இதழ் 16
ஏப்ரல் 2010
  காப்புரிமை (Copyright) - அறியாமையில் இந்தியர்கள்
அகிலன்
 
 
 
  சிறப்புப்பகுதி:

ம‌லேசியா - சிங்கை 2010

ம‌. ந‌வீன்

சர்ச்சை: இலக்கியச் சுரண்டல்

பத்தி:

காப்புரிமை (Copyright) - அறியாமையில் இந்தியர்கள்

அகிலன்

இயற்கை (1) - கோடை
எம். ரிஷான் ஷெரீப்

அகிரா குரோசவாவின் 'இகிரு': வாழ்வதின் பிரியம்
சு. யுவராஜன்

பிக்காசோவும் சரஸ்வதி அக்காவும்!
சந்துரு

உண்மை என்னவெனில் - 95 சதவிகித எழுத்தாளர்கள் எழுதுவதை வெறுப்பவர்கள்!
சீ. முத்துசாமி

கட்டுரை:

சொற்களில் சிக்கித் தவித்த காலமும் இலக்கியமும்
யதீந்திரா

தெலுங்கானா - காங்கிரஸின் கோரத்தாண்டவம்
நெடுவை தவத்திருமணி

சிறுகதை:

சிறகு
சு. யுவராஜன்


ஓரங்க நாடகம்
ஸ்ரீரஞ்சனி

சுவீர்
கிரகம்

தொடர்:


எனது நங்கூரங்கள் ...9
இளைய அப்துல்லாஹ்

நடந்து வந்த பாதையில் ...3
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

செம்புழுதி மழைச்சாரலில் கரைந்துருகும் காலம் ...10
சீ. முத்துசாமி

கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...6

ஏ. தேவராஜன்

றியாஸ் குரானா

இரா. சரவண தீர்த்தா

செல்வராஜ் ஜெகதீசன்

தர்மினி

ரேணுகா

திரைவிமர்சனம்:


அங்காடித் தெரு : மீந்திருக்கும் வாழ்வு
ம‌. ந‌வீன்

இதழ் அறிமுகம்:


எதிர் (www.ethir.org)

எதிர்வினை:


சு. யுவராஜனின் ‘அழைப்பு’
க. ராஜம்ரஞ்சனி
     
     
 

காப்புரிமை பற்றிய பல்வேறு குழப்பங்கள் இன்னமும் நம்மில் நிலவி வருகிறது. பத்திரிக்கை மற்றும் தொலைதொடர்பு நிறுவனங்களும், அதன் ஊழியர்களிடமும் கூட பல்வேறு அச்சங்களையும் கேள்விகளையும் எழுப்பி வருகிறார்கள். என்னுடைய 10 வருட இசைத்துறை அனுபவத்தில் காப்புரிமை பற்றிய அறியாமையை எப்பொழுதும் இந்தியர்கள் மத்தியில் கண்டிருக்கிறேன். மூன்று பக்கங்கள் அடங்கிய காப்புரிமை சார்ந்த தகவல்களை சென்னைப் பத்திரிக்கையாளர்களிடன் ஜனவரியில் இளையராஜாவுடனான எனது பத்திரிக்கையாளர் சந்திப்பில் வழங்கிய போது, அரங்கத்தில் மிகப் பெரிய குழப்பமும் அச்சங்களும் எழும்பிய வண்ணமே இருந்தது. மீண்டும் மீண்டும் கேள்விகள் ஒரே வட்டத்திற்குள் சுற்றிக் கொண்டே இருந்தது. காப்புரிமை என்றால் என்ன? இதுதான் முக்கியமான கேள்வி. தமிழில் அர்த்தம் தெரியாமல் கேட்கவில்லை. காப்பிரைட் என்றால் என்ன என்றுதான் பலரும் கேட்டார்கள். இணையத்தில் பதிவிறக்கம் செய்வதும் குற்றமா? அசல் சிடியில் இருந்துதான் MP3 சிடிக்கு மாற்றுகிறார்கள், அதனால் அது எப்படி குற்றமாகும் என்பது போன்ற பல கேள்விகள் அவர்களின் அறியாமையை வெளிக்காட்டியது. பத்திரிக்கைத்துறையில் இருப்பவர்களுக்கும் தொலைக்காட்சி, வானொலி போன்ற துறைகளில் இருப்பவர்களிடமே இத்தகைய குழப்பம் என்றால் இவர்களின் தகவல்களை தங்களது தகவல் ஞானத்தின் எல்லைகளாக கொண்டிருக்கும் மக்களை என்னவென்று சொல்வது.

