|
'ரீச்சர், இண்டைக்கு நாங்கள் நாடகம் நடிக்கலாமோ?' இது சுதன். அவன் சொல்லி
முடிப்பதற்குள் இன்னும் சிலரும் 'ஒம் ரீச்சர், நாங்கள் நாடகம் செய்து
கனநாளாச்சு. நாடகம் செய்வோம்,' என வேண்டுகோள் விடுக்கிறார்கள்.
காலையில் தமிழ் வகுப்புக்கு வந்ததும் அன்று படிக்க வேண்டிய விடயம் பற்றிக்
கலந்துரையாடுவோம். பின் அது சம்பந்தமான சில வாசிப்பும் எழுத்தும் கலந்த
பயிற்சிகளை மாணவர்கள் செய்வார்கள். நிறைவாக வகுப்பு முடிய முன் இருக்கும்
30 நிமிடங்களுக்கு தமிழில் கதைக்கும் ஏதாவது ஒரு குழு விளையாட்டு
விளையாடுவோம். அந்த ஒழுங்கு முறையில் விளையாட்டுக்கான நேரம் இது என்பது
தெரிந்த மாணவர்களின் கோரிக்கை தான் அது.
'சரி, தனி ஆளாகவோ அல்லது குழுவாகவோ உங்களுக்கு விருப்பமான மாதிரி நடித்துக்
காட்டலாம். நிபந்தனை தெரியும் தானே, முடியுமானவரையில் நீங்கள் தமிழிலை தான்
கதைக்க வேணும்,' என்கிறேன். பின் தொடர்ந்து 'தயார் செய்கிறதுக்கு ஐந்து
நிமிஷங்கள் தாறன். தயார் எண்டால் இங்கை வந்து வட்டமாக இருங்கோ' என்று
சொல்லிவிட்டு குழுவாக நாம் கூடும்.இடத்தில் போய் அமர்ந்து கொள்கிறேன்.
தமிழில் கதைக்கத் தயங்கும் அல்லது மற்றவர்களின் முன் எழுந்து நிற்கக்
கூச்சப்படும் மாணவர்கள் எனச் சிலர் பார்வையாளர்களாக மட்டும் இருக்க
விருப்பம் தெரிவித்தனர். கடைசியில் மூன்று குழுக்கள் மட்டும் நாடகத்துக்கு
தயார் என முன் வருகின்றனர்.
முதலில் வந்த அபர்ணா குழு மன உணர்ச்சிகளுக்கும் அவற்றைக் கையாளும்
முறைகளுக்கும் உதாரணமாக நாம் அன்று படித்த ஒரு சம்பவத்தை
நாடகமாக்கினார்கள். ஆரம்பத்தில் இரண்டு சிநேகிதிகள் விளையாடிக்
கொண்டிருந்தனர். பின்னர் அதில் ஒருவர் மூன்றாமவருடன் விளையாடப் போக
மற்றவருக்கு கவலை வருகிறது. என்ன செய்யலாம் என யோசிக்கிறார். முடிவில் தானே
மற்ற இருவரும் விளையாடும் இடத்துக்குப் போய் தானும் சேர்ந்து விளையாடலாமா
எனக் கேட்டு தன் பிரச்சனையைத் தீர்த்துக் கொள்கிறார் .
படித்ததை உடனேயே பிரயோகித்தது பற்றிக் கதைத்து அது நடைமுறைக்கு அனேகமாக
ஒத்து வரக்கூடிய தீர்வு தான் எனக் கலந்துரையாடுகிறோம். 'அப்படி அபர்ணா
போயிருக்காவிட்டால் அபர்ணாவுக்கு கவலையாக இருந்திருக்கும். அப்படிப்
போனபடியால் அவவுக்கு இன்னுமொரு சிநேகிதி கிடைச்சிருக்கிறா,' என்று அபி
விளக்கம் சொல்ல 'அல்லது அவவின் சிநேகிதிக்கு அவ கவலைப்பட்டது கூடத்
தெரியாது இருந்திருக்கலாம்,' என கலா எடுத்துக் காட்டுகிறாள்.
அடுத்ததாக வந்த மயூரன் குழு களவெடுத்துக் கொண்டு ஓடும் ஒருவனைப் பொலீஸ்
துரத்திப் பிடிக்க ஓடுவதாகக் காட்டிய போது இடையில் போய் அதை தடுத்து
நிறுத்த வேண்டியிருந்தது. தடுத்து நிறுத்தி விட்டு 'ஏன் இதை இடையிலை
நிறுத்தினான் எண்டு நினைக்கிறியள்?' என நான் கேட்கத் துரத்திக் கொண்டு ஓடிய
மயூரனே 'வகுப்பில் ஓடக்கூடாது, சொறி' என்று சொல்கிறான். 'ஆம், அது
மட்டுமில்லை, விளையாட்டுக்குக் கூட வன்முறையைக் கையாளக்கூடாது.
களவெடுத்தவரை அடித்து விழுத்துவதாகக் காட்டுவது தேவையற்ற கட்டம்,' என
விளங்கப்படுத்துகிறேன்.
