|
வாசிப்பது, தொடர்ந்து அது பற்றி விவாதிப்பது என்பது மிகவும் உவகையூட்டும்
ஒரு செயல். வாழ்நாள் முழுதும் கற்றல் (life long learning) என்னும்
கருத்தாக்கம் எனக்கு மிகவும் இசைவானதாக உள்ளது. கற்றலுக்கு அடிப்படை
வாசிப்பு, சிந்தனை செழிப்புற வாசிப்புதான் ஆதாரமாக அமைகிறது. வாசிப்பு
மூளைக்கான பயிற்சி கூட. படிப்பவற்றில் இருந்து நாம் உள்வாங்கும் சிந்தனைகளை
ஒருமுகப்படுத்தி, நமது உள இயக்கத்துடன் கலக்கச்செய்யுமிடத்தில் தியான மன
நிலை உருவாவது சாத்தியமே. பல சந்தர்ப்பங்களில், இந்த நிலை
சாத்தியமாகும்பொழுது, வாழ்வின் உன்னத தரிசனங்கள் மனதை வருடிச்செல்வதை
உணரமுடிகிறது.
ஆயினும், சிந்தனையும் செயல்பாடுகளும் இணையமாகிவிட்ட இந்த காலகட்டத்தில்,
வாசிப்பு என்பது களிப்பூட்டும் ஒன்றாக இல்லாமல், தரவுகள் சேகரிக்க உதவும்
ஊடகமாகவே பயனாகின்றது. வெட்டி ஒட்டும் கலாச்சாரம் (cut and paste culture)
வாசிப்பின் பல முனைகளை மழுங்கடித்துவிட்ட, சிந்தனை செரிவற்ற, தரவுகளின்
தொகுப்பால் ஆன ஒரு சமுதாயத்தைதான் கட்டமைத்துள்ளது. தகவல் நிறைந்த
சமுதாயமாக ஆகும் அவசியத்திலும், அவசரத்திலும், அறிவாற்றலும், மெய்யறிவும்
தேடும் சாத்தியத்தை நாம் இழந்துவிடுவதைப்பற்றி சிந்திப்பதில்லை. ஆத்ம
அறிவு, எல்லையற்ற அறிவு, முழுமையைத் தேடி அடையும் ஞானம் போன்ற பதங்கள் எந்த
விதமான எதிர்விளைவுகளையும் ஏற்படுத்தாத ஒரு நுகர்வோர் கலாச்சாரம் மையம்
கொண்டுவிட்ட சமுதாயம் உருவாகிக்கொண்டுள்ளது.
நமது கல்வி கொள்கை வாசிப்பின் அவசியத்தை உணர்ந்த ஒன்றுதான்; ஆனால்
செயல்பாட்டில் பல குறைகளும், தொடர்முயற்சிகளும் கொண்டிராத ஒன்றாகத்தான்
இருந்து வருகிறது. சோதனைகளும், தேர்வுகளின் முடிவுகளும் தரநிர்ணய
அளவுகோலாகக்கருதப்பட்டு, பொது வாசிப்பு என்பது அனாவசியம் என்ற முடிவுக்கு
மாணவர்களை நெருக்கிவிட்டது. மனதிற்கு நெருக்கமான உள்ளடக்கம் நிறைந்த
ஆக்கங்களைத் தேடிக்கற்கும் தேவையும், கால அவகாசமும் மறுதலிக்கப்பட்ட
கல்விக் கலாச்சாரம் மாணவர்களின் வாசிப்புச் சுவையை மழுங்கடித்துவிட்டது.
தேர்வுக்கு நேரடியாக தொடர்பற்ற எந்தவித வாசிப்பும் பயனற்றது என்ற
முடிவுக்கு மாணவர்களை மூலைச்சலவை செய்ததில் பெற்றோர்கள், ஆசிரியர்கள்,
மிகைநேர போதனை ஆசிரியர்கள் பங்கு மிகமுக்கியமானது. பிள்ளைகளின் சமூக,
பொருளாதார மதிப்பு எதிர்காலத்தில் தேர்வின் முடிவு ஒன்றினால் மட்டுமே
உத்தரவாதப்படும் என்ற நம்பிக்கையால், வாழ்க்கைக் கல்வியின் அவசியத்தை
உணரத்தவறிய, மனநலம் செம்மையற்ற எதிகாலச் சந்ததியினரை உற்பத்தி செய்கிறோம்
என்பதை சம்பந்தப்பட்டோர் மிகவும் காலம் தாழ்த்தியே உணர்வர்.
