|
சில திரைப்படங்களை உடனே சென்று பார்த்துவிட சில விடயங்கள்
காரணங்களாக இருந்துவிடுகின்றன. நடிகர்கள், திரைக்கதை, அப்போதைய
மனோநிலை, நண்பர்களின் தூண்டுதல் என்பன அதில் சில. இவையெல்லாம்
இல்லாமல் ஓர் இயக்குனரின் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையின்
காரணமாகவே 'அங்காடித் தெரு'வுக்குச் சென்றேன்.
2006 ஆம் ஆண்டில் தமிழகம் சென்றிருந்த போது மனுஷ்ய புத்திரனோடு
வசந்தபாலனின் 'வெயில்' திரைப்படம் பார்க்கச் சென்றிருந்தேன்.
பிரமுகர்களின் சிறப்புக் காட்சி அது. எங்களுக்குப் பின்னால்
எழுத்தாளர் திலகவதி அமர்ந்திருந்தார். உடனே அவரின் 'கல்மரம்'
நாவல் நினைவிற்கு வந்தது. அந்த நாவலுக்கு எப்படி 'சாகித்திய
அகாதமி' விருது கிடைத்தது எனக் கேட்க நினைத்து திரும்பினேன். பின்னர்,
அவர் 'ஐ.பி.எஸ்' என்பது நினைவுக்கு வந்து வாலைச் சுருட்டிக் கொண்டு
பேசாமல் இருந்துவிட்டேன். நடிகர் பசுபதியிடம் ஒரு 'ஹலோ' சொன்னேன்.
படம் என்னை மிகவும் நெகிழ வைத்திருந்தது.படம் முடிந்தபின்
வசந்தபாலனிடம் ஓரிரு வார்த்தைகள் பேசினேன். திரும்பிச் செல்லும் போது
மனுஷ்ய புத்திரனிடம் படம் குறித்துப் பேசிக்கொண்டே சென்றேன்.
"உயிர்மையில் எழுதுங்களேன்", என்றார். "எழுதவேண்டும்", என்றதோடு சரி.
அதன் பின் ஒரு வருடம் கழித்து, கால் அறுவைச் சிகிச்சை செய்து நான்கு
மாதங்கள் வீட்டில் இருந்தபோது நண்பர் காளிதாஸ் தயவில் சில
கலைத்தன்மை மிக்கப் படங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியிருந்தது.
அதில் என்னை மிகவும் ஈர்த்தது 'சினிமா பெரடைசோ' (Cinema Paradiso).
இத்தாலிய திரைப்படமான இதில் நான் பார்த்த சில காட்சிகள் 'வெயில்'
திரைப்படத்தை நினைவுறுத்தின. ஹாலிவுட் படங்களைப் பார்த்துக்
காட்சிகளை அரைகுறையாகக் காப்பியடிக்கும் டைரக்டர்களுக்கு மத்தியில்
இது என்னைப் பெரிதாக பாதிக்கவில்லை. 'வெயில்' திரைப்படத்தின் வெற்றி
இன்னும் சில அசலான நல்ல தமிழ்ப்படங்கள் வர உந்துதலாக
இருந்தது.
அவ்வகையில் வசந்தபாலன் தனது முந்தைய தவறுகளை நீக்கிவிட்டு
அசலான ஒரு சமூகத்தின் கதையை 'அங்காடித் தெருவில்' கூறியுள்ளார்.
படம் முழுதும் மனிதர்கள். படம் தொடங்கி அரை மணி
நேரத்திற்குள்ளாக இரண்டு காட்சிகளில் கொத்துக் கொத்தாக மனித
மரணங்கள்.
