|
தொலைக்காட்சியில் நான் வேலை செய்யத் தொடங்கியதன் பிறகு நிறையப் பேருடன்
அதிகமான தொடர்பைப் பேண முடியவில்லை. நேரமின்மை ஒரு காரணம். ஆனால் எனக்கு கன
பேருடன் தொடர்பு முதல் இருந்தது என்றும் சொல்ல முடியாது.
எனது நிகழ்ச்சிகள் அரசியல், சமூகம் சார்ந்ததாக இருக்கும் பொழுது செவ்விகள்
காணும் பொழுதும் நான் முகத்தை சிரிப்பாக வைக்க முடியாமல் இருக்கிறது.
செய்தி வாசிக்கும் பொழுது எப்படி முகத்தை சிரித்த முகமாக வைத்திருக்க
முடியும்.
ஆனால் தொலைக்காட்சியில் என்னைப் பார்த்த எனக்கு முதலில் தெரிந்தவர்கள் ஏதோ
கடுமையான மனிசனாக நான் இருப்பேன் என்று விட்டு பேசாமல் இருந்து
விடுவார்கள். அது ஒருவகையில் நல்லது தான் என்று நான் சொன்னால்.
மனிசி அதற்கு எதிர்மாறு. கல கல என்று கதைக்க வேணும் அவளுக்கு. எனக்கு
வாசிப்பு, சாப்பாடு, தூக்கம் என்பதே போதும். மனிசிக்கு பேச வேண்டும்.
தன்னோடு உட்கார்ந்து பேசுமாறு என்னைக் கூப்பிடும். சரி பேசுவோம் என்றால்
எனக்கு ஊர்ப்பேச்சு குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகள், ஊரில் மனிசியின்
உறவினர்கள் எனது உறவினர்கள் வீட்டில் நடக்கும் பிரச்சனைகள் சண்டைகள்
சச்சரவுகள் பற்றி ஒன்றும் தெரியாது. தெரிந்து கொள்ளவும் நான்
விரும்புவதில்லை.
சரி கதிரையில் இருந்து மனிசியும் நானும் பேச ஆரம்பிக்க ஏதாவது அல்-ஜஸீரா
பி.பி.சி.யில் டொக்கியூமன்றி படம் போட ஆரம்பித்தால் எனது கவனம் முழுக்க
அதில் போய்விடும். ஊர் பேச்சு தடைப்பட்டு விடும். மனிசிக்கு எரிச்சல்
வரும். ஆனால் உந்த மனிசன் உப்படித்தான் என்று விட்டு எனது குணம் தெரிந்து
சும்மா இருந்து விடும்.
பேசுவதன் மூலம் மனச்சுமை இறக்கப்படுகிறது. மனம் விட்டு பேசுங்கள் என்று
இங்கே லண்டனில் மன வைத்திய நிபுணர்கள் சொல்கிறார்கள்.
பேசுவதென்றால் என்ன ஊர் துளவாரங்களை பேசுவதா? என்று கேட்டால் அவர்கள் “ஆம்”
என்று சொல்கிறார்கள். ஊரில் என்றால் எங்கள் கிராமங்களில் வேலை நேரம் போக,
வேலை என்றால் விவசாயம், மாடு வளர்ப்பு, தோட்டம் என்று அந்த நேரம் போக மாலை
வேளையில் பெண்கள், ஆண்கள் கூடியிருந்து பேசிக் கொண்டிருப்பார்கள்.
என்ன பேசுகிறார்கள் என்ற எந்தத் தலையங்கமுமே கிடையாது பேசிக்
கொண்டிருப்பார்கள்.
