|
கடந்த மாதத்தின் தொடர்சி...
அண்மைய
காலமாக மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து
பல்வேறு தரப்பினர்களிடமிருந்தும் விமர்சனங்கள் எழுந்தபடி உள்ளன. இது
குறித்து நாடுதழுவிய அளவில் பல எழுத்தாளர்களிடமும் கருத்துகள் சேகரித்தோம்.
சிலர் கருத்துகள் கூற தயங்கினார்கள். பலர் பயந்தார்கள். அதிகாரத்தை நோக்கி
உண்மையைக் கூறத் துணிந்த சிலரின் கருத்துகள் இவை. மேலும் கருத்துகள் கூற
விரும்புகிறவர்கள் வல்லினம் மின் அஞ்சலுக்குத் தங்கள் கருத்துகளை
அனுப்பலாம்.
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சுயநலப்போக்கு.....! - பாவை
மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்கு, அவர்களின் இலக்கியப் படைப்புகளுக்கு,
பாதுகாப்பாக திகழ வேண்டிய மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தைப் பற்றிய
மதிப்பீடுகள்,
ஒவ்வொரு மலேசியத் தமிழ் எழுத்தாளரின், உள்ளத்துக்குள்ளும் ஒளிந்திருக்கவே
செய்கின்றன. அவற்றையெல்லாம், எத்தனையோ பேர் எத்தனையோ வகைகளில், எடுத்துச்
சொல்லியும் எவ்வித பயனும் விளைந்ததில்லை.
எழுத்தாளர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காத ஒரு எழுத்தாளர் சங்கம்,
இந்நாட்டு தமிழ் எழுத்தாளர்களுக்கு வாயத்திருப்பது, வரமா- சாபமா
தெரியவில்லை.
சங்கத்தைப் பற்றி, எழுத்தாளர்களிடையே பல பார்வைகள்- பல கோணங்கள் உண்டு.
அதை சார்ந்த என்னுடைய நீண்ட நாள் மனக்குறையை இங்கு எழுதுகிறேன்.
மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் வெளியிடும், உள்நாட்டு நூல்களுக்கு, சங்கம்
ஆதரவு வழங்க மறுப்பது ஏன்..? இதில், வேண்டிய எழுத்தாளர் - வேண்டாத
எழுத்தாளர்
என்கிற பாகுபாடுகள் முறையாகுமா...? இந்த ஓரவஞ்சனைகள் ஆரோக்கியமான இலக்கிய
வளர்ச்சிக்கு அடித்தளமாகுமா?
மலேசிய நாட்டில் - தரமான இலக்கிய வளர்ச்சியை அறுவடை செய்ய வேண்டிய சங்கம்,
தனது மெத்தனமாக போக்கால், அதை தடை செய்கிறது.
தங்களுக்கு வேண்டிய, அயலக எழுத்தாளர்களுக்கு கூட, இந்நாட்டில் நூல்
வெளியீடுகள் நடத்தி லட்சம் வெள்ளி வரை, திரட்டி தந்து பெருமையடித்துக்
கொள்ளும் சங்கம்
காலம் காலமாய், இந்நாட்டில் எழுதிக் குவித்து- அதை புத்தகமாக, போட்டு
வைத்துக் கொண்டு வெளியிட சங்கங்களையும் தலைவர்களையும், தேடி அலைந்து
சருகாகி
கிடக்கும் இந்நாட்டு தமிழ் எழுத்தாளர்களுக்கு என்ன செய்கிறது?
இங்குள்ள எழுத்தாளர்களின் நூல்களை, சங்கம் வெளியீடு செய்து, லட்சம் கூட
வேண்டாம்.! புத்தகம் அச்சடித்த செலவையாவது வசூலித்துக் கொடுத்தால் அந்த
எழுத்தாளர்களின் படைப்புக்கு கௌரவம் கிடைத்தது போலிருக்கும்.
இந்நாட்டு இலக்கிய வரலாற்றில், தனது பங்கையும் நிலை நிறுத்தக்கருதி,
சொந்தப்பணத்தையோ அல்லது கடன் வாங்கியோ, நூல் அச்சடித்து விட்டு செலவழித்தப்
பணத்தைக்கூட, திரும்பப் பெற முடியாமல் நொந்து - நூலாகிப் போய், இன்று
எத்தனையோ எழுத்தாளர்கள் நம் நாட்டில் இருக்கிறார்கள். மன உளைச்சல் தாங்க
முடியாமல்
நோயாளிகளாய், ஆனவர்களும் மரணம் அடைந்தவர்களும் குடும்பத்தால்,
புறக்கணிக்கப்பட்டவர்களும் உண்டு.! இவர்களுக்கு ஏன் இந்த நிலை.!
தமிழுக்கு தொண்டு செய்ய வந்ததாலா..? இல்லை இந்நாட்டு இலக்கியப்பணிக்கு
சேவையாற்ற முனைந்ததாலா..? தாயின், ஆதரவைத்தேடும் குழந்தைகளாய் இவர்கள்
சங்கத்தின், ஆதரவைக் கோரி கடிதங்கள் எழுதியும், நேரில் தொடர்புக் கொண்டும்,
இணக்கமான ஒரு பதில் வருவதில்லை. கடிதங்களுக்கு, மறுமொழியே கிடைப்பதில்லை.
