|
கோடையோ, அதிகபட்ச வெயிலோ என்றுமே எனக்குப் பிரியமானதாக இருந்ததில்லை.
ஆசையாசையாக நட்டு வளர்த்து வந்த பூஞ்செடிகளை, பயிர்களை சுட்டுக்
கருக்கிவிடும் வன்மத்தைக் கோடை கொண்டிருக்கிறது. 'இன்றைக்குப் பூக்கும்',
'இன்னும் ஓரிரு மாதங்களில் காய்க்கும்' என மிகுந்த ஆவலோடு மரம், செடிகளை
நட்டுக் காத்திருக்கும் வேளையில் தன் வெப்பக் கரங்களால் அவற்றைத்
தடவிக்கொடுத்து கருகச் செய்யும் அது எப்படிப் பிடித்தமானதாக இருக்கும்
எனக்கு?
அதிர வைக்கும் பெரும் சலனத்தோடு நகரும் எனது ஊரின் பெரிய நதி, கோடையில்
வற்றிப் போகும். கரையின் பரப்பு அகன்று, நீரிருந்த இடமெங்கிலும் காக்காய்ப்
பொன்கள் மின்னும். கொக்குகளும் மீன்கொத்திப் பறவைகளும் கூட்டம் கூட்டமாக
வந்து தெளிந்த, குறைந்த நீரின் மீன்களை, குட்டித் தவளைகளை விழுங்கிப்
பறக்கும். வெப்பத்தைச் சுமந்திருந்த சொற்ப நதி நீர் தன்னையும், தன்
உடமைகளையும் இழக்கும் ஒருவிதக் கேவலோடுதான் தொடர்ந்து நகரும். பகல்
முழுதும் தண்ணீரை அடித்துக் காய்த்து அசையும் வெயில், இரவுகளில் வெக்கைக்
காற்றை அல்லது காற்றேயில்லாத வெக்கையைத் தந்து மறைந்திருக்கும்.
ஊருக்குள் வெயிலையும் காலங்களில்தான் ஐஸ்பழம், இளநீர் விற்பவர்களின்
நடமாட்டத்தைக் காணமுடியுமாக இருக்கிறது. தோல் கருக்கச் சுட்டுப் பொசுக்கி,
வீதிகள் தோறும் அவர்களுடனேயே தொடர்ந்து நடக்கும் வெயிலினைத் தங்கள் நெற்றி
வியர்வையைச் சுண்டியெறிவது போலவே அவர்கள் சுண்டியெறிகிறார்கள். வெயிலும்,
கோடையும் அவர்களது விருப்புக்குரியவையாக இருக்கக் கூடும். வெயில்
காலங்களில்தான் தங்களது அதிகபட்ச வருமானத்தைப் பெற்றுக்கொள்ளக் கூடிய
அவர்கள் தாங்கள் சுமந்தலையும் இளநீரையோ, ஐஸ்பழத்தையோ சுவைத்துக்
கொண்டிருந்ததை இதுவரை நான் பார்த்ததில்லை.
இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. எனது சிறுவயதுகளில் மெலிந்து, உயர்ந்த
கிழவன் ஒருவன், குச்சி ஐஸ்பழங்களை, உருளை வடிவான வெள்ளை ரெஜிஃபோம்
பெட்டிக்குள் வைத்து எடுத்துக் கொண்டு ஊரின் பகல்வேளைகளில் வீதிதோறும்
நடப்பான். சிறுவர்கள் நாங்கள், கைகளில் பொத்திப் பிடித்த சில்லறை
நாணயங்களோடு அவனைச் சூழ்வோம். ஆளைக் கவரும் வண்ணங்களால் ஆன ஒரே சுவை கொண்ட
ஐஸ் பழங்கள் அவனது பெட்டிக்குள் குளிரில் உறைந்தபடி இருக்கும்.
அருகிலிருக்கும் நிழலுக்கு, வாகான இடமொன்றுக்கு நகரும் அவன் முதலில்
அவரவர்க்கு என்ன நிற ஐஸ்பழங்கள் வேண்டுமெனக் கேட்டபடி சில்லறை நாணயங்களை
வாங்கி வைத்துக் கொள்வான். பின்னர் வெட்கப்படும் இளம்பெண்ணின் இமைகள்
துடிப்பதுபோல அவசர அவசரமாகப் பெட்டியின் மூடியைத் திறந்து மூடி கேட்கப்பட்ட
ஒவ்வொரு வண்ணமாக எடுத்து நீட்டுவான். வெயிலுக்குக் காட்டாமல் இரகசியமாக
எடுத்துத்தரும் பாவனையோடு அவன் தருவதை நாங்கள் பெற்றுக் கொள்வதற்குள்,
அதிலிருந்து ஒரு சொட்டு வடிந்து, தாகித்திருக்கும் சூடான தரை அதனை
உறிஞ்சிக் குடித்துமிருக்கும். அதிக நேரம் திறந்து வைத்தால் வெயில் தன்
பேராசை வழியும் வாய் கொண்டு அவனது அனைத்து வண்ண ஐஸ்பழங்களையும் உறிஞ்சிக்
குடித்துவிடும் என்ற பயம் அவனுக்கு இருந்தது போலும்.