வயல் வெளியில் சந்தித்தால் பேச்சு, குளக்கட்டில் சந்தித்தால் பேச்சு,
மாலையில் கள்ளுத் தவறணையில் சந்தித்தால் பேச்சு என்று பேச்சு எங்கள்
வாழ்வோடு கலந்து உறவாடிக் கொண்டிருந்ததால் எல்லோரும் உற்சாகமாக
இருந்தார்கள் கிராமத்தில் என்கிறார்கள், மன வைத்திய நிபுணர்கள். பேசுவதன்
மூலம் மன அழுத்தம் குறைக்கப்படுகிறதாம். லண்டனில் பேசுவதற்கென்று சிகிச்சை
நிலையங்கள் இருக்கின்றன. அதுமட்டுமல்ல கொமியுனிட்டி சென்டர்களில்
பேசுவதற்கென்றே மக்கள் கூடுகிறார்கள். அதற்கு அரசு செலவுக்கு காசும்
கொடுக்கிறது.
லண்டனில் இங்கு ஒவ்வொரு கிராமத்திலும் கட்டியிருக்கும் பழமை வாய்ந்த
“பப்புகள்” (சாராயக்கடைகள்/பியர் கடைகள்) எல்லாம் உட்கார்ந்து பேசுவதற்கான
இடங்கள் தான்.
இங்கு பப்புகளுக்கு போகும் வெள்ளைக்காரர்கள் வெறுமனே குடிக்க மட்டும்
போகிறவர்களில்லை. ஒரு பைந் பியர் கிளாஸை ஒரு மணித்தியாலமாக குடித்துக்
கொண்டிருப்பார்கள். பழைய நண்பர்கள் உறவினர்கள் என்று போய் உட்கார்ந்து
கொண்டு கதைத்து கதைத்து குடிப்பார்கள். சிலர் குடிப்பதற்காக மட்டும்
பப்புகளுக்கு போகும் முடாக் குடியர்களும் இருக்கிறார்கள் தான். ஆனால்
எல்லோரும் அப்படி இல்லை.
மனம் உளைச்சலில் உள்ளவர்கள் பேசுவதற்கான கிளினிக்குகள் புரோபஷனலாக
இயங்குகின்றன. ஆனால் கவுன்சிலிங் செய்பவரோடு போய் பேசுகின்ற பழக்கம் தமிழ்
மக்களிடம் அதிகம் இல்லை.
கவுன்ஸிலிங் செய்பவரிடம் உண்மையை எல்லாம் சொல்லலாமா என்ற பயம் இருக்கிறது
தமிழ் ஆட்களிடம். ஆனால் வெள்ளைக்காரர் அப்படி இல்லை. கவுன்ஸிலிங் செய்பவரை
நம்புகின்றனர். தமிழ் ஆட்களிடம் எப்பவும் மனம் நிறைய சந்தேகக் குணம்
இருக்கும். அது மண்ணோடு, ஊரோடு, நாம் வாழ்ந்த பிறந்த சமூகத்தோடு ஒத்த
பிறவிக்குணம். அச்ச மனப்பான்மை. இலங்கையில் இருந்து வந்தவர்களுக்கு இங்கு
லண்டனில் பொலிஸைக் கண்டால் பயம். ஆனால் லண்டன் பொலிஸாரோடு பேசி தீர்த்துக்
கொள்ளலாம். அவர்கள் அவ்வளவு கடுமையாக இருக்க மாட்டார்கள்.
பிரச்சனை என்ன வெனில், அடிக்கும் போலிஸை, ஆமியைத் தான் எங்களுக்குத்
தெரியும். நாம் பிறந்த நாடு அப்பிடி. அந்தப் பயம் இன்னும் மனதில் அப்படியே
இருக்கிறது.
அந்த அச்ச நிலையும் சந்தேகமும் தொடர் மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கும்
பலரை நான் நேரடியாக கண்டிருக்கிறேன்.
அடுத்தது தனிமை. இங்கே லண்டனில் பக்கத்து வீடு என்ற ஒன்று இருப்பது
பலருக்கு தெரியாது. எல்லா நேரமும் முன் கதவு பூட்டப்பட்டிருக்கும் வீடுகள்
தான் இங்குள்ள வீடுகள். அப்படித்தான் பழக்கம்.