“நீங்கள், எத்தனை நூல் வெளியீடுகளுக்கு போயிருக்கிறீர்கள்..? ஒருவருக்கு
ஆதரவு கொடுத்தால், எல்லோரும் வரிசையாய் வந்து விடுவார்கள். எங்களுக்கு,
வேறு
வேலைகள் இல்லையா”.. இந்த மாதிரியான - பதில்கள்தான் சங்கத்தின் ஆதரவைத் தேடி
செல்லும் எழுத்தாளர்களுக்கு கிடைத்திருக்கிறது.
எழுத்தாளர்களின் தன்மானம் இத்தகைய புறக்கணிப்பால் பொலபொலத்து கொட்டிப் போக
அ அவர்கள் சிறந்த இலக்கியங்களை, படைப்பது எங்கனம்...! அரவணைத்து ஆதரவு
காட்ட வேண்டிய, ஒரு காப்பகம் சாகடிக்கும் வேலையை செய்வது வேதனையான விஷயம்.
ஓர், எழுத்தாளனை உயிரோடு மதித்து அவனது படைப்புகளுக்கு, பாராபட்சமற்ற
அங்கீகாரம் வழங்க முடியாத சங்கம், அவனது இறப்புக்கு ஒரு மலர்மாலையை சூட்டி
தனது
கடமையை முடித்துக் கொள்வது மிகவும் அருவருப்பாய் தெரிகிறது.
இந்நாட்டுத் தமிழ் எழுத்தாளர்களை வளர்க்கவும் வாழ வைக்கவும் விரும்பாத
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் அயல் நாட்டு எழுத்தாளர்களை கௌரவிப்பதும்
அவர்களின் நூல்களுக்கு விழா எடுத்து, பெருமையடித்துக் கொள்வதும்
இந்நாட்டில், காலம் காலமாய் எடுத்துப் பணியாற்றி வரும் தமிழ்
எழுத்தாளர்களுக்கு செய்யும்
மாபெரும் நம்பிக்கைத் துரோகமாகும்.
எழுத்தாளர் சங்கம், எழுத்தாளர்களை மதித்து கௌரவித்து அவர்களின்,
பிரச்சனைகளைத் தீர்த்து வைத்த காலம் ஒன்று இருந்தது. அப்போது இலக்கிய
வளர்ச்சியும்
செழிப்பாக இருந்தது. ஆனால், இப்போது வேண்டியவர் - வேண்டாதவர், அணிபிரிப்பு,
சுயலாபம்- சுயவளர்ச்சி- சுயநலப்போக்கு என்கிற எழுதப்படாத சட்டங்களால்,
இந்நாட்டு
தமிழ் எழுத்தாளர்கள் தண்டிக்கப்பட்டுக்கிடக்கிறார்கள்.
தீர்ப்புகள் திருத்தி எழுதப்பட்டாலன்றி, விமோசனங்கள் கிடைப்பது எப்படி...?
ஒரு போர் வாளும் சில காய்கறிகளும் -
ஸ்ரீரஜினி
தகுதியற்றவர்களின் தலைமைத்துவமென்பது நமக்கு புரிதல்ல, கிட்டத்தட்ட
அரசியல், இலக்கியம், கலை, சமயமென எல்லாத் துறைகளும் ஒரு சுயஇன்ப
கிளர்ச்சிப்
படையின் முற்றுகைக்கு கட்டுப்பட்டே கிடக்கிறது. (படைத்தவர்கள்
ஒதுக்கப்பட்டார்கள்! உடையவர்கள் ஒதுங்கிக் கொண்டார்கள்)
விதிக்கப்பட்ட இந்த நியதிக்கு விலக்காக ம.த.எ.ச. இயங்க எந்த கரணியும்
இல்லையென்பது வெள்ளிடை. 80-களில் ‘செலாஞ்சார் அம்பாட்’ செய்தித்
தொகுப்பாளராக
பரவலான அறிமுகம் கண்ட திரு.ரா அவர்கள் (இடச்சுருக்கம் கருதி திருரா என்றே
குறித்துக்கொள்வோம். அவரது பரிவாரங்கள் விரும்பினால், மரியாதைக்குரிய,
உயர்திரு,
மாண்மிகு, மதிப்புமிகு, ராஜராஜராஜ மார்த்தாண்ட என திருத்தி வாசித்துக்
கொள்ளலாம்) எழுத்தாளர் சங்கத்திலும் அதுபோன்றதொரு கொத்தடிமைக் குழுமத்தை
உருவாக்கிவிட வேண்டுமென திட்டமிட்டு செயல்படுகிறாரோ என்று எண்ணத்
தோன்றுகிறது. அதற்காகவே திட்டமிட்டு பாடுபட்டு வெற்றியும்
பெற்றுவிடுவாரோவென
சந்தேகமும் எழுகிறது.
