|
1
எழுதுவதற்காக அமர்ந்ததும் எது குறித்து எழுதுவது? என்பது முதலாவது கேள்வி,
எழுதுவதற்கான தேவையிருக்கிறதா? என்பது இரண்டாவது கேள்வி. சில நாட்களாக
ஏற்பட்ட மனச் சோர்வு பதட்டம் கூடவே ஒரு வகையான விரக்தி இவையெல்லாமும்
சேர்ந்து இப்படியொரு மனோநிலையைத் தோற்றுவித்திருக்கிறது, இப்போதும் அந்த
நிலைமையில் பெரிய முன்னேற்றம் இருப்பதாக என்னால் சொல்ல முடியவில்லை. சில
நாட்களாக தினமும் காலையில் எழுந்ததும் மேசையில் அமர்ந்தவாறு எனது தூசுகள்
படிந்து கிடக்கும் புத்தக ராக்கையிலும், மேசையில் முன்னர் வாசிப்பிற்காக
எடுத்து இப்போது ஒழுங்கற்று கிடக்கும் புத்தகங்களிலும் சிறிது பார்வையை
படரவிடுவது மட்டும்தான். இப்படியொரு சூழலில் என்னத்தை எழுதுவதென்ற கேள்வி
இயல்பான ஒன்றுதானே? எழுதுவதற்கு அமர்ந்ததுமே பேணாவின் முனையில் ஒரு முன்
நிபந்தனை வந்து அமர்ந்து விடுகிறது, அரசியலை தவிர்க்கவும். நானோ அரசியலை
தவிர்த்து எது பற்றியும் பேசத் தெரியாதவன். மனித இருப்பு என்பதே அரசியலின்
வெளிப்பாடாக இருக்கும் போது அதனைத் தவிர்த்து எங்கணம் இலக்கியம் பேசுவது?
என்ன செய்வது சூழலின் கைதியாக இருக்கும் போது ஒரு கைதிக்குரிய ஒழுங்குகளை
ஏற்றுத்தானே ஆக வேண்டும். ஆனால் ஒன்று சோர்வுடன் கழிந்த இந்த நாட்களில்,
நான் இதுவரைக்கும் பயன்படுத்திவந்த சொற்களின் உலகளாவியதன்மை குறித்த
மீள்பரீசீலனை ஒன்று தேவை என்ற எண்ணம் மட்டும் மனதில் ஓர் ஓரமாக ஓடிக்
கொண்டேயிருந்தது. அது குறித்துத்தான் இந்த குறிப்பில் பதிவு செய்ய
முயல்கின்றேன். இது குறித்து பரந்த விவாதங்களும் உரையாடல்களும் நமக்கு
தேவை.
2
வாசிப்புடனும், உரையாடலுடனுமாக கழிந்த கடந்த பத்து வருடங்களில்
பெரும்பாலும் புரட்சிகர அரசியல், மார்க்சியம், விடுதலை மற்றும் சோசலிசம்
இப்படியான சொற்களுடன்தான் எனது நாட்கள் கழிந்திருக்கின்றன. இந்த நான்கு
சொற்களுக்குள்ளும் மற்றைய அனைத்து சிந்தனைகளையும், எழுத்துக்களையும்
அடக்கிவிட முடியும். இலக்கியமும் இந்த சொற்களின் ஒரு பகுதியாகத்தான் எனக்கு
பரிட்சயப்பட்டது. இந்த சொற்களுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்த போதொல்லாம்
இவைகளெல்லாம் ஒரு தார்மீக நியாயம் கொண்டவை என்றும் உலகளாவிய தன்மை கொண்டவை
என்ற கருத்தையே நான் வாசித்த எழுத்துக்கள் அனைத்தும் எனக்குப் போதித்தன.
