|
கடந்த சில மாதங்களாகவே 'வல்லினம்' ஓர்
அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்தது. இன்னும்
சொல்லப்போனால்
'சமரச சன்மார்க்க சங்கம்' எனும் ஓர் அமைப்பை உருவாக்கி அதில்
வல்லினத்தில் எழுதுபவர்கள் அனைவரையும் உறுப்பினர்கள் ஆக்கி
விடலாம் எனும் திட்டம் கூடத் தீட்டப்பட்டிருந்தது. அந்த அளவிற்கு
அனைவரோடும் எல்லா வகையிலும் ஒத்துப்போகும் ஒரு பரிசுத்த ஆன்மாவாக
விளங்கவே நாங்கள் விரும்பினோம். ஆனால் இன்று அந்த எண்ணத்தில் மண்.
கடந்த சில வாரங்களாகவே மலாயா பல்கலைக்கழகத்தில் நடைப்பெற்று
முடிந்த 24-ம் பேரவை கதைகளின் போட்டி முடிவு குறித்து அரசல்
புரசலாகப் பல தகவல்கள் வந்தபடி இருந்தன. எழுத்தாளர் கோ.
புண்ணியவானின் முதல் பரிசு பெற்ற சிறுகதை ஏற்கனவே 'மக்கள் ஓசை '
இதழில் பிரசுரமானது என்பது அதில் பிரதானமானது.
'இறந்தவனைப்பற்றிய வாக்குமூலம்' எனும் தலைப்பிடப்பட்டிருந்த
அச்சிறுகதை தொடர்பாக ஆராய்ந்த போது இதே சிறுகதை அவரது வலைப்பூவிலும்
பிரசுரமாகியிருந்தது. ஆன்மாவை பரிசுத்தமாக்கும் முயற்சியில் இருந்த
எங்களுக்கு இது பெரும் சோதனைகாலம் என அழுது தீர்த்தோம்.
பல ஆண்டுகளாகப் போட்டிகளுக்கு எழுதி பரிசு பெரும்
கோ.புண்ணியவானுக்கு, ஏற்கனவே எழுதப்பட்ட சிறுகதை போட்டிக்கு
அனுப்பக் கூடாது என்பதும் போட்டியின் முடிவுகள் தெரியும் வரை
அனுப்பப்பட்ட சிறுகதை வேறெங்கும் பிரசுரமாகக் கூடாது எனும்
விதிமுறைகள் கண்டிப்பாகத் தெரிந்திருக்கும்.
இது ஒரு புறம் இருக்க, பல ஆண்டுகளாக பேரவை கதைகளின் நீதிபதி
நாற்காலியில் அமர்ந்திருப்பவர்களின் நிலைபாடு குறித்தும் தாறுமாறாக
கேள்விகள் எழுகின்றன. எனவே கண்ணீரோடு எங்கள் 'சமரச சன்மார்க்க
சங்க' திட்டத்தைக் கலைத்துக் கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளோம்.
இது குறித்த வாசகர்கள் மற்றும் எழுத்தாளர்கள் கருத்துகளைப்
பெரிதும் எதிர்ப்பார்க்கிறோம். அதே போல் கோ.புண்ணியவான் தரப்பிலிருந்து
வரும் நியாயங்களும் நிச்சயம் பிரசுரிக்கப்படும். பேரவை கதை
குழுவினரிடமிருந்தும் விளக்கம் எதிர்ப்பார்க்கிறோம். அனைத்து
தொடர்புகளும் எழுத்து மூலம் இருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
editor@vallinam.com.my என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் கருத்து / விளக்கத்தை
எழுதி அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம்.
-வல்லினம் ஆசிரியர் குழு
|
|