அத்தியாவசியமான கேள்வி - காப்புரிமை என்றால் என்ன?

ஒரு இசையோ, கட்டுரையோ, நாவலோ, கதையோ, ஓவியமோ, கட்டிட வரை திட்டமோ, கணிணி மென்பொருளோ, ஒரு நபராலோ அல்லது ஒரு குழுவாலோ கண்டு பிடிக்கப்பட்டிருந்தால் அல்லது உருவாக்கப்பட்டிருந்தால் அதை அவர்களின் உரிமையாக கருதலாம். காரணம் அது அவர்களுடைய சிந்தனையாலும் உழைப்பாலும் உருவாக்கப்பட்டது. அவர்களின் அறிவார்ந்த சொத்து (Intelectual Property).

ஏன் காப்புரிமைக்கு முன்னுரிமை வழங்கவேண்டும்?

படைப்பு மனம் அதற்கான மரியாதையை, கவுரவத்தை அங்கீகாரத்தை எதிர்பார்ப்பது இயல்பு. இது என்னுடைய கட்டுரை என்ற ஒரு சின்ன சந்தோஷமாவது எனக்கு இருக்கும் நிலையில் அதை வேறொருவர் எனது அனுமதியின்றி அவர்களின் பக்கத்திலோ அல்லது அவர்களின் பெயரிலோ வெளியிட்டால், எனது படைப்பு மனம் நிச்சயம் வேதனையுறும். அதை பாதுகாப்பதே காப்புரிமையின் முதன்மை நோக்காக இருந்திருக்கிறது. உதாரணத்திற்கு நண்பர் நவீனின் கதையை நண்பர் யுவராஜன் தனது பெயரில் முதலில் வெளியிட்டால் அது நண்பர் நவீனை மன ரீதியாக எவ்வளவு பாதிக்கும். இது நிகழாமல் தவிர்க்க காப்புரிமை சட்டங்கள் உருவானது. (நவீனுக்கும் யுவாவிற்கும் இடையில் எந்த ஈகோவும் இல்லாததால், அவர்களை உதாரணத்திற்கு சொன்னேன்).

காப்புரிமையின் இரண்டாவது நோக்கம், பொருளியல். படைப்பாளிகளின் ஒரே வருமானம் அவர்களது படைப்புகளால் வரும் வருமானம் தான். ஒரு முழு நேர எழுத்தாளனுக்கோ அல்லது இசையமைப்பாளனுக்கோ அவனது ஒரே வருமானம் அவனது படைப்புதான். அதை அவனது ரசிகர்களோ அல்லது மக்களோ வாங்கும் போதோ அல்லது அதை பயன்படுத்தும் போது, அதற்காக அவர்கள் செலுத்தும் பணம்தான் படைப்பாளிகளின் வருமானம். படைப்பாளிகள் பகுதி நேரமாக படைப்புத் தொழிலில் ஈடுபட முடியாது. படைப்பு மனம் பகுதி நேரமாக செயல்பட முடியாது. அதனால் அவர்களின் படைப்பு அவர்களின் வாழ்க்கையை தீர்மானிப்பதாக இருக்கிறது.

இன்று காப்புரிமை சார்ந்தும் படைப்புகள் சார்ந்து இயங்கும் துறை பெரிய நிறுவனமாக இயங்கி வருவதால், காப்புரிமை தற்பொழுது படைப்பாளிகள் மட்டுமின்றி படைப்புடனும் அதன் விநியோகத்துடனும் நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ செயல்படும் அனைத்து துறைகளையும் நபர்களையும் உள்ளடக்கியுள்ளது. அவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதாகவும் உள்ளது.

உதாரணத்திற்கு, ஒரு இசையமைப்பாளரின் படைப்பு அவருடைய உரிமையாக இருந்தாலும், அதன் விற்பனை அவருடைய வருமானத்திற்கு ஆதாரமாக இருந்தாலும் பல சமயங்களில் மற்றவர்களும் அதனால் பயன் அடைகிறார்கள். குறிப்பாக இசை கலைஞர்கள், ஒலிப்பதிவு நிபுணர்கள், விற்பனையாளர்கள் என்று பலர் அதனால் ஒரு படைப்பு பலரையும் உள்ளடக்கிய ஒரு ஒன்றிணைந்த உரிமமாக இருக்கிறது.