கோடை காலங்களில் எனது ஊரில் கிணறுகளருகில் பெண்கள் பெரும்
முணுமுணுப்போடுதான் குடங்களில், வாளிகளில் நீரள்ளிப் போவதைப்
பார்த்திருக்கிறேன். வெயில் தன் தாகம் போக மிச்சம் வைத்த நீர் கிணறுகளின்
அடி ஆழத்தில் அமைதியாக, பாவமாகக் கிடக்கும். வற்றிப் போய், அடியில்
சொற்பநீர் ஏந்தியபடி இருக்கும் அதி ஆழமான கிணறுகளில் தண்ணீரள்ள அதிகபட்சப்
பிரயத்தனமும் சக்தியும் வேண்டும். உடல் உழைப்புக்கும், வியர்வைக்கும்
தன்னைக் கொடுத்துப் பலவீனமடைந்த பெண்கள் மிகுந்த பெருமூச்சோடும் அது தரும்
வலிமையோடும் நீரள்ளுவார்கள். சிறுவயதில் என்னையும் தங்கள் குடத்தைப் போலவே
சுமந்து சென்று முகம், கை, கால் கழுவிவிடும் வீட்டுப் பெண்கள்
தண்ணீரிறைத்து முடியும்வரை கிணற்றடியில் அமர்ந்து
பார்த்திருந்திருக்கிறேன். யாரும் கவனியாத சில வேளைகளில் நான்
கிணற்றுக்குள் எட்டிப்பார்த்துவிட்டால் மிகுந்த பதைபதைப்போடு முகங்களில்
கடுமையேற்றும் அவர்கள், விரல் நீட்டி எச்சரித்துத் தூக்கி அருகிலிருக்கும்
கல்லில் அமரவைப்பார்கள். பின்னர் கிணற்றுக்குள் இருக்கும் பூதங்கள் பற்றிக்
கதை கதையாகச் சொல்வார்கள். பெண்கள் கதை சொல்வதில் வல்லவர்கள். யாரிடமும்
சொல்லப்படாக் கதைகளைத் தம் மனதுக்குள் ஒளித்து மூடி வைத்திருக்கும்
அவர்கள், குழந்தைகளிடம் மட்டும் பொக்கிஷங்களைப் பத்திரமாக ஒப்படைப்பது
போலக் கதைகளைக் கொடுத்துவிடுகிறார்கள்.
அதே கதை சொல்லும் ஆற்றல் கோடைக்கும் அது சுமந்துவரும் வெயிலுக்கும்
இருக்கிறது. பல கதைகளைத் தோற்றுவித்திடும் பலம் அவைக்குண்டு. பயிர்களை,
கதிர்களைப் பொசுக்கி, ஏழைக் குடியானவர்களின் வயிற்றிலடித்திடும் வறுமையைக்
கருவாய்க் கொண்ட பல கதைகளை, இன்னும் சூரியத் தீக் கதிர்களை அனுப்பி
குடிசைகளைப் பயிர் நிலங்களைப் பற்றியெரியச் செய்யும் கதைகளை, எல்லா
இடங்களிலும் நீரை உறிஞ்சிக் குடித்துத் தன் தாகம் தீர்த்துவிட்டு ஊர்
மக்களை நீர் தேடி அலையவைக்கும் கதைகளையெல்லாம் அனுபவித்திருக்கிறோம்.
பார்த்திருக்கிறோம். கேட்டிருக்கிறோம். அவையெல்லாம் கோடை சொன்ன, சொல்கிற,
சொல்லும் கதைகள்தாம்.
நெருக்கமான மரங்களற்ற நகரங்களின் தெருக்களுக்கு இளங்காலையில் வரும் கோடை
கால வெயில் நிரந்தரமாக அங்கேயே படுத்துவிடுகிறது. அதன்மேல் ஊறும்
எல்லாவற்றையும் பொசுக்கிவிடும் அது வியர்வைப் பாடலை எங்கும் பாடியபடி
ஊர்ந்தலைந்து ஒரு நாடோடியைப் போலத் திரிகிறது. வாகனங்களின் நெரிசல் கோடை
காலங்களில் பெரும் எரிச்சலைத் தருகின்றன. தொடும் எல்லாவற்றிலும்
புறுபுறுக்கும் வெயிலை, கோடையை அந் நேரங்களில் மனிதர்களின் பரம எதிரிகளாகப்
பார்க்க வைத்து, சபிக்கச் செய்துவிடுகின்றன.