ஆனால் மனித குலமே வெட்கிக் தலைகுனியும் செயற்பாடுகள் அரங்கேறிக்
கொண்டிருந்த போது, அதிர்ச்சியளிக்கும் வகையில் ஒட்டு மொத்த மனித குலமே அதனை
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போதும்தான் இந்த சொற்கள் அனைத்தும் அவரவர்
நலன்களுடன் மட்டுப்பட்டதேயொழிய அவற்றுக்கு உலகளாவிய தன்மை என்று எதுவும்
கிடையாது என்ற முடிவுக்கு வர நோந்தது. நான் குறிப்பிட்ட மனித குலம் என்ற
வரையறைக்குள்தான் அந்த சொற்களுடன் சீவிப்போரும் இருக்கின்றனர். அது சரி
இதற்கும் இலக்கியத்திற்கும் என்ன தொடர்பு என்று ஒருவர் இடைமறிக்கலாம்.
பெருமளவிற்கு நமது விடுதலை சார்ந்த உரையாடல்கள் அனைத்துமே இலக்கிய
உரையாடல்களில் இருந்துதானே உருக்கொண்டது. தமிழ்ச் சூழலைப் பொருத்தவரையில்,
மார்க்சியத்திலிருந்து இன்று அதனை ஒரு பெருங்கதையாடல் என்று விமர்சி;க்க
முயலும் பின்நவீனத்தும் வரை அனைத்துமே முதலில் இலக்கிய தளத்தில்தான்
விவாதிக்கப்பட்டது. இன்றும் மார்க்சியம் அதன் முழு அர்த்தத்தில்
விவாதிக்கப்படுவது இலக்கிய சூழலில்தானே ஒழிய அதன் பெயரால் கட்சி நடத்திக்
கொண்டிருப்பவர்கள் மத்தியிலல்ல. இதற்காக நாங்கள் லத்தீன்
அமெரிக்காவிலிருந்தும், ஆபிரிக்காவிலிருந்தும் இன்னும் எங்கிருந்தோவெல்லாம்
தேடித் தேடி எழுத்துக்களை இறக்குமதி செய்தோம். சுலோகங்களை முன்னிறுத்தி
இலக்கிய விவாதங்களை செய்தோம். சில மாதங்களுக்கு முன்னர் கியூபாவும்
பொலிவியாவும் எடுத்த ஒரு முடிவை பார்த்தபோது கியூபாவை புகழந்து கொண்டும்
அதன் சுலோகங்களை பெருமையுடன் பேணிக் கொண்டும் இருந்தவர்களுக்கு ஏதோ
உச்சந்தலையில் சம்மட்டியால் அடித்தது போன்றிருந்தது. எனக்கும் அப்படித்தான்
இருந்தது. உலகளாவிய நீதி, உலகளாவிய விடுதலை என்ற அர்த்தங்களில் இந்த
சொற்களுக்கு எந்த விதமான பெறுமதியுமில்லை என்ற உண்மையை நான் முதல்முதலாக
அறிந்து கொண்டது இந்த சந்தர்ப்பத்தில்தான்.
3
இன்றைய சூழலில் இலக்கியம் மற்றும் சமூகம் குறித்து நாம் விவாதிப்பதாயின்
கடந்த காலம் குறித்த தெளிவான விமர்சனப் பார்வையொன்று நமக்குத் தேவை.
விமர்சனமென்றவுடன் விழுந்தவர்களை ஏறி மிதிப்பதென்பதல்ல அதன் அர்த்தம்.
