|
நாள் : சனிக்கிழமை 20.3.2010
நேரம்: இரவு மணி 11.30
சற்று முன்புதான் யுவராஜன் அழைத்திருந்தார். அவர் ஆசிரியராகப்
பொறுப்பேற்றிருக்கும் 'தும்பி' அறிவியல் இதழின் அடுத்தக் கட்ட
நடவடிக்கைகள் தொடர்பாகப் பேசிக்கொண்டிருந்தார். வழக்கமாக
சோர்வில் இருக்கும் அவரின் குரலில் இன்று உற்சாகம். முதல் இதழின்
வேலைகளை முடித்து அச்சுக்கு அனுப்பிவிட்ட ஒரு திருப்தியும் இருந்தது.
அந்தத் திருப்தி, குரலுக்குத் தரும் அணிகலன்களை என்னால் நன்கு உணர
முடிவதாய் இருந்தது.
ஏறக்குறைய இதே போன்ற ஓர் இரவில்தான் இனி வல்லினத்தை இதழ் வடிவில்
வெளியிடுவதில்லை என முடிவெடுத்திருந்தேன். யோசித்துப் பார்க்கையில் என்
வாழ்வில் நான் எடுத்த பெரும்பாலான முடிவுகள் இப்படி ஒரு நிமிடத்தில்
எடுக்கப்பட்டவைதான். அந்த முடிவை எடுத்தபோது இருந்த மனதின் சுமை,
அதன் தன்மை மாறாமல் இப்போதும் அழைத்தவுடன் சட்டென வந்து எட்டிப்
பார்க்கிறது. முதலில் அந்த முடிவை சிவாவிடமும் யுவராஜனிடமும்தான்
கூறினேன். அதன்பின் சிங்கை இளங்கோவனிடம் கூறினேன். அவர் வார்த்தைகள்
பெரும் தீ ஜுவாலைகளாகப் பாதுகாப்பு வலையங்கள் வரையக்கூடியவை.
இப்போது சிந்தித்துப் பார்க்கையில் அந்த முடிவு சரியானதுதான் எனத்
தோன்றுகிறது.
பலரிடமிருந்தும் இதழ் நிறுத்தத்திற்கான காரணம் கோரப்பட்டது.
'பணப் பிரச்சனையா?' என்பது அதில் பிரதானமானது. என்னால்
திட்டவட்டமான எந்தக் காரணத்தையும் சொல்ல இயலவில்லை. ஆனால்
'பணப்பிரச்சனை அல்ல' என்று மட்டும் உறுதியாகக் கூறினேன். வல்லினம்
வாசகர் சந்தையைப் பிடிக்கும் நோக்கத்தில் உருவான இதழ் அல்ல.
இருக்கும் பணத்தைக்கொண்டு அதன் அச்சுப் பிரதிகளின் எண்ணிக்கையைக்
குறைத்துக் கொள்ள இயலும். மூன்று மாதத்திற்கு ஒரு முறை இதழ்
வெளியிடுவதால் படைப்புகளுக்கும் பெரிதாகப் பஞ்சம் ஏற்படவில்லை.
இந்த இரண்டு காரணங்களினால்தான் தமிழகத்தில் பல சிற்றிதழ்கள்
நிறுத்தப்பட்டன. ஆனால் வல்லினம் நிறுத்தப்பட வேறு சில
காரணங்கள் இருக்கவே செய்தன.
அது ஒரு சிற்றிதழ் தான் கொண்டுள்ள கொள்கைகளுக்குச் சமரசம்
விரிக்காமல் இருக்க நிறுவப்பட்டக் காரணங்கள்.
மலேசியர்களுக்குப் பொதுவாகவே சிற்றிதழ் என்பது தமிழகத்திலிருந்தே
அறிமுகம் ஆகின்றது. அதிலும் குறிப்பாக காலச்சுவடு, உயிர்மை மற்றும்
தீராநதி நல்ல வாசகர்கள் அறிந்த இதழ்களாக உள்ளன. ஏறக்குறைய
அத்தகைய இதழ்கள்தான் தீவிரச் சிந்தனைப் போக்கு உள்ள இதழ்களாக
கடந்த காலங்களில் (2006 வாக்கில்) பலருக்கும்
அறிமுகப்படுத்தப்பட்டு வந்தன. நானும் அக்காலக்கட்டத்தில்
இவ்விதழ்களையே நண்பர்களுக்கும் முன்மொழிந்து வந்தேன்.