முதலில் மலேசியாவிலிருந்து கொண்டு இந்தத் திரைப்படத்தைப் பார்க்கும்
போது நிறையச் சந்தேகங்கள் எழுந்தபடி இருந்தன. குறிப்பாகக்
கதையின் களமான பேரங்காடியில் பணிபுரியும் இளைஞர்கள், யுவதிகள்
உண்ணும் மற்றும் உறங்கும் இடங்கள். இதுபோன்றதொரு சூழலின் மெய்தன்மை
குறித்தச் சந்தேகங்கள் தீர இங்குப் பணிபுரியும் சில தமிழகத்
தொழிலாளர்களைச் சந்தித்தேன். அவர்கள் சித்தரித்தக் காட்சி திரையில்
கண்டதைவிட கோரமாக இருந்தது. இலாபத்தை மட்டுமே குறியாக வைத்து
இயங்கிவரும் வியாபார உலகத்தின் கலாச்சாரம், பின்னர் ஆச்சரியம்
இல்லாமல் போனது. தமிழகம் சென்றிருந்த போது திட்டுத் திட்டாக இது
போன்ற சம்பவங்கள் என்னைப் பாதித்தப் படியே இருந்தன. அதில்
குறிப்பாக தமிழகத்தின் எனது இறுதி நாள்.
வாங்கிய பொருட்களை மூட்டைக் கட்டிக்கொண்டு புறப்படத் தயாரானேன்.
இருந்த பணத்தில் புத்தகங்கள் வாங்கிவிட்டதால் பணப்பை
'தக்'கென்றும் (இலேசாகவும்) துணிப்பை கனத்தும் கிடந்தன. ஆட்டோவில்
சென்றால் பணம் செலவென்று பேருந்தில் செல்ல முடிவெடுத்திருந்தேன்.
சரியாகக் காலை மணி 7 இருக்கும். கைக்காட்டி நிறுத்திய போது புழுதி
பறக்க நின்றது பேருந்து. பலத்தைத் திரட்டி படியின்
படிக்கட்டுகளில் பெட்டியை வைத்ததும் கண்டெக்டர் 'சீக்கிரம்
சீக்கிரம்' எனக் கத்தத் தொடங்கினார். மீண்டும் மூச்சைப் பிடித்து
அடுத்தப் படியில் பெட்டியை வைத்தபோது பேருந்து விரைந்து
நகரத்தொடங்கியது. பேருந்தில் மாட்டிக்கொண்ட என் பெட்டியை எடுக்க
நான் ஓட ஐம்பது மீட்டர் தொலைவில் என் பெட்டி ஓடும் பேருந்திலிருந்து
தள்ளிவிடப்பட்டது. அருகில் இருந்த ஒரு கடைக்காரர் 'அவங்க டைமுக்கு
அடுத்த ஸ்டேஷனுக்குப் போவனும் சார்... இல்லனா வேற பஸ் முந்திக்கும்'
என்றார். ஆதாயத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட ஒரு சமுதாயம் தமிழகம்
முழுவதும் விரவிக் கிடப்பதும் ; இதுவே ஒரு தொற்று நோயாகப் பரவி
எல்லா நிலைகளிலும் படிந்து கிடப்பதையும் அங்கணமே என்னால் உணர
முடிந்தது. மலேசியாவிற்குத் திரும்பியபோது டாக்டர் சண்முகசிவா
'எப்படி இருந்தது ஊர்?' என வினவினார். 'மனிதாபிமானமே இல்லை டாக்டர்'
என்றேன். 'இங்க மட்டும் நிறைஞ்சி வழியுதா?' என்றார். என்னிடம்
சொல்வதற்குப் பதில் இல்லாமல் இருந்தது.
கதையின் களமாக இருக்கிறது சென்னையின் 'செந்தில் முருகன்' பலமாடி
பேரங்காடி. அதில் பணிபுரியும் பணியாளர்களை வைத்து நகரும்
திரைக்கதையில் லிங்கம், கனியின் காதல் மையமாக இருந்தாலும் கனியின்
தங்கை, பொது கழிப்பிடத்தில் அமர்ந்து கட்டணம் வசூழிப்பவன், ஒரு
பாலியல் தொழிலாளி, அவளை மணக்கும் ஓர் உடல் குறையுள்ளவன், முகத்தைக்
காட்டாமல் அழும் அவர்களின் குழந்தை, குருட்டு வியாபாரி, லிங்கத்தின்
நண்பன் பாண்டி என அனைத்து கதாபாத்திரங்களையும் அவர்களின் தனித்தனி
வாழ்வையும் அதன் அழுத்தம் குறையாமலும் மூலக்கதையின் போக்கு
சிதையாமலும் இணைத்து நகர்த்தியுள்ளார் இயக்குனர்.