காப்புரிமையின் வருமானங்கள்

காப்புரிமை பற்றி பேசும்போது இசை சார்ந்த காப்புரிமைதான் எனக்கு பரீட்சயமானது என்பதால் அதைப் பற்றி விளக்குவதுதான் எனக்கு சவுகரியமானது. எனக்குத் தெரிந்து இந்திய இசைத்துறையில் காப்புரிமையை அறிமுகப்படுத்திய முதல் நபர் இளையராஜா அவர்கள்தான். சினிமாத் தயாரிப்பாளர்கள் அதன் ஒலிப்பதிவிற்கும், பாடகர்களுக்கும், இசை கலைஞர்களுக்கும் ஆகும் செலவுகளை ஏற்றுக் கொண்டார்கள். இசையமைப்பாளர் செய்யும் வேலைக்கான வருமானம் ரெக்கார்ட் அல்லது கேசட் விற்பனையில் வரும் லாபத்தை பகிர்ந்து கொள்வதாக இருந்தது.

இன்றைய நிலையில் இணைய பதிவிரக்கதின் (Download) வருமானம் அல்லது மொபைல் பதிவிரக்கம் அல்லது ரிங் டோன் பதிவிரக்க வருமானத்தின் ஒரு பகுதியும் இசையமைப்பாளரின் வருமானத்தில் அடங்கும். சிடி அல்லது இத்தகை பதிவிறக்கத்தின் வருமானம் அவருக்கு செல்லாத நிலையில் அவரின் உழைப்பிற்கும் படைப்பிற்கும் வருமானம் மட்டுமின்றி அங்கீகாரமும் இல்லாது போகும்.

இது தவிர்த்து, வானொலியில் அவரின் பாடல்கள் ஒலிபரப்பப்படும் போதும், தொலைக்காட்சியில் அவரது பாடல்கள் ஒலிபரப்படும்போதும், போட்டி நிகழ்வுகளில் அவரது பாடல்கள் பாடப்படும் போதும், சினிமாவில் ரீமிக்ஸ் செய்யப்படும் போதும், அவரிடம் அனுமதி பெறுவதோடு அதற்கான ஊதியமும் வழங்கப்படவேண்டும்.

வானொலிகள், தொலைகாட்சிகள் லாப நோக்கோடு செயல்படும் நிறுவனங்கள். பிரபலமான பாடல்கள் இடம்பெறும் போது அந்த நிகழ்ச்சிக்கான ரசிகர்கள் பெருகுகிறார்கள். அதன் வழி அந்த வானொலி நிறுவனத்திற்கோ அல்லது தொலைக்காட்சி நிறுவனத்திற்கோ விளம்பரங்கள் வழி வருமானமும் பெருகுகிறது. ஒருவர் படைப்பை பயன்படுத்தி இவர்கள் பணம் ஈட்டும்போது அந்தப் படைப்பாளிக்கு அதில் லாபத்தில் பங்கு தருவதென்பது நியாயமாகும். அதுவே விளம்பரமற்ற அதே சமயம் முற்றிலும் இலவசமான தொலைகாட்சியோ அல்லது வானொலியாகவோ இருந்தால் இது விதிவிலக்கு.

கலை நிகழ்ச்சி நடத்துபவர்களும், அவர்கள் அந்த நிகழ்ச்சியில் பயன்படுத்தும் பாடல்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தவேண்டும். சுருங்க சொல்வதென்றால் ஒரு பாடலை வியாபார நோக்கோடு பயன்படுத்தும் அனைத்து செயல்களுக்கும் அந்தப் பாடலின் உரிமையாளருக்கு பணம் செலுத்தப்பட வேண்டும். நாம் ஒரு நிறுவனத்தில் சேர்ந்து வருமானத்திற்கு வேலை செய்வதுபோல் ஒரு படைப்பாளன் அல்லது ஒரு இசையமைப்பாளர் அவரது வேலைக்கான வருமானமாக பெறப்படும் பணம், சிடி விற்பனையிலோ அல்லது இணைய பதிவிறக்கத்திலோ அல்லது தொலைக்காட்சியில் அல்லது வானொலியில் பயன்படுத்துவதிலோ பெறப்படும் பணமாகும். அதுதான் அவர்களின் ஊதியம்.

காப்புரிமை மீறல்கள் என்பது என்ன?

காப்புரிமை மீறல்கள் இரண்டு வகைப்படும். ஒன்று கள்ளப்பதிப்பு மற்றது அனுமதியற்ற பயன்பாடு. ஆனால் பொதுப்படையாக சொல்வதென்றால் ஒரு படைப்பு அல்லது பாடல் அதை உருவாக்கியவருக்கு ஊதியம் தராமல் பயன்படுத்தப்படுமானால் அல்லது விற்பனை செய்யப்படுமானால் அது காப்புரிமை மீறல் செயலாகும்.

கள்ளப்பதிப்புகள் என்றால் என்ன?

