பட்டிருப்பதாக
புகார் இருந்தால் அதை போலீசையே தேடி கண்டுபிடித்து ஒப்படைக்க கூறினேன்.
இரண்டு வருடம் ஆகிவிட்டது. இன்னும் கண்டு பிடித்தப்பாடில்லை.
கேள்வி: அப்படியானால் ஹிண்ட்ராப் பெயரைப் பயன்படுத்தி வீடு வீடாக
வசூலித்தப் பணத்தின் நிலை?
பதில்: அது எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. இது போல பலரும் ஹிண்ட்ராப்
பெயரைப் பயன்படுத்தி பணம் வசூலித்துள்ளனர். அவற்றுக்கு நாங்கள் எப்படி
பொறுப்பாக முடியும்? உண்மையில் ஹிண்ட்ராபின் பல குழப்ப நிலைக்கு அதில்
ஊடுருவிய காவல்துறை உளவாளியே காரணம்.
கேள்வி: வசந்தகுமாரைக் குறிப்பிடுகிறீர்களா?
பதில்: ஆம்.
கேள்வி: நீங்கள் மட்டும்தான் இந்தக் கூற்றை மீண்டும் மீண்டும்
வலியுறுத்துகிறீர்கள்.
பதில்: இல்லை. நீங்கள் வேண்டுமானால் என்னுடன் சிறையில் இருந்த
மற்றவர்களிடம் கேட்டுப் பார்க்கலாம். அவரின் வருகை திடீரென உருவானது.
அவருடன் சிறையில்தான் பேசியது அதிகம். நீங்கள் மனோகரம் மலையாளம்,
கங்காதரனிடம் கூட கேட்டுப் பார்க்கலாம்.
கேள்வி: அவரின் வருகையைப் பற்றிக் கூறுங்கள்?
பதில்: பலகாலமாக நீடித்த எங்கள் போராட்டத்திற்கு துணை நிற்கிறேன் என யாரும்
முன்வராத ஓர் இக்கட்டான காலக் கட்டத்தில் வசந்தகுமார் வந்தார். எங்கள்
ஆதரவாளர் என்றார். நாங்களும் பரவசமாக ஏற்றுக் கொண்டோம். பல நாட்களாக
சிக்கலில் கிடந்த வேலைகளை அவர் மிக எளிதாக செய்து முடித்தார்.
கையெழுத்துக்கூட போடத் தெரியாத பாமர மக்களின் ஆதரவு மட்டுமே எங்களுக்கு
இருந்த சூழலில் வசந்தகுமாரை கடவுள் அருளிய கொடை என்று நினைத்தோம். அந்த
நம்பிக்கையில் அவரிடம் வங்கிக் கணக்கிற்கான முழு பொறுப்பையும்
ஒப்படைத்தோம். சிறைக்குச் செல்வதற்கும் முன் ஹிண்ட்ராபின் பணம் அனைத்தையும்
எனது வழக்கறிஞர் வங்கி கணக்கில் சேர்க்கும் படி கூறினேன். ஆனால் அவர்
அப்பணத்தை என்னைச் சார்ந்த நெருங்கிய உறவினர் வங்கிக் கணக்கில் போட்டு
வைத்தார். அவரது திட்டம் அப்போது எனக்குப் புரியவில்லை. அப்பணத்தை நான் இதர
நால்வருடன் பங்கு போட்டுக் கொள்ள ஒரு இரகசிய கூட்டம் நடத்தியதாக அவர்
புகார் செய்த போதுதான் எனக்கு உண்மை புரியவந்தது.
கேள்வி: சிறையில் அவரும் உங்களோடு இருந்தாரே?
பதில்: அப்படியிருப்பதில் ஆச்சரியம் இல்லை. ஒரு சம்பவத்தை நினைவு கூற
விரும்புகிறேன். வழக்கமான சிறை கைதிகளுக்கு ஓரளவு தங்களின் விடுதலை தேதியை
யூகிக்க முடியும். ஆனால், எங்களைப் போன்றவர்களுக்கு விடுதலை நாள் தெரியாது.
அதனால் எப்பொழுது வேண்டுமானாலும் விடுதலை கிடைக்கலாம் என்றிருப்போம்.
நாளைக்குக்கூட விடுதலை கிடைக்கலாம் என்றே நம்புவோம். இந்த மனநிலையால்
எங்குப் பார்த்தாலும் 'Bebas' (சுதந்திரம்) என்ற வார்த்தை அனைவரின்
வாயிலும் ஒலித்துக் கொண்டே இருக்கும். உண்ணும் போதும் உறங்கும் போதும்
மலக்கூடத்தில் கூட அவ்வொலி ஒலித்துக் கொண்டே இருக்கும். நாங்கள்
வசந்தக்குமாரிடமிருந்து அந்த ஒலியைக் கேட்டதே இல்லை. குறைந்த பட்சம் அவர்
மனைவி குழந்தை பற்றிக்கூட பேசிக் கேட்டதில்லை.