நம்மை நாமே சுய விசாரனையொன்றுக்கு உட்படுத்துவது நமது சிந்தனைகளை மீளவும்
ஓர் உரையாடல் பரப்பிற்குள் கொண்டுவந்து அலசி ஆராய்வது. கழிந்து சென்ற
காலத்தின் சரி பிழைகளுக்கு நாமும் பொறுப்பாளிகள் என்ற சுய ஒப்புக்
கொள்ளலோடு அதனை ஓரு வகை சத்திரசிகிச்சைக்கு உட்படுத்த முயல்வது. கடந்த
காலத்தில் நமது இலக்கிய பரப்பிற்குள் பல்வேறு விடயங்கள் குறித்து நாம்
உரையாடியிருக்கிறோம், சில விடயங்களைப் பற்றி பேசுவது ஒரு வகை இலக்கிய
நாகரீகமாகக் கூட கருதப்பட்டது. இன்று சிலர் பின்நவீனத்தும் பற்றிப் பேசுவது
போன்று. மார்க்சியம், தலித்தியம், பின்நவீனத்துவம் இன்னும் எத்தனையோ
இசங்கள் இவைகளெல்லாம் நமது சூழலின் தேவைகளில் இருந்து விவாதிக்கப்பட்டனவா
அல்லது யாரோ ஒருவர் லத்தீன் அமெரிக்காவில் பேசுகிறார். தமிழ் நாட்டில்
பேசுகிறார், பிரான்சில் பேசுகிறார் என்பதற்காக நாமும் பேசினோமா? உதாரணமாக
என்னை எடுத்துக் கொண்டால் என்னிடம் ஒரு அமெரிக்க எதிர் மனோபாவம் இருந்தது
இப்போது திரும்பிப் பார்க்கும் போது எதற்காக நான் அமெரிக்காவை எதிர்க்க
வேண்டும் பிடல் காஸ்ரோ எதிர்க்கிறார் என்பதற்காகவா? சேகுவேரா
எதிர்த்திருக்கிறார் என்பதற்காகவா? அவர்கள் அவர்களது தேவைக்காக
எதிர்த்தார்கள் நான் ஏன் எதிர்க்க வேண்டும்? உண்மையில் நமது சிந்தனைச்
சூழலிலுள்ள மிகப் பெரிய பிரச்சனை இதுதான், பல விடயங்களை நமது
தேவையிலிருந்து உரையாடாமல் மற்றவர்களது தேவைகளை எங்களது தேவைகளாக நாங்களே
வலிந்து இழுத்துக் கொண்டு அதனுடன் மல்லுக் கட்டுவதில் காலத்தை
கரைத்திருக்கிறோம். சூழலிலிருந்து அன்னியப்படுவதையே ஒரு வகை
புத்திஜீவித்தனமாக காட்டிக் கொள்ளும் ஆர்வம் எங்களிடமிருக்கிறது.
இன்றைய உலக ஒழுங்கில் வலது-இடது என்ற விவாதங்களை கடந்த உiராயடல்களே
எல்லைகளை தம்வசப்படுத்தியிருக்கிறன. ஒரு வகையில் இன்று முழுமையான வலது
முழுமையான இடது என்ற வரையறைகளே இல்லை எனலாம், வலதில் இடதும், இடதில்
வலதுமான கலவிச் சூழல்தான் இன்றைய நவீன உலக ஒழுங்கு. நிலைமை இவ்வாறிருக்க
பின்னர் ஏன் இந்த வரையறைகளுடன் நாம் மல்லுக்கட்டிக் கொண்டு கிடக்க
வேண்டும். நான் சொன்ன அந்த சொற்கள் பெறுமதியிழந்துவிட்டதாகவோ அது இனி
தேவைப்படாது என்பதோ எனது வாதமல்ல. ஒடுக்குமுறைகள் மேலோங்கும் சூழலிருந்து
வெளிக்கிளம்பும் படைப்புக்களில் தொடர்ந்தும் அவற்றின் தாக்கங்கள் இருக்கவே
செய்யும் ஆனால் அதனை நமது சூழலின் தேவையிலிருந்தும்
பொருத்தப்பாட்டிலிருந்தும் நோக்க வேண்டுமே ஒழிய நம்மை முற்போக்காளர்களாக
காட்டிக் கொள்ள வேண்டுமென்ற அவசரத்திலிருந்து வெளிப்படக் கூடாது. முன்னர்
நம்மில் பலர் அப்படித்தான் இருந்திருக்கிறோம். தேவையில்லாமலேயே நமக்குள்
கோஸ்டிகளை உருவாக்கி மல்லுக் கட்டிக் கொண்டோம். திரும்பிப் பார்க்கும் போது
இந்த மல்லுக்கட்டல்களால் எதனையாவது சாதிக்க முடிந்ததா என்ற கேள்வியல்லவா
நம்மை தலைகுனியச் செய்கிறது. எனவே நாம் புதியதொரு உரையாடல் சூழல் குறித்து
சிந்திக்க வேண்டியிருக்கிறது. அது நமது சூழலின் தேவையிலிருந்தும்
பல்குரல்களை செவிமடுக்கக் கூடிய உரையாடல் பண்பிலிருந்துமே வளர முடியும்.
|
|