கள்ள ஆடியோ சிடிகள் அல்லது கள்ள MP3 சிடிகள் என்பது உரிமையாளரின் அனுமதியின்றி சட்டத்தை ஏமாற்றி திருட்டுத் தனமாக விற்பனை செய்யப்படுவதாகும். அவர்கள் இசையமைபாளர்களுக்கோ, உரிமையாளர்களுக்கோ, அதன் உருவாக்கத்திற்கு பணம் போட்ட தயாரிப்பாளர்களுக்கோ அல்லது அதை குறிப்பிட்ட நாடுகளில் விற்பனை செய்ய அனுமதி பெற்ற இசை நிறுவனங்களுக்கோ லாபத்தில் பங்கு தராமல் அல்லது பணம் தராமல் விற்பனை செய்பவர்கள். நீங்கள் வாங்கும் பணம் மொத்தமும் அந்த திருடர்களுக்கு மட்டுமே செல்கின்றது. அதோடு அவர்கள் மிகவும் மலிவாக அதை விற்பனை செய்ய இயலும். காரணம் ஒரு வெறுமையான (empty) சிடியின் செலவைத் தவிர வேறெந்த செலவும் அவர்களுக்கு இருப்பதில்லை.

இதனால் யாரெல்லாம் பாதிக்கப் படுகிறார்கள்?

இசையமைப்பாளரும் தயாரிப்பாளரும் நேரிடையாக பாதிக்கப்படுபவர்கள். அசல் சிடிகள் விற்பனையாவதில்லை, காரணம் கள்ளப் பதிப்புகள்தான் வாங்கப்படுவதால், தயாரிப்பாளர்கள் ஒரு பாடல் உருவாக்கத்தில் பங்கு பெரும் இசைக் கலைஞர்களின் எண்ணிக்கையை குறைக்கிறார்கள். பல சமயங்கள் கணிணி இசை போதுமென்ற முடிவுக்கு வருகிறார்கள். இசை மட்டுமே தெரிந்த பல இசை கலைஞர்கள் தற்கொலைக் கூட செய்துகொள்கிறார்கள் என்று யுவன் சங்கர் ராஜா ஒரு முறை என்னிடம் கூறியிருக்கிறார். இசைத் துறையை சார்ந்திருக்கும் அனைத்து நபர்களையும் இந்த கள்ளப்பதிப்பு பாதிக்கிறது. இசையின் தரமும் கூட இதனால் குறைந்து வருகிறது என்றுகூட சொல்லலாம்.

கள்ளப் பதிவிறக்கங்கள்

இது தவிர இணையத்தின் வாயிலாக கள்ளப் பதிவிரக்கங்கள் வழங்கும் இணையத்தளங்கள். அவர்கள் பல சமயங்களில் இலவசமாகவும் சில சமயங்களில் நன்கொடைப் பெற்றும் பதிவிறக்கச் சேவைகளை வழங்கி வருகிறார்கள். இன்று இதுதான் அதிக வரவேற்பு பெற்று வரும் திருட்டு செயல். சட்டப்படி இதை தடை செய்வதில் பல சிக்கல்களும் அதற்கான செலவுகள் பல மடங்காக இருப்பதாலும் இசை நிறுவனங்கள் வேறு வழிதெரியாது தவிக்கிறார்கள்.

எப்படி கள்ளப் பதிப்புகளையும் கள்ளப் பதிவிறக்கத் தளங்களையும் அடையாளம் காண்பது?

கள்ளப் பதிப்புகளின் கவர்கள் எப்பொழுதுமே தரம் குறைந்த நிலையில் வடிவமைக்கப் பட்டிருக்கும். பல நிறுவனங்களின் பாடல்கள் ஒரே சிடியில் அல்லது MP3யில் அடங்கியிருக்கும். வெளியிடும் நிறுவனங்களின் தகவல்கள், தொடர்புகள் பதிக்கப்பட்டிருக்காது. சில சமயங்களில் நிறுவனங்களின் தகவல்கள் இருக்கும் ஆனால் தொடர்பு எண்கள் இல்லாது இருக்கும். அப்படியிருப்பினும் அது போலி தகவல்களாக இருக்கும். பொதுவான ஒன்று என்னவென்றால் சந்தையில் இருக்கும் விலையைவிட குறைந்த விலையில் விற்கப்படும். தரம் மலிவாக இருக்கும்.

