|
மார்ச் மாத வல்லினத்தில் இடம்பெற்றிருந்த மலேசிய எழுத்தாளர் சு.யுவராஜனின்
‘அழைப்பு’ நம்மைக் கதை படிக்க அழைக்கும் அழைப்பாய் அமைந்திருந்தது. ஆழமான
கதைக்கரு மிருதுவாக கதைக்களத்தினுள் இறங்கும்போது நம்மிடையே வந்தடைகின்றது.
என் சிந்தனையினுள் நுழைந்த கதை ஏற்படுத்திய ஆழத்தின் பகுதி இது.
எழுத்தாளராகும் லட்சியக் கனவைச் சுமந்திருக்கும் விமலன் பல்கலைக்கழக
படிப்பிற்குப் பின்னர் பொறியியல் துறையில் வேலைக்குச் சேர்கின்றான். தமிழ்
வீரமாய் ஒரு சந்தர்ப்பத்தில் வேலையை உதறிவிட்டான். அடுத்த வேலையைத் தேடி
சேரும் வரையிலும் அவன் வாழ்க்கையில் வந்து போகும் சில தருணங்கள் சராசரி
மனிதனின் வாழ்வியலை வெளிப்படுத்துகின்றது. கார் மற்றும் வீட்டு கடன் கட்ட
இயலாத சூழ்நிலை, அடகுக்கடைக்குச் செல்ல வேண்டிய தர்மசங்கடம் என வேலை
நிறுத்தத்திற்குப் பின் நிகழும் விமலனின் வாழ்க்கை மாற்றங்கள் கதையில்
காட்டப்படுகின்றது. விமலனின் செருப்பைச் சரி செய்து தரும் செருப்பு
தைப்பவர் அதற்கான கூலியை வாங்க மறுப்பதாக கதை முடிவுறுகின்றது.
பல்கலைக்கழக படிப்பின்போதே எழுத்தின் மீதிருந்த ஆர்வம் விமலனை விட்டு
விலகாமல் தொடர்வது அருமை. பொறியியல் துறை பணியை உதறித் தள்ள
காரணமாயிருந்தவை மேலாளரின் வார்த்தைகள். ‘வேலை இல்லாவிட்டால் நீ பிச்சைதான்
எடுக்கவேண்டும்’ மேலாளரின் வார்த்தைகள் விமலனின் மீது ஈட்டியாய்
பாய்ந்திருக்க வேண்டும். அதனால்தான் அதன் வழியும் இரத்த வெப்பத்துடன் ‘நான்
சிரமப்பட்ட தோட்டப்பாட்டாளியின் மகன்தான். ஆனால் என் பெற்றோர் கடுமையாக
உழைத்துதான் என்னை வளர்த்திருக்கிறார்கள், பிச்சையெடுத்தல்ல’ என ஈட்டியைப்
பிய்ந்தெடுத்து எய்தவர் மேல் வீசுகிறான். அக்கணமே உயர்ந்த ஊதிய வேலையையும்
தூக்கி எறிகிறான். தன்மீது பாயப்பட்ட சொல் ஈட்டியை வந்த திசை நோக்கி
செலுத்தியவனின் மனம் எத்தகைய வலிமை படைத்ததாக இருக்க வேண்டும்? அந்த
வலிமையின் பிறப்பிடமே விமலனின் மனதின் அழைப்புதான். நியாயமான மனதின்
அழைப்புகளுக்கு எதிர்ப்புச்சக்தி அதிகம். அதுவே தமிழ் வீரமாய் நண்பர்களின்
பேச்சில் உருவெடுக்கின்றது.