கேள்வி: ஹிண்ட்ராப் எனும் பெயரைக் குறித்து பல்வேறு சர்ச்சைகள் உண்டு.
அப்பெயர் இந்து மதம் சார்புடையதாக உள்ளது என்பது அதில் முதன்மையானது.
அப்படியாயின் கிறிஸ்துவர்களுக்கும் இந்திய முஸ்லிம்களுக்கும் உங்களின்
குரல் எழும்பாதா?
பதில்: நான் முன்பே கூறியது போல, எந்தவொரு முன்திட்டமும் இல்லாமல்
உருவாக்கப்பட்டதுதான் இந்த அமைப்பு. எங்கள் குரலைத் தாங்கிச் செல்ல ஒரு
அமைப்பு தேவைப்பட்டது. அதற்காக ஹிண்ட்ராப் எண்டர்பிரைஸ் என்று பதிவு
செய்தோம். எங்கள் போராட்டம் மிக பெரிதாக வெடித்தபோது இது போன்ற கேள்விகள்
எழுந்தன. உண்மையில் நாங்கள் மதச் சார்புடையவர்கள் அல்ல.
கேள்வி: ஹிண்ட்ராபிற்கும் தமிழ்நாட்டின் அமைப்புகளுக்கும் ஏதாவது
சம்பந்தம் உண்டா?
பதில்: அப்படி ஒன்றும் இல்லை.
கேள்வி: கடந்த தேர்தலில் பாரிசான் நேஷனல் தோல்விக்கு ஹிண்ட்ராபின்
பங்களிப்பு முக்கியமானது என்றுக் கூறப்படுகிறது. இது எந்தளவிற்கு உண்மை?
பதில்: ஹிண்ட்ராப் தமிழர்கள் மட்டுமல்லாது பிறர் இனத்தவர்களிடமும்
குறிப்பாக சீனர்களிடமும் ஓர் அதிர்வை ஏற்படுத்தியது. அந்த அதிர்வு
எதிர்க்கட்சியின் வெற்றிக்குத் துணைப் புரிந்தது எனலாம்.
கேள்வி: சிறையின் சூழலைப் பற்றி விளக்க முடியுமா?
பதில்: எட்டுக்குப் பத்து என்ற அளவில் உள்ள சிறிய அறை அது. இரவு பகல்
தெரியாது. எந்நேரமும் ஒரு சிறு விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருக்கும்.
யானைக்கு மதம் அடக்கப்படுவது போல எங்கள் காத்திரத்தை முதலில் தணிப்பார்கள்.
அதன் பிறகு சில நாட்களில் செய்திதாள் படிக்கவும் தொலைக்காட்சியும் பார்க்க
அனுமதி உண்டு. இதர நண்பர்களிடம் பேச வாய்ப்புண்டு.
கேள்வி: தாங்கள் மனித உரிமை மீறல்கள் பற்றி பேசி வருகிறீர்கள். உங்கள்
அமைப்பின் நோக்கமும் அதுவாகத்தான் இருக்கிறது. இந்த மனித உரிமையை
இந்தியர்களுக்கு மட்டும் வலியுறுத்துகிறீர்களா அல்லது அனைத்து
தரப்பினர்களுக்கும் பொதுவானதா?
பதில்: இந்த நாட்டில் யார் அதிகமாக மனித உரிமை மீறல்களால்
பாதிக்கப்படுகிறார்கள் என்று பார்த்தால் இந்தியர்களாகத்தான் இருக்கும்.
அதனால் எங்கள் கவனம் இந்தியர்களை நோக்கிக் குவிகிறது. ஆனாலும், எங்களின்
நோக்கம் பொதுவானதே.
கேள்வி: உங்களின் போராட்டத்திற்குத் தகவல் சாதனங்களின் பங்களிப்பு என்ன?
பதில்: மிகக் குறைவு. பத்திரிகைகளின் ஆதரவை பெற நாம் ஏதாவது ஒரு கட்சியை
சேர்ந்தவர்களாக இருக்க வேண்டியுள்ளது. நாங்கள் ஆளுங்கட்சி எதிர்கட்சி என
இரு தரப்பினர் செய்யும் தவறுகளையும் வலுவாகவும் நேர்மையாகவும்
கண்டிக்கிறோம். எங்களைப் போன்றவர்களுக்கு ஆதரவு கிடைக்காதது ஆச்சரியமில்லை.
கேள்வி: ஹிண்ட்ராபில் பிளவுபாடுகள் ஏற்பட்டுள்ளதற்கு தங்களிடம்
எவ்வகையான காரணங்கள் உண்டு?
பதில்: அம்னோவில் பிளவுபாடு இல்லையா? ம.இ.காவில் பிளவுபாடுகள் இல்லையா?
ம.சீ.சவில் பிளவு இல்லையா? நமது குடும்பத்தில் பிளவுபாடு இல்லையா? ஒரு
பண்டிகையின் போது ஒன்றிணைவது போலதான் சமூக ஒற்றுமைக்காக ஒன்றிணைவதும்.