இந்தக் கதாப்பாத்திரங்கள் அனைத்துமே வாழ்வின் இறுதி நம்பிக்கையைப்
பற்றியுள்ளவை. ஓர் அழுகைக்குப்பின் வாழ்வை எதிர்க்கொண்டு ஓடுபவை.
மீண்டும் மீண்டும் மறுக்கப்படும் வாழ்வில் தனக்கான ஒரு சிறிய
வெற்றிடத்தைத் தேடி நிரப்புபவை. மீண்டும் சிரிப்பதற்கான
சந்தர்ப்பங்களையும் கொண்டாட்டங்களையும் சுயமாகவே உருவாக்கிக்
கொள்பவை. இந்த எளிய மனிதர்களுக்கு ஆதரவாய் எளிய மனிதர்களின்
அன்பே போதுமானதாக உள்ளது. ஒரு மரத்தடி அம்மனும் அதைத் தொழும்
மனிதர்களும் வயதுக்கு வந்த கனியின் தங்கைக்குக் காட்டும் பரிவும்;
பாலியல் தொழில் புரியும் பெண்ணின் அடையாளங்களை துடைக்கும் குள்ளனின்
அன்பும்; திக்கற்று அமர்ந்திருக்கும் லிங்கம், கனிக்கு வழிகாட்டும்
குருட்டு வியாபாரி என மனிதம் உயிரோடு ஆங்காங்கே வீற்றிருப்பதை படம்
நெடுகிலும் காட்டுகிறார் இயக்குனர். அப்படி வாழ்வின் மீது நம்பிக்கை
இல்லாமலும் ஒரு பெண் வருகிறாள். காதலனின் கையாகாலாத தனத்தால்
உயிர்விடும் அவளின் மரணம் சீக்கிரமே எல்லோராலும்
மறக்கப்படுகிறது. அவள் மேலிருந்து குதிக்க உடைத்த சன்னல்
கண்ணாடிக்குப் பதிலாக புதிய கண்ணாடி பொருத்தப்படுகிறது... மஞ்சள்
குங்குமம் அதன் மத்தியில் இடப்பட்டு.
தமிழ்த்திரை உலகில் ஒரு நடிகைக்கு ஒருமுறைக்கு மேல் நல்ல
கதாபாத்திரங்கள் கிடைப்பது சிரமம். அஞ்சலி அதிர்ஷ்டசாலி. 'கற்றது
தமிழ்' (குறைந்தது இந்தப் படத்தை 8 முறைக்கு மேல் பார்த்திருப்பேன்)
திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் வலுவான கதாப்பாத்திரத்தின்
மூலம் தனது நடிப்பாற்றலை நிரூபித்துள்ளார். 'நான் கடவுள்' திரைப்பட
வசனத்தில் இருந்த போதாமைகளை இந்தப் படத்தில் நிறைவு செய்துள்ளார்
ஜெயமோகன். இசை குறித்து தெரியவில்லை. இசை குறித்து பேசுவதற்கான எந்த
அறிவும் எனக்கு இல்லை. இன்று வரை எம்.ஜி.ஆர் திரைப்படப்
பாடல்களைத்தான் முணுமுணுக்கிறேன். அதிகம் போனால் இளையராஜா.
இந்தத் திரைப்படத்தைக் கொண்டாட இவையெல்லாம் காரணமாக இல்லை.
இயக்குனர் வசனங்களை மீறி அமைத்திருக்கும் சில காட்சிகள்.
குடும்பத்திற்கு வருமானத்தைத் தந்த தந்தையை இழந்துவிட்ட
கதாநாயகனின் தங்கை, தன் அண்ணன் பணிபுரியும் பேரங்காடியின் பெயர்
பதித்த பையை ஒரு மாதிடமிருந்து பெறுவதும்; அதை தன் தந்தையின்
படத்திற்குப் பக்கத்தில் தொங்கவிடுவது; கதாநாயகியின் தந்தை
செய்யும் துரோகத்தை அதன் கசப்பு வெளிதெரியாமல் இயலாமையின் கண்ணீரை
வைத்து மறைப்பதும் நுட்பமான பல உணர்வுகளுக்குப் புகைமூட்டுகிறது.