‘பச்சை விளக்கு வந்தப் பிறகும் எதிரே வாகனங்கள் நின்று விட்டதை உறுதி
செய்தப் பிறகே சாலையைக் கடப்பவன் விமலன். எங்காவது உரையாடல் வாக்குவாதமாக
மாறத் தொடங்கிவிட்டால் முதலில் அவ்விடத்தை விட்டு அகல்வது அவனாகத்தான்
இருக்கும்.’ என்ற கதை வரிகள் விமலனின் நிதானத்தையும் பொறுமையையும் தெளிவாய்
புரிய வைக்கின்றன. அவன் வீண்விவாதங்களை விரும்புவதில்லை என்றும் அறிய
முடிகின்றது. அத்தகைய குணமுடையவனின் மனதில் தோன்றும் அழைப்பு, உணர்ச்சி
கொந்தளிப்பால் உருவானதல்ல என்பதை உறுதிப்படுத்த முடிகின்றது. கோபம்,
போட்டி, பொறாமை போன்ற உணர்வுகளால் மாசுப்பட்ட மனதின் அழைப்புகள் என்றுமே
வெல்வதில்லை என்பது என்னுள் எப்பொழுதும் ஒலித்துக் கொண்டிருக்கும் என்
மனதின் குரல்.
சொல் பிரயோகம் வாழ்க்கையில் பின்னி பிணைந்திருப்பதைப் பல சமயங்கள்
மனிதர்கள் மறந்திருந்தாலும் சில சமயங்களில் அதனை எதிர்கொள்ளவே
வேண்டியுள்ளது. மறந்திருக்கும் சொல் பிரயோகங்கள் பிற மனித சொல்
பிரயோகத்தின் போது மட்டும் நினைவில் வந்து தட்டுகின்றது. சொல் பிரயோகத்தின்
கதிர் வீச்சுகள் மிக சக்தியானவை. அதை அன்பிற்கும் கோபத்திற்கும் நோக்கிய
பயன்பாட்டை மனிதர்களே முடிவு செய்ய வேண்டும். பயன்பாடு மாறும்போது அதன்
எதிர்தாக்கங்களும் மாறுபட்டவை என்பதை உணர வேண்டும்.
வேலைத் தேடி அலுத்திருக்கும் தருணங்களின்போது வாழ்க்கையின் பொருளியல்
பிரச்சனை கதையினுள் நுழைந்து இயல்பு வாழ்க்கை நிலையைச் சித்தரிக்கின்றது.
அதை யாவற்றையும் தாங்கி கொள்ளும் மனம் தன்னுடைய செயலுக்காக வருந்தவில்லை.
இதுவே விமலன் மனதின் அழைப்பு நியாயமானது என்பதை நிருபிக்கும் காட்சிகள்.
நியாயமற்ற மனதின் அழைப்புகளும் வாழ்க்கையினுள் பெரும்பாலும் உள்புகுந்து
தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்திவிடுவதை நினைவில் கொள்ள வேண்டும். எல்லா
மனதின் அழைப்புகளும் நியாயமானதல்ல. பாதகமான விளைவுகளும் வருந்த செய்கின்ற
தருணங்களும் மனதின் அழைப்பு நியாயமற்றதென அறிய செய்துவிடும்.
விமலனின் முடிவை எதிர்க்காமல் மனதிற்கு அன்பாகவும் ஆறுதலாகவும் இருக்கும்
மனைவி லட்சுமியின் கதாபாத்திரம் அருமை. வேலை இல்லா குறை விமலனுக்குத்
தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தாவண்ணம் கவனமாயிருக்கும் லட்சுமியின் குணம்
பாராட்டுக்குரியது.
இருமொழி அறிவியல் இதழின் ஆசிரியர் குழுவில் விமலனுக்கு வேலை கிடைப்பது
எழுத்தின் மீது அவனுக்கிருந்த ஆர்வத்தின் உதவி என்றே எண்ண தோன்றுகின்றது.
நியாயமான மனதின் அழைப்பிற்கு விமலனுக்குக் கிடைத்த எழுத்தின் பரிசு என்றும்
சிந்தனையில் மெல்ல உரசுகின்றது.
இறுதியில் அவன் கண்களில் சுரக்கும் நீர் அவன் மனதைக் கீறிப் பார்த்தவை.
மேலாளரின் வார்த்தைகள் தன் வாழ்க்கையில் உண்மையாகிவிட்டதோ என்ற தவிப்பின்
வெளிப்பாடு. உலகியல் அழைப்புகள் நிறைந்து கிடக்கும் வாழ்க்கையில் நியாயமான
மனதின் அழைப்புகள் மட்டும் எப்போதும் வென்று கொண்டே இருக்கின்றன.
|
|