கோடையின் மனது எப்பொழுதும் ஆரோக்கியமானதாக இருப்பதில்லை. அது மனிதர்களுடனான
பண்டைய கோபங்களைச் சேமித்துவைத்து பின்னாட்களில் அவர்களைப் பழிவாங்கும்
எண்ணத்தோடும், வைராக்கியத்தோடும்தான் வருகிறது. சூரியனுக்கு அருகே பறந்தும்
பறவைகளை வியர்க்கச் செய்யமுடியவில்லையென்ற ஆதங்கத்தோடும் கோபத்தோடும்
அம்மையையும், வெம்மையையும், இன்னும் பல நோய்களையும், மரணங்களையும் அது
தன்னுடன் கூட்டிவருகிறது. அவையெல்லாம் உயிர்களுக்குச் செய்யும் தீங்குகளை
பகலில் வெயிலின் கண்களால் பார்த்திருக்கும் அது இரவுகளில் சூடான காற்றிடம்
கர்வத்தோடு விசாரித்தும் கொள்கிறது.
எப்பொழுதும் எதையும் தள்ளிவிடும் கரங்களைக் கொண்டது கோடை. எதையும்
எடுத்துச் சேமிக்கும் கரங்கள் அதனிடத்திலில்லை. எவ்வளவு பெரிய வனங்களின்
மரங்களிலிருந்தும் இலைகளைத் தள்ளிவிட வெயிலும், காற்றும் அதற்குப் போதும்.
எவ்வளவு பெரிய மலையிலிருந்தும் சிறிய பெரிய கற்களை உருட்டிவிடவும்,
வெள்ளைப் பனி மலைகளை உருக்கி அழித்திடவும் அதற்கு வெயிலும், வெப்பமும்,
காற்றும் போதும். காடுகளுக்குள் சுதந்திரமாக அலையும் விலங்குகளையெல்லாம்
தண்ணீரைத் தேடும்படி ஊருக்குள் தள்ளிவிட அதற்கு உஷ்ணமும், வரட்சியும்
போதும். இப்படியாக வெயிலும், வெப்பக் காற்றும், வரட்சியும் ஒன்றோடொன்று
பிணைந்து கோடையின் விரல்களாக இருக்கின்றன. அவை அதற்குப் போதுமானதாகவும்
இருக்கின்றன.
ஊரில், நகரில் வயது கூடிய முதியவர், பல கோடைகளைப் பார்த்தவர் 'இது
போன்றதொரு வெயிலை, கோடையை இதற்கு முன்னர் கண்டதில்லை' என்பது போலச்
சொல்வதைக் கேட்டிருக்கிறோம். எல்லா இடங்களிலுமுள்ள முதியவர்கள், பல
காலங்களைக் கண்டவர்கள் இப்படித்தான் சொல்கிறார்கள். ஏதேனுமொரு படி அதிகமான
வெயிலை, உஷ்ணத்தை ஒவ்வொரு முறையும் காலம் தன் முதுகில் பருவங்கள் தோறும்
சுமந்துவந்து தந்துசெல்கிறது. அதனை எந்தவிதக் கவலையற்றும் ஏந்திக் கொள்ளும்
நாம், அது தரும் தழும்புகளையும் ஏற்றுக் கொள்ளத்தான் செய்கிறோம்.
எவ்வாறாயினும் அவ் வடுக்களை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
சுற்றுச் சூழலுக்கு அபரிமிதமான அநீதிகளை இழைத்து, இயற்கையை வதைத்து நாம்
தெரிந்தே செய்யும் அட்டூழியங்கள்தான் இக் கோடைக்கும் வெயிலுக்கும்
உஷ்ணத்துக்கும் ஏணிப்படியாக இருக்கின்றன. எதிர்வரும் காலங்களில் நாமும்
முதியவர்களாகி, நமது சந்ததியிடமும் 'இது போன்றதொரு வெயிலை, கோடையை இதற்கு
முன்னர் பார்த்ததில்லை' எனச் சொல்லத்தான் போகிறோம் என்பது மட்டும்
நிதர்சனம்.
உணர்வோம்... வெயிலை, வெப்பத்தை, கோடையை மட்டுமல்ல... இயற்கைக்கு நாம்
செய்துகொண்டிருக்கும் அநீதியையும்!
வன்மம் கக்கும் வெயில்
காலம் காலமாகத் தேக்கிவைத்த
வன்மத்தைக் கக்கியபடி
ஊர்ந்து திரிகிறது வெயில்
கைவீசி நடக்கும்
மூதாட்டியொருத்தியின்
பிடியேதுமற்ற தலைப்பாரம் போல
அங்குமிங்கும் அசையுமதை
எந்தக் கரங்கள் இறக்கிவைக்கும்
கம்பெடுத்து விரட்டுவதைப் போல
அடிச்சுவடுகளைத் தின்று தின்று
பின்னாலேயே துரத்துமது
நாம் நிழலுக்குள் போய்விட்டால்
கூரையின் மேலோ
அப் பெருவிருட்சம் மேலோ
ஓர் அராஜக ராசா போல
நீட்டி நிமிர்ந்தமர்ந்து
வெளியே வரக் காத்திருக்கும்
எல்லாக் கோடைகளுக்குள்ளும்
ஏதேனும் கதைகளிருக்கின்றன
இந்தக் கோடையிலும்
அதிவெப்பம் தாக்கிய ஒருவர்
கதை சொல்ல ஆரம்பித்தார்
இந்த வருடம் வெப்பம்
சற்று அதிகம்தானென
வழமை போலவே
முதல்வரி இருந்தது.
|
|