இது போல படம் நெடுகிலும் காதல், காமம், நட்பு, என மெல்லிய
உணர்வுத் தூண்டுதல்களைக் காட்சிகளின் மூலம் உருவாக்கும் இயக்குனர்
மனித மாண்புகளை வழிந்து திணிக்காமல் கதையை எதார்த்தமாகவே நகர
விட்டுள்ளார்.
'ஆதிக்கம் அறவே இல்லாத சமூகச் சூழலில்தான் மனித மாண்புகளுடன்
வாழமுடியும்' என மார்க்சியம் சொல்கிறது. ஆதிக்கமும் அதிகாரமும்
நிரம்பிய 'செந்தில் முருகன்' போன்ற பெருநகர பேரங்காடிகளில் அவை
அறவே துடைத்தொழிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொருவரும் அவரவர்
நிலைக்குத் தகுந்தபடி அதிகாரத்தைக் கையில் எடுக்கின்றனர். கடைநிலை
ஊழியரான லிங்கத்தை (கதாநாயகன்) ஒரு உதவியாளன் அதிகாரம்
செய்வதும், உதவியாளனை சூப்பர்வைசர் (இயக்குனர் ஏ. வெங்கடேஷ்) அதிகாரம்
செய்வதும், சூப்பர்வைசரை அண்ணாச்சி (பழ. கருப்பையா) அதிகாரம்
செய்வதுமாக உள்ள சூழலில் தன்மானத்தை இழக்க தயாராக இருக்கும் ஒரு
கூட்டத்தினரை, அவர்கள் பலகீனம் பிசகாமல் கிராமத்திலிருந்து
கண்டடைகின்றனர்.
அவர்களை அடிமைகள் போல் நடத்துவதிலும்; கண்காணிப்பாளர்களின் பாலியல்
அத்துமீறல்களிலும்; வரம்பின்றி அடிப்பதிலும்; நாராசமான வார்த்தைகள்
பிரயோகத்திலும்;
இரவு வரை நின்று கொண்டு வேலை பார்க்க வைப்பதிலும்; வேலை இடத்தில்
நுழைய ஏற்படும் ஒரு நிமிட தாமதத்திற்கு ஒரு ரூபாய் அபராதம்
விதிப்பதிலும்; மோசமான உறங்கும் இடமும் உணவுண்ணும் இடமும்
முதலாளித்துவத்தின் சுரண்டி பிழைக்கும் குணத்தை அசலாக காட்டிச்
செல்கிறது.
எட்டு வருடங்களுக்கு முன் நானும் என் அக்காவும் கோலாலம்பூரில்
புதிதாகத் தொடங்கப்பட்ட பேரங்காடியில் வேலைக்குச் சேர்ந்தோம்.
அக்காவுக்குக் கணக்கர் வேலை கிடைத்தது. புதிதாக ஆரம்பிக்கப்
பட்டிருந்ததால் எனக்கு கிடங்கிலிருந்து பொருட்களை எடுத்து அடுக்கும்
வேலை. ஒவ்வொரு பொருளும் பெரிய பெட்டிகளில்
அடுக்கிவைக்கப்பட்டிருந்தது. அதை எடுத்துவர உருளை உள்ள வண்டிகள்
கிடைத்தால் தப்பித்தோம். இல்லையேல் தோளில் தூக்கிவர வேண்டும். நான்
புதியவனானதால் எனக்கு உருளை வண்டி கிடைக்கவில்லை. பலமுறை
பொருட்களைத் தூக்கிச் சுமந்து சோர்ந்து அமரும் போதெல்லாம் ஒரு சீன
இளைஞன் திட்டுவான். அவனுக்கும் எனக்கும் இருந்த ஓர் உறுப்பு அவன்
திட்டுவதில் பிரதானமாக இருக்கும். என்னுடன் வேலை செய்த மலாய்
இளைஞர்களுக்கும் அவன் செயலில் எரிச்சல் இருந்தது. ஒவ்வொரு நாளும்
அலுத்துத் திரும்புவதும் மறுநாள் களைப்புடன் எழுந்து வேலைக்குச்
செல்வதிலுமே நேரம் சரியாக இருக்கும். யாரிடமும் பேசத்தோன்றாது.