என்னை பொறுத்த வரையில் இன்றளவும் எனக்கு ம.இ.காவோ பி.பி.பியோ தனேந்திரனோ என
யாருமே எதிரிகள் இல்லை. எதிரிகளாக்க அரசாங்கம்தான் முயல்கிறது. நாம் அந்த
வலையில் சிக்கிக் கொள்ளக் கூடாது.
கேள்வி: நீங்கள் முன்னெடுத்துச் சென்ற இந்த ஹிண்ட்ராப் போராட்டத்தினால்
இனகலவரம் ஏற்பட்டு உயிர்கள் பாதிக்கப் பட்டிருந்தால் யார் பொறுப்பு?
பதில்: நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இது போராட்டம். இது
தனிநபருடையதல்ல. ஓர் ஒடுக்கப்பட்ட சமூகத்தினுடையது. இதே கேள்வி
எனக்குள்ளும் எழுந்துள்ளது. ஆனால், இதை பற்றியெல்லாம் யோசித்தால் எந்தப்
போராட்டத்தையும் முன் எடுத்து செல்ல முடியாது.
கேள்வி: ஹிண்ட்ராபில் உள்ள பலரும் விலைபோய்விட்ட நிலையில் உங்களின்
நிலைபாடு என்ன?
பதில்: இதுவரைக்கும் விலைபோகவில்லை என்பதே என் பதில். ஹிண்ட்ராபில்
பின்னால் நுழைந்தவர்களுக்கே அத்தனை பட்டு கம்பளங்களைப் பிற கட்சிகள்
விரித்திருக்கும் பொழுது, என் நிலைபாடு குறித்து எனக்கே புரிகிறது. ஆனால்,
நான் ஆளுங்கட்சியல்ல, எனது கோரிக்கைகளை முழுமையாக ஏற்றுக் கொள்ளாதவரை
எதிர்கட்சிகளைக்கூட நிராகரிக்கவே செய்கிறேன். 18 வருடம் ஆகிவிட்டது.
இன்றும் என்னை யாராலும் வாங்க முடியவில்லை.
கேள்வி: உங்கள் சகோதரர் இப்பொழுது வெளிநாட்டில் இருக்கும் நிலை மாறாதா?
பதில்: இது போன்ற அமைப்பிற்கு வெளிநாடுகளில் நடத்தப்படும் பிரச்சாரங்கள்
மிக அவசியம். அதற்காகவேயினும் அவர் வெளிநாட்டில் இருப்பதை முக்கியமாக
கருதுகிறோம்.
கேள்வி: நாங்கள் கேள்விப்பட்டவரையில் வெளிநாடுகளிலுள்ள தமிழர்
அமைப்புகளில் அவர் பேச மறுத்துள்ளதாக தகவல் வந்துள்ளதே?
பதில்: அப்படியிருக்க முடியாது. ஒரு வேளை அது இலங்கை தமிழர் அமைப்பாக
இருக்கலாம். ஏற்கெனவே இந்நாட்டில் ஹிண்ட்ராப் விடுதலை புலிகளோடு தொடர்பு
படுத்தப்பட்டதால் அவர் இந்நிலையை எடுத்திருப்பார்.
கேள்வி: அப்படியானால் உங்களுக்கு உண்மையிலே விடுதலைப் புலிகளுடன்
தொடர்பில்லையா?
பதில்: அறவே இல்லை. நான் இலங்கை பிரச்சனையை வேறு விதமாக சிந்திக்கிறேன்.
மலேசியத் தமிழர்களுக்கு இக்கட்டான நிலை வரும் போதெல்லாம் உள்ளூர்
பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் ஈழப் பிரச்சனை குறித்து ஒளியேறுவதைப்
பார்க்கலாம். இது கூட நமது கவனத்தைத் திசை திருப்பத்தான். நமது சக்தி ஒன்று
திரளாமல் இருக்க அரசாங்கம் செய்யும் சதி இது. உள்ளூர் பிரச்சனைகளை நாம்
அதிகம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இலங்கை தமிழர்கள் குறித்தான
வருத்தம் எனக்குமுண்டு. அவர்கள் கண்ணுக்குத் தெரியும் வகையில்
கொல்லப்படுகிறார்கள். நமக்கு நிகழும் கொடுமைகள் நூதனமானவை. அவை யார்
கண்களுக்கும் தெரியாமல் பரவுகிறது. இதை இப்போது நான் கூறும் போது யாரும்
உணர போவதில்லை. காலம் ஒரு நாள் உணர்த்தும்.
கேள்வி: உங்களின் அடுத்த செயல் பாடும் திட்டங்களும் என்ன?
பதில்: எனது திட்டங்கள் மிகத் தெளிவானவை. தூர நோக்குடையவை.
http://www.humanrightspartymalaysia.com எனும் வலைதளம் மூலம் அதை
நீங்கள் உணரலாம்.
நேர்காணல் -
பகுதி 1
நேர்காணல் : யுவராஜன், மணிமொழி, தோழி, ம.நவீன், சிவா பெரியண்ணன்.
எழுத்து : ம.நவீன்
|
|