ஊரில் என்றால் காலையில் திறந்த தலை வாசல் கதவு மாலையில் தானே மூடப்படும்.
அதுவும் நித்திரை என்ற ஒன்று இல்லாவிடில் இரவு இரவாக திறந்து கிடக்கும்.
நேற்று பகல் எனக்கு ஒரு ஓய்வு நேரமாக பார்த்து என்னோடு ஊரில் ஓடியாடித்
திரிந்த எனக்கு ஒரு வயது கூடிய நண்பன் ஒருவன் எங்கேயோ தேடி எனது நம்பரை
எடுத்து தொலைபேசியில் பேசினான்.
நிழலாக அவனதும் என்னதும் பதினைந்து வயது பருவ காலங்கள் தான் மனதில்
இருந்தன. 15 வயதுக்கு பிறகு இன்னும் அவனை நானும் என்னை அவனும்
பார்க்கவில்லை.
பேச்சின் ஆரம்பமே எங்களுடைய இளமைக் காலத்துக்கு போய் விட்டது. அதனைத் தவிர
பேசுவதற்கு உடனடியாக எதுவும் வர மாட்டேன் என்கிறது.
எங்களுடைய வீட்டுக்கு பக்கத்தில் தான் அவன் வீடு, மூன்று காணி தள்ளி அவன்
காணி. அந்தக் காலத்திலேயே அவன் எந்த சோலி சுறட்டுக்கும் போகாமல் தானுண்டு
தன் வேலையுண்டு என்று இருப்பான். நல்ல உழைப்பாளி.
எப்பொழுதும் அவனின் காணிக்குள் தான் வேலை செய்து கொண்டிருப்பான்.
அவனுக்கும் பத்து பதினைந்து மாடுகள் இருந்தன. எங்களுக்கும் மாடுகள்
இருந்தன. நாங்கள் இரண்டு பேரும் மாடுகளை மேய்க்கப் போவோம். மாலையில் வயல்
வெளிகளில் நிற்கும் மாடுகளை அணைத்து கூட்டி வந்து பட்டிக்குள் விடுவோம்.
அவனின் அக்கா அந்தக் காலத்தில் கலியாணம் முடிக்கவில்லை. காலையும் மாலையும்
அத்தனை மாடுகளிலும் பால் கறந்து காய்ச்சி தயிருக்கு உறை போட்டு வைப்பா.
காலையில் முகம் கழுவி விட்டு பள்ளிக்கூடம் போக முதல் ஓடிப் போய் அவனின்
அக்காவிடம் செம்பு நிறைய தயிர் வாங்கிக் கொண்டு வந்து சுடச் சுடப் புட்டும்
வாழைப்பழமும் சீனியும் தயிரும் போட்டு சாப்பிட்டு விட்டு ஒரு மைல் நடந்து
பள்ளிக்கூடம் போவோம். இதனை எல்லாம் பேசிக் கொண்டிருந்தோம். எங்களது
கிராமம், எங்களது ஆட்கள் எல்லோரும் எங்கே இருக்கிறார்கள் என்று பேசிக்
கொண்டிருந்தோம். எங்களது வயல் காணி, தோட்டம் துறவுகள் தொடர்பாக பேசினோம்.
எங்களுக்கு தயிர் தந்த அந்த உழைப்பாளி அக்கா கதிர்காமர் முகாமில்
வவுனியாவில் இருக்கிறா என்றும் இன்னொரு அக்கா தற்கொலை செய்து கொண்டதாகவும்
அம்மா, அப்பா எல்லோரும் செத்துப் போய் விட்டதாகவும், இன்னும் பலர்
யுத்தத்தில் சுடப்பட்டு செத்துப் போனதாகவும் சொன்னான் நண்பன்.