துரதிஷ்டவசமாக இது போன்ற இதழ்கள் தவிர்த்து கோவை ஞானி,
எஸ்.வி.ராஜதுரை, அ.மார்க்ஸ், சுந்தர ராமசாமியின் கட்டுரைகள்,
ஜெயமோகனின் சில கட்டுரைகள், ஷோபா சக்தி, இளங்கோவன்,
மா.சண்முகசிவா போன்றோருடனான உரையாடல்கள் இலக்கியத்தில் உள்ள கலை,
நுட்பங்களையெல்லாம் கடந்து எழுத்தாளனின் தனித்த அடையாளம்
தொடர்பான வினாக்களை எப்போதும் வீசியபடியே இருந்தன. இந்த வினாக்கள்
மிக ஆச்சரியமாக எல்லா வகையிலும் மேற்குறிப்பிட்ட மூன்று இதழ்களில்
இரண்டை நோக்கி விரல் நீட்டுபவையாய் பொருந்தி இருந்தது முரண்நகை.
அதிகாரத்துக்கு எதிராய் செயல்பட வேண்டிய இதழ்களே அதிகார
பீடங்களில் அமர்ந்தபடி இருப்பதும்; வை.கோ தொடங்கி குஷ்பு வரையில்
அரசியல் சினிமா பிரபலங்களில் ஒருவரை விடாமல் புத்தக
வெளியீடுகளில் தலைமை தாங்க சொல்வதும்; பதிப்பித்த புத்தகங்கள்
நூல் நிலையத்தில் விற்க அரசியல் தலைவிகளுக்குக் கட் அவுட்
வைப்பதும்; என அத்தனை ஜிகினா வேலைகளையும் செய்துகொண்டு எழுத்தில்
மட்டும் சமரசமின்மை, சத்தியம், தீவிரம், என எழுதுவது கஞ்சா
வித்த பணத்தில் காந்தி சிலை வைப்பதுபோல தோன்றுகிறது.
இதை இங்கு நான் சொல்லவந்த காரணம் 'வல்லினம்' தொடர்ந்து இதழாக
வெளிவந்திருந்தால் அதற்கும் இது போன்றதொரு அசம்பாவிதம்
மிகச்சாதாரணமாக நிகழ்ந்திருக்கும். அழைத்து, பணம் தருகிறேன்
எனக்கூறும் அரசியல் வாதிகளிடம் தப்பிப்பது 'வல்லினம்' போன்ற
இதழ்களுக்கு சாதாரணமல்ல. ஆச்சரியமாக வல்லினம் இதழின் ஆசிரியர்
குழுவில் உள்ள அனைவரும் மூடர்களாக இருந்து தொலைத்துவிட்டதால்
விளம்பரங்களை இட்டு நிரப்பி காசு சம்பாதிக்கும் உக்தி யாருக்கும்
கைவரவில்லை.
வல்லினம், இதழ் வடிவில் வந்தபோதே அது இணைய இதழாகவும் வர
வேண்டும் என விருப்பம் கொண்டவர் சிவா பெரியண்ணன். அதன் தீவிரம்
இன்னும் அதிகரிக்க வேண்டுமென ஆவல் கொண்டவர் யுவராஜன். வல்லினம்,
இதழ் வடிவில் வருவது நிறுத்தப்பட்டதோடு மூவரும் சந்தித்தோம்.
வல்லினத்தை மாத இதழாக இணையத்திலே இனி கொண்டு வருவதென முடிவானது.
இப்போது பலரும் அறிந்த இணைய இதழாக வல்லினம் மாதம் தோறும்
வருகிறது. மலேசிய தமிழ் இலக்கியம் உலகத்தமிழர்களிடம் சென்று
சேர வேண்டும் என்ற எங்கள் ஆவல் இணையம் மூலம் நிரூபணமாகியுள்ளது.
ஏறக்குறைய ஒரு வருடம் கடந்த பின் மீண்டும் வல்லினத்தை இதழ்
வடிவில் கொண்டுவரும் உத்வேகம் பிறந்துள்ளது. வல்லினம் இணைய இதழில்
வெளிவந்த பல தரமான மலேசிய சிங்கை படைப்புகளை அச்சு இதழில்
வெளிக்கொணர வேண்டும் என்பதே அதன் தலையாய நோக்கம். 200 பக்கங்களில்
உருவாகிவரும் இவ்விதழ் மலேசிய சிங்கையின் தற்கால படைப்புகள்
குறித்த ஒரு நல்ல அறிமுகத்தை வழங்கும் என்பது திண்ணம். ஏறக்குறைய
150 பக்கங்கள் முழுதுமாக முடிந்துவிட்ட சூழலில் மேலும் 50
பக்கங்களைத் தயார் செய்யும் பணி தொடர்ந்து நடந்த வண்ணம்
உள்ளது. இன்னும் சிலரின் படைப்புகள் வந்து சேரவில்லை. மேலும் சில
புதிய படைப்புகள் இருந்தால் அவ்விதழுக்கு வலு சேர்க்கும் என்பதால்
சிலரிடம் புதியப் படைப்புகளைக் கேட்டுள்ளோம். ஏற்கனவே வல்லினம்
அகப்பக்கத்தில் வெளிவந்த பல படைப்புகளும் மீண்டும் செம்மைப்
படுத்தப்பட்டு அச்சு ஏறுகின்றன. இன்னும் படைப்புகளை அனுப்ப
விரும்புபவர்களும் இரண்டு வாரத்திற்குள் (15 ஏப்ரல் 2010)
அனுப்பலாம்.