கள்ளப் பதிவிறக்கத் தளங்கள் பெரும்பாலும் இலவசமாக பாடல் கேட்பதற்கும், பதிவிறக்கம் செய்வதற்கும் அனுமதியளிக்கும். சில தளங்கள் நன்கொடை வசூலிப்பார்கள். அப்படியே பதிவிறக்கத்திற்கு பணம் வசூலித்தாலும் அவர்களின் அகப்பக்கத்தில் அவர்களின் தொடர்புகள் மறைக்கப்பட்டிருக்கும். இணையத்தளம் யாருடைய பேரில் அல்லது நிறுவனத்தின் பேரில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதைக்கூட மறைத்திருப்பார்கள்.

நமது பங்கு

கள்ளப் பதிப்பை தவிர்ப்பது நாம் செய்ய வேண்டிய அவசியமான ஒரு ஒழுக்கச் செயலாகும். காரணம் அதனால் உழைப்புக்கான ஊதியம் கிடைக்காமல் இசையமைப்பாளர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள், இசை கலைஞர்கள் வாடுகிறார்கள். பலர் இசைத்துறையை விட்டு விலகி செல்கிறார்கள். ஏ ஆர் ரஹ்மானின் சவுண்ட் இஞ்சினியர் சிவக்குமார் ஒரு முறை என்னிடம் ‘இப்பொழுதெல்லாம் நண்பர்கள்தான் எங்களை தேடி வருகிறார்கள். மற்றவர்கள் இசைக்காக எங்களை அணுகுவது குறைந்து விட்டது. காரணம் சிடி விற்பனை மோசமாகி விட்டது. இப்பொழுது வரும் வாய்ப்புகள் கூட மொபைல் டௌண்லோட் நல்ல வருமானத்தை தருவதால் எங்களை தேடி வருகிறார்கள், அதுகூட இல்லாமல் போகுமென்றால் இசைக்காக யாரும் வரமாட்டார்கள்’, என்றார்.

ஒரு அச்சமான சூழ்நிலையில் இசைத்துறை இன்று இருந்து வருகிறது. இசையின் எதிர்காலமும் இசைக் கலைஞர்களின் எதிர்காலமும் இன்று கேள்விக்குறியாக இருக்கிறது. நமது நேர்மையற்ற செயல் பலருடைய வாழ்வையும் எதிர்காலத்தையும் பாதித்திருப்பதை உணராத அளவு நாம் மனசாட்சியற்று இருக்கிறோம். நேர்மையற்ற நாம் அரசியல்வாதிகளும், ஆன்மீக குருமார்களும் நேர்மையானவர்களாக இருக்க வேண்டும் என்று நினைப்பது எந்த வகையில் நியாயமானது?

இசை என்றில்லாமல் இன்று பல பொருட்களும் கள்ள சந்தையில் விற்கப்படுகிறது. உதாரணத்திற்கு மொபைல் போன்கள் மற்றும் காரின் உபரிப்பாகங்கள். நீங்கள் ஒரு குறிப்பிட்ட உபரிபாகத்தை வாங்கும் போது கடைக்காரர் அசலா அல்லது தைவான் மாடலா அல்லது சீனா மாடலா எது வேண்டும் என்று கேட்பார். அதை பச்சையாக சொல்வதென்றால் அசலா அல்லது கள்ளப் பதிப்பா என்பதாகும். சில வேளைகளில் அசலா அல்லது லோக்கலா என்று கேட்பார்கள். கடைகாரர் சொல்லும் சமாதானம் அசலை உற்பத்தி செய்யும் அதே நிறுவனம்தான் கள்ளப்பதிப்புகளையும் வெளியிடுகிறார்கள் என்பது. அது அப்பட்டமான பொய்.

ஆனால் வாடிக்கையாளர்கள்தான் இந்த திருட்டு தொழிலை ஊக்கப்படுத்துவதும் அதன் சந்தையை உறுதி செய்பவர்களுமாக இருக்கிறார்கள். கள்ளப் பதிப்புகளை வாங்குபவர்கள் மீது தனி நபர் சட்டம் பாய்ந்தால் மட்டுமே நமக்கு அச்சம் ஏற்படும். பல நாடுகள் இதை பரீசலித்து வருகிறது. கள்ள சிடிகளை வாங்குபவர்களை கைது செய்ய விவாதித்து வருகிறார்கள். அப்பாவி மக்கள் தெரியாமல் வாங்கக்கூடும், அதனால் பரிதாபமாக அவர்கள் ஏன் தண்டனைக்குள்ளாக வேண்டும் என்ற காரணத்தினால் மட்டும்தான் இன்றும் அதை பரீசலித்து வருகிறார்கள். ஆனால் நமது மனசாட்சிக்குத் தெரியும் நாம் அப்பாவித்தனமாக, தெரியாமலா கள்ளப் பதிப்புகளை வாங்குகிறோம் என்று.

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768