பேசுவது சக்திக்கு விரயம் போல் இருக்கும். ஒருமுறை நேராகக்
கண்காணிப்பாளரிடம் சென்று 'எனக்கு அதிகம் சோர்ந்துவிட்டதென்றும் ஒரு
மணி நேரமாவது ஓய்வு தேவை' என்றேன். அவர் ஒரு சீன பெண். 'ஓய்வு
எடுத்துக் கொள்' என மிகச் சாதாரணமாகக் கூறினாள். நான் தயங்கியபடி
'சீன இளைஞன் திட்டுவான்' என்றேன். தனது நெற்றியைச் சுறுக்கியபடி
'அவன் யார் உன்னை திட்ட... அவனும் உன்னைப்போல் ஊழியன்தான்; ஆரம்பம்
முதல் இருக்கிறான் அவ்வளவுதான்' என்றாள்.
எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. அவனும் என்னைப்போல் ஓர் ஊழியன் என்பதை
அதுவரை நான் அறிந்திருக்கவில்லை. அவன்முன் வேண்டுமென்றே ஓய்வாக
அமர்ந்தேன். எந்நேரமும் என்னையே துளைத்துப் பார்க்கும் அவன்
கண்களுக்கு அது பொறுக்கவில்லை. உடனே எழுந்து வேலை செய்யும்படி
மிரட்டினான். 'அதை கூற நீ யார்?' என்றேன். இம்முறை அவன் சொற்களில்
பெண்களின் உறுப்புகளும் இணைந்துகொண்டது. நான் நிதானமாக 'அவை உன்
அம்மாவுக்கும் இருக்கும் என நம்புகிறேன்' என்றேன். கோபம் கொண்டவன்
என்னைத் தாக்க வருகையில் மலாய் ஊழியர்கள் அவனை
மிரட்டத்தொடங்கினர். அன்று மதியமே நான் வேலையை விட்டு நின்றேன்.
பெரும் சுதந்திரம் கிடைத்தது போல உணர்ந்தேன்.
அதிகாரத்தின் வடிவம் மிக நூதனமானது என புரிந்தது. சூழலுக்கு
ஏற்ப வடிவம் கொள்வது. கொஞ்சம் அசந்தாலும் ஏதோ ஒரு திசையிலிருந்து
அதன் கரங்கள் நம் கழுத்தை நெரிக்கும். அது உருவாகும் விதத்தையும்
நம்மை ஆளும் விதத்தையும் இறுதிவரையில் அடையாளம் காணமுடியாமலேயே
போகலாம். ஒன்றிலிருந்து பிரிந்து கிளைவிட்டு படர அதிகாரத்திற்குத்
தோதான திணை 'பணம்'. அதனால்தானோ என்னவோ அது நகரங்களில் அசுர
வேகமாக வளர்கிறது.
அங்காடித் தெரு போன்ற பணம் புலங்கும் ஒரு நிலப்பரப்பில் அதன்
அதிகாரத்தின் கோர உருவம் எத்தகையதாக இருக்கும் என்பதை இயக்குனர்
காட்சி படுத்தும்போது இவ்வாறு மீறிவரும் சில எண்ணங்களைத் தவிர்க்க
முடியவில்லை.
படம் முழுதும் இயக்குனர் போதிக்கும் வாழ்வின் மீதான நம்பிக்கையை
கனியின் வாழ்விலும் காட்டுகிறார். கால்களை இழந்து அதே அங்காடித்
தெருவில் லிங்கத்துடன் வாடிக்கையாளர்களை நோக்கிக் கூவி பொருட்களை
விற்கும் போது அவள் கண்களில் உள்ள நம்பிக்கை அங்காடித்தெரு முழுதும்
பரவுகிறது. வாழ்வில் வெற்றியென்று தனியே எதுவும் இல்லை, வாழ்வதைத்
தவிர.
|
|