150 பக்கங்களை முடித்து விட்ட சூழல், 'காதல்' இதழில் பணியாற்றிய
தெம்பினை மீட்டுத்தருவதாய் உள்ளது. 'காதல்' இதழில் அதன் படைப்புகள்
மட்டுமல்லாது அதன் பக்க வடிவமைப்பிலும் அதிக கவனம் எடுத்து
செய்தோம். ஓவியர் சந்துரு தனது முழு திறனையும் அவ்விதழில் காட்டினார்.
வல்லினத்திற்கு அந்தச் சூழல் வாய்க்கவில்லை. 64 பக்கங்களில்
எழுத்தை நிரப்பவே போதுமானதாக இருந்தது. ஆனால் இம்முறை வல்லினம்
பக்க வடிவமைப்பு புதிய தரிசனத்தைக் கொடுக்கும். 'காதல்' இதழ்
ஒவ்வொரு முறையும் உருவாகும் போதும் எனக்கும் சந்துருவிற்கும் ஏற்படும்
வாக்குவாதங்கள் இவ்விதழிலும் தொடர்ந்துள்ளது அதற்கான நல்ல
அறிகுறி. மனிதர் புகுந்து விளையாடியுள்ளார்.
அதிக பக்கங்களானதால் அச்சுக்கு அதிக விலை தர வேண்டியுள்ளது.
வாசகர்களும் நண்பர்களும் சுமார் 12 இதழ்களின் விலையான 100.00
ரிங்கிட்டை முன்னமே வல்லினம் வங்கி எண்ணில் செலுத்துவதன் மூலம்
எங்களால் எந்தத் தடையும் இன்றி வல்லினத்தை அச்சுக்கு அனுப்பி அதை
உரிய காலத்தில் சேர்ப்பிக்க இயலும். ஒரு புத்தகத்தின் விலை 10.00
ரிங்கிட் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர் பயிற்சி
கல்லூரிகளுக்கும் பல்கலைகழக மாணவர்களுக்கும் குறைந்த விலையில்
புத்தகத்தைத் தரவும் தீர்மானித்துள்ளோம்.
இவ்விதழ் தயாரிப்புக்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்பு வழங்கிய
நண்பர்களுக்கு இவ்வேளையில் நன்றிகள் கூறவேண்டும். குறிப்பாக
எழுத்துப் பிழைகளை மிகப்பொறுப்பாகத் திருத்திக்கொடுத்த நண்பர்
தேவராஜனுக்கும் என்னைப் பொறுத்துப்போகும் மணிமொழிக்கும்.
மிக விரைவில் வல்லினம் இதழ் வடிவில் வரும். குறைந்த பட்சம் அச்சு
செலவுக்கு பணம் கிடைத்தவுடன் இறுதி கட்ட வேலைகள் தொடங்கிவிடும்.
முன்னமே பணம் அனுப்பும் நண்பர்கள் 512400202204 - KAANAL PUBLICATION
(Maybank) என்ற வங்கி எண்ணில் பணம் செலுத்தி, உங்கள் முகவரியையும்
தொகையையும், தொகையை செலுத்திய நேரத்தையும் மின்னஞ்சல் செய்தால்
உதவியாக இருக்கும்.
மிகுந்த கவனத்தோடு தயாராகும் இவ்விதழ் நிச்சயம் மலேசிய சிங்கை
கலை இலக்கிய வளர்ச்சிக்கு ஓர் அடையாளமாக இருக்கும். இதழை அச்சுக்கு
அனுப்பியவுடன் முதலில் யுவராஜனைத்தான் அழைக்க வேண்டும்.
அவருக்குத்தான் அச்சூழலில் என் சொற்களின் கொண்டாட்டம் புரியும்.
வங்கியில் பணம் செலுத்த எண்ணம் கொண்டவர்கள் 512400202204 - KAANAL
PUBLICATION (Maybank) என்ற எண்ணில் செலுத்தலாம்.
புத்தகம் வேண்டுபவர்கள் +6016-3194522 (ம.நவீன்) என்ற எண்ணில்
தொடர்பு கொள்ளலாம் அல்லது na_vin82@yahoo.com.sg என்ற மின்னஞ்சலுக்கு
எழுதலாம்.
|
|