அத்தோடு இப்பொழுது நாங்கள் எங்கள் கிராமத்துக்கு போனால் அடையாளம் காணக்
கூடிய நபர்கள் இல்லாமல் போய் இருப்பார்கள் என்ற விடயத்தையும் சொன்னான்.
உண்மைதான் எங்களை அடையாளம் காண முடியாத மூன்றாவது தலை முறைதானே எங்கள்
ஊர்களில் இருக்கப் போகிறது. அவன் சொன்ன பிறகுதான் எனக்கே உறைத்தது அந்த
விடயம்.
எங்கள் பேரன், எங்கள் அம்மா, அதுக்கு பிறகு நாங்கள், எங்கள் பிள்ளைகள்
என்று தொடர் சங்கிலியாய் வாழ வேண்டிய எமது சமூகம் இரண்டு தலை முறைகள்
அகதிகளாக உலகம் முழுக்க ஓடி ஓடி ஒளிந்து கொண்டிருக்கும் பொழுது எங்கள்
பிறந்த பூமியில் இருக்கின்ற மூன்றாவது தலைமுறை எங்களை அடையாளம் கண்டு
மதிக்குமா என்பது அவனின் தார்மீகமான கேள்வி. ஒன்றும் தேவையில்லை எங்கள்
பிறந்த பூமிக்கு போய் அந்த மண்ணை ஒருமுறை முத்தமிட வேண்டும் என்று நண்பன்
சொன்ன போது மனது கனத்திருந்தது. எங்கள் இரண்டு பேருக்கும்.
அச்சம் மிகுந்த பூமிக்கு நாங்கள் போக மாட்டோம்! என்று எங்களது பிள்ளைகள்
அடம் பிடிக்க எங்கள் தாய் மண்ணை கொஞ்ச வேண்டும் என்று நாங்கள் துடிக்க
உண்மையில் இது ஒரு போராட்டமாகத்தான் எதிர்காலத்தில் வரப் போகிறது.
ஐரோப்பிய நாடுகளின் துப்புரவான வாழ்க்கை எங்களது அடுத்த தலைமுறையின்
மனதிலும் உடலிலும் ஊறிப் போய்க் கிடக்க இன்னும் நாங்கள் எங்கள் மண்ணையே
நேசித்துக் கொண்டிருக்கிறோம்.
நீண்ட நேரம் எனது சின்ன வயது நண்பன் பேசியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக
இருந்தது.
மனிசி அவர்களது உறவினர்களோடு பேசுவதற்கு ஒரு வழியை கண்டு பிடித்தேன்.
குறைந்த விலையில் இலங்கையில் ஒரே ஒரு நம்பரோடு மட்டும் தொடர்பு படுத்தக்
கூடிய மலிவான ஒரு தொலைபேசி லைன் ஒன்றை கேள்விப்பட்டு இரண்டு முக்கிய
உறவுகளுககு தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்தேன்.
இப்போ நினைத்த நேரத்தில் நினைத்த மாதிரி லண்டனில் இருந்து எவ்வளவு நேரம்
வேண்டுமானாலும் பேசலாம்.
அப்பாடா ஊர் துளவாரங்கள், அங்கு என்ன கறி, புளி. எப்பிடி ஊர் இருக்கிறது.
குடும்பத்தில் என்ன நிலமை... குழப்பமா, சுமுகமா எல்லாம் ஒவ்வொரு நாளும்
அப்டுடேட் ஆக இங்கை லண்டனில் இருக்கும் மனிசிக்கு தெரியும்.
இப்பொழுது பேச வா, பேச வா என்று என்னை நச்சரிப்பதில்லை.
நான் நிறைய வாசிக்கிறேன். நிறைய எழுதுகிறேன். லீவு நாளில் பகலில் ஒரு மணி
நேரம் தூங்குகிறேன். அப்பாடா. இதைவிட வேறென்ன வேண்டும் எனக்கு?
|
|