வாசிக்கும் பழக்கம் (reading habit) இன்றி வளரும் இளையோரைவிட, வாசிப்பதை
விரும்பாத (reading reluctancy) ஒரு சாரரும் பெருகி வருவதை மிகுந்த
மனச்சஞ்சலத்துடன் நாம் கண்டு வருகிறோம். இளையோர் மத்தியில் வாசிப்பு
பழக்கம் விருப்பமான ஒரு காரியமாக இருப்பது அருகி வருகிறது. செயலூக்கமும்,
சிந்தனைத் தெளிவும் மிக்க சமுதாயம் மறைந்து, உலகாயதத் தேவைகளைப் பூர்த்தி
செய்வதையே முகாமையான நோக்காகக் கொண்ட வாழ்க்கைச் சித்தாந்தம்
முக்கியத்துவம் பெற்றுவிட்டது.
களப்பணி
2008/2009-ல் மேற்கொண்ட ஆய்வு, தமிழ்ப் பள்ளி மாணவர்களின் குடும்பப்
பின்னனி அவர்களின் வாசிப்பனுபவத்தை எந்த அளவுக்குப் பாதிக்கிறது எனும்
கேள்விக்கு பதில் தேடும் களமாக அமைந்தது. வாசிப்புப் பழக்கம் என்பது
தனிமனித செயல்பாடு மட்டுமல்ல; அது ஒரு கூட்டு முயற்சி; அழகியற் கூறுகளும்,
உணர்வும், அர்த்தமும் நிறைந்த 'உரையாடல்' என்ற தர்க்கத்தை முன்வைக்கும் ஒரு
முயற்சியாக அந்த ஆய்வு அமைந்தது. உரையாடல் என்பது மனதுக்கு மிகவும்
மகிழ்ச்சி தரும் தருணங்களில் ஒன்று. வாசிப்பின் போது நமது உரையாடல்
புத்தகத்தில் பதிவாகியிருக்கும் எழுத்தாளரின் சொற்களோடு நடைபெறுகிறது.
சொற்குவியலைப் புரிந்துகொள்ளும் முயற்சிமட்டுமல்ல வாசிப்பு. வார்த்தைத்
தேர்வில், வாக்கியங்களின் இடையில் பயணிக்கும் கலை, கலாச்சார சாரங்களை,
சமுதாயத்தின் அபிலாசைகளை உள்வாங்கும் அனுபவமும் வாசிப்பில் அடங்கும்.
300 தமிழ்ப் பள்ளி மாணவர்களை உட்படுத்திய இந்த ஆய்வு, நான்கு நோக்கில்
மேற்கொள்ளப்பட்டது. பொருளாதார முதல் (economic capital), சமூக முதல்
(social capital), கலாச்சார முதல் (cultural capital), உணர்ச்சி முதல்
(emotional capital) ஆகிய நான்கு அணுகுமுறைகள் முறையே போர்டோ (Bourdieu),
கோல்மன் (Coleman), நோவெட்னி (Helga Nowetny) ஆகிய பிரஞ்சு, அமெரிக்க
ஆய்வாளர்களின் ஆய்வு முடிவுகளை பின்பற்றி எடுத்தாளப்பட்டது.
பொருளாதார முதல் ஒரு குடும்பத்தின் வருவாய், சேமிப்பு, சொத்து போன்றவற்றை
உள்ளடக்கியதாகும். ஒரு குடும்பத்தின் வாங்கும் சக்தியைச் நிர்ணயிக்கும்,
சாத்தியப்படுத்தும் முதல் இது. வாசிப்பனுபவத்தின் அடிபடைத் தேவைகளைப்
பூர்த்திச் செய்வதற்கு பணம் ஆதாரமாகிறது. வாசிப்பின் பல கதவுகளை,
சாத்தியங்களை திறந்துவிட பணம் அத்தியாவசியமாகிறது. சமூக முதல் என்பது
பெற்றோர் சமூகத்தில் வகிக்கும் பொறுப்புகள், சகமனிதர்களுடனான அவர்களின்
உறவு, அணுக்கம், அவர்களின் வெளியுலகத் தொடர்புகள் சார்ந்ததாகும்.
பெற்றோரின் வாழ்க்கை நோக்கு, அவர்களின் சமூகப்பின்னனி ஆகியன பிள்ளைகளின்
வாசிப்பு விருப்பு, பழக்கம் ஆகியவற்றின் தேர்வில்/தேர்வின்மையில் பெரிய
பங்களிப்பைச் செய்கிறது.
கலாச்சார முதல் நுணுக்கமாகப் புரிந்துகொள்ளவேண்டிய ஒன்றாகும். ஒரு
குழந்தையின் வளர்ப்பில் முழுவதுமாகப் பிணைந்திருக்கும் தேவையாகும் இது.
பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு ஏற்படுத்தித்தரும் வாசிப்பு வாய்ப்புகள், அதன்
தொடர்ச்சியாக உள்ள கல்வி நிலையங்கள், நூலகங்கள், கலைக்களஞ்சியங்கள் பற்றிய
அறிவு, தெளிவு ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். பெற்றோரின் கல்வித் தகுதியும்
இதில் அடங்கும். இந்த முதல் சரியாக அமையப்பெற்ற குடும்பப் பின்னனியில்
இருந்து வரும் குழந்தைகள் இயற்கையிலேயே முனைப்பும், ஊக்கமும், இலட்சியமும்
கொண்ட குழந்தைகளாக விளங்க சிறந்த வாய்ப்புள்ளது.
இந்த ஆய்வில், உணர்ச்சி முதல்/உணர்வுப்பூர்வ ஈடுபாடு என்பது என் சுய
தேடலுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது. மேல் குறிப்பிட்டுள்ள மூன்று முதல்களும்
சரியாகக் கிட்டாத ஒரு சமூகப் பின்னனியில் இருந்து வந்த எனக்கு சுவாசமாக
ஆகிவிட்ட வாசிப்பு, ஏன் அதே மாதிரியான வாழ்க்கை அமைப்பு கொண்ட
மற்றவர்களுக்குக் கிட்டவில்லை என்பது எனக்குள் எப்போதும் தொக்கி நிற்கும்
கேள்வியாகும். உணர்ச்சி முதல் என்பது குடும்பத்தில், குறிப்பாக பெண்கள்
மூலமாக, கிட்டும் அன்பு, அரவணைப்பு, போன்ற மனத்தேவைகள் எவ்வளவு நிறைவாக
அமைகின்றன என்பது பற்றியதாகும். 80% மேற்பட்ட குழந்தைகள் தங்கள்
தாயாரிடமிருந்தே வாசிப்புப் பழக்கத்தைக் கற்கின்றனர் என்பது பெரும்பாலான
ஆய்வாளர்களின் முடிவாகும்.
ஆய்வின் முடிவு
மிகவும் சுருக்கமாக, ஆய்வின் சில கூறுகளை மட்டுமே மேலே குறிப்பிட்டுள்ளேன்.
ஆய்வின் முடிவுகள் சிலவற்றை பதிவு செய்வது முக்கியம்.
ஆய்வின் முடிவின்படி, பெற்றோரின் மாதச் சம்பளம் பிள்ளைகளின் வாசிப்புப்
பழக்கத்தில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை. ஆனால், தாய் தந்தையரின்
கல்வித் தகுதி அவசியமான ஒன்றாகும். தாய்மார்கள்தாம் பிள்ளைகளுடன் அதிக
நேரத்தைக் கழிக்கின்றனர். பிள்ளைகள் பெரும்பாலும் தம் தாயாரைச் சார்ந்தே
இருக்கின்றனர். இந்த நெருக்கமும், வாய்ப்பும் நல்ல பழக்கங்களை விதைப்பதற்கு
ஏதுவானதாக அமைகிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள தாய்மார்களுக்கு
கொஞ்சம் கல்வி அறிவு இருப்பது அவசியமாகிறது. ஆயினும், கல்வி அறிவென்பது
வெறும் ஏட்டுக்கல்வி மட்டுமல்ல. காலங்காலமாக அறிவு, சிந்தனை, கலை,
அழகுணர்ச்சி, படைப்பாற்றல் ஆகியவற்றை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும்
கதை சொல்லியாக விளங்குவது, எல்லாக் குடும்பத்திலும், தாய்தான். சிறுவயதில்
கதைக் கேட்டு பழக்கப்பட்ட குழந்தைகள் பெரும்பாலும் வாசிப்பில் ஆர்வம்
உள்ளவர்களாக இருப்பது ஆய்வின் முடிவாகும்.
கதைக் கேட்பது கற்பனை ஊற்றெடுக்க வகை செய்யும்; சிந்தனை ஓட்டத்தை
அதிகரிக்கும்; படைப்பாற்றலை வளர்க்கும். மிக முக்கியமாக, அவர்களுக்கு
சிந்திக்கும் சுதந்திரத்தைக் கொடுக்கும். பின்னாளில், அவர்களின் வாசிப்பு
பல தளங்களில் விரிவடைய இந்த சிந்தனைச் சுதந்திரம் வாய்ப்பளிக்கிறது. இந்த
வாய்ப்புகள் கிட்டாத குழந்தைகளின் உலகம் சுருங்கிப்போய்விடுகிறது. பள்ளி
வாழ்க்கையிலும் அவர்களுக்கு அந்த வாய்ப்பு சரியாக அமையாத சூழல்
ஏற்படும்போது வாசிப்பு இன்பம் எட்டாக் கனாவாகவே இருந்துவிடும் அவலம்
தவிர்க்க இயலாததாகிவிடுகிறது.
|
|