முடிவாக வந்தது சுதனின் குழு. சுதனும் மாலாவும் வெளியில் இருந்து கதவைத்
திறப்பது போல திறந்து கொண்டு உள்ளே வருகிறார்கள். உள்ளே கஜன் புத்தகம்
வாசித்துக் கொண்டிருக்கிறான். காயத்திரி கொம்பியூட்டரில் ஏதோ செய்து
கொண்டிருக்கிறாள். உள்ளே வந்ததும் வராததுமாய் சுதன் பெரிதாய்ச் சத்தம்
போடுகிறான்.
'ஏய், கஜன், ஏன் இந்தப் புத்தகம் இதிலை கிடக்குது? காயத்திரி, ஏன் அந்தச்
சட்டை அங்கை கிடக்குது? பள்ளிக்கூடத்தாலை வந்து இவ்வளவு நேரமும் என்ன
செய்தனியள் ஒண்டையும் ஒழுங்கா வைச்சிருக்கத் தெரியாதே, ஒவ்வொரு நாளும்
சொல்லோணுமே?'
'இந்தப் பிள்ளைகள் எப்பவும் இப்படித் தான்,' என்று மாலாவும் குற்றம்
சாட்டுகிறாள். 'ஏய், இரண்டு பேரும் எழும்பு, இங்கை வா, போய் அதுகளை எடுத்து
அந்த அந்த இடத்திலை கொண்டு போய் வை,' அவனின் உறுத்தலின் படி பிள்ளைகள்
அதைச் செய்கிறார்கள்.
பிறகு தன்னுடைய சொக்ஸ்சையும் பெல்ற்றையும் கழற்றி சோபாவுக்குப் பக்கத்திலை
எறிந்து போட்டு இரண்டு கால்களையும் தூக்கி கோப்பி மேசைக்கு மேலே போட்டுக்
கொண்டு ரீவியை ஓன் பண்ணுகிறான் சுதன்.
'உனக்கு எந்த நேரமும் கொம்பியூட்டர் தான். முதலிலை உதை விட்டு எழும்பு
பாப்பம். பொம்பிளைப் பிள்ளைக்கு வீட்டை ஒழுங்கா வைச்சிருக்கிறதிலை அக்கறை
இல்லை. சும்மா எந்த நேரமும் கொம்பியூட்டரிலை குந்திக் கொண்டு இருக்கிறது
தான் வேலை. கடைசி போய் படிக்கிற வேலையையாவது செய் பாப்பம,' என்று மாலா
காயத்திரியுடன் சத்தம் போடுகிறாள். பின் தன்னுடைய கைப்பையை பக்கத்தில்
இருந்த கதிரையிலை வீசிப் போட்டு போய் கொம்பியூட்டருக்கு முன்னாலை இருந்து
கொண்டு 'அப்பா, விஜே ரீவியிலை அசத்த போவது யாருவரப்போகுது. நீங்கள் உங்கை
என்ன பாக்கிறியள். இதைப் பாக்கிறதெண்டால் கெதியாய் வாங்கோ,' எனக்
கூப்பிடுகிறாள். 'ஒ, ஏழு மணியாச்சுது என்ன, பொறு வாறன், வாறன்,' எண்டு
அவசரமா ஒரு பியர் போத்தலுடன் கொம்பியூட்டரை நோக்கி ஓடுகிறான் சுதன்.
பின் சுதனும் மாலாவுமாய் கொம்பியூட்டருக்கு முன்னாலை இருந்து கொண்டு
பெரிதாய் சத்தம் போட்டுச் சிரிக்கிறார்கள். காயத்திரியும் கஜனும்
சலிப்புடன் தலையை ஆட்டிக் கொள்கிறார்கள். 'இப்படிச் சிரிக்கிறதுக்கு உதிலை
என்ன கிடக்குதோ தெரியாது,' எரிச்சலுடன் சொல்லிக் கொள்கிறாள் காயத்திரி.
'இண்டைக்கும் நேரத்துக்கு சாப்பிட ஏலாது,' தொடர்கிறான் கஜன்.
நான்காம் வகுப்புப் படிக்கும் ஒன்பது வயதுப் பிள்ளைகள் அவர்கள். நாடகம்
முடிந்த போது உடனே என்ன சொல்வது என்று எனக்கு தெரியவில்லை.
'எங்கடை வீட்டிலையும் இப்படித்தான்' என்கிறாள் சுபா. இது தான் 'முன்மாதிரி'
என இரண்டு கைகளிலும் உள்ள சுட்டு விரலையும் மோதிர விரலையும் விரிப்பதும்
மடக்குவதுமாய்க் மேற்கோள் குறி போலக் காட்டிச் சிரிக்கிறாள் காயத்திரி. 'ஐ
கான்ற் வெயிற் ரு பி எ டாட்,' என்கிறான் சுதன். 'ஓம், அப்பத்தான் நாங்கள்
நினைச்சதைச் செய்யலாம்,' சகஜமாய்ச் சொல்லிக் கொள்கிறான் கஜன். எனக்கு எங்கோ
உறைக்கிறது. மனசும் கொஞ்சம் வலிக்கிறது.
|
|