கெடா மாநில எழுத்தாளர் இயக்கத்திற்கு தலைமை ஏற்க வாருங்கள் என்று தகுதி
உடைய உள்ளூர் அறிஞர் ஒருவரை அணுகிய பொழுது “என்னை தலைவராக
வரித்துக் கொள்ள இயக்கத்திற்கு என்ன தகுதி உள்ளது என்று எதிர் கேள்வி
கேட்டாராம். அவரது கேள்வியின் நியாயமும் - தூர நோக்கும் இப்போது புரிகிறது.
இந்த
புரிதலுக்கொப்ப ம.த.எ.சங்கத்திற்கு இன்றைய சூழலுக்கு மிகவும் பொருந்தும்
தலைவர் திரு. ரா அவர்களே என்று நானும் ஆமோதிக்கிறேன். இனி அவர் தொடங்கிய
பிரச்சினைக்கு வருவோம்.
முப்பது வருடங்களுக்கு முன்பாகவே சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி எனும்
ஜாம்பவான்களால் இயல்பாக முன்மொழியப்பட்டு தடம் பதித்ததுதான் இன்றைய
நவீனக்கவிதைகள்! அதை முனைப்பாக வழிமொழிந்து கொண்டிருக்கும் ம.நவீன்,
ப.அ.சிவம், ஏ.தேவராஜன், மஹாத்மன், கே.பாலமுருகன் (மற்றும் பலர்)
போன்றவர்களை
உச்சி நுகர்ந்து மெச்சி புகழ்ந்திருக்க வேண்டிய உங்கள் தலைமைத்துவம்
அவர்களை குறை பேசியதை (தொலைக்காட்சியில்) தவிர்த்திருக்கலாம்!
குறிப்பிட்ட அந்த சிறுகூட்டத்தின், படைப்பிலக்கியத் திறனை வாசித்த அனுபவம்
இல்லையென்பதை நீங்களாகவே ‘குதிருக்குள் இல்லை’ என்று
நிரூபித்திருக்கிறார்கள். சராசரி வாழ்விற்குரிய தொழில்- வருவாய் என்று
சுருங்கிப் போகாமல் இந்த மண்ணின் இலக்கிய கூறுகளை, அடுத்த கட்ட நகர்வுக்கு
கையணைத்துச்
செல்லும் அவர்களை ஒதுக்கி வைத்துவிட்டு மலேசிய புதுகவிதை வரலாற்றை பதிவு
செய்து RM7000 பரிசு பெற முன்னாள் ‘உதயம்’ இதழின் முகப்பழகி குமாரி ராஜம்
காளியப்பன் அவர்களால் இயலும் என்பது மிகச்சிறிய ஆச்சரியமே!
(தமிழ்நாட்டில் வெளியீடு கண்டிருந்தால் ‘வல்லிக்கண்ணுக்கு’ அடுத்து நூலின்
உள்ளடகத்திற்காக ‘சாகித்ய அகாதமி’ பரிசு கிடைத்திருக்கலாம் வெறும்
RM7000-திற்கு
சிபாரிசு செய்த நம் நாட்டின் பண்டய காலத்து இலக்கியப் பங்கிகளை வழக்கம்
போலவே தமிழ்தாய் மன்னித்துவிடுவாள்.)
தமிழகம் சென்று வடுகப்பட்டி மாமனையும் - செம்மொழி தாத்தனையும் இடம் - வலம்
நிறுத்தி (மன்னிக்கவும் தாத்தனை உட்கார்த்தி) ‘கிளிக்’ எடுப்பது மட்டுமே
உங்களின் தலையால இலக்கிய பணியென நம்பினால், தொடருங்கள் பயணத்தை கூடவே சில
ஓட்டுண்ணிகளுடன் எம்மை பொருத்தமட்டில் காட்டிக் கொடுத்த கருணாவும் -
காப்பாற்ற மறுத்த நிதியும் ஒன்றுதான் (கருணாநிதியின் இயற்பெயர் தட்சணா
மூர்த்தி என்பதும், அவரது பூர்வீகத்தில் தமிழ்மொழியின் தொடர்பு ஒரு இடை
செறுகல் என்பது
வேறு விடயம்)
வரலாறு குறித்துக் கொள்ள விரும்புவது வழிகாட்டிகளை மட்டுமே என்ற கருத்தில்
திரு.ரா போன்ற வழிப்போக்கர்களுக்கு என்ன பெரிதான கவலை இருந்து விடப்
போகிறது? இதுவரை போறும் இனி தொடர்ந்து வரும் வரிகளை புரிந்து கொள்ள திரு-
திருமதி பரிசுத்தங்கள் யாரும் முயல வேண்டாம்.
துர்வாடைகள்
குமட்டிக் கொண்டு
வெளிப்பட்டாலும்
மூச்சடிக்கி
முகஞ்சுளிப்பதில்லை
என் மலத்தில்
இன்னொருவன்
பங்களிப்பில்லையென்பதால்!
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் - ஒரு பார்வை -
பகுதி 1
|
|